இடைக்காலத் தமிழகத்தில் குறிப்பாகப் பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் குடிமக்களின் மீதும் நீதிபரிபாலனம் செய்யும் முறைமைகளிலும் மன்னர்களுக்கு இறுதியான அதிகாரம் இருந்த போதிலும் பெருவாரியாக ஊர்ச்சபை, நாட்டு மன்றம் போன்ற அமைப்புகளே சிவில் மற்றும் குற்ற வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம் பெற்றிருந்ததனை இடைக்காலத் தமிழ்க் கல்வெட்டுக்களின் வாயிலாக அறியமுடிகிறது.

கொலை, பலாத்காரத் தாக்குதல் மற்றும் ஆட்சியாளர்க்கு எதிரான சதிச்செயல் மற்றும் துரோகம் முதலான குற்றங்களுக்கு மரண தண்டனை என்பது மிகவும் அரிதாகவே வழங்கப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்களை ஊரைவிட்டு வெளியேற்றுவது, சமுதாயத் தொடர்புகளிலிருந்து விலக்கி வைப்பது, நிலம் முதலான சொத்துகளைப் பறிமுதல் செய்தல், குடிமை உரிமைகளை ரத்து செய்தல் போன்ற தண்டனை முறைகளே தமிழ்க் கல்வெட்டுக்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.

பிற்காலச் சோழர்களின் நிர்வாக அமைப்பில் நாடு, கூற்றம், வளநாடு, மண்டலம் ஆகிய நிர்வாக அடுக்குமுறை பின்பற்றப்பட்டது. இதில் நாடுகள் என்பன பல்வேறு வேளாண் ஊர்களை உள்ளடக்கிய அமைப்பாகும். பல நாடுகளை உள்ளடக்கிய பகுதி கூற்றமாகவும் பல கூற்றங்களை உள்ளடக்கிய பகுதி வளநாடுகளாகவும் பல வளநாடுகளை உள்ளடக்கிய பகுதி மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. நாடுகள் தனித்த நிர்வாக அமைப்பாகச் செயல்பட்ட போதிலும் பிறநாடுகளுடன் பொருளாதார மற்றும் சமூகப் பண்பாட்டுச் சார்புத் தன்மைகளைக் கொண்டிருந்தன.

சோழராட்சியின் பதினோறாம் நூற்றாண்டின் இறுதியில் சித்திரமேழி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது கல்வெட்டாதாரங்களின் மூலம் அறிய முடிகிறது. சித்திரமேழி அமைப்பு என்பது எழுபத்தொன்பது நாடுகளின் கூட்டமைப்பாகச் செயல்பட்டது. இது உழவுத்தொழிலை முதன் மையாகக் கொண்டிருக்கும் வெள்ளாளர்களின் கூட்டமைப்பு ஆகும். இது எழுபத்தொன்பது நாட்டுப் பதினெண்பூமிச் சித்திரமேழி என்றும் சித்திரமேழிப் பெரியநாடு எனவும் அழைக்கப்பட்டது. சித்திரமேழிப் பெரிய நாட்டின் அங்கத்தினர்களை பெரியநாட்டார் எனவும் பெரியநாட்டு விஷயத்தார் எனவும் அழைக்கப்பட்டனர்.

மேழி என்பது உழவுக் கலப்பையாகும். சித்திரமாகப் பெரிக்கப்பட்டிருக்கும் உழவுக்கலப்பை முத்திரையே சித்திரமேழி எனக் குறிப்பிடப்படுகிறது. சித்திரமேழி சின்னம் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேளாண் மக்களின் கூட்டமைப்பின் அதிகாரக் குறியீடாகக் கருதப்பட்டது.

மெய்க்கீர்த்தி என்பது அரசர்க்கே உரித்தான புகழைப் பாடுகின்ற வகையில் அவர்களின் குலப்பெருமைகளையும் வெற்றிச் சாகசங்களையும் வீரப் பிரதாபங்களையும் வெற்றிகொண்ட நாடுகளையும் பற்றிச் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுக்களில் பெரிக்கப்படுவது வழக்கமாக இருந்த இடைக்காலத்தில் சித்திரமேழி அமைப்பு தனக்கென தனித்த மெய்க்கீர்த்தியுடன் செயல்பட்டிருப்பது அதன் முக்கியத்துவத்தையும் தனித்தன்மையையும் உற்றுநோக்க வைத்திருக்கிறது.

பூமிதேவிக்கு மக்கள்ளாகி யறம் வளர

புகழக்க கலிமெலியச் செங்கோலே தெய்வமாகத்

திசையணைத்துஞ் செவிடு படாமைச்

சிதியமேழி தர்மம் இனிதுநடாதத்து

சித்திரமேழி அமைப்பு தனக்கென தனித்த மெய்க்கீர்த்தியை மூன்றாம் குலோத்துங்கன் சோழன் காலத்திலிருந்து கொண்டிருப்பதாக டி.வி மகாலிங்கம் கூறுகிறார். 

இந்த மெய்க்கீர்த்திப் பகுதியின் வாயிலாக சித்திரமேழி அமைப்பு குறித்தான பல செய்திகளை அறியமுடிகிறது. செங்கோல் முன்னாகவுஞ் சித்ர[த] மெழிய தெய்வமாகவுஞ்[ம்] என மெய்க்கீர்த்தி பாடப்படுவதால் வணக்கத்துக்குரிய தெய்வமாக சித்திரமேழி முத்திரை (உழவுக்கலப்பைச் சின்னம்) இருந்தபோதிலும் அரசின் சின்னமான செங்கோலுக்கு அடுத்த நிலையிலேயே வைத்து போற்றப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் திருவாய்க்கேழ்வி எனும் அரச பிரதிநிதியின் முன்பாக சித்திரமேழியின் மன்ற நடவடிக்கைகள் நடத்தப் பெற்றதன் மூலம் சித்திரமேழி அமைப்பு அரசரது ஆட்சியதிகாரத்திற்குக் கட்டுப்பட்ட அதே சமயம் அரசின் அங்கீகாரம் பெற்ற தனித்த கூட்டமைப்பாகச் (separate corporate entity) செயல்பட்டிருப்பதனை அறியமுடிகிறது.

பெரியநாட்டார் எனக் குறிப்பிடப்படும் சித்திரமேழி மன்றத்தவர்கள் தமிழ் மட்டுமல்லாது வட நாட்டுக் கலைகளையும் நீதிநெறிகளையும் நன்கு அறிந்தவராக விளங்கினர் என்பதனைப் பின்வரும் கல்வெட்டுத் தொடர் எடுத்துக்காட்டுகிறது.

அறம் வளரக் கற்பமையப் புகழ் பெருக

மனு நெறி தழைப்ப நியாய-நடாத்துகின்ற

மேலும் சித்திரமேழி அமைப்பு நீதிபரிபாலனம் செய்கின்ற அமைப்பாக விளங்கியமை குறித்துப் பல கல்வெட்டு ஆதாரங்களின் மூலம் அறியமுடிகிறது. கொலை மற்றும் இன்ன பிற குற்றங்களை விசாரித்து அதற்கு தீர்ப்பு வழங்கும் குற்றவியல் நீதி அதிகாரம் (Criminal Jurisdiction) பெற்ற அமைப்பாக விளங்கியது. பின்வரும் கல்வெட்டில்

அடியநம்பி விருகத்தை எய்ய பிழைச்சு

இச்சிருடையான் மெலெ அம்பு பட்டமையில்

எழுபத்தொன்பது நாட்டுச் சித்திரமெழிப்பெரிய

நாடுங் கூடி இருந்து இக்கொவலராயப் பெரையன்

மெலெ பழியாக்கி இவந் மெலிந்தப் பழிதிரக் கொண்ட நடையாவது

விருகத்தை (பன்றியை) எய்த அம்பு பிழைத்து சீருடையாளன் மேலே பட்டு மரணத்தை விளைவித்து விடுகிறது. சித்திரமேழிப் பெரியநாட்டார் இக்குற்றத்தை விசாரித்து தீர்ப்பு வழங்கும் நடைமுறைகளைக் காணமுடிகிறது.

தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரர் கோயில் கல்வெட்டில் அண்ணன் தம்பி இருவரும் சண்டையிட்டுக் கொண்டபோது ஆத்திரத்தில் தம்பி அண்ணனை அடிக்க அண்ணன் இறந்து விடுகிறான். இக்குற்றத்தை விசாரித்த சித்திரமேழிப்பெரிய நாட்டார் கொலைக்குற்றத்திற்கு அக்காலத்தில் மரணதண்டனை தான் வழக்கத்தில் இருந்த போதிலும் இக்குற்றத்திற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் குற்றவாளிக்கு வயதான பெற்றோர்கள் இருப்பதனாலும் அவர்களுக்கு வேறு மக்களும் பொருளும் இல்லாததன் காரணத்தினாலும் அவர்களைக் காப்பற்றும் பொறுப்பு குற்றவாளிக்கு இருப்பதனாலும் அவனுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டது. இத்தகைய குற்றம் தற்கால இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 300 விலக்கு 4ன் கீழ் கொலைக் குற்றத்திலிருந்து விலக்களிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சித்திரமேழிப் பெரியநாட்டார் அறத்தின் வழிநின்று நீதி வழங்குபவர்களாக மட்டுமின்றி சமய காரியங்கள் ஆற்றுபவராகவும் திகழ்ந்தனர் என்பதனை ‘சமைய தன்ம மினிது நடாத்தி’ என்ற கல்வெட்டுத்தொடர் மூலம் அறிய முடிகிறது.

சோழர்காலத்தில் நிலங்களைக் கையகப்படுத்தும் அதிகாரம் அரசுக்கே உரித்த நிலையில் அத்தகைய நிர்வாக அதிகாரங்களைச் சித்திரமேழி அமைப்பும் கொண்டிருந்தது என்பதனை நெல்லூர் கல்வெட்டு விளக்குகிறது.

நெல்லூர் ஆன விக்கிரம சிங்கபுரத்துத் திருப்பாற்கடற்

சித்திரமேழி வின்னகரிற் சித்திரமேழி மண்டபத்துக்

குறைவரக் கூடி நிரைவர நிரைந்த இருந்து இச் சித்திரமேழி

வின்னகர் எம்பெருமானுக்கு நாங்கள் திருவிடையாட்டம் ஆக

வைத்துக் குடுத்த பரிசாவது பேரூர் ஆனவையாயிரம்

குழியும் நடுவுத் தரத்தூர்கள் எழுநூற்றைம்பது குழியும்

சிற்றூர் ஆனவை ஐந்நூறு குழியும்

பள்ளிப்பட்டுக்கள் ஆனவை இருநூற்றைம்பது குழியும்

நீர் நிலத்திலே விட்டு நாலு மூலையும் திருவாழியுன்

சித்திரமேழியும் இட்ட கல் நட்டுச் சந்திராதித்தவரை

செல்லக் கடவதாக விடக் கடவோம் ஆகவும்

இக்கல்வெட்டில் சித்திரமேழி பெரியநாட்டார் சமய காரியங்களுக்காகத் தங்கள் ஆளுகைக்குட்பட்ட ஊர்களிலிருந்து நிலங்களைக் கையகப்படுத்தி கோயிலுக்குத் தானமாகக் கொடுத்த செய்தியை அறிய முடிகிறது.

மேலும் சித்திரமேழி அமைப்பினால் கைப்பற்றப்பெற்ற நிலங்களின் நான்கு மூலைகளிலும் சித்திரமேழி முத்திரை பெரிக்கப்பட்ட கல் நடுவதன் மூலம் சித்திரமேழி அமைப்பு தனக்கென தனித்த சட்டப்பூர்வ அதிகாரத்தைக் கொண்டிருந்ததனை அறிய முடிகிறது. மேலும் சித்திரமேழி அமைப்பின் உத்தரவிற்குக் கீழ்ப்படியாதவர்களைத் தண்டிக்கும் அதிகாரத்தையும் கொண்டிருந்தது என்பதனை ‘இப்படி விடாதார் பெரிய நாட்டார்க்குப் பிழைத்தார்’ எனும் தொடர் உறுதிப்படுத்துகிறது.

சித்திரமேழி அமைப்பு சோழர் ஆட்சிக்காலத்தில் அரசுக்குக் கட்டுப்பட்ட அதே சமயம் தனித்த இறையாண்மை கொண்ட நீதி மற்றும் நிர்வாக அமைப்பாக விளங்கியது என்பதனைக் கல்வெட்டுக்களின் வாயிலாக அறிய முடிகின்றது.

Pin It