farmers rally 651

இந்தியா தனது உறைந்து போன மெளனநிலையில் இருந்து உடைத்துக் கொண்டு மீண்டெழுந்தது போன்ற ஒரு பரவச உணர்வு. சிகப்புச் சிந்தனைகளை தம் ஆட்சிக் காலத்திலேயே மண்ணோடு மண்ணாக மக்கச் செய்துவிடலாம் என்ற இறுமாப்பில் லெனினை உடைத்தெறிந்த காவிக் கூட்டத்தை பீதியில் உறைய வைத்திருக்கின்றார்கள் மகாராஷ்டிரா விவசாயிகள். கேட்பதற்கு நாதியற்ற கூட்டம், கொன்று போட்டாலும் கவலைப்பட ஆளில்லை என்று பன்னாட்டு முதலாளிகளுடன் வெட்கமற்ற உறவை வைத்துக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளிய கொலைகாரக் கும்பல் இன்று அஞ்சி நடுங்கிக் கொண்டு இருக்கின்றது. ஏறக்குறைய 50,000 விவசாயிகள், 180 கிலோமீட்டர் தூரப் பயணம் என்பதெல்லாம் பிற்போக்கு ஆளும் வர்க்கம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. நாட்டை கைக்கூலிகளின் பிடியில் இருந்து மீட்டெடுக்க நெடும்பயணம் போகும் நெஞ்சுரமெல்லாம் தேசத் துரோகக் கும்பலின் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டது. பாதங்கள் கிழிய, வழியெங்கும் ரத்தச்சுவடுகளை விட்டுவிட்டு வந்திருக்கின்றார்கள், பின்னால் வரும் விவசாயிகளுக்கு வரலாற்று வழித்தடத்தின் அடையாளமாய்.

CPM-இன் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் பேரணி நாசிக்கில் இருந்து துவங்கி மும்பை வரை 180 கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளது. வழி நெடுக மக்கள் உற்சாகத்துடன், பேரணியில் வரும் விவசாயிகளுக்கு உணவும், தண்ணீரும் அளித்து உபசரித்து இருக்கின்றார்கள். இந்துத்துவப் பாசிசத்தின் சோதனைச் சாலையில் பன்னெடுங்காலமாக பயிற்றுவிக்கப்பட்ட மக்கள் இருக்கும் மாநிலத்தில் கூட இன்னும் மனிதம் செத்துப் போகாமல் உயிர்ப்போடு இருக்கின்றது என்பதைத்தான் இது காட்டுகின்றது. பழங்குடியின மக்களையும், விவசாயிகளையும் படித்த நடுத்தர வர்க்க மக்கள் கூட்டம் எப்போதுமே மதிக்காது, அவர்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாது என்று ஆளும்வர்க்கம் முன் முடிவோடு இத்தனை நாட்களாக அவர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் புறச்சூழ்நிலை எப்போதுமே அப்படி இருக்க படித்த நடுத்தர வர்க்கத்தை விட்டுவிடுவதில்லை. பன்னாட்டுப் பெருநிறுவனங்கள், உலக வங்கி போன்றவற்றிற்கு ஏற்ப இந்திய ஆளும்வர்க்கம் இந்திய விவசாயிகள் மீது மேற்கொண்டிருக்கும் தாக்குதல்கள், நாளை இந்திய விவசாயத் துறையை பன்னாட்டு ஏகபோக முதலாளித்துவத்தின் கைப்பாவையாக மாற்றிவிடும் என்பதை இன்று மக்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் நாம் விவசாயிகளுக்குக் கிடைத்த பேராதரவைப் பார்க்க வேண்டும்.

அடுத்து இவ்வளவு பெரிய பிரமாண்டமான பேரணியை ஒருங்கிணைத்து நடத்தி CPM ஒரு மாற்று சக்தியாக தன்னை மகாராஷ்டிராவில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதற்கும் வெளிக்காட்டி இருக்கின்றது. இன்றைய உலகமயமாக்கல் சூழ்நிலையில் விவசாயிகளுக்காக அர்பணிப்புடன் வர்க்க உணர்வுடன் வேலை செய்ய கம்யூனிஸ்ட்களைத் தவிர வேறு யாருமே கிடையாது என்பதை நிரூபித்து இருக்கின்றார்கள். இது போன்ற பேரணிகள் நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டிய நிலையில்தான் இன்று விவசாயிகளின் நிலை இருக்கின்றது. 1995 ஆண்டு முதல் இதுவரை நாடு முழுவதும் ஏறக்குறைய 3 லட்சம் விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு இறந்துள்ளார்கள். மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களில் முன்னிலையில் இருக்கின்றன. தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் ஏறக்குறைய 23.5 சதவீத விவசாயிகள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் கடந்த 2013 ஆம் ஆண்டு 1296 விவசாயிகளும், 2014 ஆம் ஆண்டு 1981 விவசாயிகளும், 2015 ஆண்டு 4291 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்றப்பதிவு ஆணைய அறிக்கை தெரிவிக்கின்றது. மோடி அரசு பதவியேற்ற 2014 இல் இருந்து 2016 வரை மட்டும் நாடு முழுவதும் 36362 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர்.

விவசாயிகளை ஒரு பக்கம் திட்டமிட்டுக் கொல்லும் இந்திய ஆளும்வர்க்கம், மற்றொரு பக்கம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களின் பூர்வீக காடுகளில் இருந்து அடித்து விரட்டும் செயலை தொடர்ச்சியாக செய்துவருகின்றது. இந்திய ஆளும்வர்க்கத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. அது வளங்கள் நிறைந்த வனப்பகுதிகளை மொத்தமாக பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கு தாரைவார்ப்பது; அதன் மூலம் ஒரு பக்கம் பழங்குடியின மக்களை நகர்ப்புறங்களில் வேலையில்லாத ரிசர்வ் பட்டாளமாக குவிப்பது. அதே போல விவசாயத்தில் இருந்து விவசாயிகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி அவர்களையும் நகர்ப்புறங்களில் வேலையில்லா ரிசர்வ் பட்டாளமாக குவிப்பது. இதன் மூலம் பன்னாட்டு பெருமுதலாளிகளும் தரகு முதலாளிகளும் இரண்டுவகையில் லாபமடைகின்றார்கள். பழங்குடி இன மக்களின் வளங்களை கைப்பற்றிக் கொள்வது மற்றும் நகர்ப்புறத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மலிவான உழைப்பு சக்தியைப் பெறுவது. இந்த இரண்டையும் நோக்கமாகக் கொண்டுதான் இந்திய ஆளும்வர்க்கம் உலகமயமாக்கலுக்குப் பின் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அது காங்கிரசாக இருந்தாலும் சரி, பிஜேபி அரசாக இருந்தாலும் விவசாயப் பழங்குடியின மக்களின் வயிற்றில் அடிப்பதை தங்களது கடமையாகவே செய்துவருகின்றன.

farmers rally 650

இதற்கெல்லாம் ஒரு முடிவுகட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோபாவேசத்தின் விளைவே இந்த நீண்ட நெடும்பயணம். இந்திய விவசாய வர்க்கத்தின் வரலாற்றில் இது ஒரு அழிக்க முடியாத சுவடாகப் பதிவாகி இருக்கின்றது. இந்திய தரகு முதலாளிகளுக்கு ஆண்டுக்கு ஆண்டு தவறாமல் லட்சக்கணக்கான கோடிகளை மானியமாகக் கொடுத்து, போதாத குறைக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பல லட்சம் கோடி கடனையும் கொடுத்து, அதைக் கட்டமுடியாத போது அவர்களுக்கு வெளிநாடு தப்பிச் செல்ல நல்ல வசதியையும் செய்து கொடுத்து ஒரு கீழ்த்தரமான தரகனாக வேலை பார்க்கும் இந்திய ஆளுவர்க்கக் கூட்டம், இந்த நாட்டு மக்களுக்கு சோறு போடும் விவசாயிகளையும், பழங்குடி மக்களையும் நாய்களை விடக் கீழாகவே எப்பொழுதும் நடத்தி வந்திருக்கின்றது.

விவசாயிகளின் தற்கொலையைக் காதல் தோல்வியால் நேர்ந்தது என்றும், குடும்பப் பிரச்சினையால் நேர்ந்தது என்றும், குடிபோதையால் நேர்ந்தது என்றும் கொச்சைப்படுத்தி தனது கார்ப்ரேட் அடிமைப் புத்தியை வெளிக்காட்டினார்கள். இந்தப் பேரணியைக்கூட அப்படி கொச்சைப்படுத்த காவி பயங்கரவாதிகள் செய்த சதியை விவசாயிகள் முறியடித்து இருக்கின்றார்கள். விவசாயிகளின் கோரிக்கையான விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ஆதார விலையை உயர்த்துவது, பழங்குடியின மக்களுக்கு அவர்களின் நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்டுவது போன்ற கோரிக்கைகளை அரசை ஏற்க வைத்திருக்கின்றார்கள். வாய்வழியாக கொடுத்த உத்திரவாதத்தை மறுத்து எழுத்துப் பூர்வமாக எழுதி வாங்கி இருக்கின்றார்கள். இதன் மூலம் இனி விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வை மிக எளிதாக சூறையாடலாம் என்ற ஆளும் வர்க்கத்தின் கனவுக்கு முடிவுரை எழுதி இருக்கின்றார்கள். கொடுத்த வாக்குறுதியை மீண்டும் தேவேந்திர பட்னவிஸ் அரசு மீற முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற அச்சத்தையும் விதைத்திருக்கின்றார்கள்.

இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக நிகழ்த்திக் காட்டப்பட்ட இந்த உதாரணத்தை மற்ற மாநிலங்களிலும் விவசாய அமைப்புகள் பின்பற்ற வேண்டும். பெரும்பான்மையான மக்களை அமைப்பாக திரட்டும் வலிமை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கே உள்ளது என்பதை உணர்ந்து, மற்ற விவசாய சங்கங்களும் கம்யூனிஸ்ட் சங்கங்களுடன் தங்களை இணைத்துக்கொண்டு விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முன்வர வேண்டும். ஆனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரை சில விவசாய சங்க தலைவர்கள் எந்தவித முன்யோசனையும் இன்றி தான்தோன்றித்தனமாகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். முதலாளித்துவ சீரழிவுவாதக் கட்சிகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள போட்டி போடுகின்றனர். எனவே உண்மையிலேயே விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தின் மேல் அக்கறை உள்ள விவசாய சங்கங்கள் அனைத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையில் ஒருங்கிணைந்து மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக வேண்டும். நாசிக்கில் இருந்து மும்பை வரை சென்ற பேரணியை கன்னியாகுமரியில் இருந்து டெல்லி பாராளுமன்ற முற்றுகையை நோக்கி அழைத்துச் செல்லவேண்டும். நிச்சயம் அப்படி ஒரு வாய்ப்பை இந்திய விவசாயிகளுக்கு விவசாய சங்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கொடுப்பார்களே ஆனால், அது இந்தியாவின் மீட்சிக்கான திறவுகோலாக இருக்கும். அப்படி ஒரு நாளுக்காக கோடிக்கணக்கான விவசாயிகளும், பழங்குடியின மக்களும், நாட்டை திருடர்களின் பிடியில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று போராடும் மக்களும் காத்துக் கிடக்கின்றார்கள், விடியலின் வெளிச்சம் மிக அருகில் இருக்கின்றது என்ற நம்பிக்கையுடன்.

- செ.கார்கி

Pin It