“பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” நூல் தொகுப்பு பற்றிய “காலச்சுவடு” பழ. அதியமானின் விமர்சனக் குறிப்புகள் மீது சில விளக்கங்கள் 

தோழர் வே. ஆனைமுத்து அரிதின் முயன்று தொகுத்துப் பதிப்பித்த 9304 பக்கங்களைக் கொண்ட “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” நூல் தொகுப்பானது 7 தொகுதிகளில் 20 நூல்களாக வெளியிடப்பட்டுள்ளது. மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, பெரியாரிய அம்பேத்கரிய தமிழ்த் தேசிய அமைப்புகள், சூலூர் பாவேந்தர் பேரவை மற்றும் பல தமிழ் அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் சில பத்துப் பேர்களின் பேருழைப்பில் ஈட்டிய முன்பதிவின் அடிப்படையில் சென்னை “பெரியார் ஈ.வெ.ரா. - நாகம்மை கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை”யினரால் கடந்த 21-03-2010இல் இத் தொகுதிகள் வெளியிடப்பட்டன.

ஏறக்குறைய தமிழ்நாட்டில் வெளிவரும் அனைத்து நாளிதழ்களும், சில வார மாத ஏடுகளும், பெரியாரிய - அம்பேத்கரிய - தமிழ்த் தேசியச் சிந்தனையைத் தாங்கிய சில சிற்றிதழ்களும் அவ் வரலாற்று நிகழ்வினை நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் பதிவு செய்திருந்தன.

“எங்கெல்லாம் மடமை - ஒடுக்குமுறை என்கிற பொருள்படுகிற நிகழ்வுகள் எந்த வடிவத்திலேனும் நடக்கின்றனவோ அங்கெல்லாம் பெரியாரின் தேவை இன்றும் நாளையும் இன்னும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும்” எனப் பரவலாகப் பேசப்படும் தமிழ்நாட்டில், ஆறு மாதக் காலம் நாடு முழுவதும் ஊண் உறக்கமின்றித் தோழர்கள் அலைந்து திரிந்தும் மொத்த நூல் முன்பதிவு எண்ணிக்கையில் 3000த்தைத் தொட முடியவில்லை. இவ் அரிய நூல் தொகுப்பை வாங்கும் ஒவ்வொருவரும் 50 ஆண்டுக்கேனும் பொத்திப் பாதுகாக்கவேண்டும் என்கிற தேவை கருதி நூலின் தாள், அட்டை, கட்டமைப்பு என அனைத்தும் மிகத் தரமாகவும், மிகுந்த பொருள் செலவிலும் பதிப்பிக்கப்பட்டு ரூபாய் 3500க்கு (ஏறக்குறைய நூலின் அச்சாக்கத்தின் அடக்க விலை) வழங்கியும் எண்ணிக்கையில் 3000த்தைத் தொட முடியவில்லை என்பது மேற்கூறிய நம்பிக்கைக்கு நாமும் நம் மக்களும் எந்த அளவிற்குப் பொருத்தமானவர்கள் என்பதைச் சிந்திக்க வைக்கிறது.

அஃதேபோல், நூல் வெளிவந்த பிறகு அந்த நூல் தமிழ்ச் சமுதாயத்தில் என்ன தாக்கத்தை விளைவித்தது என்று நெஞ்சில் கை வைத்துக் கூறுவோமேயானால் ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட வீடுகளில் பாதுகாப்பாக உறங்கிக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில், பெரியாரியலை, அம்பேத்கரியலை, தமிழ்த் தேசியச் சிந்தனையைத் தூக்கிப் பிடிக்கிற - இச்சிந்தனைகளில் களத்தில் நின்று தொடர்ந்து செயல்படுகின்ற சிற்றிதழ்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் எனக்கூட்டினால் சில நூறு பேரையாவது காணமுடியும். அப்படி இருந்தும் தமிழ்நாட்டின் எந்த ஒரு மூலை முடுக்கிலிருந்தும் இவ் வரலாற்றுச் சிந்தனைப் பெட்டகத்தைப் பற்றி, அதன் நிறை குறைகளைப் பற்றிய விமர்சனம், திறனாய்வு என எந்தத் தன்மையிலும் ஒரு சிறு அளவில்கூடச் செய்திகளோ கட்டுரைகளோ கடந்த ஆறு மாத காலத்தில் வெளிவந்ததாக நம் சிற்றறிவிற்கு எட்டவில்லை. இத்தொகுப்பின் பதிப்பாசிரியரைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “சிந்தனையாளன்” ஏட்டில்கூடச் சில கடிதங்கள் வெளிவந்தனவே தவிர வேறொன்றும் இல்லை.

மொழி, இனம், சிந்தனை, தத்துவம் என எல்லாவற்றிலும் நம் தமிழர்கள் தங்கள் நிலைப்பாட்டில் எப்போதும் ஒரே அளவுகோலை வைத்துத்தான் பார்க்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அது யாதெனில், சொல்வதும் வெளியிடுவதும் யார், எந்த அமைப்பு, எந்த ஏடு என்கிற கண்ணோட்டத்தில் பார்த்து அதனுள் புதைந்துள்ள செய்தியை, அதன் தேவையைக் காற்றில் பறக்கவிட்டுப் பிரிந்தே கிடப்பது என்பதும்; ஒத்த சிந்தனயாளர்கள் மொழி, இன, சமூகப் போராட்டங்களின்போதும் அதன் தேவை கருதிகூட ஒன்றுசேர முனையாததும் என்பதுமாகும். அந்த வகையில்தான் “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” நூலும் பார்க்கப்பட்டது.

“இந்து” ஆங்கில நாளேடு மட்டும் 2010 ஆகஸ்டுத் திங்களில், “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்”, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தார் வெளியிட்ட “குடி அரசு - 17 தொகுதிகள்”, பெரியார் திராவிடர் கழகத்தினர் வெளியிட்ட “குடி அரசு - 27 தொகுதிகள்” ஆகிய மூன்று வெளியீடுகளையும் உள்ளடக்கி ஒரு கட்டுரை வெளியிட்டது. அந்த வகையில், பழ. அதியமான் அவர்கள் “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” தொகுப்பு முழுவதையும் வாசித்துத் திறனாய்வு செய்து, “காலச்சுவடு” திங்களிதழ், அக்டோபர் 2010 இதழில், “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் - முழுமையின் திசை நோக்கிய பயணம் - திருத்தப்பட்டு விரிவாக்கம் பெற்ற இரண்டாம் பதிப்பு: சில விமர்சனக் குறிப்புகள்” என்னும் தலைப்பில் ஒரு மதிப்பீட்டுக் கட்டுரையை வெளியிட்டுள்ளமை நமக்குப் பெரும் மன நிறைவைத் தந்தது. அவரின் பொறுப்புணர்வுக்கு நாம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். அக் கட்டுரை முழுமையாகச் “சிந்தனையாளன்” நவம்பர் 2010 இதழில் அப்படியே வெளியிடப்பட்டுள்ளது.

திறனாய்வாளர் பழ. அதியமான் அவர்கள் “காலச்சுவடு” அக்டோபர் 2010 இதழ் பக். 22 முதல் 28 முடிய ஏழு பக்கங்களில் தீட்டியுள்ள அக்கட்டுரையில் 22 குறைகளைச் சுட்டியுள்ளார். “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” பதிப்பாசிரியர் தோழர் வே.ஆனைமுத்து தன் முதுமை மற்றும் பணிச்சுமை கருதியும் தன் கட்டுரைகள், தன் மீதான விமர்சனங்கள் எதற்கும் விளக்கம் கூறி, தேவையில்லாமல் தோழமைக்குள் விவாதங்கள் எழுப்ப வேண்டாம் - பிழையிருந்தால் திருத்திக் கொள்ளலாம் என்கிற கருத்துடையவர். பதிப்புப் பணியில் ஏறக்குறைய 2 ஆண்டுகளாக முழுவதும் பதிப்பாசிரியருக்கு உதவி புரிந்தவர்கள் என்கிற ஒரு தகுதியோடு மட்டும் திறனாய்வாளரின் சுட்டுகள் சிலவற்றிற்கு எங்களுக்குத் தெரிந்த விளக்கங்களைக் கூறக் கடமைப்பட்டுள்ளோம். மேலும், திறனாய்வாளரால் சுட்டப்பட்டுள்ள பிழைகளுள் முடிந்தவரை திசம்பர் 2010இல் பதிப்பிக்கப்பட இருக்கும் மறு வெளியீட்டில் திருத்தப்பட்டு வெளிவரும் என்று நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

பழ. அதியமான் சுட்டு 1: 1922 முதல் 1973 வரையில் வெளியான தந்தை பெரியாரின் கட்டுரைகள், அறிக்கைகள், சொற்பொழிவுகள் அடங்கிய தொகுப்பு ....... இக்கோரிக்கை தகுதி பற்றியதன்று, விருப்பம் சார்ந்தது.

மார்க்சியக் கோட்பாட்டில் இயங்கியல் தத்துவத்தை எளிமையாகச் சொல்ல முனையும் எவரும் “இந்த உலகில் மாறாத ஒன்று மாற்றம் மட்டுமே” என்பதை அறிவர். இவ் அடிப்படை ‘முழுமை’ என்கிற கூற்றுக்கும் பொருந்தும் என்றே கருதுகிறோம். ஏனெனில், ‘முழுமை’ என்கிற சொல்லைத் தவிர வேறு எதுவும் இவ் உலக இயங்கியலில் முழுமையை அடைந்துவிட முடியாது என்றே கருதுகிறோம். இக்கூற்று இத் தொகுப்புக்கும் பொருந்தும். பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் தொகுக்க முனையும் எவருக்கும் அதனூடான தேடல் எப்பொழுதும் முழுமை அடையாது. 1925 ‘குடி அரசு’ தொடக்கம் முதல் 1950 வரை சம கால இடைவெளிகளில் வெளிவந்த சுதேசமித்திரன், மெட்ராஸ் மெயில், நாடார்குல மித்திரன், குமரன், தன வைசிய ஊழியன், முன்னேற்றம், வெடிகுண்டு, சுயமரியாதைத் தொண்டன், தோழன், தமிழ்நாடு, திராவிடன், திராவிட நாடு, சண்டமாருதம், பகுத்தறிவு, புரட்சி முதலான பல நாளேடுகள், மாத - வார ஏடுகள், சிற்றிதழ்கள் முதலானவற்றில் பெரியாரின் கட்டுரைகள் பலவும் வெளிவந்திருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தித் தன்னால் முயன்றவரை பதிப்பாசிரியர் சேகரித்துத் தந்துள்ளார்.

பெரியார் அவர்கள் 1940 முதற்கொண்டு 1973 வரையில் ஆண்டுக்குச் சராசரியாக 200 நாட்களுக்கு மேல் பயணம் செய்துள்ளார் என்பதை அவரோடு ஏறக்குறைய 20 ஆண்டுகள் அணுக்கமாக இருந்த இத் தொகுப்பின் பதிப்பாசிரியர் தோழர் வே.ஆனைமுத்து பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். பெரியார் தான் அறிவித்த ஒவ்வொரு கிளர்ச்சியைப் பற்றியும் குறைந்தது ஒரு மாதம் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து விளக்கிச் சொற்பொழிவாற்றியுள்ளார். அவை அனைத்தும் அவராலேயே கைப்பட எழுதப்பட்டோ அல்லது அவருடைய சொற்பொழிவுகளைப் பிறர் தொகுத்து எழுதி அவரால் திருத்தம் செய்யப்பட்டோ குடி அரசு, விடுதலை முதலான ஏடுகளில் வெளியிடப்பட்டுள்ளன. 1950 முதல் 1973 வரையில் அவை பெரும்பகுதி விடுதலையில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு பொருள் பற்றி அல்லது ஒரு கிளர்ச்சி பற்றிப் பெரியார் பேசிய அல்லது எழுதிய பல கட்டுரைகளில் சிலவற்றைத் தேர்வு செய்துகொண்டு மற்றவை விடப்பட்டுள்ளன. இது, பெரியாரின் அறிவுரைப்படி 1974இலேயே மேற்கொள்ளப்பட்ட முறையாகும்.

புது தில்லி, சென்னை, திருவனந்தபுரம், கோட்டயம் எனப் பல ஆவணக் காப்பகங்களுக்குச் சென்று மாதக்கணக்கில் தங்கி, செல்லரித்துப்போன பல ஏடுகளிலிருந்து பல புதிய செய்திகளை இத் தொகுப்பில் சேர்த்துள்ளார்.

எடுத்துக்காட்டாக, தோழர் வே. ஆனைமுத்து 2005இல் திருவனந்தபுரம் ஆவணக் காப்பகத்தில் 15 நாட்கள் தகவல் திரட்டியபோது நான் (ஆ. முத்தமிழ்ச் செல்வன்) என் பணி நேரம் போக இரு வேளையிலும் நாள்தோறும் சந்தித்திருக்கிறேன். 15 நாட்கள் அப்படித் தேடியதில் அவர் கண்ட புதையல்களில் ஒன்று, 28-4-1924இல் திருவனந்தபுரத்தில் ஈ.வெ.இரா. அவர்கள் வைக்கம் கிளர்ச்சி பற்றித் தமிழில் சொற்பொழிவாற்றியதைக் கோட்டாறு அரசு உளவுத்துறை அதிகாரி இ. சுப்பிரமணிய பிள்ளை மலையாளத்தில் பதிவு செய்திருந்த திருவனந்தபுரம் அரசு ஆவணக்காப்பகக் கோப்பு. அந்தச் சொற்பொழிவு பழைய மலையாளத்தில் கையெழுத்துப் படிகளாக 40 முழுப் பக்கங்கள் இருந்தன. அதனை 82 அகவை கொண்ட ஒரு முதிய மலையாளப் பத்திர எழுத்தரிடம் கொடுத்துப் புதிய மலையாளத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு, அந்தப் படியானது மீண்டும் கேரளப் பல்கலைக் கழகக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் ச.பொ. சீனிவாசன் வழியில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இத் தொகுப்பில் இரண்டாம் வரிசையில் பக்கம் 74 முதல் பக்கம் 88 வரையில் சேர்க்கப்பட்டுள்ளது.

அதேபோல், 1924 தொடக்கத்தில் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளிவந்த ஈ.வெ.இரா. அவர்களின் முழுமையான அறிக்கையும்; 1924இல் திருவண்ணாமலை தமிழ் மாகாணக் காங்கிரசில் ஈ.வெ.இரா. ஆற்றிய உரை “நாடார்குல மித்திரன்” ஏட்டில் இருந்தும் திரட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இப்படியாகப் புதியனவாகத் தொகுக்கப்பட்டுள்ள பல செய்திகள் இத் தொகுப்பில் உண்டு. இத் தொகுப்பானது முறையே முதல் வரிசையில் 73, இரண்டாம் வரிசையில் 61 தலைப்புகளாகப் பொருள் அடிப்படையில் பகுத்து வெளியிட்டுள்ளது. இவை முழுமையானவை அல்ல. ஆனால், முழுமையானவை ஆக்கப்பட நிறைய வாய்ப்பு உண்டு.

இந்தியா முழுவதும், மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, சோவியத்து நாடுகள், அய்ரோப்பிய நாடுகள் எனப் பெரியார் பயணித்த உலக நாடுகளிலெல்லாம் அவர் ஆற்றிய உரைகளையும் எழுதிய கட்டுரைகளையும் தேடித் தொகுத்தோமேயானால் அவை 300 நூல்களாக வரக்கூடும் எனப் பதிப்பாசிரியர் தம் முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் என்பதைத் திறனாய்வாளரே ஒப்புக் கொள்கிறார். இருப்பினும், தந்தை பெரியாரை மானிடப் பற்றாளர், சமூகவியலாளர், நாத்திகர், அறிவியலாளர், அரசியலாளர், கொள்கையாளர், இயக்கத் தலைவர், உலகத் தலைவர்களுள் ஒருவர் எனப் பன்முகப் பார்வையில் அவருடைய 56 ஆண்டு காலச் (1917-1973) சிந்தனைகளைக் கால அடிப்படையில் துறை வாரியாகப் புரிந்துகொள்ள இத் தொகுப்பு ஏறக்குறைய போதுமானது என்கிற அடிப்படையில் பதிப்பாசிரியர் “1922 முதல் 1973 வரையில் வெளியான தந்தை பெரியாரின் கட்டுரைகள், அறிக்கைகள், சொற்பொழிவுகள் அடங்கிய அரிய தொகுப்பு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது தகுதியானது என்றே கருதுகிறோம். இவை தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகள் என்பது 1974இலேயே முன்னுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழ. அதி. சுட்டு 2: 1953இல் தமிழ்நாட்டில் இராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் பெரியார் மேற்கொண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றியோ குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு பற்றியோ இத் தொகுப்பில் தகவல்கள் முழுமை பெறாதிருக்கின்றன.   

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிகள் பற்றியும், குலக்கல்வி முறையை எதிர்த்தும் முறையே முதல் வரிசை பக்கம் 1143 - 1156, 2781 - 2900, இரண்டாம் வரிசை பக்கம் 4645 முதல் 4680 முடிய ஏறக்குறைய 170 பக்கங்களில் வரும் கட்டுரைகள் விரிவாகப் பேசுகின்றன. தகவல்கள் முழுமையடையாதிருப்பினும், மேற்கண்ட பக்கங்களில் உள்ள கட்டுரைகளின் வழி இந்தி எதிர்ப்பு - குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு - இராஜாஜி ஆட்சி எதிர்ப்பு என்பனவற்றைப் பற்றிய பெரியாரின் நிலைப்பாடு மற்றும் கிளர்ச்சிகள் பற்றிய புரிதலுக்கு வாசகர்களும் ஆய்வாளர்களும் வரமுடியும் என்று நம்புகிறோம்.

பழ. அதி. சுட்டு 3: இருபது நூல்களுக்கும் தொடர்ச்சியான வரிசை எண்களோ தொடர்ச்சியான பக்க எண்களோ இல்லாதது பெரும் குறை.

இருபது நூல்களுக்கும் முறையே தொடர்ச்சியான வரிசை எண்களும் தொடர்ச்சியான பக்க எண்களும் இடப்படாதது பெரும் குறைதான். 1974இல் வெளியிட்ட பதிப்பின் இரண்டாவது பதிப்பையும் இப்போது புதியதாகத் தொகுத்தவற்றின் முதல் பதிப்பையும் தனித் தனியாகவே வெளியிட வேண்டிய கட்டாயத்தினால் தொடர் பக்க எண்கள் இடமுடியாத குறை நேர்ந்துவிட்டது. ஆயினும், 2010 திசம்பரில் வெளிவரும் இரண்டாம் பதிப்பின் மறுவெளியீட்டில் இருபது நூல்களின் முதுகுப் புறத்திலும் முறையே 1, 2, 3, -----, 20 என வரிசை எண்கள் இட்டு அச்சிட்டுள்ளோம்.

பழ. அதி. சுட்டு 4: தொகுதியின் எண்களையும் பகுதியின் எண்களையும் நூற்புறத்தில் நூலின் அளவைப் பற்றிக் கருதாமல் ஒரே அளவில் அச்சிட்டிருக்கலாம்.

2010 திசம்பரில் வெளிவரும் இரண்டாம் பதிப்பின் மறுவெளியீட்டில் இருபது நூல்களிலும் அட்டையின் முதுகில் வரும் செய்திகள், படங்கள், எண்கள் ஆகிய அனைத்தும் ஒரே அளவு வடிவத்தில் அச்சிடப்பட்டுள்ளன.

பழ. அதி. சுட்டு 5:        20 நூல்களுக்கும் சேர்த்து ஒரு தொடர் எண்ணை அளித்து அதை நூலின் முதுகில் அச்சிட்டிருக்கலாம்.

2010 திசம்பரில் வரும் மறு வெளியீட்டில் இருபது நூல்களுக்கும் தொடர்ச்சியான வரிசை எண்களும் அட்டையின் முதுகில் கொடுக்கப்பட்டுள்ளன.

பழ. அதி. சுட்டு 6:        ஒவ்வொரு இயலின் முடிவிலும் அமையும் அடிக்குறிப்புகளைக் குறிப்பெண் விளக்கம் என்னும் புதிய பெயரில் கொடுத்திருக்கிறார் பதிப்பாசிரியர்.

குறிப்பெண்களுக்கான விளக்கங்கள் எண் இடப்பட்டுள்ள பக்கத்தின் அடிப் பகுதியிலேயே கொடுக்கப்பட்டால் அவை அடிக்குறிப்புகள் என்றும் இயல் அல்லது பகுதியின் முடிவில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டால் அவை குறிப்பெண்களுக்கான விளக்கங்கள் என்றும் பொருள் கொள்ளப்பட்டு “குறிப்பெண் விளக்கம்” என்னும் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெருமளவிலான முனைவர் பட்ட ஆய்வேடுகளும், ஆய்வு நூல்களும் இப்போது இவ் வகையில் காணப்படுகின்றன.

பழ. அதி. சுட்டு 7:        இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1922இல் சௌரி சௌராவில் காவல் நிலையத்தைச் சத்தியாகிரகிகள் தாக்கி அழித்தது ஒத்துழையாமை இயக்க நிகழ்வில் ஒரு முக்கியச் சம்பவம். இதை, சட்ட மறுப்பு இயக்க நிகழ்வாகக் குறிப்பெண் விளக்கம் குறிக்கிறது (பக். 1701, இரண்டாம் வரிசை).

இந்தப் பிழை 2010 திசம்பரில் வரும் மறு வெளியீட்டில் ஒத்துழையாமை இயக்க நிகழ்வு எனத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பழ. அதி. சுட்டு 8: விடுதலைப் போராட்டத் தலைவர் ஜார்ஜ் ஜோசப் (பக். 180, முதல் வரிசை) பிறப்பு - இறப்பு, ஆந்திரப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் கட்டமஞ்சி இராமலிங்க ரெட்டியின் (பக். 785, 4943 - இரண்டாம் வரிசை) முதல் எழுத்து ஆகியவை முறையே தவறாகத் தரப்பட்டுள்ளன.

2010 திசம்பரில் வெளிவரும் இரண்டாம் பதிப்பின் மறுவெளியீட்டில், ஜார்ஜ் ஜோசப் (1887-1938) எனவும்; சட்டமஞ்சி என்பது கட்டமஞ்சி எனவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. Cattamanch என்கிற ஆங்கிலச் சொல்லில் வரும் ‘சி’ என்கிற எழுத்தை மொழிமாற்றம் செய்யும்போது நேர்ந்துவிட்ட பிழை இது.

பழ. அதி. சுட்டு 9: பாத தீர்த்தம் சாப்பிட்டு “தர்ம பூஷணம்” என்று கௌரவப் பட்டம் பெற்றவர்’ (பக். 3966, இரண்டாம் வரிசை) என்று பிரதியில் கிண்டல் செய்யப்படும் தி.நா. முத்தய்ய செட்டியார், குறிப்பெண் விளக்கத்தில் இதற்கு நேர்எதிராய்ப் பாராட்டு பெறுகிறார். அடிமைச் செயல் என்று கட்டுரை கிண்டல் செய்ததை, அறப்பணி எனக் குறிப்பெண் விளக்கம் புகழ்ந்துரைக்கிறது.

எந்த ஒரு நபருக்குமான குறிப்பெண் விளக்கத்திலும் நம் சிந்தனைப் பார்வையை அவர்மீது திணிக்காமல், கிடைத்த பொதுமையான தரவுகளின் அடிப்படையில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இவ் வகையில், “27-7-1883இல், செட்டிநாட்டில், கடியாப்பட்டி என்னும் ஊரில், தீ. நாச்சியப்பர் - உமையாள் ஆச்சி இணையருக்குப் பிறந்தார். 1913இல் புதுக்கோட்டை அரசர் இவரைத் தம் சமஸ்தானத்தின் மேலவை உறுப்பினராக நியமித்தார். பல்வேறு அறப்பணிகளில் ஈடுபட்டு ‘தரும பூஷன்’ பட்டம் பெற்ற இவர் 5-9-1936இல் மறைவுற்றார்.” என்பதே அவரைப்பற்றி நாம் தந்துள்ள குறிப்பாகும். பெரியாரின் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு எந்தத் தலைவரைப் பற்றியும் கிடைக்கக்கூடிய குறிப்பினை அவர்களுடைய வரலாற்றில் உள்ளவாறு தருவதுதான் ஆய்வு நெறியும் நேர்மையும் ஆகும் என்றே கருதுகிறோம். முதன்மையான சில நபர்களுக்கு மட்டும் பெரியாருடனான நட்பு முரண், பகை முரண் குறிக்கப்பட்டுள்ளது.

பழ. அதி. சுட்டு 10:       இராமன், கிருஷ்ணன், திரௌபதை ஆகியோர் பற்றிய குறிப்பெண் விளக்கங்களும் பொதுப்புத்தி சார்ந்தே உள்ளன. பெரியார் என்னும் புரட்சியாளரின் நூலில் கிடைக்கும் விளக்கங்கள் என்ற எண்ணம் துளிகூடத் தோன்றவில்லை.

       புராண இதிகாசங்களை விமர்சிப்பதில் பெரியாருக்கு நிகர் பெரியாரே. அதற்குமேல் விமர்சனம் தேவையில்லை என்றே கருதுகிறோம். அவை முழுவதும் இத் தொகுப்பில் “மதமும் கடவுளும்” என்னும் தொகுதியில் இரண்டு நூல்களாக 800 பக்கங்களில் காணக் கிடைக்கின்றன. தொகுப்பு முழுவதிலும் விரவியும் காணப்படுகின்றன. அவற்றில் வரும் நூல், கதை மாந்தர், இடங்கள் முதலானவற்றிற்குக் குறிப்பெண் விளக்கங்கள் எழுத முற்படும்போது அவை குறித்த இலக்கியக் குறிப்பினை மட்டும் பொதுநிலையில் குறிப்பதும், பெரியாரின் பார்வையைச் சுருக்கமாகச் சிலவற்றில் பதிவு செய்வதும் என்கிற அடிப்படையிலேயே குறிப்புகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பெரியபுராணத்திற்கு “சிவனடியார்களான 63 நாயன்மார்களைப் பற்றிச் சேக்கிழாரால் எழுதப்பட்ட காவியம் பெரிய புராணமாகும். சுந்தரர் எழுதிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு இயற்றப்பட்ட நூலாகும்.” என்றும், இராமனுக்கு, “இராமாயண இதிகாசக் கதைத் தலைவன். அயோத்தியில் தசரதன் - கோசலை ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவன். சீதையை மணந்தவன். இராவணன், வாலி, சம்பூகன் முதலிய தென்னாட்டுத் தலைவர்களைக் கொன்றவன். பெரியாரால் 1922 முதல் 1973 முடிய மிகவும் கடுமையாக விமரிசிக்கப்பட்ட கடவுள். இராமன் படம் 1971இல் சேலத்தில் பெரியாரால் எரிக்கப்பட்டது; ஏப்பிரலில் அவரவர் வீட்டில் செருப்பால் அடிக்கப்பட்டது.” (முதல் வரிசை - பக்.86) என்றும் கொடுக்கப்பட்டுள்ளமை திறனாய்வாளர் பழ. அதியமான் குறிப்பட்டுள்ளபடி எந்த வகையில் பெரியாரின் புரட்சிகரச் சிந்தனைக்கு முரணானது என்று நமக்கு விளங்கவில்லை.

பழ. அதி. சுட்டு 11:       மணிமேகலை என்னும் கதாபாத்திரம் பற்றிய குறிப்பு வர, மணிமேகலை நூல் பற்றி விளக்கம் தரப்பட்டுள்ளது. (பக். 4152, இரண்டாம் வரிசை).

இந்தப்பிழை 2010 திசம்பரில் வரும் மறு வெளியீட்டில் திருத்தம் செய்யப் பட்டுள்ளது.

பழ. அதி. சுட்டு 12:       வேண்டாத அந்தமானுக்கும் குறிக்கப்படாத மணிமேகலை நூலுக்கும் விளக்கம் தரும் பிரதி, முக்கியச் சுயமரியாதைக்காரர்கள் சிலர் குறித்து முழுமையான விவரம் தேடித்தராது விடுகிறது. ---- --- --- ராகு, கேதுகளுக்கெல்லாம் குறிப்பெண் விளக்கம் உள்ள நூலில் என். வி. நடராஜன், எஸ்.வி. லிங்கம், ஒ.கந்தசாமி செட்டியார், திருமலை சாமி போன்றோருக்கு முழுமையான குறிப்பெண் விளக்கம் இல்லை.

“பெயர்க் குறிப்பு அகராதி என்னும் சொல்லடைவில் தரப்பட்டுள்ள எல்லாப் பெயர்களுக்கும் வாழ்க்கைச் சுருக்கம் தரப்பட முடியவில்லை. அதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளுவதற்கான ஆய்வு அறிஞர்கள், ஆய்வு மாணவர்கள், அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தருவதற்கான ஏந்துகள் போதிய அளவில் பெரியார் ஈ.வெ. இராமசாமி - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளையினருக்கு இல்லை.” (முன்னுரை - பக். 51, இரண்டாம் வரிசை). “எல்லோருக்கும் விளக்கம் எழுதப் போதிய பொருள் அறக்கட்டளைக்கு இல்லை” என்பதைத் திறனாய்வாளரே ஒப்புக்கொள்கிறார். இருப்பினும், என். வி. நடராஜன், திருமலை சாமி, எஸ்.வி. லிங்கம், முதலானோருக்குக் கிடைத்த குறிப்புகள் முறையே முதல் வரிசை பக்கம் 1687, இரண்டாம் வரிசை பக்கங்கள் 1582, 1882இல் கொடுக்கப்பட்டுள்ளன. எவ்வளவு முயன்றும் ஒ. கந்தசாமி செட்டியார், எஸ்.எஸ். ஆனந்தம் முதலானோருக்குக் குறிப்புகள் கிடைக்க வில்லை. பெரியாரோடு வாழ்ந்து, பெரியாருக்கு அடுத்த நிலையில் பல கிளர்ச்சிகளில் தீவிரமாகப் பங்காற்றிய சுயமரியாதை இயக்க, நீதிக்கட்சி மற்றும் திராவிடர் கழகத் தலைவர்கள், தொண்டர்களின் வரலாறுகள் முறையாகத் தொகுக்கப்படவில்லை. அதன் தேவையை இத்தொகுப்புப் பணியில் ஏற்பட்ட இடர்பாடுகள் நமக்கு நன்கு உணர்த்தியுள்ளது.

பழ. அதி. சுட்டு 13:       குறிப்பிட்ட நபருக்கு/பொருளுக்கு எந்தப் பக்கத்தில் குறிப்பெண் விளக்கம் உள்ளது என்று அறிய இப்பார்வை நூலில் குறிப்பு இல்லை. தேடித்தான் தீர வேண்டும்.

“பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” என்னும் பெயரைத் தாங்கி இப்போது வெளியிடப்பட்டுள்ள 20 நூல்களிலும் அடங்கியுள்ள பெயர்ச்சொல் அடைவில் அடங்கிய பெயர்களுக்கு உரியவர்களுள் எண்ணற்றோரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்புகள், நாடுகள், புராணச் செய்திகள், இலக்கிய இலக்கணச் செய்திகள், நூல்கள், ஏடுகள் பற்றிய குறிப்புகள் - சற்று விரிவாகவும், சுருக்கமாகவும், மிகச்சுருக்கமாகவும் முடிந்த வரையில் திரட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அப்படி விவரங்கள் கிடைத்தவர்களின் - கிடைத்தவைகளின் பெயர் பெரியாரால் முதன் முதலில் குறிக்கப்படும் இடத்தில் வரிசை எண் இடப்பட்டு, அக் கட்டுரை அல்லது சொற்பொழிவு எந்தத் தொகுதியில் எந்த உட்பிரிவில் வெளி வந்துள்ளதோ அந்த உட்பிரிவின் இறுதியில் அவர்களை - அவைகளைப் பற்றிய குறிப்பெண் விளக்கம் முழுவதுமாக அச்சிடப்பட்டுள்ளது. அவ்வாறு குறிப்பெண் விளக்கம் கொடுக்கப்பட்டவர்களின் - கொடுக்கப்பட்டவைகளின் பெயர்கள் மட்டும் இரு வரிசைகளிலும் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ள பெயர்ச்சொல் அடைவில் தடித்த எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளன.

முதல் வரிசையில் குறிக்கப்பட்டுள்ள பெயர்கள் இரண்டாவது வரிசையின் பெயர்ச்சொல்லடைவிலும் வந்து தடித்த எழுத்தில் காட்டப்பட்டிருக்குமானால் அதற்கான விளக்கம் முதல் வரிசையில் கொடுக்கப்பட்டுவிட்டதால் அங்கே பார்க்கவேண்டும். முதல் வரிசையில் இடம்பெற்ற பெயர்கள் தடித்த எழுத்திலில்லாமல் இரண்டாவது வரிசையிலும் இடம்பெற்று முதல் வரிசையில் குறிப்புத் தராத நிலையில், இரண்டாவது வரிசையில் குறிப்பு விளக்கம் தரப்பட்டிருந்தால் இரண்டாவது வரிசையில் மட்டும் தடித்த எழுத்தில் காட்டப்பட்டிருக்கும். பெரியாரால் முதன் முதலில் குறிக்கப்படும் இடத்தில் குறிப்பெண் விளக்கம் கொடுக்கப்பட இயலாமல் போன மிகச்சில பெயர்களுக்கு மட்டும் எந்த இடத்தில் - அதாவது, எந்தக் கட்டுரையில் வரிசை எண் இடப்பட்டுள்ளதோ, அக் கட்டுரை எண் வரும் பக்க எண்ணும் பெயர்ச்சொல் அடைவில் தடித்த எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. (முன்னுரை - பக். 50, 51, இரண்டாம் வரிசை).

பழ. அதி. சுட்டு 14:       “--- ஒரு சாயபும் ஒரு நாயுடுவும் கவர்னராகிவிட்டார்கள். ஒரு செட்டியாரும் ஆகக்கூடும்.” (பக். 4281, இரண்டாம் வரிசை). பிரதியில் இது ஒரு தொடர். மேற்கண்ட தொடரில் குறிப்பிடப்பெறும் சாயபும் நாயுடுவும் யார் எவர் என்று குறிப்பு எண் கொடுத்து விளக்கம் எழுதியிருக்கலாம்.

இந்தச் செய்தி இரண்டாம் வரிசையில் பக்கம் 4287இல் வருகிறது. “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” 20 நூல்களிலும் அண்ணாமலை செட்டியார், முத்தய்யா செட்டியார், சண்முகம் செட்டியார், முத்தய்யா முதலியார், திரு.வி. கல்யாண சுந்தர முதலியார், வரதராசலு நாயுடு, கே.வி, ரெட்டி நாயுடு முதலான பலரும் பெயர் குறிக்கப்படாமல் செட்டியார், முதலியார், நாயுடு, ரெட்டியார் எனச் சாதிப்பெயர்களால் மட்டும் குறிக்கப் பட்டுள்ளனர். பெயர்ச்சொல்லடைவு தயாரிக்கும்போது முடிந்தவரையில் அவர்களுள் யார் என்பது கண்டறியப்பட்டு பெயர்ச்சொல்லடைவில் சேர்க்கப்பட்டுள்ளது.

பழ. அதி. சுட்டு 15:       குடிஅரசு இதழ்களே இத்தொகுப்பின் மூலபலம். குடிஅரசுவின் பங்கு 95 விழுக்காடு எனில் மற்றவை எல்லாம் சேர்ந்து 5 விழுக்காடு எனக் கொள்ளலாம். இருந்தாலும் குடிஅரசின் அனைத்துக் கட்டுரைகளும் இத்தொகுப்பிற்குள் வந்துவிட்டன எனவும் சொல்லிவிட முடியாது.

இக்கூற்று இரண்டாம் வரிசைக்குச் சாலப் பொருந்தும். ஆனால், முதல் வரிசையில் குடிஅரசின் பங்கு ஏறக்குறைய 50 விழுக்காடுதான். இந்த 20 நூல்களுள் குடி அரசு ஏட்டில் வந்த கட்டுரைகள் முழுமையடைந்துவிட்டன என்று நம் பதிப்பில் எங்கும் குறிப்பிடப்பட வில்லை. சில செய்திகளுக்கான கட்டுரைகள் விடுபட்டிருந்தாலும், நாம் முன்பே குறிப்பிட்டதுபோல் செய்திகள் அடிப்படையில் கூறியது கூறல் என்பதை நீக்கிப் பெரியாரின் பன்முகத் தன்மைக்கான கட்டுரைகள் பெரும்பகுதி இத் தொகுப்பில் கொடுக்கப்பட்டுவிட்டதாகவே கருதுகிறோம்.

பழ. அதி. சுட்டு 16:       பல கட்டுரைகள் தலைப்புக்கு அடங்க மறுத்துத் திமிறி நிற்கின்றன.

இவ்வாறு தலைப்புகளுள் அடங்கவில்லை எனக் கருதப்படும் கட்டுரைகள் எதிர்வரும் பதிப்புகளில் மாற்றி அமைக்கப்படும்.

பழ. அதி. சுட்டு 17:       சுயமரியாதை வீரர் சி. நடராசனின் தாயார் மறைவிற்கான இரங்கல் குறிப்பின் தலைப்பு மாயவரம் தோழர் சி. நடராசன் என உள்ளது (பக். 4702, இரண்டாம் வரிசை). ....... இன்னொரு இடத்தில் இத் தோழரின் மறைவுச் செய்தியும் தனியாகப் பதிவாகியுள்ளது.

இத் தொகுப்பில் வரும் செய்திகளுக்கானத் தலைப்புகள் அனைத்தும் அச் செய்திகளை வெளியிட்ட இதழ்களில் அவற்றின் ஆசிரியர் குழுவினரால் தரப்பட்டவை. அவற்றில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இங்கு, மாயவரம் சி. நடராசன் என்கிற தலைப்பு ஒத்ததாக இருப்பினும், செய்திகள் வெவ்வேறானவை. ஒன்று, சி. நடராசனின் தாயாரின் மறைவுச் செய்தி. மற்றொன்று சி. நடராசனின் மறைவுச் செய்தி என்பதால் காலவரிசையில் வெவ்வேறு இடங்களில் வந்துள்ளன. எனினும் இரண்டுமே இரங்கற் செய்திகள் என்பதால் ஒரே பகுதியில் இடம் பெற்றுள்ளன.

பழ. அதி. சுட்டு 18:       ஈ. வெ. இராமசாமியும் வல்லத்தரசுவும் (பக். 4436, இரண்டாம் வரிசை) என்ற கட்டுரை 1933இல் விருதுநகர் நாடார் பரிபாலன சங்க ஆறாம் ஆண்டு விழாவில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவின் எழுத்து வடிவமாகும். இக்கட்டுரைக்கு இத்தலைப்பு ஏன் எனத் தெரியவில்லை.

 இக்கட்டுரைத் தலைப்பு குடிஅரசு ஆசிரியர் குழுவினரால் 12-3-1933இல் குடிஅரசில் வெளியிடப்பட்டபோதே தரப்பட்டதாகும். இப்போது நாம் அதைத் திருத்தவில்லை. ஈ.வெ.ரா., வல்லத்தரசு முதலானோருடன் 10,000 பேர் ஊர்வலமாக மாநாட்டுப் பந்தலுக்குச் சென்றனர். அந்த மாநாட்டில் ஈ.வெ.ரா. ஆற்றிய உரையே இக்கட்டுரை ஆகும்.

பழ. அதி. சுட்டு 19:       பக். 4765 முதல் 70 பக்கங்கள் வரை தொடரும் அறிமுகச் செய்திகள் என்னும் தலைப்பிலான செய்திகளுக்கும் அத்தலைப்பு பொருத்தமாக அமையவில்லை.

பெரியாரால் கொடுக்கப்பட்ட பொதுவான அறிவிப்புகள்; ஏடுகள், இதழ்கள், நூல்கள் முதலானவற்றைப் பற்றிய பெரியாரின் அறிமுகச் செய்திகள், தலைவர்களைப் பற்றிய அறிவிப்புகள் முதலான செய்திகளே இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. ஆகவே, “அறிமுகச் செய்திகள்” என்கிற பொதுத் தலைப்பின்கீழ் தரப்பட்டுள்ளன.

பழ. அதி. சுட்டு 20:       பக்கம் 4557 உள்படப் பல இடங்களில் பாண்டியன் எனக் குறிக்கப்படுபவர் கழகத்தின் பெருந்தலைவர்களுள் ஒருவரான டபிள்யூ. பி. ஏ சௌந்திர பாண்டிய நாடார்தானா என்ற குழப்பமும் வாசகனுக்கு ஏற்படுகிறது.

சுட்டு 14இல் குறிப்பிட்டுள்ளதுபோல் இங்கும் ‘பாண்டியன்’ எனக் குறிப்பிடுவது டபிள்யூ.பி.ஏ சௌந்திர பாண்டிய நாடார்தான் எனக் கண்டறியப்பட்டு பெயர்ச் சொல்லடைவில் சேர்க்கப்பட்டுள்ளது.

பழ. அதி. சுட்டு 21: ....... ‘அருஞ்சொற்பொருள் அகராதி’. இக்கால வாசகர்களுக்குப் பொருள் புரியாது எனப் பதிப்பாசிரியர் கருதும் பிரதியில் காணப்படும் கடினமான சொற்களுக்கான பொருளை ஆங்காங்கே குறித்துச் செல்கிறார். ஒரே இடத்தில் அகர வரிசையில் இச்சொல் பொருள் தரப்படாதிருக்க அகராதி என்று அதை ஏன் அழைக்கிறார் என்று தெரியவில்லை.

எதிர்வரும் பதிப்புகளில் இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு அகர வரிசைப்படி தனி அகராதியாக அமைக்கப்படும்.

பழ. அதி. சுட்டு 22:       பெயர்அடைவின் கீழ் உள்ள வரதராஜுலு நாயுடு பற்றி 1814, 2041, 2465, 2500, 2755, 3720 ஆகிய பக்கங்களில் உள்ள குறிப்புகள் கே.வி. நாயுடு, குப்புசாமி நாயுடு முதலியோரைக் குறிக்கின்றன.

2010 திசம்பரில் வெளிவரும் மறுவெளியீட்டில், கே.வி. ரெட்டி நாயுடு - 1814, 2465, 2500, 2755, 3720; குப்புசாமி நாயுடு - 2041 எனத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

“பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” 20 நூல்களையும் முழுமையாகவும் ஆழமாகவும் ஆறு மாத கால அவகாசத்தில் வாசித்து முடித்தல் என்பது எளிதானதன்று. ஒரு தலைசிறந்த வாசகராலும் தந்தை பெரியாரின் மீது அளப்பரிய மதிப்பும் உள்ள ஒருவராலும் மட்டுமே அது முடியும். அவ் வகையில் திறனாய்வாளர் பழ. அதியமான் அவர்கள் 9304 பக்கங்களையும் மிகக் கூர்மையாகவும் ஆய்வு நோக்கிலும் வாசித்து அவர் கண்ட சில பிழைகளையும் சுட்டியுள்ளார். அப் பிழைகளுள் மேலே குறிப்பிட்டுள்ளதுபோல் முடிந்தவற்றை 2010 திசம்பரில் வெளிவரும் மறுவெளியீட்டில் திருத்தம் செய்துள்ளோம். கால அவகாசமில்லாத நிலையில் சிலவற்றைத் திருத்தம் செய்ய முடியவில்லை. அவை எதிர் வரும் பதிப்புகளில் திருத்திக்கொள்ளப்படும். திறனாய்வாளர் குறிப்பிட்டுள்ளதுபோல இன்னும் சில பிழைகளும் இருக்கக்கூடும். அவையும் கண்டறியப்பட்டால் எதிர்வரும் பதிப்புகளில் திருத்திக்கொள்ளப்படும். மீண்டும் ஒருமுறை பழ. அதியமான் அவர்கள் இத் தொகுப்பு முழுவதையும் வாசிக்க நேர்ந்தால் அவர் காணும் பிழைகளை அவரிடம் இருந்து நன்றியோடு வரவேற்கிறோம்.

நிற்க. இலக்கணம், இலக்கியம் அல்லது ஒரு துறை சார்ந்த நூலுக்குச் சொல்லடைவு, பொருளடைவு, குறிப்பெண் விளக்கங்கள் தயாரிப்பதென்பதுகூட ஓரளவுக்கு எளிமையானது. ஆனால், சமூக - அரசியல் சிக்கல்களை அலசிப் புரட்டும் 56 ஆண்டுன் கால இடைவெளிகளில் வந்த கட்டுரைகளின் தொகுப்புக்கு, அதிலும் ஏறக்குறைய 9000 பக்கங்கள் கட்டுரைகள் கொண்ட ஒரு தொகுப்புக்கு இவற்றையெல்லாம் தயாரிப்பது என்பது எவ்வளவு துன்பம் மிகுந்த பணி என்பது திறனாய்வாளருக்கும் வாசகர்களுக்கும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. தொகுப்பு முழுவதிலும் பெரியாரால் குறிக்கப்படும் தலைவர்கள், தோழர்கள், நாடுகள், புராணச் செய்திகள், இலக்கிய, இலக்கண, அறிவியல் செய்திகள், நூல்கள், ஏடுகள் பற்றிய விவரங்கள் தொகுக்கப்பட்டுப் பெயர்ச்சொல்லடைவு என்னும் பெயரில் ஒவ்வொரு வரிசையின் இறுதியிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தொகுப்பின் பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து, “தமிழர்கள் தொன்றுதொட்டே வரலாற்று அக்கறையற்றவர்கள்” என்று அடிக்கடிச் சொல்லுவார். அதைக் குறிப்பெண் விளக்கங்களுக்கான தகவல்களைத் திரட்டும்போது நாங்கள் உணர்ந்தோம். தலைவர்களுக்கான பெரும்பகுதித் தகவல்கள் ஆங்கில நூல்களில் தேடித் தேடி எடுத்து மொழிபெயர்க்கப்பட்டவை. தொகுப்பின் 20 நூல்களிலும் 9000 பக்கங்களில் அமைந்த கட்டுரைகளுக்கு 1069 குறிப்பெண் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்டதுபோல், 1922 முதல் 1973 வரையிலான அரை நூற்றாண்டுக்கான பெரியார் ஈ.வெ.இரா.வின் சிந்தனைகளின் பன்முகப் படிநிலை வளர்ச்சியினை ஏறக்குறைய முழுமையாக அறிந்து கொள்ள 1974இல் திருச்சிச் சிந்தனையாளர் கழகம் வெளியிட்ட இத்தொகுப்பின் முதல் பதிப்பும், இவ் இரண்டாம் பதிப்பும் பெரும் பங்காற்றும் என்பதில் திறனாய்வாளருக்கு அய்யமிருக்காது என்றே கருதுகிறோம்.

“குடி அரசு” ஏட்டில் 1925 முதல் 1938 வரை 13 ஆண்டுகள் 8 மாதங்கள் வெளிவந்த ஈ.வெ.இரா.வின் கட்டுரைகளை அப்படியே கால வரிசைப்படி 27 தொகுதிகளாகப் பெரியார் திராவிடர் கழகத்தினர் வெளியிட்டுள்ளனர். இத் தொகுப்பும் மிக மிகப் பயனுடையது என்பதில் அய்யமில்லை. ஆனால், திறனாய்வாளர் குறிப்பட்டுள்ளதுபோல், குடிஅரசு 1927 முதல் 1949 வரை வெளியிட்டுள்ளனர் என்பது பிழையானது என்பதைத் திறனாய்வாளரின் கவனத்திற்காகக் குறிப்பிடுகிறோம்.

“காலச்சுவடு” திங்கள் இதழானது தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்கள், அயல்நாடுகள் என 5000 படிகளில் தன் பரவலையும், இணைய வழியில் சில ஆயிரக்கணக்கான வாசகர்களையும் கொண்டுள்ளது. அதனூடே இத் தொகுப்பினைத் திறனாய்வு செய்த பழ. அதியமான் அவர்கள், நிறைகளைப் பெருமளவில் சுட்டாமலும், குறைகளைச் சுட்டும்போது “பிரதியின் அரிய தன்மை இத்தகையவற்றைச் சலுகைகளாகப் பெற முடியாது.” “திருப்தி தரும் வகையில் இல்லை” “இக்கோரிக்கை தகுதி பற்றியதன்று, விருப்பம் சார்ந்தது.” “பசு வயலில் திரிகிறது; பனைமரம் தனியாக வரப்பில் நிற்கிறது. குறிப்பெண் விளக்கம் கவனமாகத் தயாரிக்கப்படவில்லை.” “பெரியார் என்னும் புரட்சியாளரின் நூலில் கிடைக்கும் விளக்கங்கள் என்ற எண்ணம் துளிக்கூடத் தோன்றவில்லை.” “குறிப்பெண் விளக்கங்கள் பொதுப்புத்தி சார்ந்தமைந்து, பெரியார் பிரதிக்கு எதிர் நிலையைக் கொண்டுள்ளன.” என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை வைத்து, இப் பதிப்பே ஒரு பிழை மிகுந்த பதிப்பு என்கிற பார்வையைத் தன்னையறியாமல் பல்லாயிரவரிடையே உருவாக்கிவிட்டது வருந்தத்தக்கது. எனினும், திறனாய்வாளரின் பொறுப்புணர்வு மிக்க இந்தச் சுட்டல்களுக்கு நன்றி.

ஆ.முத்தமிழ்ச்செல்வன்

முனைவர் சோம. இராசேந்திரன்

(பதிப்புக்குழு உறுப்பினர்கள்)