நவம்பர் 26 - தமிழக, இந்திய, உலக அளவில் வரலாற்றுச் சிறப்புப் பெற்ற நாள் ஆகும்.
1957 நவம்பர் 26 - அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தி விட்டுத் தந்தை பெரியாரும், 4000 தொண்டர்களும் சிறை புகுந்தனர். எனவே இந்த நாள், தமிழக வரலாற்றில் இடம் பெறும் நாள்.
இதே நவம்பர் 26 அன்றுதான், 1949 ஆம் ஆண்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். எனவே இந்திய அளவிலும் இந்த நாள் தனி இடம் பெறுகிறது.உலக அளவிலேயே, மக்கள் விடுதலைப் போராட்டத்திற்காகப் முப்படைகளை நடத்திய மாவீரன் பிரபாகரன் பிறந்த நாளும் இந்த நவம்பர் 26 தான். அது 1954 ஆம் ஆண்டு, எனவே உலக அளவிலும இந்த நாளுக்குத் தனி இடம் உண்டு!
1950-களில் திராவிடர் கழகமும், திமுகவும் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திக் கொண்டே இருந்திருக்கின்றன. அந்தப் பத்து ஆண்டுகளைத் தமிழகத்தின் போராட்ட ஆண்டுகள் என்றே குறிக்கலாம்.
அவை எல்லாவற்றிற்கும் மேலாக, நடைபெற்ற உச்சகட்டப் போராட்டம் சட்ட எரிப்பு போராட்டம்! அதுவரையில் அப்படி ஒரு போராட்டம் தமிழ்நாட்டிலோ, பிற மாநிலங்களிலோ நடந்ததே இல்லை என்று கூறலாம்.
அரசாங்கமே அப்படி ஒரு போராட்டத்தை எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு குற்றத்திற்கும் என்ன தண்டனை என்று சொல்லும் அரசியல் சட்டத்தில் கூட, சட்டத்தை எரித்தால் அதற்கு என்ன தண்டனை என்னும் குறிப்பு காணப்படவில்லை. ஏனெனில், அப்படி யாரேனும் செய்வார்கள் என்று சட்டத்தை இயற்றியவர்களே கூட எண்ணிப் பார்த்திருக்க முடியாது. அந்தச் சிக்கலான சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றம் அது குறித்து விவாதித்து, இந்திய அரசமைப்புச் சட்டத்தை யாரேனும் கொளுத்தினால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்னும் புதிய சட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதலையும் பெற்றது!
போராட்டம் நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டதால், இனிமேல் யாரும் போராட்டத்திற்கு வர மாட்டார்கள் என்று அரசு கருதியது. அப்படியே வந்தாலும் 50, 100 பேருக்கு மேல் வர வாய்ப்பு இல்லை என்பது அரசின் கணிப்பாக இருந்தது. ஆனால் ஏறத்தாழ நான்காயிரம் தொண்டர்கள் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆறு மாதம் தொடங்கி, இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. அய்யா பெரியாரும் சிறை புகுந்தார்.
சிறையில் மிக மோசமான உணவு வழங்கப்பட்டது. பலர் உடல் நலமற்றுப் போனார்கள் ஆனாலும் உறுதி குலையவில்லை.
பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி உள்ளிட்ட 15 பேர் சிறையில் இறந்தார்கள். இந்தியச் சட்டம் சாதியை பாதுகாக்கும் சட்டமாக இருக்கிறது என்பதே போராட்டத்திற்கான அடிப்படைக் காரணம். அதனால் தான் விடுதலையாகி வெளியே வந்த பிறகும், நான் வெளியே வந்து என்ன பயன், சாதியைப் பாதுகாக்கும் நிலை இன்னமும் அப்படித்தானே இருக்கிறது என்று வருந்தினார் தந்தை பெரியார்.
அந்தப் போராட்டம் இறுதி வெற்றியைக் கொண்டு வந்து விடவில்லை என்றாலும், ஒரு மிகப்பெரிய எழுச்சியை மக்களிடம் ஏற்படுத்தியது. இந்தியாவே அந்தப் போராட்டத்தை மிரண்டு போய்ப் பார்த்தது. எனவே, அந்த நவம்பர் 26 இன்றைக்கும் மறைக்க முடியாத நாளாக, வீர வணக்கம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கிறது!
- சுப.வீரபாண்டியன்