பெரியார் மீது பற்றுகொண்டு அவரது தொண்டர்களாய், மாணவர்களாய், போராளிகளாய், பரப்புரையாளர்களாய், எழுத்தாளர்களாய் உலகெங்கும் எராளமானவர்கள் நாம் அறிந்தும் அறியாமலும் இருந்தனர்; இருக்கின்றனர்.

periyar sleepingஇதில் பார்ப்பனர்கள் சிலரும் அடக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரை சின்னக்குத்தூசி, ஞாநி, கமலகாசன் போன்றவர்களைச் சொல்லலாம்.

என்னுடைய மாணவர் ஒருவர் அய்.ஏ.எஸ். தேர்வில் தேர்வுபெற்று டில்லியில் பயிற்சிபெற்றபோது, அங்கு வகுப்பு நடத்திய பார்ப்பன முதியவர் “இந்தியாவில் தந்தை பெரியாருக்கு இணையான ஒரு சிந்தனையாளர், யதார்த்தவாதி, பகுத்தறிவுவாதி, மனிதநேயப் பற்றாளர் எவரும் இல்லை. அவர் பெருமையை பார்ப்பனர்கள் திட்டமிட்டு மறைக்கின்றனர்; திரிக்கின்றனர். இந்தியா முன்னேற அவரது சிந்தனைகளே உகந்தவை’’ என்று மனம் திறந்து கூறினாராம்.

இந்தியாவின் வடமாநிலங்களில் பலர் பெரியாரின் பற்றாளர்களாய் பரவி வாழ்கின்றனர். அவர்களுள் ஒருவர்தான் “லலாய் சிங் யாதவ்’’. “இந்திய வரலாற்றில் புகழ்பெற்ற நாத்திகர்கள்’’ என்ற நூலின் ஆசிரியர் இவர்.

இவர் தந்தை பெரியாரின் மீது கொண்ட அளப்பரிய பற்றின் காரணமாய் தன் பெயரை “பெரியார் லலாய் சிங் யாதவ்’’ என்று மாற்றிக் கொண்டார் என்றால் பாருங்களேன்!

சச்சி ராமாயண் எழுதிய லலாய் சிங் யாதவ்  பற்றிய சில வரிகள்   

தந்தை பெரியார் 1973 டிசம்பர் 24-ஆம் தேதி இறந்துவிட்டார் என்ற செய்தி லாலய் சிங்கிற்கு அவரது சென்னை நண்பர் மூலம் கிடைத்தது, அய்யா இறந்த நினைவு நாள் நிகழ்ச்சியை சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கூடி நினைவஞ்சலி செலுத்தினர். இதற்கு தலைமையேற்ற லலாய் சிங் 3 மணி நேரம் உரையாற்றினார். அன்று இரவு முதல் உடல்நிலை சீர்குலைந்தது, சிலநாட்கள் அய்யா அவர்களின் மறைவு செய்தியினால் கவலையில் மூழ்கி உணவு தண்ணீர் அருந்தாமல் இருந்த காரணத்தால் உடல் மிகவும் நலிவுற்றார். அதன் பிறகு அவரது நாத்திக நண்பர்கள் ஒன்று கூடி சீர்திருத்தவாதிகள் மறைந்துவிட்டால் அவர்களின் பணியை நாம் தான் எடுத்துச்செல்லவேண்டும் நாம் சோர்ந்துவிட்டால் பெரியாரின் பணிகளை யார் எடுத்துச்செல்வது என்று கூறி அவருக்கு பெரியார் லலாய் சிங்யாதவ் என்று பெயர் சூட்டினர்.   

பெரியாரின் மறைவிற்குப் பிறகு லலாய் சிங் முழுமையான சமூகப் பணியில் இறங்கினார். தனது நிலங்களை விற்று 3 பதிப்பகங்களை கான்பூர் நகரில் வாங்கினார். அதன் மூலம் வேதம், ஸ்மிருதி, உபநிடதம், ராமாயணம், மகாபாரதம், கீதை, மற்றும் இந்துமதப் புராணங்களை படித்து அது முழுக்க மக்களை ஏமாற்ற எழுதிய ஆபாச அருவருப்புக் கதைகள் என்று கூறி அதற்கான ஆதாரங்களை தொடர்ந்து சிறு சிறு நூல்களாக வெளியிட்டு வந்தார்.     

அவரது நூல்கள் தொடர்ந்து உபி அரசால் தடைசெய்யப்பட்டு வந்தாலும், அவரும் துணிச்சலுடன் எதிர்த்து உச்சநீதிமன்றம் வரைச் நூல்களுக்கான தடையை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவந்தார். அப்படி அரசால்  தடைவிலக்கப்பட்ட நூல்களை  இலவசமாக மக்களுக்கு கொடுத்துவந்தார்.  
 
தனது 80-ஆவது வயதில் “பெரியார் ஜன் ஜாகிருதி சன்ஸ்தான்” (பெரியார் மக்கள் விழிப்புணர்வு அமைப்பு) என்ற ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு கருத்தரங்கங்களை நடத்தி வந்தார். 1993-ஆம் ஆண்டு அவரது மறைவிற்குப் பிறகு 2006-ஆம் ஆண்டு அந்த அமைப்பின் செயலாளர் ராஜ்வசி, மற்றும் துணைச்செயலாளர் ரகுவீர் சிங் ஆகியோர்   பெரியார் ஜன் ஜாகிருதி சன்ஸ்தான் என்ற அமைப்பை பெரியார் லலாய் சிங் ஜன் ஜாகிருதி சன்ஸ்தான் என்று புதிய பெயரிட்டு அதை உத்தரப்பிரதேச அரசு பதிவு எண் 2427/26.12.2006 அன்று பதிவு செய்தார்கள். இதன் மூலம் உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நாத்திக மாநாடுகள் நடத்தப்பட்டும் ஆண்டு தோறும் சிறந்த நாத்திகர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். 

- மஞ்சை வசந்தன்

Pin It