கி.பி. 1695ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டில், ஜேக்கப் ஆம்மான் என்பவர் கிருத்துவ மதத்தில் ஒரு புதிய பிரிவைத் தேற்றுவித்தார். அவரைப் பின்பற்றியவர்கள் (ஆம்மான் என்ற பெயரை ஒட்டி) ஆமிஷ்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் 18ஆம் நூற்றாண்டில் போர், பஞ்சம், வேலை தேடுதல் போன்ற பல காரணங்களை முன்னிட்டு, அமெரிக்காவில் உள்ள பென்சில் வேனியா மாநிலத்தில் குடியேறினர். இவர்கள் பேசும் மொழி பென்சில்வேனியாடச்சு மொழி என்றும், பென்சில் வேனியா ஜெர்மன் மொழி என்றும் அழைக்கப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் பென்சில்வேனியா மாநிலத்தில் குடியேறிய இவர்கள் தொடர்ந்து அங்கேயே வசித்து வருகிறார்கள்.

இந்த மதப் பிரிவினருடைய முதன்மையான கொள்கை என்னவென்றால், விவிலியத்தில் (பைபிளில்) கூறப்பட்டுள்ளவற்றை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பதும், அதில் கூறப்படாத எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதும் தான். ஆகவே இவர்கள் விவிலியத்தில் கூறப்படாத புதுமைகளை, அறிவியல் வளர்ச்சிகளை, மின்சாரத்தை, கன்னெய் (பெட்ரேல்) வாகனங்களை இன்னும் பலவற்றை ஏற்றுக் கொள்வது இல்லை. சமையலுக்கு விறகுகளைப் பயன்படுத்துகின்றனர். பயணத்திற்குக் குதிரை வண்டிகளையும், இரவில் எண்ணெய் விளக்குகளையுமே பயன்படுத்துகின்றனர். இதனால் இவர்கள் மற்ற சமூக மக்களிடம் இருந்து விலகித் தனிமைப்பட்டு வாழ்கின்றனர்.

இவர்கள் அறிவியல் புதுமைகளை ஏற்காததால், இச்சமூகத்தில் குழந்தை மரணம் அதிகமாக உள்ளது. ஆனால் இவர்கள் விவிலியத்தில் "பலுகிப் பெருகுங்கள்" என்று கூறி உள்ளபடி, அதிகக் குழந்தைகள் (ஒவ்வொரு பெண்ணும் 6-7 குழந்தைகள் வரை) பெற்றுக் கொள்வதால் இவர்களது மக்கள் தொகை கூடிக் கொண்டு இருக்கிறது. 1920ஆம் ஆண்டில் 5,000 ஆக இருந்த இவர்களுடைய மக்கள் தொகை, படிப்படியாக உயர்ந்து 2016ஆம் ஆண்டில் 3,08,030 ஆக உயர்ந்து உள்ளது.

இவர்கள் பொதுவாக, இவர்களே நடத்தும் பள்ளிகளில் 8வது வகுப்பு வரை மட்டுமே படிக்கிறார்கள். வாழ்க்கை வாழ்வதற்கு இப்படிப்பே போதும் என்று நினைக்கின்றனர். 16வது வயதில் விவசாயம், குதிரை வளர்த்தல், தச்சுப் பட்டறை, இரும்புப் பட்டறை போன்ற தொழில் கல்வியைக் கற்கின்றனர்.

பள்ளிக்கூடம், விவசாயப் பண்ணை

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் 25 வயதிற்குள் திருச்சபையில் ஞானஸ்நானம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் செய்து கொள்வதற்கு ஞானஸ் நானம் செய்து கொண்டு இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

சமூகக் கட்டுப்பாடுகளை மீறி நடப்பவர்கள் சமூகத்தை விட்டு விலக்கி வைக்கப்படுவதுடன், ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவார்கள். இச்சமூகச் சூழலில் வளர்ந்தவர்கள் வெளியே சென்று வாழ்வது சிரமம் என்பதால் சமூகக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மிக மிக அரிதே.

அறிவியல் வளர்ச்சியின் நலன்களை நுகர்ந்த மக்கள், ஆமிஷ் மதப் பிரிவில் இணைவார்கள் என்பதை எண்ணிப் பார்ப்பதே கடினம். ஆனால் இவர்களுடைய வாழ்க்கை முறையில் மன அமைதி கிடைக்கிறது என்று கூறி 1950ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 75 பேர்கள் இம்மதப் பிரிவில் இணைந்து உள்ளனர், இவர் களுள் 1990ஆம் ஆண்டில் இணைந்த 20 இரஷ்யர் களும் அடங்குவர். சோவியத் ஒன்றியம் சிதைந்த பின், அங்கு நிலவிய அமைதி இன்மையில் இருந்து தப்பிக்க, அவர்கள் இவ்வழியைத் தேடினார்கள் போலும்.

இவர்களுடைய மக்கள் தொகை மிகக் குறைவாக இருப்பதால், இரத்த உறவுள்ள உறவினர்களையே திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. இதனால் உடல் நலமும், மனநலமும் குன்றிய குழந்தைகள் பிறக் கின்றன. இரத்த உறவு இல்லாதவர்களைத் திருமணம் செய்து கொள்வதால் நற்பயன்கள் விளைகின்றன என்பதை இவர்கள் தெரிந்து கொண்டு இருந்தாலும், தங்கள் மதப் பிரிவையும், சமூகக் கட்டுப்பாடுகளையும் காப்பாற்றும் பொருட்டு வெளியாரைத் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

இவர்களது வாழ்க்கை முறையைப் பார்க்கச் சுற்றுலாப் பயணிகள் இவர்கள் வாழும் பகுதிக்குச் செல்வது உண்டு. அண்மைக் காலமாக, இச்சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உணவு விடுதிகளை நடத்து கின்றனர். இங்கும் இவர்கள் புதுமையைத் தவிர்க் கின்றனர்; அவர்களுடைய பாரம்பரிய உணவுகளை மட்டுமே பரிமாறுகின்றனர். ஆனால் எந்த வகையிலும் தாங்கள் வாழும் பகுதியில் பிறரை ஆக்கிரமிக்க விடுவது இல்லை. இச்சமூக மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் போதும் குதிரை வண்டிகளிலேயே செல்வதால், பேக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.

இதனால் மற்ற மக்களின் வெறுப்புக்கு உள்ளாகின்றனர். அது மட்டும் அல்லாமல் இவர்கள் வாழும் முறையினால் அரசுக்கு எந்த வரியும் செலுத்தாமல் இருக்க முடிகிறது. ஆனால் நாட்டில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் இவர்களுக்கும் சேர்த்துத் தான் வடிவமைக்கப்படுகின்றன. இதுவும் மற்ற மக்கள் இவர்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. இருந்தாலும், இவர்களால் பென்சில்வேனியா மாநிலத்தின், அமெரிக்க நாட்டின் சமூக இயக்கத்திற்கு இடையூறு ஏதும் இல்லை என்று கூறி, இவர்களுடைய வாழ்க்கை முறையில் அரசுகள் குறுக்கிடுவது இல்லை. ஆகவே இம்மக்கள் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கையைத் தொடர முடிகிறது.

போக்குவரத்துக்கு இடைஞ்சலாகக் குதிரை வண்டியில் பயணித்தல்

ஆனால் நம் நாட்டில் வாழும் பழங்குடி மக்களைப் பாருங்கள். அவர்கள் ஆமிஷ் சமூகத்தவரைப் போல நாட்டின் பிற பகுதி மக்களுடன் ஒத்துழைக்க மறுப்பது இல்லை. அது மட்டும் அல்ல; தேன், மூலிகைகள் போன்ற காட்டு விளைபெருட்களை நம் பயன்பாட்டிற்காக அளித்தும் வருகின்றனர். தங்கள் வாழிடங்களையும், வாழ்வாதாரங்களையும் பாதிக்காத பட்சத்தில், பிற பகுதி மக்களுக்கு மனமுவந்து உதவி செய்ய ஆயத்தமாக உள்ளனர்.

ஆனால் நாம் இவர்களை எப்படி நடத்துகிறோம்? உலகின் மிக மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு அவசியத் தேவையாக இல்லாத, ஒரு சிலரின் ஆடம்பர வாழ்வுக்குத் தேவைப்படும் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக, கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கு, இந்நாட்டின் மண்ணின் மைந்தர்களை அவர்களுடைய வாழிடங்களில் இருந்து துரத்துகிறோம். அவர்களுடைய வாழ்வாதாரங்களைப் பறித்து, வாழ வழி இல்லாமல் செய்து, அவர்களை அழித்து ஒழித்து வருகிறேம்.

இத்திருப்பணியை நாம் செய்யவில்லையா? பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, இந்திய அரசு தான் செய்கிறதா? அது சரி! இந்திய அரசைத் தேர்தல் மூலம் நாம் தானே தேர்ந் தெடுத்தோம்? அது மட்டுமா? இந்திய அரசு எடுக்கும் நட வடிக்கைகள் எதையும் நாம் எதிர்த்து நிறுத்துவதே இல்லையே? அப்படி இருக்கும் போது பழங்குடி மக்களின் வாழ்வாதரரங்களைப் பறித்து, அவர்களுடைய வாழிடங்களில் இருந்து துரத்துவது நாம் தான் என்ற மன உறுத்தலும் ஏற்படவில்லையே? ஏன்?

Pin It