"எப்பவுமே ஒரு சமூகத்தை, இன்னொரு சமூகம் ஒடுக்கணும்னு நினைக்கும்போது, 

ஒடுங்கின சமூகத்தில் ஒரு கலக உணர்ச்சி உண்டாகும். 

இந்தக் கலக உணர்ச்சி கலையா வெளிப்படலாம்.  

சமூக புரட்சியாளர்கள் உருவாகலாம்.  

சிலர் கலைஞராகவும் வரலாம். 

நான் இந்தத் துறைக்கு வர அதுதான் காரணம்."

kamaraju 350“இந்தப் பாலைவனத்திலே நீரூற்று ஏது பாட்டா?” ‘அனந்தசயனம் காலனி’ சிறுகதையில் மீரான் எழுதிய உயிர் அடி இது.  ஒரு வகையில் தோப்பில் முகமது மீரானின் எழுத்து வாழ்வின் குறியீடாகவும் இதனைக் கருதலாம்.  அவர் மாயிருளின் சிறுபெரி; பாலைவனச் சுனை; கசப்பு மருந்தில் கலந்திட்ட தேன்.  கோட்டான்களூடே பயணித்த ஒற்றைக்குயில்.

தமிழ் நவீன இலக்கியம் தொண்ணூறுகளில் பெரும் பாய்ச்சலைக் கண்டது.  யதார்த்த வாழ்வும், எழுத்தும் புதிய அச்சில் அரங்கேறிய தருணம்.  வட்டார வாழ்க்கையைப் பிரதிபலித்த காலம் போய், நிலவியல் சார்ந்து திணை வாழ்வின் தொடர்ச்சியை தமிழ்ப்புனை கதையுலகு தழுவிய பொழுது அது.  திணைக்குடிகள், சேவைக்குடிகள், புதுக்குடிகள்... என மக்கள் திரள் தம் அடையாளங்களைப் பண்பாட்டு வெளியில் தேடத் தொடங்கியிருந்தன.

இத்தருணத்தில்தான் தோப்பில் முகமது மீரானின் எழுத்துப் பிரவேசம் நிகழ்கிறது.  அவர் அறுபதுகளில் எழுதத் தொடங்கி, சில படைப்புகளை எழுதி முடித்துவிட்டபோதும், எழுபதுகளில் இதழ்களில் தொடர் வந்த போதும் 1988-இல் வெளிவந்த ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவல்தான் அவரின் வெகுஜன அறிமுகமாக அமைகின்றது.

“நம்முடைய மொழியில் எழுத வேண்டும்.  அதுவும் என் கிராமத்து மொழியில் எழுத வேண்டும் என்ற சிந்தனை மட்டும்தான் வாசிப்பு மூலம் எனக்குள் ஏற்படுத்திய ஒரு தாக்கம்.  எங்க ஊர் மனிதர்களுடைய வாழ்க்கையைச் சொல்ல இங்கு யாருமில்லை என்று எனக்குத் தோன்றியது அல்லாமல் இலக்கியத்தின் அகராதிகளைக் கற்றுக் கொண்ட ஒரு எழுத்தாளன் அல்ல நான்” என்பார் மீரான்.  அந்த வகையில் அதுவரையில் தமிழ் இலக்கிய உலகம் அறிந்திடாத ஒரு பகுதி மக்களை, நிலத்தை, மொழியை, பண்பாட்டை தன் எழுத்துக்களால் உயிர்ப்பித்தவராக அவர் திகழ்கிறார்.

முகமது மீரான் 26 -09 -1944-இல் குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் தேங்காய்ப்பட்டினம் எனும் கடற்கரையோர ஊரில் பிறந்தார்.அவருடன் பிறந்தவர்கள் 13 பேர்.  அவரின் தந்தை அப்துல்காதர்.  தாயார் பாத்திமா.  இயல்பிலேயே வணிகக் குடும்பம் அவருடையது.  தந்தையார் அப்துல்காதர் கருவாடு ஏற்றுமதியில் புகழ்பெற்றவர்.  இலங்கை, சிங்கப்பூர் நாடுகளுக்கு ஏற்றுமதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.  சுறாமீன் சிறகுகளுக்கும், ஆமை ஓட்டிலிருந்து தயாரிக்கப்படும் ‘அலுகு’ என்ற பண்டத்திற்கும் ஏகக்கிராக்கி உண்டு.  இவற்றை ஏற்றுமதி செய்ததால் ஓரளவு நல்ல வருமானம் இருந்தது.

மீரானின் தந்தை இறுக்கமான இஸ்லாமிய நடைமுறைகளை ஏற்றவராக இருந்தார்.  தேங்காய்ப்பட்டினம் இஸ்லாமியர்கள் ஓரளவு செல்வந்தர்களாக இருந்தனர்.  மதம் மாறாத, அரபு தேசத்திலிருந்து புலம்பெயர்ந்த சுத்த சுயம்புவான இஸ்லாமியர்களாகவும் தங்களைக் கருதிக் கொண்டனர்.  எனவே நாகரிக ஆடை அணிதல், தலைமுடி வளர்த்தல், அரபி தவிர்த்து ஏனைய மொழிகளைப் படித்தல் ஆகியவற்றை மத விரோதமாகக் கருதினர்.

‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’யில் ஓரிடத்தில் இடம் பெறும் உரையாடல்:

“இங்க இங்கிலீசுப் பள்ளிக்கூடம் வரப்போவுது தெரியுமா?”

“தெரியாது,”

“அப்படின்னா தெரிஞ்சுக்கோ.”

“இங்கிலீசு பள்ளிக்கூடம் வந்தா என்னா, வரட்டுமே.”

“உனக்குத் தலைக்கு வட்டா? வந்தா என்னான்னா, வந்தா புள்ளைகளெல்லாம் காபிரா மரிக்கும்.”

“அப்படி மரிச்சாலும் பரவாயில்லை.  பள்ளிக்கூடம் வந்து புள்ளியோ ரெண்டு எழுத்து படிக்கட்டு.  நம்மளெல்லாம் குருடன்.  அவங்க கண்ணாவது தொறக்கட்டு.”

“உனக்கு நல்ல பைத்தியம் புடிச்சிருக்கு; தப்பளம் வைக்கணும்.”

இது ஆங்கிலத்துக்கு எதிரானது மட்டுமல்ல.  கல்வியே தேவை இல்லை.  தமிழும், மலையாளமும் கூடத் தேவை இல்லை.  கரும்பலகையில் ‘அரபி’யைத் தவிர வேறொரு மொழிக்கு இடமில்லை என்கிற நிலை.  இச்சூழலில் தான் மீரான் வளர்ந்தார்.  தந்தை தவிர்த்த போதும் இவர் படித்தார்.

தேங்காய்ப்பட்டினம் ‘அம்சி’பள்ளியில் பயின்றார்.  பின்னர் இளங்கலை மலையாளம், பொருளியல் பயில்கிறார்.  தந்தை இறப்புக்குப்பின் கல்வி முற்றுப் பெறுகிறது.  என்றாலும் மீரான் சிறு பருவம் முதலே வாசிப்பதில் தீவிர ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.  ஊருக்கு அருகில் உள்ள ‘பைங்குளம்’ என்னுமிடத்தில் நாயர்கள் நடத்திய ஒரு நூலகம் இருந்தது.  அது பெரும்பாலும் பூட்டியே இருக்குமாம்.  அங்கு தேங்காய்ப்பட்டினம் இஸ்லாமியர்களுக்கு நூல்கள் கொடுக்க மாட்டார்களாம்.  ஆனால் மீரான் நூலகரோடு தொடர்பு வைத்து, நூல்களை வாங்கி வாசிப்பாராம்.  வைக்கம் முகமது பஷீர், தகழி சிவசங்கரன்பிள்ளை, கேசவ தேவ் ஆகியோர் நூல்களை அங்குதான் படித்திருக்கிறார்.

மீரானுக்கு சிறுவயதில் அவருடைய அப்பா ஏராளம் கதை சொல்லியிருக்கிறார்.  மார்க்கத்தில் முழு ஈடுபாடுள்ள அவர், இஸ்லாமிய நடைமுறை வாழ்வில் மதத் தொடர்புள்ளவர்கள் செய்யும் கேடுகளையும், போலித்தனங்களையும் சுட்டிக்காட்டி உள்ளார். வித விதமான கதைகள், நிகழ்வுகளை அபிநயங்களோடு நடித்துக் காட்டுவாராம்.  அவர் தந்தையின் கதை கேட்க வீடே குழுமி இருக்குமாம்.  இளம் வயதில் கேட்ட இந்தக் கதைகள்தான் பிற்காலத்தில் அவரின் எழுத்துகளுக்குப் பின்புலமாக அமைந்தது எனலாம்.

மலையாள மொழியும் அதன் இலக்கியங்களும் மீரானின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன.  “வைக்கம் முகம்மது பஷீரின் படைப்புகளை முழுமையாக வாசித்துள்ளேன்.  முஸ்லீம் சமூகத்தின் வாழ்க்கையைக் குறித்து அவர் எழுதியதைக் கண்டு நாமும் ஏன் அப்படி எழுதக் கூடாது என்ற எண்ணம் என்னுள் தோன்றியது.  தேங்காய்ப்பட்டினமும் அந்த ஊர் முஸ்லீமின் மொழியும் பஷீருக்குத் தெரிய வாய்ப்பில்லை.  அப்போது தமிழில் பஷீரை அதிகம் யாரும் வாசித்திருக்க வாய்ப்பில்லை.” என தன் படைப்புக்கு உந்துதல் தந்ததாக பஷீரை நினைவூட்டுவார்.

மேலும், மீரான் குடும்பம் ஓரளவு வசதிதான் என்றாலும் அவர்களுக்கு மேல்நிலையில் இருந்து அதிகாரம் செலுத்திய வர்களுக்கும் இவர்கள் குடும்பத்துக்கும் தொடர்ந்து சிக்கல் இருந்தது.  அவரின் தந்தையார் காலத்திலும், பின் தமையனார் காலத்திலும் இது தொடர்ந்தது.  ஊர் விலக்கம், கொடுக்கல் வாங்கல் இல்லாத நிலை... என்றெல்லாம் உருவானது.

தன்னுடைய நேர்காணல் ஒன்றில் இதனைப் பதிவு செய்கின்றார்.  பள்ளிவாசலின் முன் இருக்கின்ற கருமை நிறம் கொண்ட கல்லின் மீது அமர்ந்து கொண்டு ‘ஊர் விலக்கு’ குறித்து விளக்கி அறிவிப்பார்களாம்.

வசதி படைத்தவர்கள், அதிகாரம் படைத்தவர்கள் உறவுகளே ஆனாலும் எழை எளியோரை வாட்டி, வதக்கிச் சிறுமைப்படுத்துவதை மீரானால் ஏற்க முடியவில்லை.  சிறு வயது முதல் தந்தையார் சொன்ன நிகழ்வுகளும், தான் நேரில் பார்த்து, அனுபவித்த நேர்ச்சிகளும் மீரானுக்குள் ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்.  இதனை, “எங்களுக்கு எப்போதும் உயர் வர்க்கத்தினரால் துன்பம் ஏற்பட்டது.  தற்காப்புக்காகப் போராட வேண்டிய சூழ்நிலையில் மூன்று தலைமுறை எங்களுக்குள்ளே இருந்து கொண்டே இருக்குது.  இதற்குள் இருந்து ஒரு கலகக்காரன் உருவாகத்தான் செய்வான்.  நான் ரொம்ப அடிமட்டத்துல இல்லைன்னாலும் அடிமட்ட மக்களின் அனுபவம் எனக்கு கிடைச்சுப் போச்சு.  எனக்குள் ஒரு கலக மனோபாவம் இருந்தது.  அநீதிக்கு எதிரா போராடணும்னு ஒரு சுயமே உருவாச்சிது.  எப்பவுமே ஒரு சமூகத்தை, இன்னொரு சமூகம் ஒடுக்கணும்னு நினைக்கும்போது, ஒடுங்கின சமூகத்தில் ஒரு கலக உணர்ச்சி உண்டாகும்.  இந்தக் கலக உணர்ச்சி கலையா வெளிப்படலாம்.  சமூக புரட்சியாளர்கள் உருவாகலாம்.  சிலர் கலைஞராகவும் வரலாம்.  நான் இந்தத் துறைக்கு வர அதுதான் காரணம்.” என மிகச் சரியாகவே பதிவு செய்கிறார்.

எனவேதான் மீரானின் படைப்புகள் யாவும் இஸ்லாம் சமூகம் குறித்த விமரிசனங்களாக அமைகின்றன.  மட்டுமல்ல இவர்  படைப்புகளின் அடிநாதமாக விளங்குபவை சுய விமர்சனங்கள்.  இறுகியே, மூடுண்ட சமூகத்தின் ஊடாகப் பயணித்து அதற்குள் ஒரு ஜனநாயக வெளியை உருவாக்கிட மீரான் தன் படைப்புகள் வழியே இறுதி வரைப் போராடினார். அவர் முழு இஸ்லாமியர்; மார்க்கத்தில் முழு நம்பிக்கைக் கொண்டவர்.  தான் சார்ந்த மக்கள் திரளை நோக்கியே பேசினார்.  தன் மீதும், எழுத்தின் மீதும் ஐயங்கள் எழுப்பப்பட்ட பொழுது மீரான் உரத்துச் சொன்னார்.

“எனக்கு கடவுள் பக்தி உண்டு.  ஆனால் அதை நிறுவனமா ஏத்துக்க மாட்டேன்.  ஒரு நாளைக்கு ஐந்துமுறை தொழுகை பண்ணுவேன்.  குரான்ல சொன்னதையும் நபிகள் சொன்னதையும் நான் எதிர்க்க மாட்டேன்.  மாற்றும் சொல்லமாட்டேன்.  சமுதாயத்தை மட்டும் விமர்சனம் பண்ணுவேன்.  இஸ்லாம் ஒரு நிறுவனம் அல்ல.  மார்க்ஸிசம்கிற கோட்பாடு எப்படி நிறுவனம் ஆச்சுதோ அப்படியே இஸ்லாமும் புரோகிதர்களால் நிறுவனமாகி சீரழிஞ்சிடுச்சி.”

மீரானின் மொத்தப் படைப்புகளும் இந்தத் தளத்தில்தான் இயங்கின. அதே வேளை அவர் தனக்கென தனித்ததொரு மொழிதல் முறையை, எடுத்துரைப்பை, புலப்பாட்டு முறைமையை உருவாக்கிக் கொண்டது அவரின் கலையியல் வெளிப்பாட்டு வெற்றியாகும்.

மீரானின் குடும்பத்தவர்கள் ஒரு சுடுகாட்டின் அருகே வசித்தார்கள். அது பனைத் தோப்பாக இருந்தது. அப்பகுதியின் அடையாளமே ‘தோப்பு’தான்.  எனவே முகமது மீரான் ‘தோப்பில்’ ஆனார்.  தொடக்கத்தில் மலையாளத்தில் எழுதினார்.  பின் மலையாளத்தில் எழுதி தமிழுக்கு  மொழி பெயர்த்தார்.  இவற்றில் உயிர்ப்பு இல்லை.  எனவே அவருக்கு உவப்பு இல்லை.  பின்னர் தான் கேட்ட, பேசிய, புழங்கிய தமிழ் மொழியில் எழுதத் தொடங்கினார்.  அது மீரானின் மொழியாக, மீரானின் நடையாக அமைந்தது.  மீரானின் ஊரில் ஐந்து விதமான தமிழ் இருந்ததாக அவர் கூறுவார்.  மீனவர்கள் பேசுவது, முஸ்லீம்கள் பேசுவது, நாடார்கள் பேசுவது,  நாயர்கள் பேசுவது, பறையர் - புலையர் பேசுவது. இந்தப் பேச்சுகளைக் கூர்ந்து கவனித்தார். இவர் படைப்புகளில் இவற்றைத் துல்லியமாகப் பதிவு செய்தார்.  கி.ரா.வின் எழுத்துக்கள் மீது ஈர்ப்பும், அவரோடு தொடர்பும் கொண்டவர் மீரான்.  எனவே, அவரின் படைப்புகளில் வட்டார வழக்கும், நாட்டுப்புறவியல் கூறுகளும் பேரளவில் இடம் பெற்றன.  இஸ்லாமிய இனவரைவியல், நாட்டார் இஸ்லாம் என்ற வகைபாடுகளுக்கு சான்று பகருவனவாக அவர்தம் படைப்புகள் அமைந்தன.

மீரானின் முதல் நாவலாக அறியப்படும் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை,’ ‘முஸ்லீம் முரசு’ இதழில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1988 இல் புத்தகமாக வெளிவந்தது.  இது தேங்காய்ப்பட்டினம் என்ற தமிழகத் தென்கோடி ஊரினை மையமிட்டு இஸ்லாமிய சமூகத்தின் இருப்பினை வரலாற்று நோக்கில் புலப்படுத்திற்று.  ‘கி.பி. 9 -ஆம் நூற்றாண்டில் தொடங்கும் சரித்திரம்’ சித்திரமாக விரிகிறது.  மூன்று தலைமுறையினரின் வாழ்வை, ஏற்ற இறக்கங்களை, மசூதியை, ஊரின் தெருக்களை, விழாக்களை இந்நாவல் விவரிக்கிறது.  தங்களை நேரடி ‘சுயம்பு’ இஸ்லாமியர்களாக நம்பும் மக்கள், மக்களை மதத்தின் பேரால், சடங்குகள், நம்பிக்கைகள் பேரால் ஆட்டிப் படைக்கும் மதகுருமார்கள், ஒரே இனத்தைச் சேர்ந்திருந்தாலும் பொருளாதார நிலையால் மேல், கீழ் ஆகி அதிகார நுகத்தடியில் அல்லல்படும் மக்கள்... இந்நாவலில் உயிர்ப்புடன் உலா வந்தார்கள். பல நிகழ்வுகள். பல வித மாந்தர்கள், கதைகளின் தொகுப்பாக இது அமைந்தது. ஏறக்குறைய தன் தந்தையார் கூறிய கதைகளின் கூட்டு மொத்தமாக இதனை மீரான் குறிப்பிடுவார். கதைக் கருவும், மொழியும், வழங்கல் முறையும் தமிழ் இலக்கியப் பரப்பில் புதுமையாக அமைந்தது. அதுவே மீரானை தனித்துவமாகக் கவனிக்கவும் செய்தது. நெய்தல் நிலத்தின் வாழ்க்கையை நவீன இலக்கியத்தில் இது பதிந்தது.

மீரானின் இரண்டாவது நாவல் ‘துறைமுகம்’.  இது விடுதலைக்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெறுகின்றது.  கடலோர கிராமத்துக் கதையின் தொடர்ச்சி என்பது போல அடுத்தடுத்தத் தலைமுறைகள் இதில் அங்கம் வகிக்கின்றன.  ஏழை, எளிய மீனவர்கள், மீன் வியாபாரிகளுக்கும், தூத்துக்குடி இடைத்தரகர்களுக்கும் இடையே அல்லல்படுவது நாவலாக விரிகிறது.  இலங்கையில் இருக்கும் மொத்த வியாபாரிகள்.  அவர்களும் இங்கிருந்து சென்ற முஸ்லீம்கள் தான்.  அவர்கள் ஊரில் மசூதி கட்டப் பணம் தருகிறார்கள்.  இந்த முதலாளிகளின் பிடிக்குள்ளும், இடைத் தரகர்களின் கரங்களுக்குள்ளும் அடித்தள மீனவ இஸ்லாமியர் சிக்கித் தவிக்கிறார்கள்.  இந்நாவலிலும் இஸ்லாமிய மார்க்கம் இறுகி மூட நம்பிக்கைகள் கோலோச்சுவது சுட்டப் பெறுகின்றது.  பள்ளிக்கு படிக்கச் செல்வது தவறு என கடலோரக் கிராமத்து கதைச் சுட்டும்.  இதிலோ ஒரு இஸ்லாமிய சிறுவன் பள்ளிக்கு படிக்கச் செல்வதால் அவன் குடும்பம் ஊர் விலக்கம் செய்யப்படுகிறது.  மேலும் போலி மதகுரு ஊருக்கு வந்து, தன்னைக் கடவுளின் தூதன் எனக் கூறி சித்து வேலைகளில் ஈடுபடுகிறார். ஓர் நிகழ்வு.  கிராமத்து மக்களின் நோய் நொடிகளையும், பில்லி சூனியங்களையும் விரட்டும் அபூர்வ சக்தி அவரிடம் இருப்பதாக நம்புகிறார்கள்.  தினமும் அவரைக் காண பெருங்கூட்டம்.  குவளையில் தண்ணீரோடு அவரைக் காண்கிறார்கள். அவரோ அந்தக் குவளையில் எச்சில் துப்புவார். இதுதான் ஆசி வழங்குதல்.  மக்கள் அந்த எச்சில் கலந்த தண்ணீரை அருந்தினால் அவர்களின் பிணி விலகும். அது மட்டுமல்ல; அவர் ஊரில் தங்கி உள்ள நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒரு பெண்ணை அவரிடம் அனுப்பி வைக்க வேண்டும். இப்படியாக மோசடிகள் மிகுந்த ‘மதப்போர்வை’ மீரானால் தோலுரித்துக் காட்டப்படுகின்றது. இஸ்லாமிய வணிகம், பொருளாதாரம் சார்ந்த நிறைய பதிவுகள் இந்நாவலில் உண்டு.

தமிழ்ச் சூழலில் எப்படி கடுகினும் சிறிய விசயங்கள் சாதி, மதக் கலவரங்களை உருவாக்குகின்றன என்பதை மீரானின் ‘கூனன் தோப்பு’ நாவல் அற்புதமாகப் பேசுகின்றது.  ஒரு ஆற்றின் இருகரைகளில் வாழும் இருவேறு சமூகங்கள்.  ஒரு கோழி திருடப்படுவதில் தொடங்குகிறது மோதல்.  தனி மனிதப் பிழைகள் பெரிதாக்கப்பட்டு இரண்டு சமூகங்களின், ஊர்களின், மதங்களின் மோதலாக மாறுகின்றது. தனிமனித கௌரவம் - மத கௌரவமாக இடம் மரி பழிவாங்கலாக, மதப் பெருமிதமாக, மதச் சிறுமைகளாக, மேல், கீழ் குணங்களாக அடையாளப்பட்டு அப்பாவி மக்கள் நாசமாகவும், வீடுகள், சொத்துக்கள் சூறையாடவும் காரணமாகின்றது.  இன்றும் சிவகங்கை கச்சநத்தம் தொடங்கி அரியலூர் பொன்பரப்பி வரை நீடிக்கும் இத்தகு ‘சிறிய’ விசயங்களில் தொடங்கி மனித உரிமைப் பறிப்புகளாக உருக்கொள்வதை மீரான் அன்றே நுட்பமாக தன் படைப்பில் பதிவு செய்திருக்கிறார்.

மீரானுக்கு அவர் எழுத்தின் வீச்சை முன்வைத்த நாவலாக ‘சாய்வு நாற்காலி’யைச் சொல்லலாம்.  பாவுரீன் பிள்ளை எனும் ஒரு முஸ்லீம் வீரனின் ஆளுமையை அலங்காரமாகச் சொல்லும் நாவல்.  டச்சுக்காரர்களின் தாக்குதலின் போது திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவைக் காப்பாற்றியவர் அவர். மகாராஜா தன் உயிர் காத்த வீரனுக்கு ஒரு ஊர், வாள், பெரிய பங்களா ஆகியவற்றை மகிழ்ச்சிப் பரிசாக வழங்குகிறார். அந்த வீரனின் வாரிசுகள் வழியே சுமார் இரு நூறாண்டுகளில் நாவல் நிகழ்கிறது.  வழக்கம் போல் இந்நாவலிலும் மதப்பிடிப்பு, மூட நம்பிக்கைகள், பழமை மீதான மோகம் போன்றவை இடம் பெறுகின்றன.  இந்நாவலில் இடம் பெறும் முஸ்தபாகன்னு கொடூரமான முரடன். எதிரிகளுக்கு மட்டுமல்ல சுற்றத்துக்கும் கேடு நினைப்பவன்.  சுயநலக்கேட்டின் உச்சம்.  தன்னையே உலகமாகப் பார்க்கும் சுகவீனம்.  இந்நாவலில் தொன்மங்கள், மாந்திரீக யதார்த்த ஜாலங்கள் பல இடம் பெறுகின்றன. நாவலே வாழ்வைப் பற்றிய ஒரு விவரணையாகவும், விசாரணையாகவும் அமைகின்றது.  பழமையும் புதுமையும் முட்டி மோதி தம்முன் பொருதி நிற்கின்றன.

மீரானின் ‘அஞ்சுவண்ணம் தெரு’ ஐந்து இஸ்லாமிய நெசவாளர்கள் குடியிருக்கும் தெருவினை உள்ளும் புறமுமாக விவரிக்கும் நாவல்.  பல்வேறு வகைப்பட்ட மனிதர்களின் வாழ்க்கைக் கோலங்களை ஓர் ஓவியம் போல மீரான் வரைந்து காட்டிவிடுகின்றார்.

நாவல்களில் இஸ்லாமிய சமுதாயத்தின் இருட்டு உலகை தன் கைவிளக்கு ஒளியால் பொது வெளிக்கு கைபிடித்து வரும் விதமாக மீரானின் படைப்புத்தளம் இயங்குகிறது எனலாம்.  சுய விமர்சனம், எள்ளல் ஆகியவை இவற்றின் பொதுக்குணங்களாக விளங்குகின்றன. ஊர்கள், தெருக்கள், பழக்க வழக்கங்கள், வழக்காறுகள், தொன்மங்கள், புழங்கு பொருட்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை படைப்பின் ஊடே பதிவு செய்வதன் வாயிலாக மீரான் தேர்ந்த நாட்டுப்புறக் கதைசொல்லி ஆகத் திகழ்கிறார்.

மீரானின் நாவல்கள் வரலாற்றையும், பண்பாட்டையும் பற்றிய அக்கறையைத் தர, அவரின் சிறுகதைகளோ மனித உணர்வு மீட்டல்களாக அமையக் காணலாம். நெய்தல் வாழ்வின் சிறு துளியாய் ‘கடல்’, தாய்மை அன்பின் உச்சமாக ‘உம்மா’, மனிதத் தன்மையின் அளவுகோலாக ‘அனந்தசயனம் காலனி’, சவப்பெட்டி வண்டியில் உயிர் துளிர்க்கும் ‘மரணத்தின் மீது உருளும் சக்கரம்’... இப்படி ஏராளம் கதைகள். அன்புக்கு ஏங்கும் மனிதர்கள்.  வாஞ்சைக்கு தவம் இருக்கும் மனிதர்கள்.  முதுமை சுமந்து நிற்கும் மனிதர்கள்.  வலிகளையே வாழ்வாய், வடுவாய் சுமக்கும் பெண்கள்... இவர்கள்தான் மீரானின் சிறகதை மாந்தர்கள்.  மனித உறவுகளை, மனித நேயத்தை, உள்ள ஈரத்தை அவர்தம் எழுதுகோலுக்கு மையாக்கினார் என்றால் மிகை இல்லை.

மீரான் வெளியுலகிற்கு அதிகம் அறிமுகம் ஆகாத நிலையில் அவரின் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’க்கு மாநில அளவில் சிறந்த நாவல் என விருது வழங்கிச் சிறப்பித்த தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தை அவர் நன்றியோடு நினைவு கூர்வார்.  இலக்கியச் சிந்தனை, அமுதன் அடிகள், லில்லி தேவசிகாமணி, த.மு.எ.க.ச, தமிழ்நாடு அரசு விருதுகளைப் பெற்றார். சாய்வு நாற்காலி நாவலுக்காக (1997) சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்.  நேஷனல் புக் டிரஸ்ட் - ஆதான் பிரதான் திட்டத்தில் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கும் சிறப்பினைப் பெற்றார்.  தன் எழுத்துக்கான போதிய அங்கீகாரத்தைப் பெற்ற மகிழ்ச்சி அவருக்கு எப்போதும் உண்டு.

மீரான் வியாபாரத்தில் கடை ஆளாகத் தொடங்கி முதலாளி வரை பல்வேறு நிலைகளைக் கண்டவர்.  பொருளாதார ஏற்ற இறக்கங்களில் பழக்கப்பட்டவர்.  உறவுகளின் சிக்கல்களை அனுபவித்தவர். ஆனால் இவை எதிலும் தன்னை இழக்கவில்லை.  மனிதர்கள் மீதான அக்கறையை இழக்கவில்லை.  அன்பொழுக சிநேகித்தார். படைப்பை, படைப்பாளிகளைக் கொண்டாடினார். சக கிருதயர்களை மெச்சினார்.  புன்னகை சிந்தும் வசீகர முகமும், இனிய சங்கீதக் குரலும் அவரோடு பழகியவர்களை எப்போதும் பற்றிப் படர்ந்து வரும் வல்லமைமிக்கவை.

தோப்பில் முகமது மீரான் நவீன தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமிய வாழ்வையும் பண்பாட்டையும் அவற்றின் வீரியம் குறையாமல் கலை அழகியல் தன்மைகளோடு பதிவு செய்தவர்.  தமிழ் யதார்த்த எழுத்து மரபின் தொடர் கன்னியாக விளங்கியவர்.  நெய்தல் திணைக்குடி இலக்கியத்திற்கு புதிய அணிகலன்களை வழங்கியவர் என மதிப்பிடலாம்.

Pin It