இன்று, உலகமயமாதல், தாராளமயமாதல் போன்ற பொருளாதாரக் கொள்கைகள் உலகளாவிய அளவில் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் நிற்கும் நாடுகள், பின் தங்கிய நாடு களின் இயற்கை வளங்களைத் தம் வயப்படுத்திக் கொள்ள முயன்று வருகின்றன. இந்தச் சூழலில் பின்தங்கிய வளம் மிகுந்த நாடுகளின் வளர்ச்சி தனித்தன்மை போன்றவை புதிய நெருக்கடிகளுக்கு உள்ளாக வேண்டிய சூழல் உருவாகி வருகிறது.
இந்தச் சூழலைப் பற்றிய முறையான புரிதல்களும், கூர்மையான விழிப்புணர்வும் மக்களுக்குத் தேவைப் படுகிறது. அதைப் பெறுவதற்கு நாம் வரலாற்றை மீள்பார்வை செய்து புதிய சூழலுக்கு ஏற்றபடி நமது இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. வரலாற்றைக் கற்று வரலாற்று வழியாகப் புதிய வரலாற்றை நாம் வடிவமைக்க வேண்டிய நிலைமையில் உள்ளோம்.
இந்தச் சூழலில் நமக்கு உதவிகரமாக உள்ளது “இந்தியாவின் முதல் விடுதலைப் போர்” நடந்த 1857-1859 ஆண்டுகளில் நடைபெற்ற சிப்பாய்க் கலகம் குறித்து மார்க்ஸும், ஏங்கல்ஸும் நிகழ்த்திய சமகால ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பை எஸ்.இராமகிருஷ்ணன் சரளமான தமிழ் நடையில் 1963-ஆம் ஆண்டில் முதல் பதிப்பாக வெளிக் கொண்டு வந்தார். அந்த நூல் காலத்தின் தேவையை உணர்த்தும் வகையில் தற்போது வெளியாகியுள்ளது.
கார்ல் மாக்ஸும், பிரடெரிக் எங்கல்ஸும் எந்த அளவுக்கு ஆழ்ந்த ஈடுபாடு செலுத்தி, இந்திய வரலாற்றுச் சூழலை ஆய்வு செய்து வரலாற்று நிகழ்வுகளைச் சமூக அறிவியல் கண்ணோட்டத்தில் ஆழமாகவும், தெளிவாகவும், துல்லியமாகவும் காட்சிப்படுத்து கிறார்கள் என்பதை இதில் உள்ள ஆய்வுக் கட்டுரைகள் புலப்படுத்துகின்றன. இதில் உள்ள கட்டுரைகள் மார்க்ஸும், எங்கல்ஸும் வாழ்ந்த காலத்தில் ‘நியூயார்க் டெய்லி டிரிப்யூனில்’ வெளியானவை.
காலனியாதிக்கம் படிப்படியாகத் தொடங்கி வளர்ந்து ஆங்கில ஏகாதிபத்தியமாக வளர்ந்த சூழலில் ஆங்கிலேயர்கள் எப்படி இந்த நாட்டைத் தம் வயப்படுத்தி ஆளத் தொடங்கினார்கள் என் பதைத் தகுந்த ஆவணப் பதிவுகளுடன் இருவரும் மதிப்பீடு செய்துள்ளார்கள். வணிகம் செய்ய வந்த வர்கள் மிகப் பெரிய ஒரு நாட்டை எப்படிக் கைப் பற்றினார்கள் என்ற புதிர் நிறைந்த கேள்விக்கு அவர்கள் மிகச் சரியான பதிலை ஆதாரங்களோடு வெளிப்படுத்துகிறார்கள்.
அன்றைய இந்தியாவில் மக்கள் பரவலாகச் சிதறிக் கிடந்தார்கள். இனங்கள், சாதிகள், குலங்கள், மொழிகள், சமயக் கொள்கைகள், அரசுரிமைகள் போன்ற பிரிவுகளின் கீழ், காலம் காலமாகக் கூடி யிருந்தும், பிளவுபட்டும் மக்கள் வாழ்ந்துகொண் டிருந்தார்கள். இந்த வகையான வேறுபாடுகளும், மாறுபாடுகளும்தான் பிரித்தாளும் சூழ்ச்சித் திட்ட அடிப்படையில் இந்தியாவைக் கையகப்படுத்தி ஆள்வதற்கு அவர்களுக்கு வசதியாக இருந்தது. அந்நியர்களாகிய ஆங்கிலேயர்கள் இந்திய மக்களிடையே சமய, இன, சாதி குல மாறுபாடு களை ஊதிவிட்டு அவர்களிடையே பகைமை உணர்வை வளர்த்து இந்திய மண்ணின் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்ட விதத்தை மார்க்ஸ் தெளிவுபடுத்துகிறார்.
ஆன்மிக வலிமையுள்ள இந்தியாவின் தனித் தன்மைகளைப் பற்றி கார்ல் மார்க்ஸ் ஆழமாகவே ஆய்ந்து தெளிந்திருக்கிறார் என்பது தெளிவு. மக்களுடைய பக்தியுணர்வு பூரி ஜெகந்நாதரிடத் திலும், இலிங்க வழிபாட்டிலும் எந்த அளவுக்குத் தோய்ந்திருக்கிறது என்பதையும் மார்க்ஸ் குறிப் பிடுகிறார்.
இயற்கையில் இந்தியா நிலவளமும், நீர்வளமும், மனித வளமும், மலை வளமும் நிறைந்த நாடு. மண்ணுக்கு மேலேயும், உள்ளேயும் அளவு கடந்த வளங்கள் பரவலாக நிறைந்திருக்கின்றன. அவற்றை யெல்லாம் ஆங்கிலேயர்கள் தங்கள் வசமாக்கிக் கொண்டனர். அதற்கான எல்லாவிதமான தந்திரங் களையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். அதை மார்க்ஸ் தகுந்த ஆவணங்களோடு விளக்கிக் காட்டுகிறார்.
அன்றைய வரலாற்றுச் சூழலில் இந்தியாவில் நிலவுடைமை சார்ந்த பொருளுற்பத்தியே முதன் மையாக இருந்தது. அதை ஆங்கிலேயர்கள் தங்களுக்குச் சாதகமான உற்பத்தியாக மாற்றிக் கொள்ள என்னென்ன முயற்சிகளை மேற்கொண் டார்கள் என்பதை மார்க்ஸ் அடையாளம் காட்டு கிறார். நீர்ப்பாசன முறையை மாற்றி அமைத்து நிலம் சார்ந்து வாழ்ந்து வந்த மக்களின் வேலைப் பாதுகாப்பை அவர்கள் சிதைத்தார்கள்.
காலம் காலமாக நின்று நிலவி வந்த நெசவுத் தொழிலை அழித்து இந்தியர்களின் வேலை வாய்ப்புக்களைத் தகர்த்தார்கள். இயந்திர முறையில் உற்பத்தி செய்யப் பட்ட துணிகளை இந்தியச் சந்தைகளில் புகுத்தி உள்நாட்டு உற்பத்தியைச் சீர்குலைத்து மக்களைத் துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கினார்கள். நிலச் சீர்திருத்தம் என்ற வகையில் படைமானியப் பிரபுத்துவ மிச்ச மீதங்களைப் பாதுகாத்தார்கள்.
விவசாயிகள் மீது ஆங்கில அரசு தாங்க முடியாத வரிகளைச் சுமத்தினார்கள். உள்ளூர் நிலப்பிரபுத்துவமும், ஏகாதிபத்திய அரசும் செலுத்திய ஆதிக்கம் விவசாயியை இரட்டை நுகத்தடியின் கீழ் அல்லல்படச் செய்தது. வரிச் சுமையோடு கடுமையான நடவடிக்கைகளை எதிர் கொள்ள முடியாமல் விவசாயிகள் பட்ட துன்ப துயரங்களைப் பற்றியும் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இவற்றை மார்க்ஸின் ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி’, ‘கிழக்கிந்தியக் கம்பெனி - வரலாறும், விளைவுகளும்’, ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்’ போன்ற கட்டுரைகள் தெளிவுபடுத்துகின்றன.
இந்தியாவில் ஆங்கில ஆட்சியாளர்கள் அடித்த கொள்ளையும் காலனியச் சுரண்டலின் கொடிய முறைகளுமே இந்தியப் புரட்சிக்குக் காரணங் களாக இருந்தன என்று முடிவு கட்டுகிறார் மார்க்ஸ். அதை, “பிரெஞ்சு முடியாட்சியின் மீது தாக்குதலைத் தொடுத்தது யார்? விவசாயிகள் அல்ல; பிரபுக்களே; இந்தியப் புரட்சியைத் தொடங்கியது யார்? பிரிட்டிஷாரால் சுரண்டப் பட்டும், அவமதிப்புக்கு ஆளாகியும், சித்திரவதைக்கு உள்ளாகியும் அல்லலுற்ற விவசாயிகளல்ல; உடையும், உணவும் ஆதரவும் பெற்ற சிப்பாய்களே!” என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.
இவற்றைப் பற்றி அவருடைய “இந்திய ராணுவத்தில் புரட்சிக் கலகம், “இந்தியாவில் புரட்சி, “இந்திய வரலாறு பற்றிய குறிப்புகள்” போன்ற கட்டுரைகளில் விரிவாகத் தெளிவுபடுத்துகிறார்.
மார்க்ஸுக்கும், எங்கல்ஸுக்கும் இடையில் நிகழ்ந்த கடிதத் தொடர்புகளும் இந்தச் சிறந்த ஆவண வரலாற்றில் சேர்க்கப்பட்டுள்ளன. அன்றைய வரலாற்றுச் சூழலில் உலகளாவிய அளவில் நிகழ்ந்த பல வகையான சுரண்டல்களையும், அவற்றிற்கு எதிராக நிகழ்ந்த மக்களது போராட்டங்களையும் தகுந்த ஆவணங்களாகக் கருதி ஆய்வு செய்து புதிய மதிப்பீடுகளை அவர்கள் முன்வைக்கிறார்கள். அவை வரலாற்றுணர்வு கொண்ட வாசகர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் வாசிப்புக்கும், ஆய்வுக்கும் உகந்தவையாக உள்ளன.
ஆங்கிலேயர்கள் தங்களுடைய படைகளுக்குள் நடந்த கலகத்தை எப்படி அடக்கினார்கள் என்பதைப் பற்றியும், மக்களுடைய எழுச்சியின் வடிவங்களாக வெளிப்பட்ட சிறிய புரட்சிகளை எப்படி ஒடுக்கினார்கள் என்பதைப் பற்றியும் ஏராளமான தகவுகளை அவர்கள் திரட்டி சமூக அறிவியல் கண்ணோட்டத்தில் ஆய்வுகளைச் செய்து முடிவுகளை நிறுவுகிறார்கள்.
நிலவுடைமைச் சமுதாயத்திலிருந்து, இந்தியா எப்படி முதலாளித்துவ சமுதாயமாக மாறுகிறது அல்லது மாற்றப்படுகிறது என்பதை இந்த வரலாற்று ஆவணம் தகுந்த முறையில் வரிசைப்படுத்துகிறது. குறிப்பாக, இந்தியச் சமுதாய அமைப்புக்குள் நிலவிவந்த பல வகையான மாறுபாடுகளையும், வேறுபாடுகளையும் கூர்மையாக ஆய்வு செய்து பிரித்தாளும் சூழ்ச்சி அடிப்படையிலான திட்டத் துடன் ஆங்கிலேயர்கள் வடிவமைத்து சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்தார்கள் என்பதை மார்க்ஸும், எங்கல்ஸும் இனம் காட்டுகிறார்கள்.
இன்றைய இந்தியச் சூழல்களில் பிளவுபட்ட தன்மைகள் பரவலாகி வருவதை அன்றாடம் கண்டு வருகிறோம். சாதி, மத, இன, மொழி, நிற வேறு பாடுகளை முதன்மைப்படுத்தி வளர்ந்து வரும் மக்கள் இயக்கங்கள் புதிய காலனியச் சூழலில் வரவிருக்கும் தீமைகளைப் புரிந்துகொண்டு இந்தியாவின் தனித்தன்மையைக் காப்பாற்று வதற்குரிய விழிப்புணர்வை மக்கள் பெற வேண்டும்.
தமிழர்கள் கற்பனையான வரலாற்றுக் கண் ணோட்டத்திலிருந்து விடுபட்டு சமூக அறிவியல் சார்ந்த அறிவியல் கண்ணோட்டத்திற்குத் தம்மை உள்ளாக்கிக் கொள்ள வேண்டும். வரலாற்று வளர்ச்சியினூடாக மனிதன் தன்னை ஒரு ஆக்க சக்தியாக வடிவமைத்துக் கொள்ள வேண்டும். அறிவியல் வளர்ச்சி, முதலாளித்துவ உற்பத்தி நோக்கத்திற்காகப் பயன்படுத்தாமல், மனிதகுல வளர்ச்சிக்கு உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்தை இந்த அருமையான வரலாற்று ஆவணம் நமக்குள் வளர்த்துக் கொள்ள உதவுகிறது.