97 சதவீத பெண்களும், 68 சதவீத ஆண்களும் இயல்பிலேயே நொறுக்குத்தீனி பிரியர்களாக இருக்கிறார்கள். இந்த நொறுக்குத்தீனிகள் அதிக கலோரிகளைக் கொண்டவை. கொழுப்பும் சர்க்கரையும் இவற்றில் அதிகமாக உள்ளன. நொறுக்குத்தீனிகளின் பட்டியலில் முதல் இடம் பெறுவது சாக்லேட்டுகள்தான்.

எப்போதாவது சாக்லேட்டுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான்.ஆனால் சாக்லேட்டுகளை அடிக்கடி சாப்பிடுகிறவர்கள் மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற நேரங்களில் சாக்லேட்டுகள் கிடைக்காதா என்று ஏங்கத் தொடங்குவார்கள். இதுபோன்ற ஏக்கங்கள் தீவிரமடையும்போதுதான் மனிதன் சாக்லேட் பைத்தியமாகிப் போகிறான்.

பதினைந்து நிமிட விரைவான நடைப்பயிற்சியால் சாக்லேட் பைத்தியங்களை குணப்படுத்த முடியும் என்று எக்சீட்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு, அடிக்கடி தின்பண்டங்களைக் கொறிக்கும் இயல்புடையவர்களுக்கு அந்த பழக்கத்தில் இருந்து விடுபடவும், அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கவும் உதவியாக இருக்கும்.

Chocos25 சாக்லேட் பைத்தியங்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். மூன்று நாட்கள் சாக்லேட் பட்டினிக்குப்பிறகு பதினைந்து நிமிட விரைவு நடை. அதற்கப்புறம் ஒரு சாக்லேட் கட்டி திறந்து நீட்டப்பட்டது. விரைவு நடைக்குப்பிறகு சாக்லேட்டின் மீது நாட்டம் பத்து நிமிடங்கள் தாமதமாக காணப்பட்டது.

ஆனால் ஓய்வில் இருந்த சாக்லேட் பிரியர்களின் முன்பாக இந்த சாக்லேட்கட்டி நீட்டப்பட்டபோது, உடனடியாக விரும்பி வாங்கிக் கொண்டனர்.

அன்றாட வாழ்க்கையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதால் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடமுடியும். ஆனால் உடற்பயிற்சி மூலமாக சாக்லேட் பைத்தியங்களை குணப்படுத்த முடியுமென்பது முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ளது.

நம்முடைய மூளையில் மனநிலைக்கேற்ப பழக்கங்களைத் தூண்டும் ஒரு நரம்பணுத்தொகுதி உள்ளது. உடற்பயிற்சியின் மூலம் மூளையின் இந்தப்பகுதியில் சுரக்கும் இரசாயனப் பொருள் கட்டுப்படுத்தப்படுகிறது. உடற்பயிற்சிகள் நம்முடைய வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகின்றன. சோம்பலான வாழ்க்கை முறையால்தான் தின்பண்டங்களில் நாட்டம் ஏற்படுகிறது.

நாளொன்றுக்கு பதினைந்து நிமிடங்கள் விரைவான நடைப்பயிற்சியை எடுத்துக்கொள்கிறவர்கள் சாக்லேட் பிரியர்களாக இருந்தாலும்கூட, கொஞ்சம் கொஞ்சமாக சாக்லேட்டை வேண்டாம் என்று சொல்கிறவர்களாக மாறிவிடுகிறார்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

இன்றைய நகர வாழ்க்கை முறையில் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி குறைந்துகொண்டே வருகிறது. அவர்கள் தின்பண்டங்களைக் கொறிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி நாளடைவில் தொந்திபெருத்த குண்டுக் குழந்தைகளாகிப் போய்விடுகின்றனர்.

-தகவல்: மு.குருமூர்த்தி

Pin It