1. பார்வைக் கிளைமொழி என்றால் என்ன?

மரபு ரீதியான நெடுங்கணக்கில் எழுதும் முறைக்கு எதிராக பேச்சு வழக்கிலோ அல்லது வட்டார வழக்கிலோ இலக்கியம் படைக்கும் போது அக்கறை வழக்குகளைப் பார்வைக் கிளை மொழிகள் என்று கூறுவர் (Eye Dialects). குறிப்பிட்ட கதாபாத்திரம் அப்பகுதியில் பேசும் வழக்கை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதைக் காட்ட படைப்பாசிரியர் பார்வைக் கிளை மொழியை ஆளுகிறார். 

ஜார்ஜ் பி.கிராப் (1925) என்பவர் முதன் முதலில் பார்வைக் கிளைமொழி என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார்.  ஆங்கிலத்தில் புகழ்பெற்ற நாவலாசிரியர்கள் இத்தகைய புதிய நெடுங்கணக்கு எழுத்துமுறையைப் பயன்படுத்திப் படைப்புகளில் புதுமையைப் புகுத்தினார்கள்.  ‘enough’ என்று எழுதும் முறையை மாற்றி ‘enuff’ என்றும், ‘was’ என்ற சொல்லை ‘wus’ என்றும் படைப்பில் எழுதுவர்.  ‘Meeting’ என்ற சொல்லை ‘அநநவin’ என்று எழுதுவர்.  ‘ing' என்பதை ‘in’ என்று சுருக்கி எழுதுவர்.  ‘woman’ என்ற சொல்லை ‘wummin’ என்றும் எழுதுவர்.  மரபாக எழுதுகிற எழுத்துமுறையை (spelling) மாற்றிப் புதுமையைச் செய்வது, பார்வைக் கிளைமொழியில் இடம் பெறுகிறது.

தமிழ் மொழியிலும் வட்டார வழக்குகளைப் பயன்படுத்தியும், பேச்சு வழக்கைப் பயன்படுத்தியும் ஏராளமான புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.  தொடக்ககால நாவல்களிலேயே பேச்சு வழக்கைப் பயன்படுத்த முயற்சித்தார்கள் என்ற உண்மை ‘பத்மாவதி சரித்திரம்’ போன்ற நாவல்களைப் படிக்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. 

“கிரந்தத்தின் இடையிடையே கீழ்த்தரப் பாத்திரங்கள் பேச நேரும்போது, இலக்கண வழுச் செறிந்த அவர் வாய்மொழிகளை அவ்வண்ணமே எழுதுவது வழக்கம்” (அ.மாதவையா, பத்மாவதி சரித்திரம், முன்னுரை) என்று மாதவையா குறிப் பிடுகிறார்.  ‘பேச்சுமொழி இலக்கண வழுவுடையது’ என்ற கருத்து உண்மையல்ல என்றாலும் பேச்சு மொழியை ஒரு இலக்கியம் படைக்கும் கருவியாக (device) பயன்படுத்துவது வழக்கம் என்று மாதவையா கூறுவது கவனிக்கத்தக்கது.  மாதவையாவின் கருத்து பார்வைக் கிளைமொழி என்ற வரை யறையோடு ஒத்துச் செல்கிறது.

2. தேனி மாவட்ட வட்டார வழக்கு

‘மான் மேயும் காடு’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் தேனி மாவட்ட வட்டார வழக்கின் சிறப்பியல்புகள் குறித்து இனி, இக்கட்டுரையில் காண்போம்.  இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளை எழுதியவர் தேனி சீருடையான் என்ற படைப்பாளர்.  இவர் தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர்.  மதுரை மாவட்டத் தமிழின் நீட்சி யாகத் தேனி மாவட்ட வட்டார வழக்கும் விளங்கு கின்றது.

3. ஒலி, இலக்கணச் சிறப்பியல்புகள்

எம்புட்டு, அங்குட்டு, இங்கன போன்ற சொற்களும், பாத்தவுக, வந்தவுக போன்ற வடிவங்களும் இப்பகுதியில் வழங்குகின்றன.  ஞாபகம் என்ற சொல் ஆவுகம் என்று வழங்கு கிறது.  ‘பிடரி’ என்ற சொல் ‘பொடனி’ என்று வழங்குகிறது.  இச்சொல் பிற வட்டாரங்களில் பொடரி என்று வழங்குகிறது.  -க்க- என்ற மெய் மயக்கம் -க்ய- என்று மாறுவதை இம்மாவட்டத் தமிழில் காணமுடிகிறது.  பிழைக்க > பொழக்ய; வரைக்கும் > வரக்யும், மன்னிக்க > மன்னிக்ய போன்ற எடுத்துக்காட்டுகளை இதற்குக் காட்டலாம்.  இவர்கள் என்ற மூவிடப் பெயர் இவுக என்றும், பயல்கள் என்பது பெயலுக என்றும், மாற்றமடைகின்றன.  வயிறு என்ற சொல் தேனி மாவட்டத் தமிழில் வகுறு என்று மாறி வழங்குகிறது. 

பிற கிளை மொழிகளில் வவுறு என்று மாறுகிறது.  உன்னை, என்னை போன்ற பெயர்ச் சொற்கள் உன்னய, என்னய என்று மாறுகிறது.  காடு என்ற சொல் பன்மை உருபு போல பயன்படுகின்றது.  குருதிக்காடு, சனக்காடு போன்ற சொற்களைக் கவனிக்கலாம். 

வியாபாரம் என்ற சொல்லில் முதல் எழுத்து கெட்டு யாவாரம் என்று மாறு கிறது.  ஆகாயம் என்ற சொல் காயம் என்று பழந்தமிழில் மாறி வந்துள்ளது. முதலாளி என்ற சொல் மொல்லாளி என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. 

தகரத்தில் வரும் அகரம் கெடவும் த்(-)ல் என்ற இரு மெய்களும் ஓரினமாதல் விதிப்படி மொல்லாளி என்று மாறியுள்ளது.  ஏனைய பகுதிகளில் நாதாங்கி என்று வழங்கும் சொல் இப்பகுதியில் நாராங்கி என்று வழங்குகிறது.

அழி என்ற வினையிலிருந்து அழி-வு என்ற பெயர்ச்சொல் உருவாக்கப்படுகிறது.  இதுவே தேனி மாவட்டத்தில் அழி-மானம் என்று -மானம் என்ற சொல்லாக்க விகுதியால் உருவாக்கப்படுகிறது.  வேறொரு வட்டார வழக்கில் அழி-மாண்டம் என்ற சொல் இடம்பெறுகிறது.  -மாண்டம் என்ற உருபு இங்கே பயன்படுகின்றது.  இன்னொரு கிளை மொழியில் அழி-சாட்டியம் என்று வருகின்றது.  இத்தகைய வட்டார வழக்கு மொழிகளை ஆராய்வதால் பல்வேறு சொல் லாக்க விகுதிகளையும் அறிந்து கொள்ளலாம்.

4. சிறப்புப் பெயர்கள்

இலக்கியப் படைப்புகளில் காணப்படும் கிளைமொழிகளில் அந்தந்த வட்டாரத்திற்கேயுரிய சிறப்புப் பெயர்களும் காணப்படுகின்றன.  சில எடுத்துக்காட்டுகள்.

* கீச்சான், சின்னாள், சலுப்பன், சவடையன் (ப. 77)

* தங்கப்பூ ஆச்சி (ப. 43)

* காயாம்பூ குடும்பன் (ப. 46)

* வீராயி (ப. 79)

* பூச்சிவாடன் (ப. 81)

* சிவனாண்டி (ப. 81)

5. அருஞ்சொற்கள்

இனி, இச்சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறப்பான அருஞ்சொற்களைக் காண் போம்

வங்கொலையா      பட்டினி கெடந்து வங்கொலையாச் சாகுறதுக்கு ஒரே நாள்ல மூச்சு விட்டுடலாம்.

கெடங்கு        கண்ணெல்லாம் கெடங்கு விழுந்து கெடக்கு (ப. 19)

சோங்கான தண்ணிச் சோங்கான இடத்தில்தான் அது வாழும் (ப. 45)

கரட்டாண்டி               வீரையாவும் காயாம்பூ   குடும்பனும் கரட்டாண்டி பிடித்து விளையாடிய இடம் (ப. 45)

விளுவிளு     கைகளும் கால்களும் விளுவிளுத்தன (ப. 49)

தாப்பிரியம்                இவுகளுக்கு என்னடா தாப்பிரியம் சொல்லப் போறீங்க (ப. 55)

சமதையா    கம்மாத் தண்ணிய எல்லாரும் சமதையாக் குடிக்கலாம் (ப. 55)

சொத்சொத்                ஈரநாம்பல் அடித்த மண்மதில் போல சொத் சொத் என்று கேட்டது (ப. 83)

தவசம்              தானிய தவசம் கொட்டிக் கெடக்குறப்பா மனுசன மதிக்கிறானுகளா (ப. 84)

முள்ளும் மொடியுமா முள்ளும் மொடியுமான ஒத்தையடி பாதையில் (ப. 85)

சவளம் ரெண்டு சவளம் கரும்பு ஓசியா

வாங்கித் தந்தான் (ப. 86)

போங்கு யாவாரம்னா அது ஒரு போங்குதான் (ப. 86)

குசுவினித்தனம்    மனசுக்குள் குசுவினித்தனம் குடி கொண்டிருந்தது (ப. 93)

தம்பாயம்     அய்யோ என்று அலறக்கூடத் தம்பாயம் இல்லாமல் கீழே சரிந்தேன்.

அடாதுடியான  அடாதுடியான பேச்சுக்காரன் (ப. 97)

அழிமானம்  அழிவு (ப. 97)

ஏடாச ஏடாசிப் பேசியே என்னையச் சொல்றீக

நடுவாந்திர தூக்கமா தூக்கமின்மையா எனப் புரிந்து கொள்ள முடியாத நடுவாந்திர உறக்கம் (103)

செவட்டை கருகருத்த தலைமுடி செவட்டையாய் வெளிறிக் கிடக்கிறது (ப. 108)

தூக்குப்போணி தூக்குப் போணியில் நீச்சத்தண்ணி ஊற்றி உப்புப்போட்டு அதையும் தூக்கிக் கொண்டு கிளம்பினேன்.

கூதல் இன்னிக்கிக் கொஞ்சம் கூதலடிக்கிறாப்புல இருக்கு (ப. 120)

பஞ்சாரம் பஞ்சாரம் நிறையப் புளி அள்ளி தராசின் தட்டில் வைத்தேன் (ப. 122)

ஓமளிப்பு ஓமளிப்புத் தச்சுச்சுன்னா யாவாரம் படுத்துரும் (ப. 123)

புளிச்சவனம் முதல் அடி வாங்கியதுமே புளிச்சவனம் சட்டை சட்டையாய் விரிந்துவிடும் (ப. 124)

குதுகுதுப்பு  ஈரக்காற்று குதுகுதுப்பை உண்டாக்கியது (ப. 125)

மொங்கு மொங்காய் மொங்கு மொங்காய்க் கிளை பிரிந்திருக்கும் அந்தக் கொம்புகள் (ப. 127)

அமட்டுவது பிள்ளைகளை அமட்டுவதைக் கேட்டிருக் கிறேன் (ப. 139)

கொண்டித்தனம்   என்னடி கொண்டித்தனம் பன்றியா (ப. 141)

ராத்தலா கொஞ்சம் கைகொடுத்தீங்கனா ராத்தலா இருக்குமுல்ல? (ப. 142)

அவகாச்சி அளவாப் போட வேண்டியதுதான? அவகாச்சி எடுத்து அழிஞ்சுபோறியே (ப. 158)

நாராங்கி  கேட்டை சாத்தி நாராங்கி போட்டு விட்டு (ப. 162)

வக்கணம்     உதடுகளைக் குவித்து வக்கணம் காட்டினேன் (ப. 164)

கடப்பாங்கள்ளாய்              வார்த்தைகள் கடப்பாங் கள்ளாய் இறங்கின (ப. 168)

பதவல் கட்டுதல்    அது குத்துச்சினா தேள் கொட்டிய மாதிரி பதவல் கட்டும் என்று தங்கப்பூ அம்மாச்சி சொன்னாள் (ப. 42)

கண்ணாறு போடுதல், திருஷ்டி போன்ற சொற்களுக்குப் பதிலாக ஒமளிப்புத் தைத்தல் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.  முடி செம்பட்டையாய் உள்ளது என்பதைத் தேனி மாவட்டத்தில் செவட்டையாய் உள்ளது என் கின்றனர்.  இரண்டு கட்டுக் கரும்பு என்பதனை இரண்டு சவளம் கரும்பு என்கிறார்கள்.  குளிரடித்தல் தேனிப் பகுதியில் கூதலடித்தல் என்று மாறு கின்றது.  இத்தகைய அருஞ்சொற்களையெல்லாம் தொகுத்தால் தமிழின் சொற்களஞ்சியம் பெருகும்.

பார்வை நூல்கள்

1. தேனி சீருடையான்.  (2011).  மான் மேயும் காடு.  தஞ்சாவூர்: அகரம் வெளியீட்டகம்.

2. மாதவையா, அ. (2001) பத்மாவதி சரித்திரம், சென்னை: நியூ செஞ்சுரி பிரைவேட் லிமிடெட்.

3. சீனுவாசவர்மா, கோ. கிளைமொழியியல்.  அண்ணாமலை நகர்: அனைத்திந்திய மொழியியல் கழக வெளியீடு.

Pin It