வறட்டுத்தன மாய்இங்கே நாத்தி கத்தை

வளர்த்திட்டாய் என்றுசிலர் குற்றம் சொல்வார்

முரட்டுத்தன மாய்க்கடவுள் மறுத்தாய் என்றும்

முணுமுணுப்பார் உள்ளுக்குள்; ஆனால் நீயோ

திருட்டுத்தனம் மிக்க பார்ப்ப னீயத்

தீமைகளை, சாதியத்தை எரித்தாய் என்றே

அருட்தந்தை போல்உன்னைத் தமிழ கத்தின்

அடித்தட்டு மக்களெலாம் வணக்கம் செய்தார்

புதிதாக நீ எதையும் சொல்ல வில்லை

புரட்சிகர செயல்எதுவும் செய்ய வில்லை

இதற்குமுன்பே இருந்தவைதாம்; உன்பங் கென்றே

எதுவுமில்லைஎன்பர்சிலர்! எல்லாம் இங்கே

விதிவசந்தான் எனக்கிடந்த மக்கள் நெஞ்சில்

விசையூட்டித் தனமான வீரம் ஊட்டி

நதிப்பெருக்காய், கடல் ஆர்ப்பாய் ஓர் இயக்கம்

நடத்தியவன் வரலாற்றில் நீயே அன்றோ?

தமிழ்மொழியைச் சனியனென்றாய்; தமிழைக் காட்டு

மிராண்டிமொழிஎனச்சொன்னாய் என்றே உன்னைத்

தமிழ்மொழிக்குப் பகைவனெனக் குற்றஞ் சாட்டிச்

சலிக்காமல் பழிஉரைப்பார்! ‘இந்தியாலே

தமிழ்மொழிக்(கு) உற்றகேட்டைத் தடுத்த துண்டு

தமிழ் உணர்ச்சி உன்இயக்கம் வளர்த்த துண்டு

தமிழ்மொழிக்குள்நன்றிஎன்ற சொல்லும் உண்டு

தமிழர்அதன்பொருள்அறியும் பண்பும் உண்டு

ஆடுமாடா மேய்த்திருப்பான் தமிழன்? இல்லை

அழிந்தவனா போயிருப்பான்? பெரியார் தொண்டைக்

கூடுதலாய் மிகைப்படுத்த வேண்டாம்என்று

கூறிடுவார் சிலபேர்கள், பார்ப்பான் பண்ணைக்

காடாக இருந்தநிலம் மாற்றிக் காய்ந்த

கருப்பனுக்கும் முனியனுக்கும் உரிமை உள்ள

நாடாக மாற்றியவன் நீயே! எங்கள்

நரம்புகளின் செங்குருதி நீயே! நீயே!

- தமிழேந்தி

(நன்றி : புரட்சிப் பெரியார் முழக்கம் - ஜாதி ஒழிப்பு மலர், 2014)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.