நலமே பலம்
நலம் என்பது நோயற்ற வாழ்வு, நல்ல மனத்துடன் வாழ்வதே ஆகும். நமது உடலினுடைய மனத்தினுடைய முழுமையான நலம் தான், அதன் பலமாக அமைகிறது.
உடல்நலம் என்பது உருவ அடிப்படையிலானது அல்ல என்பதை நாம் அறிய முற்படுவதே உடலின் மொழியாகும். நம் உடலின் மொழி இயற்கையோடு தொடர்புடையது. இயற்கை தற்செயலானது அல்ல. ஒழுங்கமைவோடு இயங்கும் இயக்கம். இயற்கையின் ஒத்திசைவான இயக்கத்தை நம் முன்னோர்களில் பலர் அறிந்திருந்தனர். அவற்றை நம் நல வாழ்விற்குப் பயன் படுத்தினர். எனவே அவர்கள் இயற்கையின் அற்புதங்களை உணர்ந்த அறிவியலாளர்களாக இருந்தனர்.
வளர்சிதை மாற்றம்
அசுத்தமான குருதி, நாளங்கள் வழிச்சென்று தந்துகிகளை நிரப்புகின்றன. அசுத்தக் குருதியில் உள்ள கரியமில வாயு மூச்சுச் சிற்றரைக்குள்ளிருக்கும் காற்றுள்ளும், அங்குள்ள காற்றில் நிறைந்திருக்கும் உயிரியம் (பிராண வாயு) தந்துகிகளிலுள்ள குருதிக்குள்ளும் பரவி பரிமாற்றம் அடைகின்றன. இது நம் உடலில் நடக்கும் அறிய செயல்களில் ஒன்று.
இப்பரிமாற்றத்தால் கெட்ட குருதி தூய்மையடைந்து செங் குருதியாக மாறி மறுபடியும் தந்துகிகளிலிருந்து நாடிகள் மூலம் இதயத்தை அடைகிறது. குருதி ஒரு தடவை உடம்பைச் சுற்று வதற்கு மூன்று நிமிடங்கள் ஆகின்றது. இலட்சக்கணக்கான உயிரணுக்கள் ஒவ்வொன்றிற்கும் உயிரியத்தை எடுத்துச் செல்லும் வேலை குருதி ஓட்டத்தின் மூலம் நடைபெறுகிறது.
குருதி அணுக்கள்
உயிரியத்தை உடலெங்கும் எடுத்துச் செல்லும் பணியைச் செய்வது சிவப்பு குருதி உயிரணுக்களே. ஒரு துளி குருதியில் 25 கோடி சிவப்புக் குருதி உயிர் அணுக்கள் இருப்பதாக அறிஞர்கள் ஆய்ந்தறிந்துள்ளனர். இவற்றின் வாழ்நாள் முப்பது நாள்கள்தான். இவற்றைப் புதுப்பிப்பதற்காக ஒவ்வொரு நொடியும் 1,20,000 குருதி உயிர் அணுக்கள் உண்டாக்கப்படுகின்றன.
இளம் வயதில் அழிகின்ற, உற்பத்தியாகின்ற குருதி உயிரணுக்களின் எண்ணிக்கை சமமாக இருக்கும். வயது முதிர்வின் போது, அழிகின்ற உயிரணுக்களின் எண்ணிக்கை கூடுதலாகவும் வளர்கின்ற உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கும்.
உற்பத்தியாகின்ற உயிரணுக்களின் எண்ணிக்கையைச் சமன்செய்கின்ற தன்மையிலே நாம் தமது வாழ்வியல் முறையை அமைத்துக் கொள்வது அவசியமாகிறது. மலம், சிறுநீர், கரியமில வாயு, வியர்வை, சளி போன்ற கழிவுகள் உடலில், குடலில் தேக்கமடையாத வகையில், நமது உணவுப் பழக்கத்தையும், உடலியக்கத்தையும், மனதையும் அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். அப்போதுதான் நமது உடல் நோயினின்று விடுபட்டு நலமுடன் இருக்கும்.
“கழிவின் தேக்கமே, நோயின் ஆக்கம்” என்பது இயற்கை மருத்துவ தத்துவம். குருதி ஓட்டத்தைச் செம்மைப்படுத்திடத் தொடர்ந்து மூச்சுப் பயிற்சி செய்வது சிறந்தது.
உணவில் வகைகள்
உணவை இருபெரும் பிரிவாக வகுத்து உள்ளனர். 1) கார உணவு. மற்றது 2) அமில உணவு. அறுசுவைகளில் உப்பு, கசப்பு, காரம் ஆகியவை கார வகை உணவுகள். இவை நம் உணவில் 80 விழுக்காடு இருத்தல் வேண்டும். துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு ஆகியவை அமில உணவு. இது நாம் உட்கொள்ளும் உணவில் 20 விழுக்காடு இருத்தல் வேண்டும். இவ்வாறு உணவை அமைத்துக் கொண்டால் கழிவுகள் சேரா வகையில் நம் உடல் இயங்கும்.
நாகரிக வளர்ச்சி, பழக்கவழக்கங்கள், வெளிநாட்டு உணவின் மோகம் காரணமாக நம் உணவின் அமைப்பு கார உணவு 20 விழுக்காடாகவும், அமில உணவு 80 விழுக்காடாகவும் மாற்றம் பெற்றுள்ளது. வயது முதிர்ந்தவர்கள் இதனை மனதில் இருத்தி நமது வாழ்வையும் பழக்க வழக்கத் தையும் உணவு முறையையும் நெறிப்படுத்தி னால், நோயின்றி நீண்ட நாள்கள் நலமுடன் வாழலாம்.
நோய் என்றால் என்ன?
நாம் உண்ணும் உணவு குருதியாக மாற்றமடைந்து நமக்கு வேண்டிய ஊட்டச்சத்தைக் கொடுக்கிறது. உண்ணும் அனைத்து உணவுப் பொருள்களுமே குருதியாக மாறுவதில்லை. உடம்பில் ஊறும் செரிமான நீர்களும், புளிமங்களும், அன்னக் குழம்புடன் சேர்ந்து அன்னரசமாகவும், அதிலிருந்து உறிஞ்சப்பட்ட சாரம் குருதி யாகவும் மாறுகிறது. வேண்டாத பொருள்கள், கரியமில வாயு, வியர்வை, கபம், சிறுநீர், மலம் ஆகியவை வெவ்வேறு உடல் உறுப்புகள் மூலம் வெளியேற்றப்படுகிறது. இவ்வேலை அவ்வப்போது தடையின்றி நடைபெற்றால் சிக்கல் இல்லை. நாகரிக வாழ்க்கையில் சிக்குண்ட மனிதன் மேற்கண்ட கழிவுகள் வெளியேற்றும் பணியை அவ்வப்போது செய்வதில்லை. தடைப்பட்ட மேற்கண்ட ஐவகை மலங்கள் உள்ளே தங்கி, பல சிக்கல்களை உண்டாக்குகின்றன.
“உடலுள் உறையும் பிராண சக்தி காலம் கடந்து உடம்பில் நிற்கும் கழிவுப் பொருள்களை வெளித் தள்ளும் இயக்கமே நோய்”
என்று இயற்கை மருத்துவ தத்துவம் நமக்கு விளங்குகிறது.
கழிவுகள் தேங்கா வாழ்க்கை அமைய
சமைத்த உணவு உண்ணும் அன்பர்கள் காய்கறி வாங்கக் கடைக்குச் செல்லும் போது நம் கவனம் மற்றும் பார்வை கொடிக் காய்களில் தான் செல்ல வேண்டும். அவற்றில் நார்ச்சத்தும், நீர்ச் சத்தும் மிகுந்திருப்பதால் அவை கழிவுகள் வெளியேற்றத்திற்குத் துணைபுரிகிறது. தொழிற்சாலை உணவு களையும், வறுத்தல், பொறித்தல் முதலான உணவுகளையும் சமைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்தல் நல்லது.
முதியவர்கள் நெறிமுறை
அறுபது, எழுபது வயதைக் கடந்தவர்கள், உணவுப் பழக்கத்தை மனதின் துணையோடு நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மனதை நெறிப்படுத்தினால் நாம் நினைத்ததைச் செயல்படுத்துவதில் சிக்கல் இருக்காது. தங்கள் உணவு முறையை நாளுக்கு மூன்று வேளை என்பதற்கு பதிலாக நாளுக்கு இரண்டு வேளை என மாற்றி உண்டு வந்தால் நலம் நம்மோடு குடி இருக்கும்.
ஒருவேளை உணவுக்கும் அடுத்த வேளை உணவுக்கும் இடையில் எந்த திடப் பொருளையும் உண்ணாமல் இருப்பது நலம். நம் உடம்பில் உள்ள செரிமான உறுப்புகளுக்கு ஓய்வளிக்க அது துணைபுரியும்.
சமைப்பதற்கு அடுப்பிலே உலை வைத்து பின் அதிலே அரிசி போடுகிறோம். அரிசி போட்டு பத்து மணித்துளிகள் கடந்த பின் மீண்டும் அதிலே அரிசி போட்டால் என்ன நடக்கும்? வெந்தும் வேகாத நிலைதான் இருக்கும். இதே தன்மையிலேதான் நம் செரிமானப் பாதையிலும் நடக்கும். எனவே உண்டது செரித்த பிறகே அடுத்ததை உண்ண வேண்டும். இதைத்தான் நம் திருவள்ளுவரும்,
“அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து” (குறள் 944)
என்று குறிப்பிடுகின்றார். தான் முன்பு உண்ட உணவு நன்றாக செரித்ததை அறிந்து, உடம்பிற்கு ஒத்துவரக் கூடிய உணவை நன்றாகப் பசித்த பிறகு உண்ண வேண்டும் என்கின்றார்.
தேவை இருப்பின் இடையிடையே தண்ணீர், அல்லது பழரசம், நீர் மோர், இள நீர் முதலானவற்றை அருந்தலாம். பழரசத் தில் சர்க்கரை, ஐசு சேர்க்காமல் அருந்த வேண்டும்.
மனச்சிக்கலும் மலச்சிக்கலும்
இரவில் உறங்கச் செல்லும் போது மனச்சிக்கலின்றி படுத்து உறங்க வேண்டும். அதிகாலை எழுந்திருக்கும் போது மலச்சிக்கலின்றி எழுந்திருக்க வேண்டும். இவ்வாறு நம் மனதையும், உடலையும், உணவையும், இதரப் பழக்கவழக்கங்களை யும் நெறிப்படுத்தினால் நம் வாழ்க்கை முதுமையிலும் தொய்வில்லாமல் நம் பணிகளைத் தொடர துணைபுரியும்.
நலமுடன் வாழ இயற்கை மருத்துவ பயன் மொழிகள் :
உணவே மருந்து
மருந்தே உணவு
கனிகளை உண்போம்
பிணிகளை வெல்வோம்
காய்களைத் தின்றால்
நோய்கள் போகும்.
இயற்கை வாழ்வு
இன்ப வாழ்வு
உண்ணா நோன்பே
உயரிய மருந்து
வாழ்வதற்காக உண்
உண்பதற்காக வாழாதே
பசித்தே புசிப்போம்
பலகாரம் தவிர்ப்போம்
முடிந்தவரை பின்பற்றுவோம்
முதுமையை நலமுடன் கழிப்போம்.