பொதுப் பணித்தளத்தில் களப்பணி மேற்கொண்டு வரும் தோழர்கள் விடுதியொன்றில் இரவைக் கழித்து விட்டு பணியைத் தொடர காலை புறப்பட்டுக் கொண்டி ருந்தனர். ஒருவர் புறப்படலாம், விரைவில் குளித்து விட்டு வாருங்கள் என்றார். குளியலறையிலிருந்து நான் 100 குவளை நீர் ஊற்றிக் கொண்டுதான் குளிப்பை முடிப்பேன்; சற்று பொறுங்கள் என்றார் மற்றொருவர்.
இப்படியும் ஒரு குளியலா! என வியந்து கொண்டே எப்போது குளிப்பை முடித்து வருவாரோ என்ற எண் ணத்துடன் காத்திருந்தார். அப்போது இன்னொருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. நாலைந்து வாளித் தண்ணீர் குளிப்பேன் என்றார். இத்தன்மையிலே ஓர் ஒன்றிய அரசு உயர்நிலைப் பணியாளர் தன் தோப்பி லுள்ள தென்னைகளுக்கு நாளொன்றுக்கு 200 லிட்டர் வீதம் நீர்ப் பாய்ச்சி விவசாயம் செய்கிறேன் என்று தன் உயர் வாழ்நிலையைப் பீற்றிக் கொள்ளும் வகையில் சொன்னதையும் நினைவு கொண்டார்.
காலை சிற்றுண்டிக்குப் புறப்பட்டனர்; வெளியில் வந்தனர். மின்விசிறி ஓடிக்கொண்டிருந்ததையும் விளக்கு எரிந்து கொண்டிருந்ததையும் நினைவுகூர்ந்து அவர் அவற்றை அமர்த்திவிட்டு வந்துவிடாலாமென அறைக்குத் திரும்பினார். நண்பர், சற்று நேரத்தில்தான் திரும்ப வந்துவிடு வோமே, இருந்துவிட்டுப் போகட்டும்; வந்து அமர்த்திக் கொள்ளலாமென்றார். உணவகம் வந்தனர். இருப்பினும் உண்ணும் போதே அறையில் மின்சாரம் வீணாகிக் கொண்டிருந்ததை நினைத்துக் கொண்டா ரெனினும் சற்று நேரத்தில் மறந்துவிட்டார்.
சிற்றுண்டி முடித்து பக்கத்துத் தெருவில் உள்ள நண்பரைப் பார்த்துவிட்டு அறை திரும்பலாமென்று அவர் இல்லம் சென்றனர். பேச்சு வளர்ந்தது; அவரையும் அழைத்துக் கொண்டு இன்னும் சில நண்பர்களைப் பார்க்கச் சென்று, அடுத்த பணிகள் குறித்து விவாதித்து முடித்தனர். பின் மதிய உணவுக்கு உணவு விடுதிக்கு வந்தனர். கைகழுவுமிடத்தில் பெரும்பாலோர் குழாயை முழுதும் திறந்துவிட்டு தண்ணீர் சொளசொளவெனக் கொட்டக் கொட்ட பிறருடன் பேசிக் கொண்டே கைகழுவி விட்டுச் செல்வது போன்றே நண்பரும் செய்தார்.
தண்ணீர் வீணாக்கப்படுவதைத் தவிர்க்க அவர் நண்பர் சொன்னதை நினைவு கூர்ந்தார். வீட்டில் தட்டில் சாப்பிட்டு முடிக்கும் போது குடிக்கும் தண்ணீரைத் தட்டில் ஊற்றி நன்கு கழுவி அந்தத் தண்ணீரைக் குடித்துக் கொள்ள வேண்டும். மேலும் தண்ணீர் குடிக்கும் போது வாய் நிறைய நிரப்பிக் கொண்டு நன்கு கொப் பளித்து வாய் முழுமையையும் சுத்தம் செய்து கொண்டு அதைக் கீழே துப்பாமல் அப்படியே விழுங்கிவிட வேண்டும். பின் சாப்பிட்ட தட்டைக் கொஞ்சமாக வேறு தண்ணீர் ஊற்றி கழுவி வைத்துவிட்டுத் திரும்பவும் அத்தட்டை உணவுக்குப் பயன்படுத்தும் முன் நன்கு துலக்கிச் சாப் பிட்டுக் கொள்ளலாம் என்றாராம். கோடை காலத்தில் உள்ளோம். நீர்த் தேவைக்கு மக்கள், குறிப்பாகச் சென்னை மக்கள் இன்னலுறும் நிலை நினைவில் நிழலாடுகிறது.
உணவு இலைகளில் பரிமாறப்பட்டது. நண்பர் இனிப்பு, உருளைக்கிழங்கு, அப்பளம் ஆகியவற்றைச் சாப்பி டாமல் விட்டுவிட்டு இலையில் நிறையச் சோற்றையும் விட்டு விட்டு உணவுப் பணியை முடித்துக் கொண்டார். உணவுப் பொருள் வீணாவதைக் கவனித்தவாறே அவரின் இன்னொரு நண்பர் சாப்பிட்டதை நினைவு கூர்ந்தார் . சில ஆண்டுகளுக்குமுன் குறளகம் எதிரி லுள்ள விடுதியொன்றில் நண்பர் சாப்பிட்டுக் கொண்டி ருந்த போது, அருகில் அமர்ந்து உணவு உண்டவர் உருளைக்கிழங்கைத் தொடாமல் அப்படியே விட்டுவிட்டு சாப்பாட்டை முடிக்க முற்பட்ட போது, இவர் ‘நான் அந்த உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்வேன்’ என அவர் இலையிலிருந்து எடுத்துக் கொண்டாராம்.
அந்த மனிதர் பதறியிருக்கிறார். வீணாக வேண்டாமே என்றுதான் என்று இவர் சொல்ல, கைகழுவி வெளியில் செல்லும் வரை இவரை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாராம்.
மாலை அறை திரும்பினர். விளக்கு எரிந்து கொண் டிருக்க, மின்விசிறி ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்து, மின்சாரம் வீணாகிவிட்டதே எனத் துணுக்குற்றார். நண்பர் பொருட்படுத்தவே இல்லை.
நிகழ்வு நிழலாடட்டும்; நிலைப்பாட்டுக்கு வருவோம்.
தோழர்களே, மேற்சொன்னது போன்ற நிகழ்வுகள் நீக்கமற நிறைந்து காணப்படும் சூழல்களைக் கண் ணுறுகிறோம். இவற்றைப் பற்றிக் கவலையுடன் சிந்தித்துப் பார்க்கின்றோமா? அதன் தொடர்ச்சியாகச் சரியான நிலைப்பாடு எடுத்து அதன்படி செயல்பட முற்படுகிறோமா? பெரும்பாலும் இல்லை என்ற விடை தான் கிடைக்கும்.
இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் மண், கால அளவைக் கணக்கிட முடியாத நம் முன்னோர்களால் நம் நல வாழ்வுக்காக விட்டுச் செல்லப்பட்டதுதான். அதே தன்மையில் நம் வழித்தோன்றல் சமூகத்திற்கு நல்லுலகை விட்டுச் செல்வது நம் பொறுப்பும் கடமை யும் ஆகும் என்பதில் இருவேறு நிலைப்பாடு இருக்க முடியாது. அத்தன்மையில் நீர், நிலம், வளி, வெளி, ஒளி ஆகியவற்றின் கூட்டான இப்பேரண்டத்தை வளமுள்ளதாக விட்டுச் செல்ல வேண்டும். இங்கு சொல்லப்பட்ட நிகழ்வு நீரை முதன்மையாகக் கொண்ட தாகக் கொள்ளப்பட்டுள்ளது.
இங்கு பல தர, வகை கொண்ட மக்கள் சமூகத்தில் குறிப்பாக நம் நாட்டில், தமிழகத்தில் பொதுவெளியின் சிந்தனையுடையோர், அதையொட்டி இயங்குவோர், இவற்றின் சுவடே பதிவில்லாது வாழ்வோர் எனத் தொகுக்கலாம். இதில் கடைநிலையில் உள்ளோர் மூன்றாம் வகையினர். அவர்கள் மேல் விமர்சனப் பார்வை வைக்கத் தக்கவர்கள் அல்லர். அது அவர் களின் தவறல்ல. அவர்கள் நிலையை பொதுவெளிக்கு உயர்த்திக் கொண்டு வராமல் விடப்பட்டுள்ளது. அரசின், சமூகத்தின் போதாமைதான், கவலை இல்லாத போக்கு தான் எனச் சொல்லலாம். சரி, முதல் இரண்டு வகையினருள் சிந்தனையுடையாரை விமர்ச்சிக்கலாம். விளைவு ஏதும் கிட்டுமா என்பது கேள்விக்குறி. ஆனால் நடுவில் வரும் தொகுப்பைத்தான் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
பொதுவெளியின் இயங்குவோர் செயல்பாட்டாளர்கள் சமூகத்தின் நல்வாழ்வுக்கு வழிகாட்டும் தன்மையர் எனலாம். ஆனால், சமூகம் எப்படி விழிப்புணர்வோடு உள்வாங்கும் என்பதை அளவிட்டுச் சொல்ல முடியுமா என்பது அய்யம்.
உயிரினம், குறிப்பாக மனித இனம் முன்காட்டைப் பெருமளவுக்குப் பின்பற்றும் இயற்கை இயல்பைக் கொண்டது என அறிவோம். அத்தன்மையில்தான் தனி யொருவரின் குறிப்பாகப் பொதுவெளியில் அவரைப் பொறுத்தமட்டிலான பொதுநலம் சார்ந்த செயல்பாடுகள், பிறரால் பின்பற்றத்தக்கவையாக அமைய வேண்டும் என்பதுடன் இது அவர்கள் மனம்கொள்ளத்தக்க கருத்தியல் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் இக்கட்டுரை இவ்வாறாக நகர்கிறது.
ஆனால் இவ்வகையினர் தன்னைச் சார்ந்தவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள், கொள்கைக் கூட்டாளிகள், ஆதரவாளர்கள் என்ற தளத்தில் தாக்கம் விளைவிக்க வேண்டியவர்கள் ஆவர். விளைவு விளையுமா என்பதும் வினாவிற்குரியது. அதே நேரத்தில் அவர் தன்னந்தனி மனிதனாக சமூகப் பொறுப்புடையவராகத் தன் செயல் பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
நீர்ச் சிறப்பையும் மேன்மையையும் உணர்ந்து, அதன் பாதுகாப்பை ஓம்புவராகச் செயல்பட வேண்டும். இது ஒரு அரிய ஆற்றல். இவ் ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது என்ற தத்துவ வரையறையை வைத்துக் கொண்டு, அதனை எப்படிப் பயன்படுத்தி னாலும் சரிதான் என வறட்டுத்தனமான நிலைபாட்டை கொள்ளக்கூடாது. மாறாக, நீர்ப் பாதுகாப்பு மேலாண்மையைத் தன்னளவில் தன் வாழ்வில், செயலில் எவ்வாறு கடைபிடிக்க வேண்டுமென்பதை மெய்ப்பித்துக் காண்பிக்க வேண்டும்.
குளிப்பது என்பது அன்றாடத் தேவையான ஒன்றாகிவிட்டது. அதற்கென எவ்வளவு நீர் தேவை என முறையான வரையறை ஏதுமில்லை. அது வாழும் நிலத்தின் தட்பவெப்பத் தன்மை சார்ந்த ஒன்றுதான். இருப்பினும் ஒரு சராசரியான சிக்கனமான அளவை வகுத்துக் கொண்டவராகச் செயல்பட வேண்டும். தேவையை அளவுடன் கணிப்பதற்கு முதலில் பயன் படுத்தும் குவளை சிறிய அளவுடையதாக ஒரு லிட்டர் கொள்ளளவுக்குக் குறைவாகத்தான் இருக்க வேண்டும். எந்தெந்த நிலையில் குறைவாக எந்தெந்த அளவு நீர் பயன்படுத்தப்பட வேண்டுமென்ற வரையறை வேண்டும். மொத்த உயர் அளவு 10 லிட்டருக்குள்ளாக இருத்தல் வேண்டுமெனக் கருதலாம்.
ஆனால் இவையெல்லாம் மேற்சொன்ன மூன்று பிரிவினராலும் கடைப்பிடிக்கப்படுவதற்கு முதன்மை யாக, கல்வியின் உள்ளீடாக வடித்து அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக மழலையர் மனதில் பதிய வைக்கும் வகையில் மழலையர் கல்வியின் உள்ளீடாக ஆக்கப்பட வேண்டும். இருப்பினும் இவ்வாறான பதிவே செயல்பாடாக மாறுவதற்கே குறைந்த அளவு மூன்று தலைமுறைகளாவது ஆகும் என்பதுதான் உலக அளவிலான ஆய்வின் நிலைகளன். பொது நலன் நிலையில் நீர்ப் பாதுகாப்பு மேலாண்மை, வேளாண்மைக்கானதாகவும், பொது மருத்துவம் சார்ந்த பயன்பாடுகளுக்காகவும், பொதுத் தூய்மை பேணுவ தற்கானதாகவும் போன்றவற்றிற்கான தேவையை நிறைவு செய்வதற்காக இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் புரிதல்கள் இளம் தளிர் மனங்களில் பதிக்கப்படவும் நிலைக்கவும் தக்க எளிய வகையில் பாடத் திட்டங்கள் வகுத்தெடுத்து, பயிற்றுவிக்கப்பட ஆவனவெல்லாம் செய்திடல் வேண்டும்.
பாடத்திட்டம் மழலையருக்கு என்பதில் ஆசிரியர்களின் பங்குதான் மிக, மிக முதன்மையானதாகும். எனவே மிகப் பெருமளவுக்குக் கவலையுடன் ஆசிரியர் கள் உள்வாங்கிக் கொள்ளும்படியும், அவற்றை மழலையர்கள், மாணவர்களிடம் படிய வைக்கும் பொறுப் பையும் உணர்ந்தவர்களாக உணர்த்தப்பட்டு உயர்த் தப்பட வேண்டும்.
மக்கள் நாயக அமைப்பில் மேல்தட்டில் உள்ளோர் கடைப்பிடிக்கும் நற்குணங்கள், நற்செயல்கள் ஏனை யோருக்கு முன்காட்டாக அமையலாம் என்பதுடன் கல்வியின் உள்ளீடு (கல்வி என்றாலே தாய்மொழி வழிக் கல்விதான்) கற்பிப்போரின் கரிசனத்துடனான கற்பிக்கும் முறை என்பவை பொதுச் சமூகம் மேம்பட வழிகோலும்.
நற்கல்விதான், நாட்டின் வளர்ச்சியை மட்டும் அல்ல, மக்கள் மேம்பாட்டை நாட்டின் மேம்பாட்டை எட்டுவதற்கு ஏற்ற வழி. இதற்கு இங்குள்ள ஒன்றிய அரசு, மாநில அரசுகள் ஆவன செய்யுமா? செய்ய வைக்க வேண்டும். இடையூறுகள் பலப்பல எழத்தான் செய்யும். அவற்றை உடைத்து ஒட்டுமொத்தச் சமூக விடுதலை யையும் ஒருமித்த மேம்பாட்டையும் முகிழ்ந்திடச் செய்வது சம உடைமை அரசு, பின் பொதுவுடைமை அரசு. இறுதியில் பொதுவுடைமைச் சமூகம்தான்.