அக்கிராசனர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!

என்னை நாத்திகன் என்று சொல்லுகிறவர்கள் நாத்திகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகிறார்களோ, அந்த அர்த்தத்தில் நான் நாத்திகன் தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன். நாத்திகத்திற்குப் பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய முடியாது. அதிலும், சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டுமானால் நாத்திகத்தினால் தான் முடியும். நாத்திகம் என்பதே சமதர்மம் என்ற பெயர். அதனால் இரஷியாவையும் நாத்திக ஆட்சி என்கிறார்கள். புத்தரையும் நாத்திகர் என்பதற்குக் காரணம், அவர் சமதர்மக் கொள்கையைப் பரப்ப முயற்சித்த தால்தான். நாத்திகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரம் அல்ல; சீர்திருத்தம் - அதாவது, ஏதாவது பழைய கொள்கைகளை மாற்ற வேண்டுமானால் அந்த மாற்றத்தையும் - ஏன், எவ்விதச் சீர்திருத்தத்தையுமே நாத்திகம் என்று தான் யதாப்பிரியர்கள் சொல்லித் திரிவார்கள்.

எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடம் இல்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கிறது. கிறிஸ்துவையும், முகமது நபியையும்கூட நாத்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர் மமும், சீர்திருத்தமும்தான் காரணமாகும். துருக்கியில் பாட்சாவும், ஆப்கானிஸ்தானில் அமீரும் நாத்திகர்கள் என்று அழைக்கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தம் தான் காரணம். ஏனென்றால், இப்பொழுது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும், பழக்கங்களும் - எல்லாம் கடவுள் செய்ததென்றும், கடவுள் கட்டளைகள் என்றும், கடவுளால் சொல்லப்பட்ட வேதங்கள் சாஸ்திரங்கள் ஆகியவைகளின் கட்டளை என்றுமே தான் யதாப் பிரியர்கள் சொல்லுகிறார்கள். ஆகவே, நாம் இப்பொழுது எதை எதை மாற்ற வேண்டும் என்கின்றோமோ அவைகள் எல்லாம் கடவுள் செய்ததாகவும் அல்லது கடவுள் தனது அவதாரங்களையோ தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப்படு வதால், அவைகளைத் திருத்தவோ, அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட்டளையை மீறின - அல்லது கடவுள் கொள்கையை மறுத்ததே ஆகும்.

உதாரணமாக, மக்களில் நான்கு சாதி கடவுளால் உற்பத்தி செய்யப்பட்டது என்று சொல்லப்படுகையில், மேற்படி சாதி ஒழிய வேண்டுமென்றால், அவன் கண்டிப்பாகக் கடவுளை மறுத்தோ, அலட்சியம் செய்தோதான் ஆக வேண்டும். எல்லா மதங்களும், மதக் கொள்கைகளும் கடவுளாலோ, அவதாரங்களா லோ, கடவுள் தன்மையாலோ ஏற்பட்டவை என்று சொல்லப்படுகையில் அம்மத வித்தியாசங்கள் ஒழிய வேண்டும் என்றும் மதக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்றும் சொல்லும் போதும், அப்படிச் சொல்லுபவன் அந்தக் கடவுள்களை, கடவுள்களால் அனுப்பப்பட்ட தெய்வீகத் தன்மை பொருந்தினவர் களை அலட்சியம் செய்தவனேயாகின்றான். அதனால் தான் கிறிஸ்தவர் அல்லாதார் ‘அஞ்ஞானி’ என்றும், முகமதியரல்லாதவர் ‘காபிர்’ என்றும் இந்து அல்லா தவர் ‘மிலேச்சர்’ என்றும் சொல்லப்படுகின்றனர்.

அன்றியும், கேவலம் புளுகும் ஆபாசமும் நிறைந்த புராணங்களை மறுப்பதே - இந்து மதக் கொள்கைப் படி நாத்திகம் என்று சொல்லப்படும்போது, சாதியையும் கர்மத்தையும் மறுப்பதை ஏன் நாத்திகம் என்று சொல்லமாட்டார்கள்?

சாதி, உயர்வு-தாழ்வு, செல்வம், தரித்திரம், எஜமான், அடிமை ஆகியவைகளுக்குக் கடவுளும், கர்மமும் தான் காரணம் என்று சொல்வதானால், பிறகு மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் எங்கே இருக்கின்றன? கடவுளையும், கர்மத்தையும் ஒழித்தாலொழிய அதற் காக மனிதன் எப்படிப் பாடுபட முடியும்? மேடும் பள்ளமும் கடவுள் செயலானால், மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டுச் சமன் செய்வது கடவுள் செயலுக்கு விரோத மான காரியமே ஆகும். மனிதனுக்கு முகத்தில், தலை யில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால், சவரம் செய்து கொள்வது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும் - அதாவது ஓரளவுக்கு நாத்திகமான காரியமும் ஆகும். பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமே யாகும். ஏனெனில், கடவுள் பார்த்து ஒருவனை அவனது ‘கர்மத்திற்காக’ப் பட்டினி போட்டிருக்கும் போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோத மான காரியமேயாகும். அதாவது, கடவுளை நம்பாத - கடவுள் செயலை இலட்சியம் செய்யாத தன்மையே ஆகும். இப்படியே பார்த்துக் கொண்டு போனால், உலகத்தில் ஆத்திகன் ஒருவனும் இருக்க முடியாது. ஆதலால், நம்மைப் பொறுத்தவரையில் நாம் பல மாறுதல் ஏற்பட விரும்புவதால் அது கடைசியாய் நாத்திகமேயாகும். நாத்திகமும் சாஸ்திர விரோதமும், தர்மத்திற்கு விரோதமும் செய்யாமல் யாரும் ஒரு சிறிதும் உண்மையான சீர்திருத்தம் செய்ய முடியவே முடியாது.

நமது நாட்டினர்களே ஏழைகளை வஞ்சித்துக் கொள்ளை அடிக்கிறார்கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொள்வதால் தினமும் ஏய்த்துக் கொண்டே வருகிறார்கள். அப்படிப்பட்ட பாமர மக்களை விழிக்கச் செய்து, ‘நீங்கள் ஏழைகளாய், தரித்திரர்க ளாய் இருப்பதற்குக் கடவுள் செயல் காரணமல்ல; உங்கள் முட்டாள்தனம்தான் காரணம். ஆதலால், நீங்கள் கடவுள் செயலை இலட்சியம் செய்யாதீர்கள்’ என்று சொன்னால்தான், செல்வந்தர்களின் அக்கிரமங் களைப் பாமர மக்கள் அறியக்கூடும். அப்பொழுது கடவுள் செயலையும் - அதிக மூடர்களிடம் கடவு ளையும் மறுத்துத்தான் ஆக வேண்டும்.

இந்த நாட்டில் ஒருபுறம் ஏழைகள் பட்டினி கிடக்க; ஒருபுறம் சிலர் கோடீஸ்வரராய்க் கொண்டு தலைக் கொழுத்து டம்பாச்சாரியாய்த் திரிவது கடவுள் செயல் என்றால், இந்த நாட்டுச் செல்வத்தை வெளியான் சுரண்டிக் கொண்டு போவதும், அவன் அங்கு ஆடம்பரமாய் வாழ்வதும் கடவுள் செயல் என்றுதான் சொல்ல வேண்டும். ஆகையால், கடவுள் செயல்கள் ஒரு காரியத்திற்கும் மற்றொரு காரியத்திற்கும் மாறுபடுவது போலவே - தர்மமும், நீதியுங்கூட ஒரு சமயத்திற்கும் மற்றொரு சமயத்திற்கும் மாறுபட வேண்டியதே ஆகும். ஒரு காலத்தில் அரசர்கள் விஷ்ணு அம்சமாய் இருந்தார்கள். ஆனால் இப்போது அரசர்கள் கொள்ளைக்காரர்கள் என்று சொல்லப்படு கிறார்கள். அதுபோலவே, செல்வவான்கள் இந்தக் காலத்தில், ‘இலட்சுமி புத்திரர்களாய்’ இருக்கிறார்கள். இன்னொரு காலத்தில், அவர்கள் ‘பெருத்த வஞ்சகப் பகற்கொள்ளைக்காரர்கள்’ என்று அழைக்கப்பட்டு, பலாத்காரத்தில் அவர்களிடம் இருக்கும் செல்வங் களைப் பிடுங்கிக் கொள்ளப்பட வேண்டியவர்கள் ஆவார்கள். உதாரணமாக, மனுதர்ம சாஸ்திரத்தில் ‘சூத்திரன் பொருள் சேர்த்து வைத்து இருந்தால், பார்ப்பனன் அதைப் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாம்’ என்று இருக்கின்றதை இன்னும் பார்க் கின்றோம். கொஞ்ச காலத்திற்கு முன் இது அமுலிலும் இருந்து இருக்கிறதாம்.

இனிக் கொஞ்ச நாள் போனால் பார்ப்பான் பணம் வைத்து இருந்தால் பார்ப்பனரல் லாதார் பலாத்காரமாய்ப் பிடுங்கிக் கொள்ளலாம் என்று தர்மம் ஏற்பட்டாலும் ஏற்படும். அப்படி ஏற்படுவது முன்னைய வழக்கத்திற்கு விரோதம் என்பதாக யாரும் சொல்ல முடியாது. காலம் போகப்போக, நேரில் உழுது பயிர் செய்ய முடியாதவனுக்குப் பூமி இருக்க வேண்டியதில்லை என்றும், அப்படி இருந்தாலும் சர்க் காருக்கு வரி கொடுப்பது போல் ஒரு சிறு அளவுதான் பாத்தியமுண்டேயொழிய, இப்பொழுது இருப்பதுபோல் உழுகின்றவன் தன்வயிற்றுக்கு மாத்திரம் எடுத்துக் கொண்டு - ஏன், சில சமயங்களில் அதற்கும் போதா மலும் இருக்க, பூமிக்கு உடைய வனுக்குப் பெரும் பாகம் கொடுப் பது என்கிற வழக்கம் அடிபட்டாலும் அடிபடலாம். அதுபோல வே, இன்று கோயில் கட்டுவது தர்மமாக இருக்கிறது. ஆனால், பிற்காலத்தில் கோவிலை இடித்து விக்கிரகங்களை அப்புறப்படுத் துவதும் தர்மம் என்று ஆகலாம். இதுபோலவே, அநேக விஷயங்களில் இன்றைய ‘தர்மம்’ நாளைய ‘அதர்மம்’ ஆகி, தலைகீழாக மாறக் கூடும். அப்பேர்ப்பட்ட நிலைமை வரும்போது, இன்றைய நிலைமை எல்லாம் கடவுள் கட்டளை என்றால் அதை மாற்ற முற்படுகின்றவன் கடவுள் கட்டளையை மறுக்க - ஏன் கடவுளையே மறுக்கத் துணிய வேண்டும். கடவுளை மறுக்கத் துணிந்தவனே தர்மத்தின் பேரால் உள்ள இன்றைய கொடுமைகளை ஒழிக்க வேண்டும். அப்படிக்கில்லாமல், கடவுளுக்கும் மோட்சத்திற்கும் பயந்துகொண்டு இருப் பானானால் ஒரு காரியமும் செய்ய முடியாது என்பது உறுதி.

ஏனெனில், அரசியல், சமூக இயல், பொருளாதார இயல் ஆகியவைகளில் உள்ள இன்றைய கொடுமை யான நிலையும் முட்டாள்தனமான நிலையும், அயோக்கியத்தனமான நிலையும் எல்லாம் கடவுள் கட்டளையாலும், மோட்ச சாதனங்களாலும், சாஸ்திர தர்மங்களாலுமே ஏற்பட்டவைகளாகும். ஆகையால் தான், அவ்விஷயங்களில் நான் அவ்வளவு உறுதி யாய் இருக்கிறேன்.

(திருச்சியில் 1.9.1930ல் சொற்பொழிவு)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.