சங்கரின் துணைவி கௌசல்யா வாய்மொழி!

குமரலிங்கம் தீண்டப்படாத வகுப்பினரின் இன்றைய வாய்நிலை என்ன?

குமரலிங்கம், உடுமலைப்பேட்டையை அடுத்து உள்ள ஒரு பேரூர்.

உடுமலைப்பேட்டையிலிருந்து 8-4-16 காலை 9.30 மணிக்கு வே. ஆனைமுத்து, சேலம் மாவட்ட மா.பெ.பொ.க. செயலாளர் செ. ஆனையப்பன், உடுமலைப்பேட்டையைச் சார்ந்த தமிழியக்க - பெரியார் கொள்கைச் செயற்பாட்டாளர்கள் கொழுமம் ஆதி, உடுமலை அருட்செல்வன் ஆகிய நால்வரும் புறப்பட்டோம். வழியில் குமரலிங்கம் ஈசுவரன் எங்களுடன் சேர்ந்து கொண்டார்.

சிறீ வெங்கடேசபுரம், மலையாளக் கவுண்டனூர், உரல்பட்டி, சாமராயப்பட்டி, கொழுமம் ஆகிய ஊர்கள் வழியாக, நேரே குமரலிங்கம் அடைந்தோம்.

13-3-16க்குப்பிறகு 10, 12 தடவைகள், அருட் செல்வன் கொலை செய்யப்பட்ட சங்கர் வீட்டுக்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். கொழுமம் ஆதி, குமரலிங்கம் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பெற்றவர்; அவர் வயதிலுள்ள பலரையும் அவருக்குத் தெரியும். ஈசுவரன் நல்ல பொதுநல உணர்வு உள்ளவர்; உள்ளூர்க்காரர்.

மகிழுந்தை சாவடித் தெருவில் நிறுத்திவிட்டு, நாங்கள் அய்வரும் நேரே சங்கர் வீட்டுக்குச் சென் றோம்.

சிலர் அங்கிருந்த நாற்காலிகளில் அமர்ந்தனர். காவலுக்கு இருந்த காவலர்களுள் ஒருவரும் வந்து விட்டார்.

கீழ்ப்புறத் திண்ணையில் சோகமே வடிவமான கௌசல்யா வந்து அமர்ந்தார். அவருக்கு எதிரே மேல் புறத் திண்ணையில் நான் அமர்ந்தேன். கொழுமம் ஆதி, ஆனையப்பன் ஆகியோர் படம் எடுக்க வாட்டமாக அமர்ந்து கொண்டனர்.

சங்கரின் தம்பி விக்னேசுவரனும், சங்கரின் அப்பாயி (70)யும் கீழ்ப்புறத் திண்ணையில் அமர்ந் திருந்தனர். சங்கரின் தந்தை சி. வேலுச்சாமி, கௌசல் யாவை ஒட்டி நின்ற படியே, தன் குடும்பம் பற்றிக் கூறினார் :

“எனக்கு வயது 47. என் பூட்டன் காலம் முதல் மூன்று தலைமுறைகளாக இங்கே வாழ்கிறோம். இந்த வீட்டுமனை 2.5 செண்ட்; என் தந்தையுடன் பிறந்த நான்கு பேருக்கும் இது சொந்தம்.

என் மனைவி 3 ஆண்டுகளுக்குமுன் இறந்து விட்டார். என் தாயார் - இதோ உட்கார்ந்திருக்கிறவர் 65 (அ) 70 வயது இருக்கும். என் பூட்டன் காலம் முதல் எங்கள் குடும்பத்துக்கு வேளாண் நிலம் இல்லை. கூலி வேலைக்குப் போய்ச் சம்பாதித்துத் தான் சாப்பிடுகிறோம். பிள்ளைகளைப் படிக்க வைக் கிறோம். எனக்கு 3 மகன்கள் மட்டுமே.

பெரியவன் சங்கர், பொறியியல் 4ஆம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தான். இரண்டாம் மகன் விக் னேசுவரன், கணிப்பொறி அறிவியல் இரண்டாம் ஆண்டில் படிக்கிறான். மூன்றாவது மகன் 11ஆம் வகுப்பில் படிக்கிறான்.

நான் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவன். எங்கள் சமூகத்தார் இவ்வூரில் 1500 பேருக்கு மேல் இருக்கிறார்கள். இவர்களில் பெரும் பாலோர் 10ஆம் வகுப்புப் படித்திருக்கிறார்கள். இதில் 25 விழுக்காட்டுப் பேர் பட்டப் படிப்புப் படித்திருக் கிறார்கள். எங்கள் சமூகத்தில் 20 குடும்பத்தாருக்கு அமராவதி ஆற்றுப் பாசனப் பகுதியில் புன்செய் 1 ஏக்கர், 2 ஏக்கர் வீதம் இருக்கிறது.

என் மருமகள் கௌசல்யா, வீட்டிலிருந்து கொண்டே பட்டப் படிப்பை தபால் மூலம் படிக்க விரும்புகிறாள். நாங்கள் அவரைப் படிக்க வைப்போம்; எல்லா வசதி களையும் செய்து தருவோம்” எனக் கூறினார்.

இவ்வளவு விவரங்களையும் கௌசல்யா உன்னிப் பாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அமைதியாக இருந்த அந்தப் பெண், முதலில் வெட்டப்பட்டுத் தையல் போடப் பட்டிருந்த தன் இடக்கையை என்னிடம் நீட்டினார். உடனே நான் தலையைப் பிடித்துக் குனிய வைத்துத் தடவிப் பார்த்தேன். 4, 5 வெட்டுக் காயங்கள் குறுக்கும் நெடுக்குமாக இருந்தன; தையல் போடப்பட்டுக் காயங் கள் காய்ந்திருந்தன.

ஆனால் பிடரியில் புண் இருப்பதாகவும் ஆற வில்லையென்றும் கௌசல்யா சொன்னார்.

“நடந்தது நடந்தபடி சொல்லம்மா” என்று நான் கேட்டேன்.

தடுமாற்றம் ஏதும் இல்லாமல், பின்கண்ட எல்லாச் செய்திகளையும் கௌசல்யா சொன்னார்:

“எனக்கும் சங்கருக்கும் 2014இல் அறிமுகம் ஏற்பட்டது. நாங்கள் நெருங்கப் பழகி வந்தோம்.

12.7.2015 அன்று, நானும் சங்கரும் அவருடைய நண்பர்களுடன் சென்று, பழனியில் பாதை விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.

திருமணம் நடப்பதற்கு 2 நாள் முன்பு நானும் சங்கரும் சேர்ந்து பேருந்தில் வந்த செய்தியை, அந்தப் பேருந்து நடத்துநர் என் பெற்றோரிடம் சொல்லிவிட் டார். அன்றைக்கே என் தாயார், அந்தப் பையனை நீ நம்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டு, வேறு மாப் பிள்ளை பார்க்க முயற்சித்தார். அது தெரிந்தவுடனே தான், நான் சங்கரைத் திருமணம் செய்து கொண் டேன்.

திருமணம் முடிந்ததும் உடனடியாக, உடுமலைப் பேட்டை மகளிர் காவல் நிலையத்துக்கு வந்து, எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று விண்ணப் பம் தந்தோம். அன்றைக்கே இரண்டு வீட்டுப் பெற் றோர்களையும் அழைத்து காவல் நிலைய அதிகாரிகள் விசாரித்தனர். காவல் நிலையத்தில் இருக்கும்போது நான் என் பெற்றோருடன் போக விரும்பாததால், என்னுடைய நகைகள், உடைகளைக் கழற்றித்தரச் சொல்லி என் பெற்றோர் வாங்கிச் சென்றுவிட்டனர்.

பிறகு குமரலிங்கம் பெரியவர்கள் நால்வர் எங் களுக்குப் பாதுகாப்பாக வர, நாங்கள் சங்கர் வீட்டுக்குச் சென்றோம்; குடும்பம் நடத்தினோம்.

ஒரு வாரம் கழித்து, என் அம்மாவைப் பெற்ற தாத்தா தொடர்ந்து 3 நாள்கள் குமரலிங்கத்துக்கு எங்கள் வீட்டுக்கு வந்தார்.

அவர் மூன்றாந்தடவை வந்த போது, “எனக்கு மயக்கமாக இருக்கிறது. எதாவது ஒரு மருத்துவ மனையில் என்னைச் சேர்த்துவிடு” என்று சொன்னார்.

நானும் சங்கருடைய ஒன்றுவிட்ட அக்காவும் என் தாத்தாவை அழைத்துக் கொண்டுபோய் மடத்துக் குளம் தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட் டோம். அங்கிருந்து என் தாத்தா என்னை கார் மூலம் திண்டுக்கல் உறவினர் வீட்டுக்குக் கடத்திச் சென்றார்; அங்கு 3 நாள் தங்க வைத்திருந்தார்; நான் அணிந் திருந்த தாலி, மிஞ்சி எல்லாவற்றையும் கழற்றித் தரச் சொல்லி, அவற்றைத் தீயில் போட்டு எரித்துவிட்டார் கள்.

பிறகு வருச நாட்டில் உள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு என்னை அழைத்துப் போனார்கள். அங்கு மந்திரித்து மை வைக்கும் சாமியாரிடம் அழைத்துச் சென்றார்கள். அந்தச் சாமியார் என் நெற்றி, பிடரியில் மை வைத்தார். அத்துடன் அந்த மையை சோற்றில் கலந்து தந்து என்னைச் சாப்பிடச் சொன்னார்கள்; நான் அதைச் சாப்பிடவில்லை. இரண்டு நாள் எதை யுமே சாப்பிடவில்லை.

பிறகு என் தாத்தா திருப்பூரில் உள்ள என் பெரியப்பா வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

என் தாத்தா என்னை அழைத்துப் போன இரண்டு நாள் கழித்து, சங்கர், “என் மனைவியை யாரோ கடத்திக் கொண்டு போய்விட்டார்கள்; அவளைக் கண்டுபிடித்துத் தாருங்கள்” என்று மடத்துக்குளம் காவல் நிலையத்தில் விண்ணப்பம் தந்தார்.

காவல்துறை அதிகாரிகள் சங்கர் வீட்டுக்கு வந்து, “ஜீப் மூலமாகப் பெண்ணைத் தேடிப்போக வேண்டும். டீசல் செலவுக்கு ரூபாய் 4000 கொடுங்கள்” என்று கேட்டு வாங்கிக் கொண்டனர்.

காவல் துறை அதிகாரிகள் பழனியில் என் சொந்தக் காரர் வீட்டில் தங்கிக்கொண்டு, என் அப்பாவுக்குத் தொலைப்பேசி செய்து, “நீங்கள் 20,000 ரூபாய் கொடுங்கள்; சங்கரை அடித்து விரட்டிவிடலாம்” என்று கூறிவிட்டு, உடனே என்னிடம் பேசி, “நீ உன் அப்பா வீட்டுக்குப் போய் விடு” என்று அறிவுரை கூறினர்.

என் அப்பா காவல்துறைக்குப் பணம் தரவில்லை.

என் பெற்றோர் ஒரு வழக்கறிஞருடன் திருப்பூருக்கு வந்தனர். திருப்பூரில் வழக்குப் போட்டு, எங்கள் இருவரையும் பிரித்துவிடலாம் என்பது அவர்கள் திட்டம்.

வழக்கறிஞர், “சங்கருடன் போகிறாயா, அப்பாவுடன் போகிறாயா” என்று என்னிடம் கேட்டார்.

நான், “அப்பாவுடன் போகிறேன்” என்று வேண்டு மென்றே அப்போது சொன்னேன். அவர் வற்புறுத்திக் கேட்டவுடன், “நான் சங்கரோடு தான் போவேன்” என்று வழக்கறிஞரிடம் சொன்னேன். இதை என் பெற்றோர் மறைவாக இருந்து கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

வழக்கறிஞர் உதவியால் சங்கருடன் தொலைப் பேசியில் பேசினேன். திருப்பூரில் பெரியப்பா வீட்டில் இருப்பதாகச் சொன்னேன்.

எந்த இடம் என்று சங்கர் விவரம் கேட்டார். அது விவரம் தெரியவில்லை என்று சொன்னேன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் பெற்றோர் கள், “இந்தப் பெண்ணை உயிரோடு வைத்திருப் பதைவிட - இவளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதை விட, நாமே மருந்து கொடுத்துக் கொன்றுவிடலாம்” என்று பேசிக்கொண்டார்கள்.

பிறகு அவர்கள் தனியே பேசிவிட்டு, என்னை வழக்கறிஞர் மற்றும் தாத்தாவுடன் திருப்பூரிலிருந்து போகச் சொல்லிவிட்டனர்.

திருப்பூரிலிருந்து நேரே மடத்துக்குளம் காவல் நிலையத்துக்கு வந்தோம். அங்கு வந்தவுடன், “நாங்கள் தான் உன்னைக் கடத்தி வந்தோம் என்று யாரிடமும் சொல்லக்கூடாது” என்று கூறி, மிரட்டிவிட்டுப் போய்விட்டார்கள்.

திருப்பூரில் பேருந்தில் ஏறிய உடனே, மடத்துக் குளத்துக்கு வந்து கொண்டிருப்பதாக, சங்கருக்குச் சொல்லிவிட்டேன். சங்கரும், ஊர்ப் பெரியவர்களும் மடத்துக்குளம் காவல் நிலையத்துக்கு வந்திருந்து, என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

வீட்டுக்கு வந்த 4 மாதம் கழித்து, சங்கருக்கு வேலை கிடைத்தது.

அவருக்குப் புதுத்துணி எடுப்பதற்காக, 13-3-2016 அன்று பகல் 1.00 மணிக்குப் புறப்பட்டு உடுமலைப் பேட்டைக்குச் சென்றோம். அப்படிப் போவதாக என் தாயாரிடமோ, வேறு எவரிடமோ ஏதும் சொல்ல வில்லை.

எங்களுடைய நடவடிக்கையைப் பற்றிக் கண் காணிப்பதற்காக, அதற்கு ஒரு வாரம் முன்னதாக, நெய்க்காரப்பட்டி பிரசன்னா என்கிற பையனை உள வாளியாக வைத்துக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

உடுமலைப்பேட்டையில் நாங்கள் துணி வாங்கிக் கொண்டு, சாலையில் கம்பங்கூழ் குடித்துவிட்டு, திரும்பி நடந்து வரும்போது, பின்புறமாக வந்து முதலில் என்னை தலையில் அரிவாளால் அடித்த பிறகு, என்னைக் காப்பாற்ற சங்கர் முயற்சிக்கும் போது, சங்கரை கழுத் தில் அரிவாளால் வெட்டினர். என்னைக் கீழே தள்ளி, நான் 2, 3 தடவை எழுந்த போது மீண்டும் மீண்டும் அரிவாளால் வெட்டினார்கள். நான் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டேன். மீண்டும் எழுந்து சங்கர் வெட்டப்பட்டுக் கிடப்பதைப் பார்த்த போது, வெட்டியவர் களை நான் பார்த்துவிட்டேன். எங்களை வெட்டும் போது பொது மக்கள் யாரும் தடுக்கவில்லை.

பிறகு எங்கள் 2 பேரையும் மருத்துவ உதவி வண்டியில் (ஆம்புலன்ஸ்) ஏற்றி, உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அரசு மருத்துவமனையில், சங்கருக்கு இரத்தம் அதிகமாக வெளியேறியதால் பஞ்சு மட்டும் வைத்துக் கட்டினார் கள்; சங்கருக்கு ஒரு பாட்டில் குளுகோஸ் ஏற்றினார் கள். எனக்குப் பஞ்சு மட்டும் வைத்துக் கட்டினார்கள்.

உடனே இருவரையும் ஆம்புலன்சில் ஏற்றி கோவைக்குச் சென்று காட்டுங்கள் என்று கூறி அனுப்பி விட்டனர். ஆம்புலன்சில் எங்களுடன் யாரும் வரவில்லை. கோவைக்குப் போகும் வழியில் சங்கருக்கு ஒரு கை தொங்கிவிட்டது. ஒரு கால் இடுக்கில் மாட்டிக் கொண்டது. அந்தக் காலை எடுக்கச் சொன்னார்; நான் எடுத்து விட்டேன். அதன் பிறகு சங்கர் பேசவில்லை.

கோவைக்குச் சென்ற பிறகுதான், வழியிலேயே சங்கர் இறந்துவிட்டார் என்று தெரிந்தது.

கோவையில் என்னை தீவிர வைத்தியப் பிரிவில் ((ICU) வைத்து 15 நாள் வைத்தியம் செய்தார்கள். சங்கர் இறந்த மறுநாள் உடற்கூறு ஆய்வு செய்த பிறகு, அவர் உறவினர்கள் உடலை குமரலிங்கத்துக்கு எடுத்துச் சென்றார்கள். அவருடைய உடலைப் பார்க்க என்னை அனுமதிக்கவில்லை.

பிறகு சங்கருக்கு 16ஆம் நாள் சடங்கு செய்வ தற்காக என்னை வீட்டுக்கு அழைத்து வந்துவிட் டார்கள். இப்போது அவருடைய வீட்டில் இங்கு முழு மனநிறைவுடன் வாழ்கிறேன். மேற்கொண்டு அஞ்சல் வழியில் B.C.A.. பட்டப் படிப்பு படிக்க விரும்புகிறேன்.

இவ்வளவு செய்திகளையும், கௌசல்யா தடங்க லின்றி, நிரல்படக் கூறினார்.

பெண்கள் ஆண்களைவிடத் திடமான உள்ளம் படைத்தவர்கள் என்பதற்கு, கௌசல்யா ஒரு சான்று.

உயிருக்குப் போராடும் கணவனோடு, தன் உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு, 19 அகவை இளம் பெண்ணை மட்டும் மருத்துவ வண்டியில் தனிமை யாக அனுப்பிவிட்ட உடுமலைப்பேட்டை மருத்துவத் துறை அதிகாரிகள் கடமை தவறிய வன்னெஞ்சர்கள் அல்லவா? வெட்டுண்டு உயிருக்குப் போராடும் இரு வரையும் தனியே அனுப்பிய உடுமலை காவல்துறையினருக்கு, உடன் போவது கடமையல்லவா? வரு வாய்த் துறை அதிகாரிகளுக்கும் உடன் செல்லுவது கடமையல்லவா?

இவர்கள் எல்லாத் துறையினருமே சாதித் திமிர் பிடித்தவர்களாக இருந்ததால் தான், கணவரின் உயிர் போவது கூடத் தெரியாமல் ஒரு மதளைப் பெண் பரிதவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் - திருவள்ளுவர் பிறந்த தமிழ்நாட்டில் - பெரியார் 50 ஆண்டுக்காலம் சாதி ஒழிப்புக்குப் போராடிய தமிழ்நாட்டில் - பாமரர் நெஞ்சங்களில் பகுத் தறிவைப் பதிய வைத்த உடுமலை நாராயண கவி வாழ்ந்த உடுமலையில் - சாதி ஆணவக் கொலைக்கு இரக்கப்பட - தாக்கப்படுவதைக் கண்டவரெல்லாம் சான்று கூற நாதி என்பதே இல்லையே!

சங்கரும் கௌசல்யாவும் வெட்டிச் சாய்க்கப்பட்ட அதே கடைத் தெருவில் 30 அடி உயரத்தில், ஒரு கடை மாடியில் இருந்த - பேசத் தெரியாத படப்பிடிப்புக்கருவி மட்டும் தானே சான்று ஆயிற்று! சங்கரையும் கௌசல் யாவையும் வெட்டிச் சாய்த்தவர்களையும் கொலைகாரர்கள் பயணித்த சிவப்பு நிற மகிழுந்துவையும் அந்த ஆடி துல்லியமாக அடையாளம் காட்டிவிட்டது.

அண்மையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், ஒரு கலப்புத் திருமண வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி வி. இராமசுப்பிரமணியம் அவர்கள், கலப்பு மணத் துணைவர்களுக்கு, காவல் துறையினர் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளவை சிறப்பானவை. அவை 9 நெறி முறைகள். நிற்க.

பேசத் தெரிந்த இரண்டு கால் தமிழ் விலங் காண்டிகளே!

சாதிக் கலப்புக் கூடாது - அது சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றம் என்று ஒரு காலத் தில் இருந்தது.

“சாதி” (Caste) என்பது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற நான்கு மட்டுமே.

அவர்கள் தங்களுக்குள் கலப்புத் திருமணம் செய்யக்கூடாது என்று சட்டத் தடை இருந்தது.

அந்தத் தடை 1930களிலேயே பம்பாய் நீதி மன்றம் அளித்த ஒரு தீர்ப்பின் மூலம் நீக்கப் பட்டுவிட்டது.

மற்றும் உள்ள 6,000 பிரிவுகள் உள்சாதிகள் (Sub-Castes) மட்டுமே. இவர்களுக்குள் கலப்புத் திருமணம் செய்யக்கூடாது என்று தடை இருந்தது.

அந்தத் தடை, சட்டம் மூலம் 1946இல் நீக் கப்பட்டுவிட்டது.

சங்கரும் கௌசல்யாவும் பிறவியால் வேறு வேறு உள்சாதிகள். அவர்கள் 2016இல் செய்து கொண்ட திருமணம் சட்டப்படி செல்லும்.

இதை ஊருக்கெல்லாம் சொல்லுங்கள்!

இது நடைபெற என்ன தடை?

தீண்டப்படாத வகுப்பினர் மட்டும், ஊருக்கு வெளியே தனிக்குடியிருப்பாக வைக்கப்பட்டிருப்பது, முதலாவது தடை.

குமரலிங்கம் என்கிற பேரூரில் பள்ளர் தெரு தனி; பறையர் தெரு தனி; சக்கிலியர் தெரு தனி; இவர் களுக்கு சடங்கு செய்கிற குருக்களாக இருக்கிற வள்ளுவர் தெரு தனி. இது இரண்டாவது கொடுமை.

சங்கர் வீட்டிலேயே வாழ வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள கௌசல்யா நலமாக வாழ, இருக்கிற வெளித்திண்ணையை 10 அடி நீட்டிப்பதும், குளிக்க இடம், கழிப்பிடம் இவற்றை 2, 3 இலக்கம் செலவிட்டு அமைப்பதும், கௌசல்யாவைப் படிக்க வைப்பதும் சி.வேலுச்சாமியின் கடமையாகும்.

இங்கே பறையர் வகுப்பினர் 58 குடும்பத்தினர் உள்ளனர். ஒரு குடும்பத்தாருக்குக்கூட ஒரு செண்ட் வேளாண் நிலம் இல்லை.

10, 12 குடும்பங்களில் 10ஆம் வகுப்புப் படித்த வர்கள் உள்ளனர். பட்டம் பெற்றவர் ஒருவர் கூட இல்லை. பி.ஏ. பொருளியல் படிப்பில் சேர்ந்த ஒரு பெண் மேற்கொண்டு படிக்க வசதி இன்றித், திருமணம் செய்து கொண்டார். இந்தப் பெண்ணும், தங்கராசுவின் மகன் நாகராசுவும்-58 வீட்டுக்காரரும் அற்றைக் கூலிக்காரர் கள் என்று ஆத்திரத்தோடு சொன்னார்கள். அவர்கள் வடித்த கண்ணீர் அமராவதி ஆற்றங்கரையில் காய்கிறது.

ஊரின் முதன்மைச் சாலையில், கீழ்ப் பகுதியில் அருந்ததியர் என்கிற சக்கிலியர் தெரு உள்ளது. அங்கு 30 குடும்பத்தினர் வாழ்கிறார்கள். பத்தாம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள் எல்லாக் குடும்பங்களிலும் உள்ள னர்; பட்டம் பெற்றவர்கள் 3 பேர்; பட்ட வகுப்பில் படிப் போர் 5 பேர் உள்ளனர். பாலர் பள்ளியில் ஒரு பெண் சத்துணவு அமைப்பாளராக உள்ளார்.

இந்த 30 குடும்பங்களில் எவருக்குமே வேளாண் மை செய்யச் சொந்தமாக நிலம் இல்லை. எல்லோரும் அற்றைக் கூலிகள்; ஒரு மின் விளக்கு மட்டும் உள்ள ஒற்றை அறை வீடுகளில் வாழ்கிறார்கள்.

வெளி விவரம் அறிந்த எம். மோகன் என்கிறவர், உடுமலை பள்ளபாளையத்தில் சிண்டிகேட் வங்கியில் அலுவலக உதவியாளராக (Attender) உள்ளார்.

அதே தெருவில் மேல் பகுதியில் வள்ளுவர் தெரு தனியே உள்ளது. அங்கு 40 குடும்பத்தினர் வாழ் கின்றனர். இவர்களில் 4 குடும்பத்தினர்க்கு தலைக்கு 4 ஏக்கர் வேளாண் நிலம் உள்ளது. 40 பேருக்குமேல் 10ஆம் வகுப்புப் படித்துள்ளனர். 30 பேர் பட்டம் பெற்ற வர்கள்.

கொழுமம் ஆதியின் வகுப்புத் தோழர் ஞான. சக்திவேல். இவருடைய துணைவியார் முனைவர் பட்ட ஆய்வை முடிக்க உள்ளார். இவ்வகுப்பினர் பலரும் சோதிடம் பார்ப்பது, தீண்டப்படாதார் வீட்டில் மதச்சடங்குகள் செய்வதைத் தொழிலாகக் கொண் டுள்ளனர்.

இவ்வூரில் கோமுட்டிச் செட்டியார், வன்னியர், இஸ்லாமியர், அடர்த்தியாக உள்ளனர். முக்குலத் தோர், கொங்கு  வேளாளர், பார்ப்பனர், கம்ம நாயுடு, கவரை நாயுடு குடும்பத்தினரும் உள்ளனர்.

குமரலிங்கம் நிகழ்ச்சி காட்டும் படமும் பாடமும் என்ன?

இந்தியாவிலுள்ள 127 கோடி மக்களில், 106 கோடிப் பேராக இருக்கிற இந்துக்களிடையே முதலாவது சமூக சமத்துவம் அன்றும் இன்றும் இல்லை. அதாவது, இந்துக்களிடையே “பிறப்பால் எல்லோரும் சமம்” என்கிற உணர்வு இல்லை. முதலில் இது தனியாக வராது என்பதை நாம் உணர வேண்டும். சமூக சமத்துவ மும், அரசியல் சம உரிமையும், பொருளாதார விடு தலையும், இறுதியாகப் பண்பாட்டுப் புரட்சியும் நம்மி டையே ஒருசேர வந்து தீர வேண்டும்.

சாதி ஒழிப்புக் கொள்கையினர் எல்லோரும் இத்திசை நோக்கிப் பயணிப்போம், வாருங்கள்!