தத்துவ மேதைகளின் எழுத்துக்கள், சமூக சிந்தனையாளர்களின் படைப்புகள், சிறந்த இலக்கியங்கள், கலைப் படைப்புகள், இன்ன பிறவற்றை இளைஞர்கள் மத்தியில் விதைக்கும் வண்ணம், மேற்குறிப்பிட்ட படைப்புகளை வாசிக்கவும், அதுகுறித்து விவாதிக்கவும் வேண்டி, இந்நகரமயச் சூழலில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் துடிப்புமிக்க இளைஞர்கள் சிலரால், சென்னையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்புதான் ‘வாசகர் சாலை’ என்ற அமைப்பு.

Ambedkhar day 600பரபரப்பான சூழ்நிலையிலேயும் அமைதியாக இந்த அமைப்பு இயங்கிக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு ஆளுமைகளை அழைத்து சென்னையில் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்தாலும் இதன் படிநிலை வளர்ச்சியாகத் தமிழர்கள் அடர்த்தியாக வாழும் மும்பை, பெங்களூர் போன்ற பிற மாநிலப் பகுதிகளிலேயும் தமிழ்நாட்டின் முக்கியமான மாவட்டத் தலைநகர்களிலேயும் முழுநாள் நிகழ்வாக நிகழ்ச்சிகளைச் சிறப்புற நடத்திக் கொண்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, மேதை அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி 20.4.19 சனிக்கிழமையன்று சென்னை, எழும்பூர், இக்சாமையத்தில் ‘எழுத்தாளர் அம்பேத்கர்’ - முழுநாள் நிகழ்வு-2 என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு வாழ்த்துரையாகவும், தொடக்கவுரையாகவும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர், தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கர் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.

காலை 10 மணிக்கு தோழர் வே. ஆனைமுத்துவின் வாழ்த்துரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நாற்காலியில் அமர்ந்தபடி தோழர் ஆனைமுத்து அவர்கள் ஒரு மணிநேரம் உரையாற்றினார்.

அம்பேத்கரின் சிந்தனைகள், அவரது எழுத்துகள் இவைகளைப் பற்றி விரிவாகப் பேசினார். அவர் தனது உரையில், அம்பேத்கரின் உதவியாளர், அவருடன் பணியாற்றியவர்கள், அவரது கொள்கைகளை முன்னெடுத்த வட நாட்டுத் தலைவர்கள், இவர்களுடனான தமது தொடர்புகள், அரசியல் அனுபவங்கள் ஆகியவைகளை விளக்கிப் பேசினார்.

அம்பேத்கர் உதவியாளர் வசந்த் மூன் அவர்களிடம் தான் நெருங்கிப் பழகியதை வைத்து, அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு தமிழில் நூலாகக் கொண்டுவரத் தான் வைத்த கோரிக்கையையும், தனஞ்செய்கீர் அவர் களால் எழுதப்பட்ட ‘அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு’ என்ற நூலைத் தமது கட்சியான மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பாகச் சிறப்பான முறையில் வெளயிட்ட முறையினையும் விளக்கிப் பேசினார்.

அந்நூலைப் பற்றிப் பேசும்போது அந்த நூலை எடுத்து உயர்த்திக்காட்டிப் பேசினார். மேலும் இந்திய அரசமைப்புச் சட்ட நூலை எடுத்துக்காட்டி, அதில் அம் பேத்கர் குறிப்பிட்ட சில சட்டப் பிரிவுகளைப் படித்துக் காட்டி விளக்கிப் பேசினார்.

அப்போது அரங்கில் அமர்ந்திருந்த இளைஞர்கள் தோழர் ஆனைமுத்துவின் உரையினைக் கூர்ந்து கவனித்தபடி குறிப்பெடுத்துக் கொண்டனர். அய்யாவின் உரை நிறைவுற்றவுடன், பின் பல அமர்வுகளில் ‘எழுத் தாளர் அம்பேத்கர்’ நிகழ்ச்சி தொடங்கியது.

- முதல் அமர்வாக, ‘அம்பேத்கர் கொள்கைகள் - சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற தலைப்புகளில் தோழர் சந்துரு மாயவன் உரையாற்றினார்.

- இரண்டாவது அமர்வாக, ‘இந்திய சனநாயகமும், இரட்டை வாக்குரிமையும்’ என்ற தலைப்பில் தோழர் வினோத்குமார், தோழர் பா.ம. மகிழ்நன் உரையாற்றினர்.

- மூன்றாவது அமர்வாக, ‘அம்பேத்கர் - நவீன இந்தியாவின் திசைகாட்டி’ என்ற தலைப்பில் தோழர் சுந்தரவள்ளி, தோழர் தீபலட்சுமி, தோழர் தாமரைக் கொடி உரையாற்றினர்.

- நான்காவது அமர்வாக, ‘அம்பேத்கரும் சோச லிசமும்’ என்ற தலைப்பில் தோழர் சந்திரமோகன், தோழர் ம. செந்தில் உரையாற்றினர்.

- ஐந்தாவது அமர்வாக, ‘அரசமைப்பும், அண்ணல் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் ‘ஒடுக்கப்பட்டோர் உரிமை’ என்கிற பிரிவில் தோழர் கொளத்தூர் மணி அவர்களும், ‘பெண்கள் உரிமை’ என்ற பிரிவில் சௌமியா ராமன் அவர்களும் உரையாற்றினர்.

இந்நிகழ்வின் ஒவ்வொரு அமர்வின் நிறைவின் போதும் உரையாற்றியோருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார் கேள்வி-பதில் நிகழ்ச்சியும் தொடர்ந்தது. கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுச்சேரி மாநில மா.பெ.பொ.க. செயலாளர் இரா. திருநாவுக்கரசு தங்கள் கட்சிக் கொள்கையில், அம்பேத்கர் குறித்த பார்வையை கருத்துரையாக முன்வைத்துக் கொண்டே வந்தார்.

இந்நிகழ்ச்சி பற்றி புதுச்சேரியிலிருந்து இரா. திருநாவுக் கரசு, இரா.இரமணன், சீனு.சந்திரசேகரன், துளசிதரன் மற்றும் வேலூர் மாவட்ட மா.பெ.பொ.க. செயலாளர் சா. குப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

Pin It