நாம் கீழே வெளியிட்டிருப்பது கலைஞரின் உரை. தமிழின உணர்வோடு இந்திய ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் போர் முழக்கம். 1985 ஆம் ஆண்டு எதிர்கட்சியில் இருந்த கலைஞர் காங்கிரஸ் ஆட்சியை நோக்கி வைத்த கேள்விகள். தி.மு.க. தலைமைக் கழகமே, “தமிழனுக்கு ஒரு நாடு; தமிழ் ஈழ நாடு” என்ற தலைப்பில் இந்த உரையை நூலாக வெளியிட்டுள்ளது. ஒருமைப்பாட்டுக்கு எதிராக, கலைஞர் பேசியதில் கால்பங்கு கூட பேசாத சீமானை, கொளத்தூர் மணியை அதே கலைஞர் சிறைப்படுத்தியிருக்கிறார். அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். - கலைஞர் மீது இந்த உரைகளுக்காக எந்த வழக்கையும் போடவில்லை.

என்னிடத்திலே ஒரு துண்டு அறிக்கை தரப்பட்டது. தூத்துக்குடி தெர்மல் நகர் விடுதலைப் புலிகள் தோழமைக் கழகத்தின் சார்பிலே வெளியிடப்பட்ட அறிக்கை. அதில் சில விவரங்கள்:

இலங்கையில் தமிழன் எத்தனை ஆண்டுக்காலம் பூர்வீகமாக வாழ்ந்தான் - ஆண்டான் என்பதும், அதற்குப் பிறகு கி.மு.543-ல் வட இந்தியாவிலிருந்து விஜயன் தலைமையிலே சிங்களவன் வந்து - குடியேறி னான் என்பதும், கொஞ்சம் கொஞ்சமாக தமிழனுடைய ஆட்சி வீழ்த்தப்பட்டது என்பதும், ஆண்டுக் கணக்கு விவரத்தோடு அதிலே வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படி வெளியிடப்பட்ட அதில், அங்கே சிங்கள ஆட்சி, உதயமான பிறகு - தமிழனுடைய ஆட்சி தோற் கடிக்கப்பட்ட பிறகு - இலங்கையில் தமிழர்களுக்கு இன்னல்கள் விளைவிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்திலே உள்ள மன்னர்கள் படையெடுத்துச் சென்று தமிழர்களைக் காப்பாற்றினார்கள் என்ற விவரங்கள் அதில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

கி.பி. 100 முதல் 200 வரையுள்ள காலகட்டத்திலே இலங்கையிலே தமிழர்கள் பாதிக்கப்பட்ட போது கரிகாலன் என்கின்ற தமிழ் மன்னன் படையெடுத்துச் சென்று தமிழர்களைக் காப்பாற்றினான். கி.பி.590-600 இந்தக் காலகட்டத்தில் சிம்ம விஷ்ணு என்ற தமிழ் நாட்டை ஆண்ட மன்னன் இலங்கைக்குச் சென்று அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு அளித்திருக்கின்றான். கி.பி.645-ல் நரசிம்மவர்மன் என்ற மன்னன் தமிழகத்திலே இருந்து படையை அனுப்பி அங்கே பாதிக்கப்பட்ட தமிழர்களைக் காப்பாற்றி இருக்கிறான்.

கி.பி. 835-ல் பாண்டியன் சிரீமாற சீவல்லபன் என்ற மன்னன் படையை அனுப்பி அங்கே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கின்றான்.

கி.பி. 907-947 இந்தக் காலகட்டத்தில் பாரந்தகச் சோழன் தன்னுடைய படையை அனுப்பி இலங்கையிலே பாதிக்கப்பட்ட தமிழினத்தைக் காப்பாற்றியிருக்கின்றான்.

கி.பி.960-ல் சுந்தரச் சோழன் படையை அனுப்பி இலங்கையிலே சிங்களவர்களால் பாதிக்கப்பட்ட தமிழினத்தைக் காப்பாற்றி மீட்டுக் கொடுத்திருக்கின்றான்.

கி.பி.993-ல் இராசராச சோழன் படையை அனுப்பி இலங்கையிலே பாதிக்கப்பட்ட தமிழனைக் காப்பாற்றியிருக்கிறான். மீண்டும் கி.பி.1017-ல் இராசேந்திர சோழன் படையை அனுப்பி இலங்கையிலே பாதிக்கப்பட்ட தமிழர்களைக் காப்பாற்றியிருக்கிறான்.

கி.பி. 1055-ல் இரண்டாம் இராசேந்திர சோழன் படையை அனுப்பி விஜயபாகுவின் கொட்டத்தை அடக்கி இலங்கையிலே உள்ள தமிழர்களைப் பாதுகாத்திருக்கிறான்.

இப்படி வரிசையாகப் பார்த்தால், இலங்கைத் தமிழனுக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் தமிழ்நாட்டுப் படைதான் இலங்கைக்குச் சென்று தமிழர்களைக் காப்பாற்றியிருக்கிறது. இப்போது நாம் பைத்தியக்காரத்தனமாக வடநாட்டுப் படையை எதிர்பார்த்தால் வருமா? எனவேதான் வரலாற்றினுடைய குறிப்பின்படி - சரித்திரத்தினுடைய தொடர்பின்படி பார்த்தால்கூட, இலங்கையிலே இன்றைக்குப் பாதிக்கப்படுகின்ற தமிழனைக் காப்பாற்றுகின்ற பெரும் பொறுப்பு இங்கே உள்ள ஐந்துகோடித் தமிழர்களுக்குத் தான் இருக்கும். ஐந்து கோடித் தமிழர்களில் சில பேருக்கு இல்லை. நான் ஒத்துக் கொள்கிறேன்.

தமிழீழத்தை ஒத்துக் கொள்ளாத - இலங்கையிலே தனித்தமிழ்நாட்டை ஒத்துக் கொள்ளாத சில சோற்றாலடித்த பிண்டங்களும் தமிழ்நாட்டிலே இருக்கிறார்கள்.

Pin It