பள்ளிப் பருவ நாளில், எனக்குத் தாத்தா உறவு முறையுள்ள,  எங்கள் ஊர் நாட்டாண்மை பொறுப்பிலிருந்த பச்சையப்பன் என்பவரிடம் (101 வயது  வரை வாழ்ந்தவர்). ‘ஏன் தாத்தா நம்ம ஊருக்குக் ‘கோட்டாங்கல்’என்று பெயர் வந்தது என, எங்கள் ஊரின் பெயர்க் காரணத்தைக் கேட்டேன் எங்கள் ஊர்ப் பெயரின் காரணத்தைச் சுவையாகச்  சொல்லி முடித்தார்.

ஏட்டில் எழுதிவைக்கும் பழக்கம் என்னிடம் அப்போது இல்லை என்றாலும் இன்றைக்கும் அவர் சொல்லிய காரணம் என்னுள் நன்றாக நினைவில் இருக்கின்றது. இன்றைய பெயர், எங்கள் ஊரின் பூர்வீகப் பெயராக இல்லாமல், மருவிய பெயராக இருப்பதை அன்று என்னால் உணரமுடிந்தது. அது குறித்து மேலும் சிந்திக்கும் ஆற்றல் அப்போது எனக்கு இல்லை. மருவியது குறித்து இப்போது வேறுவகையில் புரிந்துகொள்ள முடிகின்றது. 

என்னுடைய வாழ்க்கை நிலை மேல் படிப்பு, வேலை, இடப்பெயர்வு, திருமணம், குழந்தை எனும் நிகழ்வுகளில் ஆண்டுகள் பல கடந்து வந்தபோதிலும் எங்கள் ஊர்ப் பெயர் மருவிய காரணம் குறித்த மனவோட்டம் அவ்வப்போது வந்து வந்து போகும்.

அதைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணமும் என்னுள் அவ்வப்பொழுது எழுந்துகொண்டேயிருக்கும். இப்பொழுது எழுதும் சூழல் வாய்த்திருக்கிறது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டப் (M.Phil)) படிப்பை மேற்கொண்டிருந்த காலத்தில், பல்கலைக்கழக முதுகலை மாணவர் விடுதியில் தங்கியிருந்தேன்.

அந்த விடுதி மெரினா கடற்கரைச் சாலையில் கண்ணகி சிலைக்கும் ஐஸ் ஹவுஸ் கட்டடத்திற்கும் இடையில் அமைந்திருக்கும்.

கண் விழித்ததும் கடலைப் பார்க்கின்ற அழகான சூழலுள்ள அந்த விடுதியில் தங்கிப் படிந்துவந்த காலத்தில், ஊருக்குச் (திருவண்ணாமலை) செல்வதென்றால் மாநகரப் பேருந்தில் தாம்பரம் சென்று, அங்கிருந்து எங்கள் ஊருக்குச் செல்லும் பேருந்தில் பயணம் செல்வேன். எங்கள் ஊருக்குச் செல்வதென்றால் ஒரேவழி பேருந்துப் பயணம் மட்டும்தான். நான் தங்கியிருந்த இடத்திலிருந்து (மெரினா கடற்கரை) கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து தாம்பரம் செல்வதற்குள் பேருந்துப் பயணத்தில் இரண்டு மணி நேரம் கால அளவு ஆகும்.

நான் தங்கியிருந்த இடத்திலிருந்து தாம்பரம் சென்று பயணித்தால் அந்த இரண்டு மணி நேர கால அளவில் திண்டிவனம் வரை பயணம் செய்துவிடலாம். அதனால் விடுதியிலிருந்து தாம்பரம் சென்று அங்கிருந்து ஊருக்குச் செல்வது எனது பயண வழக்கமாக இருந்தது.

மெரினா கடற்கரையில் கண்ணகி சிலைப் பேருந்து நிறுத்தத்திலிருந்து 21 G  எண் கொண்ட மாநகரப் பேருந்தில் சென்றால் தாம்பரம் சென்றடைந்துவிடலாம். அந்த எண் கொண்ட பேருந்தில் மட்டுமே நான் பெரும்பாலும் பயணம் செய்வேன்.

அந்தப் பேருந்தில் பயணம் செய்யும் போதெல்லாம் பயணிகள் சிலர் ஒரு பேருந்து நிறுத்தத்தின் பெயரைச் சொல்லி பயணச் சீட்டைக் கேட்பார்கள். பயணிகள் அந்தக் குறிப்பிட்ட நிறுத்தத்தின் பெயரைச் சொல்லிப் பயணச் சீட்டைக் கேட்கும் போதும், அந்தக் குறிப்பிட்ட நிறுத்தம் வந்தடைந்ததும் நடத்துநர் அந்த நிறுத்தத்தின் பெயரைச் சொல்லி அழைக்கும் போதும் அந்த இடத்தின் பெயர் என் சிந்தனையைக் கிளப்பும் விதமாக இருக்கும். பயணிகளும், நடத்துநரும் சொல்லும் அந்த நிறுத்தத்தின் பெயர் ‘ஆரிய புரம்’ (பேச்சு வழக்கில்) என்பதாகும்.

‘ஆரிய புரம்’ என்பது ஆங்கிலத்தில் வழங்கும் Raja Annamalai Puram  என்பதன் சுருங்கிய வடிவமான ‘R.A.. புரம்’ என்பதன் பேச்சு வழக்கு வடிவமாகும்.  Raja Annamalai Puram  எனும் பெயர் R.A.. புரம் எனச் சுருங்கி, பேச்சு வழக்கில் ‘ஆர். ஏ. புரமாக’ வழங்கி அது விரைவின் காரணமாக ‘ஆரிய புரமாக’ உச்சரிக்கப்படுகின்றது.

காலப்போக்கில் Raja Annamalai Puram  எனும் பெயர் மருவி  மறைந்து ‘ஆரியர் புரமாக’ நிலைபெறும் சூழல் ஏற்படவும் கூடும்.

அப்பொழுது ‘ஆரியர்கள்’ இங்கு வாழ்ந்திருக்க வாய்ப்புண்டு என்று ஆய்வாளர்கள் ஆருடம் சொல்லக்கூடும். ஒரு இடப்பெயரின் மருவல் வரலாற்றைக் கட்டமைக்கக்கூடியது.

இப்பொழுது எங்கள் ஊர்ப் பெயர் மருவியது குறித்துப் பார்ப்போம்.  

எங்கள் ஊர், முன்காலத்தில் மரங்கள் நிறைந்த பெரும் காட்டுப் பகுதியாகவும் ஆங்காங்கு மட்டுமே குறிப்பிட்ட அளவு விளை  நிலங்களுமாக இருந்துள்ளது.

அப்பொழுது சில குடியிருப்புகள்  மட்டுமே இருந்துள்ளன.  அப்பொழுது அங்கிருந்த எல்லா குடியானவர் வீட்டிலும் பசுமாடுகள் இருந்திருக்கின்றன.

அப் பசு மாடுகள் வழி கிடைக்கும் பாலை விற்பதும் எஞ்சியதைத் தயிராக்கி, தயிரைக் கடைந்து மோராக்கி மோரை அருகில் இருந்த நகரப் பகுதிக்குக் (திருவண்ணாமலை நகரத்திற்கும் எங்கள் ஊருக்கும் ஐந்து கிலோமீட்டர் தூர இடைவெளி) கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளனர். விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படும் மோரில் ‘மோர் கொத்தான்’ கொடியின் சாற்றை இடித்துக் கசக்கிவிடும்  வழக்கம் அப்பொழுது இருந்திருக்கிறது.

மோர் நன்றாகப் பொங்கியும் வாசனையோடும் இருக்கும் என்பதால் அப்படிச் செய்துள்ளனர். கொடியிலிருந்து சாற்றைக் கொத்தி (இடித்து) எடுப்பதற்கு இரண்டு கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அக்கற்களே வளர்ந்து மிகப் பெரிதாகக் காணப்படுகிறது என்பது எங்கள் ஊரார் சொல்லும் செய்தியாகும் (படத்தைக் காண்க).

கொடியின் சாற்றைக் கொத்தி எடுப்பதற்குப் பயன்பட்ட கற்களைக் ‘கொத்தாங்கல்’ என்று அழைத்துள்ளனர்.அந்தக் கொத்தாங்கல்தான் காலப்போக்கில் மருவி இப்போது வழங்கும் ‘கோட்டாங்கல்’ ஆனது என்று பச்சையப்பன் தாத்தா சொன்னார்.

ஒரு அழகான காரணப் பெயர் இன்று  அர்த்தமற்ற ஒரு பெயராக எங்கள் ஊர்ப்பெயர் மருவி வழங்கிவருகிறது.

இது பேச்சு வழக்கில் நிகழ்ந்த விந்தையான மாறுதலாகும். இன்றைக்கு வழங்கும் பெயரைக் கொண்டு சிந்திப்போருக்குக் ‘கோட்டான்’ எனும் பறவைகள் அதிகமாக வாழும் ஊராக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரவே வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டின் பல ஊர்ப் பெயர்கள் இப்படித்தான் தன் மரபான பெயரிலிருந்து மருவி பொருளற்று வழங்கி வருகின்றன. பதிப்பு வரலாற்று ஆய்வு களுக்காகப் பல பழைய அச்சுப் பதிப்புகளைப் பார்க்கும்பொழுதெல்லாம் வியப்பாக இருக்கும்.

அவற்றில் பதிவாகியுள்ள ஊர்ப்பெயர்கள் இப்பொழுது எப்படி மருவிக் காணப்படுகின்றன என்பதைச் சிந்திக்கும்போது எங்கள் ஊரின் பெயரே நினைவில் வந்துபோகும்.

சென்னையில் பல இடப்பெயர்கள் இன்றைக்கு மருவி வழங்குகின்றன. அந்தக் கால அச்சு நூல்களின் முகப்பில் இந்த ஊரைச் சார்ந்த இவர் கேட்டுக்கொண்டபடி, இந்த ஊரார் செய்த பொருளுதவியுடன், இந்த ஊரார் பிழையற ஆராய்ந்து கொடுக்க, இந்த ஊராரின் அச்சகத்தில், இன்ன இடத்தில் அச்சடிக்கப் பட்டது என்ற தகவல்கள் தரப்பட்டன. அவற்றுள் தமிழ்நாட்டு ஊர்ப்பெயர்கள் பல அக்கால வழக்குடன் பதிவாகின. சென்னையில் உள்ள பல பகுதிகளின் பெயர்கள் அத்தரவுகளில் காணப்படுகின்றன. அவற்றுள் காணப்படும் சென்னையின் பல இடப்பெயர்கள் மருவி வழங்குவதை இன்றைய பெயருடன் ஒப்பிட்டுக் காணும்போது வெளிப்படுகின்றது. இன்றைக்கு வழங்கும் ‘சென்னை’ என்ற நகரின் பெயரே பலவாறு வழங்கியிருப்பது பழைய அச்சு நூல்களின் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது.

அது, சென்னபட்டணம் - சென்னை நகர் - மதராஸ பட்டிணம் - மதராஸ் - மெட்ராஸ் - சென்னை என வழங்கியிருப்பது தெரிகின்றது. முந்தைய பெயர்களும் மருவி வழங்கும் இன்றைய பெயர்கள் குறித்த விவரங்கள் சில இங்குத் தரப்படுகின்றன. 

புரசைப்பாக்கம் - புரசபாக்கம் - புரசைவாக்கம்

பிரம்பூர் - பெரம்பூர்

சிந்தாத்திரிப்பேட்டை  - சிந்தாதிரிப்பேட்டை

பூவிருந்தவல்லி - பூந்தமல்லி

திருநின்றையூர் - திருநின்றவூர்

மயிலாப்பூர் - மயிலை - திருமயிலை - மைலாப்பூர்

மோப்பேர் - முகப்பேர்

திருவொற்றியூர் - திருவெற்றியூர்

எழுமூர் - எழும்பூர்

குயப்பேட்டை - கொசப்பேட்டை

அல்லிக்கேணி - திருவல்லிக்கேணி

மலைச்சாலை - Mound Road  - அண்ணாசாலை

சென்னையில் வழங்கும் பெயர்கள் மட்டுமின்றி, பிற பகுதிகளில் வழங்கும் பெயர்களும் மருவி காணப் படுவது குறித்த தரவுகள் பழைய அச்சு நூல்களின் வழியாகக் கிடைக்கப்பெறுகின்றன.

அவற்றுள் சிந்தனையைக் கிளப்பும் சில பெயர்கள் மட்டும் இங்குத் தரப்படுகின்றன. 

ஆறுகாடு - ஆர்க்காடு - ஆற்காடு

சேதனப்பட்டு - சேத்துப்பட்டு

கயப்பாக்கம் - கல்பாக்கம்

திருத்தணிகை - திருத்தணி

மாவண்டூர் - மாமண்டூர்

திரிசிராப்பள்ளி - திருச்சினாப்பள்ளி - திருச்சிராப்பள்ளி - திருச்சி

பண்ணுருட்டி - பண்ருட்டி

கல்லடைக்குறிச்சி - கல்லிடைக்குறிச்சி

ஊற்றங்கரை - ஊத்தங்கரை

அரியூர் - அரூர்

தமிழக ஊர்ப் பெயர் ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் அச்சுருவான அச்சு நூல்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்பதை  அச்சு நூல்களின் முகப்புப் பக்கத்  தரவுகள் உணர்த்துகின்றன.

பண்பாட்டு அடையாளத்துடன் வழங்கிய தமிழக ஊர்ப்பெயர்கள் பல இப்பொழுது பன்னாட்டு உறவுகளால் மருவி வழங்கி வருகின்றன. எஞ்சியிருக்கின்ற பெயர்கள் சிலவும் இன்னும் கொஞ்ச காலத்தில் மருவிப் போக வாய்ப்புள்ளது; அதனுடன் பண்பாட்டு அடையாளங்களும் அருகிப்போகக்கூடும்.

ஒரு ஊரின் பெயர் மருவிப் போதல் என்பது வெறும் பெயர் மருவிப் போதலோடு மட்டும் தொடர்புடையதல்ல,  அது வரலாற்றோடும் தொடர்புடையது.

இதற்கு வரலாற்றில் சான்றுகள் பல இருக்கின்றன. மருவிப்போதலை தடுத்து நிறுத்தும் சாத்தியம்  நமக்கு இல்லை. ஆனால் மருவிப்போன வரலாறுகளை எழுதுதல் நம்மால் முடியும்.

அதை முறையாகச் செய்வோம். அடையாளத்தைக் காப்போம்.

Pin It