தந்தை பெரியாரின் தன்மான இயக்கத்தில் தோய்ந் தவர்கள் சிதம்பரம், வல்லம் படுகை, வடக்கு மாங்குடி, பூந்தோட்டம் முதலான ஊர்களில் அதிகம் பேர்.

1946ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கச் சென்ற என் போன்றவர்களுக்குத் தோன்றாத் துணையாக விளங்கியவர்கள் வடக்கு மாங்குடி அ. பாலகிருட்டிணன். பழைய நல்லூர் பாலகுருசாமி - பின்னாளில் புதுப்பூலாமேடு புது. ஏக. தாமோதரன் ஆகியோர் ஆவர்.

சிதம்பரத்தில், ‘வன்னியர் வளர்ச்சிக் கழகம்’ என்னும் மாணவர் தங்கும் விடுதிதான், 1946-1949ஆம் ஆண்டுகளில் தந்தைபெரியாரும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும், நடிகவேள் எம்.ஆர். இராதா வும் தங்கும் இடம். இப்பெருமக்கள் வரும் போதெல் லாம் இவர்களுக்குத் தொண்டு செய்யவும் துணை நிற்கவும் ஆசிரியர் ந.வை. இராமசாமி, பழையநல் லூர் பாலகுருசாமி, வடக்கு மாங்குடி அ. பாலகிருட்டி ணன், சாலியந்தோப்பு கு. கிருஷ்ணசாமி, புவனகிரி பெருமாத்தூர் நமசிவாயம் ஆகிய தன்மானச் செயல் வீரர்கள் அவ்விடுதிக்கு வந்துவிடுவர். பம்பரமாகச் சுழன்று பணியாற்றுவர்; நீட்டிய விரல் காட்டும் பணிகளை அட்டியின்றிச் செய்து முடிப்பர். அத்தகைய ஈடுஇணையற்ற களப்பணியாளர்களுள் - களப்பணி யாளர்களின் காவலர்களாகவும் - பார்ப்பனக் கொள்கைக் கோட்டையை நடுங்கச் செய்தவர்களாகவும் விளங்கிய மேலேகண்ட மூத்த பெரியார் தொண்டார்களுள்

21-10-2013 வரை நம்மிடையே எஞ்சி இருந்தவர் வடக்கு மாங்குடி அ. பாலகிருட்டிணன் அவர்களே ஆவார். அப்பெருமகனார் தம் 97ஆம் அகவையில் 21-10-2013 திங்கள்கிழமை காலை மறைந்தார் என்ற செய்தியை இரா. காந்தி, பா. மோகன் இருவரும் காலை 9.30 மணிக்கு எனக்கு அறிவித்தனர்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் வரையில் எப்போது அப்பகுதிக்கு நானும் தோழர்களும் சென்றாலும் அ. பாலகிருட்டிணன் அவர்களைப் பார்த்து நலம் உசாவத் தவறியது இல்லை. கடந்த இரண்டாண்டுகளாக நடமாட்டம் குறைந்து வீட்டோடு இருந்த அவர் இறுதி வரை நல்ல உணர்வோடு திகழ்ந்தார்.

1976இல் என் போன்ற பழைய தோழர்கள் ‘பெரியார் சமஉரிமைக் கழகம்’ என்ற தனி அமைப் பைக் கண்டு செயல்பட முனைந்த போது, 1977 முதலே கடலூர் மாவட்டத்தில் பெ.ச.க. காலூன்றத் துணை நின்றவர்கள் வடக்கு மாங்குடி அ. பால கிருட்டிணன், கொள்ளிடம் வணிகர் பெரியசாமி, சிதம்பரம் வீ. இராசாப்பிள்ளை ஆகியோரே ஆவர்.

இந்த இயக்க வரலாற்றில், 1977இல் முதலாவது கொள்கைப் பயிற்சி வகுப்பினை, வல்லம் படுகையில், கொள்ளிடக்கரையில் உள்ள பயணர் விடுதியில் 8 நாள்கள் நடத்தினோம். அ. பாலகிருட்டிணன், கொள்ளிடம் பெரியசாமி, வல்லம்படுகை திருநாராயணன், சீர்காழி மா. முத்துச்சாமி ஆகியோர் எல்லா ஏந்துகளையும் தயக்கமின்றி - இயக்க வேறுபாடு பாராமல் செய்து தந்தனர்.

தோழர் அ. பாலகிருட்டிணனின் மூத்த மகன் பா. மோகன் அப்போது முதல் மா.பெ.பொ.க. உணர்வு பெற்றார். அவர், 1979 மார்ச்சில், புதுதில்லியில் முதன் முதலாக நடந்த பெரியார் நூற்றாண்டு விழாப் பேரணி யில் பங்கேற்றார்; என் துணைவியாரும் இவரும் பதாகையை ஏந்தி அந்த மாபெரும் ஊர்வலத்தில் 8 கிலோ மீட்டர் நடந்தனர். இன்று கடலூர் மாவட்ட மா.பெ.பொ.க. செயலாளராக இவர் விளங்குகிறார்.

இப்படித் தம் குடும்பத்தினர் அனைவரையும் பெரியார் கொள்கைப் பரப்பலுக்கு ஆளாக்கிய மறைந்த நம் பாலகிருட்டிணன் இளமையில், மயிலாடுதுறை யில், செல்வாக்கான குடும்பத்தில் வளர்ந்தவர்; பின்னர் வடமாங்குடியில் தம் குடும்பத்து வேளாண்மைத் தொழிலில் முழு மூச்சாக ஈடுபட்டவர்; உழவுப் பணி களை ஆர்வத்துடன் 2000 ஆண்டு வரையில் மேற் கொண்டவர்; அத்தொழிலைச் செய்வதைப் பெருமை யாகக் கருதியவர்.

1946-1949ஆம் ஆண்டுகளில் நான் சிதம்பரத்தில் தங்கியிருந்த போது ஒரு கிழமையில் இரண்டு மூன்று நாள்கள் அ. பாலகிருட்டிணனும், பாலகுருசாமியும் - அப்போது மணமான இளம் பருவத்தினர்-அவர்கள் இருவரும் எங்களுடன் முன்னிரவு வரையில் தங்கி மணிக்கணக்கில் இயக்கம், பரப்புரை, கிளர்ச்சி பற்றி ஆர்வத்துடனும், கலகலப்பாகவும், கிண்டலாகவும் பேசி, எங்களிடம் ஓர் உந்துதலை உண்டாக்கிய களப் பணிக் காவலர்கள் ஆவர்.

இன்று அப்படிப்பட்ட உணர்வாளர்களைக் காண்பது அரிது.

பின்னாளில் பாலகுருசாமி அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்; சட்ட மேலவை உறுப்பினராகத் திகழ்ந்தார்.

இவர்களெல்லோரும், கு. கிருட்டிணசாமியும் - கருஞ்சட்டை மாணவப் படையினர் க.அ. மதியழகன், வி.வி. சாமிநாதன், பூவாளூர் இளங்கோவன், சேலம் இராசமாணிக்கம், வே. ஆனைமுத்து, நாகை கண்ணை யன் ஆகியோர் பல்கலைக்கழக விடுதி வளாகத்தில், கொடி எரிப்புக் கலவரத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கைதுக்கு உள்ளான போதும், அது தொடர்பான வழக்கு பறங்கிப்பேட்டையில் நடந்த போதும் நீங்காத் துணை யாக நின்றவர்கள்.

பெரியார் பெரும் படையின் களப்பணியிலும், போராட்டங்களிலும் தலைவர்களாக விளங்கியவர் களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் - நம் வடக்கு மாங்குடி அ. பாலகிருட்டிணன். இன்று தி.மு.க. செயல்வீரராக விளங்கும் “மீண்டும் கவிக்கொண்டல்” ஆசிரியர் ம. செங்குட்டுவன், தி.க. தலைவராக உள்ள கி. வீரமணி போன்ற 80 அகவை தாண்டியவர்களுக்கு, அன்று சிதம்பரம் வட்டத்தில் பரப்புரைக் களம் அமைத்துத் தந்து ஊக்கப்படுத்தியவர் பாலகிருட்டிணன்.

உள்ளும் புறமும் ஒன்றாக ஒழுகியவர்; உழைப்பைக் கண்டு அஞ்சாதவர்; பணச்செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு இவற்றுக்கு அறைகூவல் தந்து எதிர்த்து நின்றவர் - வென்றவர்.

அத்தகு மாண்புகளுக்கு உரியவராக விளங்கிய வடக்கு மாங்குடி அ. பாலகிருட்டிணன் அவர்களின் மறைவு, பெரியார் இயக்கத்துக்கும், மா.பெ.பொ. கட்சிக்கும் பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து துயருறும் அவர்தம் ஆருயிர் துணைவியார் கனகு அம்மையார் அவர்கட்கும், அவர்தம் மகன்கள் பா. மோகன், பா. கருணாகரன், மகள் பா. உமாராணி; மருமகள்கள், மருமகன் மற்றும் குடும்பத்தினர்க்கும் மா.பெ.பொ.க. சார்பிலும், என் குடும்பத்தார் சார்பிலும் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் உரித்தாக்குகிறேன்.

வாழ்க, அ. பாலகிருட்டிணன் புகழ்!

Pin It