அகில இந்திய தீண்டாமை விலக்குச் சங்கத்தின் சென்னைக் கிளையின் ஆதரவில் சென்ற 17 - 3 - 32 வியாழனன்று, காலஞ்சென்ற சுவாமி  சிரத்தானந்தர் அவர்களின் உருவப் படத்தை வைக்கும் பொருட்டு, சர். ஏ. பி. பாத்ரோ அவர்கள் தலைமையில் சென்னைக் கோகலே மண்டபத்தில் ஒரு பொதுக் கூட்டம் கூடிற்று. கூட்ட ஆரம்பத்தில், திரு. பாத்ரோ அவர்கள், தீண்டாதாருக்கு இந்து சமூகம் செய்துள்ள தீமைகள் கொஞ்சம் அல்ல. அதை அகற்றுவதற்குப் பல சீர்திருத்தக்காரர்கள் பாடுபட்டு வந்திருந்தும், இன்று வரையிலும் இக்கொடுமை அழியாமல் இந்தியாவில் நிலைத்து வருவது வருந்தத் தக்கதாகும். ஒரு சமூகத்தாரைத் தொடவும் கூடாதென மிருகங்களைக் காட்டிலும் இழிவாக நடத்துவதை விடக் கொடுமையான விஷயம் வேறொன்றுமில்லை. புத்தர் போன்ற பெரியார்களின் உபதேசங்கள் இந்நாட்டில் தோன்றியிருந்தும், இன்னும் இத்தீண்டாமைக் கொடுமை ஒழியா மலிருப்பதற்குக் காரணம் இந்து சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளும், மூடப் பழக்க வழக்கங்களுமேயாகும் என்று பேசியிருக்கிறார். இதைக் கொண்டு, நமது நாட்டில் தீண்டாமை நிலைத்திருப்பதற்குக் காரணம் இந்து மதமும், அதைக் கைப்பற்றியிருக்கும் மக்களிடம் உள்ள மூட நம்பிக்கைகளும், மூடப் பழக்க வழக்கங்களுமே யென்பதை அறியலாம். ஆனால் அதே சமயத்தில் சேலம் திரு. சி. விஜய ராகவாச்சாரியார் அவர்கள் பேசும் போது,

“இப்பொழுது நாம் யோசிக்க வேண்டிய விஷயம் தீண்டாமையை எப்படி விலக்கலாம் என்பதைப் பற்றியேயாகும். தீண்டாமை எப்படி வந்தது என்பதைப் பற்றி யோசிப்பதோ, அல்லது இந்து மதத்தின் மேல் குறைகூறிக் கொண்டிருப்பதோ தீண்டாமையை விலக்குவதற்குரிய வழியாகாது. இந்து மதந்தான் தீண்டாமை தொல்லையைப் புகுத்தி விட்டது என்று சொல்லவே முடியாது. இந்து சமூகம் தீண்டாமை நிலைத்திருப்பதை ஒப்புக்கொள்ள வேயில்லை என்று துணிந்து கூறுவேன்”.

என்று இந்து மதத்தைப் புகழ்ந்தும், தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டும் பேசியிருக்கிறார். ஆகவே இவ்விருவர்களின் கருத்துக்களையும் கவனித்தால் தீண்டாமைத் தொல்லைக்கு இந்து மதம் காரணம் என்று திரு. பாத்ரோ கருதுவதாகவும், இந்துமதம் தீண்டாமையை ஒப்புக் கொள்ளவில்லை. ஆகையால் இந்து மதத்தைக் குறை கூறுவது தவறு என்று திரு. விஜயராகவாச்சாரியார் கருதுவதாகவும் அறியலாம். ஆனால் எது உண்மையான அபிப்பிராயம் என்பதைப் பற்றி நாம் சிறிது ஆராய்வோம். இன்று தீண்டாத மக்களை உயர்ந்த சாதிக்காரர்கள் என்பவர்கள் வசிக்கும் தெருவில் நடக்கக் கூடாது என்று தடுப்பதற்கும், தீண்டாதார்களை, உயர்ந்த சாதியினர் என்பவர்கள் தண்ணீர் எடுக்கும் குளம், கிணறு முதலிய வைகளில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று தடுப்பதற்கும், அவர்களைப் பொதுப் பள்ளிக் கூடங்களில் சேர்ந்து படிக்கக் கூடாது என்று தடுப்பதற்கும் காரணம் இந்து மதமும், அதில் உள்ள மூடப்பழக்க வழக்கங்களும் அல்லவா என்று கேட்கிறோம்.

இன்று மலையாள நாட்டைச் சேர்ந்த குருவாயூரில், தீண்டாத மக்கள் கோயில் பிரவேசத்திற்காகச் செய்யும் சத்தியாக்கிரகத்தை எதிர்த்து நிற்கின்ற வர்கள், உயர்ந்த சாதியென்று சொல்லிக் கொண்டிருக்கும் வைதீக இந்துக்கள் தானே.  இதைப் போலவே பம்பாய் மாகாணத்தில் உள்ள நாசிக் என்னும் ஊரில் தீண்டாதார்கள் கோயில் பிரவேச உரிமையின் பொருட்டுச் செய்யும் சத்தியாக்கிரகத்தை எதிர்த்து நிற்பவர்களும் உயர்ந்த சாதி யென்று சொல்லிக் கொண்டிருக்கும் வைதீக இந்துக்கள் தானே. இந்த உயர்ந்த சாதிக்காரர்களான வைதீக இந்துக்கள் இவ்வாறு தீண்டாதவர்களின் உரிமைகளுக்கு எதிரி டையாய் இருப்பதற்கு, இந்து மதத்தையும் இந்து மத சாஸ்திரங்களையும் தவிர வேறு ஏதாவது காரணம் உண்டா? என்றுதான் கேட்கிறோம். பார்ப்பனர்கள் வருணாச்சிரம தருமத்தின் பேராலும், சனாதன தருமத்தின் பேராலும், கூட்டங்கள் கூட்டுவதற்கும், மகாநாடுகள் நடத்துவதற் கும், அந்தக் கூட்டங்களிலும் மகாநாடுகளிலும் தீண்டாதவர்கள் ஆலயங் களுக்குள் செல்ல வேண்டுமென்று கேட்பதும் அதற்காக முயற்சி செய்வதும் இந்து மதத்திற்கு விரோதமான தென்றும், தீண்டாதார்க்குக் கோவில்களுக்குள் செல்லவும், உயர்ந்த சாதி இந்துக்களுடன் சமத்துவமாகப் பழகவும் உரிமை கொடுத்து விட்டால் இந்துமதம் அழிந்து விடுமென்றும் தீர்மானங்கள் செய்வதற்குக் காரணம் இந்து மதமும் இந்துமத சாஸ்திரங்களும் அல்லவா என்று தான் கேட்கின்றோம்.

பாமர மக்களால், மகாத்மாவாக மதிக்கப்படும் திரு. காந்தி அவர்கள் தீண்டாமையின் கொடுமையைப் பற்றியும், அதை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும், பேசியும் எழுதியும் வருகின்றார். ஆனாலும் தீண்டாமை ஒழிய வேண்டும்; ஆனால் வருணாச்சிரம தருமம் நிலைத்திருக்க வேண்டும் என்றும், பிறப்பினால் ஒவ்வொருவரிடமும் குண வேறுபாடு உண்டு என்றும், ஆத்மாவில்தான் எல்லாரும் சமத்துவமே ஒழிய உடம்பில் சமத்துவமில்லை என்றும் சொல்லிக் கொண்டு தான் தீண்டா மையை ஒழிக்க வழி தேடுகிறார். இவ்வாறு அவர் சொல்லுவதற்குக் காரணம் அவர் படித்த இந்து மத சாஸ்திரங்களும், அவர் நம்பும் இந்து மதமும் அல்லவா என்றுதான் கேட்கிறோம்.

இனி இந்துமத நூல்களில் வருணாச்சிரம தருமத்தைப் பற்றிக் கூறப்படாத சாஸ்திரங்கள் எவையேனும் உண்டென்றும் எவராலேனும் சொல்ல முடியுமா? திரு. காந்தியினாலும், மற்றும் இந்து மத வைதீகப் பண்டிதர்களாலும் மற்றும் சீர்திருத்த வாதிகளாலும் கூடப் புகழ்ந்து பேசப்படும் கீதை யில்தான் வருணாச்சிரம தருமத்தைப் பற்றிக் கூறப்படவில்லை என்று சொல்ல முடியுமா?

 குடி அரசு தலையங்கம்  27.3.1932

Pin It