ஈரோடு நகர்மன்றத் தலைவராக இருந்த தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் குடிநீர்க்குழாயின் மூலம் வழங்க வீட்டிற்கு ஒரு குடிநீர்க் குழாய்த் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக ஈரோட்டில் செயல்படுத்தினார். 26.05.1919-இல் ஒவ்வொரு வீட்டிற்கும் இரும்புக் குழாய் மூலம் தடையில்லாக் குடிநீரை வழங்கினார். இந்தத் தொலைநோக்குத் திட்டத்தால் பயன்பெற்ற ஈரோட்டு மக்கள், நூற்றாண்டு நிறைவையொட்டி ஈரோடு வ.உ.சி பூங்காவில் கூடி, தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தினார்கள்.

தந்தை பெரியார் அவர்களிடம் தொலைநோக்குப் பார்வை இருந்தது. ஆனால் 2019-இல் தமிழகத்தை ஆட்சி செய்பவர்களிடம் இருப்பதோ தொலைவில் இருக்கும் டில்லியை நோக்கிய பார்வை.

chennai water crisis 600“தண்ணீர்... தண்ணீர்...” என்கிற வார்த்தைகளே எல்லோர் உதடுகளிலும் ஊறுகின்றன. வறண்ட ஏரிகளின் புகைப்டங்களே நாளிதழ்களில் அச்சேறுகின்றன.

மழைப் பொய்த்துவிட்டது என்று பொதுவாகச் சொல்லுவார்கள். இல்லை. ஆட்சியாளர்களே இங்கு பொய்த்துவிட்டார்கள் என்பதை மழை மெய்ப்பித்துவிட்டது.

தண்ணீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் தவிக்கிறார்கள். இவர்கள் கட்சித் தலைமைக்குத் தவிக்கிறார்கள். இவர்களுக்கும் மேலே இருப்பவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் இந்தியைத் திணிக்கிறார்கள். யாகம் நடத்தினால் மழை வரும் என்று சொன்னதைப் போல, இந்தி பேசினால் தண்ணீர்த் தாகம் தீர்ந்துவிடும் என்று கூடச் சொல்வார்கள்.

மக்களவையில் எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள் காவிரி உரிமை பற்றிப் பேசுகிறார், கர்நாடகாவைச் சேர்ந்தவர் உடனே எழுந்து ஏசுகிறார். எங்கள் உரிமையைக் கேட்பதற்குக் கூட வாயைத் திறக்கக் கூடாது என்று சொல்பவர்கள் எப்படித் தண்ணீரைத் திறந்து விடுவார்கள்?

தண்ணீர்ப் பிரச்சினை இந்தியா முழுதும் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு “ஒரே நாடு ஒரே தேர்தல்” பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு தண்ணீர்த் தாகம். மத்தியில் இருப்போர்க்கு அதிகார தாகம்!

இந்த ஒரு மாதத்தில் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க ஆலோசனை வழங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். சமூக ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என எல்லாவற்றிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு பற்றியும், தண்ணீர் மேலாண்மை பற்றியும் அறிஞர்கள், வல்லுநர்கள் பல ஆலோசனைகளை வழங்கினார்கள். இவற்றையெல்லாம் முறையாகத் தொகுத்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைச்சர்கள், ‘தண்ணீர்த் தட்டுப்பாடு என்பது வதந்தி’ என்று சொன்னால், ஆடு மாடுகளுக்குக் கூட ஆத்திரம் வரும்.

பணம் படைத்தவர்கள் எல்லாம் தண்ணீர் விலையை உயர்த்தினார்க்ள். எளிய மக்கள்தான் வெயிலின் தாக்கத்தால் உலர்ந்துபோனார்கள். இருக்கிற தண்ணீரைக் கூட இந்த அரசால் அனைத்துத் தரப்பினருக்கும் சரியாகப் பகிர்து கொடுக்க முடியவில்லை. முடியவில்லை என்பதைவிட எந்த முயற்சியும் செய்யவில்லை.

அரசு தனது கடமையைச் சரியாகச் செய்திருந்தால் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்காது என்பது அனைத்துத் தரப்பினருடைய கருத்து. கடமையில் மட்டும் தவறவில்லை, அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என அனைத்திலுமே தவறிவிட்டது அதிமுக அரசு.                                •

Pin It