இந்தியா விடுதலை பெற்ற பிறகு முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1951இல் தொடங்கியது. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி (Growth with Social Justice) என்ற முழக்கத்தை வெளியிட்டார். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் (1951-56) வேளாண்மை வளர்ச்சி நீர்ப்பாசனம் கட்டமைப்புத் துறைகளுக்கு முதன்மை அளிக்கப்பட்டது. நேரு காலத்தில் அறிவிக்கப் பட்ட தொழில் கொள்கைகள் பெரும்பாலும் பொதுத் துறை வளர்ச்சியையும் அறிவியல் மேம்பாட்டினையும் வலியுறுத்தின. இதற்கென்று தனித்துறைகள் உரு வாக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

hdfc bankஐந்தாண்டுத் திட்டங்களில் கலப்புப் பொருளாதாரத்தின் வழியாக சோசலிச இலக்குகளை அடையமுடியும் என்று நேரு நம்பினார். பொதுத்துறை நிறுவனங்கள்தான் இதற்கு வழிவகுக்கும் என்றும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். இன்றளவும்கூட ஏறக்குறைய 200 பொதுத்துறை நிறுவனங்கள் உற்பத்தித் துறையில் சேவைத் துறையில், இயங்கி வருகின்றன. பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு, பொருளாதாரச் சுரண்டலின் உச்சத்தை பிரித்தானிய ஆட்சியில் கண்ட இந்தியா, எல்லாத் துறைகளிலும் பின்தங்கிய நிலையில் இருந்தது. இதை உணர்ந்துதான் நேரு சோவியத் ரஷ்யாவினுடைய திட்டமிடல் கொள்கையை இந்தியா வில் நடைமுறைப்படுத்தினார்.

இந்தியாவினுடைய பொருளாதார வளர்ச்சியையும் அதன் தாக்கத்தையும் அது மக்கள் மீது ஏற்படுத்திய விளைவுகளையும் ஆய்வு செய்து பல பொருளாதார வல்லுநர்கள் தங்களின் கருத்துகளை அண்மை காலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். 1950 தொடங்கி 1984ஆம் ஆண்டு வரை இந்தியாவினுடைய ஏற்றத்தாழ்வு குறைந்த நிலையில் இருந்தது என்பது தான் இந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்ட உண்மை யாகும். ஆனால் அன்றையப் பிரதமர் நரசிம்மராவும் அவருக்குத் துணைபுரிந்த நிதியமைச்சர் மன்மோகன் சிங்கும் 1991இல் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் ஆகிய பொருளாதார வழிகளைப் பின்பற்றி, நேரு கடைப்பிடித்த சமூக நீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியை அடியோடு சிதைத்தனர் என்றால் அது மிகையாகாது.

கடந்த 27 ஆண்டுகளாகக் காங்கிரசும் பாஜகவும் மாறி மாறி ஒன்றிய அரசில் ஆட்சியமைத்தன. ஆனால் பொருளாதாரக் கொள்கைகளில் துளியளவு மாற்றம் கூட ஏற்படவில்லை. எந்த உயரிய நோக்கத்திற்காக ஐந் தாண்டுத் திட்டக் காலங்களில் நேரு பல்வேறு சமூக, பொருளாதாரத் திட்டங்களைக் கட்டமைத்தாரோ அவையெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக இக்காலக் கட்டத்தில் சிதைக்கப்பட்டன. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முழுமையாக நாட்டினுடைய பொருளாதார வளங்களை அந்நிய நாடுகளுக்கு அடகு வைத்தார்கள். இதன் உச்சமாக 2018இல் உலக வர்த்தக மையம் (WTO) வலியுறுத்துகிற உலக வணிகம் தொடர்பான நெறிகள், விதிகள் முழுமையாகத் தோல்வியுற்றுள்ளன. சான்றாக வர்த்தகப் போரே இப்போது தொடங்கப்பட்டி ருக்கிறது. அமெரிக்காவிற்கு எதிராக சீனாவும், சீனாவிற்கு எதிராக இந்தியாவும், இந்தியாவிற்கு எதிராக அமெரிக்காவும் அமெரிக்காவிற்கு எதிராக இந்தியாவும் இந்த வர்த்தகச் சண்டையைத் தொடங்கிவிட்டன.

என்றும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியப் பணமதிப்பு 7.5 விழுக்காடு அளவிற்கு இந்த ஓராண்டிலேயே வீழ்ந்துள்ளது. சனவரி 2018இல் டாலருக்கான இந்திய பண மதிப்பு 63.4 ரூபாயாக இருந்தது. 24 மே 2018 அன்று இந்திய பண மதிப்பு 68.4 ரூபாயாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளின் பணத்தின் மதிப்பிற்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து வந்தாலும் டாலர் அளவிற்கு வீழ்ச்சி ஏற்படவில்லை. இந்தியாவினுடைய பெரும்பான்மை யான வர்த்தகமும் அதன் வெளிநாட்டுக் கடனும் டாலர் மதிப்பில்தான் கணக்கிடப்படுகின்றன. இதன் காரணமாக இந்தியாவினுடைய வர்த்தகத் துறையில், அதனுடைய நிதி பெருமளவிற்குச் சரிந்து வருகிறது. அதிக விலையில் பெட்ரோலியப் பொருட்களை வாங்க வேண்டிய கட்டா யத்திற்கும் உள்ளாகிறது. எனவே பணவீக்கம், பொரு ளாதார வளர்ச்சியில் தேக்கம், அந்நிய முதலீடுகளை உரிய முறையில் பயன்படுத்தாத நிலை போன்ற பொருளாதாரத்தை வீழ்த்தும் சக்திகளை எதிர்கொள்வ தற்கு கடந்த நான்காண்டுகளாக மோடி அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இந்தியப் பொரு ளாதாரத்தைச் சரிவுப் பாதையில் செலுத்திக்கொண்டிருக் கிறது.

மேற்குறிப்பிட்ட பேரியல் பொருளாதாரக் குறியீடுகள் (Macro Economic Indicators), நாடு சீரழிவுப் பாதையில் செல்கின்றது என்பதைத் தெளிவாகச் சுட்டுகின்றன. இந்திய வங்கித் துறையில், என்றும் காணாத அளவிற்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன. இந்த வராக்கடனை முதலாளிகளுக்கு ஆதரவாக வங்கிகள் இரண்டு லட்சம் கோடி அளவிற்குத் தள்ளுபடி செய்ததன் விளைவுகள் பொதுத் துறை வங்கிகளுடைய நம்பிக்கையைச் சிதைத்து வருகின்றன. பொருளாதார நிதி வங்கி நிறுவனங்களில் செயல்பட்ட நேர்மையான உயர் அலுவலர்கள் மனம் கொதித்து தங்களின் பதவிகளிலிருந்து விலகினர். சான்றாக மைய வங்கியுனுடைய தலைவராக இருந்த ரகுராம் ராஜன் ரூ.1000 ரூ.500 பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று வலியுறுத்தினார். மேலும் பெரும் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிடம் பெற்ற கடனைப் பெறுவதற்கு விரைவான ஆக்கப்பூர்வமான திட்டங்களை அளித்தார். ஆனால் இதற்கெல்லாம் செவி சாய்க்காமல் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதிலேயே மோடி தலைமையிலான அரசு அக்கறை காட்டியது. குஜராத்தைச் சேர்ந்த அம்பானி உறவினரான உர்ஜித் பட்டேல் மைய வங்கியின் ஆளுந ராக நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற பின்புதான் உயர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறு, குறு தொழில்களையும் சிறு விவசாயிகளையும் தற்கொலை செய்கின்ற அளவிற்குத் தள்ளி அவர்களின் வாழ்நிலை யையும் சீரழித்துவிட்டது. ஆனால் மைய வங்கி எதிர்பார்த்த கருப்பு பண நடவடிக்கை முழுத் தோல்வி அடைந்தது.

ஆனால் இந்தக் கறுப்புப் பண நடவடிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு பாஜகவிற்கு நிதி அளிக்கும் குஜராத் பெருமுதலாளிகள் பெரும் பயனடைந்தனர் என்ற செய்திகள் தற்போது வெளி வந்து கொண்டிருக்கின்றன. சான்றாக பாஜக தலைவரான அமித்ஷா தலைவராக இருந்து தற்போது இயக்குநராக உள்ள அகமதாபாத் மாவட்டக் கூட்டுறவு வங்கியில் 2016 நவம்பர் 9 முதல் 14 தேதி வரை செல்லாத தாள்களான ரூ.1000 ரூ.500 மட்டும் ரூ.745.9 கோடி அளவிற்கு டெபாசிட் செய்யப் பட்டது. ஆனால் 14ஆம் தேதிக்குப் பின் கூட்டுறவு வங்கியில் யாரும் பணமாற்றம் செய்யக்கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதற்கு உள்நோக்கம் இருப்பதாகத் தற்போது பலர் சந்தேகப்படுகின்றனர்.

குஜராத் மாநில முதல்வர் பாஜகவின் விஜய் ரூபானி அப்போது குஜராத் அரசின் கேபினட் அமைச்சராக இருந்தார். இதில் இவர் உட்பட பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் தொடர்புடைய ராஜ்கோட் மாவட்டக் கூட்டுறவு வங்கியில் ரூ.694 கோடி அளவிற்கு டெபாசிட் செய்யப்பட்டது. மேலும் 7 பொதுத் துறை வங்கிகள், 32 மாநிலக் கூட்டுறவு வங்கிகள், 370 மாவட்டக் கூட்டுறவு வங்கிகள் நாடு முழுவதும் 36க்கும் மேற்பட்ட அஞ்சல் நிலையங்களில் 7.9 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டன. இது மைய வங்கி கூறிய ஒட்டு மொத்த வைப்புத் தொகையான ரூ.15.82லட்சம் கோடியில் 52 விழுக் காடாகும். இவையெல்லாம் மும்பையைச் சேர்ந்த மனோ ரஞ்சன் ராய் என்கிற சமூக செயற்பாட்டாளர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக அண்மையில் பெற்ற புள்ளிவிவரங்களாகும்.

மோடி அறிவித்த வரிச் சீர்த்திருத்தம் என்ற அடிப்படையில் சரக்கு-சேவை வரி (GST) வழியாக மாநிலங்களின் நிதியியல் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டன. ஏற்கெனவே எல்லை மீறிய அளவில் ஒன்றிய அரசில் குவிந்து வரும் அதிகாரங்கள் பல குழப்பங்களையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் ஊழல்களையும் திறமையின் மையையும் பெருக்கியுள்ளன என்பதற்கு பணமதிப் பிழப்பு நடவடிக்கையே ஒரு சான்றாக உள்ளது. சரக்கு-சேவை வரியின் வழியாக எல்லா மாநிலங் களிலும் தொழில்களில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல கோடி இளைஞர்கள் வேலையிழந் துள்ளனர்.

நரேந்திர மோடி ஆண்டிற்கு ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று உறுதியளித்து 2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் புள்ளிவிவர ஆய்வுகளின்படி, கடந்த நான்காண்டுகளில் ஆண்டிற்கு இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகள், அளிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2014இல் இருந்து 3.41 விழுக்காடு வேலையில்லாத வர்கள் எண்ணிக்கை அதிகரித்து 2018இல் 6.23 விழுக்காடாக உள்ளது. உலகத் தொழிலாளர் அமைப்பு 15 வயதிற்கு மேற்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பெரிய அளவில் குறையும் நிலை உள்ளது என்றும் சுட்டுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் ஆண்டிற்கு 80 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்கிறது.

வேளாண் தொழில் இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டு மொத்த உற்பத்தியில் குறைந்து காணப்பட்டாலும், 60 விழுக்காட்டு மக்களுக்கு மேல் வேளாண் தொழிலைச் சார்ந்தே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் என்பதைப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பாஜக தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உற்பத்திச் செலவிற்கு மேலாக 50 விழுக்காடு இலாபத்தைப் பெற்றுத் தருவோம் என்று கூறியது. ஆனால் சராசரியான வேளாண் வளர்ச்சி 2010-14இல் 5.2 விழுக்காடாக இருந்தது, 2014-18ஆம் ஆண்டுகளில் 2.4 விழுக்காடாக குறைந்துள்ளது. இதன் காரணமாக உத்திரப்பிரதேசத்திலும் மகாராஷ்`ட்ராவிலும் விவசாயிகள் இலட்சக்கணக்கில் திரண்டு அரசின் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று கூறிய பிறகு இந்த இரு மாநில அரசுகளும் விவசாயிகள் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்ய முன் வந்துள்ளன. ஆனால் உர்ஜித் பட்டேல் இது ஏற்கெனவே நட்டத்தில் இயங்கி வரும் வங்கித் துறைக்குப் பெரும் சோதனையாக முடியும் என்று குறிப்பிடுகிறார். இதையெல்லாம் மறைப்பதற்கு 2020-21 ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று 2018 ஜூன் திங்களில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி வெற்று முழக்கமிடுகிறார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஓர் அதிர்ச்சித் தகவல் வெளி வருகிறது. ஒன்றிய அரசின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் தனது பதவியை ராஜிநாமா செய்தார் என்பதாகும். சமூக வலைத்தளங்களில் அவரது ராஜிநாமா கடிதத்தின்படி வெளிவந்துள்ளது. அவர் கூற்றின்படி ஆலோசகரின் நல்ல ஆக்கப்பூர்வமான கருத்துகளை மோடி அரசு ஏற்கவில்லை என்பது சுட்டப்பட்டுள்ளது. அன்று ரகுராம் ராஜன்-இன்று அரவிந்த் சுப்ரமணியம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்பதையும் இக்கடிதம் குறிப்பிடுகிறது. மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி பல ஆயிரம் கோடிகள் குறைக்கப்பட்டதன் காரணமாக ஊர்ப்புறங்களில் வாழும் ஏழைகளின் வாழ்வில் பெரும் இருள் சூழ்ந்துள்ளது.

கல்வி, பொதுச் சுகாதாரம் ஆகிய துறைகளிலும் ஒன்றிய அரசு தேவையின்றிக் குழப்பத்தை விளைவித்து வருகிறது. மருத்துவத் துறையில் தமிழ்நாட்டினு டைய தேர்வு முறை ஏழை ஊர்ப்புற மக்களுக்கு உதவிடும் வகையில் இருந்த நிலையை மாற்றி நீட் தேர்வின் வழியாக இடஒதுக்கீட்டையும் சமூக நீதியையும் மோடி அரசு திட்டமிட்டே சீரழித்துள்ளது. அண்மையில் வெளி வந்த உலகப் பொதுச் சுகாதார ஆய்வறிக்கையின் படி ஒரு இலட்சம் மக்களுக்கு 8000 மருத்துவர்கள் கிபூபாவில் உள்ளனர். எனவே மருத்துவ சேவை வழங்குவதில் உலகில் முதல் நிலையில் கியுபா உள்ளது. ஆனால் மக்கள் தொகையில் 131 கோடியை எட்டியுள்ள இந்தியாவில் ஒரு இலட்சம் மக்களுக்கு 670 மருத்துவர் கள்கூட இல்லாத சூழல் உள்ளது. விதிவிலக்காக நல்ல மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பால் பல குழப்பங்கள் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ளன. இதற்கெல்லாம் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க தவறிய பிரதமர் உலக நாடுகளுக்கு அடிக்கடி சென்று வெறும் வெற்று முழக்கமிடுகிறார்.

மக்களாட்சியின் நான்காம் தூணாக ஊடகத் துறை இயங்கி வருகிறது. இந்த ஊடகத் துறையிலும் ஒன்றிய அரசு, தனக்குச் சாதகமான செய்திகளை, வெளியிடும் ஊடகங்களைப் போற்றுவதும் நடுநிலையோடு நேர்மை யான முறையில் அரசைப் பற்றிய செய்திகளையும், விமர்சனங்களை வெளியிடும் ஊடகங்களுக்குப் பெரும் அச்சுறுத்தல்களும் தொல்லைகளும் தரப்படுகின்றன என்பதைப் பாம்பு ஆய்வறிக்கை (cobra post) வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் அரசுக்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் ஆளும் கட்சியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு செய்திகளைச் சில அச்சு-ஒளி ஊடகங்கள் வெளியிடுகின்றன என்ப தையும் இந்த ஆய்வு நிறுவனம் மெய்ப்பித்துள்ளது. அதன் காரணமாகத்தான் உலக ஊடக சுதந்தரக் குறியீட்டில் (World Press Index) 136ஆம் இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. 2017இல் மட்டும் 12 பத்திரிக்கையாளர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கொல்லப்பட்டுள்ளனர். உலகைச் சுற்றி வரும் மோடி, இதுவரை இந்தியப் பத்திரிக்கையாளர்களைப் பொதுவெளியில் சந்திக்கவே இல்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

பொருளாதார வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமையும், சமூக அமைதியும் பெரும் பங்கினை வகிக்கின்றன. கடந்த நான்காண்டுகளாக இந்துத்துவா அமைப்புகள் வெளிப் படையாகவும் மறைமுகமாகவும் இசுலாமியர், கிறித்தவர் போன்ற சிறுபான்மையினரையும், ஒடுக்கப்பட்ட சமுதாயமான தலித்துகளையும் அடித்து உதைத்து, கொன்று அது தங்களின் சாதனை என்று கூறி வரு கின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை மீறல் அறிக்கையில் காஷ்மீர் உட்பட பல மாநிலங்களில் மனித உரிமை மீறல்கள் தொடர் நிகழ்வுகளாகிவிட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சான்றாக, தூத்துக்குடியில் நடந்த படுகொலைகள் ஒன்றிய அரசினுடைய தூண்டு தலில்தான் நடந்தது என்பதைப் பல மக்கள் ஆய்வுக் குழுக்களின் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

பெங்களுரில் படுகொலை செய்யப்பட்ட சமூகப் போராளி கவுரி லங்கேஷைக் கொலை செய்தது ராம் சேனா என்ற இந்து அமைப்பு என்று பெங்களுர் காவல் துறை அறிக்கை சுட்டுகிறது. இதே முறையைப் பின் பற்றித்தான் நரேந்தர தபோல்கரையும் சுட்டு வீழ்த்தினார்கள் என்ற செய்திகளும் வருகின்றன. ஒன்றிய அரசின் துணையோடு இந்தப் பயங்கரவாதச் செயல்களைத் திசை திருப்புவதற்காக அடிக்கடி பாஜகவின் தலைவர்கள், நாட்டிற்குத் தீவிரவாதிகளால் ஆபத்து வருகிறது என்ற பொய்ச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். மோடியின் நான்காண்டு ஆட்சிகளில் ஏழை மிகவும் ஏழையாகவும் பணக்காரன் பெரும் பணக்கார னாகவும் மாறி வருகிறார்கள். வரிக் கட்டாதவர்கள், வங்கிக் கடனைப் பல ஆயிரம் கோடி திருப்பிச் செலுத்தாதவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்கையில் அரசு அதிகாரிகள் கண்டும் காணமால் இருந்து வருகின்றனர் என்ற குற்றச் சாட்டும் எழுப்பப்படுகிறது. இந்த நான்காண்டுகளில்தான் பல ஆயிரம் கோடி வரை ஏமாற்றிய மல்லையா முதல் நீரவ் மோடி வரை வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றதுதான் மோடி அரசின் உச்ச சாதனையாகும்.

மேற்கூறிய தரவுகள் இந்தியாவை, கடந்த நான்காண்டுகளில் மோடியின் நிர்வாகமும் அணுகுமுறையும் இந்தியாவின் மக்களாட்சி முறையையும் அரசமைப்பு முறையையும் நீதித் துறை அமைப்பையும் சீரழித்து வருகின்றன என்பதற்குச் சில சான்றுகளாகும்.

Pin It