முன்குறிப்பு:

விரைவில் என்சிபிஎச் வெளியீடாக வெளியாகவுள்ள Ôலெனின் என்னும் மனிதர்Õ நூலுக்கான எஸ்.வி.ஆரின் முன்னுரை. 

மார்க்சியத்திற்கு லெனின் வழங்கிய பங்களிப்பை லெனினுடைய கோட்பாடுகளைத் தத்துவத்தை நடைமுறையை வரலாற்று நோக்கில் நிறுவுவதற்காகப் பல்லாண்டு உழைப்பை செலவிட்டு தொமாஸ் க்ரொவ்ஸ் எழுதியுள்ள நூலின் முதல் இயல் இப்புத்தகம்.

lenin 450அழுக்கைப் போக்கிக் கொண்டு

புரட்சிக் கடலில் பயணம் செய்ய

லெனினிடம் செல்கிறேன்

பொய்களையும் ஏமாற்றங்களையும்

கண்டஞ்சும் சிறுவனைப் போல்

இந்தப் புகழஞ்சலிகளைப் பார்த்து அஞ்சுகிறேன்.

எந்த மனிதன் பற்றியும் அது

பீதியை உண்டாக்கிவிடும்

கவிதையில் பிறந்த ஒளிவட்டம்

லெனினின் உண்மையான பரந்த-

மனித நெற்றியை மறைத்துவிடும்

இந்த நினைப்பே எனக்கு வெறுப்பூட்டுகிறது

சடங்குகள்

சமாதிகள்

ஊர்வலங்கள்

அஞ்சலிகள்

விளம்பரங்கள்

என்னும் இனிய தூபங்கள்

லெனினின் இயல்பான எளிமையைத்

தெளிவற்றதாக்கிவிடும் என்னும்

பதற்றம் ஏற்படுகிறது எனக்கு.

- விளாதிமிர் மயகோவ்ஸ்கி (‘Vladimir Ilych Lenin’’ என்னும் நெடுங்கவிதையிலிருந்து)

1

உலகமயமாக்கப்பட்ட முதலாளியம், பல்வேறு நாடுகளில் பாசிச வடிவங்களை மேற்கொண்டுள்ள இன்றைய சூழலில், கொடூரமான சமுதாய நிலைமை களுக்கான மாற்றுகளைத் தேடுபவர்கள் எவராலும் லெனினை நாடாமல் இருக்க முடியாது. அதே போல அந்த நிலைமைகளைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ள விரும்புபவர்களாலும் அவரை மறக்க முடியாது. ஏனெனில் வர்க்கங்களும் அரசும் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன், முதன் முதலானதாகவும் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சி களையும்விட மிக முக்கியமானதாகவும் இருந்த ரஷியப் புரட்சியின் மையமாக இருந்தவர் லெனின்.

உலகில் இன்று கம்யூனிச இயக்கம் மிகவும் பலகீனப்பட்டிருந்த போதிலும், அதனையும் அந்த இயக்கத்தால் வழி நடத்தப்பட்ட புரட்சிகளையும் கொச்சைப்படுத்தும், சிறுமைப்படுத்தும் எழுத்துகள்  ராபர்ட் செர்வீஸ், ரிச்சர்ட் பைப்ஸ் போன்ற மேற்கு நாட்டு வரலாற்றறிஞர்களால் மட்டுமின்றி, இன்றைய ரஷிய ‘மாஃபியா’ ஆட்சியாளர்களைத் திருப்திப் படுத்தவும்1 அவர்களது ஆட்சியை நியாயப்படுத்தவும் வரலாற்று நூல்களை எழுதிக் கொண்டிருக்கும் ரஷிய, கிழக்கு ஐரோப்பிய நாட்டு வரலாற்றாசிரியர்களிட மிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன. இவர்களில் மிக முக்கியமானவர் சோவியத் யூனியன் இருந்தபோது அதன் இராணுவத்தில் அரசியல் பிரிவில் (உளவியல் போர் பிரிவில்) உயரதிகாரியாக (Colonel-General) பணியாற்றியவர்; சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தவர்.

1991இல் சோவியத் யூனியனின் தகர்வுக்குப் பிறகு, கம்யூனிஸ்ட் கட்சியிலும் அரசுப் பணிகளிலும் உயர் பீடங்களிலிருந்த பலர் உடனடியாக ‘கம்யூனிஸ பிரமை’ களையப் பெற்றவர்களாய், மேற்கு நாட்டு ‘ஜனநாயக’ விழுமியங்களையும், பொருளாதார அமைப்பையும் சிலாகிப்பவர்களாய் மாறியது போலவே, வோல்கோகோனோவும் ரஷியப் புரட்சி லெனின், த்ரோத்ஸி, ஸ்டாலின் ஆகியோரைப் பற்றிய  வரலாற்று நூல்களை எழுதினார். சோவியத் யூனியன் இருந்தபோது உண்மையான மார்க்ஸிய ஆராய்ச்சியாளர்களுக்குக்கூட கிடைக்கச் செய்யப்படாத எண்ணற்ற ஆவணங்கள், புதிய ஆட்சியாளர்களால் வோல்கோகோனோவ், ரிச்சர்ட் பைப்ஸ், ராபர்ட் செர்வீஸ் போன்றவர்களுக்குக் கிடைக்கும்படி செய்யப்பட்டன. இந்தப் புதிய ஆவணங்களைக் கொண்டு ரஷியப் புரட்சியின் நியாயத்தை மறுதலிக்கும் வரலாறு எழுதும் நெறியை  வோல்கோகோனோவ் போன்றவர்கள் தொடங்கி வைத்தனர்.

இவை போக, மார்க்ஸியத்துக்கு லெனின் வழங்கிய பங்களிப்பை ஏற்றுக் கொள்ளாத அல்லது அதை மிகவும் குறைத்து மதிப்பிடுகின்ற மேலை நாட்டு மார்க்ஸிய அறிஞர்களும் உள்ளனர். மேற்சொன்ன அனைவரது எழுத்துகளையும் கருத்தில் கொண்டு, மார்க்ஸியப் புரட்சி கர லெனினை, அவரது கோட்பாடுகளை, தத்துவத்தை, நடைமுறையை வரலாற்று நோக்கில் நிறுவுவதற்காக பல்லாண்டுக்கால உழைப்பைச் செலவிட்டு தொமாஸ் க்ரொவ்ஸ் (Tamas Krausz) எழுதியுள்ள நூல், 2015இல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகப் புகழ்பெற்ற மார்க்ஸியப் பதிப்பகமான ‘மன்த்லி ரெவ்யூ ப்ரெஸ்’ஸால்  வெளியிடப்பட்டது.2 கிழக்கு ஐரோப்பிய அனுபவங்களைக் கொண்டு ஹங்கேரிய மார்க்ஸிய வரலாற்றறிஞர் எழுதிய நூல் என்னும் வகையில் இது சிறப்புக் கவனத்துக்குள்ளாகியது என்றாலும், பல இடங்களில் நம்மைத் தடுமாற வைக்கும் வகையில் இந்த நூலின் ஆங்கில மொழியாக்கம் அமைந்துள்ளது. இதை அமெரிக்க மார்க்ஸிய அறிஞர் பால் லெ ப்ளாங்கும் சுட்டிக் காட்டியுள்ளார்.3 இந்தக் குறை இருந்த போதிலும் இது உலகிலுள்ள மார்க்ஸிய, மார்க்ஸிய ரல்லாத வரலாற்றாய்வாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும், இந்த நூல், லெனினைப் பற்றிய கடைசி வார்த்தையல்ல. லெனினின் புரட்சிகரப் பங்களிப்புகளைப் பற்றிய  நூல்களை லார்ஸ் டி.லி (Lars T Lih),4 ஆகஸ்ட் ஹெச்.நிம்ட்ஸ் (August H.Nimtz ),5 கிறிஸ்தோஃபர் ரீட் (Christopher Read),6 அலெக்ஸாண்டெர் ராபினோவிட்ச் (Christopher Read)7 போன்ற வேறு பல வரலாற்றறிஞர்களும் எழுதியுள்ளனர். இவர்கள் அனைவருமே, லெனினை ஒரு சதிக்கூட்டத் தலைவராகச் சித்தரித்து வந்த கம்யூனிச எதிர்ப்பு வரலாற்றாசிரியர்களின் கூற்றுகளை ஏராளமான மூலத் தரவுகளைக் கொண்டு மறுதலித்துள்ளனர். 

‘லெனினை மறுகட்டமைத்தல்’ என தொமாஸ் க்ரொவ்ஸ் கூறுவது, லெனினை ‘விக்கிரகமாக’ ஆக்கிய வர்கள், அவரை ‘அரக்கராக’ சித்தரித்தவர்கள் ஆகிய இரு தரப்பினராலும் உருச்சிதைக்கப்பட்ட லெனின் என்னும் புரட்சிகர ஆளுமையை மீண்டும் நிறுவுவதைத் தான்.

நீண்ட முகவுரை போக எட்டு அத்தியாயங் களையும் பின்னுரைக்குப் பதிலாக எழுதப்பட்ட தொகுப்புரையும், 1917 முதல் 1924 வரையிலான ரஷிய வரலாற்று நிகழ்வுகளின் காலவரிசையும், இந்த நூலில் குறிப்பிடப்படும் முக்கிய வரலாற்று மாந்தர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளும் சில புகைப் படங்களும் கேலிச் சித்திரங்களும் உள்ள இது லெனினைப் பற்றிய அறிமுக நூலன்று. அவரைப் பற்றிய ‘அறிமுக நூல்கள்’ ஏராளமாக இருக்கின்றன. லெனினின் அறிவு வளர்ச்சி பற்றிய வரலாறுதான் இந்த நூல். லெனினின் புரட்சிகரக் கோட்பாடு, நடைமுறை ஆகியவற்றைத் தொகுத்துக் கூறும் நூல் என்றும் சொல்லலாம். லெனினின் புரட்சிகர அர்ப்பணிப்புக்கும் செயல்பாடுகளுக்கும் தூண்டுதல் தந்த, அவருக்கு வழிகாட்டிய கோட்பாடுகள், தத்துவங்கள் ஆகிய வற்றையும் அவை எவ்வாறு யதார்த்த நிலைமை களுக்குப் பொருந்திப் போகின்றனவாக இருந்தன என்பதையும் ஆராயும் மிகப் பெரும் பணியை மேற்கொண்டுள்ள நூல்.

லெனினின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் கூறும் முதல் அத்தியாயத்தில் மட்டுமல்லாது, நூல் நெடுக தொமாஸ் க்ரொவ்ஸ், உலக வரலாற்றில் மிக கொடூரமானவர்களிலொருவராகச் சித்தரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளை உடைத்தெறி கிறார். குறிப்பிட்டதொரு கோட்பாட்டின் மீது மூர்க்கத்தனமான, வெறித்தனமான பற்றுறுதியைக் கொண்டவர் என்றோ, ஈவிரக்கமற்ற காரியவாதி யாகவோ (அதாவது  தமது குறிக்கோளை அடைய எந்தத் தீய, கொடிய வழிமுறைகளையும் கடைப் பிடிக்கத் தயங்காதவர் என்றோ) லெனினைச் சித்தரிக்கும் புனைவுகளே இவை.

இவற்றுக்கு மாறாக, லெனினிடம் இருந்த நெகிழ்வுத்தன்மை, ஆக்கபூர்வமான அம்சம் ஆகிய வற்றை எடுத்துரைக்கும்  நூலாசிரியர், லெனினின் போராட்டப் பாதையில் ஏற்பட்ட திருப்பங்கள், சிக்கல்கள் ஆகியவற்றினூடே, அவரது வாழ்க்கைப் பணிகள் அனைத்தையும் ஒன்றுபடுத்திக் காட்டுகிற முரணற்ற அறிவு வளர்ச்சி இருப்பதை எடுத்துரைக்கிறார்.

லெனினைப் போலவே நூலாசிரியரும், அரசியல் என்பதை ஏதோ வெற்றிடத்தில் நிகழும் அருவமான விஷயமாக அன்றி, அதனை வரலாற்றுச் சூழலில் வைத்துப் பார்க்கிறார். மானுடச்செயல்பாடுகளுக்கும் எளிதில் வசப்படுத்த முடியாத யதார்த்த நிலைமை களுக்குமிடையிலான ஊடாட்டத்தை, அந்த ஊடாட்டத்தின் விளைவுகளை மதிப்பீடு செய்கிறார். இப்படிச் செய்வதன் மூலமே ரஷியப் புரட்சிக்கு இறுதியில் நேர்ந்த அவலத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்பதைக் காட்டுகிறார்.

மானுட விடுதலைக்கான போராட்ட வரலாற்றில் இன்றியமையாப் பாத்திரத்தை வகித்த லெனினை, முந்தைய சோசலிச மரபுக்கு வெளியே தனித்து நின்ற, அதிலிருந்து வேறுபட்டவராக விளங்கியவராகக் காட்டும் எண்ணற்ற முயற்சிகளுக்கு மாறாக, “லெனின் எப்போதுமே மார்க்ஸைக் கலந்தாலோசித்தார்” என்று க்ருப்ஸ்கயா கூறியதை நினைவூட்டுகிறார். மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் மானுட விடுதலைக்காக உருவாக்கிய தத்துவ, கோட்பாட்டு, நடைமுறைத் திட்டத்தை - அதன் கூர்முனையை மழுங்கச் செய்ய முயன்ற பலருக்கு எதிராக - பாதுகாத்து வளர்த் தெடுத்ததுதான் லெனினின் வாழ்க்கைப் பணி அனைத்துமே என்று கூறும் நூலாசிரியர்,  ‘லெனினிசம்’ என்பதை, ஒரு கட்சியின் கோட்பாடாகவோ, தத்துவ மாகவோ, அதனுடைய செயல்பாடுகளை நியாயப் படுத்துவதற்கான கருவியாகவோ குறுக்க முடியாது என்றும், உலகமனைத்திலுமுள்ள உழைக்கும் மக்கள் விடுதலை பெறுவதற்கான வழிகாட்டிகள் அதில் உள்ளன என்றும் கூறுகிறார். சோசலிச சமுதாயத்தைக் கட்சியால் மட்டுமே உருவாக்க முடியாது என்றும் அதில் தொழிற்சங்கங்களும் சோவியத்துகளும் முக்கிய பாத்திரம் வகிக்க வேண்டும் என்றும் கூறிய, திட்டவட்டமான சூழ்நிலைமைகளுக்கான திட்டமிட்ட தீர்வுகள், அவற்றுக்கான கோட்பாட்டுச் சட்டகங்கள் ஆகிய வற்றை உருவாக்கிய லெனினின் கருத்துகளை 80, 100 பக்க நூல்களில் - இதுதான் ‘லெனினிசம்’ என்று- குறுக்கிவிட முடியாது என்று கூறுகிறார்.

லெனினின் நிலைப்பாடுகள், அணுகுமுறைகள் அனைத்திலுமே மார்க்ஸின் படைப்புகளில் ஏற்கெனவே வெளிப்படையாகப் புலப்பட்டவையோ, உள்ளார்ந்தவை யாகவோ இருந்தவை மறுபிறப்பெடுத்தன என்று கூறுகிறார்: “ஐரோப்பிய சோசலிச ஜனநாயக இயக்கத்தி லிருந்த முதன்மையான போக்கு, மார்க்ஸின் மரபிலிருந்த  கூறுகளைப் புதைக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. லெனின் செய்தது என்னவென்றால், அவற்றை மறுகண்டுபிடிப்புச் செய்து, அவற்றுக்குப் புத்தாற்றல் ஊட்டி, அவற்றை ஆழப்படுத்தியது ஆகும்”. அது மட்டுமல்ல, ஐரோப்பிய சோசலிச ஜனநாயகம் காட்டி வந்த ‘ஐரோப்பிய மையவாத’ மார்க்ஸ§க்கு மாறாக, கீழைத் தேய நாடுகளுக்கும், காலனிய, அரைக் காலனிய நாடுகளுக்கும் பொருத்தப்பாடு உடைய மார்க்ஸாக மாற்றினார் லெனின்.

இந்த நூலில் தொமாஸ் க்ரொவ்ஸ் கூறும் வேறு சில முக்கியக் கருத்துகளாவன:

சமுதாயத்தில் புரட்சிகர மாற்றம் என்பது, கீழே இருந்து, அதாவது பாட்டாளிவர்க்கத்தின் தலைமையி லுள்ள உழைக்கும் வர்க்கங்களிலிருந்து கொண்டுவரப்பட வேண்டும் என்று கருதிய லெனின், மேலே இருந்து படிப் படியாக நாடாளுமன்றத்தின் மூலம் சோசலிசத்தைக் கொண்டுவர முடியும் என்னும் கருத்தை ‘சந்தர்ப்ப வாதம்’என்று கூறி,  அதற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்களைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தொடங்கினார். சர்வதேசத் தொழி லாளர் இயக்கத்தில் வளர்ந்து வந்த சீர்திருத்தவாதப் போக்குக்கு எதிராகக் கருத்துப் போராட்டத்தை நடத்திய லெனின், ஜார் அரசைப் புரட்சிகரமாகத் தூக்கியெறிவதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கட்சி அமைப்பை உருவாக்க உழைத்தார். சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் முதன்மை நீரோட்டமாக இருந்த இரண்டாம் அகிலத்திலிருந்த சோசலிஸ்ட் கட்சிகளில் பெரும்பாலானவை, முதல் உலகப் போர் தொடங்கியதும் தத்தம் நாட்டு அரசாங்கங்கள் பக்கம் சாய்ந்த போது, லெனினும் அவரது தோழர்களும் அந்த அகிலத்துடன் இருந்த உறவை முறித்துக் கொண்டனர்.

ஜாராட்சியின் கீழ் இருந்த நிலைமைகளில் புரட்சியையே தொழிலாகக் கொண்டிருக்கும்  உறுப்பினர் களைக் கொண்ட கட்சியால் மட்டுமே புரட்சியைச் சாதிக்க முடியும் என்று கருதிய லெனின், புரட்சிக்கான மூல உத்தி (strategy)) என்பது பல அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று கருதினார். அதனால்தான் சில குறிப்பிட்ட நிலைமைகளில், புரட்சியாளர்கள் நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கேற்க வேண்டும் என்பதையும், அதே வேளை தேர்தல் அரசியல் என்பது புரட்சிகர நிகழ்வுப் போக்கிலுள்ள இரண்டாம்பட்சமான கூறுதான் என்பதையும் வலியுறுத்தினார். லெனினைப் பொறுத்த வரை புரட்சிதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை யானது, புரட்சிகர மாற்றம்தான் சமுதாயத்தை மானுடக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, சமுதாய உறுப்பினர் களுக்கு உண்மையான சுதந்திரத்தைக் கொண்டு வருவதற்கான பாதையைத் திறந்துவிடும். “ஒரு வார காலமோ, ஒரு மாத காலமோ, எதுவாக இருந்தாலும் தொழிலாளர்கள் தமது வாழ்க்கையைத் தம் கட்டுப் பாட்டில் கொண்டுவருவதற்கான ஆற்றலை எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்பதுதான் புரட்சிகளின் வரலாற்றில் லெனினை மிகவும் கவர்ந்த அம்சமாக இருந்தது”. அதனால்தான் அவர் சில வாரங்களே நீடித்த பாரிஸ் கம்யூனை அடிக்கடி நினைவு கூர்வது வழக்கம்.

அரிஸ்டாட்டில் முதல் ஹெகல் வரை மேலை நாட்டுத் தத்துவங்களை ஆழமாகக் கற்ற லெனின், ப்ளகனோவைப் போலவோ, போக்டனோவைப் போலவோ தத்துவ நூல்கள் எதனையும் எழுதவில்லை. ஆனால் ‘முறையியலுக்கு’ (methodology) முக்கியத்துவம் கொடுத்தார். புரட்சிகரச் செயல்பாட்டுக்குப் புரட்சிகரக் கோட்பாடு இன்றியமையாத அடிப்படையாகும் என்பதும் இரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட வேண்டும் என்பதும் அவரைப் பொறுத்தவரை மாற்ற முடியாத விதிகளாக இருந்தன. “எல்லோருக்கும் முதலாக, மார்க்ஸியக் கோட்பாட்டு மரபில், முறை யியலுக்குள்ள நடைமுறை சார்ந்த முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, அதை உணர்வுபூர்வமாக நடைமுறைச் செயல்பாட்டுக்குச் சேவைபுரிய வைத்தவர் அவர்தாம் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறுகிறார் க்ரொவ்ஸ்.

வரலாற்று வளர்ச்சிகளை, அவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்புகளைக் கருத்தில் கொண்டும் அவற்றை ஒட்டுமொத்தமான ஒரு முழுமைக்குள் வைத்தும் பார்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் லெனின். அதே போல, வரலாறு என்பது, சீர்திருத்தவாதிகளும் வேறு பலரும் விளக்கி யதையும் புரிந்துகொண்டதையும் போல, நேர்க்கோட்டில் செல்லும் நிகழ்வுப்போக்கு அல்ல; மாறாக முறிவுகள், உடைவுகள், பாய்ச்சல்கள் ஆகியவற்றைக் கொண்டதேயாகும், வரலாற்றின் அடியாழத்தில் எளிதில் புலப் படாத வண்ணம் வளர்ச்சியடையும் அம்சங்கள் திடீரென ஒரே பாய்ச்சலில் மாற்றமடைகின்றன, புரட்சி என்பதும் அத்தகைய பாய்ச்சல்தான் என்பதை அவர் ஹெகலியத் தத்துவத்தைக் கற்றுத் தேர்ந்ததன் அடிப்படையில் வலியுறுத்தினார். யதார்த்தத்தைப் பற்றிய இயங்கியல்ரீதியான புரிதலைக் கொண்டு  திட்டவட்டமான செயல் விளைவுகளைப் பெற முடியும் என்பதை லெனின் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு சூழ்நிலைமையையும் அதனோடு தொடர்புடைய பிற சூழ்நிலைமைகளுடன் இணைத்து, அவையனைத் தையும் ஒரு முழுமைக்குள் வைத்துப் பார்த்து, அந்த  சூழ்நிலைமையை மாற்றக்கூடியதும் அதில் உள்ளார்ந்தது மான கூறு எது என்பதைக் கண்டறிவதில், எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதில், அதாவது ‘தொடர் சங்கிலியில் உள்ள முக்கியக் கண்ணி’ எது என்பதைக் கண்டறிவதில் முனைப்பாக இருந்தவர் அவர். அதனால்தான் ஏகாதிபத்தியச் சங்கிலியில் பலகீனமான கண்ணியான ஜார் ரஷியாதான்  முக்கியமான கண்ணியாக இருந்தது. அதை உடைத்து நொறுக்குவது ஐரோப்பியப் புரட்சிக்கு, உலகப் புரட்சிக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

‘வரலாற்றை உருவாக்குவது மனிதர்களே’ என்பதை இடைவிடாது கூறிவந்த  லெனின், சமுதாய மாற்றம் என்பது, அதை அடைவதற்கான உணர்வுபூர்வமான போராட்டத்தின் மூலமாகவே சாதிக்கப்படக்கூடிய தாகும் என்பதைப் புரிந்து கொள்ளாமல், வரலாற்று நிகழ்வுப்போக்குகளின் இயக்கத்தின் காரணமாகத் தவிர்க்க முடியாதபடி ஏற்படும் விளைவு என்று யாந்திரிகமாக விளக்கியவர்களை நிராகரித்தார். சமுதாய மாற்றம் படிப்படியாக ஏற்படும் என்னும் கருத்தைக் கொண்டிருந்தவர்களிடம் பகைமை பாராட்டினார். “மானுடச் செயல்பாடு (praxis) என்பதற்குள்ள மையமான, முக்கியமான இடத்தை மார்க்ஸ§க்குப் பிறகு மீண்டும் நிலைநாட்டியவர் லெனின்தான்”.

அதாவது மனிதர்களின் கருத்துகளும் செயல்பாடு களும் சமுதாய முழுமையின் பகுதிகளேயன்றி, அதற்கு வெளியே எப்படியோ இருப்பவை அல்ல. மார்க்ஸை அடியற்றிச் சென்ற லெனின், உலக மாந்தர்கள் அனைவரது நலன்களையும் தன்னகத்தே உள்ளடக்கி யுள்ள பாட்டாளிவர்க்கத்தை முதலாளியம் தோற்று வித்திருக்கிறது என்பதையும், அந்த வர்க்கம், எல்லா வர்க்கங்களையும் ஒழித்தால் மட்டுமே தன்னைத்தானே விடுதலை செய்து கொள்ள முடியும் என்பதையும் புரிந்து கொண்டார். சரியான சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில், சிறு எண்ணிக்கையிலான மக்களால், நிகழ்வுகளின் விளைவுகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கருதினார். இதன் பொருள், சிறு எண்ணிக்கை யிலான மக்களால் அவர்களாகவே மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதல்ல. மாறாக அந்தச் சிறு எண்ணிக்கை யிலான மனிதர்களுடன் இலட்சக்கணக்கானோர் இணைந்து கொள்கிற சாத்தியப்பாடுகளை அந்த நிலைமைகள் உள்ளடக்கியுள்ளன என்பதாகும்.

நவீன கால முதலாளியத்தைப் புரிந்து கொள் வதிலும் தமது புரட்சிகர மூல உத்தியை வகுப்பதிலும் லெனினுக்கு முக்கியமானதாக இருந்த விஷயம் ஏகாதிபத்தியமாகும். இலட்சக்கணக்கான மக்களை ஏகாதிபத்தியப் போர் கொன்று குவித்ததும்,  ஏகாதி பத்திய, முதலாளிய நாடுகளுக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டங்கள் வளர்ச்சியடைந்ததும் உலகெங்கும் புரட்சிகர மாற்றம் ஏற்படுவதற்கான புதிய சாத்தியப்பாடுகளை உருவாக்கின. இதைக் கருத்தில் கொண்டுதான் அவர் தேசியம், தேசிய இனம் பற்றிய கருத்துகளை உருவாக்கினார்.  தேசியத்தில் வெவ்வேறு வகைகள் இருப்பதாகக் கூறினார். ஏகாதிபத்திய, முதலாளிய நாடுகளில் இருப்பவர்களைப் பொறுத்தவரை ‘தாய் நாட்டைக் காத்தல்’ என்ற பேச்செல்லாம் பிற் போக்குத்தனமானது: “ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கு மான போரில் உள்ள பிரச்சினை  ஜனநாயகம் அல்ல; மாறாக உலகை ஆதிக்கம் செலுத்த வேண்டும், உலகைச் சுரண்ட வேண்டும் என்பதுதான். தங்கள் தேசத்தின்  சுரண்டலாளர்கள் பக்கம் சோசலிச ஜனநாயகவாதிகள் சாய வேண்டிய பிரச்சினை அல்ல அது... அதை ஜனநாயகப் போர் என்று சித்தரிப்பது தொழிலாளர் களை ஏமாற்றுவதும் பிற்போக்கு பூர்ஷ்வா வர்க்கத்தை ஆதரிப்பதும் ஆகும்.”

இந்தக்கூற்றைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, முதல் உலகப் போரின் போது ஜெர்மானியப் புரட்சி யாளரான கார்ல் லிப்னெஹ்ட்டின் புகழ்பெற்ற முழக்கமான ‘நமது முதன்மை எதிரி உள்நாட்டில்தான் இருக்கிறான்’ என்பதை ஆதரித்தார்.

ஒடுக்கப்பட்ட, ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் தோன்றிய தேசியம்  முற்றிலும் வேறுவகையானது. தமது காலத்திய சோசலிஸ்டுகள் பலரைப் போலன்றி அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய இயக்கங்களைக் கொள்கை அடிப்படையில் ஆதரித்தார். அவற்றை அவர் ஆதரிக்க மற்றொரு காரணம், அவை முதலாளிய ஆதிக்கக் கட்டமைப்புகளைப் பலகீனப்படுத்தும் என்பதாகும். மேலும், அவர் பரந்துவிரிந்த வர்க்கப் போராட்டம் என்னும் பின்னணியில்தான் ஏகாதி பத்தியத்தையும் அதற்கு எதிரான போராட்டத்தையும் பகுத்தாய்வு  செய்தார்: வர்க்கப் போராட்டம் என்னும் உலகுதழுவிய கருத்தாக்கத்திற்குள், மொழி வகையான, பண்பாட்டு வகையான ஒடுக்குமுறை உள்ளிட்ட தேசிய ஒடுக்குமுறையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்னும் கோரிக்கைகளை உள்ளடக்கினார்.

புரட்சி என்பது ஏதோ வரலாற்று வளர்ச்சியின் காரணமாகத் தானாக  நடப்பது அன்று, மாறாக அது திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட வேண்டியதொன்று என்று கூறினார்.  சீர்திருத்தவாதம் பற்றிய அவரது விமர்சனம், அடிப்படை மாற்றம் தன்னியல்பாகவே உருவாகிவிடும் என்னும் கருத்தை நிராகரிப்பதை உள்ளடக்கியிருந்தது. 1903ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட ‘இனி செய்ய வேண்டியது என்ன?’ என்னும் நூலில் அவர், நாடாளுமன்றம் மூலமாக சீர்திருத்தத்தைக் கொண்டு வருதல், தொழிற்சங்கப் போராட்டம் நடத்துதல் என்று சோசலிச நடவடிக்கைகளைப் பிரிவினை செய்வதைக் கடுமையாக விமர்சித்தார். தொழிற்சங்கப் போராட்டம் என்பதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் தாமாகவே சோசலிச உணர்வு மட்டத்தை அடைவதில்லை என்பது அவரது வாதங்களிலொன்று.

1905ஆம் ஆண்டு ரஷியப் புரட்சியின் அனுபவத்தின் பின்னணியில் மேற்சொன்ன நூலில் அவர் வகுத்திருந்த சில கருத்துகளிற் சில மாற்றங்களைச் செய்தார். ஆனால் அடுத்து வந்த கொந்தளிப்பான ஆண்டுகளில் அந்த நூலில் சொல்லப்பட்டிருந்த அடிப்படையான விஷயத்தை உறுதியாகக் கைக் கொண்டிருந்தார். ரஷியப் புரட்சி அனுபவம் அதனை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதாக இருந்தது. அரசியல் போராட்டத்தையும் அதில் பங்கேற்கும் சக்திகளையும் புரிந்துகொள்ளவும் இன்ன பிற விஷயங்களுக்கும் உணர்வுபூர்வமாக வகுக்கப்பட்ட மூல உத்தி, திட்டமிடுதல், ஒழுங்கமைப்புச் செய்தல் ஆகியன தேவை. இவற்றைப் புரட்சிகர அரசியலுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் அமைப்பால்தான் செய்ய முடியும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

மிக நெருக்கடியான காலங்களில்கூட லெனின், தொழிலாளர்களிடமிருந்து பிரிந்து நின்ற அமைப் பெதனையும் ஆதரித்ததில்லை. மாறாக,  சோசலிச ஜனநாயக இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதற்கான சட்டரீதியான மற்றும் தலைமறைவான அமைப்புகளின் தொடரமைப்பையே networks) நாடினார். இந்தத் தொடரமைப்புகளை உருவாக்குவதில் லெனினுக்கு இருந்த அடிப்படைக் குறிக்கோள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் வெவ்வேறு பிரிவுகளிடையே தகவல் தொடர்பும் அரசியல் நடவடிக்கையும் எளிதாக நடைபெற வைப்பதாகும்.

லெனினைப் பொறுத்தவரை புரட்சி என்பது சர்வதேசத் தன்மையுடையதாகும். 1917ஆம் ஆண்டு ‘ஏப்ரல் ஆய்வுரைகளில்’ போல்ஷ்விக் கட்சி, பூர்ஷ்வா ஜனநாயகக் கோரிக்கைகளைக் கடந்து சென்று தொழி லாளர்கள், உழவர்கள் ஆகியோரால் நடத்தப்படும் சமுதாயத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்ற ‘சர்ச்சைக்குரிய’ அறை கூவலை விடுத்தார். அதற்கு அடிப்படையாக இருந்தவை அவர் ஆழமாகப் புரிந்து கொண்ட இரு விஷயங்கள்: ஒன்று, பலகீனமான, ஊசலாட்டம் மிக்க பூர்ஷ்வா வர்க்கத்தால் அடிப்படை ஜனநாயகத்தைக்கூட கொண்டு வர முடியாது: ரஷிய பூர்ஷ்வா வர்க்கத்தாலும் தொடை நடுங்கி நடுத்தர வர்க்கத்தாலும் (ஜார் உள்ளதோ, ஜார் இல்லாததோ) பழைய ‘அரைகுறை நாடாளுமன்ற’ முறையையோ, பூர்ஷ்வா ஜனநாயக அமைப்பையோ நிலைநிறுத்த முடியாது. அவற்றை நிலைநிறுத்தச் செய்யப்படும் முயற்சிகள் -  புரட்சிகரத் தீர்வு இல்லாமல் போனாலோ, அது தோல்வி யடைந்தாலோ - எதிர்ப்புரட்சி சர்வாதிகாரத்துக்கான பாதையைத் திறந்துவிடும்.

லெனின் புரிந்துகொண்டிருந்த இரண்டாவது விஷயம், ரஷியப் புரட்சி என்பது மேலும் அகன்றதொரு புரட்சிகர நிகழ்வுப் போக்கின் பகுதியே என்பதாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடைவதற்கு முன்பே அவர், நிகழப்போகும் உலகப் புரட்சியின் பகுதியாகவே ரஷியப் புரட்சியைப் பார்த்தார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெடித்த முதல் உலகப் போர் இந்தப் பார்வையை வலுப்படுத்தியது. 1917ஆம் ஆண்டி லிருந்தே லெனினும் அவரது தோழர்களும் ரஷிய சோசலிச ஜனநாயகப் புரட்சி இயக்கத்தின் வெற்றியும் தோல்வியும் சர்வதேசப் புரட்சியின் வெற்றி தோல்வி களுடன் பிரிக்கமுடியாதபடி பிணைக்கப்பட்டிருப்ப தாகவே எப்போதும் கருதினர்.

லெனினின் படைப்புகளில் மிக அதிகமாகப் படிக்கப்பட்டது ‘அரசும் புரட்சியும்’ என்னும் நூலாகும். மானுட விடுதலைக்கான பாதை என்ற வகையில் மக்கள் ஜனநாயகத்தைப் பற்றிய மாபெரும் விளக்கங்களி லொன்றாக அந்த நூல் அமைந்துள்ளது. மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் படைப்புகளைப் பெரிதும் சார்ந்து எழுதப்பட்டுள்ள அந்த நூலில், ‘சந்தர்ப்பவாதி களால்’ குழி தோண்டிப் புதைக்கப்பட்ட முக்கிய மார்க்ஸியக் கருத்துகளை லெனின் ‘தோண்டி எடுத்துள்ளதாக’ தொமாஸ் க்ரொவ்ஸ் கூறுகிறார்.

அந்த நூலிலுள்ள முக்கியக் கருத்துகள்: இப் போதுள்ள நவீன அரசு, முதலாளிகளின் அதிகாரத்தை உத்தரவாதம் செய்யும் பாத்திரம் வகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே அது நடுநிலை யானதாக இருக்க முடியாது. இந்தக்  காரணத்தால், அதை சீர்திருத்த முடியாது; மாறாக அது உடைத் தெறியப்பட்டு அதற்குப் பதிலாக புதிய அரசு ஏற்பட்டால்தான் தொழிலாளி வர்க்கத்தால் சமுதாயத்தை வெற்றிகரமாகப் புத்தமைக்க முடியும். இந்தப் புதிய அரசு முற்றிலும் வேறான, புரட்சிகரமான சமூகக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும்; அது சாமான்ய மக்களால் நடத்தப்படும். மிக ஆழமான, அதன் அங்கம் போல உள்ள ஜனநாயகத்தன்மை அதற்கு இருக்கும். நாளடைவில் அது வாடி உதிர்ந்துவிடும். ஆனால்,  சமுதாயத்தின் மீது முதலாளியத்துக்குள்ள சக்தி, அதன் செல்வாக்கு ஆகியவற்றின் காரணமாக, எந்தவொரு ஜனநாயகக் குடியரசின் மீதும் ஆதிக்கத்தைச் செலுத்தக்கூடிய முழு ஆற்றலை, இலஞ்சத்தின் மூலமோ பங்குச் சந்தையின் மூலமோ சொத்துடைமையால் சாதிக்க முடியும். ஆகவே ஆட்சிமறுப்பியர்கள் (anarchists) கனவு காண்பது போல ஒரே அடியில் முதலாளியம் வீழ்ந்துவிடாது; அதற்கெதிரான போராட்டமும் முடிவு பெறாது. பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை முதலில் கைப்பற்றிய பிறகு வர்க்க சமுதாயத்தை முற்றிலுமாக உடைத்தெறியவும் முதலாளிகளின் செல்வாக்கைத் துடைத் தெறியவும் புதிய அரசு நிறுவனங்களை உருவாக்குவது தேவை.

‘அரசும் புரட்சி’யும் நூல், போல்ஷ்விக் கட்சி மார்க்கத்தின் கற்பனாவாதச் சித்திரம் அல்ல என்றும், மாறாக அப்போது ரஷியாவில்  நடந்து வந்த நிகழ்வு களின் கோட்பாட்டு வெளிப்பாடுதான் என்றும் க்ரொவ்ஸ் கூறுகிறார். அதாவது, வியக்கத்தகு மிகக் குறுகிய காலகட்டத்தில் சோவியத்துகள் என்னும் தொழிலாளர், உழவர், படைவீரர் அவைகள் ரஷியா வெங்கிலும் தோன்றி, இலட்சக்கணக்கான மக்களை நேரடி அரசியல் நடவடிக்கைகளுக்கு அழைத்து வந்தன. அடுத்த சில ஆண்டுகளில் இத்தகைய சோவியத்துகள் தற்காலிகமாக ஐரோப்பாவின் பல பகுதிகளில் தோன்றின. அதே காலகட்டத்தில் உலகில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாயின. 1919ஆம் ஆண்டில் ‘கம்யூனிசம்’ என்பது ஐரோப்பிய வெகுமக்கள் இயக்கமாக, ‘உலகக் கட்சி’யாக அமைந்தது.

ஆனால், ரஷியாவிலோ யதார்த்த நிலைமை முற்றிலும் வேறுபட்டதாகியிருந்தது. புதிய அரசின் அடித்தளமாக அமைந்த தொழிலாளர், உழவர், படைவீரர்களின் சோவியத்துகள், மேற்கு நாடுகளின் முற்றுகை, படையெடுப்புகள், பஞ்சம், உள்நாட்டுப் போர் ஆகியவற்றால் சிதைக்கப்பட்டன. இத்தகைய சவால்களுக்கு எதிரே புரட்சியால் விளைந்த சமூக ஆதாயங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.

அந்த இக்கட்டான காலகட்டத்தில் போஷ்விக்குகள் மேற்கொண்ட வேதனைக்குரிய நடவடிக்கைகளை (எதிர்க் கட்சிகளைத் தடை செய்தல் போன்றவற்றை) தொமாஸ் க்ரொவ்ஸ் விமர்சிக்கிறார்; போல்ஷ்விக் கொள்கைகளிலிருந்த முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டுகிறார். ஆனால், பொதுவாகப் பார்க்கப் போனால், அன்றிருந்த சூழ்நிலைமைகளை வேறு வகையில் கையாள்வதற்கான வாய்ப்புகள் மிக அரிதாகவே இருந்தன என்பதையும் சொல்கிறார். புதிய அதிகாரி வர்க்கத்தின் கைகளில் அதிகாரம் குவிவதைத் தடுத்து  நிறுத்துவதற்கான வழிமுறைகளை லெனினும் அவரது தோழர்களும் இடைவிடாமல் தேடிக் கொண்டிருந்ததை ஆவணப்படுத்துகிறார்.

பிற நாடுகளில் புரட்சி பரவுவதற்காக போல்ஷ் விக்குகள் இடைவிடாது போராடி வந்ததையும் 1918-1923ஆம் ஆண்டுகளில் அதற்கான வாய்ப்புகள் இருந்ததையும் குறிப்பிடுகிறார். ஆனால் போல்ஷ்விக்கு களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அந்தப் புரட்சிகள் ஒன்று தோன்றவேயில்லை அல்லது மிகக் குறுகிய காலமே நீடித்தன. உலகப் போர் முடிந்ததும் அதில் ஈடுபட்ட இரு தரப்பு ஆளும் வர்க்கங்களும் புரட்சிகளை ஒடுக்கு வதிலும் தடுப்பதிலும் வெற்றி பெற்றன. அந்த சூழ்நிலைமையில்  முரண்பாடுகள் கடக்க முடியாதன வாகிவிட்டன.  லெனின், அந்த இக்கட்டான நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்டதுடன், “தொழிலாளர் களின் ‘திரிபடைந்த’ அரசு”க்கு எதிராகத் தொழி லாளர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முயன்றார். ஆனால், ரஷியா தனிமைப்பட்டிருந்த நிலை, பொருளாதார பலகீனம், உள்நாட்டுப் போர் ஆகியன “அந்த சமயத்தில் கடக்க முடியாதபடியாக இருந்த வரலாற்றுரீதியான நிலைமைகளை உருவாக்கியிருந்தன”.

தொழிலாளர்களின் சுய விடுதலைக்காக இறுதி வரை தம்மை அர்ப்பணித்துக் கொண்டவராக லெனினைச் சித்தரிக்கும் க்ரொவ்ஸ், அவர் சில குறிப்பிட்ட வரலாற்றுச் சூழ்நிலைமைகளின் காரணமாக  தனித்து விடப்பட்டார் என்றும், அதன் காரணமாக ஸ்டாலினால் அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்கவும் லெனின் மேற்கொண்ட பரிசோதனைகளுக்கு மாறான வற்றைச் செய்யவும் முடிந்தது என்றும்  கூறுகிறார்.

2

1919இல் லெனினின் முகவுரையுடன் அமெரிக்காவில் வெளி வந்ததும், 1923இல் ரஷியாவில்  க்ரூப்ஸ்கயாவின் முகவுரையையும் சேர்த்து வெளியிடப்பட்டதும், 1924இல் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் தடை செய்யப்பட்டு, மீண்டும் 1975-1976ஆம் ஆண்டுகளில் வரலாற்றைத் திரிக்கும் அடிக்குறிப்புகளுடன் வெளி வந்ததுமான ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ என்னும் நூலில் ஜான் ரீட் எழுதுகிறார்:

கட்டை குட்டையான உருவம், தோள்களில் அழுத்தியமைந்த பெரிய தலை புடைத்துக் கொண்டு வழுக்கையாய் இருந்தது. சிறிய கண்கள், சற்று சப்பையான மூக்கு; வளமான அகன்ற வாய், தடித்த முகவாய் - தற்போது அது மழிக்கப் பட்டிருந்தது. ஆயினும் முற்காலத்திலும் இனி வருங்காலத்திலும் புகழுக்குரியதாயிருந்த அந்தத் தாடி ஏற்கெனவே முளைக்கத் தொடங்கியிருந்தது. சற்று தொள தொளப்பான ஆடைகள் அணிந் திருந்தார். கால் சட்டை அளவுக்கு அதிகமாய் நீளமாயிருந்தது. பெருந்திரளினரால் வழிபாட்டுக் குரியவராகப் போற்றப்படும்படி அவர் காண் போரை ஆட்கொள்ளும் தோற்றமுடையவரல்லர். ஆயினும் வரலாற்றில் மிகச் சொற்ப தலைவர்களே அவரைப் போல மக்களது பேரன்புக்கும் பாராட்டுக்கும் பாத்திரமாகி இருப்பார்கள். விசித்திரமான மக்கள் தலைவர் - முற்றிலும் அறிவாற்றல் என்னும் தகுதியின் காரணமாகத் தலைவராகியவர். வண்ணக் கவர்ச்சியில்லை, மிடுக்கில்லை, மனம் தளர்ந்து விட்டுக் கொடுக்கும் இயல்பில்லை, தன்வயப்பட்ட விருப்பு வெறுப் பில்லை. படாடோபமான தனிப் பாணிகள் ஏதுமில்லை - ஆனால் ஆழ்ந்த கருத்துகளை எளிய முறையில் விளக்கும் ஆற்றலும் ஸ்தூல நிலைமை களைப் பகுத்தாராயும் திறனும் நிரம்பப் பெற்றவர். இவற்றுடன் கூட மதிநுட்பமும் அசாதாரணமான தொலைநோக்குப் பார்வையும் சேர்ந்திருந்தன.8

தொமாஸ் க்ரொவ்ஸ் லெனினின் ஆளுமையைப் பற்றி நமக்கு வழங்கும் வரலாற்றை - சுருக்கமாகச் சொல்வதென்றால் - ஜான் ரீடின் சொல்லோவியத்தின் விரிவாக்கம் என்று  கொள்ளலாம்.

லெனினின் ‘மனிதப் பரிமாணங்கள்’ பல குறிப்பாக சோவியத் வரலாற்று நூல்களிலோ, பொதுவாக கம்யூனிஸ்ட்  சார்பான வரலாற்று நூல்களிலோ ஒன்று அறவே புறக்கணிக்கப்பட்டன அல்லது மூடி மறைக்கப் பட்டன.  இப்படிப்பட்ட செயல்களுக்கு, மாக்ஸிம் கோர்க்கி  லெனினைப் பற்றி எழுதிய நினைவுக் குறிப்புகளில் உள்ள ஒரு குறிப்பும்கூட பயன்படுத்தப் பட்டுள்ளது. புரட்சி அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பு தந்த  நிர்பந்தங்களும் வேலைச் சுமைகளும்  லெனினை அழுத்திக் கொண்டிருந்த காலத்தில் தமக்கும் லெனினுக்கும் நடந்த உரையாடலைப் பதிவு செய்துள்ளார் கோர்க்கி. லெனினுக்கு மிகவும் பிடித்த செவ்வியல் இசைகளிலொன்று பீத்தோவெனின் பியானோ இசைப்படைப்பான ‘அப்பேஷனாட்டா’.

அதைக் கேட்கும்போது, அப்படிப்பட்ட அழகான படைப்புகளைத் தோற்றுவித்த முதலாளிய சமுதாயத்தின் மீது தாம் மிகவும் மென்மையாக நடந்துகொள்ள வைப்பதாக கோர்க்கியிடம் கூறியிருக்கிறார்.9 அந்தக் கூற்றினை வைத்துக் கொண்டு பலர் லெனின் புரட்சியின் பொருட்டு இசையை முற்றிலும் மறந்துவிட்டதாகக் கூறிவந்தனர். ஆனால், புரட்சி கோரிய கடுமையான உழைப்புக்கிடையிலும் - கடைசி வரை- லெனின் இசையில் நாட்டம் கொண்டிருந்தார் என்பதை கனடா நாட்டு வரலாற்றறிஞர் லார்ஸ் டி லி எடுத்துக் காட்டுகிறார்: ரஷியாவிலும் (பிற நாடுகளிலும்கூட) புகழ்பெற்றிருந்த இசைநாடகப் பாடகர் ஃபியோதோர்  சாலியாபின் (Feodor Chaliapin), புரட்சிக்குப் பிறகு ஒரு நாள் லெனினைப் பார்ப்பதற்காக கிரெம்ளின் மாளிகையி லிருந்த லெனினின் அலுவலகத்துக்கு வருகிறார்.

சாலியாபினைப் பதினேழு ஆண்டுகளுக்கு முன் கோர்க்கியின் இல்லத்தில் நடந்த விருந்தொன்றின்போது சந்தித்ததையும் அங்கு வந்திருந்த விருந்தினர்களுக்காக அவர் பாடியதையும் குறிப்பிட்டு, ‘அது அற்புதமான மாலைப் பொழுது’ என்று மகிழ்ந்திருக்கிறார் லெனின்.10 வேட்டையாடுவதில் அவருக்குள்ள விருப்பம் கடைசி வரை நீடித்தது என்று தொமாஸ் க்ரொவ்ஸ் கூறுவதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். விளையாட்டுகள், நீச்சல் பயிற்சி, மலை ஏறுதல்,11 துப்பாக்கியால் குறி வைத்துச் சுடுதல், பனிக்கட்டிச் சறுக்கு விளையாட்டு, சதுரங்க விளையாட்டு ஆகியவற்றில் லெனினுக்கு இருந்த ஈடுபாடு பற்றி தொமாஸ் க்ரொவ்ஸ் கூறுவதைக் காட்டிலும் கூடுதலான விவரங்களை கார்ட்டெர் எல்வுட் என்னும் ஆராய்ச்சியாளர் திரட்டியுள்ளார்.12

லெனின், ‘கால்வாசி யூதர்’, அதாவது அவரது தாய் வழி முப்பாட்டனார் என்ற உண்மையும்கூட சோவியத் யூனியனின் இறுதி ஆண்டுகளில்தான் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டது என்னும் உண்மை சோவியத் சமுதாயத்தில் யூதர்களைப் பற்றிய சந்தேக மனப்பான்மை தொடர்ந்து  நிலவி வந்ததைக் குறிக்கின்றது. சோவியத் யூனியனின் தகர்வுக்குப் பிறகு வந்த ஆட்சியாளர்களின், சுரண்டும் வர்க்கங்களின் ஆட்சியை நியாயப்படுத்தும் வகையில் வரலாற்றைத் திரிபுபடுத்தி எழுதுபவர்கள், ரஷிய தேசியவெறியை ஊக்குவிக்கும் பொருட்டு, லெனினின் ‘யூதக் கலப்பை’ பெரும் பிரச்சினையாக ஆக்கி வந்ததை தொமாஸ் க்ரொவ்ஸ் சுட்டிக் காட்டுகிறார்.

மனிதப் பரிவோ, ஈவிரக்கமோ இல்லாத கொடுங் கோலராக கம்யூனிசத்தின் எதிரிகளால் சொல்லப்படும் லெனின், எவ்வளவு மென்மையானவராக, வெகுளியாகக் கூட இருந்திருக்கிறார் என்பதை க்ரொவ்ஸ் எடுத்துக் காட்டுகிறார்: ஒன்று, மாலினோவ்ஸ்கி விவகாரம் என்று சொல்லப்படுவது. மாலினோவ்ஸ்கி என்பவர் தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர், சிறந்த சொற்பொழிவாளர், எனவே அவர் கட்சிக்கு மிகவும் பயன்படுவார் என்று நம்பி, அவரை போல்ஷ்விக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும், ஜார் அரசாங்கம் உருவாக்கிய ‘டூமா’வின் (நாடாளுமன்றத்தில்) போல்ஷ்விக் கட்சியின் பிரதிநிதிகளி லொருவராகவும் ஆக்கினார் லெனின்; அவன் உண்மையில் ‘ஓக்ராமா’ என்னும் ரஷிய உளவுப் போலிஸ் துறையின் உளவாளி என்பது பின்னாளில் தெரியவந்தது. இது குறித்து லார்ஸ் டி. லி இன்னும் கூடுதலான விவரங்களைத் தருகின்றார்: மாலினோவ்ஸ்கி மீது போல்ஷ்விக்குகள் பலர் சந்தேகம் எழுப்பியபோது அவர்களைக் கண்டித்ததுடன், அவனை ரஷியாவின் ‘பேபல்’13 என்றும் வர்ணித்திருக்கிறார் லெனின்.14

இரண்டாவது, லெனினுக்கும் இனெஸ்ஸா ஆர்மண்டுக்கும் இருந்த நெருக்கமான காதல்வயப்பட்ட உறவு. இது லெனினின் துணைவியார் க்ரூப்ஸ்க யாவுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால், அது  புரட்சிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களிடையே இருந்த உறவு. எனினும், லெனின் - இனெஸ்ஸா கடிதங்களில் ஒருவரையருவர் காதலர்கள் போல் விளிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் சோவியத் பதிப்பாளர்களால்  மாற்றப்பட்டன. எனினும் மாசற்ற அந்த உறவையும்கூட,  புரட்சி என்னும் இலட்சியத்துக்கு எவ்வகையிலும் இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காகக் கைவிட்டிருக்கிறார் லெனின். தொமாஸ் க்ரொவ்ஸ் கூறுவது போல, புரட்சியின் இலட்சியத்தின் பொருட்டு தமது தனிப்பட்ட உறவுகள் அனைத்தையும் லெனின் எப்போதும் கட்டுக்குள் வைத்திருந்தார். மறுபுறம், லெனினை ‘அரக்கரா’கச் சித்தரிக்கும் மேலை நாட்டு மற்றும் இன்றைய ரஷிய நாட்டு ‘ஆய்வாளர்கள்’ (வோல்கோகோனோவ் போன்றவர்கள்), அந்த உறவைக் கொச்சைப்படுத்தும் விதமாக எழுதியுள்ளனர்.15

“எதிராளியின் வாதத்தை முறியடிக்கும் பொருட்டு அவரது  கருத்துகள் மீது வசைச்சொற்கள், உருவகங்கள் ஆகியவற்றைப் பொழிந்து தமது நிலைப்பாட்டுக்கு ‘மிகையான காரசாரம்’ சேர்ப்பார்.  ‘முட்டாள்தனமான’, ‘மடத்தனமான’, ‘அறிவு மந்தமுடைய’, ‘சீரழிந்துபோன’ என்னும் சொற்கள் அவருடைய தொகை நூல்களில் (Collected Works) நூற்றுக்கணக்கான இடங்களில் வருகின்றன” என்று தொமாஸ் க்ரொவ்ஸ் கூறுகிறார்.

தமது கட்சியின், சோசலிசத்தின் எதிரிகள் மீது  மட்டுமல்ல, தமது கட்சியைச் சேர்ந்தவர்களுடனோ, தமது ஆதரவாளர்களுடனோ கருத்து வேறுபாடு ஏற்படும்போதும், விவாதிக்கும்போதும், இத்தகைய தடிப்பான சொற்களை அவர் பயன்படுத்துவது வழக்கம். எனவே லெனினைப் படிக்கையில் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டிய விஷயங்களில் இதுவுமொன்று.16

புரட்சியையே தமது உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவரை, ‘மனிதராக’ நம் கண் முன் நிறுத்துகையில் அவர் மீது இன்னும் கூடுதலான மதிப்புணர்வை ஏற்படும்படி செய்துள்ளார் தொமாஸ் க்ரொவ்ஸ். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த, சமுதாய மாற்றத்தை விரும்புகிற, அதற்காகப் போராடுகிற இளைஞர்களுக்கு லெனினின் வாழ்க்கையும் பணியும் உள்உந்துதலையும் உற்சாகத்ததையும் தரும் என்பதில் ஐயமில்லை.

குறிப்புகள்

1. ரஷியப் புரட்சியின் நூறாம் ஆண்டு நிறைவு நாளைப் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் அன்று ரஷிய மக்களுக்கு விடுமுறை கிடையாது என்றும் இன்றைய ரஷிய பிரதமர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளதில் வியப்பில்லை. ஏனெனில் ரஷியப் புரட்சியை நினைவுபடுத்துவது,  இன்றைய மாஃபியா ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி உணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.

2. Tamas Krausz, Reconstructing Lenin: An Intellectual Biography, Monthly Review Press, New York, 2015.

3. Paul Le Blanc on Tamás Krausz's 'Reconstructing Lenin': Sorting through Lenin’s legacy, <http://links.org.au/node/4330> (accessed on 25.6.2017): என் கண்ணுக்குப் பட்டவையும் எனக்குச் சற்றுக் குழப்பத்தை ஏற்படுத்தியவையுமான சில வாக்கியப் பிழைகளை தொமாஸ் க்ரொவ்ஸ§க்குச் சுட்டிக்காட்டியிருந்தேன். அந்தக் குழப்பங் களைப் போக்கும் வண்ணம் சில திருத்தங்களையும் விளக்கங் களையும் அவர் அனுப்பியிருந்தார். அவற்றையும் உள்ளடக்கிய வண்ணம் இந்தத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது- எஸ்.வி.ஆர்.

4. Lars T Lih, Lenin, Lenin Rediscovered : What is to be Done?- in Context, Haymarket Press, Chicago, 2008:Lenin, Reaktion Books, London, 2011.

5. August H. Nimtz, Lenin’s Electoral Strategy from 1907 to the October Revolution of 1917 The Ballot, the Streets- or Both, Palgrave Macmillan, NewYork, 2014.

6. Christopher Read, Lenin A Revolutionary Life, Routledge Taylor & FranciseLibrary,New York, 2005.

7. Alexander Rabinowitch, Prelude to Revolution: The Petrograd Bolsheviks and the July 1917 Uprising, Indiana University Press, 1964; First Midland Book Edition, 1991; The Bolsheviks Come to Power, The Revolution of 1917 in Petrograd, W. W. Norton & Company· Inc. New York, 1976.

8. ஜான் ரீடு, உலகைக் குலுக்கிய பத்து நாட்கள், தமிழாக்கம்: ரா.கிருஷ்ணையா, என்.சி.பி.எச் (பி) லிமிடெட், சென்னை, இரண்டாம் பதிப்பு, பிப்ரவரி 2017, ப.266-267.

9. மாக்ஸிம் கார்க்கி, லெனினுடன் நில நாட்கள், தமிழாக்கம்: கு.அழகிரிசாமி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1985,ப.72-79.

10.Lars T Lih, Lenin, Reaktion Books, London, 2011, p 206.

11. மலை ஏறுதலை, 1922இல் ரஷியாவில்  இருந்த  கடுமையான நிலைமைகளைக் கடந்து வருவதற்கான உருவகமாகவும்  ஒரு கட்டுரையில் பயன்படுத்தியுள்ளார். அந்தக் கட்டுரையின் முதல் இரு பகுதிகளின் தமிழாக்கம், இந்த நூலில் பின் இணைப்பாகத் தரப்பட்டுள்ளது.

12. Carter Elwood, Sporting Life of V.I.Lenin, Canadian Slavonic Papers / Revue Canadienne des Slavistes, Vol. 52, No. 1/2 (March-June 2010), pp. 79-94

13. பேபெல் (August Babel:1840-1913): ஜெர்மன் சோசலிச ஜனநாயகப் புரட்சியாளர்; ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்; மக்களைக் கவர்ந்திழுக்கும் சொற்பொழிவாளர்.

14. Lars T Lih, Op.Cited , p.115.

15. இவர்கள் எல்லோரையும் விஞ்சும் வகையில் முன்னாள் நாடக நடிகரும் பின்னாளில் ‘வரலாற்றாய்வாளராக வளர்ச்சி பெற்றவருமான’ ஹெலென் ரப்பாபோர்ட் என்பவர் லெனினை ‘காமாந்தகாரனாக’ சித்தரித்துள்ளார். அவருடைய ‘அறிவு நாணயம்’ எத்தகையது என்பதை அவரது வாக்கியங்களி லிருந்தே வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவற்றைத் தமிழாக்கம் செய்யாமல், அப்படியே தருகின்றேன்:  “There is, I am sure, a darker, sexual side to Lenin that has been totally suppressed in the Russian record. I do believe that whilst he was in Paris he went to prostitutes - there are clues in French sources about this, but it is very hard to prove.”

ரஷிய ஆவணங்களில்  முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்டுள்ள ஓர் உண்மையை இந்த அம்மையார் கண்டுபிடித்துள்ளாராம். அதாவது ‘லெனினிடம் ஒர் இருண்ட பகுதி’ இருந்ததாம். பாரிஸில் அவர் வாழ்ந்த போது வேசையர் விடுதிகளுக்குச் செல்வாராம். இதைப் பற்றிய தடயங்கள் பிரெஞ்சு மூலாதாரங்களில் இருக்கின்றனவாம். ஆனால் அதை நிரூபிப்பது மிகவும் கடினமாம்! தம்மால் ஆதாரம் காட்ட முடியாத, நிரூபிப்பது கடினமானது என்று தாமே ஒப்புக் கொள்கிற ஒன்றை ‘லெனினிடமிருந்த இருண்ட பகுதி’யாக அடித்துக்கூறுகிற துணிச்சல் ஹெலன் போன்ற ‘நடிகர்களுக்கே’ சாத்தியம்.  இத்தகைய அற்பத்தனமான கதைகளை விற்றுக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் தமிழ்நாட்டிலும் உள்ளனர்.

16. லெனினின் நெருக்கமான நண்பர்களிலொருவரான மாக்ஸிம் கோர்க்கி ஒரு முறை லெனினுக்கு எழுதினார்: “எனக்குச் சில சமயம் தோன்றுகிறது, அடுத்தவர்களில் அனைவரும் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ராகத்தை இசைக்கும் ஊதுகுழல்கள் தான் என்று - உங்களுக்கு அவர்களால் என்ன பயன், உங்களின் குறிக்கோள்கள், கருத்துகள், பணிகள் ஆகியன நிறைவேற அவர்கள் எந்தளவுக்கு உதவக்கூடும்  என்பதன் அடிப்படையில்தான் நீங்கள் அவர்களின் தனித்தன்மையைக் கணிக்கிறீர்கள் என்று. இவ்வகையில் மனிதர்களை மதிப்பிடுவது அது தனிமனித நலனை முன்னிட்டும், மேட்டுக்குடி நிலைப்பாட்டிலிருந்து செயல்படுவதையே ஆதாரமாகக் கொண்டுள்ளது என்பது ஒருபுறம் இருக்கட்டும் - தவிர்க்கமுடியாதபடி உங்களைச் சுற்றி வெறுமையை ஏற்படுத்தும் - நீங்கள் மனோதிடம் வாய்ந்தவர், எனவே இது உங்களுக்கு முக்கியமாகப் படாது -ஆனால் இந்த அடிப் படையில் நீங்கள் மனிதர்களை மதிப்பிடுவீர்களேயானால் அது நீங்கள் தவறுகள் செய்வதில்தான் போய் முடியும்.” லெனினுடைய நண்பர்கள், போராட்டத்  தோழர்கள் அவருக்கு சமதையாக நின்று அவருடன் கருத்துப் போராட்டம் நடத்தியவர்கள். அவர்கள் மீதும்கூட லெனின் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தியதுண்டு என்றாலும், அவர்களைத் தமக்கு சமமாகவே கருதினார். அதற்குக் காரணம் அவர் மற்ற எல்லோருக்கும் ‘மேலானவராக’ அவர் தம்மை ஒருபோதும் கருதியதில்லை. அவரை ‘விக்கிரகமாக்கியவர்கள்’ தாம் தமது தோழர்கள் மீது பயன்படுத்திய கடுஞ்சொற்களை எடுத்துக் காட்டி, அவர்களை அவரது ‘எதிரிகளாக’க் காட்டுவதற்காக அவற்றைப் பயன்படுத்தவும்  பின்னாளில் அவர்களை ஒழித்துக் கட்டவும் செய்தனர்.

இதே கோர்க்கி, லெனினிடம் ‘புனிதருக்குரிய பண்பு’ (saintliness) இருப்பதாக 1920இல் போற்றிப் புகழ்ந்த போது, அவரைக் கண்டனம் செய்ய வேண்டும் என்று லெனின் கட்சித் தலைமைக்குப் பரிந்துரைத்தார். அத்தகைய புகழ்ச்சிகள் அவருக்கு அருவருப்பானவையாகத் தெரிந்தன.  (Lars T Lih, ‘Epilogue’ in Lenin, Reaktion Books, London, 2011; Christoher read, Lenin, Routledge, Taylor & Francis Group, London, 2005, p 260.)