உலக சரித்திரத்திலேயே பேரரசு என்றால் அது ஒன்றுதான். 1600கள் தொடங்கி 1947 வரை இருந்த பிரித்தானியப் பேரரசு. அதற்குமுன் எந்தப் பேரரசும் அவ்வளவு பெரியதாக, வலிமை பொருந்தியதாக இருந்திருக்கவில்லை. அதற்குப்பின் இதுவரையிலும் இருக்கவில்லை.

 

காலனிய நாடான இந்தியாவில் வாழ்ந்த நமக்கு பிரித்தானியப் பேரரசின்மீது வெறுப்பும் பிரமிப்பும் ஒருசேர இருப்பதில் வியப்பில்லை. நம்மை ஆண்டு, நம் நாட்டைச் சீரழித்தவர்கள்தானே இவர்கள் என்ற விரக்தி ஒரு பக்கம். எப்படி, எங்கோ ஒரு தேசத்திலிருந்து இங்கு வியாபாரம் செய்ய வந்து, கைவினைத் திறனிலும் செல்வத்திலும் பின்தங்கிய நிலையில் இருந்தும், தம் மதிநுட்பத்தாலும், ஆயுத பலத்தாலும் இந்தியா என்ற மாபெரும் நிலப்பரப்பை பிரிட்டன் என்ற தம் சிறு தீவின் காலனியாக ஆக்கினார்கள் என்ற வியப்பு மறுபக்கம்.

 

நியால் ஃபெர்குசன் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். வரலாற்று ஆய்வாளர். தற்போது அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். அதே நேரம் பண்டிதத் தன்மையோடு எழுதாமல் பாமரர்களும் எளிதில் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் வரலாற்றை எழுதுவதில் வல்லவர். அவர் எழுதியுள்ள மிக முக்கியமான புத்தகம் “Empire: How Britain Made the Modern World’’’ என்பது.

 

பிரிட்டன் என்பது சற்றே குழப்பம் தரக்கூடிய அரச அமைப்பு. அந்த அமைப்பே நான்கு நாடுகள் ஒன்று சேர்ந்து அமைத்துள்ள ஒருவிதமான கூட்டாட்சி அமைப்பு. மன்னராட்சி என்பது பெயரளவுக்கு இருந்தாலும் மக்களாட்சிதான் அந்த அமைப்பை முன்னெடுத்துச் செல்வது. ஆனால் 1800களின் இறுதி வரை மன்னர் பரம்பரைக்கு அதிகச் செல்வாக்கு இருந்தது. கிரேட் பிரிட்டன் எனப்படும் அமைப்பில் இன்று இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகள் உள்ளன.

 

17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து நாட்டவர்கள் வியாபாரக் காரணங்களுக்காக முகலாயர்கள் ஆண்டு வந்த இந்தியாவின் பகுதிக்கு வந்தனர். அதே காலகட்டத்தில்தான் இங்கிலாந்து நாட்டவர்கள் அவர்களது தீவுக்கு அருகில் இருந்த அயர்லாந்து என்ற தீவுக்குச் சென்று அங்குள்ள மக்களைப் பெயர்த்துத் தள்ளி, தங்களது காலனியை நிலை நாட்டினர்.

 

இங்கிலாந்தாக இருந்து பிரிட்டனாக உருவெடுத்த ஒரு நாடு உலகை வெல்ல அடிபோட்டது 17ஆம் நூற்றாண்டில்தான். ஆரம்பத்தில் அவர்கள் உலகை வென்று ஒரு குடையின்கீழ் கொண்டுவர வெல்லாம் எண்ணவில்லை அவர்களுக்குத் தேவையாக இருந்தது மிளகும் ஜாதிக்காயும். பின்னர் துணிகள். அவற்றை இந்தியாவிலிருந்தும் இந்தோசீனாவி லிருந்தும் பெறுவதற்காகக் கடல் வழியை நாடிய அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உலகைச் சுற்றிவர ஆரம்பித்தார்கள்.

 

ஆனால் உலகைச் சுற்றிவருவது அவ்வளவு எளிதான ஒரு காரியமாக இருக்கவில்லை. 16ஆம் நூற்றாண்டில் உலகின் கடல்வழி வாணிபத்தில் உச்சத்தில் இருந்தது ஸ்பெயின், போர்ச்சுகல் நாட்டவர்கள். அவர்களிடம்தான் தரமான உலக வரைபடம் இருந்தது. மிகப் பெரிய கப்பல்கள் இருந்தன. இங்கிலாந்தவர்கள் அந்தக் கட்டத்தில் வெறும் கடல்கொள்ளையில் மட்டுமே ஈடுபட்டனர். உலகெங்கும் சென்று செல்வம் ஈட்டிவந்த ஸ்பெயின், போர்ச்சுகல் கப்பல்களைக் கொள்ளையடித்துப் பணம் பெறும் செயலைத்தான் அவர்கள் புரிந்துவந்தனர்.

 

பின்னர் இங்கிலாந்தவர்கள் வரைபடங்களைத் திருடி, காப்பியடித்து, ஓரளவுக்குத் திறமையான கப்பல்களைக் கட்டி உலகின் பல பாகங்களுக்கும் சென்று காலனிகளை உருவாக்க ஆரம்பித்தனர். மெக்சிகோவிலும் தென் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் ஸ்பெயின் நாட்டவர் முன்னதாகவே சென்று வலுவான காலனிகளை அமைத்திருந்தனர். எனவே இங்கிலாந்தவர் சில மத்திய அமெரிக்கத் தீவுகள் (ஜமாய்க்கா போன்றவை), வட அமெரிக்கா (இன்றைய அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா) ஆகிய இடங்களைச் சென்றடைந்தனர்.

 

மற்றொரு பக்கம், இந்தியாவுக்குச் சென்று வியாபாரம் செய்ய அப்போதைய இங்கிலாந்து ராணி, 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி என்ற ஓர் அமைப்புக்கு ஏகபோக உரிமை ஒன்றை அளித்தார். அதாவது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வேறு எந்த அமைப்போ தனி மனிதர்களோ இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்கி இங்கிலாந்தில் உள்ளவர்களுக்கு விற்கமுடியாது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி மட்டும்தான் இதனைச் செய்யமுடியும்.

 

ஆனால் இந்தியாவுக்குள் நுழைந்த இங்கிலாந்தவர் களுக்கு பல ஆண்டுகளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. முகலாயர்கள் வலுவாக இருந்த காலத்தில் ஒளரங்கசீப் ஆட்சி முடியும்வரையில் , அதாவது 17ஆம் நூற்றாண்டு முடியும் வரையில் ஆங்கிலேயர்களால் வலுவாக வேர் ஊன்ற முடியவில்லை. இந்தியாவின் கடல் ஓரங்களில் சில "தொழிற்சாலைக'ளை அமைத்தனர். தெற்கில் முகலாயர்களின் கை நீளாத இடத்தில் சென்னை என்ற நகரத்தை நிர்மாணிக்க ஆரம்பித்திருந்தனர். அவர்களது ஆரம்ப காலச் சண்டையெல்லாம் எப்படி தமக்கு முன் வந்திருந்த போர்ச்சுக்கீசிய, டச்சு வணிகர்களை விடச் சிறப்பாக வியாபாரம் செய்வது என்பதில்தான் இருந்தது.

 

ஆனால் முகலாய சாம்ராஜ்யம் அழியத் தொடங்கிய 18ஆம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களுக்குத் தானாகவே வாய்ப்பு கிட்டியது. அதற்குள்ளாக பிரெஞ்சு வணிகர் களும் இந்தியாவில் கால் ஊன்றத் தொடங்கியிருந்தனர். பிரித்தானிய வியாபாரிகளுக்கு இப்போது பிரெஞ்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் ஆகியோர் ஒருபக்கம்; இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் அரசர்கள், பாளையக்காரர்கள், ஜமீன்தார்கள் எனப் பலரையும் எதிர்கொள்ளவேண்டிய அவசியம். ஒரு நூற்றாண்டுக்குள் பிரித்தானியர்கள் அனைத்தையும் சாதித்தனர். 19ஆம் நூற்றாண்டு ஆரம்பம் ஆகும்போது, இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் பிரதானமாக இருந்தது. முகலாயர்கள், மராட்டியர்கள், திப்பு சுல்தான், சீக்கியர்கள் எனப் பலரையும் அழித்தாயிற்று. எஞ்சியவர்கள் பிரித்தானியர்களை முற்று முழுதாக ஏற்றுக்கொண்டனர்.

 

இத்தனையையும் சாதிக்க ஆங்கிலேயர்கள் பெரும் படைகளை நம்பி இருக்கவில்லை. நன்கு பயிற்சி கொடுக்கப்பட்ட குறைவான சிலர் மட்டுமே இருந்தனர். மீதமெல்லாம் இந்தியப் போர்வீரர்கள்தான்.

 

கொள்ளைக்காரர்களாலும் குடியேறி களாலும் அமெரிக்கக் கண்டம் ஆங்கிலேயர் வசம் என்றால், வியாபாரிகளால் இந்தியா. ஆனால் ஆப்பிரிக்காவைக் கைப்பற்றப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப விரும்பிய எவாஞ்செலிகல் குழுவினர். ஆப்பிரிக்காவில் 16ஆம் நூற்றாண்டு முதலே அடிமை வியாபாரம் தழைத்து வளர்ந்தது. பிரெஞ்சு, பிரித்தானிய, டச்சு, ஸ்பானிய என்று ஒருவர் விடாமல் அடிமைகளைப் பிடித்து அமெரிக்கா முதல் உலகின் பல பாகங்களுக்கும் விற்பனை செய்துவந்தனர். ஆனால் அடிமை முறை ஒழிக்கப்படவேண்டும் என்ற கொள்கையை முதலில் முன்வைத்தது பிரிட்டனின் கிறிஸ்தவ தேவாலயங்களே. 18ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து, 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் அடிமை முறை முற்றிலுமாக ஒழிக்கப்படுவதற்கு பிரிட்டன்தான் காரணமாக இருந்தது.

 

ஆனால் அதே நேரம், ஆப்பிரிக்காவின் பழங்குடியினர் மத்தியில் "நாகரிகம்', "நல்ல மதம்' ஆகியவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கிய எவாஞ்செலிகல் கிறிஸ்தவர்கள், அதனை ஆயுத பலம் கொண்டே சாதித்தனர். மேக்ஸிம் என்ற தானியங்கி குண்டுவீசி ஆயுதங்களுடன் ஆப்பிரிக்காவில் பல பகுதிகளைப் பிடித்து, எக்கச்சக்கமான பழங்குடிக் குழுவினரை கொன்று சில நாடுகளாக மாற்றியமைத்தனர்.

தவிர ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பகுதிகளுக்குச் சென்ற பிரித்தானியர்கள் அங்குள்ள பழங்குடியினரை முற்றிலுமாக அழித்து அந்த நாடுகளை முழுமையாகத் தம் வசப்படுத்தினர்.

 

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாம் உலகப் போர் ஆரம்பிக்க இருந்த நேரத்தில் பிரித்தானியப் பேரரசு உலகின் அனைத்து கண்டங்களிலும் காலனிகளை அமைத்திருந்தது. உலகின் மாபெரும் கப்பல்படையை வைத்திருந்தது. தான் ஆண்ட பகுதிகளில் ஆங்கில மொழியைப் பரப்பியிருந்தது. தெளிவான சட்டங்கள் இல்லாத இடங்களில் இங்கிலாந்தின் சட்ட முறையப் பின்பற்றி சட்டங்களை வகுத்து, சட்டங்களை நிலைநாட்ட நீதிமன்றங்கள், காவல்துறை ஆகியவற்றை நிலநாட்டியிருந்தது. பணக் கொள்கையைப் புகுத்தியிருந்தது. பொதுவாக மக்கள் அமைதியாக வாழ அனைத்துச் செயல்களையும் செய்திருந்தது.

 

ஆனால், அதே நேரம் எல்லாப் பகுதிகளிலும் உள்ள மக்கள் சுயாட்சியை நோக்கிச் செலுத்திய போராட்டங் களை வன்முறையுடன் அடக்கியது.

முதலாம் உலகப்போரில் தன் காலனிகளின் வளங்களை தன் போருக்காகப் பயன்படுத்தியது பிரிட்டன். வெற்றிகரமான போருக்குப் பின்னரும் தன் காலனி நாடுகளின் சுயாட்சி உரிமைகளைப் பற்றி பிரிட்டன் கவலைப் படவில்லை.

 

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே அமெரிக்கா என்ற தேசம், பிரிட்டனுடன் போரிட்டு, சுயாட்சி அதிகாரம் பெற்றது. முதலாம் உலகப்போருக்குப் பின் அயர்லாந்து பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி தேசமாக ஆனது. ஆனால் இரண்டாம் உலகப்போர் பல மாற்றங் களைக் கொண்டுவந்தது. அந்தக் கால கட்டத்தில் முக்கியமாக இந்தியாவில் சுதந்தரப் போராட்டம் கடுமையாக இருந்தது. போரின்போது பிரிட்டன் அடைந்த கடுமையான கடன் சுமை, பிரிட்டனில் நிலவிய லிபரல் மனப்பான்மை ஆகிய காரணங்களால் இந்தியாவுக்கு விடுதலை தர பிரிட்டன் முடிவெடுத்தது. அடுத்த பத்தாண்டுகளுக்குள் பெரும்பான்மையான காலனிகளுக்கு பிரிட்டன் சுதந்திரம் அளித்துவிட்டது.

 

நியால் ஃபெர்குசன், பிரிட்டன் எப்படி உலகின் ஒரு பெரும் சாம்ராஜ்ஜியத்தை அமைத்தது என்பதை மிக அழகாகப் படம் பிடித்துக்காட்டுகிறார். அந்த சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி அமைத்தது பெரும்பாலும் 15 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இங்கிலாந்து, ஸ்காட்லாந்து இளைஞர்கள்! மிகக் குறைவான ராணுவ வீரர்கள், மிக உறுதியான, ஊழலற்ற சிவில் சர்வீஸ் அமைப்பு, பொதுவான நியாயத்தை வழங்கும் சட்டங்கள், நாடாளுமன்ற ஜனநாயகம், ஆங்கில மொழி என்று பலவற்றை உலகின் பல பகுதிகளுக்கும் வழங்கியது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கொடை என்று நிறுவுகிறார் ஃபெர்குசன்.

அதே நேரம், எங்கெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிமுறையில் தவறுகள் இழைக்கப்பட்டன என்பதை எடுத்துக்காட்டவும் ஃபெர்குசன் தவறவில்லை. ஆனால் அதே நேரம் இந்தத் தவறுகள் நிகழும்போதெல்லாம் பிரிட்டனுக்கு உள்ளிருந்தே எதிர்க்குரல்கள் எழுப்பப்பட்டன என்றும் தெளிவாக்குகிறார் ஃபெர்குசன். அடிமை முறைக்கு எதிராகக் குரல் எழும்பியது பிரிட்டனில்தான். காலனிகளின் சுதந்திரப் போராட்டங்களுக்கான ஆதரவும் பெரும்பாலும் பிரிட்டனிலிருந்தே கிளம்பின. தவறு செய்த கிழக்கிந்திய கம்பெனி கவர்னர்களை இங்கிலாந்துக்கு அழைத்து இம்பீச்மெண்ட் செய்த பெருமையும் அந்நாட்டு மக்களுக்கே இருந்தது.

 

பிரிட்டனுக்கு பதில் வேறெந்த நாடாவது பிரான்ஸ், ஜெர்மனி... இதே அளவுக்கு காலனி நாடுகளைக் கொண்டிருந்தால் அவர்கள் பிரிட்டன் அளவுக்கு நாகரிகமாக நடந்திருக்க மாட்டார்கள், அவர்களது ஆட்சியில் இந்த காலனி நாடுகளின் மக்களும் வளர்ந்திருக்கமாட்டார்கள் என்பது ஃபெர்குசனின் கோட்பாடு.

 

இதை நாம் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

Empire: How Britain Made the Modern World, Niall Ferguson, Penguin (First published in 2003)

-பத்ரி சேஷாத்ரி

Pin It