தமிழ் மண்ணில் சமயப் பணியாற்ற வந்த ஐரோப்பியத் திருத்தொண்டர்களுள் பெரும்பான்மை யோர் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் குறிப்பிடத் தக்க பங்களிப்புகள் செய்துள்ளனர். அவர்களுள் என்றும் நினைக்கத்தக்கவராக இருப்பவர்களுள் இராபர்ட் கால்டுவெல்லும் ஒருவராவார். இராபர்ட் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழுக்கும் தமிழக அரசியலுக்கும் செய்த பங்களிப்புகளின் காரணமாக அந்த நூல் இன்றளவும் பேசப்படுகின்றது. இந்த நூல் பேசப்பட்ட அளவிற்கு அவரது பிற படைப்புகள் பேசப்படவில்லை. அது போன்றே அவரது சமூகச் சமயப் பணிகளும் பேசப்படவில்லை. தமிழ்ச் சமூகச் சூழலில் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் மதிப்பிடற்கரிய பங்களிப்பாக அமைந்ததால் கால்டுவெல்லின் ஏனைய பணிகள் துலங்கவில்லை. அவ்வாறு துலங்காமல் போன ஒர் அரிய பணி, இடையன் குடியின் உருவாக்கமும் அங்கு அவர் எழுப்பிய தேவாலயமுமாகும்.

இடையன்குடியில் இடையர்கள் மிகுதியாக வாழ்ந்ததால் அப்பெயர் பெற்றதாக வாய்மொழித் தகவல்கள் குறிப்பிடுகின்றன. வறட்சி, பஞ்சம் ஆகிய வற்றின் காரணமாக இடையர்கள் குடிபெயர்ந்ததால் நாடார்கள் இப்பகுதியில் குடியமர்ந்தனர். இடையன்குடி செம்மண் தேரி ஆகும். இதன் சுற்றுவட்டாரங்களில் பனைமரங்கள் மிகுதி. எனவே நாடார்கள் இடையன்குடி வறட்சியான பகுதி என அறிந்தும் அப்பகுதியில் குடியமர்ந்தனர். கால்டுவெல் அங்கு வரும் பொழுது அது ஒரு கிராமம் என்று அழைக்கும் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. “பிளந்த கள்ளியும் விரிந்த முள்ளியும் நிறைந்த தேரியில் கற்பகத் தருவெனத் தழைத்துச் செழித்து வளரும் பனைகளே அந்நிலத்தில் வாழும் மாந்தர்க்கும் பழுதற்ற செல்வமாகும். காலையும் மாலையும் பனையேறிப் பதநீர் வடித்துப் பண்புறக் காய்ச்சி, கட்டிசெய்து விற்றுக் காலங்கழிக்கும் ஏழை மக்களே அவ்வூர்ப் பழங்குடிகளாவர். கால்டுவெல் ஐயர் அவ்வூரில் வந்த பொழுது கூரை வேய்ந்த குடிசைகள் தாறுமாறாகக் கட்டப்பட்டிருந்தன. மனைகளைச் சூழ்ந்து முள் நிறைந்த கள்ளியே வேலியாக அமைந்தது. நேரிய தெருக்கள் எங்கும் காணப்படவில்லை. ஊர் நடுவேயமைந்த அகன்ற வெளியிடத்தில் ஓங்கி உயர்ந்த புளிய மரங்கள் ஆங்காங்கு நின்று நிழல் விரிந்தன. அவ்வெளியிடத்தில் ஒரு மூலையில் வழிபாட்டுக்குரிய கிருத்தவக் கோயிலும் வேதியர்க்குரிய சிறு வீடும் அமைந்திருந்தன (ரா.பி.சேதுப்பிள்ளை 2013:733).
கால்டுவெல்லுக்கு முன்னர் அவ்வூரில் பணி யாற்றிய திருப்பணியாளர்கள் சிறிய ஆலயம் மற்றும் திருப்பணியாளர் இல்லம் ஒன்றும் அமைத்திருந்தனர். இதற்காக அவர்கள் சொற்ப அளவில் நிலமும் சொந்தமாகப் பெற்றிருந்தனர். கால்டுவெல்லுக்கு இடையன்குடி ஊரின் அமைப்பு ஒழுங்கற்றதாகவும் திட்டமிடப்பெற்ற குடியிருப்பதாகவும் தோன்றவில்லை. கால்டுவெல்லின் சமகாலத்திலும் அவருக்கு முன்னரும் திருநெல்வேலி மாவட்டத்தில் தொண்டாற்றிய ஐரோப்பியத் திருத்தொண்டர்கள் உருவாக்கிய பல கிராமங்கள் அவர் மனக்கண்முன் தோன்றின. அக் கிராமங்கள் நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் திட்டமிடப் பெற்றிருந்தன. மெஞ்ஞானபுரம், சாயர்புரம், சமாதான புரம், நாசரேத், அடைக்கலப்பட்டணம் ஆகிய ஊர்கள் அவருக்கு முன் மாதிரிகளாக அமைந்தன. இவ்வூர்களை உருவாக்கிய ரேணியஸ், ஜி.யு.போப், மர்காசியஸ் போன்றவர்கள் அவருக்கு முன்மாதிரிகளாக அமைந்தனர்.
கிறித்தவத்தைத் தழுவியவர்களுக்கு அவர்களது சாதியினராலும் பிறசாதியினராலும் கொடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களும் இடையூறுகளுமே இத்தகைய புதிய கிறித்தவக் கிராமங்களின் உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தன. ஆனால் இடையன்குடியில் கால்டு வெல்லுக்கு அப்படியரு சூழல் இருந்ததாகத் தெரியவில்லை. “எஸ்.பி.சி.கே. சங்கத்தாருடன் மிகத் தோழமை கொண்டிருந்த கிழக்கிந்தியக் கம்பெனி உத்தியோகஸ்தரான ஒரு ஆங்கிலோ இந்தியச் சபையினரான சாயர் என்பவருடைய பெயர் அவருக்கு நன்றியறிதலான, ஞாபகர்த்தமாக இடப்பட்டது. துன்புறுத்தப்பட்ட கிறித்தவர்கட்காக தாமிரபரணி ஆற்றின் வடபுறத்தில் 150 ஏக்கர் நிலம் வாங்கி அந்த அமைதியான சமாதானமான இடத்தில் அவர்களைக் குடியேற்றினர். 1814இல் அந்தக் கிராமமானது சாயர்புரம் என்ற பெயர் பெற்றது (ஹென்ரி பாக்கிய நாதன்,பக்.54). இவ்வாறு புதிதாக நிலத்தை வாங்கி அங்குக் குடியிருப்புக்களை அமைத்து ஒரு கிராமத்தை உருவாக்கும் செயலைப் பல திருப்பணியாளர்கள் செய்துள்ளனர்.
இடையன்குடி கால்டுவெல்லுக்குச் சவாலாக இருந்தது. அங்குக் குடிசைகள், சிறிய ஆலயம் போன்றவை ஏற்கனவே இருந்தன. இந்த அமைப்பை ஒழுங்குபடுத்துவதே கால்டுவெல்லின் நோக்கம். கால்டுவெல் கிறித்துவப் பயிற்சிக்கு முன்னர் டப்ளினில் ஓவியப் படிப்புப் படித்தார். எனவே அவருக்கு அழகுணர்ச்சி இயல்பாகவே அமைந்திருந்தது. இதனால் அழகான இடையன்குடி குறித்த ஓரு ஓவியம் அவர் மனத்தில் இருந்தது. இந்தச் செயல்திட்டத்தை நிறை வேற்றக் கடுமையாகப் போராடினார் அவர். “திருக் கோயிலைச் சுற்றியிருந்த நிலங்களை விலை கொடுத்து வாங்கினார். அந்நிலங்களில் தொன்று தொட்டுக் குடியேற்றுரிமையின் பெயரால் வீடு கட்டுங் காலங் களில் கடமை பெற்று வந்த சில நாடார்களின் உரிமை களைத் தக்க விலை கொடுத்து விலக்கினார். இங்ஙனம் வில்லங்கத்தைத் தீர்த்தொழித்த பின்பு அந்நிலங்களைத் திருத்தத் தொடங்கினார். எம்மருங்கும் பரந்து கிடந்த கள்ளியையும் முள்ளியையும் களைந்தெறிந்து தெருக் களைத் திருத்தமுற வகுத்து சந்திகளில் கிணறுகளமைத்து நிழல் விரிக்கும் மரங்களை வீதியின் இரு புறமும் நட்டு செவ்விய முறையில் சிறு வீடுகள் கட்டுவித்தார். எண்ணும் எழுத்தும் அறியாதிருந்த அவ்வூர்ச் சிறுவர் சிறுமியர்க்கு எழுதவும் படிக்கவும் கற்பிக்கக் கருதிப் பாடசாலைகள் நிறுவினார் (ரா.பி.சேதுப்பிள்ளை 2013:734).
கால்டுவெல் அவர்கள் இடையன்குடி கிராமத்தை வடிவமைக்க ஒரு வரைபடம் தயாரித்ததாகச் சொல்லப் படுகின்றது. இந்த வரைபடத்தைத் தயாரிப்பதற்காக மரம் ஒன்றின் மீது ஏறி அதன் பரப்பையும் கிடப்பையும் அறிந்தார் என செவிவழிச் செய்திகள் உள்ளன ((D.S.George Muller 1996:3). ஆர்.எஸ். ஜேக்கப் அவர்கள் எழுதிய பனையண்ணன் நாவலில் கால்டுவெல் பனைமரத்தின் மீது ஏறி இடக்கிடப்பை அறிந்தார் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது (ஆர்.எஸ்.ஜேக்கப் 2009:95). எவ்வாறாயினும் அவர் இடையன்குடி கிராம உருவாக்கத்திற்கு வரைபடம் ஒன்று தயாரித்துச் செயல்படுத்தினார் என அறியமுடிகின்றது. நிலம் வாங்குவதற்கும் நிலத்தைச் சீர் செய்வதற்கும் தனது நண்பர்களிடமிருந்து நன்கொடைகள் பெற்றார். இவ்வேலைகளை அக்கிராமத்து மக்களுக்குச் சம்பளம் கொடுத்துச் செய்வித்தார். அவர்கள் பெற்ற சம்பளத்தைச் சேமிக்கச் செய்து தங்களுக்கு வீடுகள் அமைக்கச் செய்தார். மாதிரிக்காக சில வீடுகளைக் கட்டி அதே மாதிரி வீடுகளைக் கட்டுவித்தார்.
1890 இல் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்போது இடையன்குடியில் 61 வீடுகள் தீக்கிரையாயின. மனத்துயருற்ற கால்டுவெல் உடனடியாக நிவாரண உதவிகள் செய்தார் ((D.S.GeorgeMuller1996:11). இச்செய்தி இடையன்குடியில் கட்டப்பட்ட வீடுகள் பனையோலையால் வேயப்பெற்றவையாக இருக்கலாம் என்பதை உணர்த்துகின்றது.
கால்டுவெல் பணியாற்றிய காலம் எஸ்.பி.ஜி. மற்றும் சி.எம்.எஸ். ஆகிய நற்செய்தி நிறுவனங்களுக் கிடையில் இருந்த வேற்றுமைகள் ஒரளவிற்குத் தணிந் திருந்த காலமாகும். இரு நற்செய்தி நிறுவனங்களும் பரஸ்பரம் நல்லிணக்கத்துடன் செயல்பட்ட காலம். இந்தியாவில் காலனிய ஆட்சி நிலைபெற்று நின்றது. சென்னை மாகாணமும் உருவாக்கப்பட்டிருந்தது. சீகன் பால்கு தரங்கம்பாடியில் உருவாக்கிய அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான கல்வி நிலையங்கள் என்னும் கருத்தாக்கம் சென்னை மாகாணம் முழுவதும் பரவியிருந்தது. காலனிய அரசும் பொதுக் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்தது.
“இந்தியாவில் இலக்கிய மறு மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் இந்தியக்குடிகளிடையே கல்வியறிவை ஊக்குவிக்கவும் இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் பகுதிகளில் வாழும் மக்களிடையே விஞ்ஞான அறிவைப் புகுத்தவும் அரசு வருமானத்தில் ஆண்டு தோறும் ஒரு இலட்சம் ரூபாய்க்குக் குறையாமல் 1813 சாசன சட்டத்தின் 43ஆவது பிரிவு தலைமை ஆளுநருக்கு அதிகாரம் அளித்தது” (து.சதாசிவம் மேற்கோள் திராவிடப்பித்தன் 2009:36). இந்தச் சூழல் கால்டு வெல்லுக்கு இடையன்குடியில் கல்விக்கூடம் அமைப் பதற்கு வசதியாக அமைந்தது. அவர் 9 பள்ளிக்கூடங்கள் நிறுவியதாகக் குறிப்புகள் உள்ளன ((D.S.George Muller 1996:3)பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நண்பகல் உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். பெண்கல்விக்கு இடையன்குடியில் கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் கால்டுவெல் ஊர்ப்பெரியவர்களை வாரம் ஒரு முறை சந்தித்துப் பெண்கல்வியின் இன்றியமை யாமையை எடுத்துரைத்து அவர்களைத் தெளிவடையச் செய்தார். அவரது மனைவி எலிசாவின் உதவியுடன் பெண்களுக்குத் தையல் பயிற்சி மற்றும் கல்வி கிடைக்க வாய்ப்பளித்தார். இடையன்குடியில் 1844இல் பெண்களுக்காக உறைவிடப் பள்ளி ஒன்றைக் கால்டு வெல்லின் மனைவி எலிசா தொடங்கினார். பொது மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு ஆகியவை கிடைக்க வழிவகை செய்தார். சென்னை மாகாண கவர்னர் நேப்பியரிடம் பேசி 1870 இல் இடையன் குடியில் மருத்துவமனை ஒன்று தொடங்க உரிய ஏற்பாடுகள் செய்தார்.
இடையன்குடி நாடார்கள் மூடநம்பிக்கைகள் உடையவர்கள் என்றும் நாகரிகமற்றவர்கள் என்றும் கால்டுவெல் உணர்ந்தார். எனவே மூடநம்பிக்கைகளை அகற்றவும் பண்பட்ட வாழ்வியல் முறையைக் கற்றுக் கொடுக்கவும் தொடர்ந்து போதனை செய்துவந்தார். இடையன்குடியைப் புதியதொரு ஒழுங்கமைப்பில் அகலமான தெருக்களோடு வடிவமைத்த கால்டு வெல்லுக்கு அவ்வூரில் பிரமாண்டமான திரித்துவ ஆலயம் ஒன்று எழுப்ப விரும்பினார். இது தொடர்பாக வரைபடம் பெறுவதற்காக இங்கிலாந்திலிருந்த ஆலய நிர்மாண சங்கத்தாருக்கு வேண்டுதல் விடுத்தார். அவர்கள் திரித்துவ ஆலயத்திற்கான வரைபடம் ஒன்றை அனுப்பி வைத்தனர். வரைபடம் பெற்ற மகிழ்ச்சியில் கால்டுவெல் ஆலயம் எழுப்ப உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் நிதிதிரட்டத் தொடங்கினார். ஆலயத்திற்கான அடிக்கல்லை 1847 இல் நாட்டினார். கால்டுவெல் திட்டமிட்டபடி சில ஆண்டுகளுக்குள் ஆலயத்தைக் கட்ட இயலவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட பஞ்சம், கொள்ளை நோய் போன்றவற்றின் காரணமாகவும் தமிழ் ஆய்வுகளின் காரணமாகவும் போதிய நிதி கிட்டாமையாலும் ஆலயத்தைக் கட்டிமுடிக்க 33 ஆண்டுகள் ஆகின. அவர் திருநெல்வேலியின் உதவி பிஷப்பாகப் பொறுப்பேற்ற பின் 1880 இல் அவர்கட்டிய திரித்துவ ஆலயம் திருநிலைப்படுத்தப்பட்டது. இந்த ஆலயம் கால்டு வெல்லின் பெயரை நினைக்கச் செய்யும் மற்றொரு நினைவுச் சின்னமாகும். ஆலயத்தின் அமைப்பு, கலை நுட்பங்கள் போன்றவை கலைத்திறன் மிக்கவை.
கால்டுவெல்லின் 33 ஆண்டுக்கால உழைப்பில் உருவாகிய திரித்துவ ஆலயமும் இடையன்குடி கிராமமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. “அக்கோவிலின் ஒவ்வோரங்கமும் கண்களைக் கவரும் அழகு வாய்ந்து விளங்குகின்றது. ஆயினும் சாலச் சிறந்த அக்கோவில் சாளரங்களைக் கண்டோர் அவற்றின் அழகையும் அமைப்பையும் எந்நாளும் மறவார் என்பது திண்ணம். திருப்பணி நடைபெறும் பொழுது கால்டு வெல் ஐயர் களியினால் சாளரங்கள் செய்து அவற்றில் கோலமார் கோடுகள் வரைந்து காட்டினார் என்றும் அவற்றை மாதிரியாகக் கொண்டு தச்சரும் கொல்லரும் சாளர வேலை செய்து முடித்தாரென்றும் அவ்வூர் முதியோர் கூறுகின்றார்கள். இளமையில் கவின்கலைக் கல்லூரியில் பழகி ஒவியக் கலையில் பரிசு பெற்ற கால்டுவெல் ஐயரின் கைவண்ணம் இடையன்குடிக் கோவில் சாளரங்களில் இயங்கக் காணலாம் (ரா.பி. சேதுப்பிள்ளை 2013:735-736). கால்டுவெல்லுக்கு இருந்த ஓவியக் கலை அறிவை ஆலயத்தை வடிவமைப்பதில் நுட்பமாகப் பயன்படுத்தியுள்ளார். இதற்குப் பலர் உதவியுள்ளனர். “அந்த ஆலயத்தின் இசை ஒலிக்கும் மணிகள், கால்டுவெல் அத்தியட்சரின் குடும்பத்தாரின் நன்கொடையாகும். கிராதி அறையின் சித்திரமயமான ஜன்னல் அக்காலத்தில் சென்னை ராஜ்ய கவர்னராக விருந்த நேப்பியர் பிரபுவின் நன்கொடையாகும்” (ஹென்றி பாக்கியநாதன்,பக்.57). இவ்வாறாக உருவாக்கப் பட்ட இடையன்குடி தூய திரித்துவ ஆலயம் கட்டடக் கலை நுட்பங்களிலும் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது.
இடையன்குடி ஆலயம் கோதிக் கட்டடக்கலை மரபைச் ((Gothic Architecture)) சார்ந்து கட்டப்பட்டது. ஜெர்மனியில் கி.பி 11ஆம் நூற்றாண்டில் தோன்றிய இக்கலைமரபு 13ஆம் நூற்றாண்டில் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. கதீட்ரல் ஆலயங்கள், அரண்மனைகள், ஆடம்பர பங்களாக்கள் போன்றவை இக்கலை மரபில் கட்டப்பட்டன. இருப்பினும் கோதிக் கலைமரபு கதீட்ரல் தேவாலயங்களை அடிப்படையாகக் கொண்டே வளர்ந்தன. பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் பரவிய இக்கலை மரபு 13ஆம் நூற்றாண்டிற்குப்பின் புதிய கோதிக் கலைமரபால் உள்வாங்கப்பட்டது. கோதிக் கலை மரபில் கூர்மையான ஆர்ச், மெல்லிய உயரமான தூண்கள், வெளிப்புறமாகப் புடைத்த கோடுகள், சித்திர வேலைப்பாடுகளுடன் அமைந்த ஜன்னல்கள் ஆகியவை அடிப்படையான பண்புகள் ஆகும். இப்பண்புகளை இடையன்குடி திருத்துவ ஆலயத்தில் காணலாம். கூர்மையான ஆர்ச், வெளிப்புறமாகப் புடைத்த கோடுகளைக் கொண்ட உயரமான தூண்கள், அத்தூண்களில் நாற்புறமாக அமைந்த ஆர்ச்சுகள் கூரையைத் தாங்குவதாக இடையன்குடி ஆலயம் அமைந்துள்ளது. சன்னல்களும் கதவுகளும் கூர்மையான ஆர்ச் வடிவம் பெற்றவை.
கால்டுவெல் இடையன்குடியில் செய்த புரட்சி ஆலயத்தின் நுழைவாயிலை நடுவில் அமைக்காமல் ஓரத்தில் அமைத்ததுதான். பொதுவாக கதீட்ரல் ஆலயங்களில் இவ்வாறு அமைவதில்லை. நுழைவாயில் நடுவில் அமைவது தான் மரபு. இம்மரபைக் கால்டுவெல் பின்பற்றவில்லை. ஆலயம் முச்சந்தியை நோக்கி அமைந்துள்ளது. இம்முச்சந்தியில் நாட்டார் தெய்வ வழிபாடுகளின் போது மேளதாளங்களுடன் சாமியாடு வதுண்டு. ஆலயத்தின் தலைவாசல் முச்சந்தியை நோக்கியதாக அமைந்தால் சாமியாட்டம் ஆல்டருக்கு நேராக அமையும் எனக் கருதிய கால்டுவெல் அதனை ஓரத்திற்கு மாற்றியதாகச் சொல்லப்படுகின்றது. ஆலயத்தின் தரை மற்றும் சுவர் கருங்கற்களால் அமைக்கப்பெற்றுள்ளது. வெளிப்புறக் கட்டட அமைப்பு பிரஞ்சுக் கட்டடக்கலை சார்ந்தது. குறிப்பாக வெளிப் புறச் சுவரின் தூண்கள் அமையுமிடங்களிலும் மூலை களிலும் பளுதாங்கிச் சாய்வுச் சுவர்கள் அமைக்கப் பட்டுள்ளன. இது பிரஞ்சு மரபு ஆகும்.
ஆலயத்தின் ஆல்டரின் மேற்கூரை ஆல்டரைச் சுற்றியுள்ள சன்னல்கள் அனைத்தும் கோதிக் கலை மரபைப் பின்பற்றிய கதீட்ரல் ஆலய அமைப்பாகும். ஆனால் சித்திரங்கள் கால்டுவெல்லின் கைவண்ணம் எனச் சொல்லப்படுகின்றது. ஆல்டரைச் சுற்றியுள்ள சாளரங்களின் கண்ணாடிகளில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள் ரோமானியம் மற்றும் அரேபியக் கலை மரபுகள் கலந்த கலவையாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கோயிலின் உட்புறத்தில் கூர்மை யான 5 ஆர்ச்சுகள் உள்ளன. இந்த ஆர்ச்சுகளின் மீது மரத்தால் கூரை வேயப்பட்டுள்ளது. கூரை செங்குத்துச் சாய்வாக அமைந்துள்ளது. பனிப்பிரதேசங்களில் அமையும் கூரை வடிவம் இதுவாகும். கோதிக் கலைமரபைப் பின்பற்றி இடையன்குடி ஆலயம் அமைக்கப்பெற்றிருந்தாலும் கோதிக் மரபின் வளமை இடையன்குடியில் காணப்படவில்லை. இதற்குப் போதுமான நிதி கிடைத்திருக்காது என்பதே காரண மாகலாம்.
சென்னை மாகாண கவர்னர் நேப்பியர் இடையன் குடிக்குக் கால்டுவெல்லின் பணிகளைப் பார்வையிட வந்த போது அவருக்கு 1000 பனைமரங்கள் பயிரிடத் தேவையான நன்கொடைகள் வழங்கினார். இங்கிலாந்தி லிருந்த போதகர் «ஐ.எம். வென்டன் என்பவர் வழங்கிய 100 பவுண்டு நன்கொடையைக் கொண்டு அரசு நன் கொடையாக வழங்கிய மலைச்சரிவில் கால்டுவெல் எஸ்டேட் ஒன்றை உருவாக்கினார் (D.S.George Muller1996:9). கால்டுவெல்லுக்குச் சுற்றுச்சூழல் குறித்த உணர்வு இருந்தது என்பதையே இக்குறிப்புகள் உணர்த்துகின்றன. இடையன்குடி ஊரில், ஏராளமான மரங்களை நட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டத்தின் வறட்சி குறிப்பாக தேரிக்காட்டின் வெப்பம், அவ்வவ்போது ஏற்பட்ட பஞ்சம் ஆகியவற்றை நேரடியாக உணர்ந்த கால்டுவெல் மழைவளம் பெற மரம் வளர்க்க வேண்டும் எனப் போதித்தார். அதைத் தானும் செய்து காட்டினார். வாழிடம் என்பது வெறும் நிலம் மட்டுமல்ல என்பதில் கால்டுவெல் உறுதியாக இருந்தார்.
ஒரு கிராமத்தை உருவாக்குவது என்பது எளிதான ஒன்று அல்ல. நிலத்தைப் பிரித்து, தெருக்கள், வீட்டு மனைகள், கோயிலுக்கான இடம் எனப் பருப்பொருளாகக் காண்பது எளிது. அதுமட்டுமே ஒரு கிராமமாகிவிடாது. அங்கு மக்கள் குடியமர வேண்டும். வீடுகள் அமைய வேண்டும். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும். ஆலயம், பள்ளிகள், மருத்துவமனை, கிணறுகள், வேலைவாய்ப்புத் திட்டங்கள் போன்றவை அனைத்தும் ஒருங்கே அமைந்தால்தான் அது வாழிடக் கிராமம் ஆகும். இதனை இடையன் குடியில் கால்டுவெல் வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளார். இடையன்குடி ஒரு மாதிரி கிராமமாக அமைந்துள்ளது. அண்மையில் இந்திய அரசின் சிறந்த திட்டமிடப்பட்ட கிராமம் என்னும் விருதை இக் கிராமம் பெற்றுள்ளது என்பது கால்டுவெல்லின் கிராம உருவாக்கத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் என்பதில் ஐயமில்லை.
துணை நூல்கள்
1. ஹென்றி பாக்கியநாதன், ஆ.இ.: நெல்லைத் திருச்சபை: இருநூறாண்டு சரித்திரம் (1780-1980), திருநெல்வேலி.
2. சண்முகசுந்தரம் (ப.ஆ) 2013 ரா.பி.சேதுப்பிள்ளை, சென்னை:காவ்யா
3. ரம்பாலாபோஸ்கோ,1980: கிறித்தவத் தமிழ்த் தொண்டர்கள், தூத்துக்குடி: கிறித்தவத் தமிழ் இலக்கியக் கழகம்.
4. ஜேக்கப்,ஆர்.எஸ், 2009: பனையண்ணன், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
5. திராவிடப்பித்தன் 2009: திராவிட நாட்டுக் கல்வி வரலாறு, சென்னை: கயல்கவின்.
6. George Muller,1996: Bishop Robert Caldwell,Tirunelveli: Bishop Stephen Neil Study & Research Centre.
7. Kumaradoss, Vincent, Y. 2007: Robert Caldwell: A Scholar- Missionary in Colonial South India, Delhi: ISPCK.