பார்ப்பனரல்லாதார் ஸ்தாபனத்தில் பார்ப்பனர்களை ஏன் சேர்க்கக் கூடாது என்னும் விஷயம் தஞ்சாவூர் ஜில்லா பாபநாசம் தாலூகா போர்டு தேர்தலைப் பற்றிய இரகசியத்தைத் தெரிந்தால் அதன் உண்மை ஒருவாறு விளங்கும்.
பாபநாசம் தாலூகா போர்டுக்கு சுமார் 15 அங்கத்தினர்கள் உண்டு. இதில் பார்ப்பனர்கள் 3 பேர் பார்ப்பனரல்லாதார் 12 பேர்கள்.
இந்தப் பன்னிரண்டு பேர்களில் 6 பேர் திரு. பன்னீர்செல்வம் கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்ற ஆறு பேர் திரு. வீரய்யா வாண்டையாரைச் சேர்ந்தவர்கள். இதில் எந்தக்கட்சி ஜெயிக்க வேண்டுமானாலும் பார்ப்பனர் தயவில்லாமல் முடியாத நிலைமையாகிவிட்டது.
ஆக திரு. பன்னீர் செல்வம் கட்சியார் எப்படியாவது திரு. வீரய்ய வாண்டையார் ஜில்லா போர்டுக்குள் நுழையாமல் இருந்தால் போதும் என்று கருதிப் பார்ப்பனர் இடம் ராஜிபேசப் புறப்பட்டு மூன்று பார்ப்பனரில் ஒருவருக்குத் தாலூகா போர்டு தலைமை ஸ்தானம் கொடுப்பதாகவும் அதற்கு பதிலாக தங்கள் கட்சியாருக்கே இரண்டு ஜில்லா போர்டு மெம்பர் பதவியையும் கொடுக்க வேண்டுமென்றும் பேசி முடிவு செய்து விட்டார்கள்.
இந்த சங்கதி திரு. வாண்டையார் கட்சியார் அறிந்து எப்படியாவது திரு. பன்னீர் செல்வத்தை ஜில்லா போர்டில் தோற்கடிக்க வேண்டுமென்று கருதி அதே பார்ப்பனர்களிடம் போய் தாங்கள் அந்தப் பார்ப்பனரில் ஒருவருக்கு தா. போ. தலைவர் பதவியும் மற்றொரு பார்ப்பனருக்கு ஒரு ஜில்லா போர்டு பதவியும் கொடுப்பதாகவும் தங்களுக்கு ஒரு ஜில்லா போர்டு மாத்திரம் கொடுத்தால் போதுமென்றும் ஒப்பந்தம் பேசி பழய ஒப்பந்தத்தை அதாவது பன்னீர் செல்வம் கட்சியாரிடம் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தை இரகசியமாய் முறித்துவிட்டார்கள்.
இந்த சங்கதி திரு. பன்னீர்செல்வம் கட்சியாருக்குத் தெரியாது. இந்த நிலையில் தாலூகா போர்டு முதல் மீட்டிங்கி கூடினதும் ஒரு பார்ப்பனனைத் தலைவராகப் பிரேரே பிக்க இரு கட்சியிலிருந்தும் பார்ப்பனரல்லாத இரு கனவான் எழுந்து பிரேரேபித்தார்கள். இதிலிருந்தே முதல் ஒப்பந்தக்காரரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும் சற்று இருந்து பார்த்ததில் விஷயம் விளங்கிவிட்டது.
பிறகு அந்தப் பார்ப்பனரே தலைவராய் தெரிந்தெடுக்கப் பட்டுவிட்டார். இதோடு மறுபடியும் ஒரு பார்ப்பனரும் ஜில்லா போர்டு மெம்பராய் தெரிந்தெடுத்து விட்டார். பிறகு திரு. வாண்டையார் ஒரு ஜில்லா போர்டு மெம்பர் பதவியைப் பெற்றார்.
அன்றி இனியும் அந்தப் போர்டுக்கு இந்தக் காலாவதி வரையில் அந்த மூன்று பார்ப்பனர்களுக்கு இந்த 12 மெம்பர்களும் சதாகாலம் சலாம் போட்டுக் கொண்டு இருந்தால்தான் இவர்களது காரியம் பலிக்கும். இல்லா விட்டால் கஷ்டமான நிலையாகத்தான் போய் விடக்கூடும்.
பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பதாக ஒன்று தோன்றி இருக்காமல் இருந்தால் இன்றையத் தினம் தஞ்சை ஜில்லாவில் திரு. பன்னீர்செல்வம் தலைவரா யிருக்கவும் முடியாது, திரு. வாண்டையார் போட்டி போட்டி ருக்கவும் முடியாது. இந்த நிலை அடைந்ததை அடியோடு மறந்து விட்டு தங்களுக்குள் போட்டி போட்டுப் பார்ப்பனர் அடியில் விழுந்து இருவரும் தவிக்கும் படியான காலம் இப்பொழுதே வந்துவிட்டது.
இனி பார்ப்பனர்களை உள்ளே சேர்ப்பதென்றாகிவிட்டால் என்ன கதியாகும் என்பதைத் திருவாளர்கள் பன்னீர்செல்வமும் வாண்டை யாரும் கவனிக்க முடியாமல் போனாலும், தஞ்சாவூர் வாசிகளான மற்ற பார்ப்பனரல்லாதார்களாவது கவனிக்க வேண்டுமாய் விரும்புகின்றோம்.
12 பார்ப்பனரல்லாதார்கள் போர்டில் இருந்தும் 3 பார்ப்பனர்கள் மாத்திரம் இருந்து கொண்டு ஒருவர் தலைவராகவும் ஒருவர் ஜில்லா போர்டு மெம்பராகவும் வந்து விட்டார்கள் என்றால் நம்மவர்களின் சுயமரியா தைக்கு நாம் வெட்கப்பட வேண்டாமா? என்று கேட்கின் றோம். நிற்க, மேல்படி மூன்று பார்ப்பனரில் மீதி உள்ள ஒரு பார்ப்பனரும் வைஸ்பிரசிடெண்ட் வேலையை இது வரை வாங்கி இருப்பார் என்றோ அல்லது வாங்கிவிடக் கூடுமென்றோ நினைக்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் (20.07.1930)