வார்த்தைகளை வாளாக வார்த்தவன். மொழியைத் தேனாக வடித்தவன். எதிரிகளைக் கவிதையால் அடித்தவன். கம்பீரத்தால் காலங்கள் கடந்தவன். பாரதியின் தாசன் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவன் இந்த பாரதிதாசன்!
சுப்புரத்தினம் - பெற்றோர் வைத்த பெயர். அப்பா பெயர் கனகசபை என்பதால், கனக.சுப்புரத்தினம் எனும் பெயரால் கவிதைகள் வரைந்தார். தனது குருநாதர் மீதான பாசத்தால், பாரதிதாசன் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார். அவரது கவிதைகளுக்கு புரட்சிக் கவிஞர், பாவேந்தர் என்ற பட்டங்களே அடையாளம்!
கவிகாளமேகம், ராமானுஜர், பாலாமணி அல்லது பக்காத்திருடன், அபூர்வசிந்தாமணி, சுபத்திரா, சுலோசனா, பொன்முடி, வளையாபதி ஆகிய படங்கள் அவரது பங்களிப்புடன் வந்தன. புதுவை கே.எஸ்.ஆர், கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன் ஆகியவை இவரது புனைபெயர்கள்!
'வளையாபதி' படத்துக்கு இவர் எழுதிக் கொடுத்த வசனத்தில் சில வரிகள் மாற்றப்பட்டதால் 40 ஆயிரம் பணத்தையும் நான்கு படங்களுக்கான ஒப்பந்தங்களை தூக்கி எறிந்துவிட்டு, மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து கம்பீரமாக வெளியேறியவர்!
கோழி, புறா, பசு மூன்றும் அவர் விரும்பியவை. 'டேய்' என்பார் கோழியை. 'வாம்மா' என்பார் சேவலை. 'வீடு என்று இருந்தால் இம்மூன்றும் இருக்க வேண்டும்' என்று சொல்லித் தானும் வளர்த்து வந்தார்!
யார் பேசும்போதும் மூக்கின் மீது விரல்வைத்தபடியே உன்னிப்பாகக் கவனிப்பார். எழுதும்போது மை சிந்தி விட்டால் அதைப் பூவாக மாற்றிவிட்டுத்தான் எழுதுவார். பாயைத் தரையில் விரித்து, தலையணை மீது குப்புறப் படுத்தபடியேதான் எழுதுவார்!
'என்னை ஏன் மக்கள் போற்றுகிறார்கள்? என்னுடைய அஞ்சாமைதான் அதற்குக் காரணம். மடமையை ஆதரிப்பவர்களை, தமிழ்ப் பண்பாட்டினை இகழ்பவர்களை நான் திட்டுவேன். நீங்களும் திட்டுங்கள்!' என்று தமிழக மக்களுக்கு உத்தரவு போட்டவர்!
'உங்களுக்கு எல்லாம் தமிழை நான் வாரிக் கொடுக்கிறேன். எனக்கெல்லாம் தமிழை வாரிக் கொடுப்பவர் பாரதிதாசன்' என்று பாராட்டியவர் கிருபானந்த வாரியார். ஆத்திகர்களையும் தனது கொஞ்சு தமிழால் ஈர்த்த நாத்திகர்!
'ஏம்ப்பா... தி.நகர் வர்றியா?' ஆட்டோக்காரரைக் கேட்டார். 'தி.நகருக்கு வரல' என்றார் அவர். 'அப்ப ஏம்ப்பா இங்க நிக்கிற?' என்று சண்டைக்குப் போனார் பாரதிதாசன். உணவு விடுதியில், 'சூடா தோசை இருக்கு' என்றார் கடைக்காரர். ஆனால், ஆறிய தோசை வந்தது. 'இதுதான் உன் அகராதியில சூடா?' என்று கொந்தளித்தார். இப்படி அவர் நித்தம் யுத்தம் செய்த இடங்கள் ஏராளம்!
பிறந்தது, வளர்ந்தது, வாழ்ந்தது, உயர்ந்தது அனைத்தும் புதுச்சேரியில். கடைசி இரண்டு ஆண்டுகள் சென்னையில் குடியேறி வாழ்ந்து வந்தார். 'சென்னை அவரைக் கொன்றுவிட்டது' என்பார்கள் நண்பர்கள்!
புதுச்சேரியில் ஒருமுறை புயல் சுழன்றடித்தபோது இவரை ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்குத் தூக்கி எறிந்தது சூறாவளி. ஒரு முழுநாள் கழித்து வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்தார். அவரது 'பறந்து திரிந்த' அனுபவங்களைக் 'காற்றும் கனகசுப்புரத்தினமும்' என்ற கட்டுரையாக வடித்தார் பாரதியார். அந்தக் கதையை மறுபடி மறுபடி சொல்லிக் கேட்டவர் அரவிந்தர்!
நாடு முழுவதும் நிதி திரட்டி 25 ஆயிரம் ரூபாயை இவருக்கு வழங்கினார் அண்ணா. 'நான் கொடுக்க நீங்கள் வாங்கக் கூடாது' என்ற அண்ணா, அந்தப் பணத்தைக் கையில் ஏந்தி நிற்க... பாரதிதாசன் எடுத்துக்கொண்டார்!
பாரதிதாசன் என்று இவர் பெயர் மாற்றம் செய்ததை தி.க-வினர் கடுமையாக எதிர்த்தார்கள். 'சாதிக் கொடுமையை உண்மையாக எதிர்த்தவர் பாரதி. அவரைப்போலவே எளிய நடையில் மக்களுக்கு வேண்டிய கருத்தை இயற்ற வேண்டும் என்பதால், பாரதிதாசன் எனப் பெயர் வைத்துக்கொண்டேன். யார் எதிர்த்தாலும் கவலை இல்லை!' என்றார்!
ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி புதுச்சேரி வந்தபோது, அவரை போலீஸூக்குத் தெரியாமல் கட்டுமரத்தில் ஏற்றி, நடுக்கடல் வரை கொண்டுசென்று வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்த அஞ்சாமைக்குச் சொந்தக்காரர்!
எப்போதும் பச்சை சால்வைதான் அணிவார். அதற்குள் ஒரு கத்தியும் ஒரு வாளும் வைத்திருப்பார். இரவில் எங்கு சென்றாலும் அதை மறக்காமல் எடுத்துச் செல்வார்!
புதுச்சேரி வேணு நாயக்கரின் சிலம்புக் கூடத்தில் சிலம்பம் கற்றார். குத்துச் சண்டையும் குஸ்தியும் தெரியும். அதற்காகவே உடும்புக் கறியை அதிகமாகச் சாப்பிட்டார். 'உடல் நலனைப் பேணுதலே அனைத்துக்கும் அடிப்படை' என்பார்!
'சுப்புரத்தினம் எனக்காக ஒரு பாட்டு எழுதேன்' என்று பாரதியார் கேட்டுக்கொண்டதும் இவர் எழுதிய பாட்டுதான், 'எங்கெங்கு காணினும் சக்தியடா!'
பள்ளி ஆசிரியராக 37 ஆண்டுகள் இருந்தார். அவரை நிம்மதியாக ஓர் இடத்தில் பணியாற்றவிடாமல் 15 பள்ளிகளுக்கு மாற்றிக்கொண்டே இருந்தார்கள். 'அரசியல் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் என்னை மாற்ற மாட்டார்களாம். அரசியல் இல்லாமல் என்னால் எப்படி இருக்க முடியும்?' என்று கொதித்தார்!
'அ' என்றால் அணில் என்று இருந்ததை 'அம்மா' என்று பாடப் புத்தகத்தில் மாற்றிய அன்பு ஆசான் இவர்தான்!
மளிகைக் கடைப் பொட்டலங்களில் இருக்கும் சணல், நூல் ஆகியவற்றைச் சேகரித்துவைக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. 'நான் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன். மளிகைக் கடையில் வளர்ந்தவன். நூலின் அருமை எனக்குத்தான் தெரியும்' என்பார்!
இசை, மெட்டு குறையாமல் பாடக் கூடிய ஆற்றல் பெற்றவர். தான் எழுதிய பாடல்கள் அனைத்தையும் தானே பாடுவார். 'வீர சுதந்திரம் வேண்டி நின்றார்' பாடலை இவர் பாடிக்கொண்டு இருக்கும்போதுதான் பாரதியார் இவரை முதன்முதலாகப் பார்த்தார்!
பழனியம்மாள் இவரது மனைவி. இவர்களுக்கு சரஸ்வதி, வசந்தா, ரமணி ஆகிய மூன்று மகள்களும் மன்னர் மன்னன் என்ற மகனும் உண்டு!
பாண்டியன் பரிசு திரைப்படம் எடுக்கவே சென்னை வந்தார். சிவாஜி, சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா நடிக்க ஒப்பந்தம் ஆனது. ஆனால், படப்பிடிப்பு துவங்கவே இல்லை. பாரதியார் வாழ்க்கை வரலாற்றைச் சினிமாவாக எடுக்கத் தொடக்க காலத்தில் முயற்சித்து கதை, வசனம் எழுதிவைத்திருந்தார். அதுவும் சாத்தியமாகவில்லை. பாவேந்தரின் திரைப்பட ஆசை கடைசி வரை நிறைவேறவே இல்லை!
'தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும். முதலில் தமிழை ஒழுங்காகப் படியுங்கள். பிறகு, உங்கள் எண்ணத்தைத் துணிச்சலாகச் சொல்லுங்கள்!' என்று கட்டளையிட்டார்!
ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பாரதிய ஞானபீட விருது இவருக்குத் தருவதாக முடிவானது. அதற்குள் அவர் இறந்து போனார். அவ்விருது, வாழும் கலைஞர்களுக்குத் தரப்படுவது என்பதால், இவருக்குக் கிடைக்கவில்லை!
'வாழ்க்கை என்பது ஆராய்ச்சியும் இல்லை... அறிவாற்றலும் இல்லை. மக்களுக்கு உழைப்பதுதான் வாழ்க்கை. நன்மைக்கும் உண்மைக்கும் ஒருவன் அன்புடன் எழுதினால் என்றும் நிலைக்கும். அதைத்தான் நான் செய்கிறேன்' என்றவரின் உடல் புதுச்சேரியில் அடக்கம் செய்யப்பட்டபோது, திரண்ட கூட்டம் அவரது கவிதைக்குக் கிடைத்த அங்கீகாரம். மயானக் கரையில்வைத்து அவ்வை டி.கே.சண்முகம் பாடினார்... 'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ... இன்பம் சேர்க்க மாட்டாயா!'
- திருமாவேலன்
(நன்றி: ஆனந்த விகடன்)