1940 ஆகஸ்டு 24, 25 தேதிகளில் திருவாரூ ரில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 15ஆவது மாநாடு திராவிடர் இயக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை மாநாடாகும்.

1938இல் தொடங்கி 1939 வரை நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய மாநாடு இது.

இம்மாநாட்டில் திராவிட நாடு பிரிவினைக்கான தீர்மானமும் திராவிட நாடு அடைவதற்கான வழிவகை களைக் கண்டறிய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

இன்று தமிழ்த் தேசியர்களால் தூக்கிப் பிடிக்கப் படும் கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்கள்தான் அந்த மாநாட்டின் போது நீதிக்கட்சியின் பொதுச் செயலாள ராக இருந்தார்.

தமிழ்த் தேசியர்களால் தூக்கி நிறுத்தப்படும் அண்ணல் தங்கோவும் நீதிக்கட்சியில் தான் தீவிரமாகப் பணி யாற்றினார். அப்போது மொழிவழி மாநிலம் பிரிய வில்லை. நான்கு மொழிகளையும் பேசக்கூடிய மக்கள் அடங்கிய பகுதிகளை ஒருங்கிணைத்து ஆங்கிலேய அரசு சென்னை மாகாணம் என்ற நிர்வாக அமைப்பை அமைத்திருந்தது. அந்த சென்னை மாகாணத்தை தான் நீதிக்கட்சி ‘திராவிட நாடு’ என்று பொருள் கொண்டு செயல்பட்டது.

இம்மாநாட்டில் பல முக்கியத் தீர்மானங்கள் இயற்றப் பட்டன. அதில் முதன்மையான தீர்மானம் ‘திராவிட நாடு’ பிரிவினை கோரிக்கை தொடர்பான தீர்மானமாகும்.

திராவிட நாடு பிரிக்கப்பட வேண்டும்

திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவைகள் முன்னேற்றமடைவதற்கு - பாதுகாப்ப தற்கு திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இங்கிலாந்தின் நேரடி பார்வையின்கீழ் இது ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது (குடிஅரசு 1.9.1940, பக்கம் 12-13).

இந்தத் தீர்மானங்கள் தொடர்பாக “திருவாரூர் தீர்மானமும் நமது கடமையும்” என்ற தலைப்பில் 1.9.1940 குடிஅரசு ஏட்டில் தலையங்கம் தீட்டப்பட் டுள்ளது.

திராவிட மக்கள், தங்கள் நிலையையும் தங்கள் எதிரிகளின் சூழ்ச்சிகளையும் உணர்ந்துகொண்டு விட்டனர் என்பதற்கு மிகக் குறுகிய காலத்தில் கூட்டப்பட்ட திருவாரூர் 15ஆவது ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டிற்குப் பல ஆயிரக் கணக்கில் மக்கள் திரண்டு வந்து காட்சி அளித்ததே போதுமான அறிகுறியாகும்.

மரக்கலம் எவ்வளவு பலம் பொருந்தியதாக இருந்த போதிலும், எவ்வளவு சக்தி வாய்ந்திருந்தபோதிலும், அதனைச் செலுத்தும் மாலுமி யைப் பொறுத்தே அதன் வேகமும் அதன் உபயோ கமும் இருந்துவருவது போல, ஒரு கட்சி எத்தகைய திட்டங்களைக் கொண்டதாயிருந்த போதிலும் அது உண்மையிலே பயனுள்ளதாயிருக்க வேண்டுமானால், அதன் தலைவரின் திறமையைப் பொறுத்தேயிருக்கிற தென்பதை உணர்ந்த திராவிடர், ஏகமனதாக மீண்டும் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களையே ஜஸ்டிஸ் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. அத்துடன் அவர்கள் நின்றுவிடவில்லை. அம்மாநாட்டில் நிறைவேற்றப் பட்டிருக்கும் தீர்மானங்களைப் படிப்போருக்கு விளங்கும்; திராவிட மக்கள் சுயமதிப்பைப் பெற, தங்களுக்குள்ள இழிவைப் போக்க, இழந்த அரசுரிமையை அடைய என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள உறுதி கொண்டிருக்கிறார்கள் என்பது.

தனித்தொகுதி தேர்தல் முறையைக் குறித்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் எதிர்காலத்தில் திராவிடர்களை ஒரு தனி வர்க்கமாக - நேஷனாக விளக்கச் செய்வதற்கு ஓர் சிறந்த வழிகாட்டி யென்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஒரு வர்க்கம் முன்னேற வேண்டுமானால், அவ்வர்க்கத்தினர் அரசி யலைக் கைப்பற்றியாக வேண்டும். அரசியலைக் கைப்பற்றுவதற்குக் கூட்டுத் தொகுதி தேர்தல் முறை யினால் கோரிய பலன் கிட்டாதென்பதையும் தனித் தொகுதி முறையினால்தான் கிட்டுமென்பதையும் உலக நிகழ்ச்சிகளும், நம் நாட்டு அனுபவமும் நன்கு விளக் கும். எனவே, திராவிடர் முன்னேறுவதற்குத் தனித் தொகுதி தேர்தல் - முறையை அவர்கள் எப்பாடுபட்டும் பெற்றே தீரவேண்டும். அதற்காக இன்று முதலே திராவிடர் ஆங்காங்கு தீர்மானங்கள் நிறைவேற்றி, சர்க்கார், இந்திய சட்டத்தில் செய்யும் சீர்திருத்தத்தில் இதற்கான திருத்தத்தைச் செய்யும்படி வற்புறுத்த வேண்டும்.

அடுத்தாற் போல், திராவிடர்கள் தனி வர்க்கத்தார் என்று விளக்கிக் காட்டுவதற்கும் ஒரு சந்தர்ப்ப மிருக்கிறதென்பதையும் அச்சந்தர்ப்பத்தை தவறவிடா மல் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதையும் அடுத்து நிறைவேற்றியிருக்கும் தீர்மானம் நன்கு விளக்கும். அதாவது, “அடுத்தாற்போல் வரும் மக்கள் எண்ணிக்கை கணக்கு எடுக்கும் ‘சென்ஸஸ்’ என்பதில் திராவிட மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல் லியே பதிவு செய்து கொள்ள வேண்டும்” என்பதாகும். இதையும் ஒவ்வொரு திராவிட மகனும், திராவிட மகளும் மனதிலிறுத்தி நடந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம் என்று இத்தகைய கட்டுப்பாடு நம்மவர் களிடையே என்று ஏற்படுகிறதோ அன்றுதான் நாம் முன்னேற முடியும். எதுவரை நம்மை நாம் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு வருகிறோமோ அதுவரை நாம் அடிமை வாழ்வை விரும்புகிறோமென்பதுதான் பொருள்படும். எனவே அடிமைத்தளையிலிருந்து விடுபட முதற்படி, தன்னை திராவிடன் என்று சொல்லிக் கொள்வதேயாகும். இதனைச் செய்ய எவரும் நம்மை மறந்தும் தவறிவிடமாட்டார்கள் என்றே கருதுகின்றோம்.

மூன்றாவதாக திராவிட நாடு பிரிக்கப்படவேண்டிய அவசியத்தை வற்புறுத்தி நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தை ஒவ்வொருவரும் எண்ணிப் பார்த்து அது கைகூடும்வரை அதற்கான காரியங்களைச் செய்ய வேண்டுமாய் வணக்கத்துடன் கேட்டுக் கொள் கின்றோம்.

திராவிட நாடு பிரிக்கப்பட வேண்டிய அவசியத்தைக் குறித்து நாம் பல தடவை விளக்கியிருப்பதால் அதன் அவசியத்தை மக்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகின்றோம்.

அரசியல், பொருளாதாரம், சமுதாயம் ஆகிய துறை களில் ஒரு வர்க்கத்தாரே ஏகபோக மிராசு செலுத்து வதும், மற்றொரு வர்க்கத்தார் மிக தாழ்வான நிலை யிலிருந்து வருவதும் ஆனகாரியம் இந்நாட்டைத் தவிர வேறு எங்கும் பார்க்கமுடியாது. இந்நிலை மாறவேண்டுமானால், பெரியார் தமது தலைமை உரையில் குறிப்பிட்டிருப்பதுபோல் திராவிட மக்கள் ஆரியப் பிணைப்பிலிருந்து விடுபட வேண்டும். ஆரியப் பிணைப்பிலிருந்து விடுபடுவதற்கு அறிகுறியாக திராவிட மக்களுக்கு இந்துலா’ சட்டம் என்ற ஆரிய தர்ம சட்டத்தின்படி நீதி வழங்கப்படுவதை ஒழித்தாக வேண்டும். அது சம்பந்தமாக மாநாட்டில் ஒரு தீர் மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இவைபோக கல்வி சம்பந்தமாகவும், காங்கிரஸ் புகுத்திய புதுப்புது வரிகள் சம்பந்தமாகவும், பப்ளிக் சர்வீசஸ் சம்பந்தமாகவும், “ஸ்ரீ” என்ற பதத்தைப் பெயர்களுக்கு முன்னால் போடுவதைக் கண்டித்தும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.