உலகின் பல சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்களுக்கு அடிக்கல் நாட்டியவர்கள் விவசாயிகளே. மன்னராட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகளில் எல்லாம் மக்களாட்சியை மலரச் செய்த பெருமை விவசாயிகளைத்தான் சாரும். முதன்முதலாகப் பிரான்சு நாட்டில் மன்னராட்சியை நீக்கி குடியரசை நிலை நிறுத்தியது பிரெஞ்சு புரட்சிதான் என்று கூறலாம். அது ஒரு அரசியல் புரட்சியாக இருந்தாலும் அடிப்படைக் காரணங்கள் விவசாயிகளின் மனக் குமுறல்கள்தான், பிரெஞ்சுப் புரட்சியாக வெடித்தது என்று உறுதியாகக் கூறலாம்.

நில மானிய முறை பிரான்சு நாட்டில் மிகக் கடுமையாக நிலவி இருந்தது. நிலங்களில் பாடுபடுவது விவசாயிகள் மட்டுமே. ஏழ்மையிலும் வறுமையிலும் விவசாயிகளுக்குத்தான் கடுமையான வரி விதிப்பு செய்யப்பட்டது. விவசாயிகள் துயரம் அதிகமாயிற்று.

அதேபோல் முன்பு 1888-இல் அமெரிக்கப் பெருநிலப் பிரபுக்கள் தம்முடைய நிலத்தைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நகரத்திற்குச் சென்றுவிட்டனர். விடுதலையான நீக்ரோ அடிமைகள் நிலத்தை குத்தகைக்கு எடுத்துப் பயிரிட்டனர். இவர்களுக்கு வேண்டிய கடனை நகரத்திலிருக்கும் வியாபாரிகள் வழங்கினர். கடன் என்பது பணமாக தரப்படவில்லை. விவசாயத்திற்கு வேண்டிய இடுபொருட்கள், விதைகள், உரம் போன்றவற்றைத் தான் கடனாகத் தந்தனர். இதற்கு, தாம் பயிரிடப் போகும் பயிரை அடமானமாக விவசாயிகள் வைத்தனர்.

அடமானம் செய்ததினால் வியாபாரிகளுக்குப் பல வழிகளில் இலாபம். ஒன்று கடன் கொடுத்ததால் வட்டி வருகிறது. 2-ஆவதாக பொருள்களை வாங்குவதால் வியாபாரம் ஆகிறது. மூன்றாவதாகக் கடன் வழங்கிய வியாபாரிகளிடமே குறிப்பிட்ட விலைக்கு விற்க வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் பல சமயம் கடன் தீராமலேயே இருக்கும். கடன் கட்டியாக வேண்டும். மீண்டும் அடுத்த பயிரைப் பயிரிட வேண்டும். என்ன செய்வான் விவசாயி? மீண்டும் அடுத்த வியாபாரியிடம் அடுத்த பயிரை அடமானம் வைப்பான். இதனால் விவசாயிகள் கடுமையாகச் சுரண்டப்பட்டனர்.

பயிரிடப்படும் பயிர் பொய்த்து விட்டாலோ, விலைகள் தாறுமாறாக இறங்கிவிட்டாலோ, விவசாயிகள் உடல்நலக்குறை வால் படுத்துவிட்டாலோ, இருக்கிற எல்லாப் பயிரையும் அறுவடை செய்து கொண்டு சென்று விடுவான் கடன் கொடுத்த வியாபாரி.

நிலத்தில் உழைத்த விவசாயி தோல்வி அடைந்ததால், அவனே நகரத்திற்குச் சென்று தொழிலாளியாக மாறும் போது வெற்றி யடைகிறான்; எப்படி? 1889-இல் அமெரிக்க விவசாயிகளின் நிலை இது. இந்நிலையில் உழவர்கள் புதிய சிந்தனையுடன் செயல்பட முயற்சித்து “ஃபார்ம் ஃபியூரா” என்ற பண்ணைக் கழகத்தை உருவாக்கி ஓரளவு வெற்றியும் பெற்றனர். அரசியல் சாராது பண்ணைக் கழகத்தை உருவாக்கி கூட்டுறவு முறையில் முன்னேற்றமடைந்தனர்.

இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். விவசாயிகளின் எழுச்சிதான் இந்தியா சுதந்தரம் அடைவதற்கு முக்கியக் காரணமாகும் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

சுதந்தரம் அடைந்த பின் விவசாயிகள் நிலை என்ன? இந்தியா சுதந்தரம் பெற்ற போது மக்கள் தொகை 35 கோடி. அப் போதே பஞ்சம், பட்டினியால் வாடினர் மக்கள். இன்று இந்திய மக்கள் தொகை 130 கோடி; இன்று உணவுப் பஞ்சமில்லை. ஆனால் உழவர்கள் நிலையென்ன? கடன் பிரச்சனையால் தற்கொலை அதிகம்.

அரசின் வேளாண் கொள்கையாலும், உற்பத்திப் பொருள்களுக்குக் கட்டுப்படியான விலை இல்லாததாலும், உழவர்கள் நிலங்களைப் பயிரிட்டு நட்டமடைந்து, துன்புறுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலைகள் அதிகரித்துள்ளது. தனக்குரிய குறைந்த அளவு நிலங்களை ஒப்பந்த அடிப்படையில் குறைந்த குத்தகைக்கு விட்டு பெரு நகரங்களை நோக்கிக் கூலிவேலைக்கு வருகின்றனர். இதனால், விவசாயம் செய்வதைவிட சற்றுக் கூடுதலான வருமானம் கிடைக்கிறதென நினைக்கின்றனர்.

சென்னை, கோவை, திருப்பூர், கேரளா போன்ற இடங்களுக்குக் குடும்பத்தில் ஒருவராவது சென்று பிழைப்பு நடத்துகின்றனர். குறைந்த அளவு நிலத்தை, மிகக் குறைந்த குத்தகைக்கு எடுத்தவர்கள் ஒன்றிரண்டு ஆண்டுகள் விவசாயம் செய்து பார்த்துவிட்டு, எனக்கு நிலம் வேண்டாமென வெளியூர் சென்று பிழைக்க நினைத்து வெளியேறி விடுகின்றனர்.

சிலர் நிலங்களை விற்றோ, போக்கியமாக பணம் பெற்று (நிலத்தைக் கொடுத்து பணம் வட்டியின்றி பெற்று) வெளிநாடுகளுக்குச் சென்று ஆடு, ஒட்டகம் போன்றவற்றை மேய்ப்பது அல்லது விவசாயம் செய்வது, பெண்கள் வீட்டு வேலைகள் செய்வது என வேலைகளைச் செய்து நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை விட சற்றுக் கூடுதலாகப் பெற்று தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றனர். சிலரோ வெளிநாடு செல்வதற்காக ஆசைப்பட்டு இடைத்தரகர் களால் ஏமாற்றப்பட்டு வெளிநாடு செல்லாமல், இந்தியாவில் எங்கேயாவது, ஏதாவது ஒரு வேலை செய்து சிறிது பணம் குடும்பத்திற்கு அனுப்புகின்றனர். குடும்பத்தினர் தன் பிள்ளை வெளிநாட்டில் வேலை பார்க்கிறான் என எண்ணிக் கொண்டுள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில் இந்திய விவசாயிகளைக் காக்கப் போகிறோம் என்று அரசியல்வாதிகளும் புளுகுரை கூறிக்கொண்டு, கார்ப்பரேட் கம்பெனியார்களுக்குச் சிறு குறு விவசாயிகள் நிலங்களைத் தாரைவார்க்க முயல்கின்றனர்.

ஆரம்பக் கட்டமாக இந்திய அரசு வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு, ஒப்பந்த பண்ணையம் என்று “உற்பத்தி யாளர்கள் சங்கமம்” என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் சிறு, குறு விவசாயிகளை உறுப்பினராக்கி அதன் வழியாக அவர்களைக் கார்ப்பரேட் விவசாய கம்பெனிகளுக்குக் குத்தகை அல்லது கூலி விவசாயிகளாக மாற்றுவதற்கு, அரசு சாரா நிறுவனங்கள் பல இறக்கிவிடப்பட்டுள்ளது.

இதற்காக இதுவரை பத்திரிகைகள் செய்தி வாயிலாக அறிந்த வகையில் 40 சங்கங்கள் பதிவுசெய்யப்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகப் பட்டினம் மாவட்டங்களில் செயல்படுகிறது. இச்சங்கங்கள் முதல் கட்டமாக 30 இலட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.

இதுபோன்ற செயல்களால் ஒப்பந்த பண்ணையம் வாழுமா? உய்விக்குமா? என்று எண்ணும் போது உய்விக்காது என்பதே எனது கருத்தாகும். இதுபோன்ற செயல் களால், விவசாயமும், விவசாயிகளும் அழித் தொழிக்கப் பட்டு கார்ப்பரேட் விவசாயக் கம்பெனிகள் மூலமே விவசாயம் நடை பெறும் சூது நடைபெற்றுக் கொண்டுள்ளது.

சிறு, குறு விவசாயிகள் அனைவரும் கார்ப்பரேட் நிறுவன வேளாண்மையில் குத்தகைதாரர்களாகவும், வேளாண் கூலிகளா கவும் கார்ப்பரேட் முதலாளிகளின் அடிமை களாகவும் ஆவதற்கான சூழ்நிலையைத்தான் இன்றைய இந்திய அரசு செய்து கொண் டுள்ளது.

இந்தத் சதித் திட்டத்தை அனைத்து பொதுநல உணர்வாளர்களும் விவசாயிகளும் ஒன்றிணைந்து முளையிலேயே கிள்ளி எரிந்து ஒப்பந்தப் பண்ணையம் முறையை ஒழிக்க வேண்டும். ஒப்பந்த பண்ணையம் உழவர்களை உய்விக்காது என்பது கல்லு போன்ற உண்மை.

உலகுக்கு உணவளிக்கும் உழவர் பெருமக்களே!

அரசு ஊழியர்கள், ஆலைத் தொழி லாளர்கள், ஆட்சியாளர்களாக உள்ள (IAS, IFS, IPS போன்ற உயர் பதவிகள்) அரசை வழிநடத்துபவர்கள், அனைத்து வியாபாரிகள் (அனைத்து பொருள்களையும் வணிகம் செய்யும் அனைத்து வியாபாரிகள்) அனைத்து அரசு, அரசு சாரா தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களுக்கென சங்கம் அமைத்துப் போராடி உரிமைகளைப் பெறுகின்றனர்.

ஆனால், அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகள் ஒன்றுபடவிடாமல் அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும், சிறு, குறு விவசாயி என சலுகைகளைக் காட்டி இவர் களை ஒன்றுசேரவிடாமல் தடுத்து வருகின்றனர்.

அன்பார்ந்த விவசாயிகளே!

விவசாயம், விவசாயிகள் அழிந்துவிடும் இந்த நேரத்திலாவது, அரசியல், கட்சி, மதம், சாதி, பேதமின்றி உழுதொழில் செய்யும் விவசாயிகள் சிறு, குறு, பெரு விவசாயிகள் என்று எண்ணாமல் ஒன்றுபட்டு உனக்குரிய உரிமைக்கு நீ தான் தீர்வு காணப் போராட வேண்டும். உனக்காக யாரும் போராட மாட்டார்கள். நீ இல்லையேல் இவ்வுலகம் இல்லை என்பதை எண்ணி, உன்னைக் காப்பாற்றிக் கொள்ள விவசாயிகள் அனை வரும் ஒன்றுபடுங்கள் என்று கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

இதை விடுத்து ஒப்பந்தப் பண்ணைய முறையால் உழவுத் தொழில் உய்க்காது. நீயும் உய்க்க மாட்டாய்.

பூமி பிளக்காமல் விதை முளைப்பதில்லை;

போராடாமல் உரிமை கிடைப்பதில்லை.

ந.ப.அன்பழகன், மாவட்டத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம், நமங்குணம்

Pin It