புகைப்படம் எடுக்கும் நண்பரொருவர் என்னைப் பார்க்க ஒருமுறை வந்தார். நகரக் காட்சிகளைப் படமெடுப்பதற்காக அவர் புறப்பட்டபோது நானும் அவருடன் சென்றேன். கடைத்தெருக்கள், பூங்காக்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில்கள், ஏரிகள் என பல இடங்களுக்கு நான் அவரை அழைத்துச் சென்றேன். காலையிலிருந்து மாலை வரைக்கும் கண்ணில் பட்ட காட்சிகளையெல்லாம் படமெடுத்தபடியே வந்தார். ஏறத்தாழ நானூறு படங்கள் இருக்கும். வீட்டுக்குத் திரும்பிய பிறகு அப்படங்களைக் கணிப்பொறிக்கு மாற்றி அவற்றை வகைப்படுத்தத் தொடங்கினார். பிறகு எதை வைத்துக் கொள்ளலாம், எதை அழித்துவிடலாம் என்ற தேர்வு தொடங்கியது. இறுதியில் ஆறு படங்கள் மட்டுமே எஞ்சின. அன்று முழுக்க எடுத்த படங்களில் அவை மட்டுமே மிகச் சிறந்த தரத்தில் உள்ளன என்றார். அவருடைய கறாரான சுயதணிக்கை வியப்பூட்டியது. அந்தத் தணிக்கையுணர்வின் காரணமாகவே அவர் மிகச் சிறந்த கலைஞராக விளங்குகிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.

கவிதைக்கும் கறாரான சுயதணிக்கை தேவைப்படுகிறது. அள்ளி வந்ததையெல்லாம் வீசிவிட்டு அபூர்வமான ஒன்றை மட்டுமே நமக்கு அளிக்கும் கவிஞர்களே முக்கியமானவர்கள். அப்படிப்பட்ட கவிஞர் வரிசையில் ஒருவர் கல்யாண்ஜி. கடந்த அரைநூற்றாண்டு காலமாக அவர் தொகுப்புகள் சீரான இடைவெளியில் வந்தபடி உள்ளன. சமீபத்தில் வெளிவந்திருக்கும் உருப்பளிங்கு தொகுப்பில் நல்ல கவிதைகள் எண்ணிக்கையளவில் அதிகமாகவே இடம்பெற்றிருக்கின்றன.

’நட்ட நடுத்தெருவில்

நடந்துவரும் சிறுமி

வெட்டவெளியில் குதிக்கிறாள்

தணியும் மாயக்கிளை நுனியில்

கனிகொய்ய எவ்வுகிறாள்

மறுமறு குதியில் பறித்துவிடுகிறாள்

இளவெயிலில் வழிந்து பெருகும் சாறு

காணாக் கனியிலிருந்து கசிந்ததுவே’ 

காணாக்கனி என்னும் சொல் வழங்கும் கிளர்ச்சிக்கு ஈடு இணையே இல்லை. காணாப்புதையல், காணாக்கடவுள் போல காணாக்கனி. காணா மரத்தில் உள்ள காணாக்கிளையிலிருந்து பறிக்கும் கனியும் காணாக்கனியாகத்தானே இருக்கும். அக்கனியிலிருந்து வழியும் சாறும் காணாச்சாறே. யார் கண்ணுக்கும் படாமல் கசியும் சாற்றை சிறுமியும் கவிஞரும் மட்டுமே காண்கின்றார்கள். வெட்டவெளியில் வழியும் சாறு. நட்ட நடுத்தெருவில் வெட்டவெயிலில் நடந்து செல்லும் ஒரு சிறுமியின் ஏக்கமும் கனவும் என்னவாக இருந்துவிட முடியும். தாகமடங்க ஒரு வாய் தண்ணீர். அவ்வளவுதான். வீடுகளே இல்லாத அல்லது வாசல்கதவுகள் அடைபட்டிருக்கும் வீடுகள் மட்டுமே இருக்கிற நட்ட நடுத்தெருவில் எங்கு நின்று அவள் தண்ணீர் கேட்க முடியும்? அவள் தாகமறிந்து ஒரு வாய் தண்ணீர் கொடுப்பவர்கள் என யார் அங்கே இருப்பார்கள்? கற்பனையின் ஆற்றல் வழியாக எங்கோ என்றோ கண்ட கனிமரத்தை அந்த நடுத்தெருவில் நிறுத்தி வைக்கிறாள் அவள். பிறகு கைக்கெட்டும் கனியைப் பறித்து சாறெடுத்து அருந்துகிறாள். கற்பனைக்கனி கூட அவளுக்கு ஒரு குதியில் கிடைக்கவில்லை. மறுமறு குதி தேவைப்படுகிறது. ‘மறுமறு குதி’ ஒரு புதிய சொல்லாக்கம்.

‘தண்ணீர் ஒரு சொட்டு இல்லாத

பிராஞ்சேரிக் குளத்தில்

தவளைக்கல் விடுகிறான்

ஞாபகங்களால் நிரம்பியவன்’

காணாக்கனிபோல இக்கவிதையில் நிறைந்திருப்பது ஒரு காணாக்குளம். சிறுவனின் கண்ணுக்கு மட்டுமே தெரியும் குளம். நேற்று நாம் சிறுவர்களாக இருந்தபோது நாம் தவளைக்கல் விட்டு ஆட்டமாடி மகிழ்ந்த குளத்தை நாம் ஏன் நம் பிள்ளைகளுக்கு அளிக்கவில்லை? அவர்களுக்கு அதைக் காணாக்குளமாக்கியதில் நமக்குப் பொறுப்பில்லையா? வரும் தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்வதெல்லாம் காணாச்செல்வங்கள் சார்ந்த கனவுகளையும் ஏக்கங்களையும் மட்டும்தானா?

‘போக்குயானை போய்க்கொண்டே இருக்கிறது

புல்லாங்குழல் விற்கும் வடக்கத்திச் சிறுவன்

வாசித்துக்கொண்டே இருக்கிறான்

யானை செல்வதும்

புல்லாங்குழல் வாசிப்பதும்

ஒரே வேறு வேறு பாதைகளில்’

ஒரே பாதையில் வேறுவேறு திசையை நோக்கிச் செல்லும் இருவரைப் பற்றிய சித்திரத்தைக் கொண்ட கவிதை. வாசித்துக் கொண்டே புல்லாங்குழல் விற்பவன் ஒரு சிறுவன். வயிற்றுப் பிழைப்புக்காக வடக்கிலிருந்து வந்தவன். இடம்பெயர்ந்து வந்ததாலேயே பால்யத்தை பொருள்தேடும் பிழைப்பில் தொலைத்து விட்டவன். யானை என்றால் திரும்பிக்கூடப் பார்க்காத சிறுவர்கள் உலகத்திலேயே இருக்க மாட்டார்கள். ஆனால் யானையைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் செல்கிறான் புல்லாங்குழல் சிறுவன். பொருள் தேடும் வாழ்க்கை ரசனையை, மனத்தை, வாழ்க்கையை பலிப்பொருளாக எடுத்துக் கொண்டு விடுகிறது. தேரோட்டம் பார்ப்பதற்காக வீட்டிலிருப்பவர்கள் எல்லோரும் கோவிலுக்குச் சென்றுவிட, வீட்டு வேலைகளில் மூழ்கியிருக்கும் வேலைக்காரச் சிறுமியைப் பற்றிய கதையையும் இக்கவிதையோடு இணைத்துப் புரிந்து கொள்ளலாம். ‘இன்னாது அம்ம இவ்வுலகம் இனிது காண்க, இதன் இயல்புணர்ந்தாரே’ என்று எழுதப்பட்ட புறநானூறு காலத்திலிருந்தே மாறுபட்ட கோலங்கள் தவிர்க்க முடியாத உலக இயல்பாகி விட்டது.

‘அந்த மனுஷி

முன்னூற்றி ஐம்பத்தேழாவது தடவையாக

தனியே சமையலறையில் அழுகிறாள்

கீரைக்கு குப்பை பார்க்கிறாள்

குப்பையில் ஊர்கிற

சிறுபுழுவைப் பார்க்கிறாள்

ஒரு நகர்வில்

அவளைப்போல இருக்கிறது புழு

அடுத்த நகர்வில்

அவனைப்போல நெளிகிறது

விரலில் ஏறி மணிக்கட்டுக்கு ஏறவிடுகிறாள்

எழுந்துபோய் புறவாசல் நடையில் நின்று

கையிலிருந்து புழுவை உதறுகிறாள்

முன்னூற்றி ஐம்பத்தேழாவது தடவையாக’

ஒரு வீட்டில் குளிப்பதற்கு மறைவான இடம் இருக்கிறது என்பதற்காகவே தன்னைவிட வயதில் மூத்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி எழுதிய பிரபஞ்சனின் சிறுகதை, அவர் எழுதிய கதைகளில் மிக முக்கியமான ஒன்று. ஒருவர் தனக்குரிய துணையைத் தேர்ந்தெடுக்க அடிப்படையாக வைத்திருக்கும் காரணங்கள் அவரவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய புதிர்கள். அவ்விதமாக ஒருவனை மணந்து கொண்டு வந்த ஒருத்தி காலமெல்லாம் தனிமையில் அழும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். அந்த அழுகையிலிருந்து அவளுக்கு விடுதலை இல்லை. அந்த வாழ்விலிருந்தும் அவளுக்கு விடுதலை இல்லை. அந்த இடத்தை உதறிவிட்டுச் செல்லும் அளவுக்கு சூழல்கள் அவளுக்கு உகந்தவையாக இல்லை. கீரையில் ஊர்ந்து செல்லும் புழுவைப் பார்க்கும்போது அது தன்னைப் போலவே இருப்பதாகத் தோன்றுகிறது.

புழு எந்த மலையில் ஏற முடியும்? எந்தச் சிகரத்தை அது அடைய முடியும்? அதன் உலகமே அந்த விரலளவு இலை. மறுகணம் அப்புழு அவள் மனம் விரும்பும் மனிதனாகத் தோற்றமளிக்கிறது. அவன் புழுவாக இல்லாது ஒரு பறவையாக இருந்தால் தன் சிறகில் அவளைத் தாங்கி பறந்து சென்றிருக்கக் கூடும். அவளும் புழுவாக, அவனும் புழுவாக வாழ நேர்ந்த உலகில் பெரிய இயக்கங்களுக்கோ மாற்றங்களுக்கோ இடமில்லை. தன் மணிக்கட்டில் ஏற்றிச் சென்று வாசலில் உதறி விடுகிறாள். தனக்குக் கிட்டாத விடுதலை, தன்னைப் போலவே இருக்கும் புழுவுக்காகவாவது கிடைக்கட்டும் என்று அவள் மனத்தில் தோன்றியிருக்கலாம். வாசலில் விட்டதுமே புழு பறவையாக மாறிவிடவா போகிறது? மீண்டும் ஒரு செடி. ஒரு இலை. அதுதான் அதன் இடம். ஆனால் அவளுக்கு புழுவுக்கு விடுதலை அளித்து விட்டோம் என ஏதோ ஒரு ஆறுதல். அவ்வளவுதான்.

கல்யாண்ஜி எண்ணற்ற புதிய புதிய கணங்களைத் தேடித் தேடி கண்டடைந்து தன் கவிதைகள் வழியாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். ஆனாலும் ஏற்கனவே படித்த விதமாக இருக்கிறதே என ஒருமுறையும் அவர் கவிதை சலிப்பூட்டுவதில்லை. ஒவ்வொரு கவிதையிலும் ஏதோ ஒரு புதிய நிறமும் ஒரு புதிய வடிவமும் நம்மை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளன. வான்கோவின் பல ஓவியங்களில் மல்பெர்ரி மரங்களும் பீச் மரங்களும் இடம்பெற்றிருந்தாலும் எதுவும் இன்னொன்றைப்போல இருப்பதில்லை. புதிய கோணம். புதிய தோற்றம். புதிய நிறம். எல்லாமே புத்தம்புதிதாக மாறிவிடும்.

கல்யாண்ஜியின் கவிதைகளிலும் அந்தத் தன்மை இருக்கிறது. அவர் தன்னிடள்ள கூறுமுறை என்னும் தூரிகையால் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு முறையும் புதிதாக மாற்றி விடுகிறார். சின்னஞ்சிறு அரிசிமணியில் தீட்டப்பட்ட ஓவியங்களைப் பார்க்க உதவும் உருப்பெருக்கக் கண்ணாடிபோல உலகில் சின்னஞ்சிறு செய்திகளில் அல்லது காட்சிகளில் பொதிந்துள்ள ஓவியங்களை தன் கவிதைகள் வழியாக நம்மையும் பார்க்க வைக்கிறார் கல்யாண்ஜி. நேர்க்காட்சி ஓவியத்தைத் தீட்டுவதுபோல தீட்டத் தொடங்கும் அவருடைய தூரிகை, மெல்ல மெல்ல தன் போக்கில் மாயத்தன்மை மிக்க நவீன ஓவியத்தைத் தீட்டி முடிக்கிறது.

‘என்னுடைய படகை

அவருடைய படகு

முந்தி முந்திச் செல்கிறது

என்னுடையதும் அவருடையதும்

ஒன்றே ஆன ஆறு

போகிறது தன் போக்கில்’

ஆறும் கடலும் தொன்றுதொட்டு நம்மோடு இருப்பவை. மனித நாகரிகமே ஆற்றங்கரையில் பிறந்து வளர்ந்த ஒன்று. ஆனால் ஆற்றிலிருந்து கற்றுக் கொள்ள ஏராளமான உண்மைகள் இருந்தும்கூட மானுடன் எதையும் கற்றுக் கொண்டதில்லை. இயல்பான ஆற்றின் ஓட்டத்தைப்போல எங்கும் இயல்பாக இருக்க அவனால் இயல்வதில்லை. ஆற்றின் ஓட்டத்தை எதிர்த்துச் செல்வதில் கிட்டும் கிளர்ச்சி அவனுக்குத் தேவையாக இருக்கிறது. தன்னை ஒரு சக்தியாக அதன்முன் நிறுவிக் கொள்ள அவன் மனம் விழைகிறது. அவனைப் போலவே விழைவுள்ள இன்னொருவனைக் கண்டுவிட்டால் அவனை போட்டியிட்டு வீழ்த்த எண்ணுகிறது.

போட்டியும் வெற்றியுமே அவனை இயக்கும் விசைகளாக மாறி விடுகின்றன. இயல்பான வாழ்க்கைக்கு இடமில்லை. ஆற்றில் ஒரு படகு இருக்கும் வரையில் அது பயணமாக அமைகிறது, இன்னொரு படகை அருகில் கண்டதுமே அது பந்தயப் பயணமாக மாறி விடுகிறது. வாழ்க்கையே பந்தயக்களமாக மாறி விடுகிறது. ஆதிகாலத்திலிருந்து இந்த மண்ணில் வாழ்ந்துவரும் ஆறு தன் போக்கிலிருந்து இன்றுவரைக்கும் இம்மியளவுகூட மாறவில்லை. ஆனால் ஆற்றங்கரையில் தோன்றி வளர்ந்த மனித சமூகம் எல்லாவற்றையும் பந்தயக் களமாக மாற்றி வைத்துக் கொண்டு அலைகிறது.

இயற்கையின் கருணை என்பது ஒருபோதும் வற்றாத ஊற்று. மானுட சமூகத்தின் பந்தயங்களை அது பொருட்படுத்துவதே இல்லை.

‘நீங்கள் நட்டு வளர்க்கும்

எல்லாப் பூந்தொட்டியிலும்

நடாமல் வளர்ந்துவிடுகிறது

ஒரு பசும்புல்’

மனிதக் கண்களுக்கு பூ வேறு, புல் வேறு என்று தெரிகிறது. ஆனால் இயற்கையின் கண்களுக்கு பூவும் புல்லும் வேறு வேறல்ல. எல்லாமே அதன் பார்வையில் பூக்களே. மனிதன் பூவைமட்டும் விரும்பிப் பிரித்துக் கொள்ள முனைந்தாலும், அவனை மீறி இயற்கை அங்கொரு புல்லை வளர வைத்து புன்னகைக்கிறது. மனிதப் புன்னகையைக் கடந்து சென்று இயற்கையின் புன்னகையைப் படம் பிடிக்கிறது கல்யாண்ஜியின் கவிதை.

எண்பதுகளில் நான் முதன்முதலாக ஹம்பிக்குச் சென்று சுற்றிப் பார்த்தேன். ஒவ்வொரு மூலையிலும் இடிந்து கிடக்கும் பாறைக் குவியலிலிருந்து சிலைகளையும் கோவில்களையும் மீண்டும் கட்டியெழுப்பிக் கொண்டிருந்தார்கள். ஒரு கோவிலிலிருந்து இன்னொரு கோவிலுக்குச் செல்லும் வழியில் இரண்டு உயரமான மொட்டைப் பாறைகளைப் பார்த்தேன். இடதுபக்கம்  ஒரு பாறை; வலதுபக்கம் ஒரு பாறை. ஒரு பாறைக்கு மற்றொன்றை முட்டுக் கொடுத்து நிறுத்தியதுபோல இரண்டும் ஒன்றையொன்று ஒட்டிக் கொண்டிருந்தன.  எந்த நேரமும் உருண்டு விடக்கூடும் என்பது போன்ற தோற்றம். ஒரு வாகனம் தாராளமாகச் செல்லும் அளவுக்கு இரண்டுக்குமிடையில் இடைவெளி இருந்தது. அந்த உயரமும் வளைவும் இணைப்பும் கண்ணைக் கவர்ந்தன. அவற்றுக்கருகில் ஒரு செடியோ மரமோ எதுவுமே இல்லை. கண்ணைக் கூச வைக்கும் வானம் மட்டுமே அவற்றின்மேல் கவிந்திருந்தது. அச்சமும் வியப்பும் ஒரே நேரத்தில் ஊறிப் பெருகின.

நீண்ட நேரம் நான் அதையே பார்த்தபடி நின்றிருந்தேன். எனக்குப் பின்னால் வந்த ஒரு சுற்றுலாக் குழுவினர் அப்பாறைகளின் அருகில் நின்று படமெடுத்துக் கொண்டார்கள். ஓர் இளைஞன் ஓட்டமாக ஓடிச் சென்று ஒரு பக்கமாக ஏறி இன்னொரு பக்கம் இறங்கினான். அவர்களுடன் வந்திருந்த வழிகாட்டி அப்பாறைகளை ‘அக்கா தங்கச்சிக் கல்’ என்று சொன்னார். அச்சொல் எனக்குள் அக்கணமே ஆழமாக இறங்கி விட்டது. அப்படி ஒரு பெயரை ஏன் சூட்டியிருப்பார்கள் என அந்த வழிகாட்டி சொல்லவில்லை. ஆனால், ஒரு பழமொழியின் வாக்கியத்தைப்போல அந்தச் சொல்லை மீண்டும் மீண்டும் எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்கு வந்திருந்தபோது ஒரு மரண வீட்டுக்குச் சென்றிருந்தேன். இயற்கை எய்தியவரின் உடல்மீது மாலையை வைத்து வணங்கிவிட்டு சில கணங்கள் அவர் வாழ்க்கையை அசை போட்டபடி நின்றிருந்தேன். மெல்ல திரும்பி நடந்தபோது அந்தத் துணிக் கூடாரமெங்கும் பெண்கள் அழுது ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு பெண்கள் அல்லது மூன்று பெண்கள் எதிரும் புதிருமாக அமர்ந்து, ஒருவர் தோளை ஒருவர் பற்றி, தலையை முட்டுக் கொடுத்தபடி குனிந்த நிலையில் அழுதார்கள்.

ஒருகணம் என் உடலும் மனமும் பதற, என்றோ ஹம்பியில் கேட்ட ‘அக்கா தங்கச்சிக்கல்’ சொல் நினைவைத் தாக்கியது. அக்கணம் அந்த வழிகாட்டி சொன்ன பெயருக்கான காரணம் புரிந்துவிட்டதுபோல இருந்தது. அப்பாறைகள் ஒப்பாரி வைக்கின்றனவா? எந்த இழப்புக்காக அந்த ஒப்பாரி? சிதைந்துபோன ஹம்பி நகருக்காகவா? அந்த நகரம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அங்கு வசித்த மக்களை வாழ வைத்துக் கொண்டிருந்தது. கோவிலை வாழ வைத்தது. கலைகளை வாழ வைத்தது. அனைவரையும் வாழ வைத்த நகரம் சிதைந்து விழுந்த துயரம் தாளாத சகோதரிகளென அப்பாறைகள் குனிந்து கண்ணீர் வடித்தபடி நிற்கின்றனவா? அந்த வழிகாட்டிக்கு ஒரு கவிஞனுக்குரிய மனம் இருக்க வேண்டும் என்று தோன்றியது.

கவிதைக்குள் வந்து விழும் ஒரு சொல் என்பது திரையில் பிரும்மாண்டமாக விரியும் சித்திரத்தை ஆடி பொருத்தப்பட்ட ஒரு சிறிய பலகைத்துளி வழியாக பார்க்க வைப்பது போன்றது. கல்யாண்ஜியின் கவிதை வரிகள் கண்திறந்து  பார்க்கும் எல்லைக்குள் இருக்கும் வாழ்க்கைக்கு அருகில் தன்னிச்சையாக அழைத்துச் சென்று சேர்த்து விடுகின்றன. கல்யாண்ஜி கவிதைகளைப் படிக்கும்போதெல்லாம் இந்த எண்ணம் வலுப்பட்டுக் கொண்டே வருகிறது. செடி, கொடி, மரம், சருகு, காற்று, படித்துறை, சாலை என அவர் கவிதைகளில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொன்றும் வகைவகையான அக்கா தங்கச்சிக் கற்கள்.

கடந்த ஐம்பதாண்டுகளாக கவிதைகள் எழுதி வரும் கல்யாண்ஜியின் வரிகள் அளிக்கும் வசீகரம் இன்றளவும் பொலிவு குன்றாததாகவே இருக்கின்றது. எளிய காட்சி, அதில் படிந்திருக்கும் அபூர்வமான கணம், அந்தப் புள்ளியிலிருந்து கிளைத்தெழும் வெவ்வேறு காட்சிகள், அவை உருவாக்கும் நிலைகுலைவுகள், நிம்மதியின்மைகள், ஆறுதல்கள், புன்னகைகள், கண்ணீர்த் துளிகள் ஆகியவற்றால் நிலைபெற்றிருக்கும் கவிஞர் அவர்.

- பாவண்ணன்

Pin It