சமூக மாற்றத்திற்கும் ஆக்கத்திற்கும் தந்தை பெரியாரின் 70 ஆண்டு காலப் பணிகள் ஈடு இணையற்றவையாகும். பெரியாரின் சமூக அரசியல் கணிப்புகள், அவரின் பட்டறிவு, பகுத்தறிவு போன்ற விழுமியங்கள் இன்று பெரிதும் போற்றப்படுகின்றன; ஆய்வுக்கு உட் படுத்தப்படுகின்றன.

20ஆம் நூற்றாண்டில் ஆசிய ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் போர்கள் உச்சத்திற்குச் சென்றன. 1940க்குப் பிறகு பல நாடுகள் காலனி ஆதிக் கத்திலிருந்து விடுதலை பெற்றன. இந்த விடுதலைப் போராட்டங்களை வழி நடத்திய பல தலைவர்களின் எண்ணங்கள் 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு  அறிமுகப் படுத்தப்பட்ட தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமய மாக்கல் நடவடிக்கைகளாலும், அதனை ஒட்டிய அரசியல் மாற்றங்களாலும் பல பின்னடைவுகளைச் சந்தித்தன, சந்தித்தும் வருகின்றன.

இச்சூழலில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் கருத்தாழமிக்க சிந்தனைகள் இன்றளவும் இந்தியத் துணைக் கண்டத்திற்குத் தேவைப்படுகிற அளவிற்குத் தனித்தன் மையோடு விளங்குகின்றன. பொருளாதாரச் சரிவுகளுக்கு இடையில் மத-சமூக ஆதிக்கப் பிற்போக்குச் சக்திகள் இன்று செல்வாக்குப் பெற்று வருவதற்கு இந்த இரு சிந்தனையாளர்களின் கருத்துகள் சரியான தீர்வாக அமைகின்றன.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்கு அளப்பரியதாகும். காங்கிரசு இயக்கத்தில் அவர் பங்கு கொண்டபோது மிகத் தீவிரமான கருத்து களை விடுதலை இயக்கம் தொடர்பாக முன்வைத்தார். காந்தியின் வழியை ஏற்றுக்கொண்டு மதுவிலக்கு, கதர் பரப்புரை, விற்பனை ஆகிய தளங்களில்-முனைப்போடு தொண்டுகள் பல புரிந்தார்.

அண்மையில் பெரியார் விடுதலைக் களத்தில் ஆற்றிய பணிகள் தொடர்பாகப் பல புதிய செய்திகள்  வெளிவந்துள்ளன.  இந்தியாவின் சீர்த்திருத்தச் செம்மல் என்ற புகழப்படுகிற இராஜராம் மோகன் ராய் தனது அண்ணன் மறைந்த போது அவரது அண்ணியை உடன்கட்டை ஏறுவதற்கு வலியுறுத்திய தைச் சகிக்க முடியாமல் பழமைவாத இந்துத்துவத்தை ஏற்க மறுத்தார்.

தான் பிறந்த குலின் பார்ப்பன (Kul Orahmbs)) சமூகத்தில் 10 வயது 15 வயதில் பெண்களுக்கு மணம் முடிப்பதையும், ஆண்கள் 3 அல்லது 4 முறை திருமணம் செய்து கொள்வதையும் கண்டு கொதித்தார். பெண்கள் இழிந்த மிருகங்களாக நடத்தப்படுவதையும் அறிந்த ராய், சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலி யுறுத்தினார். தனது இறுதிக் காலத்தில் மொகலாய மன்னரால் இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டார்.

மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மன்னர் மானியத்தை 30 ஆயிரம் பவுண்ட் அளவிற்கு கிழக்கிந்தியக் குழுமம் உயர்த்தித் தர வேண்டும் என்று ஆதரவு திரட்டினார். அந்நேரத்தில், இங்கிலாந்தில் 1833 செப்டம்பர் 27இல் ராய் மறைந்தார் என்று வரலாற்று ஆய்வாளர் ராமச் சந்திர குகா “புதிய இந்தியாவின் சிற்பிகள்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இதே நூலில்தான் பெரியாரின் தன்னலமற்ற சமூகச் சீர்த்திருத்தப் பணிகளையும் பொதுத் தொண்டினையும் ஆய்வு நோக்கோடு தனிக்கட்டுரையாக குகா வெளியிட்டுள்ளார்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின்  பேராசிரி யரும் ஆய்வாளருமான பெர்னார்ட் பாட் (Oerbard Oate),), இந்திய  மொழிகளில் சுருக்கெழுத்து (SHrt abd) வளர்ச்சியையும் வரலாற்றையும் ஆய்வு செய்துள்ளார். தமிழில் சுருக்கெழுத்து 1920இல் தான் தொடங்கியது. ஆங்கிலத்தில் பிட்மென் சுருக்கெழுத்தின் அடிப்படையில் தமிழ் மொழியின் எழுத்துகளும் சுருக்கெழுத்துக்களாக  மாற்றப்பட்டன.

இம்முயற்சியில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய சிலரும் மற்ற சில ஆய்வாளர் களும் சுருக்கெழுத்து உருவாவதற்குத் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனர். பிரித்தானிய ஏகாதிபத் தியம் மாநிலங்களின் மொழிகளில் அரசியல் தலைவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கண்காணிப்பதற்காக, காவல் துறையின் உளவுப் பிரிவில் சுருக்கெழுத்தர்களை நியமித்தனர். இன்றைய சுருக்கெழுத்து, பல காலக் கட்டங்களில் செம்மைப்படுத்தப்பட்டு இன்று செய்தி ஊடகத் துறை களுக்கும் பயனளித்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள உத்தமபாளை யத்தில் 1924ஆம் ஆண்டில்  பெரியார் ஆற்றிய உரை தான்  தமிழ்நாட்டில் முதன்முதலில் சுருக்கெழுத்தில் எழுதப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டது. இதுதான் பிற்காலத்தில் விரிவாக்கம் அடைந்த சுருக்கெழுத்து முறைக்கு முன்னோடியாகவும் தரம் உயர்த்தப்பட்ட முறையாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டது. 60 பக்கங்களில் அவ்வுரை இடம் பெற்றுள்ளது.

மேலும் சுதேசி இயக்கத்தின் கொள்கையை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் வகையில் அமைந்தது என்று ஆய்வாளர் சுட்டியுள்ளார்.  தந்தை பெரியாரின் பேச்சைக் கேட்பதற்கு சாதாரண நெசவுத் தொழிலாளர்கள் மற்ற தொழிலா ளர்கள் அனைவரும் பெரும் கூட்டமாகப் பங்கேற்றனர். முகமது ராவுத்தர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது  என்று  காவல் துறையின் இரகசியக் குறிப்பேட்டில் இடம் பெற்றுள்ளது. 

இத்தகைய ஈடுபாட்டோடு இருந்த காங்கிரசு இயக்கத்தை விட்டுப் பெரியார் விலகுவதற்கு சமூக நீதி, சமூகச் சீர்த்திருத்தம் ஆகியனவே முதன்மையான காரணங்களாக அமைந்தன. சான்றாக 1927ஆம் ஆண்டு காந்தியுடன் பெங்களுர் மாநகரில் பெரியார் சந்திப்பு மேற்கூறிய கருத்தியலை உறுதி செய்கின்றது. அச்சந்திப்பின் உரையாடலில்

பெரியார்     :           இந்து மதம் ஒழிந்தாக வேண்டும்.

காந்தியார்  :           ஏன்?

பெரியார்     :           இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை.

காந்தியார்  :           இருக்கிறதே!

பெரியார்     :           இருக்கிறதாகப் பார்ப்பனர் கற்பித்து அதை மக்கள் மனத்தில் அப்படி நினைக்கும்படிச் செய்திருக் கிறார்கள்.

காந்தியார்  :           எல்லா மதங்களும் அப்படித்தாமே?

பெரியார்     :           அப்படி அல்ல மற்ற மதங்களுக்குச் சரித்திர         சம்பந்தமான  ஆதாரங்களும் மதக்காரர் கள் எல்லோ ராலும் ஒப்புக் கொள்ளக்கூடிய கொள்கைகளும் உண்டு.

காந்தியார்  :           இந்து மதத்துக்கு அப்படி ஒன்றும் இல்லையா?

பெரியார் : என்ன இருக்கிறது? ஒருவன் பிராமணன்; ஒருவன் சூத்திரன்; ஒருவன் பஞ்சமன் என்கிற இந்த பேதப் பிரிவுத் தன்மையல் லாமல், வேறு என்ன பொதுக் கொள்கைகள். பொது ஆதாரங்கள் இருக்கின்றன? அதுவும் பிராமணன் உயர்ந்தவன்-சூத்திரன், பஞ்சமன் தாழ்ந்தவன் என்கிற தன்மை, நடப்புத் தவிர வேறு என்ன இருக்கிறது?........

காந்தியார்  :           நீங்கள் சொல்வது எல்லாம் சரி. அதாவது இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. உண்மைதான் நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்குக் குறிப்பிட்ட கொள்கை இல்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆத லால்தான் நாம் ஒரு இந்துமதவாதி என் பதை ஒப்புக் கொண்டு நம் இஷ்டம் போல் அதற்குக் கொள்கை ஏற்படுத்திக் கொள்ளலாம்.......

இந்துமதம் என்பது இல்லாத மதம் ஆனதால், அந்த மதத்தின் பெயரால்  யாரும் மகான்களாக ஆகி எதையும் சொல்லலாம். அப்படியே இந்து மதத்தில் ஏற்பட்ட பல பெரியோர்கள் மகான்கள் பலவற்றைச் சொல்லியிருக்கிறார்கள். ஆதலால் நாமும் அந்த மதத்தை  வைத்துக் கொண்டே அநேக சீர்திருத்தங்களை இந்தக் கால மனித வர்க்கத் தேவைக்கு ஏற்றபடி செய்யலாம்.

பெரியார்     :           மன்னிக்க வேண்டும் - அதுதான் முடியாது.

காந்தியார்  :           ஏன்?

பெரியார்     :           இந்து மதத்தில் உள்ள சுயநலக் கும்பல் அதற்குச் சற்றும் இடம் கொடுக்காது.

காந்தியார் :           ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? இந்து மதத் தில் தீண்டாமை இல்லை என்று சொல் வதை இந்து மதத்தினர் யாவரும் ஒப்புக் கொள்ளவில்லையா?

பெரியார்     :           ஒப்புக்கொள்வது என்பது ஒன்று; ஒப்புக் கொண்டபடி நடப்பது என்பது வேறு. ஆகை யால் இது காரியத்தில் நடக்காது.

காந்தியார் :           நான் காரியத்தில் செய்கிறேன். இந்த 4, 5 வருடங்களில் எவ்வளவு மாறுதல்கள் ஏற்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வில்லையா?

பெரியார்     :           உணருகிறேன். அடிப்படையில் மாறவில்லை. தங்களுக்கு உள்ள செல்வாக்கைக் கண்டும் தாங்கள் அவர்களுக்கு வேண்டியிருக்கின்ற சுயநலத்திற்கு ஆகவும் ஒப்புக்கொண்டதாக நடிக்கிறார்கள். அதைத்தான் தாங்கள் நம்புகிறீர்கள்.

காந்தியார்  :           (சிரித்துக்கொண்டே) யார் அப்படி நடிக்கிறார்கள்?

பெரியார்     :           பார்ப்பனர்கள் யாவரும்தான்.

காந்தியார் :           எல்லாப் பார்ப்பனருமா?

பெரியார்     :           ஆம். ஏன் தங்கள் கூட இருக்கும் பார்ப்பனர் கள் எல்லோரும்தான்

காந்தியார்  :           அப்படியானால் உங்களுக்கு ஒரு பார்ப்ப னரிடம் கூட நம்பிக்கை இல்லையா?

பெரியார்     :           நம்பிக்கை ஏற்படமாட்டேன் என்கிறது.

காந்தியார் :           இராசகோபாலாச்சாரியாரிடம் கூட உங் களுக்கு நம்பிக்கை இல்லையா?

பெரியார்     :           அவர் நல்லவர்; உண்மையானவர்; தியாகி; சுயநலமில்லாதவர். ஆனால் இவையெல் லாம் அவர்களது வகுப்பு நலனுக்கு அவர் உண்மையான தொண்டர்; நல்ல தியாகி; அத்தொண்டில் சுயநலமில்லாதவர். ஆனால் என் வகுப்பு நலத்தை அவரிடம் ஒப்படைத்து விடச் சுலபத்தில் எனக்கு மனம் வராது.

காந்தியார் :           உங்கள் கருத்து என்ன? இந்து மதம் ஒழிய வேண்டும்-பிராமணர்கள் ஒழிய வேண்டும், என்று நான் கருதலாமா?

பெரியார்     :           இந்துமதம் அதாவது இல்லாத பொய் யான இந்து மதம் ஒழிந்தால்தான் பிராமணன் இருக்க மாட்டான். இந்து மதம் இருப்பதால் பிராமணன் இருக் கிறான். நானும் தாங்களும் சூத்திரர் களாக இருக்கிறோம். எல்லாவித ஆதிக்கமும் பிராமணர்கள் கையில் இருக்கிறது.

இந்தச் சந்திப்பில்தான் - பெரியார் காந்தியிடம், இந்து மதத்தில் மாத்திரம்தான் பார்ப்பனர்களே யாவரும் இன்டலிஜன்சியாவாக படித்தவர்களாக இருக்கிறார்கள்.  மற்றவர்கள் அநேகமாக  100க்கு  90க்கு மேற்பட்ட மக்கள் படியாதவர்களாக-ஏமாளி களாக  இருக்கிறார்கள். ஆகவே  ஒரு சமுதாயத்தில் ஒரு சாதி மாத்திரமே இன்டலிஜன்சியாவாக, ஆதிக்க-காரர்களாக இருக்க முடியும் என்றால், அந்த மதம் அந்தச் சாதி தவிர்த்து மற்ற சாதியாருக்குக் கேடான தல்லவா? என்று தெளிவாகச் சுட்டினார்.

2014இல் மோடி அரசு அமைந்த பிறகு எடுக்கப்படும் எல்லாவித மதம் சார்ந்த, சமஸ்கிருத-இந்தி மொழிகள் திணிப்பு நடவடிக்கைகளும், சமூகநீதிக் கொள்கையில் வெற்றி பெற்று வருகிற மாநிலங்களில் கல்வியின் அடிப் படையைத் தகர்க்கும்  முயற்சிகளும்; உயர்நீதி, உச்ச நீதி மன்ற அமைப்பு முறைகளும், உயர்சாதியினருக்கு ஆதரவாக அளிக்கப்படுகின்ற தீர்ப்புகளும் பெரியாரின் கருத்து இன்றும் நாட்டிற்குத் தேவைப்படுகிறது என்பதைப் பறைசாற்றுகின்றன.

தந்தை பெரியாருக்குத் தனிமனிதர்கள் அல்லது சில கட்சிகளுடைய தலைவர்கள் முதன்மையானவர்கள் அல்ல. வாழ்நாள் முழுவதும் அவர் வலியுறுத்திய கொள்கைகளுக்குக் கேடு வரும் போது, அதை எதிர்க்கின்ற வலிமையும் துணிவும் பெரியாரின் ஆளுமையின் தனிப்பண்பாகும்.

1952இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தேர்தலில் பெரியார் ஆதரித்தார். அதன் காரணமாகப் பெருமளவில் பொதுவுடைமைக் கட்சியினர் வெற்றி பெற்றார்கள். 1952இல் இராஜாஜி சென்னை மாகாண முதல்வரானார். 1952 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக் கட்சிக்குப் பெரும்பான்மையான இடங்கள் கிடைக்காத சூழலில், இராஜாஜியைச் சென்னை மாகாண முதல்வர் ஆக்கினர். அப்போது பெரியார் முதல்வர் இராஜாஜிக்குத் தனது ஆதரவினை அளித்து, அதற்கான பின்வரும் விளக்கங்களையும்  அளித்துள்ளார்.

“உங்களுக்குத் தெரியும் - நண்பர் ஆச்சாரியார் பதவிக்கு வந்ததும் நான் அவரைப் பாராட்டினேன்.  மற்றவர்களைவிட ஆச்சாரி யார் எவ்வளவோ மேல் என்று பேசினேன். கம்யுனிஸ்ட் காரர்களைவிட  ஆச்சாரியார் பரவாயில்லை என்று எழுதி னேன்.  அவரை ஆதரித்தேன்; தோழர் ஜீவானந்தமும் ராமமூர்த்தியும்  மக்களிடம்; இப்போது ஆச்சாரியார் மட்டு மல்ல. நாட்டை ஆள்வது. ஆச்சாரியாரும் இராமசாமியும் பேசிக் கொண்டு இந்நாட்டை ஆள்கிறார்கள். அதற்குக் காரணம்

1. கண்ட்ரோலை (Control) எடுத்தார்.

2. கைத்தறிப் பிரச்சினையில் சில நன்மைகளைச் செய்தார்.

3. தஞ்சையில் பண்ணையார் பாதுகாப்புச்சட்டம் கொண்டு வந்தார். நாம் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டியதில்லை. திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரை சட்டசபைக்குப் போவதில்லை; மந்திரியாக முயல்வதில்லை; தேர்தலில் நிற்பதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். யார் வந்தாலும் நமக்கான காரியங்களைச் செய்யும்படிப் பார்த்துக் கொண்டாலே போதும்.

இராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை 1953இல் அறிமுகப்படுத்தியபோது அவருக்கு எதிராகப் பெரும்களம் அமைத்தார். தமிழ் மாகாண காங்கிரசுக் கட்சியின் தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராசர் குலக் கல்வித் திட்டத்தைப் பெரியார் வழியைப் பின்பற்றி எதிர்த்தார்.

பெருந்தலைவர் காமராசர் அவரது ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்காகச் செய்த சாதனைகள் அளப்பரியன. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் ஒரு பெரும் புரட்சியே நடைபெற்றது எனலாம். அது போன்று மதிய உணவுத் திட்டம் வெற்றி பெறப் பெருந்தலைவர் காமராசர் காட்டிய ஈடுபாட்டினைக் கல்வி நெறிக் காலவர் நெ.து.சுந்தரவடி வேலு தனது நினைவலைகள் நூலில் சுட்டியுள்ளார்.

ஆரம்பக் கல்வியும் மதிய உணவுத் திட்டமும் அரசிய லுக்கு அப்பாற்பட்டு ஒரு மக்கள் இயக்கமாக வளர்ந்தன. சான்றாக 1.11.1957இல் மதிய உணவுத் திட்டம் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் அறிஞர் அண்ணாவை நெ.து.சுந்தரவடிவேலு அழைத் தார். தன்னுடைய பெயரை அழைப்பிதழில் போட வேண்டாம், நான் விழாவில் கலந்து கொள்வேன் என்று அண்ணா குறிப்பிட்டார்.

நெ.து.சு வியப்படையும் அளவிற்கு அறிஞர் அண்ணா விழா மேடைக்கு வருகிறார். அண்ணா வாழ்நாளில் ஆற்றிய சிறிய உரை என்ற தலைப் பில், நெ.து.சு. அந்நூலில்-“படிக்கும் ஏழைச் சிறுவர்களைக் காப்பது சமுதாயத்தின் பொறுப்பு. நான் சட்டமன்ற உறுப்பினராகிவிட்டதால்  அதற்காக ரூபாய் நூற்றைம்பது கிடைக்கிறது. அதில் மாதம் ரூ.50ஐ பகல் உணவுத்திட்டத் திற்கு என் பங்காகச் செலுத்துவேன். உங்களைப் பாராட்டிப் பேசினால் பல இடங்களில் அழுக்காறு அலைகளை எழுப்பும்-உங்களுக்குத் தொல்லை கொடுக்கும் என்பதால் என் பெயரைப் போடவேண்டாமென்று சொன்னேன்” என அண்ணா பேசினார்.

தலைவர்கள் என்னை இமை யெனக்காத்த பாங்கினை எண்ணி எண்ணிப் பரவசமடை கிறேன். காரணம் அண்ணா கலந்து கொண்ட நிகழ்ச்சி யைப் பற்றிக் காமராசரிடம் சென்று சிலர் கூறியபோதுகூட, பெருந்தலைவர் காமராசரும் கல்வி அமைச்சர் சி.சுப்ர மணியமும், சுந்தரவடிவேலு செய்ததில் தவறு ஒன்றும் இல்லை என்று பாதுகாத்ததாக நெ.து.சு. இந்நுலில் குறிப்பிடுகிறார்.

பெருந்தலைவர் காமராசர், பக்தவத்சலம், அறிஞர் அண்ணா ஆகியோரிடம் நேர்முக உதவியாளராக இருந்த மறைந்த சாமிநாதன் எழுதிய மூன்று முதல்வர்களுடன் என்ற நூலில் இது போன்ற மற்றொரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுள்ளார்.

1967 சூலை 14ஆம் நாள் இரவு முதல்வர் அண்ணா விடம் கோப்புகளில் கையொப்பம் வாங்கி முடித்த பிறகு திரு.சாமிநாதன்- நாளை நான் விடுப்பில் செல்கிறேன். தலைவர் காமராசரின் பிறந்தநாளில் கடந்த பத்தாண்டுகளாக, காலையில் முதலில் என் குடும்பத்தோடு சென்று இனிப்புகளை வழங்கி வாழ்த்துச் சொல்வது எனது கடமை யாகக் கொண்டிருக்கிறேன்.

பெருந்தலைவர் காமராசரை அவரது பிறந்தநாளில் காணவில்லை என்றால் எனது மனது துயருறும் என்று கூற, அறிஞர் அண்ணா பெருந் தலைவர் காமராசருக்கு எனது வாழ்த்தினைச் சொல்லுங்கள்-ஏதாவது செய்தி இருந்தால் கேட்டு வாருங்கள் என்று குறிப்பிட்டார்.

மறுநாள் சூலை 15இல் பெருந்தலைவரின் இல்லத் திற்கு காலையில் திரு.சாமிநாதன் குடும்பத்துடன் காலை 5.30 மணிக்குச் சென்றபோது, காமராசர் ஏன் வந்தாய்? முதலமைச்சரின் அலுவலகத்தில் பணியாற்றுகிற நீ விடுப்பு எடுத்துக் கொண்டு வருவது உனது பணிக்கு ஆபத்து வந்துவிடாதா? என்று கேட்டுள்ளார். அதற்கு முதல்வர் அண்ணாதான் ஒரு நாள் பணிவிடுப்பு எடுத்து அவருடன் இருந்து வா என்று என்னை அனுப்பினார் என்று கூறினார்.

மேலும் தலைவர் காமராசரிடம் ஏதாவது எனக்குச் செய்தி இருந்தாலும் கேட்டு வா என்றும் கூறி அனுப்பினார் எனக் கூறினேன். இதைக் கேட்டு மகிழ்ந்த காமராசர், நான் விடைபெறும்போது, சென்னை காவல் ஆணையர் மிகவும் நேர்மையானவர்; சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் வல்லவர். அவரை மாற்ற வேண்டாம் என்று நினைக்கிறேன். இதை அண்ணாவிடம் கூற முடியுமா என்றார் காமராசர்.

மறுநாள் முதல்வர் அண்ணாவை நான் சந்தித்தபோது, மேற்கண்ட நிகழ்வு களைக் குறிப்பிட்டேன். அப்போது அண்ணா காமராசர் விரும்பியபடியே காவல் ஆணையர் தொடர்வார். இந்த முடிவை நான் முன்பே எடுத்து விட்டேன். எனினும் இதை காமராசரிடம் கூறிவிடு என அண்ணா பேசினார் என்று குறிப்பிட்டு-நான் முதல்வராக உள்ளவரை, நீ என் உதவியாளராகத் தொடர்வாய் என்று குறிப்பிட்டதை, சாமிநாதன் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

அரசியலில் காமரசாசரும் அண்ணாவும் பின்பற்றிய மாண்புகளும் தகைமைகளும் இன்று எந்த நிலையில் தாழ்ந்துள்ளன என்பதைக் கவலையோடு நோக்க வேண்டியுள்ளது.

இது போன்று, பெருந்தலைவர் காமராசர், அவரை எதிர்த்து 1967சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கண்ட பெ.சீனுவாசன் திருமணத்திற்கு முன்னதாகவே சென்று விட்டுக் காத்திருந்தார். திருமணம் முடிகிற வரை விழா மேடையில் அமர்ந்து மகிழ்வோடு தனது வாழ்த்து களைத் தெரிவித்தார்.

மேலும் 17-9-1967இல் திருச்சியில் நடைபெற்ற தந்தை  சிலை திறப்பு-பிறந்தநாள் விழாவில் அறிஞர் அண்ணா முற்பகலில் பங்கு பெற்றார்.  பெருந்தலைவர் காமராசர் பிற்பகலில் பெரியாரின் சிலையைத் திறந்து வைத்தார். இது போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் காமராசருக்கும் பெரியாருக்கும் இருந்த கொள்கை உறவை எடுத்தியம்புகின்றன. தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சி திராவிட இயக்கத்தின் மறுபதிப்பாகவே இருந்தது என்று கூறப்படும் கருத்து மிகைப்படுத்தப்பட்டதல்ல.

பெரியாரும் காமரசாரும் இறுதிநாள்கள் வரை எளிமை யான-எடுத்துக்காட்டான முறையில் வாழ்ந்தார்கள். இந்த இருவரும் விதைத்த சமூக நீதிக் கொள்கை இன்று நடுவண்அரசின் பணிகளிலும் உயர் கல்விகளிலும்  பல இடர்களுக்கு இடையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரு கின்றது. இதன் காரணமாகத்தான் யூனியன் வங்கியின் உயர் அலுவலர்களாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை நன்கு உணர்ந்துள்ளீர்கள்.

தமிழ்நாட்டில் பெரியார் காமராசர் பின்பற்றிய நெறிகளை-இடஒதுக்கீட்டுக் கொள்கையின் தேவையை அடுத்த தலைமுறைக்கும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

(யூனியன் வங்கிப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த அலுவலர்களுக்கான  10.7.2016 அன்று மாமல்லபுரத் தில் நடை பெற்ற சமூக நீதி விழாவில் ஆற்றிய உரை யின் சுருக்கம்)

Pin It