perumal book 450இந்தியத் துணைக்கண்டத்தில் மாறுபட்ட பல வகையான கலாச்சாரப் பண்பாடுகள் வரலாறு நெடுகிலும் தொடர்ந்து இயங்கியபடி வளர்ந்து வருகின்றன. அவற்றில் தமிழகப் பண்பாடு தனது தனித் தன்மையை இழக்காமல், புதிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டே வரலாறு நெடுகிலும் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்தத் தொடர்புகளுக்கு இரையாகாமல் தனித்தன்மைகளைக் காப்பாற்றிக் கொண்டே வரலாற்றில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கருத்துக்குத் தகுந்தபடி அ.கா.பெருமாள், ‘தமிழகப் பண்பாடு’ மற்றும் ‘தமிழர் கலையும் பண்பாடும்’ ஆகிய இரு ஆய்வு நூல்களைத் தமிழக மக்களுக்கு வழங்கியுள்ளார்.

இன்றைய சூழலில் இந்த நூல்கள் தமிழர்களின் கவனத்தைப் பெறுவது என்பது மிகமிக அவசியம். வரலாற்று இயங்கியல் கண்ணோட்டத்தில் தகுந்த ஆவணங்களையும், ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு தனது ஆய்வுக்குரிய முடிவுகளை நிலைப்படுத்துகிறார். வழிவழியாகச் சொல்லப்பட்டு வரும் தரவுகளையும், கலை இலக்கிய வடிவங்களையும் முன்வைத்து தமிழகப் பண்பாட்டு வரலாற்றை வடிவமைக்கும் சராசரிக் கல்வியாளர்களின் நடைமுறையிலிருந்து இவர் முழுமையாக மாறுபடுகிறார்.

ஆழமான, விரிவான, தெளிவான கண்ணோட்டத்தின் அடிப்படையில் விருப்பு வெறுப்பு இல்லாமல் தனது கருத்துக்களைத் தெரிவிக்கிறார். அவற்றின் பின்னணியில் இவரின் கடுமையான ஈடுபாடும், உழைப்பும் தெளிவாகப் புலப்படுகிறது. அமைதியான, தெளிவான, கூர்மையான தனக்கே உரிய மொழியில் மனதில் நன்றாகப் பதியும்படி செய்கிறார். தமிழகப் பண்பாடு குறித்த வழக்கமான மதிப்பீடுகளிலிருந்து நம்மை முன்னெடுத்துச் செல்கிறார்.

‘தமிழகப் பண்பாடு’ என்ற ஆய்வு நூலில் சங்க காலம் முதல் பிற்காலச் சோழர் காலம் வரை நிகழ்ந்தவற்றை அறிவியல் கண்ணோட்டத்தில் வரலாறாக வடிவமைக்கிறார். பொதுவாக, தமிழகப் பண்பாடு என்பது நிலவுடைமைக் காலப் பின்னணியில் உருவாகித் தொடர்ந்து நிலவி வருகிறது. நெடுங்காலமாக உற்பத்தி முறைகளில் மாற்றம் எதுவும் இல்லாமல் மண்ணுக்கேற்ற வகையில் மனித உறவுகள் தனித்தனியாக நிலைபெற்று வரலாற்றில் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் தகுந்த ஆவணங்களைக் கொண்டு ஆதாரங்களை முன்வைத்தும் விளக்குகிறார்.

அதைக் குறித்து, தனது கருத்தை முன்வைக்கிறார்.

“சங்க காலம் முதல் சோழர் காலம் வரை காணப்படும் சான்றுகளில், ஆரம்ப காலம் முதல் சோழர் காலம் வரை உள்ள காலகட்ட வரலாற்றை எழுதுவதற்கு தொல்லியல் சான்றுகள், சங்க இலக்கியங்கள், காவியங்கள், சமய நூல்கள், உரையாசிரியர் குறிப்புக்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவை மிகுதியாக உதவுகின்றன.”

“தமிழக வரலாற்றின் முற்பட்ட காலத்து வரலாற்றை அறிய உதவும் தொல்லியல் சான்றுகளைக் கண்டுபிடிக்கும் பணி 19ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்துவிட்டாலும், அது குறித்த அறிக்கையும், விரிவான ஆய்வு முடிவும் 20ஆம் நூற்றாண்டில் பாதிக்கு மேல்தான் வந்தன. இதனால், முந்தைய வரலாறுகளைப் புனர் பரிசீலனை செய்ய வேண்டிய நிலை உருவாகிவிட்டது.” என்பதை இவர் குறிப்பிடுகிறார்.

தொல்லியல் என்பது மானிடவியலின் ஒரு பகுதி. ஆரம்ப காலத்தில் மண்ணின் கீழ் புதைந்து கிடந்த பொருட்களை ஊகத்தின் அடிப்படையில் கணித்தனர். இப்போது, சோதனைச் சாலையில் கார்பன் சோதனை வழி துல்லியமாகக் கணக்கிடுகின்றனர். இதனால், ஊகத்தின் அடிப்படையில் தமிழரின் வரலாற்றின் பழமையைக் கூறியவர்களின் கருத்துக்கள் இன்று மாற்றும் படியான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

“தமிழகத்தில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் ஆதிச்சநல்லூர், மாங்குடி, அரிக்கமேடு, கொற்கை, காயல், பழைய காயல், புகார், ராஜாக்கமங்கலம், கொடுமணல், கீழடி போன்ற இடங்களில் நடந்த ஆய்வில் வெளிப்பட்ட பொருட்கள் முக்கிய சான்றாக உள்ளன.”

அதற்கு மேலும், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, கீழ்க்கணக்கு நூல்கள், முதலாக, நாட்டார் வழக்காற்றியல் செய்திகள் வரை சான்றுகள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

தமிழக நில அமைப்பு குறித்த வரைபடத்தை முதலில் குறிப்பிட்டு அதற்கான அடிப்படைச் சான்றுகளை முன்வைக்கிறார். முதலில் தமிழகம் பதின்மூன்று நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த விவரங்களை அடையாளப்படுத்துகிறார்.

தொடர்ந்து, இலங்கை, மாலத் தீவு, பர்மா, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா என்னும் நாடுகளுடனும் தமிழகம் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. இதனால், இலக்கியப் பண்பாட்டுத் தொடர்பும் ஏற்பட்டது.

“இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இயற்கை மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக துறைமுகம், ஆறு போன்றவற்றின் போக்கு மரியிருந்தது. தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முற்பட்டே சேர, சோழ, பாண்டிய நாடு என்னும் அரசு இருந்ததற்கு இந்நாட்டின் இயற்கையமைப்பு காரணம்” என்பதையும் இவர் குறிப்பிட்டு விளக்குகிறார்.

இந்தியாவில் கல்வெட்டுக்களைப் படித்து வரலாற்று உருவாக்கும் முயற்சி, வாரன் ஹேஸ்டிங் (வங்காள கவர்னர் ஜெனரலாக இருந்த) பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கி அசோகர் தொடர்புடைய கல்வெட்டுகள் படிக்கப்பட்ட பின்பு பிராமி, கரோஷ்டி போன்ற எழுத்து வடிவங்கள் அடையாளம் காணப்பட்டன. கடந்த 1890 முதல் தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் வெளிவர ஆரம்பித்தன. இதுவரை 26 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றில் 15,000 கல்வெட்டுக்கள் உள்ளன. தமிழ் அதிகம்; தெலுங்கும் கன்னடமும் உண்டு. இது போன்ற விவரங்களை இவர் சொல்வதுடன் தொடர்ச்சியான முயற்சிகளையும் அவற்றின் விளைவுகளையும் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

இவற்றில் சுமார் 8000 கல்வெட்டுக்கள் அச்சில் வந்துள்ளன. இவற்றை கல்வெட்டுக்களின் தன்மையின் அடிப்படையில் ஆறு பகுப்புகளாகப் பிரித்து காலவரிசையை அடையாளப் படுத்துகிறார் இவர்.

“இந்தியாவில் எல்லா எழுத்து வடிவங்களும் பிராமியிலிருந்து உருவானவை; பிராமி சிந்துவெளி குறியீடுகளிலிருந்து உருவானது என்ற கருத்து உண்டு. கி.பி. 1ஆம் நூற்றாண்டு ‘சமய வங்க சுத்த’ என்ற சமணநூல் இந்தியாவில் வழங்கிய 18 வகையான எழுத்து வடிவங்களில் ‘தமிழி’யும் ஒன்று என்று கூறும்”

இவர், மேலும் செப்பேடுகள் பற்றியும் குறிப்பிடுகிறார். தமிழக அரசர்களாலும், தனிப்பட்டவர்களாலும் வெளியிடப்பட்ட செப்பேடுகள் சிறந்த வரலாற்றுச் சான்றாக உதவுகின்றன. தமிழ், வட்டடெழுத்து, கிரந்தம் ஆகிய எழுத்து வடிவங்களில் செப்பேடுகள் உள்ளன. தெலுங்கு, மலையாளச் செப்பேடுகளும் கிடைத்துள்ளன.

இலக்கியங்களின் வாயிலாக அறியப்பட்ட வரலாறு பற்றிய செய்திகளை இவர் தொடர்ந்து குறிப்பிடுகிறார். பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட தேவாரப் பாடல்கள், திவ்விய பிரபந்தப் பாடல்கள், இலக்கணங்கள், இலக்கண உரைகள் போன்றவற்றின் வழியாக அக்கால சமயப் பண்பாட்டை அறிய முடிகிறது. மகேந்திரவர்மன் எழுதிய மத்தவிலாசப் பிரகசணம், அக்கால சைவ சமயப் பிரிவில் ஒன்றான கபாலிகர் பற்றியும், ஜைன, பவுத்தர் பற்றியும் கிண்டலாக விமர்சிக்கிறது. சம்பந்தர் பாடல் வழியாக சைவ, சமண வெறுப்பு தெரிகிறது. பிற்காலச் சோழர் வரலாறு பற்றிய குறிப்புகள் கலிங்கத்துப் பரணி, மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், குலோத்துங்கன் கோவை, பெரியபுராணம் ஆகிய நூல்களில் உள்ளன. ‘ஸ்ரீரங்கம் கோயிலொழுகு நூல்’ வைணவ மரபு பற்றி அறிய உதவுகிறது.”

“சீன யாத்திரீகரான யுவான் சுவாங்கின் குறிப்பின்படி கி.பி. 7ஆம் நூற்றாண்டு பல்லவர் கால பவுத்தம் பற்றி அறிய முடிகிறது. சீன நாட்டுடன் சோழர்கள் கொண்ட தொடர்பு பற்றிய செய்திகள் ‘சாங்’ நாட்டு வரலாற்றில் உள்ளது. அராபிய எழுத்தாளர் இபுனே ஹாக்கால், ஈஸ்டாக்கி போன்றோர் அரபு நாட்டுடன் தமிழர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்பு பற்றிக் குறிப்பிடுகின்றனர். இலங்கை வரலாற்று நூலான மகாவம்சத்தில் சோழர்களின் படையெடுப்பு பற்றிய செய்திகள் உள்ளன.

மேலும், சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவைகளில் காணப்படும் வரலாற்றுச் செய்திகளையும் இவர் அடையாளம் காட்டுகிறார். பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும் உள்ள கோவில் கட்டுமானம், ஓவியம், சிற்பங்கள் போன்றவையும் பண்பாட்டு வரலாற்றை அறிய உதவும் சான்றுகளாக உள்ளன. பல்லவர் காலத்திலும், முற்காலப் பாண்டியர் காலத்திலும் உள்ள ‘லகுலீசர்’ சிற்பம் அன்றைய பாசுபத மதப்பிரிவைப் பற்றிய செய்திகளை அறியத் துணைபுரிகின்றன. பிற்காலச் சோழர் கோவில்களில் உள்ள செக்கு, ஏர், பாத்திரங்கள், வாகனங்கள், காளிக்குப் பலி கொடுக்கும் வீரன் போன்றவற்றின் சிற்பங்கள் அக்காலப் பண்பாட்டை வரலாற்றை அறிய உதவுகின்றன.

முற்காலப் பாண்டியர் காலம் சித்தன்ன வாசல் ஓவியங்கள் அன்றைய சமணர்களின் பண்பை விளக்குவன. சோழர்கால தஞ்சாவூர் பெரிய கோயில் ஓவியம் 11ஆம் நூற்றாண்டு ஆடை, அணி, ஒப்பனை போன்றவற்றைக் குறிப்பாக உணர்த்துவன.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தமிழகம் குறித்து, ஆய்வாளர்களான கே.கே.பிள்ளை மற்றும் பி.டி.சீனிவாச அய்யங்கார் போன்றவர்களின் கருத்துக்களை முன்வைத்து தென்னிந்தியாவின் தெற்கு கோடியில் லெமூரியா கண்டம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். அதைத் தொடர்ந்து நிக்ரோயிட், முண்டா மொழி, திராவிட இனம் பழைய கற்காலம், இடைக்காலம், புதிய கற்காலம் என்று தமிழக வரலாற்றைப் பகுப்பாய்வு செய்கிறார். பிற்காலத்தைச் சார்ந்த பெருங்கல் புதைவுகள் முறை பற்றியும், இரும்புக் கால நாகரிகம் பற்றியும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்.

சிந்து வெளி நாகரிகம், ஆரிய நாகரிகம் பற்றிய புதிய செய்திகளையும், முடிவுகளையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துகிறார்.

“தமிழகத்தின் ஆரம்ப கால வரலாற்றை அறிய சங்க நூற்களும், அகழாய்வுச் செய்திகளும் உதவுகின்றன. சங்க காலம் என்பது கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை என்பது ஒரு கருத்து. ஆரம்ப காலத்தை இன்னும் முன்னே கொண்டு செல்பவரும் உண்டு. இந்த 5 நூற்றாண்டுகளில் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களும் சிற்றரசர்களும் ஆண்டனர்” என்ற கருத்தையும் இவர் முன்வைக்கிறார். அதைத் தொடர்ந்து சேர, சோழ, பாண்டிய நாடுகளின் எல்லைகளையும் வரையறை செய்கிறார். அவைகளைப் பற்றிய விவரங்களை தனித் தனியாகக் குறிப்பிடுகிறார்.

மேலும், களப்பிரர் காலம், பல்லவர் காலம், முற்காலப் பாண்டியர் காலம், பிற்காலச் சோழர்கள் காலம் போன்றவற்றை விளக்கி அவற்றின் ஆக்க ரீதியான விளைவுகளையும், வளர்ச்சிகளையும் விவரிக்கிறார். கடைசியாக சோழர்களின் வீழ்ச்சியையும், அதற்கான அடிப்படைக் காரணங்களையும் தெளிவுபடுத்துகிறார்.

“சங்கப் பாடல்களில் தமிழும், மக்களும் இணைந்தே காட்டப்படுகின்றனர். இதனால் மொழியின் பண்பாட்டிலிருந்து மக்களின் கலை ரசனையைப் பிரிக்க முடியாததாகி விட்டது. பண்டைய பண்பாட்டின் அம்சம் நிலத்துடனும், காலத்துடனும் இணைந்துதான் வருவது. இதனால் இடமும் காலமும் முதற்பொருள் ஆனது. உயிர்ப்பொருட்கள் கருப் பொருளாயின. மக்களின் வாழ்க்கையை உரிப்பொருள் புலப்படுத்தியது” இவ்வாறு தனது முடிவுகளை முன்வைத்த இவர் தொடர்ந்து தமிழர்களின் திணைப்பாகுபாடுகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை பற்றிய தனது புரிதல்களையும், அறிதல்களையும் குறிப்பிடுகிறார்.

தமிழர்களின் சங்க கால வழிபாட்டைக் குலக்குறி வகையில் அடக்கும் இவர், தொடர்ந்து குறிப்பிடுகிறார்: “இந்தியப் பண்பாட்டு வளர்ச்சி நேர்கோட்டில் தர்க்க ரீதியாக நிகழவில்லை என்ற கோசாம்பியின் கருத்தைப் பழந்தமிழர் வழிபாட்டில் பொருத்திப் பார்க்கலாம்.”

“சங்க காலத்திற்கு முன்பு வழிபாடு பெற்ற நடுகல், கொல்லிப்பாவை, மலையுறை தெய்வம் போன்றவை சங்க காலத்திலும் வழிபாடு பெற்றிருக்கின்றன. பேய் மகளிர் பற்றியும், சுடுகாடு பற்றியும் கிடைத்த செய்திகள் பண்டைக் காலத்தில் நாட்டார் தெய்வங்கள் தனியாக இயங்கியதற்குச் சான்றுகள்.” இவர், தொடர்ந்து ஆரம்ப கால நாட்டார் சமயம் எவ்வாறு வைதீக மதமாக வடிவம் பெற்றது என்பதையும் விளக்குகிறார். தமிழக வரலாற்றில் நிகழ்ந்த சமயப்பூசல்களையும், பக்தி இயக்கத்தையும் பற்றிய தனது கருத்தை இவர் முன்வைக்கிறார்.

“சமணம், பௌத்தம், சைவம், வைணவம் என இந்த மதங்கள் நான்கு முனைகளில் மோதிக் கொண்டதில் அரசர்களுக்கும் மதவாதிகளுக்கும் பெரும் பங்கு உண்டு. சாதாரண பாமரன் இந்தச் சண்டைகளில் கலந்து கொண்டானா என்பது தெரியவில்லை. பதிவும் இல்லை. ஒரு வகையில் இது அறிவு ஜீவிகளுக்குள்ளும் அரசியல்வாதிகளுக்குள்ளும் நடந்த போராட்டம் என்றும் கூறலாம்.” தொடர்ந்து, பல வரலாற்று நிகழ்வுகளை முன்வைத்து இது பற்றிய தனது கருத்தை உறுதிப்படுத்துகிறார்.

அடுத்து இலக்கிய இலக்கண நூல்களைப் பற்றிக் கூறி விளக்கமளிக்கிறார் இவர். “தமிழகத்தில் களப்பிரர், பல்லவர், பாண்டியர் ஆகிய மூவரும் ஆண்ட காலங்களில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளிலும் தமிழிலும், இலக்கியங்களும் இலக்கணங்களும் எழுதப்பட்டுள்ளன. கி.பி. 5ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.10ஆம் நூற்றாண்டு பாதிவரை உள்ள 750 ஆண்டுகளில் தமிழ் மொழியின் எழுத்து வடிவமும் மரியிருக்கிறது.

அதைப் போலவே, பல்லவர் மற்றும் பாண்டியர் காலக் கட்டுமான கோவில்கள், சிற்பங்கள் ஓவியங்கள், செப்புப் படிமங்கள் போன்றவற்றைப் பற்றி அறிய இக்காலக் கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள் ஆகியவை உதவுகின்றன என்றும் இவர் குறிப்பிடுகிறார். மேலும் ஓவியக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, நடனக்கலை போன்றவைகளின் வளர்ச்சியைப் பற்றிய விரிவான விளக்கம் அளிக்கிறார்.

தொடர்ந்து, ‘சங்க காலம் முதல் சோழர் காலம் வரை’ நிகழ்ந்த வேளாண்மை விரிவாக்கம் பற்றிய விவரங்களை முன் வைத்து தமிழ்ச் சமுதாய வளர்ச்சியை அடையாளப் படுத்துகிறார். தமிழர்களின், வணிகக் குழு மற்றும் கடல் வணிகம் பற்றிய செய்திகளை விரிவாக விளக்குகிறார்.

சோழர் காலத்தில் எழுச்சி பெற்ற சைவ சமயத்தின் வளர்ச்சியை இனம் காட்டுகிறார். தொடர்ந்து சோழர்களின் ஊராட்சிமுறை, சோழர்களின் கோவில் பணி போன்றவற்றைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்குகிறார். இந்தப் புத்தகம் பாடத்திட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்டாலும் இது பொது வாசகனுக்கும் உரிய வகையில் அமைந்துள்ளது.

***

“தமிழகப் பண்பாடு” ஆய்வு நூலின் நீட்சியாக “தமிழர் கலையும், பண்பாடும்” ஆய்வு நூலைக் கருதுவது மிகவும் பொருத்தம். இது, அ.கா.பெருமாளின் தொடர்ச்சியான ஈடுபாடு என்று மதிப்பிடலாம். இவர் தனது மதிப்பீட்டில் கலை பற்றிய கண்ணோட்டத்தை நூலின் முகவுரையில் தெளிவுபடுத்துகிறார்: “தமிழில் கலை என்னும் அடிச்சொல் ‘கல்’ என்பர். கல்லிலிருந்தும் கற்றலிலிருந்தும் கலை என்ற சொல் உருவாக்கப்பட்டது. பழைய இலக்கியங்கள் ‘கலை’ என்பதற்கு குரங்கு, ஆண்மான் போன்ற பொட்களில் வருகின்றன. சங்க காலத்திலேயே இசை, கூத்து போன்றவற்றைக் குறிக்க கலை என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.”

“கலைஞனையும், கல்வியாளனையும் ஒன்றாகப் பார்க்கும் மரபு தமிழில் இருந்தது. இதற்குத் திவாகர நிகண்டில் சான்று உண்டு.” என்பதை இவர் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து, “தமிழில் ஒட்டுமொத்தக் கலைகளைப் பற்றி மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன என்பதை இனம் காண்கிறார்: 1. தமிழரின் கலைகள் பரந்துபட்ட நிலையில் - வடநாட்டுக்கோ சமஸ்கிருதத்திற்கோ கடன்பட்டவை. 2. தமிழரின் கலைகளில் மூலமும் உண்டு. வடமொழிச் சார்பும் உண்டு. இதில் ஒருவகைக் கலைப்பண்பாட்டின் கூறுகளைக் காண முடியும். 3. தமிழகக் கலைகள் முழுக்கவும் தமிழருக்கே கடன்பட்டவை; எவற்றையும் சாரவில்லை.” அவற்றில் இரண்டாம் கருத்தைப் பலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.”

தமிழில் நாட்டார் பாடல்கள், கதைப்பாடல்களில் பிறமொழிக் கலப்பும், புதிய சொற்றொடரமைப்பும் கலந்து வளர வேண்டிய சூழ்நிலையை உருவாக்கின.

தமிழர்களின் இசை, கூத்து, நாடகம், கட்டுமானம், ஓவியம், சிற்பம் போன்ற கலைகள் பற்றியும், சைவ, வைணவ, பவுத்த, சமண, இஸ்லாமிய, கிறித்துவ சமயங்களின் பண்பாடு பற்றியும் விரிவாக விளக்குகிறது இந்த ஆய்வுநூல். அவை, ஒவ்வொன்றின் தனிச்சிறப்புக்களையும், தாக்கங்களையும் விரிவாக இவர் விளக்குகிறார். பண்டைய தமிழ் இலக்கியங்கள் அவை சார்ந்த மண்ணிலிருந்து பிரிக்க முடியாதவைகளாக உள்ளன. அவற்றிற்குரிய ஆதாரங்களையும் தகவுகளையும் முன்வைத்து விரிவாக விளக்குகிறார். தொடக்க காலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரை தமிழ் இசை வளர்ச்சிக்குப் பங்களித்தவர்களைப் பற்றி வரலாற்றுக் கண்ணோட்ட அடிப்படையில் தனது மதிப்பீடுகளை முன்வைக்கிறார்.

கூத்து மற்றும் நாடகம் பற்றிய தனது கருத்துக்களை உறுதிப்படுத்துகிறார். “ஆரம்ப காலத்தில் கூத்து, நடனம், நாடகம் மூன்றுமே ஒரே பொருளில் வழங்கப்பட்டன. இவற்றின் இடையே இருந்த நுட்பமான வேறுபாடுகளை சங்கப் பாடல்கள் சரியாக உணர்த்தவில்லை. ஆயினும் உரையாசிரியர்கள் கோடிட்டுக் காட்டுகின்றனர்.”

“இலக்கியத்தின் ஒரு கூறாகவே கூத்தும் பண்பாட்டின் அம்சமாக முற்காலத்தில் கருதப்பட்டது. அதனால்தான் அரசர்களும், புலவர்களும் கூத்தர்களாய் இருந்தனர். ஆனால் 19ஆம் நூற்றாண்டில் கூத்து என்ற சொல் இழிவான செயலுக்கே உரியதாக மரியது.” தொடர்ந்து தமிழ்ச் சூழலில் நிலவி வந்த பல வகையான கூத்துக்களை தனித்தனியாக அடையாளம் காட்டுகிறார். மேலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ்க் காப்பியங்களில் காணப்படும் கூத்து வகைகளையும் இனம்காட்டுகிறார்.

சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு நவீன நாடகம் வரை, நாடகக் கலையின் வளர்ச்சியை படிப்படியாக விளக்குகிறார் இவர்.

சங்க காலம் முதல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் வரை கோவில் கட்டும் கலை எப்படியெல்லாம் படிப்படியாக மரியது என்பதைக் காட்டியதோடு, பிரிட்டிஷ் ஆட்சியில் அந்தக் கலையை எப்படி அழித்தார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார்: “பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், ஆட்சியாளர்கள், கால்வாய்கள், சாலைகள், ரயில்பாதைகள் அமைப்பதில் ஆர்வம் காட்டினார்கள். முதல் ராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் கற்றாலை மண்டபத்தையும், கோபுரத்தையும் பிரிட்டிஷ் பொதுப் பணித்துறையினர் வெடிவைத்துத் தகர்த்து அதில் கிடைத்த கற்களைக் கொண்டு காவிரிக்கு அணை கட்டினர். அதனால் ஏற்பட்ட இடிபாடுகளை இப்போதும் காண முடியும்.”

ஓவியக்கலையின் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடும்போது அதன் தனித் தன்மைகளையும் அடையாளப்படுத்துகிறார்: “தமிழகத்தின் பழம் குகைகளில், பழங்கற்கால, புதிய கற்கால ஓவியங்களை அடையாளம் கண்டுள்ளனர். குகைகளிலும், பாறைகளிலும் இருக்கும் இந்த ஓவியங்கள் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.” என்கிறார் இவர். தொல்காப்பியக் காலம் முதல், மராட்டிய காலம் வரை ஓவியக்கலையில் நிகழ்ந்த மாற்றங்களையும் வளர்ச்சியையும் விரிவாக விளக்குகிறார்.

இவர், சிற்பக் கலை பற்றிய தனது புரிதலை முன்வைக்கிறார். “பொதுவாகச் சிற்பங்களைத் தெய்வ உருவங்கள், இயற்கை உருவங்கள், கற்பனை உருவங்கள், அடிமைச் சிற்பங்கள் என நான்கு வகையாகப் பிரிக்கின்றனர்.” அவைகளைக் குறித்த தனது விரிவான பார்வையையும், முடிவுகளையும் தகுந்த ஆதாரங்களோடு விளக்குகிறார். சைவ, வைணவ, ஜைன, புத்த சமயம் சார்ந்த தெய்வங்களை இவ்வரிசையில் அடக்கலாம். சிற்பக் கலை வளர்ச்சியில் சமயங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

“தமிழகக் கோவில்களில் உள்ள தேர்கள் தமிழனின் தச்சுக் கலைக்கு சான்றளிப்பன. தமிழகத்தில் மொத்தம் 866 தேர்கள் உள்ளன. இவற்றில் இரண்டரை லட்சம் சிற்பங்கள் காணப்படுகின்றன. இது 1981இல் எடுக்கப்பட்ட கணக்கு.”

சங்க காலம் முதல், ஆங்கிலேயரின் காலனியாதிக்க காலம் வரை சமயங்களின் வழியாக எவ்வாறெல்லாம் தமிழ்ப் பண்பாடு படிப்படியாக மாறுதலுக்கு உள்ளாகி இன்றைய நிலையை அடைந்துள்ளது என்பதை ஆழமாகவும், சுருக்கமாகவும், தெளிவாகவும் வாசிப்புக்கு உகந்த வகையில் விவரிக்கிறது இந்நூல்.

தமிழகப் பண்பாடு
அ.கா.பெருமாள்
விலை.ரூ.145/-
நியூ செஞ்சுரி புக்ஸ் ஹவுஸ், சென்னை

Pin It