2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி 303 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. முதன்மையான எதிர்க்கட்சியான காங்கிரசு அய்ம்பது இடங்களைக் கூடப் பெறாமல் படுதோல்வி அடைந்தது. இனி இந்திய அளவில் அரசியல் களத்தில் பா.ச.க.வை வீழ்த்த முடியுமா? என்று அரசியல் வல்லுநர்கள் எண்ணுமளவுக்கு பா.ச.க.வுக்கு வலிமையான அடித்தளமாக இராஷ்ட்ரீய சுவயம் சேவக் சங் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். விளங்குகிறது.

rss sagaஆர்.எஸ்.எஸ். 1925-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விசயதசமி நாளில் டாக்டர் கேசவ பலிராம் எட்கேவர் என்பவரால் தொடங்கப்பட்டது. அகண்ட பாரதத்தை இந்துக்களுக்கான நாடாகக் கட்டமைப்பதே இதன் குறிக்கோள். எக்டேவருக்குப்பின் தலைவராக நீண்ட காலம் இருந்த எம்.எஸ். கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தத்துவத் தந்தையாகக் கருதப்படுகிறார். முசுலீம் எதிர்ப்பு என்பதற்கு முதன்மை தந்தார். கோல்வால்கரின் ஆணையின்படி ஆர்.எஸ்.எஸ்.-இன் அரசியல் அமைப்பாகப் பாரதிய ஜன சங்கம் 1951-இல் உருவாக்கப்ப்டடது. இதுவே 1980-இல் பாரதிய சனதா கட்சியாகப் பெயர் மாற்றம் பெற்றது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்போ, அதன் தலைவர்களோ சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால் அவர்கள்தான் எதற்கெடுத்தாலும் தேச பக்தி என்று முழங்குவதோடு, அவர்களின் இந்துத்துவப் பாசிசக் கொள்கையை எதிர்ப்பவர்களை எல்லாம் தேச விரோதிகள் என்று கூறி வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். கட்டுக்கோப்பான வலிமையான அமைப்பாகும். அதன் கிளைகள் ‘ஷாகா’ எனப்படும். இளம் பருவத்தினருக்கு உடற்பயிற்சியும் இந்துத்துவத் தத்துவப் பயிற்சியும் ஷாகாக்களில் அளிக்கப்படுகிறது. தம் வாழ்நாள் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். இடும் கட்டளைகளைச் செயல்படுத்தும் போர் வீரர்கள் போல் இவர்கள் உருவாக்கப்படுகின்றனர்.

நிறுவன நாளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ்.-இன் பொதுக்குழுவும், செயற் குழுவும் கூடுகிறது. இந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேசுவரில் இக்கூட்டம் நடைபெற்றது. அதையொட்டி வெளியிட்ட அறிக்கையில், 2014 முதல் 2019 செப்டம்பர் முடிய உள்ள காலத்தில் 13,584 ஷாகாக்கள் அமைக்கப்பட்டன; கடந்த பத்து ஆண்டுகளில் 19,584 ஷாகாக்கள் அமைக்கப்பட்டன; நாடு முழுவதும் 57,411 ஷாகாக்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1,200 ஷாகாக்கள் உள்ளன.

57,411 ஷாகாக்களில் நாள்தோறும் 40 மணித்துளிகள் உடற்பயிற்சி, 20 மணித்துளிகள் கொள்கைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுதவிர வாரம் ஒருமுறை நடக்கும் ஷாகாக்கள் 18,923 இருக்கின்றன. மொத்த ஷாகாக்களில் 60 விழுக்காட்டில் 20 அகவைக்கும் குறைவான மாணவர்கள், இளைஞர்கள் இருக்கின்றனர். 29 விழுக்காடு ஷாகாக்களில் 20 முதல் 40 அகவையினரும், 11 விழுக்காடு ஷாகாக்களில் 40 அகவைக்கு மேற்பட்டவர்களும் இருக்கின்றனர். இவ்வாறு பயிற்சி பெற்றவர்களில் பல ஆயிரம் பேர் முழுநேர ஊழியராக உள்ளனர். இவர்களே பா.ச.க.வின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்.-க்கு அகில பாரத வித்யார்த்தி பரிசத் (ABVP) என்கிற மாணவர் அமைப்பு ஜனசங்கம் ஏற்படுவதற்கு முன்பிருந்தே வலிமையாகச் செயல்படுகிறது. தற்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஏ.பி.வி.பி. ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. மேலும் ஆர்.எஸ்.எஸ்.-இன் துணை அமைப்புகளாக விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள் போன்ற பல அமைப்புகள் இசுலாமிய - கிறித்துவ வெறுப்பையும் இந்துத்துவ நஞ்சையும் பரப்பி வருகின்றன. இந்த அமைப்புகளின் அடித்தளத்தின் மீதுதான் பா.ச.க. அரசியலில் வெற்றியைக் குவித்து வருகிறது.

காங்கிரசுக் கட்சியும் மாநிலக் கட்சிகளும் உண்மையான மதச் சார்பின்மையையும், கூட்டாட்சிக் கோட்பாட்டையும் முதன்மைப்படுத்தித் தங்கள் கட்சியினரையும் மாணவர்களையும் இளைஞர்களையும் பயிற்றுவித்து அரசியலில் களமாடினால் தவிர சங் பரிவாரங்களின் அரசியல் கோட்டையைத் தகர்க்க முடியாது. பா.ச.க.விற்குப் படை வீரர்களை அனுப்பும் பாசறையாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.-யை வீழ்த்த முடியாது.

- க.முகிலன்

Pin It