திராவிட மாடல் என்று ஒன்றும் இல்லை.

திராவிட மாடல் கொள்கை காலாவதியானது. திராவிட மாடல் என்பது அரசியல் வாசகம், காலாவதியான சித்தாந்தத்தைப் புதுப்பிக்க வைக்கும் முழக்கமே திராவிட மாடல் என்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

governor ravi 253இப்படிச் சொன்னவர் தனியொரு மனிதராகவோ, அரசியல்வாதியாகவோ இருந்திருந்தால் இது அவரின் கருத்துரிமை என்று எளிதில் தள்ளி விடலாம்.

ஆனால் இத்தகைய அரசியல் அடிப்படையான கருத்துகளைச் சொல்பவர் தமிழ்நாட்டின் ஆளுநர் என்பது கவனிக்கத்தக்கது.

ஒன்றிய அரசால் அனுப்பப்படும் ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டு, மாநிலத் தலைமை நீதிபதியால் பதவிப் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார்.

எனவே ஆளுநரின் பேச்சு அளவறிந்து, ஒரு பக்கச்சார்பு இன்றி நடுநிலையாக இருக்க வேண்டும். இதற்கு நேர் முரணாகச் செயல்பட்டுக் கொண்டு இருப்பவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தங்களான ஒரே நாடு - ஒரே பாரதம், சனாதன தர்மம், பகவத் கீதை போன்ற இந்துத்துவக் கருத்துக்களைப் பேசுவதும், குறிப்பாக மாணவர்களிடையே பேசுவதுமாக, ஒரு ஆர்.ஆர்.எஸ் காரரின் வேலையை அவர் செய்து கொண்டு இருக்கிறார்.

அதனால் அதன் நேர் எதிர் சித்தாந்தமான திராவிடச் சித்தாந்தத்தைக் கொச்சைப்படுத்திக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக நல்லவர். அவரை மதிப்பதாகச் சொல்லும் ஆர்.என்.ரவி, அவரின் திராவிட மாடல், திராவிடச் சித்தாந்தம் காலாவதியாகிவிட்டது என்றும், அது வெறும் அரசியல் பெயர்தான் என்றும் தன் அறியாமையைக் காட்டியிருக்கிறார் அவர்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தொடங்கி, இன்றைய தி.மு.கழக ஆட்சி வரை திராவிட இயக்கம் செய்துள்ள அளப்பரிய சாதனைகள் சொல்லி மாளா.

குறிப்பாகத் திராவிடத்தின் மாபெரும் ஆளுமையான ஐயா தந்தை பெரியாரின் கைத்தடியின் பின்னால் தமிழ்நாடு நிற்கிறது என்பதே திராவிடச் சித்தாந்தத்தின், திராவிட மாடலின் வெற்றி.

இந்துத்துவத்தில் மயங்கி சாதி வேர்களில் இடுங்கிப் போயிருக்கும் ஒன்றிய மாநிலங்களில், அந்த சாதியத்தை, அந்த சனாதனத்தை, அந்தத் தீண்டாமையின் வேரைத் தமிழ் நாட்டில் தோண்டியெடுத்து உலுக்கியது திராவிட இயக்கம், உலுக்கியவர் தந்தை பெரியார்.

 மூட நம்பிக்கையைத் தகர்த்தவர் பெரியார்.

 பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தவர் பெரியார்.

 வகுப்புவாரி உரிமைக்காகப் போராடியவர் பெரியார்.

 இந்துமத ஆதிக்கத்தை எதிர்த்துக் களம் கண்டவர் பெரியார்.

 ஆதிக்க இந்தியை இங்கு நுழைய விடாமல் தடுப்பவர் பெரியார்.

 சமூகநீதியை இறுதி மூச்சுவரைப் பேசியவர் தந்தை பெரியார் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்துத்துவத்தைத் தமிழ் நாட்டில் நுழைய விடாமல் தடுத்துக் கொண்டு இருப்பதற்கு, பெரியாரின் திராவிடச் சித்தாந்தம் உயிர்ப்போடு இருக்கிறது என்பதே வெளிப்படை.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான், திராவிடத்தைக் கொச்சைப்படுத்திக் கொண்டு இருக்கிறார் ஆளுநர்.

பல்கலைக் கழகங்களின் வேந்தர்களை நியமிக்க வேண்டிய பொறுப்பு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிடம்தான் இருக்க வேண்டும்.

ஆனால் ஆளுநர்தான் நியமிக்க வேண்டும் என்றும், அதனால் கோப்பை நிறுத்தி வைத்துள்ளேன் என்றும் ஆங்கில நாளிதழ் ஒன்றின் நேர்காணலில் ஆளுநர் கூறுவது தமிழ்நாட்டின் மக்களை இழிவுபடுத்துவது போல இருக்கிறது.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ், அதன் பரிவாரங்களுக்கு இங்கு வேலையே இல்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவி விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி தமிழ்நாட்டில் திராவிட சித்தாந்தம் உயிர்ப்போடு இருக்கிறது. திராவிட மாடல் அரசு சிறப்போடு செயல்படுகிறது.

ஆளுநர் தன் வேலையைச் செய்வதை விட்டுவிட்டு, ஆர்.எஸ்.எஸ். அரசியல் பேசுவதைத் தொடர்வது ஆளுநர் பொறுப்புக்கு அழகில்லை. அவரின் பொறுப்பற்றப் பேச்சு கண்டனத்திற்கு உரியது.

-  எழில்.இளங்கோவன்

Pin It