பெறுநர்

மாண்புமிகு சட்ட அமைச்சர்

இந்திய அரசு

புதுதில்லி.

மதிப்பிற்குரிய அய்யா,

பொருள் : நீதிபதிகளைப் பணியமர்த்துவதிலும் இடமாற்றம் செய்வதிலும் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டல் - தொடர்பாக.

தகவல்  :  உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் குழு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியமர்த்தம் குறித்துப் பிறப்பித்த 5-11-2015ஆம் நாளிட்ட கட்டளை.

அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர் பேரவையின் சார்பாக மேற்கண்ட பொருள் குறித்து நாங்கள் கீழ்க்காணும் கருத்துகளை முன் வைக்கிறோம்.

1.உச்சநீதிமன்ற நீதிபதிகள் பணியமர்த்தம்

உச்சநீதிமன்ற நீதிபதி பணியமர்த்தத்துக்கு அரசமைப்புச் சட்டத்தின் விதி 124 (3) இல் சொல்லப்பட்டுள்ள தகுதிகளுக்கும் மேலாக மூத்த நீதிபதிகள் குழு (Collegium) கடந்த காலங்களில் செய்யப்பட்டுள்ள பணியமர்த்தங்களில் என்ன என்ன தகுதிகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டது என்பதையும் வருங்காலத்தில் செய்யப்படவுள்ள பணியமர்த்தங்களில் என்ன என்ன தகுதிகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் போகிறது என்பதையும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

2. உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியமர்த்தம்

உயர்நீதிமன்ற நீதிபதி பணியமர்த்ததுக்கு அரசமைப்புச் சட்டத்தின் விதி 217 (2) இல் சொல்லப்பட்டுள்ள தகுதிகளுக்கும் மேலாக மூத்த நீதிபதிகள் குழு (Collegium) கடந்த காலங்களில் செய்யப்பட்டுள்ள பணியமர்த்தங்களில் என்ன என்ன தகுதிகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டது என்பதையும் வருங்காலத்தில் செய்யப்படவுள்ள பணியமர்த்தங்களில் என்ன என்ன தகுதிகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் போகிறது என்பதையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

3.உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம்

உயர்நீதிமன்ற நீதிபதிப் பதவிக்குப் தெரிவு செய்யப்படுகிற ஒருவர் அவரவரின் சொந்த மாநிலத்திலேயே பணியமர்த்தம் செய்யப்படவேண்டும். உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்குப் பதவி உயர்வு அளிக்கப்படும்போது அவருடைய சொந்த மாநிலத்தில் பணியிடம் காலி இல்லாத நிலையில் மட்டுமே அவரை வேறு மாநிலத்துக்கு மாற்றுதல் செய்யலாம்.

4.நீதிபதியாக விரும்புகின்ற வழக்குரைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தல்

வழக்குரைஞர்களிடமிருந்து உயர்நீதிமன்ற அல்ல உச்சநீதிமன்ற நீதிபதிப் பதவிக்கு ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்கு மூத்த நீதிபதிகள் குழு (Collegium) இப்போது பின்பற்றி வருகின்ற நடைமுறை தன்னிச்சையானதும் குழுவின் விருப்புக்கும் வெறுப்புக்கும் இடமளிப்பதாகவும் இருக்கிறது. இது அரசமைப்புச் சட்டத்தின் விதி 14க்கு எதிரானதாகும். இந்த வழிமுறைக்கு மாற்றாக நீதிபதியாக விருப்பப்படுகின்ற வழக்குரைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுவது இன்றியமையாது வேண்டப்படுவதாகும்.

5.பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குடிமக்களுக்குப் பிரதிநிதித்துவம்

உயர்நீதிமன்றத்துக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் நீதிபதிகள் அமர்த்தம் செய்யப்படும்போது அது அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 16(4) மற்றும் 338(10) ஆகியவற்றின்படி செய்யப்படவேண்டும்.

கலச. இராமலிங்கம் - பொதுச் செயலாளர்

வே. ஆனைமுத்து - புரவலர்-தலைவர்

(அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் மதச்சிறுபான்மையினர் பேரவை)

Pin It