கவிஞர் வைரமுத்து எழுதிய ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ என்பது ஓர் அருமையான கவிதைத் தொகுதி.

அதில் ‘புத்தகப் புராணம்’ என்ற தலைப்பில் பாடும் போது வைரமுத்து பாடுவார்.

உயிரின் சுவாசமல்லவா புத்தகம்?

உனக்குள் ஒரு சூரியன் அல்லவா புத்தகம்?

அட்டையிட்ட அமுதமல்லவா புத்தகம்?

உனக்கு வரம் தர யாரோ இருந்த தவமல்லவா புத்தகம்?

புத்தகங்களின் பெருமையைப் பற்றி, பல்வேறு அறிஞர்களும் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள்,  “ஒருவர் வாசிக்கும் புத்தகங்களை எவை எனக் கூறுங்கள், அவர் எப்படிப்பட்டவர் என்பதைச் சொல்கிறேன்” என்றார் பெட்ரண்ட்.

“புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளை விடப் பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே” என்று லெனின் முழக்கமிட்டார்.

வாசிப்புக்கு இலக்கணம் வகுத்த ஆங்கில அறிஞன் ப்ரான்சிஸ் பேக்கன் கூறுவான்.  “சில புத்தகங்களைச் சுவைப்போம்... சிலவற்றை அப்படியே விழுங்குவோம்... சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்...” Some books are to be tasted, others to be swalloved. very few to be chewed and digested..

அமெரிக்காவில் நீக்ரோக்கள், கருப்பர்கள், மாடுகள் போல விலைக்கு விற்கப்படுவதைக் கண்டு மனம் கொதித்தார் இளைஞனாக இருந்த ஆபிரகாம் லிங்கன்.  இவர் அமெரிக்காவின் ஜனாதிபதியானதும் இந்தக் கொடிய பழக்கத்தை ஒழித்தார்.

நீக்ரோக்களுக்கு ஆதரவாக அவர்களின் வேதனையைப் பிழிந்தது ஹெரியட் பீச்சர் என்கிற பெண் நாவலாசிரியை எழுதிய ““Uncle Tom’s Cabin” என்கிற சமூகச் சீர்திருத்த நாவலாகும்.

அடிமை வணிகத்தை ஒழித்த ஆபிரகாம் இந்தப் பெண்மணியைச் சந்தித்துப் பாராட்டிப் புகழ்ந்தார்.  இதுவன்றோ புத்தகத்தின் வலிமை!

இருபத்து மூன்று வயதிலேயே விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார் மாவீரன் பகத்சிங்.  அவர் எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்ற நூல் இந்தியாவில் புரட்சிக்கு வித்திட்டது.

பகத்சிங்கின் நூலை மொழிபெயர்த்து வெளி யிட்டதற்குப் பொதுவுடைமைப் போராளி ஜீவானந்தத்திற்கு ஆறு மாதச் சிறை தண்டனை கிடைத்தது.

லாகூர் சதி வழக்கில் ஆங்கில நீதிமன்றம் மாவீரன் பகத்சிங்குக்குத் தூக்குத் தண்டனை அளித்தது.

சிறை அதிகாரி தூக்கில் போட அழைக்க வந்த போது பகத்சிங் லெனின் வரலாற்றைப் படித்துக் கொண்டிருந்தார். சிறை அதிகாரியிடம் பகத்சிங், ‘நான் புரட்சிவாதி... மற்றொரு புரட்சிவாதியிடம் விவாதித்துக் கொண்டிருக்கிறேன்.  சிறிது பொறுங்கள்’ என்றார்.

ஆதலால் புத்தகங்களை நேசிப்போம்.  புத்தகங்களை வாசிப்போம்.

Pin It