தனிநாடானால் தமிழே போதும்!

இந்தி ஆதிக்கம் ஒழிக்கப்படப் பலப்பல வழிகள் கூறப்படுகின்றன. அவரவர் கட்சி நிலைப்பாடு, அவரவர் ஆராய்ச்சி நிலைப்பாடு, அந்தந்த மாநில மக்களின் விருப்பம் என்கிற பல்வேறு அடிப்படைகளை வைத்து இந்தி ஒழிப்புப் பற்றிப் பேசப்படுகிறது.

திராவிடக் கட்சிகள் திராவிட நாடு, தமிழ்நாடு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று கோரின. தமிழகம் தனிச்சுதந்திர நாடு ஆன பிறகு அதற்கு இந்தி தேவை இல்லை; ஆங்கிலமும் தேவையில்லை; தமிழ் மட்டுமே போதும், இந்தி அப்போது ஒழிந்துவிடும்.

ஆனால், எல்லாத் திராவிடக் கட்சிகளும் நாட்டுப் பிரிவினையைக் கைவிட்ட பிறகு இந்தியக் கூட்டாட்சி என்கிற இந்திய யூனியன் ஆட்சியின் கீழ்தான் தமிழ்நாடு இருக்கிறது; மற்ற திராவிடப் பகுதிகளும் இருக்கின்றன.

சமுதாயக் கண்ணோட்டத்தோடு மொழி ஆராய்ச்சி வழிபட்ட சிலர், அரசியல் சட்டம் - ஏற்றுக்கொண்டுள்ள எல்லா மொழிகளும் 22 மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்பட வேண்டும் என்றே கோருகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., தி.க.கட்சிகளின் நிலைப்பாடும் இதுவே ஆகும்.

‘இந்தி ஆட்சி மொழி’ என்பதன் முதல் அடிப்படை யானது, இந்தியா ஒரே தேசம் எனக் கொள்வதுதான், இது காந்தியார்காங்கிரசார் திட்டமாக, 1907க்கும் 1920க்கும் இடையில் வலிவாக உருவானது. இதற்கு முதலடி கொடுத்த நிகழ்ச்சிதான் 1938-39 இந்தி எதிர்ப்புப்போர்.

அதையும் மீறித்தான் 1942க்குப் பிறகு விடுதலைப் போராட்டத் தலைவர்கள் அனைவராலும் ‘இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி’ - இந்தியருக்குப் பொது மொழி’ என்கிற சிந்தனையும் அதற்கான முயற்சியும், காங்கிரசு கட்சியினரால் வலிவாகவே மேற்கொள்ளப்பட்டன. காங்கிரசு கட்சிக்குத்தான், அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றுகின்ற அவையில் பெரும் செல்வாக்கு இருந்தது. எவரும் தவிர்க்க முடியாத நிலயில் - இந்திதான் தேசிய மொழி அல்லது பொது மொழி என்பதற்குப் பதிலாக இந்திதான் ஆட்சி மொழி என்பது அரசியல் சட்டத்தில் இடம் பெற்றது. அதாவது இந்திய அரசின் அன்றாட அலுவல்கள் எல்லாம் இந்தியிலேயே நடைபெறும் என்று விதிக்கப்பட்டது.

1952க்குப் பிறகு திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் முன் வைத்த கோரிக்கையினாலும், 1960களில் திராவிட முன்னேற்றக்கழகம் நடத்திய பெருங் கிளர்ச்சியினாலும் - இந்தி பேசாத மக்கள் விருப்புகிற வரையில் ஆங்கிலமும் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்கிற ஆட்சி மொழிகள் சட்டம் நேரு காலத்தில் உருவானது.

இந்த ‘சட்டம்’ என்பது எளிதில் மாற்றப்படக் கூடியது; எனவே இந்த உறுதிமொழியை அரசியல் சட்டத்தில் ஏற்றிவிட வேண்டும்; அப்போதுதான் இந்தி பேசாத மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கும் என்பதும், அரசியல் சட்டம் ஏற்றுள்ள எல்லாப் பிராந்திய மொழிகளுமே ஆட்சி மொழிகளாக ஆக்கப்பட வேண்டும் என்பதும் இன்றைய தி.மு.க.வின் தெளிவான நிலைப்பாடு. அ.தி.மு.கவின் முடிவும் இதுவே ஆகும்.

இவை அனைத்துமே குழப்பமானவை என்பதும், தெளிவு இல்லாதவையே என்பதும் மக்களுக்குப் புரிய வேண்டும்.

எப்படி?

‘ஆங்கிலமும் தொடர்ந்து இணை ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்’ என்று கோருகின்ற போது, எல்லா மொழிகளும் ஆட்சி மொழிகள் என்கிற கொள்கை தானாகவே அடிபட்டுப்போகிறது; அடிபட்டுத்தான் ஆக வேண்டும்.

இந்தி பேசாதோர் இரண்டாந்தர மக்களே!

“இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரையில்” என்கிற போது இந்தி பேசாத தமிழர், தெலுங்கர், கன்னடியர், கேரளியர், நாகாலாந்துக்காரர், அசாமியர், வங்காளியர், மராட்டியர் ஆகிய பல மாநில மக்களும் விரும்புகிற வரையில் என்பதுதான் பொருள். இவர்கள் எல்லோருக்கமாகச் சேர்த்து, ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்படுகிறது.

இந்த மாநிலங்களில் தமிழகம் தவிர்த்த வேறு எந்த ஒரு மாநிலத்திலாவது சட்ட மன்றத்தில் இப்படி ஒரு தீர்மானம் வந்ததா? இல்லை; இனிமேலும் அங்கு அப்படித் தீர்மானம் வருமா? வராது, ஏன்?

இந்த மாநிலங்களில், பெரும்பாலானவற்றில் மூன்று மொழிகள் படிப்புத் திட்டத்தை, முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டன. அத்திட்டத்தை அணுவளவும் பிசகாமல் பின்பற்றுகின்றன.

இதன் பொருளென்ன?

இந்தி பேசாத இந்த மாநிலங்களில் முப்பது வயதுக்கும் கீழ்ப்பட்ட - எழுதப் படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் இந்தி மொழி புரியும் என்பது பொருள்.

இம்மாநிலங்கள் சிலவற்றில் கம்யூனிஸ்டுக் கட்சி ஆண்டது; சனதாக் கட்சி ஆண்டது. அப்போதும் - தாய்மொழி, ஆங்கிலம், இந்தி இவை மூன்றும் கல்விக் கூடங்களில் கற்பிக்கப்பட்டன. இனியும் அவ்வாறே கற்பிக்கப்படும்.

எனவே, “இந்தி பேசாத மக்கள் எல்லோருக்கு மாகத்” திராவிடக் கட்சிகள் குரல் கொடுப்பது என்பது ஒரு நல்ல ஏமாற்று என்பது புரிய வேண்டும்.

அடுத்து இந்தியும் ஆங்கிலமும் ஆட்சிமொழிகள் ஆக்கப்பட வேண்டும் என்று மொழி ஆராய்ச்சியாளர் களும், மற்றும் இந்தியா ஒரே தேசமாக இருக்க வேண்டும் என்கிறவர்களும் கோருகின்றனர்.

இதனால், இந்திக்காரர்களின் அரசியல் ஆதிக்கம் அல்லது இந்தி மாநிலங்களுக்குக் கிடைக்கும் முதல்நிலை இடம் எப்படி ஒழியும்?

ஆட்சிமொழி என்பது நடுவணரசு, மாநில அரசுகளிடையே ஆன உறவுகள், நடுவண் ஆட்சி அலுவலகங்களின் நிர்வாகம், இந்திய அரசு வெளிநாடு களுடன் கொள்ளும் உறவுகள் இப்படி எல்லா நிர்வாகப் பணிகளுக்கும் உரியது; இந்திய உச்ச நீதிமன்ற நிர்வாகத்துக்கு உரியது; இன்னும் பல மட்டங்களில் இடம் பெறுவது.

இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர் களுக்கு, இது தாய்மொழி- பாடப்படிப்பு மொழி - மாநில ஆட்சி மொழி என்பதால் மிக மிக எளிதில் கைவரப் பெற்ற - மேல் நிலையில் வைக்கத்தக்க இடத்தை மிக வலிவாகவே அவர்களுக்கு இந்தி தந்து விடும்.

இந்தி பேசாத மக்கள், இணை ஆட்சி மொழி என்பதற்காக ஆங்கிலத்தை ஒரு பாடமாக மட்டும் படித்து விட்டு, அதைக் கொண்டு எப்படி இந்திக்காரர்களுடன் எந்த ஒரு துறையிலும் போட்டி போட முடியும்? ஒருக்காலும் முடியாது.

ஆங்கிலத்தில் எவ்வளவு திறமை பெற்றுக் கொண்டாலும், அப்போதும் இந்திபேசாதோர் இரண்டாவது, மூன்றாவது தகுதி நிலையில்தான் இருப்போம். இதுவே உண்மை.

அதாவது இந்தி ஆட்சி மொழி- ஆங்கிலம் இணை ஆட்சி மொழி என்கிற உரிமை வந்தாலும்; அதற்குப் பிறகும் இந்தி பேசாத மக்கள் எல்லோரும் இந்திய ஆட்சியில் இரண்டாந்தர - மூன்றாந்தர நிலையில் தான் இருப்போம்.

இதை திராவிடக்கட்சியினரும் சரி மற்றவர்களும் சரி மறந்து விடக் கூடாது.

ஆங்கிலம் என்பதும் கூடாது

“இந்தியா துண்டுபடாமல் இருக்க. ஆங்கிலம் வேண்டும்” என்பது இன்னொரு சாரார் கூற்று. இலங்கையும், பர்மாவும் (1935), பாகிஸ்தானும் (1947) இந்தியாவிலிருந்து பிரிந்து போவதை, ஆங்கிலம் ஆட்சி மொழியினால் தடுக்க முடியவில்லை; தடுக்கவும் முடியாது.

உருது, பஞ்சாபி, இந்தி மொழிகளைப் பேசுகிற பாகிஸ்தான் இசுலாமியர்களிடமிருந்து வங்காளி பேசும் இசுலாமியர் பிரிந்து போவதை, உருது ஆட்சி மொழியினால் தடுக்க முடியவில்லை.

எனவே, இந்தியா துண்டு துண்டாக உடைந்தாலும் சரி, ஆங்கிலம் ஆட்சி மொழி என்பதும் கூடாது என்றால், அதுதான் சரியான முடிவாகும்.

“அறிவியல் ஆய்வு நூல்களைக் கொண்டதும், உலக அறிவுச் சாளரமாக இருப்பதும், உலக நாடுகளில் எல்லாம் பழக ஏற்றதும், ஆங்கிலமே” என்று கூறி, அத்தகைய ஆங்கிலமே நமக்கு ஆட்சி மொழியாக இருக்க வேண்டும், என்பதும் இன்னொரு சாரார் கூற்று.

உலக நடப்பு அப்படி இல்லை. செருமானியன் பிரஞ்சுக்காரன், சப்பானியன் இன்று உலகையே ஆட்டிப் படைக்கிறான் - அறிவுத் துறையிலும், அறிவியல் முன்னேற்றத்திலும் அவர்களுக்கெல்லாம், ஆங்கிலம் பாடப்படிப்பு மொழியாகவும் (Medium) இல்லை; ஆட்சி மொழியாகவும் இல்லை, ஆனால் பல நாடுகளில் ஆங்கில மொழியை ஒரு பாடமாகக் (subject) கற்றுக் கொள்கிறார்கள். நாமும் அப்படிக் கற்றுக்  கொள்ளலாம். செருமனி, பிரெஞ்சு, இரஷியன். சப்பான் போன்ற மொழிகளைக் கூடக் நாம் கற்றுக் கொள்ளலாம். அதுவேறு.

அப்படியானால், இந்தி ஒழிய வழியே இல்லையா?

இதுவரை கூறியவற்றைக் கொண்டு இந்தி ஒழிக்கப்படுவதற்கான வழிகள் என்று பலகாலமும் நாம் கூறியவற்றில், மொழி அடிப்படையில் அந்தந்த நாடும் தனிச் சுதந்தர நாடாகப் பிரிந்து போனால் அல்லாமல், இந்தி அறவே ஒழிய வேறு வழி இல்லை என்பதுதான் உண்மை.

கி.பி. 2011க்குப் பிறகு இது நடந்தாலும், இந்த ஒரு நிலை ஏற்படுவதை, எவரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஏனெனில் மொழி ஆதிக்கம், மத ஆதிக்கம் என்பவற்றை எதிர்த்து அரசியல் சுதந்தரம், பொருளாதார விடுதலை பெற விரும்புகிற இன வழிப்பட்ட குமுறல்கள் ஆங்காங்கே தோன்றி வருகின்றன.

கடந்த 50 ஆண்டுகளில் செய்தித் தொடர்பு சாதனப் பெருக்கமும், போர்க்கருவிகளும் இராணுவ வியூகங்களும் மாறிவருகின்றன. உலகம் ஓர் நொடிக்குள் அழிக்கப்பட ஏற்ற அணு ஆயுதம் பெருக்கப்பட்டுவிட்டது. முதலாளித்துவ முகாம், சமதர்ம முகாம் என இருந்த இரண்டு உலக முகாம்களை சமதர்ம முகாம் சிதைந்துவிட்டது.

முதலாளித்துவ முகாம் சிறு சிறு உலக நாடுகளை அமைதியற்ற நிலையில் வைக்கவும், சுரண்டுகளமாக ஆக்கவும் வழிவகுத்துக் கொண்டது. சின்னஞ்சிறு சுதந்தர நாடுகள் எளிதில் இதற்கு இரையாகும் நிலைமை வலிமைப்பட்டு விட்டது. தமிழ்நாடு இச்சூழலில் சுதந்தரம் பெறுவதும், சுதந்தரமாக இயங்குவதும் முடியாதது.

அப்படித் தனிச் சுதந்தர நாடுகளாகப்பெற வாய்ப்பில்லா இன்றைய நிலையில் - இந்தி ஆதிக்கம் ஒழியச் சரியான வழிதான் என்ன?

இந்திய நாடாளுமன்ற அமைப்பு எப்படி உள்ளது?

இந்தி தேசியமொழி, பொதுமொழி, ஆட்சிமொழி என்கிற சிந்தனை அரசியல் ஆதிக்கத்தை அடித்தளமாகக் கொண்டது. இது முற்றிலும் ஓர் அரசியல் ஆதிக்கச் சிக்கல்; இது வெறுமையான. தனிப்பட்ட ஒரு மொழிச்சிக்கல் அன்று. அதாவது,

1) இந்தியா ஒரு சுதந்திர நாடு; எனவே ஒரு இந்திய மொழிதான் இங்கு ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்கிற தேசியச் சிந்தனை இதற்கு ஓர் அடிப்படை.

2) இந்தியா ஒரே தேசம் - ஒரே அரசியல் கூறு (Single Political Unit) என்பது இன்னொரு அடித்தளம்.

அரசியல் சட்டப்படி இந்தியா ஒரு கூட்டாட்சி. ஆனால் அச் சட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தியா ஒரு ஒற்றை ஆட்சி என்கிற தன்மையையும் உரிமைகளையும் பற்றியே எழுதப்பட்டுள்ளது.

இந்த அரசியல் அமைப்புத் தன்மையை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஒற்றை ஆட்சி அமைப்பில் இந்திய நாடாளுமன்றம், இந்திய நிர்வாக அதிகார வர்க்கம், இந்திய உச்ச நீதித்துறை இவை இன்றைக்கு எந்த வடிவங்களில் இருக்கின்றனவோ இதை மாற்றினால் அன்றி “இந்தி ஆதிக்கம் ஒழியக் கூட” வழி இல்லை.

இந்திய அலுவல் மொழி (அல்லது அலுவல் மொழிகள் பற்றிய முடிவை நாடாளுமன்றம்தான்

நிறைவேற்ற வேண்டும். இந்திய நாடாளுமன்றம் எப்படி உள்ளது? நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 545. இவர்களுள் 543 பேர் தேர்ந் தெடுக்கப்படுவோர்.

‘இந்தி அலுவல் மொழி’ என்பதற்கு இந்தி மாநிலக்காரர்களின் வாக்குகள் தானாகவே கிடைக்கும்.

உ.பி.- உத்தரகண்ட்              85

பீகார் - சார்க்கண்டு            54

ம.பி.                   40

ஒரிசா                             21

மொத்தம்                      200

எடுத்த எடுப்பில், இந்த 200 உறுப்பினர்களும், இந்தி மட்டுமே அலுவல் மொழி என்பதற்கே வாக்களிப்பர்.

இராஜஸ்தான் 25, பஞ்சாப் 13, அரியானா 10 ஆக 48 பேரும் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டவர்களே.

மகாராட்டிரம் 48, ஆந்திரம் 42, கர்நாடகம் 28, கேரளம் 20 ஆக 138 பேரும் இந்தியை, முப்பது ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளிகளில் படிப்பவர்களே. எனவே இந்தி இந்தியாவின் அலுவல் மொழி என்பதை ஏற்றுக் கொண்டவர்களே.

தமிழகம் 39. திராவிடக் கட்சிகள் 1971 முதல் இந்திரா காங்கிரசுக்கு அடிமைப்பட்டு, நாடாளுமன்ற இடங்களில் 25க்கு மேல் காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து வருபவை.

மேற்கு வங்கம் 42, வெளிப்பேச்சில் இந்தி எதிர்ப்பு என்றாலும் பள்ளிகளில் இந்தியைக் கற்பிக்கும் மாநிலமே இது.

அசாம் 14. இது ஈரட்டானது.

மொத்தத்தில், இந்தி அலுவல் மொழி என்பதை என்றுமே நீடிக்கச் செய்ய இன்றைய நாடாளுமன்ற அமைப்பு வடிவம் மிகப் பெரும் துணையாக உள்ளது. இந்த நிலைமை இருப்பதையும் நாம் அரசியல் சிந்தனையோடு கணக்கிட வேண்டும்.

பிராந்திய மொழிகள் ஆட்சி மொழியானால்.....

இதே நாடாளுமன்றத்தில், “அரசியல் சட்டத்தில் கண்ட எல்லாப் பிராந்திய மொழிகளும் ஆட்சி மொழிகள்” என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டால், “அவரவர் தாய்மொழிக்கும் அலுவல் மொழி அந்தஸ்து தகுதி கிடைக்கிறது.” என்பதால் அனைத்து மாநிலத்து வரும் - அனைத்து மொழிக்காரரும் ஒருமித்து ஆதரவு தர வழி ஏற்படக்கூடும்.

இதிலும் கட்சிக் கொள்கை, கட்சிக் கட்டுப்பாடு, பாரத தேச சிந்தனை இவை குறுக்கிட இடமுண்டு.

“நடைமுறையில், 15 அல்லது 20 மொழிகள் எப்படி ஆட்சி மொழிகளாக இருக்க முடியும்?” என்பதை ஒரு பெரிய சிக்கலாக முன்வைக்கவும் இடமுண்டு.

இவ்வகையில் நிர்வாக நடைமுறை பற்றிய சிக்கல்தான் என்ன?

1) நாடாளுமன்றத்தில் அவரவர் தாய் மொழியிலேயே உறுப்பினர்கள் உரையாற்ற வேண்டும். 22 மொழிக் காரர்கள் பேசும் போது உடனுக்குடன் மொழி பெயர்த்துக் கூற முடியும். ஆனால் எந்த மொழியில் மொழி பெயர்த்துக் கூறுவது? ஆங்கிலத்திலா? இந்தியிலா? இது ஒரு சிக்கல்.

2) ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்வண்டி அஞ்சல், தந்தி, தொலைபேசி, வங்கிகள்.ஆயுள்காப்பு, பொதுக் கணக்குத் தணிக்கைத் துறை, வருமானவரி, இப்படிப்பட்ட நடுவண் அரசு துறைகள் உள்ளன. இங்கு அன்றாட நிர்வாகத்தில் எந்த மொழியைப் பயன்படுத்து வது? அந்தந்த மாநில ஆட்சி மொழியையா? இந்தியையா? ஆங்கிலத்தையா?

இந்தத் துறையினர் நடுவண் அரசுக்கு எழுதுவதற்கு இந்தியைப் பயன்படுத்துவதா? ஆங்கிலத்தையா? அல்லது மாநில ஆட்சி மொழியையா? இது இன்னொரு சிக்கல்.

3) அனைத்திந்திய நிர்வாகத்துறைக் (INDIAN ADMINISTRATIVE SERVICE) கானவர்களைத் தேர்ந் தெடுப்பது நடைபெற வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில், இந்தியில் அல்லது அவரவர் தாய்மொழியில் - எதில் தேர்வு எழுதுவது என்பது அடுத்த சிக்கல். கோத்தாரி குழுவினர், அவரவர் தாய்மொழியில் இத்தேர்வுகளை எழுதப் பரித்துரைத்ததை, இந்திய அரசு ஏற்றுள்ளது உண்மை. ஆனால் நிர்வாகத்துறைப் பொறுப்புகளை ஏற்ற பின்னர் அந்தந்த அதிகாரியின் தாய்மொழி பயன்படாது; மற்ற அரசு துறைகளில் இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ தான் நிர்வாகத்தை நடத்திட வேண்டும்.

இது அடுத்த சிக்கல்

4) இந்திய உச்ச நீதி மன்றத்தில் எந்த மொழியில் அன்றாட அலுவல் நடப்பது என்பது இன்னொரு சிக்கல் மேலும் உள்ள சிக்கல்களைப் பற்றி நாம் ஆர அமர எண்ணி, விவாதித்து, வழிகளைக் காண்பதுதான் இன்று தேவை.

இனி இது பற்றி எண்ணுவோம்.

ஓருறுப்பு அரசு முறை உடைக்கப்பட வேண்டும்.

1) நாடாளுமன்ற நடவடிக்கை பற்றி நாம் பார்க்கும்முன் நாட்டின் அமைப்பு - மாநிலங்களின் அமைப்புப் பற்றிக் காணவேண்டும்.

பதின்மூன்று கோடி மக்கள் கொண்ட உ.பி. உத்திரகண்ட், ஏழு, எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட மகாராட்டிரம் - பீகார் - சார்க்கண்டு மத்தியப் பிரதேசம், ஆந்திரம் முதலான மாநிலங்கள் உடனடியாக மூன்றாகவும், இரண்டாகவும் பிரிக்கப்பட்ட வேண்டும். இதற்கான கோரிக்கைகளை முன்வைத்த இயக்கங்கள் ஆகாங்கே உள்ளன. இவற்றை ஊக்கப்படுத்தி, வலிமைப்படுத்தி வெற்றி ஈட்ட வேண்டும். உத்திரகண்ட், ஜார்க்கண்ட் முதலானவை புதிய மாநிலங்கள்.

2) நாடாளுமன்றத் தொகுதிக்கு வரையறுக்கப் பட்டுள்ள வாக்காளர் எண்ணிக்கை மாநிலந்தோறும் ஒரே அளவினதாக இருக்க வழிசெய்ய வேண்டும். இன்று அப்படி இல்லை.

3) நாடாளுமன்ற மேலவையில் சிறிய மாநிலம், பெரிய மாநிலம் என்கிற வேறுபாடு இல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் சரி சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இடம் பெற வழி உண்டாக்க வேண்டும்.

இவ்வாறாக, இன்றைக்கு இருக்கிற ஓருறுப்புத் தன்மை கொண்ட அரசு அமைப்பு முறையை, முதலில் நாம் உடைத்தாக வேண்டும்.

மாநிலங்களுக்கே முழு அதிகாரம்

1) 1919 ஆம் ஆண்டைய இந்தியச் சட்டம், 1935 ஆம் ஆண்டைய இந்தியச் சட்டம் இவற்றின் மூலம் மாகாணங்களுக்கு ஏற்கெனவே இருந்த சுதந்தரம் - 1947க்குப் பிறகு ‘ஆக்ட்’களின் மூலமாகவும், 1950க்கு பிறகு அரசியல் சட்டம் மூலமாகவும் பறிக்கப்பட்டு விட்டன. அயல்நாட்டுத் தொடர்பு இராணுவம், நாணயம் போன்ற துறைகள் தவிர்த்த மற்றெல்லாத் துறைகளும், அந்தந்த மாநிலத்துக்கே முழு அதிகாரம் உள்ளவையாக இருக்க வேண்டும்.

2) இப்படிப்பட்ட கோரிக்கைகளைக் கொண்ட இயக்கங்களும், குழுக்களும் ஆந்திரம், தமிழகம், வடகிழக்கு மாநிலங்கள், பஞ்சாப் போன்ற பகுதிகளில் தீவிரமாக உள்ளன. இவற்றை வலிவுபடுத்தி, ஊக்கப்படுத்தி, இக்கோரிக்கைகள் நிறைவேற வழி காண வேண்டும்.

நடுவண் அரசுத் துறையானாலும் அந்தந்த மாநில ஆட்சிமொழியே!

1) மாநிலந்தோறும் இன்று உள்ள “நடுவண் அரசுத் துறைகள்” என்பவை அனைத்திலும், அந்தந்த மாநில ஆட்சி மொழியிலேயே அனைத்து நிலை நிர்வாகமும் நடைபெற வழி காண வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழிலும், ஆந்திரத்தில் தெலுங் கிலும் - கர்நாடகத்தில் கன்னடத்திலும், கேரளத்தில் மலையாளத்திலும் இப்படி அந்தந்த மாநில ஆட்சி மொழியிலேயே அனைத்து நிலை நிர்வாகமும் நடைபெற வழி காண வேண்டும்.

2) 1946இல் மாகாண முதலமைச்சர் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட அகில இந்திய நிர்வாக சர்வீஸ் (I.A.S) ஏற்பாட்டையும், 1951இல் நிறைவேற்றப்பட்ட அனைத்திந்திய சர்வீஸ் ஆக்டையும் அடியோடு இரத்துச் செய்து விட்டு அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்., அய்.இ.எஸ். முதலான ஊழியத் தேர்வுத்துறைப் பதவிகள் அனைத்தும் மாநில அரசு பணித் தேர்வுத் துறை (P.S.C.s) களின் கீழ்க்கொண்டு வரப்பட வேண்டும்.

அந்தந்த மாநில ஆட்சித் துறைகளின் அனைத்து நிலை அதிகார வர்க்கமும் - பெரியார் அவர்கள் 1967 இல் சென்னைக் கோட்டையில், அன்றைய முதல்வர் சி.என். அண்ணாத்துரை அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் அறிவுறுத்தியது போல - அந்தந்த மாநில அரசினராலேயே தேர்ந் தெடுக்கப்பட்டு, அமர்த்தப்பட வேண்டும்.

3) கல்வியின் எல்லா நிலைகளிலும், தேர்வுகளிலும் அந்தந்த மாநில ஆட்சி மொழியும், அவரவர் தாய் மொழியுமே பயிற்சி மொழியாகவும், தேர்வு மொழியாகவும் ஆக்கப் பெறல் வேண்டும்.

இவ்வளவு கடினமான - பன்முகங்கொண்ட, ஆனால் அடிப்படையான சிக்கல்களை நாம் எதிர் நோக்கியிருக்குறோம் என்பதை மூடி மறைத்து விட்டு, அல்லது வருங்காலத் தலைமுறையினருக்கு விட்டு விட்டு, அதற்குப் பிறகு இந்தியை (அ) இந்தி ஆதிக்கத்தை ஒழிக்கும் கிளர்ச்சியையும், நடவடிக்கையையும் எவர் மேற்கொண்டாலும், அதனால், கோரிய பயன்கிட்டாது.

மாநிலங்களின் கூட்டரசு அமைந்தாலும்......

மேலே கண்ட பன்முகச் சிக்கல்களும் தீர்க்கப்பட்ட பிறகும் கூட- இந்தியா ஒரு உண்மையான கூட்டாட்சியாக அமைக்கப்பட்ட பிறகும் கூட,

1) நாடாளுமன்றத்தில் நடவடிக்கைகளை நடத்துவது,

2) நடுவண் அரசுடன் மாநில அரசுகளும், தனிப்பட்ட குடிமகனும் மடல் போக்குவரத்து செய்வது.

3) உச்ச நீதி மன்ற நடவடிக்கைகளை நடத்துவது,

4) பிற உலக நாடுகளுடனும், உலக மன்றங் களுடனும் தொடர்பு கொள்வது.

ஆகியவற்றுக்கு “ஆட்சிமொழி எது?” என்கிற சிக்கல் இருக்கவே செய்யும்.

1) நாடாளுமன்ற நடவடிக்கைகளில் உறுப்பினர்கள் உரையாற்றுவது அவரவர் தாய்மொழியிலேயே நடை பெறும். ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லா மொழிகளிலும் அந்த உரை ஒரே நேரத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.

நடுவண் அரசுக்கு மாநில அரசு எழுதும் மடல்களும், ஒவ்வொரு குடிமகனும் எழுதும் மடல்களும் அந்த மாநில ஆட்சி மொழியிலும், அவரவர் தாய் மொழியிலும் இருக்கும்.

ஒரே நேரத்தில் பல மொழிகளில் மொழி பெயர்ப்புச் செய்ய வலிமை வாய்ந்த கணினிக் கருவிகள் உள்ள இக்காலத்தில், நடுவணரசு நாடாளுமன்ற உரைகளை உடனுக்குடன் மொழி பெயர்ப்பதும். நடுவணரசுக்கு வரும் கடிதங்களுக்கு அந்தந்த மொழியிலேயே விடை எழுதுவதும் முடியாத ஒன்றன்று.

2) உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கும், அயல் நாட்டுடன் மடல் போக்குவரத்துக்கும் ஆங்கிலம், இந்தி இரண்டும் தொடர்பு மொழிகள் என்கிற வடிவில் இருக்கும். ஆயினும் உச்சநீதி மன்றம் ஒரு குடிமகன் தன்தாய் மொழியிலேயே வழக்கிடவும், வாதாடவும் உரிமையுள்ள இடமாக இருக்க வேண்டும். இங்கும் பதிவு செய்வது, அச்சிடுவது என்கிற பயன்பாட்டுக்கு மட்டுமே ஆங்கிலம், இந்தி வேண்டப்படும்.

இதனால் ‘இந்தி ஆதிக்கம்’ பெரிய அளவுக்கு இத் துறையில் சரியும்.

இந்தியா உடைந்தால் இந்தி ஒழியும்

இந்தியை அடியோடு ஒழிப்பது என்பது “இந்தியா” என்றே ஒன்று இல்லாமல், ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி அரசியல் சட்டத்துடன் கூடிய தனித்தனிச் சுதந்தர நாடாக ஆவதனால் மட்டுமே முடியும்.

எனவே “இந்தி, ஆதிக்க ஒழிப்பு” என்பது மேலே சொல்லப் பட்டவாறு அரசியல் அமைப்புகளில் மாற்றம், மாநில வடிவங்களின் சீரமைப்பு, அனைத்திந்திய நிர்வாக அமைப்பின் ஒழிப்பு, எல்லாத் துறைகளுக்கும், ஆட்சிப்பணிக்கும் மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் அமைப்பு; கூட்டாட்சித் தத்துவப்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் நாடாளுமன்றத்தில் அவரவர் மொழியில் பேசிடும் உரிமை, என்கிற

இத்தனை சாதனைகளுக்கும் பின்னரே ஈடேறக் கூடிய ஒன்றாகும்.

இந்தியா உள்ளவரை...

இத்துடன்கூட, இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள மொழிகள் பட்டியலில் ஆங்கிலமும், மற்றும் உரிமையும் தகுதியும் உள்ள இன்னுஞ்சில இந்திய மொழிகளும் சேர்க்கப்படவும், நாம் முயலவேண்டும்.

இந்தப் பன்முகம் கொண்ட சிக்கல்களை, இதில் அக்கறை கொண்ட இயக்கங்களும், கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதற்கான வேலைத் திட்டங்களை மக்கள் முன், எல்லா மாநிலங்களிலும், எடுத்து வைக்க வேண்டும்; மாநிலந் தோறும் கிளர்ச்சிகளும், போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

இன்னும் ஒரு தலைமுறைக் காலம் - முப்பது நாற்பது ஆண்டுகள் இந்தப் பணிகளிலேயே நாம் ஈடுபட்டாலும் சரியே - இவை நடைபெற்றால் அல்லாமல், இந்தி ஆதிக்கம் வருவதை நாம் என்றென்றும் தடுத்து நிறுத்தவே முடியாது.

‘நாளை வருகிற பலாவை விட, இன்று கிடைக்கிற களாவே மேலானது’, என்று நினைக்கிற அரசியல் பதவி வேட்டைக்காரர்கள் - குறிப்பாகத் திராவிடக் கட்சிகள், இன்று எடுத்து வைத்துள்ள நிலைப்பாடுகள் இந்தி ஒழிய - (அ) இந்தி ஆதிக்கம் அகல வழியாக மாட்டா.

இவர்கள் சில ஆண்டுகள் பதவிச் சுகம் பெறவும், அதே காலத்தில் இந்தி ஆதிக்கம் நம் தலைமேல் வலிவாக அமரவுமே இவர்களின் போக்கு பயன்படும்.

இந்தி ஆதிக்கத்தால் வருங்காலச் சமூகம் நசுக்கப்படுகிற போது, இவர்களையும் காறி உமிழ்ந்து விட்டு- இந்திய ஆட்சி அமைப்பையும் அடியோடு தூக்கி எறிந்து விட்டு, மக்களை விடுதலை அடையச் செய்கிற விடுதலைப் போராட்டங்களை அவர்கள் மேற்கொள் வார்கள் என்பதும், உறுதியாக அப்போது அதில் வெற்றி பெறுவார்கள் என்பதும் திண்ணம்.

இந்தி அறவே ஒழிந்த இடம் அதுதான்!

(2011இல் மா.பெ.பொ.க. வெளியிட்ட இந்தி ஆதிக்கம் ஒழிய வழிதான் என்ன? என்ற சிறுநூல்)

- வே.ஆனைமுத்து

Pin It