நான் 21.6.2018 வியாழன் அன்று 94 அகவையைத் தொட்டுள்ளேன்.

தந்தை பெரியார் அவர்கள் 28.10.1944-இல் பரமத்தி வேலூர் என்கிற ஊருக்கு திராவிடர் கழகத் தொடக்க விழாவிற்கு வந்திருந்தார்.

நான் முதன்முதலாக அவரைப் பார்த்ததும் அவருடைய பேச்சைக் கேட்டதும் அன்றுதான். அன்று வரையில் வடலூர் இராமலிங்க அடிகளா ருடைய கொள்கைப் பற்றாளனாக இருந்த நான், தந்தை பெரியார் வழியில் “பிறவி வருணாசிரம உயர்வு-தாழ்வு இந்துக் களிடையே இருப்பதை” நன்கு புரிந்துகொண்டேன்.

1919 முதல் 1925 வரையில் தந்தை பெரியார் காங்கிரசுக் கட்சியில் இருந்தார். அப்போது திருப்பூரில் காங்கிரசுக் கட்சி சார்பில் 1922 டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சி மாநாட்டில் “இந்துக்களிடையே உள்ள தீண்டாமையை ஒழிக்க காங்கிரசு பாடுபட வேண்டும்” என்று பெரியார் தீர்மானம் கொண்டு வந்தார்.

மாநாட்டுத் தலைவர் உள்பட, சி. இராசகோபாலாச்சாரியார், எஸ். சீனிவாச அய்யங்கார் உள்ளிட்ட எல்லாப் பார்ப்பனர்களும் கட்டுப்பாடாக ஈ.வெ.ரா.வின் தீண்டாமை ஒழிப்புத் தீர்மானத்தை எதிர்த்தார்கள்.

“காங்கிரசுக் கட்சி அரசியல் கட்சி. இந்தத் தீர்மானம் மதம் சம்பந்தப்பட்டது. எனவே இதை நிறைவேற்ற முடியாது” என்று கூறித் தள்ளுபடி செய்தனர்.

அன்று இரவு காங்கிரசுப் பொதுக்கூட்டத்தில் திருப்பூரில் பேசிய பெரியார், “மனுநீதியும் இராமாயணமும் சாதியையும் தீண்டாமையையும் காப்பாற்றுவன. இவற்றைத் தீ வைத்து எரிக்க வேண்டும்” என்று கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

அன்று இரவு, ஒரே மகிழுந்தில் ஈ.வெ.ரா.வும், இராசாசியும் ஈரோட்டிற்குப் பயணம் செய்தார்கள். அப்பொழுது ஈ.வெ.ரா.வைப் பார்த்து இராசாசி “நாய்க்கரே! இன்றைக்கு திருப்பூரில் டோஸ் ரொம்ப ஸ்டிராங்க்” என்று குறிப்பிட்டார்.

ஈ.வெ.ரா. உடனே, “இந்த மடப் பசங்களுக்கு இதென்ன ஸ்டிராங்? இதைவிட இன்னும் ஸ்டிராங்கா வேண்டும்” என்று அமைதியாகப் பதில் சொன்னார்.

மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியார் அவர் களைப் போலவே வருணாசிரமத்தை ஒழிக்க வேண்டி மனுஸ்மிருதியை 1927இல் மகத் நகரில் தீ வைத்து எரித்தார்.

இரண்டு தலைவர்களும் சாகும் வரையில் பிறவி வருணம்-தீண்டாமை ஒழிப்புக்குப் பாடுபட்டார்கள்.

இந்துச் சட்டத்திலும், சாத்திரங்களிலும் வர்ணாசிரமத்துக்கும் தீண்டாமைக்கும் பாதுகாப்பு இருப்பதை இருவரும் மக்களுக்கு விளக்கிச் சொன்னார்கள்; எழுதினார்கள்.

அவரவர் போக்கில் இவற்றை நீக்குவதற்கு முயற்சி செய்தனர்.

மேதை அம்பேத்கர், 1947இல் அரசியல் நிர்ணய அவையில், இவற்றை அடியோடு நீக்குவதற்கு ஏற்ற தீர்மானங்களை இரண்டு தீர்மானங்கள் மூலம் “இந்துச் சட்டத்திருத்த மசோதா” என்ற பெயரில் பின்கண்ட வடிவில் முன்மொழிந்தார்.

அவையாவன (அ) “இந்துச் சட்டம் பற்றிய மூல பாடம், விதி, பொருள் விளக்கம் அல்லது இந்துச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னால் ஏற்கெனவே நடப்பில் இருந்த எந்தப் பழக்கச் சட்டமும் வழக்கச் சட்டமும் இந்தச் சட்டம் நடப்புக்கு வந்தவுடனே நீக்கப்பட்டு விடும். இந்தச் சட்டத்தில் சொல்லப்பட்ட எந்த ஒன்றும், உடனடியாக நடப்புக்கு வந்துவிடும்.”

(ஆ) “இந்தச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னால் இந்தச் சட்டத்திற்குப் பொருந்தாத தன்மையில் இதற்கு முன்னர் நடப்பிலிருந்த எந்தச் சட்டமும் உடனடியாக நீக்கப்பெற்று விடும்.”

இந்தச் சட்டத் திருத்தத்தை அம்பேத்கர் முன்மொழிந்த உடனேயே, அவைத் தலைவர் இராசேந்திர பிரசாத் வன்மையாக அவரை எதிர்த்தார்.

தந்தை பெரியார் இந்திய அரசமைப்புச் சட்ட விதிகள் 13(1), 372(1), 25 முதலானவை அரசமைப்புச் சட்டத் திலிருந்து அடியோடு நீக்கப்பட வேண்டுமென்று 3.11.1957இல் இந்திய அரசுக்குக் கோரிக்கை வைத் தார். அது பற்றித் தமிழ் மக்களுக்குத் தொடர்வண்டி மூலமும், சிற்றுந்து மூலமும் பரப்புரை செய்தார்.

மேலே கண்ட அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்ட 1949, நவம்பர் 26 அன்று மேலே கண்ட அரசமைப்புச் சட்டப் பகுதிகள் அச்சடிக்கப்பட்ட துண்டுத் தாள்களை, 26.11.1957இல் எரிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

கருஞ்சட்டைத் தோழர்கள் பத்தாயிரம் பேர் - ஆண்களும், பெண்களும், முதியோரும், இளையோரும் அரசியல் சட்டத்தாள்களைத் தீ வைத்து எரித்தனர். நானும் பெரம்பலூரில் எரித்தேன்.

என்னைப்போல் எரித்தவர்கள் மூவாயிரம் பேர் தண்டிக்கப்பட்டனர். ஒரு மாதம் முதல் ஒரு ஆண்டு, ஒன்றரை ஆண்டு, இரண்டு ஆண்டு, மூன்று ஆண்டு என்று கொடுந்தண்டனையை அனுபவித்தார்கள்.

இன்றும் அப்படித் தண்டனை அனுபவித்தவர்கள் உயிரோடு இருக்கிறார்கள்.

பெரியாருடைய தொண்டர்கள் மற்றும் பெரியாருடைய பெயரை உச்சரிக்கும் வாக்குவேட்டைக் கட்சிக்காரர்கள் பெரியாருடைய பெயரைச் சொல்லுவதோடு சரி. “அவருடைய இறுதிக் குறிக்கோளை நிறைவேற்றிட நாம் உருப்படியாக என்ன செய்தோம்? என்ன செய்ய முடியும்?” என்பவை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என எண்ணுகிறேன். நிற்க.

நான் இன்று உடல் தளர்ந்த நிலையில், ஓராண்டாக, என் மூத்த மகன் வீட்டில் தாம்பரத்தில் பாதுகாப்பாகத் தங்கியிருக்கிறேன்.

இனி, 2018 சூலையில் தொடங்கி, மாதந்தோறும் அறக்கட்டளை வளாகத்தில் 20ஆம் நாள் முதல் 10 நாள்கள் தங்கிட விரும்புகிறேன். அதுசமயம், மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை முழுவதும், இந்திய அரச மைப்புச் சட்டத்தில் உள்ள வருண உயர்வு தாழ்வு பாதுகாப்பு மற்றும் இந்துச் சட்டம் பாதுகாப்புப் பற்றி - மா.பெ.பொ.க. தோழர்கள் பெரியாரியலாளர்கள், மார்க் சியர்கள், அம்பேத்கரிய வாதிகள் திட்டமிட்டு நன்கு விரிவாக விவாதிக்க வேண்டுமென்று, 21.6.2018 அன்று முடிவு செய்தேன்.

இத்திட்டம் வெற்றியாக நிறைவேற மேலே கண்ட கொள்கைகளில் நாட்டமுள்ள எல்லா இளைஞர்களும், பட்டம் பெற்றவர்களும், இளம் வழக்குரைஞர்களும், அரசு-தனியார் துறை அலுவலர்களும் மற்றும் பெரியார்-நாகம்மை அறக்கட்டளையினரும் மனமுவந்து முன்வர வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

- வே. ஆனைமுத்து

Pin It