தற்காலக் கவிதை இலக்கிய நூல்களைப் பொருத்தவரையில் கால வரிசை ஆய்வுப்பதிப்புகள் பாரதிக்கு வெளியாகியுள்ளன (சீனி. விசுவநாதன், தமிழ்ப்பல்கலை). பாரதிதாசன் கவிதைகளைப் பொருத்தவரையில் காலவரிசை மூலபாட ஆய்வுப்பதிப்பின் இன்றியமையாத் தேவைபற்றி வலியுறுத்தியும் அப்பணிக்கு ய.மணிகண்டனைப் பரிந்துரைத்தும் பேராசிரியர்கள் குறிப்பிட்டு வந்துள்ளனர்.
“பாரதிதாசன் கவிதைகள் பல பதிப்புகள் இதுவரை கண்டுவிட்டன. எனினும் பதிப்புக் குளறுபடிகளால் ஏற்பட்டுள்ள குழப்பங்களும் சிக்கல்களும் இன்னும் தீர்ந்தபாடில்லை. இயக்க நோக்கியான பாரதிதாசத் தாக்கமும், இலக்கணத் தேர்ச்சியும், பதிப்புப்பழக்கமும் உடைய ய.மணிகண்டனிடம் தகுதிவாய்ந்த நிறுவனங்கள் பாரதிதாசப் பதிப்புப்பணியை ஒப்படைக்குமெனில் வருங்காலத்தின் கையிலாவது வழுவில்லாத பாரதிதாசன் கவிதை கிடைக்கும்”. -ஈரோடு தமிழன்பன் (‘பாரதிதாசன் வண்ணப்பாடல்கள்’ ப. 6- 27.10.1995)
“பாவேந்தர் கவிதைகளின் ‘பெருந்தொகுதி’ ஒன்று பாட வேறுபாடுகளோடும் பதிப்புச் செம்மையோடும் நமக்கு வேண்டும். அந்தத் தேவையை நிறைவேற்றும் தகுதியுடையவர் களில் ஒருவராக நாம் ய.மணிகண்டன் பெயரை முன்மொழியலாம்”- தொ. பரமசிவன் (‘பாரதிதாசனின் அரிய படைப்புகள்’ அணிந்துரை-திசம்பர் 2001)
“இதுவரை வெளிவந்துள்ள பாரதிதாசன் பாடல்களில் முன்னர் வெளிவந்த பதிப்புக்கும், பின்னர் வெளிவந்த பதிப்புகளுக்கும், இதழில் வெளிவந்த பாடலுக்கும், நூல் வடிவில் வெளிவந்த பாடலுக்கும் இடையே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவ் வேறுபாடுகள் இணைப்புகள், நீக்கங்கள், மாற்றங்கள் என்னும் வகைப்பாட்டில் அடங்கும். இவற்றுள் ஆசிரியர் செய்தவை உள. பிறரால் நேர்ந்தவை பல. இவற்றைக் கண்டறிந்து முதலில் வெளிவந்த பாடல் வடிவைத் தந்து, பின்னர் நேர்ந்த வேறு பாடுகளைக் குறித்துக் காலவரிசையில் பாடல்களைப் பதிவுசெய்யும் ஆய்வுச் செம்பதிப்பு ஒன்று இன்றியமையாத் தேவை யாகும்”- இரா. இளவரசு (‘பாவேந்தரின் உலகநோக்கு’- ப. 132- 2002)
‘இக்குறையைப் போக்கும் வகையில், தேவையை நிறைவு செய்யும் வகையில் அரும்பியுள்ள முதல் முயற்சியே இத்தொகுதி’யென என ய.ம. தம் ‘பாரதிதாசன் கவிதை இலக்கியங்கள்- சுயமரியாதை, சமத்துவம் (1930-37) ஆய்வுப்பதிப்பு (டிசம்பர் 2005) ஆசிரிய முன்னுரையில் குறிப்பிடுகின்றார். தம்மால் ஏலவே மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகள், அவை குறிப்பிட்ட நோக்கின எனச் சுட்டுவது ‘பாரதிதாசன் வண்ணப்பாடல்கள்’ (1995), பாரதிதாசனின் அரிய படைப்புகள் (2001) எனுமிரு நூல்களைப் பற்றியேயாகும். இவை இரண்டனுள் முன்னது பின்னதில் மீள இடம் பெற்றதாகும். இவ்வாறவர் குறிப்பிட்டாலும் அடுத்தடுத்த அவரது இத்தகைய காலவரிசை மூலபாட ஆய்வின் படிநிலை ஆய்வுகள் மற்றும் சிறப்புக் கூறுகள் செழித்தோங்கினாலும் இந் நூலிலேயே (பாரதிதாசனின் அரிய படைப்புகள்) அதற்கான குறுவித்துக்கள் காணக்கிடக்கின்றன. எனவே பாரதிதாசன் கவிதைகள் மூலபாட ஆய்வுப் பதிப்பென்கிற முறையிலும், தற்காலக் கவிதை இலக்கிய மூலபாட ஆய்வுப் பதிப்பென்கிற முறையிலும் ய.மவின் ‘பாரதிதாசனின் அரிய படைப்புகள்’ நூலே முதல் நூல் எனலாம். இந்நூல் பற்றிய என் வாசிப்பின் பிரதியாகவே இதனை முன்வைக்கின்றேன். இந்நூல் வெளி யாகிப் பன்னிரண்டு ஆண்டுகளாயின. இந்நூலையோ ய.ம.வின் அருங்கொடைகளைப் பற்றியோ காத்திர மான மதிப்பீடேதும் இதுவரை எனக்குத் தெரிந்த வரையில் வெளியானதாகத் தெரியவில்லை (சிற்றேடு: 9 ஜனவரி-மார்ச் 2013 காலாண்டிதழில் மோசமான மதிப்புரைக்கு முன்னுதாரணமாக இந்நூல் பற்றி வெளியானது தவிர) இந்நூல்(1) சுயமரியாதைச் சுடர் (2) வண்ணப்பாடல்கள் (3) முன்னுரை இலக்கியம் என்னும் மூன்றியல்களால் ஆனது. யாப்பியல் நோக்கில் தொகுக்கப்பட்ட ‘பாரதி தாசன் வண்ணப்பாடல்கள். ‘ய.ம.வின் முதல் நூல் இந்நூலில் இரண்டாம் இயலாக இடம்பெற்றுள்ளது. யாப்பெனும் இலக்கணக் கட்டுமானம், யாப்பின் வனப்பும் வலிமையும் யாப்பியல் ஆய்வின் தேவை குறித்த பதிவுகளைத் தொகுத்துக் காண்போம்:
“உருவம் கவிதையின் புறமாகும். உள்ளடக்கம் கவிதையின் அகமாகும். உருவத்திற்குக் கட்டுக் கோப்பைத் தருவது யாப்பு. உள்ளடக்கத்திற்குக் கட்டுக்கோப்பைத் தருவது இறுக்கம்.”
“கவிதையின் புறமாகிய உருவத்தில்விட, அகமாகிய உள்ளடக்கத்தில்தான் கட்டுக்கோப்பு (அழகு) முக்கியமானது.”
“உள்ளடக்கத்தின் இயல்பே படிமம் என்னும் அழகுதான், உருவத்தின் இயல்பு தொடை என்னும் அழகு என்று சொல்ல வேண்டியதில்லை”- செல்வம் (சி.மணி) (‘யாப்பியல்’- நடை ஏப்ரல் 1969- இணைப்புக் கட்டுரை- ப. 48)
“யாப்பிட்ட பனுவலெனும் விரகஞ் சேர்க்கும்
காப்பிட்ட வனப்புமுலைக் குமரி பார்த்தும்
யாப்பற்ற வெறுங்கவிதை யதனை யெப்படிக்
கைப்பற்றத் துணிந்தாரெம் புலனு மொப்பியே”
-சி.மணி (‘வரும் போகும்’ நூலில் ‘கவி யரங்கம்’ கவிதையில்)
பாரதிதாசன் பாத்திறம் பன்முகத் தன்மைகள் கொண்ட யாப்புக்கோப்புச் சிதையாச் சீர்மை மேலோங்கியது என்பதைக் கருத்தில் கொள்ளும்போது ‘பாவேந்தர்’, என்னும் பட்டப் பெயரும் பளிச்சிட்டு மின்னுகிறது” - ஈரோடு தமிழன்பன் (‘பாரதிதாசன் வண்ணப் பாடல்கள்’ ப.5)
“ஓவிலும் உயர்வும் உடையது தமிழ் யாப்பியல்; வளமும் வனப்பும் வாய்ந்தது தமிழ் யாப்பியல்; அறிந்தின்புறவும் ஆய்ந்தின் புறவும் ஆண்டின்புறவும் சிறந்த களம் யாப்பியல். இத்தகு பெற்றிமை கொண்ட தமிழ் யாப்பியலின் செல்வாக்கு சென்று தேய்ந்திறக் கூடிய ஒன்றன்று.
புதுக்கவிதை பெருவழக்குப் பெறினும் மரபின் ஆட்சி மங்கிவிடாத சூழலே இன்று நிலவுகிறது. சங்க இலக்கியங்கள், திருக்குறள் முதலாய்ப் பாரதி, பாரதிதாசன் பாக்கள் ஈறான இலக்கியங்கள் வாழும் நாள்வரை யாப்பியல் அறிவின், ஆராய்ச்சியின் தேவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.” - ய.மணிகண்டன் (‘இளவரசியம்’ பேரா. இளவரசு மணிவிழா மலர்- ‘தமிழ்யாப்பியல்: சில செய்திகளும் சிந்தனைகளும்’- ப. 279.)
பாரதிதாசன் பரம்பரைக் கவிஞரான வாணிதாசனின் குறிப்பிட்ட படைப்பை யாப்பியலார் ‘யாப்புச் சான்றிலக்கியம்’ என்பதற்குச் சான்றாக முன்னிறுத்தும் ய.ம. பாரதிதாசனின் பல்வேறு தொகுதிகளும் பல்வேறு யாப்புச் சான்றிலக்கியமாகத் திகழ் வதனையும் எடுத்துரைக்கையில் பாரதிதாசனின் கையாளுந் திறமும் ய.ம.வின் கண்டுணர்த்தும் நுட்பமும் ஒரு சேர மலைப்பூட்ட வல்லனவாம்.
“ஒரு யாப்பிலக்கணநூல் கூறும் பாவடிவங் களின் இலக்கணத்திற்கேற்பப் பாடல்களைக் கொண்ட இலக்கியத்தைப் படைப்பது தமிழ் யாப்பியலில் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தோன்றிய ஒரு மரபாக உள்ளது. இத்தகைய நூல்களை யாப்புச் சான்றிலக்கியம் எனச் சுட்டுவதுண்டு. விருத்தப் பாவியல் என்னும் நூலின் சந்தமற்ற விருத்தங்கள் குறித்த பகுதிக்கான யாப்புச் சான்றிலக்கியமாக வாணிதாசனின் படைப்பு ‘எழில் விருத்தம்’ அமைந்துள்ளது.” - ய. மணிகண்டன் (‘காக்கைச் சிறகினிலே’ பிப்ரவரி 2013)
“தமிழ் யாப்பியலினை வளப்படுத்தும் வகையில் காரிகைக் காலத்திற்குப் பின்னர்ப் புதுமையான படைப்பு வகையொன்று மலர்ந்துள்ளது. தமிழ் யாப்பு வடிவங்கள் அனைத்திற்குமான எடுத்துக்காட்டுப் பாக்களை ஒருசேரக் காட்டும் இலக்கியப் படைப்பாகவும், பாவடிவ இலக்கணங்கள் அனைத்தையும் உரைநடையில் பாடலை யடுத்து அளிப்பதாகவும் இந்நூல்வகை இலங்குகின்றது. இலக்கிய- இலக்கணப் படைப்பாக இந்நூல்கள் தோன்றியுள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்க நூல்களாக மாறன் பாப்பாவினம் (திருக்குகைப் பெருமாள் கவிராயர்), சிதம்பரச் செய்யுட் கோவை (குமரகுருபரர்), திருவலங்கல் திரட்டு பலசந்தப் பரிமளம் (பாம்பன் சுவாமிகள்) ஆகியன விளங்குகின்றன”- ய. மணிகண்டன் (‘இளவரசியம்’ ப. 276)
“வெண்பா என்னும் யாப்பு வகையாலேயே ‘மணிமேகலை வெண்பா’, அறுசீர் விருத்தம் என்னும் யாப்பு வகையாலேயே ‘பாண்டியன் பரிசு’ என ஒவ்வொரு யாப்பு வகையிலும் ஒவ்வொரு தனிநூற் படைப்புப் படைத்த பிற்காலப் பாவேந்தர் முயற்சிகளுக்குத் தோற்றுவாயாக, இரட்டையாசிரிய விருத்த யாப்புப்பாடல்களாலேயே எழுந்த மயிலம் ஸ்ரீசிவ சண்முகக் கடவுள் பஞ்சரத்நம் (1935) என்னும் படைப்பும் இந்நூற்படைப்பும் (சுயமரியாதைச் சுடர்) இலங்குகின்றன” - ய.மணிகண்டன் (‘பாரதிதாசன் அரிய படைப்புகள்’ ப.6)
இங்கே ஒரு நுட்பமான வேறுபாடு கவனங்கூரத் தக்கது. வாணிதாசனின் ‘எழில்விருத்தம்’ என்பது ‘இலக்கணங் கண்டதற்கு யாத்த’ ‘யாப்புச்சான்றி லக்கியம்’ என்றால் பாரதிதாசனின் கவிதை இலக்கியமோ யாப்பையும் மரபையும் ஒரு கவிஞர் எப்படி வெற்றி கொள்ள முடியும் என்பதற்கே ஒட்டுமொத்தச் சான்றான இலக்கியம். இங்கே இலக்கியங்கண்டதற்கு இலக்கணம் இயங்கும் வகிபாகத்தை ‘யாப்பதிகாரி’ ய.ம. தம் மூலபாட ஆய்வின் கூறாக நுட்பமாகக் கையாள்கின்றார்.
துதியமுதுக் கீர்த்தனைகளால் சங்கீதமும் சாகித்தியமும் சங்கமிக்கும் வாக்கேயக்காரராக அரும்பி; ராகம், தாளம், பல்லவி, அனுபல்லவி, சரணம், சிந்துப்பாடல்கள் என இசைப் பாடலாசிரியராகவும்; மெட்டுக்கும் பாட்டுக் கட்டியும் பங்களித்த பாரதிதாசனின் பாடல் களூடே வண்ணப்பாடல்கள் இனம்பிரித்துக் காணப்படாமலே இருந்தன. இந்நிலையில் ய.ம. தான் அவற்றின் யாப்பு வடிவப் பெயர்களும், தக்ககாரக் குழிப்புகளும், வண்ணயாப்பு வகைமைப் பெயர்களும் அடைப்புக்குறிக்குள் இனம்சுட்டிப் பாரதிதாசன் வண்ணப்பாடல்களைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளார்.
‘மயிலம் ஸ்ரீ சண்முகன் வண்ணப்பாட்டு’ நூல் தலைப்பில் மட்டுமே வண்ணத்தைக்கொண்டது. ‘மயிலம் சுப்பிரமணியர் துதியமுது’ நூலில் ஏழு பாடல்கள்தான் வண்ணப்பாடல் என விதந்தோது கின்றார். வண்ணப்பாட்டிலக்கணத்தைப் பொறுத்த வரையில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ‘இசைத் தமிழ் ஆய்வறிஞர்’ இரா. திருமுருகனும் ‘யாப்பதி காரி’ ய.மணிகண்டனும் தம்முள் மாறுபடுகின்றனர்.
‘வாளினை எடடா’எனுந் தலைப்பிலான பாடல் வண்ணப் பாடலன்று, சந்தப்பாடலே என முனைவர் இரா. திருமுருகன் வகைப் படுத்துவது பொருத்தமானதாகத் தோன்ற வில்லை. இப்பாடலில் ஓரீர் இடங்களில் வண்ணவோசை கெடுவதற்கு வாய்ப்புள்ள போதிலும் அவ்வாறான இடங்கள் நமது வண்ணப்பாடல் மரபில் ஏற்றுக்கொள்ளப் பெற்றவையே.”
“முற்பதிப்புகளில் (பாரதிதாஸன் கவிதைகள்- முதற்பாகம் முதல் மூன்று பதிப்புகள். 1938, 1940 - 1944) ‘வாளினை எடடா’ என்னும் இப்பாடலின் கீழே ‘(வண்ணம்)’ என்னுங் குறிப்பு இடம்பெற்றுள்ளமை நோக்கத் தக்கது. இக்குறிப்பானும் வண்ணப்பாடலே என்னும் கருத்து வலிவு பெறுகின்றது. ‘வாளினை எடடா’ தலைப்பிலுள்ள இரு எண்சீர் வண்ண விருத்தங்களை ஒரே பதினாறு சீர் வண்ண விருத்தப் பாடலாகக் கொள்ளவும் அப்பாக்களின் எதுகையமைப்பு இடந்தருதல் நோக்கத்தக்கது”- ய.மணிகண்டன் (ப. 51- 52)
“அருணகிரியாரே தம் திருப்புகழ்ப் பாடல் களைச் ‘சந்தத்தமிழ்’ என்று குறித்தாலும். யாப்புப் பாகுபாட்டில் அவை வண்ண விருத்தங்கள் எனப்படும்.”
“தண்டபாணி சுவாமிகளின் அறுவகை யிலக்கணம், ம.ரா. பூபதியின் வண்ணத்தியல்பு ஆகிய நூல்களில் வண்ணப் பாடல்களின் இலக்கணம் விரித்துக் கூறப்பட்டிருக்கின்றது. வண்ணப்பாட்டெழுத விழைவோர் அவற்றைப் பயின்று சந்தங்களின் இயல்பை அறிந்துகொள்வது நல்லது. இல்லையேல் திருப்புகழ்ப் பாடல்களின் சந்த அமைப்பைச் சற்றும் பிசகாமல் பின்பற்றிச் சீர்களை அமைக்கலாம். தான, தன்ன, தத்த முதலிய சந்தக் குழிப்பிலே திருப்புகழ்ப் பாடல்களின் சந்த அமைப்பைத் தெரிந்து கொள்ளலாம்”- இரா. திருமுருகன் (‘இசைத்தமிழறிஞர் இரா. திருமுருகனாரின் தமிழ் இயக்கம்’- வண்ணப் பாட்டிலக்கணம்- தமிழ் நேயம்: 39 - ப. 19)
“சிந்துப்பாடல்களைப் போலவே தமிழில் வழங்கும் சந்தப்பாக்கள் வண்ணப்பாக்கள் போன்றவற்றையும் இயற்றமிழ் யாப்பிலக் கணத்தில் அடக்கிவிட முடியாது. நுண்ணிய ஓசை வேறுபாட்டினை உணர்த்தும் சந்தக் குறிப்புகட்கேற்ப நடப்பவை அவை. இந்த வேறுபாடுகளையும் பல்வேறு எடுத்துக் காட்டுகளால் படிப்பவர் நெஞ்சில் எளிதாகப் பதியுமாறு செய்தவர் திருமுருகன்”- ம. இலெ. தங்கப்பா (தமிழ்நேயம்: 39 ப. 76. அக். 2009)
“நிகண்டுகள் வண்ணம், சந்தம் ஆகிய இரு சொற்களையும் ஒருபொருள் குறித்தனவாகக் கூறியுள்ளன. ஆயினும் பாக்களில் அடி தோறும் மாத்திரையளவில் சீர்கள் ஓசை ஒத்து வருதலைச் சந்தம் என்றும் (வீரபத்திர முதலியாரின் ‘விருத்தப்பாவியல்’ என்னும் இலக்கண நூல் காண்க) அடிதோறும் தத்த, தந்த, தய்ய, தான முதலான குழிப்பு அடிப் படையில் சீர்கள் ஓசை ஒத்து வருதலை வண்ணம் என்றும் (‘அறுவகை இலக்கணம்’ மற்றும் ‘வண்ணத்தியல்பு’ நூல்கள் காண்க’)
இலக்கணிகன் செய்துள்ள வரையறை தமிழுலகத்தால் தெளிவுறப்புரிந்து கொள்ளு தற்கும் பின்பற்றுதற்கும் உரியதாகும். இவ்விரு நிலைகளில் குழிப்பு அடிப்படையில் அமைந்த பாரதிதாசன் வண்ணப்பாடல்கள் மட்டுமே இங்கு தேர்ந்து தொகுத்துப் பதிப் பிக்கப் பெற்றுள்ளன. - ய.மணிகண்டன் (ப. 50)
10.12.1992 அன்று ‘கழுகுமலை முருகன் சந்தத்தமிழ்’ என்ற கோவில்பட்டி நீலமணியின் நூலைப் பெற்ற இரா. திருமுருகன் 15.12.92இல் அந்நூல் பற்றி அவருக்கு எழுதிய மடலே தமிழ்நேயத்தில் இடம் பெற்றுள்ளது. பாரதிதாசனின் குறிப்பிட்ட பாடலை யாப்பு வரையறை செய்வதில், குறிப்பிட்ட இரு யாப்பிலக்கண நூல்களின் தத்தம் வாசிப்பின் அடிப்படையில், இருவரும் வெவ்வேறு முடிவை எட்டுகின்றனர். எனினும் தம் வரையறைக்கான அளவுகோலைப் புறச்சான்றுகளாலும் (பாவேந்தரே குறிப்பிட்ட) அகச் சான்றாலும் ய.ம. இங்கே நிறுவிக்காட்டும் பாங்கு மனங்கொள்ளத்தக்க தாகும். மேலதிகப் புரிதல்களுக்கு இருவரும் குறிப்பிடும் இரு யாப்பிலக்கண நூல்களின் வாசிப்பும் நமக்குத் தேவை.
பிழையான வடிவமும் சரிசெய்யப்பட்ட வடிவமும் இந்நூலில் பாடல் வாரியாகப் பட்டியலிடப் பட்டுள்ளன. குழிப்புத் திருத்தமும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அதுவரை நூல் வடிவம் பெறாதிருந்த நான்கு பாடல்கள் இத்தொகுப்பில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளன. சந்தமும் பொருளும் கெடும் இடங்களைக் கிடைக்காத கையெழுத்துப் பிரதி அல்லது சிறுபதிப்புகளை நோக்கிச் சரிசெய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் இயலான சுயமரியாதைச்சுடரின் ஆய்வுப் பதிப்புரையில் இந்நூலின் பதிப்பமைப்பு பற்றிப் பேசுமுகமாக 1931 ஆம் ஆண்டு வெளியான மூல நூலின் அடிப்படையிலும், இடம்பெற்ற வடிவிலுமே இந்நூற்பாடல்கள் பதிப்பிக்கப்பட்டதெனக் குறிப்பிடுகின்றார். கவிஞருக்குக் காலப்போக்கில் ஏற்பட்ட கருத்தியல், மொழிநடை மாற்றங்கள் அடிப்படையில், அடுத்தடுத்த பதிப்புகளில் எவ்வாறு எல்லாம் அவராலேயே மாற்றம் பெற்றன எனப் பாடவேறுபாடுகளைப் பட்டிய லிட்டுள்ளார். வடசொல் தமிழாக்கம், தேசிய கண்ணோட்டம், பிழையான ஆட்சிகளைச் சொல்வடிவங்களாகச் செழுமைப்படுத்துதல், கருத்துக் கடுமைத் தணிப்பு எனும் வகைகளில் அவை பாகுபடுத்தப்பட்டுள்ளன. இடம்பெற்ற பாடல்களின் யாப்பு இன்னதெனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
“பாடல்களின் தலைப்புகள் பிற்பதிப்புகளில் பெற்ற மாற்றங்களும் அட்டவணையிட்டுப் பின்னிணைப்பில் காட்டப்பெற்றுள்ளன. இந்நூற்பாடல்கள், இரண்டாம் தொகுதி- முதற்பதிப்பில் இடம் பெறுகையில் மட்டும் பெற்ற குறிப்புரைகள் பின்னிணைப்பில் தொகுத்தளிக்கப் பெற்றுள்ளன. பாடல் தலைப்பு, அகரநிரல், பாடல் முதற் குறிப்பு, பாடல் சொல்லடைவு, பயன்பட்ட நூல்கள், விரிவான ஆய்வுமுகவுரை. அடிக்குறிப்புகள் முதலிய பகுதிகள் அமைய இப்பதிப்பு ஆராய்ச்சி மீள்பதிப்பாக உருவாக்கப் பட்டுள்ளது”- ய. மணிகண்டன் (ப. 19.)
இந்நூலின் பத்துப்பாக்களும் இரட்டை யாசிரிய விருத்த யாப்பில் அமைந்துள்ளன. பதினொரு சீர்க்கு மேற்பட்ட சீர்களைப் பெறும் அடிகளால் தொகுக்கப்பெறும் ஆசிய விருத்தம் ‘இரட்டையாசிரிய விருத்தம்’ எனப்பெறும். இந்நூலின் விருத்தங்கள் பன்னிரு சீர் அடிகளால் ஆனவை. சிலர் இவ்வகைப் பாடல்களைப் பதினான்கு சீர் ஆசிரிய விருத்தங்களாகவும் சீர்பிரித்துக் கொள்வதுண்டு” - ய. மணிகண்டன் (ப. 6).
மூன்றாமியல் பாரதிதாசன் தம் நூலுக்கு எழுதிய முன்னுரைகளின் தொகுப்பாகும். காணிக்கை விவரங்களும் இடம்பெற்றுள்ளன. ஒருநூல் குறித்த ஆய்வில் அதன் முதற்பதிப்பு மிகவும் முகாமையானதாகும். ஆய்வாளர்களின் ஆய்வுப் பணிக்கும், பதிப்பாளர்களின் மீள்பதிப்புப் பணிக்கும் உறுதுணையாய் வாய்த்துள்ள புதுக்கோட்டை ‘ஞானாலயா’ ஆய்வு நூலகத்தில் டோரதி, கிருஷ்ணமூர்த்தி இணையர் நூல்களின் முதற்பதிப்புகளைத் தேடித்தேடித் தொகுத்துப் பராமரிக்கின்றனர். தம் பாவேந்தரின் உலக நோக்கு’ நூலில் பாரதிதாசன் உயராய்வு மய்யத்தில் தேடித் தொகுக்கப்பட்டுள்ள பாரதிதாசன் முதற்பதிப்பு நூல்களைப் பட்டியலிட்டுள்ளார் இரா. இளவரசு.
“முன்னுரைகளைத் தொகுத்து நூலாக்கும் வழக்கம் நமக்கு மேற்கிலிருந்து வந்ததாகச் சிலர் கருதுவது தவறு. தமிழில் அம்மரபு நெடுங்காலமாகவே உண்டு. ‘திருவாய் மொழி ஈட்டின் பிரவேசஸங்கிரகம்’ என்பது ஈட்டு உரையின் முன்னுரை (அவதாரிகை)ப் பகுதிகளின் தொகுப்பு நூலாகும். பாவேந்தரின் முன்னுரைகள் கவிதையைப் போல் சுருக்கமும் இனிமையும் உடையன. ‘நேர்படப்பேசுதல்’ அம்முன்னுரைகளின் அழகு. இந்நூலாசிரியர் அதனைச் சுவைத் துள்ளார். தம் கவிதைகளின் வடமொழிச் சொற்களைத் திருத்திக் கொள்ளும் உரிமை யினைத் தம் வாசகர்களுக்கு, வழங்கியுள்ளது வியப்புக்குரிய மகிழ்ச்சியாகும்”- தொ. பரம சிவன்.
அரசுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சந்தைப் படுத்தும்- நுகர்வுப்பண்பாட்டு வணிக நோக்கி லேயே பதிப்பிக்க முயலும் பதிப்பாளர்களின் வெளியீடுகளில் முந்தைய பதிப்புகளின் முன்னுரை அணிந்துரை, படையற்பகுதிகள் அறவே அகற்றப் பட்டன. அரசுடைமையாக்கப்படா நூல்களுக்கும் இதே கதிதான் நேர்ந்தது. முதற்பதிப்பென்றால் தான் நூலக ஆணை கிட்டுமென இதற்குச் சமா தானமும் முன்வைக்கப்படலாயிற்று. இத்தகைய பதிப்புச் சூழலில் பாரதிதாசனின் முதற்பதிப்பு நூலாசிரியர் முன்னுரை முதலாக அடுத்தடுத்த பதிப்பு முன்னுரைகளும் படையற்குறிப்புகளும் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது ஆய்வாளர் களுக்குப் புதிய திறப்புகளை வழங்கவல்லதாகும்.
பாரதி ஊழியும், பெரியாரூழியும் சங்கமிக்கும் ஒரு மாபெரும் ஊழிச் சங்குமுகமே (யுகசந்தி) பாரதிதாசன் என்னும் பன்முக ஆளுமை. பெருந் தேசியம், திராவிட தேசியம், தமிழ்த்தேசியம் எனவாங்கு மாறுபட்ட அரசியல் நிலைப்பாடு களை எடுக்க நேர்ந்தபோதிலும் மாறாத சமூக வரிப்புணர்வே (அர்ப்பணிப்பே) என்றென்றும் அம் மானுடம் பாடிய மாகவிஞனின் ஆதார சுருதியான அடிநாதமாக இழையோடி நின்றது.
ஆலின் பழத்தொரு குறுவித்தாகப் பாரதி தாசனின் தமிழெனும் மூலப்படிமத்திலிருந்தே அண்ணா எனும் பேராலம் விளைந்து அரசியல் விழுதுகளைப் பரப்பியது. இரா. இளவரசு, தமிழ்க் குடிமகன் முதலியோர் முயற்சியில் ‘தமிழியக்கமும்; பெருஞ்சித்திரனாரின் முயற்சியில் ‘தமிழக விடுதலை இயக்கமும்’ தமிழரசியல் இயக்கங் களாக உருப்பெற்றன. மறுபக்கம் பாரதிதாசனால் கொண்டாடப்பட்ட பெரியாரும், பாரதிதாசனைக் கொண்டாடி நின்ற அண்ணாவும்கூட பாரதி தாசனால் வசை பாடப்பட்டு வாங்கிக்கட்டிக் கொண்டதுமுண்டு. இங்கே நேர்படப்பேசுதலும் சுயவிமர்சனப் பண்பும் அவரின் சுபாவ குணங்களே என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். இது இந் நூலின் தம் மொழி நடை, கருத்தியல் மாற்றங் களடிப்படையில் பாரதிதாசனே அடுத்தடுத்த பதிப்புகளில் எவ்வாறு மாற்றங்களை மேற் கொண்டார் என்பதை இந்நூலின் பாட வேறு பாட்டுப் பட்டியல்கள் வாயிலாக மட்டுமல்லாமல் முன்னுரைகள் வாயிலாகவும் நன்குணரலாம்.
‘இந்தப்பதிப்பு மட்டம்’ ‘இச்சுவடி மட்டப் பதிப்பு’ ‘என் எழுத்து சுவையற்றது எனக்கு நன்றாகத் தெரியும்’ ‘இந்நூலைப் பெரிதும் உவமை சிறக்க எழுதி வரவுமில்லை’- இப்படியெல்லாம் மற்றவரும் சுயவிமர்னம் செய்து தம் முன்னுரையில் குறிப்பிட்டதுண்டா?
“தொடக்கப் படிப்பினரும் புரிந்து கொண் டார்கள். இச் செய்யுளின் பொருளை- எனில் அதுதான் எனக்கு மகிழ்ச்சியூட்டுவது!
எளியநடை ‘ஒன்றாலேயே’ தமிழின் மேன் மையைத் தமிழின் பயனைத் தமிழர்க்கு ஆக்க முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை” (பாண்டியன் பரிசு 1943)
“எங்கணும்-துறைதோறும் நம்கலை, ஒழுக்கம் பயில வேண்டும் நம் நிலை நினைக்கப்படவேண்டும். இலேசில் இல்லை நம் முழுவிடுதலை” (ஏற்றப்பாட்டு- 1949)
அவருடைய மொழிநடை மற்றும் கருத்தியல் பற்றிய குறிக்கோள்களை எளிமையாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் தம் முன்னுரைகளில் பொறித்து வைக்கின்றார்- மேலும் பாரதிதாசன் முன்னுரைகள் ஆய்வாளர்களுக்கு எவ்வாறு பயன்படவல்லன எனக் காண்போம்:
“கூத்துப் பற்றிய நூல் எனின், கூத்தின் இலக்கணம் கூறும் நூலோ, அன்று. சேரனின் கூத்தே இக்கதைக்கு வேராகவும், மரம் கிளையாகவும் வருதலின் சேரதாண்டவம் கதை விளக்குவதென்க.
ஆட்டனத்தி ஆதிமந்தி பற்றிய வரலாறு தொடர்பாக யாண்டும் கிடைப்பதின்று. பாண்டியன் உயிர் விட்டபின் பாண்டியன் மனைவிக்குக் கண்ணகி கூறியதாக உள்ள மூன்று கற்புக்கரசியர் வரலாறுகளில் ஆதி மந்தி வரலாறு ஒன்று என்று மட்டும் காணப் பட்டதுகொண்டு அத்தகைய வரலாறு நூல்களில் நுணுக்கி ஆராயப்பட்டது”
தம் சேரதாண்டவம் முதற்பதிப்பு (1949) முன்னுரையில் இவ்வாறு தொடங்கி, அகநானூற்றின் 222, 236, 396, 135, 376 ஆகிய செய்யுள் எடுத்துக் காட்டுகளைத் தொகுத்துச்சுட்டி,
“இவையின்றி வர்ணசூசி என்னும் ஏட்டுப் பிரதியில் மருதி சிலவரிகளால் மேன்மைப் படுத்தப்படுகிறான். இவைகளைக்கொண்டே சேரதாண்டவத்தை இவ்வாறு எழுதினேன் என்க”.
என்பவர் மீண்டும் சேரதாண்டவம் மறுபதிப்பில் முதற்பதிப்பில் சுட்டிக்காட்டிய அகநானூற்றுச் செய்யுட்கள் தவிர மேலும் 76, 45ஆம் செய்யுட் களிலிருந்தும்; இளங்கோவடிகள் சிலம்பிலிருந்தும் (21: 11-5) மற்றும் ஆதிமந்தியாரின் குறுந்தொகை 31ஆம் செய்யுளிலிருந்தும் மேலதிகத் தரவுகளைத் தொடர்கின்றார். இம்முன்னுரைத் தரவுகளைக் கொண்டு மூலபாட நோக்கில் வாயில்களின் ஆய்வினை ஓர் ஆய்வாளர் முன்னெடுக்கலாம் ‘சேரதாண்டவத்தில் செவ்விலக்கியத் தாக்கம்’ எனவாங்கு.
“தமிழ்ஆய்வு இல்லாமலே சினிமா நாடகம் எழுதுகின்ற இளைஞர்களுக்கு இங்கு ஒன்று சொல்ல வேண்டும். சினிமா நாடகம் இவற்றிற்கு வேண்டிய கதைகள் பிற நாட்டினரிடமிருந்து பார்த்து எழுதப் பட்டவை; அவற்றில் அடைக்கப்படும் நாகரிகமுறை உடை அனைத்தும் அப்படி, பாட்டின் மெட்டு அப்படி. தமிழகம் தன்னுள்ளத்தையே இந்த வகையில் இழந்து விட்டதா என்னும்படி இருக்கிறது. மானம் போகிறது!- ‘காதலா கடமையா?’ இரண்டாம் பதிப்பு முன்னுரை 21.12.59.
குமரகுருபரர் நாடகம் முதற்பதிப்பின் (1944) முன்னுரையில் பாடல்களுக்கு எவ்வாறு இராகம் தாளம் அமைப்பது, எவ்வாறு மாற்றிஅமைப்பது, குறிப்பிட்ட காட்சிகளுக்கு இன்னவகை நாட்டி யத்தை நிகழ்விப்பது, ஒல்லும் வாயெல்லாம் நகைச்சுவையைச் கூட்டுவது என டைரக்டருக்குக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இரண்டாம் பதிப்பில் (1998) பதிப்பாசிரியரின்
“குமரகுருபரன் சினிமாவிற்காக எழுதப் பட்டதாகலாம். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாக்கா முத்திரை காணப்படுகிறது” - சேலம் தமிழ்நாடன் (ப. 120)
இத்தகைய முன்னுரைக் குறிப்புகளோடு, திராவிட இயக்கத்தவருள் முதன்முதல் திரைத்துறையில் வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும் நுழை வினை நிகழ்த்திய பாரதிதாசனின் ‘தமிழர் பட மெடுக்க ஆரம்பஞ்செய்த’ அலங்கோலங்களை எடுத்தியம்பும் கவிதைகளையும், ஒப்பிட்டு ‘பாரதி தாசனின் திரைத்துறைப் பங்களிப்பை’ ஆராய முற்படலாம்.”
வடநாட்டார் போன்ற உடை, வடநாட்டார் மெட்டு
மாத்தமிழர் நடுவினிலே தெலுங்குகீர்த் தனங்கள்
வடமொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம்
வாய்க்குதவா இந்துஸ்தான்! ஆபாச நடனம்
அடையுமிவை அத்தனையும் கழித்துப் பார்த்தால்
அத்திம்பேர் அம்மாமி எனுந்தமிழ்தான் மீதம்!”
(பாரதிதாசன் கவிதைகள் முதல்தொகுதி- ‘தமிழ்நாட்டில் சினிமா’ ப. 137)
பாரதிதாசனின் மெட்டுப்பாட்டுகள் குறித்த ஒரு சர்ச்சையினை பாரதிதாசனியல் ஆய்வு முன்னோடி யான ச.சு. இளங்கோ முன்வைத்துள்ளார். ஒரு வகையில் அதற்கு மாறுபட்ட தரப்பை இந்நூலில் தொ. பரமசிவன் முன்வைத்துள்ளார். இரண் டையும் காண்போம்:
“குடிஅரசு இதழில் வெளிவந்த பாரதிதாசன் கவிதைகள் எண்சீர், அறுசீர், அகவல் முதலிய யாப்பு இலக்கணத்தில் சிறுபான்மையாகவும், இசைப்பா மெட்டில், பெரும்பான்மை யாகவும் இயற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் பாரதிதாசனுக்குத் தொடக்க காலத்தில் மெட்டுப் பாட்டு ஆக்கத்தில் இருந்த ஈடு பாடும் இசை வேட்கையும் தெரிய வரு கின்றன. கவிஞருக்கு கவிதை ஆக்கத்தில் உள்ள மழலை நிலையை இது காட்டுகிறது.
தனித்தன்மை இன்றிப் பிறரைச் சார்ந்து எழுதப்படும் இவ்வகை மெட்டுப்பாடல்கள் எழுதுவதைப் பிற்காலத்தில் பாரதிதாசன் அறவே களைந்துவிட்டார் என்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கதாகும்”
“1962இல் வெளிவந்த ‘மயிலம் சுப்பிர மணியர் துதியமுது’ அதன்பின் வெளிவந்த ‘கதர் ராட்டினப் பாட்டு’ ‘தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு’ ‘சுயமரியாதைச்சுடர்’ ‘பாரதிதாசன் கவிதைகள்’ தொகுதி; 1 முதலிய நூல்களில் அமைந்துள்ள பாடல்கள் பெரும்பாலும் மெட்டுப்பாடல்களே என்பது இங்கு நினைவு கொள்ளத்தக்க செய்தி யாகும்”- ச.சு. இளங்கோ (குடிஅரசு இதழில் பாரதிதாசன் பாடல்கள் ப. 62-63)
“தமிழிசை மரபு தம் குருநாதரைப் போலப் பாவேந்தருக்கும் முன்னோர் சொத்தாயிற்று. கண்ணதாசன் வரையிலான மரபுக் கவிஞர்கள், தமிழிசை உணர்வும் அறிமுகமும் உடை யவர்கள் தாமே? புதுக்கவிதைதான் பிறந்த உடன் தமிழிசையினை மணமுறிவு செய்து விட்டது”- தொ. பரமசிவன்
எந்த ஒன்று ச.சு. இளங்கோ பார்வையில் கவிதை ஆக்கத்தில் மழலை நிலையாகப்பட்டதோ, அந்த ஒன்றே தொ.ப.வின் பார்வையில் முன்னோர் சொத்தாகவும், அது இல்லா நிலை புதுக் கவிதையில் மணமுறிவாகவும் படுகின்றது.
பாவகை மூன்றிலும் கவிதையே தலைசிறந்த தெனவும்; கவிதைக்கு முதலிடம், பாடலுக்கு இரண்டாமிடம், செய்யுளுக்கு மூன்றாமிடமும் என வரிசைப்படுத்தும் சி.மணி பாடல் பற்றி விதந்தோதுவது இங்கே நோக்கத்தக்கதாகும்.
“பாடலில் கவிதைக்குரிய இயல்புகளில் சில குறைந்து வரும். பாடலில் உருவக் கட்டுக் கோப்பும் உருவ அழகும் உண்டு. இவற்றுடன் உள்ளடக்க இயல்புகளில் ஒன்றோ இரண்டோ ஆங்காங்கே தென்படும். எனவே சற்றே வளமான உள்ளடக்கமும் கட்டுக் குலையாத அழகிய உருவமும் கொண்டது பாடல் என்று சொல்லவாம்” -சி.மணி (‘யாப்பியல்’ ப. 49-50)
இத்தரப்புகள் இன்னும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியனவே. ஆனாலிங்கே நான் மையப்படுத்த விரும்புவது மற்றொரு கோணம் பற்றியே. பாரதி தாசன் பார்வையில் பாட்டெழுதுவது எத்தகைய கடமையாக்கப்பட்டது? எத்தகைய தேவைக்காக அது அவரால் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் பட்டது? பிற்காலத்தில் பாரதிதாசன் மெட்டுப் பாடல்கள் எழுதுவதை அறவே களைந்து விட்டார் என ச.சு. இளங்கோ குறிப்பிடுவது சரிதானா? இக்கேள்விக்கான விடைகளைக் காலந்தோறும் பாரதிதாசன் முன்னுரையில் எவ்வாறிவை காணக் கிடக்கின்றன எனவும், அவர்கவிதைப் பதிவிற்கு ஊடாகவும் இனங்காண்போம்:
“தமிழ்நாடு முன்போலில்லை; தமிழர்கள் தமிழ்க்கவிதைகள் கேட்கிறார்கள். வேறு கடமையேற்றுள்ள நான் பாட்டு எழுத ஆசைப்பட்டதற்குக் காரணம் இதுதான்” - ‘எதிர்பாராதமுத்தம்’ (1941)
“இதை வாங்குவோர் படித்துவிட்டுப் போட்டு விடக் கூடாது. வரப்படுத்திப் பாடுவதோடு அமையாமல் பிறரும் பாடப்பயிற்ற வேண்டும் என்பது என் கோரிக்கை”- ‘இந்தி எதிர்ப்புப் பாட்டு (1948)
“தெருப்பாடற் குழுவொன்று தேவை. அக்குழு இரவில் தெருத்தோறும் இராப் பத்துப் பாடிச் செல்ல வேண்டும். பாடற் குழுவினர் தமிழ்ச் சொல்லில் பிழைபாடு நேராவண்ணம் இனிய குரலில் எல்லார்க்கும் பொருள்விளங்க அமுதே அருவியாக அடுக் களையிற் பெருக்கெடுத்தது போல் கேட்பார் உள்ளம் வேட்கப் பாடுந்திறன் உடையராதல் வேண்டும். பாட்டின் இசையை நீட்டி இழுப்பதன்றி, உரைநடை ஓசையினும் சிறிது வேறாகும் வண்ணம் இசைத்தல் வேண்டும்”- ‘திராவிடர் திருப்பாடல்’- முதற்பகுதி- இராப்பத்து (1948)
“பாடற்குழுவினர் வைகறையில் தெருத் தோறும் இதைப்பாடிச் செல்லவேண்டும்..... பாடுங்கால் தம்பூரா இசை இருக்கலாம். பாடுவதை இடைஇடையே நிறுத்தி, பம்பை முழக்கலாம். காலைப்பத்துப் பாடுவதே யன்றி, இதிற் சேர்த்திருக்கும் பாட்டுக் களையும் பாடலாம்”- திராவிடர் திருப் பாடல்- இரண்டாம் பகுதி- காலைப்பத்து (1948)
“ஏற்றப்பாட்டில் இருநூறு சால்களுக்கு இருநூறு அடிகள் அமைத்திருக்கின்றேன். அவற்றில் காலை நூறு சால்களுக்கு நூறு”- ‘ஏற்றப்பாட்டு’ (1948)
“இளைஞர் இலக்கியம் என்று பெயரிட்டு இதை நான் எழுதத் துணிந்தமைக்குக் காரணம், பிழைச் சொல்லின்றி மாணவர் பாட்டுக் கற்க வேண்டும் என்பதாகும். உரை நடையில் ஒரு பொருளை விளக்குவதினும் பாடலிற் காட்டுங்கால் இனிது பதியும் என்ற உண்மைக்கு ஒத்துவருகிறதா என்பதைப் படிப்பார் ஆய்ந்து பார்த்து, ஆம் எனில் கொள்ளுக” - ‘இளைஞர் இலக்கியம்’ (1945)
“நான் குயிலில் இதழ்தோறும் எழுதிவந்த மெட்டுப்பாடல்களின் தொகுப்பே, ‘பாரதி தாசன் பன்மணித்திரள்’ என்பது” முன்னுரை: 1.8.63 வெளியீடு: திசம்பர் 1964
“பல்லவிகள் கீர்த்தனங்கள் மற்றுமுள்ள
பலநுணுக்கம், இசைவிரிவு தெரிந்துள்ளோரின்
நல்லுதவி பெற்றுத்தான் தமிழிசைக்கு
நாம்ஏற்றம் தேடுவது முடியுமென்று
சொல்லுகின்றார் சிலபுலிகள் அவர்க்கு நானும்
சொல்லுகின்றேன் சுண்ணமிடிப் பார்கள்பாடும்
பல்வகைஇ லேசான இசைகள் போதும்
பாரதியா ரேபோதும்; தியாகர் வேண்டாம்”
-‘தமிழுக்கு அமுதென்றுபேர்’ (‘மணக்காதா’ ப. 66-67)
தொடக்கப் படிப்பினரும் புரிந்து கொண்டார்கள் என்பதே தமக்கு மகிழ்ச்சியூட்டும் என்பது தொடங்கி, இலேசான பல்வகை இசை, பாரதியாரே போதும் தியாகர் வேண்டாம் என்பது வரைக்கும் அவர் பாடல்களின் சனநாயகக் குரலும், துறைதோறும் நம் கலை ஒழுக்கம் பயில வேண்டும் என்னும் அவரின் முழுவிடுதலையை அவாவிநிற்கும் வேண வாவும் வெளிப்படக்காணலாம். இவ்வாறவர் ஏற்றுள்ள வேறுகடமையை ஈடேற்றும்- வெகு மக்களை முழுவிடுதலைக்கு அணிதிரட்டும் சாதன மாகவே பாடல்களை அவர் கையாண்டார்.
“சமுதாய மாற்றத்திற்கான கருத்துகளைத் துணிந்து கூறிய பெரும்புலவர் ஆவார். இன்றைக்குப் பகுத்தறிவாளர்களுக்கு எடுத்துச் செல்லத்தக்க சாதனமாகப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் அமைந்துள்ளன.... பாரதிதாசன்போல் நமது நாட்டில் புரட்சிப் புலவர்கள் தோன்றி இருந்திருப்பார்களே ஆனால்- நமக்கு 2000, 3000 ஆண்டுகளாக இருந்துவரும் இழிதன்மை இருந்து வந்திருக்குமா?” - ஈ.வெ.ராமசாமி (சிவ கங்கை மன்னர் ராஜா துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் 8.3.1973இல் ஆற்றிய சொற் பொழிவு-’சிந்தனையாளன்’ 3.5.1975)
“இளைஞரும் முதியோரும் போராட்டக் களத்தை நோக்கிச் செல்லும்போது வீர நடைபோட்டுச் செல்ல ஏற்ற போர்ப் பாடல் களை உருவாக்கி அளித்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்”- வே. ஆனை முத்து 1.10.1998 (‘தந்தைக்கு மகன் தந்த பரிசு’- அணிந்துரை)
பாரதிதாசன் பிற்காலத்தில் மெட்டுப்பாடல்களை அறவே களைந்துவிட்டார் என்று குறிப்பிடுவதற்கு மாறாக இறுதிவரையில் அவர் மெட்டுப் பாடல்கள் எழுதியே வந்தார் என்பதற்கு ய.ம. தொகுத் தளிக்கும் முன்னுரைப் பகுதியே போதுமான சான்றாதார ஆவணமாகும். பாரதிதாசன் இறுதி யாக எழுதிய (1.8.63) பன்மணித்திரள் முன்னுரை வரை இதனையே நமக்குணர்த்துகின்றன. அந்நூல் அவர் இயற்கையெய்திய பின் 1964இல் வெளி வந்தது. இவ்வாறெல்லாம் இனங்காணவும், மேன்மேலும் ஆய்வுகள் பலவற்றை முன்னெடுக்கவும் இந்நூலே ஆவணமாக அமைந்தியல்கின்றது.
(புதுவைப் பல்கலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விரிவுரையாளர்க்கென நிகழ்த்தப்பட்ட ‘புத்தொளிப் பயிற்சி முகாமில்’ 14.2.14 அன்று மூலபாட ஆய்வு’ குறித்து நிகழ்த்திய விரிவுரையின் ஒரு பகுதியாகத் திருத்தி அமைக்கப்பட்ட எழுத்து வடிவம்.)