வரலாற்றுப் போக்குகள் ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் மாறுவன. ஒரு குறிப்பிட்ட நூற்றாண்டில் ஒவ்வொரு 50 ஆண்டுகளுக்கும் கூட வரலாற்றுப் போக்குகள் மாறும். சான்றுகளை உற்று ஆய்ந்தால் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் கூட வரலாற்றுப் போக்குகள் மாறுவதனைக் காணலாம். இம்மாறுதலுக்குக் காரணம் ஒரு நிலவட்டம் உள்ளும் புறமுமாகக் கருத்தியல் மற்றும் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படுவதாகும். தமிழகம் தொடர்ந்து கிறிஸ்து சகாப்தத்திலிருந்து புறவுலகுடன் தொடர்பு கொண்டு உள்ளது. இதற்கு நல்ல சான்று:ஆப்கன் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்கள் மினுமினுக்கும் மணிக் கற்களாகப் பட்டை தீட்டப்பட்டன; அதனால் வணிகமும் மேற்கொள்ளப்பட்டது. இதனையே பொருந்தல், கொடுமணல் போன்ற இடங்களில் அறிஞர்கள் அகழ்ந்தனர்.
இந்தியாவில் வரலாறு இல்லை என்று சொல்லிச் சொல்லியே ஆங்கிலேயர்கள் இந்திய வரலாற்றை அழித்தனர். திப்புவை அழித்து அவரது வாரிசுகளை பதவியேற்கவிடாமல் அவ்வமிசத்தினையே இல்லாமல் ஆக்கினர். தமிழகத்தில் பாளையக்காரர்கள் பலரின் நிலை இதுதான். 19-ஆம் நூற்றாண்டில் இந்திய வரலாறு துரோகம், கொடூரம், அரசியல் தடுமாற்றம், திறமற்ற படையினர் இவற்றால் நிறைந்தது. சுருக்கமாகச் சொன்னால் காலனிய காலத்தின் சமூக உறவுகள் அரசியல் வரலாற்றில் உறைந்திருந்தன.
1795-இல் Bengal and Madras Presidencies கம்பெனியின் கட்டுக்குள் வந்தன. ஆர்க்காடு நவாப் கம்பெனியிடம் ஓய்வூதியம் பெற்றார். 1858க்குள் பெரும்பாலான சமஸ்தானங்கள் கம்பெனியாட்சியின் / பிரிட்டிஷ் அரசின் கீழ் வந்தன. சமஸ்தான ராஜாக்களின் ஏஜண்டுகள், அவர்களின் கீழ் இருந்த வட்டாரத் தலைவர்கள் அரசின் மரியாதை பெற்றுப் பேரரசில் பங்காளியாயினர். சமஸ்தானங்களின் குடும்ப உறவு களைக் கூட பேரரசு தீர்மானித்தது.
ஒரு சமூக மாற்றத்திற்கு அரசியல் கொள்கைகள், ராணுவ நடவடிக்கைகள், புதிய தொழில்நுட்பங்கள், கல்வி மற்றும் இன்ன பிறவும் காரணமாக அமைகின்றன. இக்காரணிகள் தமிழகத்திலும் அமைந்தன. இதனை 19-ஆம் நூற்றாண்டுச் சான்றுகள் தெளிவாக்குகின்றன. 1800களில் கம்பெனியார் தென்னகத்தில் குறிப்பாகத் தமிழகத்தில் பாளையக்காரர்களின் ஆளுமையை அழித்து இந்நிலத்து மக்களின் பண்பாட்டுக் கூறு களையும், நிலவுரிமைக் கூறுகளையும் அறியும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இதற்கொரு வழியினையும் உருவாக்கினர். அதுவே, கணக்கெடுப்பு (census).. நிலவுரிமை பற்றிக் கொள்கைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்தியாவில், தமிழ கத்தில் பிரிட்டிஷ் ஆட்சி நிலையுற அலுவலர்கள், மிசினரிமார்கள், அறிஞர்கள், வணிகர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட்டனர். சாதாரண அலு வலர்கள்கூட ராணுவத்தினின்று தெரிவு செய்யப் பட்டனர். இக்கட்டுரையில் இந்தியப்பின்னணியில் தமிழகம், (சென்னை மாகாணம்) பெற்றிருந்த சமூக, அரசியல் கூறுகள் அறியப்படுகின்றன.
காலனிய வரலாறு
காலனிய காலத்தின் தொடக்கத்தில் இந்தியா பற்றி வரலாற்று ஆசிரியர்களைவிட ஓரியண்டலிஸ்ட் களே ((orientalists)) பனுவல்கள் ((texts)) வாயிலாக அறிந்திருந்தனர். Mountstuart Elphinstine மராட்டிய அரசு ஆவணங்களுடனான நேரிடையான அனுபவத் தினால் இந்தியா பற்றிய வரலாற்றினை இரு தொகுதிகளாக வெளியிட்டார். தக்காணம் பற்றி எழுதுகையில் மெக்கன்சியின் ஆவணங்களைப் பயன் படுத்தினார். மெக்கன்சி ஓர் ஓரியண்டலிஸ்ட் அன்று; இந்திய மொழிகளைக் கற்றவர் இல்லை. அவர் அலுவல் சார்ந்த ஓரியண்டலிஸ்ட்கள், காலனிய சமூகவிய லாளர்கள் இடையிலான இடைவெளியினை இட்டு நிரப்பினார். இவரின் சேகரிப்பு, பின்நாட்களில் உருவாக்கப்படும் Manuals, Gazetteers சாதி பற்றிய குறிப்புகளுக்குப் பயன்பட்டது. Edgar Thursto னின் இனவியல் குறிப்புகளுக்கும் இது பெரிதும் பயன்பட்டது. பாளையக்காரர்கள் தம் தம் குடும்பங்களுக்கு வம்சாவளி எழுதி வைத்தனர்.
இவை ஒரே மாதிரியான கட்டமைப்பில் (stereotype) உருவாக்கப்பட்டன. இவர்கள் அரசியலில் ஒரே மாதிரி யான வீழ்ச்சியினைச் சந்தித்தனர். கதைகளில் நாயகனைப் போல் வென்றனர்; வாழ்க்கையில் வில்லனைப்போல் வீழ்ந்தனர். இவ் வம்சாவளிப் பனுவல்களையும் மெக்கன்சி சேகரித்தார் மெக்கன்சி சேகரித்த ஓவியங்கள் பல. அவற்றுள், காலனிய காலத்திய நீர்நிலைகள், கிணறுகளின் வரைபடங்கள், வேளாண் தொழில்நுட்பத்தினை விளக்கும் படங்கள் முக்கியமானவை.
பல படங்கள், கோயிற் சிற்பங்கள். நிலப்பரப்பியல் ஓவியங்கள், கோட்டைகள், கட்டட ஓவியங்கள், மனிதர் உருவங்கள் முதன்மையானவை. அரசவை அலு வலர்கள், சேவகர், வேலையாள், ஆயுதமேந்திய காவலர், பாளையக்காரர், பிராமண அலுவலர், வரிவசூல் அலுவலர் போன்றவை சிறப்பானவை. இவர் தொகுத்த படங்கள் வழியே சாதிய அடையாளங் களையும், அவர்களின் தொழிலையும் அறியலாம். முடி திருத்துவோர், கூடை முடைவோர், கைரேகை பார்ப்போர், மருத்துவர், துணிவெளுப்போர், போன்றோரின் படங்கள் மிக முக்கியமானவை.
குறும்பன், கோமுட்டி, பனியான், பலிஜா, கனரா பிராமணர் போன்ற படங்கள் சாதி இனவியல் சார்ந்தவை; மல்யுத்தக்காரர், வணிகர், பாணர் போன் றோர் படங்கள் தொழில் சார்ந்தவை. இந்து விழாக் களை, இராமாயணக் காட்சிகளை விளக்கும் படங்கள் முக்கியமானவை. இந்த ஓவியங்களில் ஒரு நேர்த்தியினை அறியமுடிகிறது. கோயில்களில் சிற்பங் களாக ஓவியங்களாகக் காட்டப்பட்டுள்ள இராமாயணக் காட்சிகள் ஆராயப்பட்டுள்ளன. இவ்விதிகாசக் காட்சி களை ஓலைச்சுவடிகளில் கோட்டோவியங்களாக ஜோஸ்யக்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கருப்பு-சிவப்பு வண்ணங்களில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட இதுபோன்ற உருவங்களின் கீழ் தெலுகு மொழிச் சொற்கள் உள்ளதனைப் பார்த்திருக்கிறேன். அவற்றில் ராமன், சீதை, ராவணன், முருகன், வள்ளி தெய் வானையுடன் கூடிய சுப்ரமணியர், அநுமார், விநாயகர், மீனாட்சி, வெங்கடாஜலபதி, மொட்டை போட்ட முருகன், நாக்கு நீண்ட காளியுருவங்கள் மிக முக்கியமானவை. ஜோஸ்யம் பார்க்க வருவோரின் மனோநிலைக்கு ஏற்ப இப்படங்கள் அவர்களுக்குக் காட்டப்படும். அதற்குத்தக்க வசனங்களை ஜோஸ்யர் பேசுவார்.
Buchanan தொகுப்புகளில் 122 சாதிக்குழுக்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில: கண்காணி, Bankers & Traders, Rajputs, Muslims (exclusive of Maplas), Bhats, Genealogists and Poets, Marattas, Parsis, Garwadys (snake catchers), Reddy (farmers), Jogis (Religious mendicants) Julais, Jetty (Wrestlers), Dhobis (Washer man). இப்பெயர்கள் தொழில், இனம், சாதி அடிப்படையில் தொகுக்கப்பட்டன. பாளையக்காரர்களிடம் பெற்ற போர் அனுபவம், பெருங்கலகத்தில் (1857 கலகத்தினை Nicholas B.Dirks இப்படிக் குறிப்பிடுகிறார்) பெற்ற பின்னடைவு போன்ற வற்றால் பிரிட்டிஷார் இந்தியமக்கள், தமிழக மக்களின் உளவியலைப் புரிந்துகொள்ள முயற்சி எடுத்தனர். அதற்கான தேவையும் இருந்தது.
மக்களை ஆள வேண்டுமெனில் மக்களின் மனத்தினை ஆளவேண்டு மென்று எண்ணினர். இதனால் இந்தியாவின் பல சாதியினரின், பழங்குடிமக்களின் வலிமையினையும், இயலாமையினையும் அறிந்துகொள்ள முற்பட்டனர். 1818-இல் மராட்டியர் முறியடிக்கப்படும்வரை அவ்ரங்கசீப், சிவாஜியால் திணறடிக்கப்பட்டது போல், கம்பெனியாரும் திணறினர். இந்தியாவில் ஆங்கிலேயர் காலூன்ற சாதிகளே காரணமாயின; அவையே பிறகு பிரச்சினையாகவும் ஆயின.
சாதிக்கூட்டங்களை நடத்திச்செல்லும் தலைவர்களின் தில்லுமுல்லுகளை ஆங்கிலேயரால் கணிக்கமுடியவில்லை. எனவே, நேரடியாகக் களத்தில் இறங்கிக் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். இதில் ஒவ்வொரு நிலவட்டத்திலுள்ள நிலவியல் கூறுகளையும் அங்குள்ள மக்களின் / சாதிகளின் பொருளியல் வளத்தினையும் போரியல் பலத்தினையும் அறிய முயன்றனர். இது நிலவுரிமை தொடர்பான முடிவுகள் எடுக்கவும் land settlement ற்கும் பெரிதும் உதவின.
Thomas Munroe, Mark Wilks, Charles Metcalfe போன்றோர் இந்தியாவின் கிராம நிர்வாகம் பற்றி ஒரே மாதிரியான பார்வை கொண்டிருந்தனர். Orientalists களான Sir William Jones, Natheniel Helned, Henry Coolbrooke போன்றோர் இந்தியாவைக் கீழை அதிசயம் ((eastern wonder) ) என்றனர். James Mill இந்தியா வராமலே இந்தியா பற்றி எழுதினார். இந்தியாவின் வட்டார மொழிகளின் புலமை இன்றியே இந்தியா பற்றிய கருத்துகளை முன்வைத்தார். ஆசிய நாகரிகங்களிலேயே இந்தியா உன்னதமான நாகரிகத் தினைக் கொண்டுள்ளது என்ற கருத்தினை Sir William Jones முன்வைத்தார்.
இந்தியாவை ஆள்வதற்கு எம் மாதிரியான அரசியல் கொள்கைகள், ஆட்சிக் கொள்கைகள் முன்வைக்கப்பட வேண்டுமென்ற கருத்துகளைக் orientalists களும் , utilitarian களும் கூறி வந்தனர். இதற்கிடையில் ஆங்கிலவாதியான ((anglicist) Thomas B.Macaulay இந்திய மரபினைப் புறக்கணித்து ஆங்கிலமயமான கல்வியினைப் பரிந்துரைத்தார். ஊடே, Charles Grant என்பவர் இந்து பண்பாட்டுக் கூறுகளைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை, அவர்களை இருளிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் வலி யுறுத்தினார். இது ஆங்கிலமயமாதல் அல்லது கிறித்தவ மயமாதலாலேயே இயலும் என்றார்.
ஆனால், James Mill நவீனமயமாதல், ஆங்கிலமயமான நிறுவனங்கள் (English Institutions) போன்றவற்றால் இயலும் என்றார். மேலும், பிராமணியம், கீழைத்தேய வல்லாட்சி, பிராமண குருக்கள்முறை அனைத்தும் ஒன்றுக்குள் ஒன்று இயைந்தது என்றும் இது மனிதச்சமூகத்தினை அடிமைப்படுத்தும் என்றும் கூறினார். ஆனால், ஐரோப்பியர் இக்காலகட்டத்தில்தான் கருப்பின மக்களின் அடிமை விற்பனையில் கோடிகோடியாக பணம் சம்பாதித்தனர்.
John Shore, Philip Francis, Charles Cornwallis போன்றோர் permanent settlement பற்றி வாதிட்டனர். ஆனால், இவற்றை நிறைவேற்ற சமூகம் பற்றிய புள்ளிவிவரங்கள் தேவை. இதற்காகத்தான் census எடுக்கப்பட்டன. Mackenzie யின் சேகரிப்புகள் இதற்குப் பெரிதும் பயன்பட்டன.
இந்தியா இனங்களின் நாடு
பெருங்கலகத்திற்குப் பிறகு இந்தியச் சமூகம் இரு கருத்துகளால் பிரிந்து கிடந்தது. ஆங்கிலேயருடன் ஒத்துப்போவது; ஆங்கிலேயரை எதிர்ப்பது. இது ஒரு காந்தத்தின் வடக்கு தெற்கு முனைகளைப் போன்றது. Dalhousie யின் நாடுபிடிக்கும் திட்டத்தினாலேயே இக்கலகம் உருவானது. இச்சூழலில், யாரிடம் வரி வசூலிப்பது என்பதில் குழப்பம் எழுந்தது. இந்திய நிலவுடைமையாளர்கள் பாரம்பரியமான சமூக அந்தஸ்தினை ஆங்கிலேயருடன் குலவி தக்கவைத்துக் கொண்டனர்.
இதற்குமுன் இந்தியக் கிராமங்களில் சாதிகள் இருந்தாலும் அவற்றுள் ஒரு ஒருங்கிணைவு இருந்தது. இக்கலகத்திற்குப் பிறகு சாதிகளிடையே சச்சரவுகள் எழுந்தன. 1870களுக்குப் பிறகு இதனையே துருப்புசீட்டாக வைத்து இந்தியாவை ஆள முடியும் என்று ஆங்கில அரசு எண்ணியது. இதனால் 19-ஆம் நூற்றாண்டு முழுக்க சாதிகள், பழங்குடிகள், பழக்க வழக்கங்கள், சமூக உறவுகளின் நடவடிக்கைகள் போன்றவற்றை அறியவேண்டி வந்தது. இதனால் ஆங்கில அரசுப்படைகளில் இந்தியரைச் சேர்ப்பதில் சிக்கல் எழுந்தது. அதற்கான அச்சாரம்தாம் 1871 கணக்கெடுப்பு.
இந்தியாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சாதி பற்றிய முழுவிவரங்களையும் சொல்லும் manual களை உருவாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. J.H.Nelson மதுரை மாவட்டத்திற்கான manual ஒன்றினை Madura country என்ற தலைப்பில் வெளி யிட்டார். பிறகு gazetteer களின் புள்ளியியல் அளவைகள் போன்றவற்றில் முழுமையாக இனவியல் கூறுகள் பதிக்கப்பட்டன. இருந்தும் Madurai manual லை Madras Revenue board போதவில்லை என்று கருத்துரைத்து, செய்தி சேகரிப்பில் அறிவியல்முறை பின்பற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
1872-இல் Reverent M.A.Sherring என்பவர் Hindu Tribes and Castes என்ற நூலினை 3 தொகுதிகளில் வெளியிட்டார். அடிக் குறிப்புகளுடன் தக்க சான்றுகளைக் கொண்டு எழுதப் பட்ட இந்நூல் orientalists பார்வையிலிருந்து இந்தியா பற்றிய பார்வையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. 1871-1872-ல் இந்திய அளவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தால் சாதியினை சமூகத்தின் அடிப்படை அளவீடாகக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலேயரிடையே சாதி பற்றிய புரிதல் தெளிவற்று இருந்தது.
இச்சூழலில், Risely 1891-இல் Tribes and Castes of Bengal என்ற பல்தொகுதி நூலொன்றினை வெளி யிட்டார். இந்தியாவில் இனவியல் கணக்கெடுப்பு சாதிவாரியாக அந்தந்த சாதியின் உடற்கூறுகளை அளவெடுப்பது என்று சொல்லப்பட்டது. சாதிக்கொரு உடற்கூறியல் அமைந்திருப்பதற்கு அகமணமுறையே காரணம் என்றும், ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு நிலவட்டத்தில் வசிக்கும் என்றும் அறியப்பட்டது. இந்நிலவட்டங்களை ethno geography எனலாம்.
Risely இனவியல் கணக்கெடுப்பிற்கு ஒரு வரை யறையினை வைத்தார். அதாவது, ஒவ்வொரு இனத்தினுடைய (இதனை சாதி என்றும் வைத்துக் கொள்ளலாம்; பழங்குடி என்றும் வைத்துக் கொள்ளலாம்) உடல் அளவுகள் (ஆண் / பெண்), மொழி, பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள், திருமண முறைகள், தொழில் மற்றும் வேலை, பிறப்பு-இறப்பு சடங்குகள், உணவு, உடையலங் காரம், குடும்ப உறவுகளின் கட்டமைப்பு போன்ற தலைப்புகளில் செய்திகள் சேகரிக்கப்பட வேண்டும்.
மேற்சொன்னவை ஆய்விற்காகத் திரட்டப்பட்ட வையன்று. போலீஸ், வரிவசூல் அலுவலர்கள், நீதிபதிகள் தம் தம் வேலைகளை எளிதாக்கிக் கொள்வதற்கு இவை பயன்பட்டன. ஆனால், சாதிகள் சண்டைகளை உருவாக்கும், முடியாட்சிக்கு வழிவிடும் என்று Risely சொன்னார். Risely தம் நூலினை சாஞ்சி கல்சிற்பத் தொகுதியினின்றும் தொடங்குகிறார். அதில் ஒரு தலை வரை குரங்குகள் வணங்குவதாகக் காட்டப் பட்டுள்ளது. இதில் குரங்கு உருவங்களைத் திராவிடர் என்று சொன்னார். இதனை ஓரியண்டலிஸ்ட்கள் வேறு மாதிரியாகக் கண்ணுற்று புத்தருக்குச் சீடர்கள் வணக்கம் போடுவதாகக் கருத்துச் சொன்னார்கள். இவர் பிராமணரை தூய பிராமணர், தூய்மையற்ற பிராமணர் என்று வகைப்படுத்தினார்.
இந்தியாவில் வரலாறு உருவாகாமல் போனதற்கு சாதியே காரணம் என்று G.F.W. Hegel சொன்னார். ஆனால், இங்கு சாதியே காலம் நெடுக வரலாறு உருவாகக் காரணமாகிறது. இதன் தன்மையும் செயற்பாடும் இடத்திற்கு இடம், சூழலுக்குச் சூழல், கூட்டத்திற்குக் கூட்டம் மாறிக் கொண்டே இருக்கும். சொந்த மக்களையே பொலி போடும். கற்பனையான எதிரியினை உருவாக்கும். James Prinsep 1834-இல் வெளியிட்ட மக்கள் கணக் கெடுப்பில் காசியில் 107 பிராமணர் சாதிகள் பற்றிக் குறித்துள்ளார்.
19-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் கூற்றில் பிரிட்டிஷ் அரசு சாதி பற்றிய தெளிவானப் புரிதலுக்கு வந்தது.
Alexander Duff என்ற மிசினரிமார்களின் பிதா மகன் இந்திய சாதிகளின்மேல் கடுமையான விமர் சனத்தை முன்வைத்தார். 1850-இல் நடந்த Madras Missionary Conference ல் தேவகுமாரன் கருத்துகளைப் பரப்புவதற்குச் சாதி பெருந்தடை என்றார். தெற்கில் சாணார்கள் பெருமளவில் கிறித்துவத்தினைத் தழுவக் காரணம் அவர்கள் வாழ்வியலில் பிராமணியத் தலையீடு அழுத்தமாக இல்லை என்பதால் ஆகும் என்று Bishop Robert Caldwell ஒரு கருத்தினை முன்வைத்தார். இவர் சாணார்களே original Dravidians என்றார்.
இவ் வினத்தின் உயர் குடியினர் (elite) பிராமணப் பண் பாட்டினைவிட்டு வெளிவரவில்லை என்றார். 1857-இல் சாதி என்னும் சாத்தானே கிறித்துவத்தினைப் பரப்புவதற்கு பெரும் தடை என்று J.M.Lechler எழுதினார். 1860 களில் 1870களில் Henry Maine வும் Meadows Taylor வும் தொடக்கத்தில் திராவிடர் பக்குவமற்று இருந்தனர் என்றும், மூடநம்பிக்கை கொண்டவர் என்றும் ஆரியப் பண்புகளை அழித்தவர் என்றும் கூறினர்.
Anti-Brahmin ideology, Nelson முன்வைக்கப்பட்டது. இதில் அலுவலரும், மிசினரியும், ஒரே மாதிரி சிந்தித்தனர். ஆனால், Nelson¡ Manual லை விட Richard Temple 1865-இல் மத்திய நிலப்பிரதேசங்கள் பற்றி எழுதிய Manual கள் தரமானவை. Hunter உருவாக்கிய Statistical Survey மிகப்பயனுள்ளது. இவையனைத்தும் அலு வலர்கள், கலெக்டர்கள், நீதிபதிகள் போன்றோருக்கு அன்றாட அலுவல்களுக்கு மிகப்பயனுள்ளவை.
இந்தியாவில் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான Gazetteerகளில் இனவியலுக்கு என்று ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டது. இது அவ்வட்டாரத்திலுள்ள சாதிகள், பழங்குடிகள் அவர்கள் வசிக்கும் நிலப்பரப்பியல் போன்ற விவரங்களைக் கொண்டிருந்தன. அவை, manners & customs என்ற தலைப்புகளில் தரப்பட்டன. 1892 MacLean வெளியிட்ட Manual of Madras Presidency என்ற நூலிற்குப் பிறகு Gazetteers உருவாக்கப் படுவதில் ஒரு தரம் பின்பற்றப்பட்டது.
இந்தியாவின் இனவியல் கூறுகள் அய்ந்து. அவை: இனம் அல்லது குடிவழி, அவரின் மொழி, சாதி, சமயம், மற்றும் அவற்றிலுள்ள பிரிவுகள், அவர்களின் மரபு ரீதியான பழக்கவழக்கங்கள். 19-ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியில் மிசினரிகள் இனவியல் கூறுகளைத்தொகுத்து எழுதினர். இவை சமய மாற்றத்தினை முன்னிறுத்தி எழுதப்பட்டவை. சிலர் கால்ட்வெல் போல் வென்றனர்; சிலர் மேல் அரசு நடவடிக்கை எடுத்தது. 1852-இல் Church Missionary Intelligence என்ற இதழ் தென்னிந்தியாவின் மிசினரி நடவடிக்கை பற்றி தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டது. அதில் விலங்குப்பலி, Khonds, Meriahs போன்ற பழங்குடி மக்களின் மனிதப்பலி, சேலம் பகுதியின் பெண்சிசுக் கொலை போன்ற செய்திகள் இடம் பெற்றன.
Goomsur என்ற மலைக்குடி மக்களுடன் பிரிட்டிஷார் கடுமை யாகப் போராடி மனிதப்பலியினைத் தடுக்கவேண்டி வந்தது. 1825-இல் Meriah மக்களின் மனிதப்பலியினைத் தடுக்க வேண்டி ஒரு அலுவலகத்தினையே திறக்க வேண்டி வந்தது. இவ்வலுவலகம் கோண்ட் மக்கள் வாழ்ந்த கஞ்சம், ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளைக் கண்காணித்தது.
1847-1854 ஆண்டுகளில் இப்பகுதிக்கு ஆட்சியாளராக Captain Campbell நிய மிக்கப்பட்டார். இப்படி மனிதப்பலியினைச் சொல்லிச் சொல்லியே அரசு ஆக்கிரமிப்புக் கொள்கையினைப் பின்பற்றியது. இதனை மிசினரிகளோ, இனவியலாளர் களோ கண்டிக்கவில்லை. இந்திய உயிர்களைக் காப்பதில் கருணையின் அடையாளம் அன்று. 18-ஆம் நூற்றாண்டின் கடைக்கூற்றில் போர்க்குலத்தவரான மறவர் நாட்டில் சமயப்பரப்புரையாளர் ப்ரிட்டோவிற்கு நேர்ந்த கதி தமக்கும் நேர்ந்திடக்கூடாது என்ற அச்சமே காரண மாகும். ஆங்கிலேயர்கள் மனிதப்பலியினை போர் மூலமாகவும், சட்டம், ஒழுங்கின் மூலமாகவும் நடத்திக் கொண்டுதான் இருந்தனர். கட்டபொம்முவைத் தூக்கிலிட்டது, திப்புவை ஓடஓடச் சுட்டுக் கொன்றது, பொன்னர்-சங்கரைத் தீர்த்துக் கட்டியது, குண்டுகள் தீரும்வரை ஜாலியன்வாலாவில் சுட்டது என்று பல கொலைக்களங்களை உருவாக்கினார்கள்.
Walter Eliot என்ற பிரிட்டிஷ் அலுவலர் கள்ளர், மறவர், பில்லர், கூர்ஜரர் பற்றிய இனவியலில் கவனம் செலுத்தினார். இவர்கள் ஒரே மாதிரியான தோற்றம், நடவடிக்கை கொண்டவர் என்றும், திறமையான திருடர், வேட்டைக்காரர் என்றும் சிறந்த விளையாட்டு வீரர் என்றும் கூறினார். இவர் 1860-70 களில் சென்னை மாகாணத்தின் தெலுகு பேசும் பகுதிகளுக்கு ஆட்சி யாளராக நியமிக்கப்பட்டார்.
1871-இல் மக்கள் கணக்கு தொகுக்கையில் பள்ளியர் அல்லது வன்னியர் தங்களை சத்திரியர் அளவிற்கு அந்தஸ்துடன் மதிக்கவேண்டும் என்று முறையிட்டனர். அய்யாக்கண்ணு நாயக்கர் என்பவர் இக்கருதுகோளினை நிரூபிக்க கேள்வி-பதில் முறையில் விளக்கமளித்தார். இதே போன்று தெற்கில் திருநெல்வேலி நாடார்களும் தம்மைச் சத்திரியர் என்று உயர்த்திக் கொண்டனர்.
கம்மாளர் தம்மைப் பிராமணர் அளவிற்கு உயர்த்தினர். வெள்ளாளர்களோ தம்மை சத்-சூத்திரர் என்று தாழ்த்திக்கொண்டனர். இப்படி ஒரு கூட்டம் ஏறுமுகமாகவும், மற்றொரு கூட்டம் இறங்கு முகமாகவும் சிந்தித்தது. எல்லாம் லாபத்தினைக் கருதியே. சாவு வீட்டில் பிணமாகவும், திருமண வீட்டில் மணமகனாகவும் இருந்து மாலையினைப் பெறுவதே திட்டம். 1891 ல் இந்தியாவில் 10 வேளாண் சாதிகளைக் கணக்கிட்டனர். அவை: குறுமி, ஜாட், கோலி, கச்சி, கைபார்த்தா, கோச்சார், வெள்ளாளர், பள்ளி, வன்னியர், கேய்ரி. 1857 பெருங்கலகத்திற்குப் பின் பிரிட்டிஷ் அரசு விணீழீஷீக்ஷீ Major General Peel என்பவரை Secretary of State for wars என்ற பொறுப்பில் நியமித்தது.
இவர் இந்திய ராணுவம் பற்றிய ஆய்வினைச் செய்தார். பெருங் கலகத்தில் நிகழ்ந்த தவறுகளை எதிர்காலத்தில் தவிர்க்கும் வழிமுறைகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினார். இதனடிப்படையில் ராணுவத்தில் உயர்சாதியினர் தவிர்க்கப்பட வேண்டும் என்றார். இதனைப்பற்றி ஆய்ந்த கமிசன் இந்தியர் மட்டுமான படையணியில் வேறு வேறு இனக்குழுவினரும் சேர்க்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதன்படி 1882 Madras ல் காலாட்படையில் பிரிவுகள் குறைக்கப்பட்டன. 1893ல் Frederick S.Mullaly என்பவர் சென்னையின் உயர்நிலைக் காவலதிகாரியாகப் பணியாற்றினார். சென்னை மாகாணத்தின் தகைசால் இனவியல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இப்பதவிக்கு வரும் முன் notes on criminal classes of Madras Presidency என்ற நூலினை வெளியிட்டார். இந்நூலில் இந்தியாவில் 1860 கள் வரை வெளியிடப்பட்ட manuals and Gazetteers களிலிருந்து தொகுக்கப்பட்ட செய்திகளைத் திரட்டித் தந்தார். தொடர்ந்து colonel Porteons என்ற Inspector General of Police அறிவுறுத்தலின் பேரில் குற்றப்பரம்பரை என்று வரையறுக்கப்பட்ட இனக்குழுவினரின் பழக்க வழக்கங்கள், பண்டிகைகள் மற்றும் இயல்புகள் போன்றவை செய்திகளாகச் சேகரிக்கப்பட்டன.
19ம் நூற்றாண்டின் இரண்டாம் கட்டத்தில் இனவியலில் pornography புகைப்படங்கள் வெளியிடப்பட்டன (இதுபோன்ற படங்கள் ஐரோப்பாவில் பொழுது போக்கிற்காகப் பயன்பட்டன. ஆண் முறுக்கினைக் காட்டவே இதுபோன்ற படங்கள் வெளியிடப்பட்டன. இந்தியாவில் கஜுரேகா சிற்பங்களை இதுபோன்ற படங்கள் ஈடுகட்டின). இது இனவியலில் ஒரு புதிய கூறினை உருவாக்கியது. இனவியல் ஆய்வில் முழு முகம், முழு உருவப்படம், குழுப்படங்கள் போன்றவை சிறப்பான இடத்தினைப் பெற்றன. இத்துறை photography க்குப் பெரிதும் கடன்பட்டுள்ளது.
1869-இல் W.W.Hunter எழுதி வெளியிட்ட Annals of Rural Bengal என்ற நூல் மிக முக்கியமானது. இந்நூலில் சாலைகள், ரயில்பாதைகள், வணிகம், நாளிதழ்கள், பஞ்சம், வேளாண்கருவிகள், நிலக் குத்தகை, வளர்ப்பு விலங்குகள், கூலி, விலை, நீதிமன்ற நடவடிக்கைகள், பள்ளிகள், சிறைச் சாலைகள், சானிடேசன், நோயினைக் கட்டுப் படுத்துதல் போன்றவற்றைப் பதிவு செய்துள்ளார். 1875-77களில் The Statistical Accounts of Bengal என்ற தலைப்பில் 20 தொகுதிகள் வெளியிட்டார்.
மராட்டியர்கள் ஆட்சியினைப் பிடித்தபோது சத்திரிய அந்தஸ்தினைப் பெற வேண்டியிருந்தது. ஆனால், தமிழகத்தில் திருட்டுக்கூட்டமாக வரை யறுக்கப்பட்ட கள்ளர் சமூகத்தினர் ஒரு அரச குலத் தினராகப் புதுக்கோட்டை வட்டாரத்தில் எழுந்தனர். ஆட்சியமைத்தனர். ஆனால், சத்திரியர் தகுதியினைப் பெற பிராமணரிடம் மண்டியிடவில்லை. இந்த இனக்குழுவினர் பிரிவுகள் இடையேயான இறுக்கமான குடும்ப உறவுகள் அடிப்படையில் உருவான நிலம் சார்ந்த சமூகக் கட்டமைப்பே இவர்கள் ஆட்சியராக எழக் காரணம். இக்காலகட்டத்தில்தான் ஒரு பண்பாட்டுக் கலவை உருவானது. பெருமளவில் மக்களிடம் புலப் பெயர்வும் பண்பாட்டு மாற்றமும் நிகழ்ந்தன.
அடிமை
அடிமை என்ற தமிழ்ச் சொல்லிற்குப் பொருளைத் தரும் slave என்ற ஆங்கிலச்சொல் பொத்தாம் பொது வானாது. இச்சொல்லின் சாயலில் உள்ள பிற சொற்களான serf, chattel-slave, dept, peon, corvee, bondsman போன்றவை மிகக் கவனமாகக் கையாளப்பட வேண்டியன. 19-ஆம் நூற்றாண்டில் நிலவுடைமை யாளர்கள் ஓடிவிடும் கூலியாட்களை விரட்டிப் பிடிப்பதற்கு அரசு அலுவலர்கள் உதவியினை நாடினர். 1825-இல் காரைக்காலில் பஞ்சம் காரணமாக ஏழைகள் தம்மை நிலவுடைமையாளரிடம் விற்றுக்கொண்டனர் என்று ஒரு பிரஞ்சுக்காரர் குறிப்பு உண்டு. 1819-இல் தென்னாற்காடு பகுதியில் ஏழைகளின் திருமணச் செலவினை ஏற்பதன் மூலம் அவர்களைச் செல்வந்தர்கள் அடிமையாக்கினர் என்றொரு குறிப்பும் உண்டு.
மயிலாடுதுறைப்பகுதியின் செய்தியாக தஞ்சாவூர் கலக்டர் 1800களில் அங்கிருந்து தப்பியோடிய பள்ளர், பறையர்களை அவர்களுக்கு எந்த நிலவுடைமை யாளர்கள் அடைக்கலம் கொடுத்தாலும் பிடித்து வரப்பட வேண்டும் என்று போலீசுக்கு ஆணை யிட்ட தாக டைரி குறிப்பு உண்டு. 1818-இல் திருச்சிராப் பள்ளியிலிருந்து கோயம்புத்தூருக்கு ஓடிப்போன பள்ளர் அடிமைகளைப் பிடித்து தாசில்தார் மூலமாக பிராமண நிலவுடைமையாளரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டுமென்று கோயம்புத்தூர் கலெக்டருக்கு கடிதம் எழுதப்பட்டது. மலபாரில் அரசே அடிமையினை வைத் திருந்தது. செங்கல்பட்டில் நிலவுடைமையாளர் ஒருவர் 400 அடிமைகளை வைத்திருந்தார். 1835-36 அரசு குறிப்பின்படி திருநெல்வேலியில் ஒருவர் 500 அடிமை களை வைத்திருந்தார். 1836-38 ஆண்டுகளில் சென்னை மாகாணத்தின் மக்கள் தொகையில் 12.5 சதவீதம் பேர் அடிமைகளாவர்.
1834-இல் ஆங்கில அரசு இங்கிலாந்தில் அடிமை முறையினை ஒழித்தது. இது காலனிகளில் புலப் பெயர்ச்சிக்கு வழிவிட்டது. இந்தியாவில் அரசே புலப்பெயர்ச்சிக்கு ஊக்கமளித்தது. சென்னை அரசு, தஞ்சாவூர் கலெக்டரிடம் இலங்கைக்கு கூலிகளை அனுப்பவேண்டுமென்று கேட்டபோது, இலங்கையரசு அதற்கான முகவர்களை அனுப்பவேண்டுமென்று தஞ்சாவூர் கலக்டர் கேட்டார் (முதன்முதலில் இதற்கு முன்பே 1828-இல் சென்னையிலிருந்து 150 கூலிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்). 1849-இல் ப்ரான்சும், 1863-இல் டச்சும் அடிமைமுறையினை ஒழித்ததால் பிரிட்டிஷ் அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி புலப்பெயர்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. 1860லிருந்து தென்ஆப்பிரிக்காவிற்கும் கூலிகளாக மக்கள் சென்றனர். 1861-இல் மதுரை, திருநெல்வேலி பகுதியிலிருந்து மட்டுமே இக்கூலிகள் புலம்பெயர்ந்தனர். மொரிசியஸ், நடால் போன்ற இடங்களுக்கு வடாற்காடு மாவட்டத்தில் இருந்து புலம் பெயர்ந்தனர். 1870-இல் தஞ்சாவூர் சப்-கலக்டர் நாகப்பட்டினத்தில் தங்கி கூலிகளை அரசே அனுப்பிவைப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்று வெளிப்படையாக அறிவித்தார்.
கூலி
19-ஆம் நூற்றாண்டில் கூலி, தானியம், துணி, பணம் என்று வழங்கப்பட்டது. பணமயமாதல் வழக்கத்திற்கு வந்தபிறகு கூலி மெல்ல மெல்ல பணமாக பட்டுவாடா செய்யப்பட்டது. 1863-இல் சில மாவட்டங்களில் கூலி தானியமாக மட்டும் தரப்பட்டது. அறுவடையின்போது தானியமாகவும், பிற பருவங்களில் பணமாகவும் இருந்தது. 1872க்குப்பிறகு நுணுக்கமற்ற கூலியாட்கள் (unskilled laborers) பொதுக்கூலிகள் (general laborers) எனப்பட்டனர். இவர்கள் சுமை தூக்கிகள், குழி வெட்டிகள், மண்வெட்டுவோர் போன்றோர்.
நிலஉரிமை
18-19 ஆம் நூற்றாண்டுகளில் கம்பெனியின் பெரிய தலைவலியாக நிலவுரிமை இருந்தது. தமிழகத்தில் எம்மாதிரியான நிலவுரிமை இருந்தது அவர்களிடமிருந்து வரியினை எப்படிப் பெறுவது என்பது பிரச்சினையாக இருந்தது. நிலவரியினை அதிகரித்ததாலும் சிக்கல் வந்தது. நிலவுரிமையில் ரயத்வாரிமுறையினை நடை முறைப்படுத்துவதா, சமீந்தார்முறையினையா என்பதில் குழப்பம் இருந்தது. சட்டத்துறையில் கலக்டர் அலு வலகத்தினை நிர்வாக அலுவலமாக ஆக்குவதா, நீதித்துறை அலுவலகமாக ஆக்குவதா என்பதில் குழப்பம் நிலவியது. நிலவுரிமை பற்றிய வாதம் மிக நெடியது என்பதால் இங்குத் தவிர்க்கப்படுகிறது.
வேளாண்மை
19-ஆம் நூற்றாண்டில் ஆங்கில ஆட்சி படை எண்ணிகையினைக் கணிசமாகக் குறைத்தது. இதனால், போரிலும் கொள்ளையிலும் வந்த வருவாய் குறைந்தது. மக்கள்தொகை பெருகியது. இதனால் வேளாண் குடியினர் பணப்பயிரினை விளைவிக்கத் தொடங்கினர். சமவெளிப் பகுதிகளில் வேளாண்மையோடு மேய்ச்சலும் தொடர்ந்தது. இங்கு கொள்ளு, ஆமணக்கு போன்ற பணப்பயிர்கள் பயிரிட சிறு சிறு அளவிலான இடமே போதுமானது.
1830-40களில் தெற்கு மற்றும் ஆற்காட்டுச் சமவெளிகளில் கரும்பு பயிரிடுதல் அதிகரித்தது. 1850களில் புகையிலை, இண்டிகோ, பணப்பயிர்களின் விளைச்சல் அதிகரித்தன. 1860களில் உலகின் தேவைக்கு ஏற்ப பருத்தி, நிலக்கடலை பயிரிடுதல் அதிகரித்தது. தென்னாற்காட்டில் நிலக் கடலை பணப்பயிர் என்ற அந்தஸ்தினைப் பெற்றது. செலவில்லாமல் எப்படிப்பட்ட மழையிலும் இதனை விளைவிக்கலாம் என்று தெரிய வந்தது. கடலை எண்ணெய் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சோப்பு உற்பத்திக்குத் தேவையான கச்சாப்பொருளாக ஏற்றுமதி செய்யப்பட்டது. தென்னாற்காட்டில் 1870 களில் 20,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட கடலை கடலூர், புதுச்சேரி, சென்னைத் துறைமுகங்கள் வழியே ஏற்றுமதியாயின. இதனால் வறண்ட பகுதியில் வசித்து வந்த ஓர் இடைத்தட்டுச் சமூகம் பொருளாதார நிலையில் சற்று உயர்ந்தது.
1890களில் கடலை பயிரிடும் முறை சரியற்றுப் போனதால் மகசூல் குறைந்தது. Parry என்ற கடலை ஏற்றுமதி கம்பெனி புதிய ரகக் கடலையினை மொரீசியசிலிருந்து அறிமுகம் செய்தது. ஆனால் அது ஒத்துவரவில்லை. இன்றைக்கும் கடலூர்த் துறைமுகத்தில் Parry கம்பெனியின் பிரம் மாண்டமான கடலைக் கிடங்குகளைக் காணலாம். கடலை வணிகத்தை இரு பெரிய ஐரோப்பிய கம்பெனிகள் செய்தன. அவை: Rallis என்ற கிரேக்கக் கம்பெனி, Volkarts என்ற Swiss கம்பெனி.
தொழில்நுட்பம்
இந்தியா, மரபு ரீதியான பல தொழில் நுட்பங் களைக் கொண்டிருந்தது. காலனிய காலத்தில் உதித் தெழுந்த தொழிற்புரட்சியின் விளைவால் பொறியியல், மருத்துவத் தொழில்நுட்பங்களைப் பெறுவதனை இந்தியா தவிர்க்க இயலாமல் போனது. இவற்றை ஆங்கில அரசு இந்தியாவில் நூதனமாகப் பயன் படுத்தியது. அவர்கள் உருவாக்கிய ரயில்பாதைகள், படை நகர்விற்கும், வணிகப் பெருக்கத்திற்கும் தொடக்கத்தில் பயன்பட்டன. ரயில்பாதைகள், சுரங்கத் தொழில், தொழிற்சாலைகள், துறைமுகங்கள், முக்கிய நகரங்கள், கோட்டைகள் போன்றவற்றை இணைத்தன. நீராவி கப்பல்கள், நீராவி ரயில்கள் போன்ற வற்றுக்கு நிலக்கரியின் தேவை நன்கு உணரப்பட்ட்து.
Sitarambur, Bengal முதன்முதலில் 1774-இல் நிலக்கரி கண்டு பிடிக்கப்பட்டது. கப்பல்கட்டும் தொழில், எஃகு இரும்பு உற்பத்தி நன்கு வளர்ந்தவுடன் நிலக்கரியின் தேவை மேலும் அதிகரித்தது. 1863-இல் கம்பெனி நிலக்கரி, கனிமங்களைக் கண்டறிய குழு ஒன்றினை அமைத்தது.
1846-இல் D.H.William என்பவர் Geological Surveyor ஆக நியமிக்கப்பட்டார். ரயில் வேக்கள், நீராவிப்படகுகள் போன்றவற்றைத் தொடக்கத்தில் தனியார்கள் வணிகத்திற்கு உருவாக்கிக் கொள்ள அரசு அணுமதித்தது. ஆங்கில அரசு இந்தியக் கனிமங்களைக் கொள்ளையிட்டது; இந்திய மக்களைக் கூலிகளாக்கியது.
காலனிய நாடுகளை ஆங்கில அரசு உண்மையில் தோட்டங்களாகவே கருதியது. ஆங்கில அதிகாரிகள் இந்தியாவிலுள்ள தாவரவகைகளையும், மருத்துவச் செடிகளையும் கண்டு வியந்தனர். இங்குக் குடியேறிய சிலரில் கோவாவில் Garciada Orta,, மலபாரில், Heinrich Van Rheede, தரங்கம்பாடியில், J.M.Koeing, சென்னையில் Robert Wight போன்றோர் இத்துறையில் அக்கறை காட்டினர். இவர்களின் பார்வை கல்வி சார்ந்தும் இருந்தது. Bengal, Madras போன்ற இடங்களில் தம் அதிகாரம் நன்கு வளர்ந்த பிறகே தாவரவியல் துறையில் கம்பெனி ஆர்வம் காட்டியது.
அறிவியல்
அய்ரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தினை காலனிய நாடுகளில் நிலைநிறுத்திக் கொள்ள பல உத்திகளைக் கையாண்டனர். இதற்கு மேல்நாட்டுக் கல்விமுறை கைகொடுத்தது. ஏற்கனவே, இதனை ஓரளவிற்கு மிசினரிமார்கள் கல்வி-சமய மாற்றம் மூலம் செய்தனர். அறிவியல் கல்வி மூலம் இந்தியர் களை உளவியல்ரீதியாக அய்ரோப்பியர்களாக மாற்ற நினைத்தனர். உயர்கல்வியில், மருத்துவம், பொறியியல் போன்றவற்றைச் சேர்த்தனர். Coolbrooke, Prinsep, Adam, Campbell, Tytler போன்ற ஆங்கிலேய அதிகாரிகள் இந்தியாவில் மரபுரீதியான கல்விமுறையினையும், கல்வி நிறுவனங்களையும், தக்கவைத்துகொள்ள அறிவுறுத்தினர். இவர்களின் கருத்துகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை. மரபுரீதியான கல்வி சமஸ்கிருதத்தில் கற்பிக்கப்பட்டது.
இதனால், Euclidன் Elements of Geometry என்ற நூல் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. ஆனால், Macaulay அறிவியலை வெறுத்துக் கலைப்பாடங்களுக்கு முதன்மையளித்தார். இவரின் கல்விக்கொள்கை அறிவு வளர்ச்சிக்காக அன்று; வேலையாட்களை உருவாக்கவே. General Committee of Public Instruction மூலம் கல்கத்தா இந்து கல்லூரியில் இருந்த அறிவியல் பேராசிரியர் பதவியினை நீக்கினார். ஆனால், இந்தியா முழுக்க நில அளவை செய்ய சர்வேயர்களை உருவாக்கவும், ராணுவத்தில் பொதி சுமக்கும் குதிரைகளையும், கழுதைகளையும் பராமரிக்க கால்நடை மருத்துவரை உருவாக்கவும், சாலைகளிட, கட்டடங்கள் கட்ட, பாலங்கள் கட்ட பொறியியல் வல்லுநர்களை உருவாக்கவும் உயர்கல்வியின் தேவையினை உணர்ந்தனர். நீர்ப்பரப்பியல் சர்வேயும் மேற்கொள்ளப்பட்டது.
காலனிய காலத்தில் இந்திய அறிவியல் மெல்ல மெல்லவே வளர்ந்தது. நில அளவீடுகள், அறிவியல் கழகங்கள், கல்வி நிலையங்கள், உள்நாட்டு அயல்நாட்டு அறிஞர்களிடையே நடந்த கலந்துரையாடல்கள் மூலம் வளர்ந்தன. 1767-இல் இந்தியாவில் நில அளவீடு தொடங்கப் பட்டது. தென்னகத்தில் Colonel Kelley என்பவர் கர்நாடகப் பகுதியினை அளவீடு செய்தார். இவருடைய நில அளவீடு General Eyre Coote ன் போர் உத்திகளுக்குப் பெரிதும் பயன்பட்டது. நில அளவீடும் நில அபகரிப்பும் கைகோத்து இயங்கியது.
1799 முடியும் தருவாயில் Major Lambton என்பவர் Coramandal கடற்கரையில் இருந்து Malabar கடற்கரை வரைக்கும் Geodetic முறையில் நிலப்பரப்பியல் அளவீடு செய்தார். திப்பு விற்கு எதிராகப் போர் தொடுத்த Colonel Wellesley யும் Governor-General Wellesley சகோதரர் ஆவர். நெப்போலியப் போர்களுக்குப் பின் நீர்ப்பரப்பியல் அளவீடும் செய்யப்பட்டது. 1809-இல் முழுமையான Maritime Survey Department நிறுவப்பட்டது. Captain Wales, , முதல் Survey General ஆக நியமிக்கப்பட்டார். இவர் தென்னிந்தியக் கடற்கரைப் பகுதி, சிறு சிறு தீவுகள், மலேயா முதல் மடகாஸ்கர் வரை அளவீடு செய்தார். 1807-இல் Geological Society of London நிறுவப்பட்டது.
1778-இல் James Anderson என்ற ராணுவ மருத்துவர் சென்னையில் Saint George கோட்டையில் நிலத்தினை வாங்கி அதில் காப்பி, கரும்பு, பருத்தி அமெரிக்க ஆப்பிள் போன்றவற்றை பரீட்சார்த்தமாக பயிரிட்டார். Garden of Acclimatization என்ற திட்டத்தின் கீழ் பருத்தி, புகையிலை, காப்பி, தேயிலை போன்ற பயிர்கள் வணிகத்திற்காகப் பயிரிடப்பட்டன. Samaolata என்பவர் சென்னையில் மிளகு, இண்டிகோ, இலவங்கம் போன்ற வற்றைப் பயிரிட்டார். Agriculture & Horticulture Society of India என்ற அமைப்பு நிறுவப்பட்டு அரசு சோதனைக்காக தேயிலை, பருத்தி போன்றவற்றைப் பயிரிடத் திட்டம் கொண்டுவந்தது. காலனிய அரசால் நெப்போலியப் போரில் கைது செய்யப்பட்ட ஓர் அறுவை மருத்துவர் Bengal, Bihar, Assam, Nepal, Penang, Singapore, Burma போன்ற இடங்களுக்குச் சென்று தாவர நிலவியல் அளவீடுகளை மேற் கொண்டார். 1830ல் இந்தியாவிலிருந்து 30 பீப்பாய் களில் உலர்ந்த தாவரங்களை ஆய்விற்காக இங்கி லாந்திற்கு அனுப்பினார். இவருடன் இணைந்து இத்தாலிய தாவரவியலாளர் Alphonse De Condole என்பவரும் ஆய்வு செய்தார். J.D.Hooker என்பவர் Bengal, SIkkim, Nepal, Khasia Hills போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்து Flora India என்ற நூலினை வெளி யிட்டார். Roxburg என்பவர் கல்கத்தா தாவரவியல் பூங்காவில் 22,000 செடிவகைகளையும், 800 மர வகைகளையும் சேகரித்து வைத்தார். இவர் தாவர வியலைப் பொருளியல் தாவரம் (economics of botany) என்று வருணித்தார். Egypt, Brazil, North America போன்ற நாடுகளில் இருந்து விதைகள் பெறப்பட்டன. அபின் தரும் பாப்பி செடிகள் பீகாரில் வளர்க்கப் பட்டன. சீனாவின் Hunan, Canton தேயிலை நிபுணர்கள் கல்கத்தா வந்தனர். சீனத்தேயிலை இந்தியாவில் பயிரிடப்பட்டது.
அறிவியல் கல்வி
காலனிய காலத்தில் அறிவியல் அறிஞர்கள் பல்துறை விற்பன்னர்களாக இருந்தனர். ஒருவரே தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், நிலப்பரப்பியல் போன்ற பாடங்களைக் கற்பிக்கும் அளவிற்கு அறிவு பெற்றிருந்தனர். கல்கத்தா மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ளி’ O’Shanghunessy வேதியல், மருத்துவச் செடிகள் பற்றிப் போதித்ததுடன், துணி களுக்குச் சாயமிடுதல், துணிகளில் அச்சிடுதல், மது வடித்தல், சர்க்கரையினைத் தூய்மையாக்குதல், தாதுக் களை உருக்குதல் போன்றவற்றையும் அய்ரோப்பிய மாணவர்களுக்குப் போதித்தார். சேலத்தில் Campbell என்பவர் தம் தனி ஆய்வகத்தில் எஃகு உருக்குதல் பற்றி சோதித்தார். பரமகால் பகுதியின் மண்ணிலிருந்து Carbonate Soda வடிக்கக் கற்றுக்கொண்டார். சென்னையில் John Waver தனி ஊசல்குண்டு தத்துவத் தினையும் காற்றில் ஒளியின் சிதறலையும் சோதித்தார்.
மருத்துவம்
நெப்போலியப் போரில் பிடிக்கப்பட்ட Nathaniel Wallich என்ற அறுவை மருத்துவரை அரசு முதலில் பயன்படுத்தியது. 1822-இல் Medical School நிறுவப்பட வேண்டுமென்று சொல்லப்பட்டது. மேலை மருத் துவமும், இந்திய மருத்துவமும் கலந்து போதிக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. கல்கத்தாவில் மருத்துவ வகுப்புகள் சமஸ்க்ருதக் கல்லூரியிலும், மதரசாவிலும் தொடங்கப்பட்டன. சில பிரச்சினை களால் அங்கு வகுப்புகள் நிறுத்தப்பட்டன. மருத்துவ வகுப்பு முயற்சிகள் மும்பையிலும், சென்னையிலும் தொடங்கப்பட்டன. 1826ல் மும்பையில் Elphinstine, Medical School தொடங்கினார். ஆனால், இதன் நோக்கம் ராணுவத்திற்கான மருத்துவரை உருவாக்குவது. 1845-இல் 4 இந்திய மாணவர்கள் இப்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றனர். அவருள், இருவரை தேவேந்திர நாத் தாகூர் தம் செலவில் அனுப்பினார். ஒருவரை மூர்ஷிதாபாத்தின் நவாப் அனுப்பினார். 1838-இல் மருத்துவ வகுப்புகளில் உடற்கூறியல், மருந்துகள், அறுவை சிகிச்சை போன்ற பாடங்கள் உருதுவில் பயிற்றுவிக்கப்பட வேண்டுமென்று பயிற்சியாளர்கள் வேண்டினர். இந்துஸ்தானி, வங்காளி மொழிகளிலும் வகுப்புகள் நடந்தன. வட்டார மொழிகளில் மாண வர்கள் சிறப்பாகப் பயின்றனர்.
1845 மும்பையில் Grand Medical College நிறுவப் பட்டது. தொடக்கத்தில் பிராமணர்கள் இக்கல்வியினைப் பயில முன்வரவில்லை. அறுவைச் சோதனை அழுக் கடையும் என்று எண்ணினர். இக்கல்லூரியின் முதல்வர் அடித்தட்டு மக்களுக்குத் தனியே கல்லூரி தொடங்கப் பட வேண்டுமென்று Director of Public Institution எழுதினார். மேல்தட்டு மக்களுக்கு ஆங்கிலமும், அடித் தட்டு மக்களுக்கு வட்டார மொழிகளும் பயிற்று மொழிகளாக அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென்று கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிட்டத் தட்ட இதே காலகட்டத்தில்தான் இலங்கையில் Samuel Fisk Green என்ற அமெரிக்க மிசினரி-மருத்துவர் தமிழில் மருத்துவ வகுப்புகள் எடுத்து வெற்றி பெற்றார். தமிழில் சில மருத்துவ நூல்களை உருவாக்கினார்.
பஞ்சமும் சூறாவளியும்
இந்தியா போன்ற தவறும் மழை, வெவ்வேறு தட்ப வெப்பநிலை கொண்ட பெரும் நிலப்பிரதேசத்திற்கு இயற்கையினை அளவிடும் அறிவு மிக முக்கியமானது. 1864-67 களில் நிகழ்ந்த சூறாவளிப்புயலில் கல்கத்தா தாவரவியல் பூங்கா சிதைந்தது. 1864 புயலில் அங்கு 80,000 பேர் இறந்தனர். எனவே, வானியல், தட்ப வெப்பநிலையினைக் கண்டறிய Meteorological Department 1875-இல் நிறுவப்பட்டது. தொடர்ந்து 1889-இல் சென்னையில் Cyclone observation centre நிறுவப்பட்டது. பஞ்சம், பயிர்ச்சேதம், சூறாவளி, புயல், மழை, மண்சரிவு, எல்லாம் பேரிடரோடு தொடர்புடையன. இவற்றைச் சமாளிக்க 1876-இல் சென்னையில் Agricultural College நிறுவப்பட்டது. 1881-இல் Dera Dun ல் School of Forestry உருவாக்கப்பட்டது.
கசறு
காலம் நெடுக மனித சமூகத்தில் உளவியல் தான் வரலாற்றுப் போக்குகளை உந்தித் தள்ளு கிறது. வரலாற்றில் இருந்துதான் சமூகம் பாடங் களைக் கற்றுக்கொண்டு எதிர்காலத்தின் திட்டங் களை வகுத்து முன்பு நடந்த தவறுகள் மீண்டும் நடக்காமல் மாற்றிக் கொள்கிறது. ஆனால், தவறு களைப் புதிதாகச் செய்கிறது. இக்கூற்று 19-ஆம் நூற்றாண்டின் பல சான்றுகளின் வழியே அறியப்பட்டது. தொழில்நுட்பம் சமூகப் போக்குகளை மாற்றும் என்பதனைப் பார்த்தோம். அரசியல் சட்டங்களும் சமூகப்போக்குகளை மாற்றின.
ஆனால், இம்மாற்றங்கள் பெரும்பாலும் ஆண்டைகளுக்கே பயன்பட்டன. புதிய தொழில்நுட்பத்தாலும், சட்டத்தாலும் இவர்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை. சுரண்டலுக்குப் புதிய வழிகளைக் கண்டுபிடித்தார்கள். அடிமை முறையினை ஒழிக்க மேல் நாட்டில் சட்டம் வந்தவுடன், அதுவே தமிழரை காலனி நாடுகளுக்கு அடிமைகளாகப் புலம்பெயர வழியிட்டது. அதனை அரசே மெனெக் கெட்டுச் செய்தது. புதிய தொழில்நுட்பங்களான நீராவிக்கப்பல்களும், புகை வண்டிகளும் தமிழரை ஆலைகளுக்கும், தோட்டங்களுக்கும் அடிமைகளாக அழைத்துச் சென்றன. மருத்துவமும், பொறியியலும் சமூக வளர்ச்சிக்குப் பயன்பட்டது.
ஆனால், நில அளவீட்டுத்துறை என்ற தொழில்நுட்பம் இந்திய மண்ணைப் புரிய வைத்தது; மானிடவியல் என்ற தத்துவம் இந்திய மனத்தினைப் புரிய வைத்தது. வேறு விதமாகச் சொல்வதானால் மானிடவியல் மக்களின் உளவியலை அறியப் பயன்பட்டது. நில அளவீட்டுத்துறை அவர்களின் மூல வளங்களை அறியப் பயன்பட்டது. இவ்விரண்டின் வழியே இந்தியரின், தமிழரின் உளவியலைப் புரிந்து கொண்டு அதற்குத்தக்கன சட்டங்களுக்குள் மக்களைச் சுருட்டி விட்டனர். இப்படி ஒட்டு மொத்த இந்தியாவும் அடிமையானது.
மேட்டிமையாளரைப் பார்த்துப் பழகும் இந்தியரும், தமிழரும் ஆங்கிலேயர் குடிக்கும் டீ, காப்பி, பீடி, சுருட்டு போன்றவற்றைக் குடித்தனர். ஆனால், சீமான் களுக்கும், சீமாட்டிகளுக்கும் பயிரிடப்பட்ட டீ, காப்பித் தோட்டங்களில் அடிமைகளாயினர். வெற்றிலை - பாக்கு என்பது வெற்றிலை - புகையிலை என்று மாறியது. பல் பொடியினைப் பயன்படுத்தாவிட்டாலும் மூக்குப் பொடியினைப் பயன்படுத்தத் தவறவில்லை. எச்சில் பணிக்கம் இருந்த இடத்தில் ash-tray வந்தது.
(15/11/2010 அன்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் வரலாற்று வரைவியல் என்ற தலைப்பில் தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு நடத்திய புத்தொளிப் பயிற்சியில் ஆற்றிய இரண்டாம் சொற் பொழிவின் கட்டுரை வடிவம். இதில் உரையுடன் கூடுதலான விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பயிற்சியாசிரியர்கள் தமிழாசிரியர்கள் என்பதால் அவர்களின் தேவைக்கேற்பவும், மனோவியலுக்கு ஏற்பவும் இவ்வுரை தயாரிக்கப்பட்டது. இது முழுமையான பார்வை யன்று. தெளிவு பெற வேண்டிய தளங்கள் பலவுண்டு. சில கருத்துகள் செப்பமுற வேண்டும்.
சொற்பொழிவாற்ற அழைத்த பேரா.வீ.அரசு அவர்களுக்கும் பங்கு பெற்ற ஆசிரியர்களுக்கும் நன்றி.)
பயன்பட்ட நூல்கள்
Appadorai, Arjun, Worship and Conflict under Colonial Rule:A South Indian Case, Orient Longman, 1983.
Baker, Christopher John, An Indian Rural Economy 1880- 1895: The Tamilnadu Country Side, OUP, 1984.
Bayly, C.A, Origin of Nationality in South Asia: Patriotism and the Ethical Government in the Making of Modern India, OUP.1988.
Dirks, Nicholas, Castes of Mind: Colonialism and the Making of Modern India, Permanent Black, New Delhi, 2004
Kumar, Deepak, Science and the Raj: A Study of British
India, OUP, 1995. Kumar, Dharma, Land and Caste in South India: Agricultural Labour in the Madras Presidency during the Nineteenth Century, Manohar, 1992.
…………….Colonialism, Property and the State, OUP, 1998.
Ludden, David, Peasant History in South India, Princeton University Press.1977.
Meenakshisundaram, K. The Contribution of European Scholars to Tamil, University of Madras, Madras, 1974.
காளிமுத்து,கே.ஏ, தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும் : சமூக பொருளியல் பார்வை (1801-1900), பாரதி புத்தகாலயம், மதுரை. 2012
மோகன்ராம்,கே (et al),, தமிழகம்:பிரமிப்பூட்டும் மக்கள் வரலாறு, ஜாசிம் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி, 2011.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
இந்தியப் பின்னணியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழகம்: வரலாற்றியல் நோக்கு - 2
- விவரங்கள்
- கி.இரா.சங்கரன்
- பிரிவு: உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2014