கிடக்கை முறையிலேயே பொருள் கொள் ளாமல், தொடரமைப்பை மாற்றியும், முன்னும் பின்னும் கூட்டியும் பொருள் கொள்ளுதல், இலக்கணக் குறிப்பால் முறையே இனம் காணல் ஆகிய பரிமேலழகர் உரைக்கூறுகள் பற்றிக் காண் போம்.

“செருவந்த போழ்திற் சிறை செய்யா வேந்தன் வெருவந்து வெந்து கெடும்”

“தனக்குக் காவலானவற்றை முன்னே அழைத்துச் செய்யாத வேந்தன் செருவந்த காலத்து அச்சமுற்றுக்கடிது கெடும்”- மணக் குடவர்1

“செருவருவதற்கு முன்னே தனக்குப் புகலாவ தோரண் செய்துகொள்ளாத வரசன்; அது வந்த காலத்து ஏமமின்மையான் வெருவிச் சேர்ந்தார் நீங்குதலாற் றமியனாய்த் தானும் வெருவி அப்பகைவயத்தனாம்”- பரிமேலழகர்2

பாடல் கிடக்கை முறையில் பொருள் கொள்ளப்பட்டால் ‘செருவந்தபோது தற் காப்புச் செய்து கொள்ளாத வேந்தன்’ என்று பொருள்படும். வேந்தன் தன்னையும் குடிமக்களையும் பிற பகைவேந்தர் தாக்கு தலினின்று காக்கக் கடமைப்பட்டவன். அவன் முன் யோசனையுடன் போர் வரும் என்று எதிர்பார்த்து அது வருதற்கு முன்னரே தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும் என்பது போர் உத்தியாகும்”-
நா. பாலுசாமி3

‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை’ எனக் குற்றங்கடிதலிலும்; ‘எதிரதாக் காக்கும் அறி’வென ‘அறிவு’ அதிகாரத்திலும் வரும் குறட்பாக்களும் இத்துடன் ஒருசேர நோக்கத்தக்கன. பரிமேலழ கரின் இவ்வுரை மணக்குடவர் உரையை ஒட்டி அமைந்ததேயாகும். இதனை நா. பாலுசாமி காணத் தவறுகின்றார்.

“ஒரு பொருள் குறித்து இருவர் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கும்போது அம்மாறுபாடுகளுக்கான காரணங்களைக் களைந்து உண்மையை நிலைநாட்டுதல் துணிவு என்பதாகும். தொல்காப்பியர் ‘உரை’ பற்றி விளக்கும்போது, இத்துணி விற்கான இலக்கணங்களை எடுத்துரைக் கின்றார்’- க. நெடுஞ்செழியன்4

‘இருவர் மாறுகோள் ஒருதலைத்துணிவே’ என நன்னூலார் கூறுவதும் ஒப்புநோக்கத்தக்க தென்பார். தொல்காப்பியர் தேர்வு - துணிவு எனக் குறிப்பதனை அறிவுத்துறைக்கும் மெய்யியல் துறைக்கும் உரிய ஒரு பொதுத்துறை எனவும் கொள்ளும் அவர் மெய்யியலும் அளவையியலும் இணைத்து நூல்களாக வெளிப்பட்ட போது, அத்துணிவு உரைக்கான இலக்கணமாகவும் ஏற்கப் பட்டு உள்ளது தெளிவாகின்றதென்பார். தொல் காப்பியத்தில் உரைக்கு இலக்கணம் குறித்த சூத்திரத்தினை அடுத்து துணிவு பற்றிய இலக்கணம் அமைந்து இயல்கின்றது.

“சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற இன்றியமையா தியைபவை எல்லாம்
ஒன்ற உரைப்பது உரையெனப் படுமே”

இதனை உரை ஆமாறெனவும் அடுத்து வரும் சூத்திரத்தினை உரைக்குரிய மரபெனவும் குறிப்பிடுவர்.

“மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத் தாய்த் தன்னூ லானும் முடிந்த நூலானும் அய்யமும் மருட்கையும் செவ்விதின் நீக்கித் தெற்றென ஒருபொருள் ஒற்றுமை கொளீஇத் துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்.5

இத்தொல்காப்பிய மரபியல் சூத்திரம் இரண் டனுள் உரை ஆமாறு வரும் முதல் சூத்திரத்தில் இன்றியமையாது இயைபவை எல்லாம் என்பதனை அதற்கு முந்தைய காண்பிகைக்குரிய மரபு ஆமாறு வரும் சூத்திரத்துடன் மாட்டேற்றுவார் பேராசிரியர். மாறாக அடுத்துவரும் உரைக்குரிய மரபாமாறு வரும் சூத்திரத்துடன் மாட்டேற்றுவார் ச. பால சுந்தரம். இவ்விரு சூத்திரத்தின் உரை இறுதியிலும் அவர் உரைப்பதனையும்; இரண்டாவது சூத்திரத் தினைத் துணிவு இலக்கணமாக நெடுஞ்செழியன் எடுத்துரைப்பதனையும் காண்போம்.

“இன்றியமையாதியைபவை இவை என்பது மேல் வரும் சூத்திரத்தான் கூறுப”

“இதனான் உரைகாண்போர்க்குத் தொன்னூற் பயிற்சியும் பல்கலையறிவும் வேண்டுமென் பதும் உணர்த்தப்பட்டவாறறிக”- ச. பால சுந்தரம்6

“தொல்காப்பியர் துணிதலை எதிராளி களிடம் தான் கேட்கும் வினாக்கள், அவ் வினாக்களுக்கு எதிராளி அளிக்கும் விடைகள் தன்னிடம் எதிராளி வினவும் வினாக்கள் அவற்றிற்குத் தானளிக்கும் விடைகள் அவ் விடைகளுக்குத் தன் நூலிலிருந்தும் முதல் நூலிலிருந்தும் தரும் மேற்கோள்கள் இவற்றின் வாயிலாக அய்யம் களைந்து, மயக்கம் நீக்கி இதுதான் முடிபென்று துணிதல் என வகைப் படுத்த சாரகசம்கிதை இதனை உத்தி எனும் தலைப்பில் விளக்குகின்றது” - க. நெடுஞ் செழியன்7

இத்தகு புரிதல்களுடன் பரிமேலழகரின் உரை மறுப்புத் திறம் குறித்து இனிக் காண்போம்.

“ஒரு கருத்தை மறுக்கிற பொழுது மறுப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுசார்ந்த அளவையியல் நெறிகளைப் பரிமேலழகர் உரையால் தெரிந்துகொள்ள இயலும்.... பெரும்பாலும் மணக்குடவர் உரையை ஒட்டியே உரையெழுதிய அழகர், முன்னவர் உரையை ஒரு சில இடங்களில் மறுத்துரைக் கின்றார்”- ச. சுப்பிரமணியன்8

மூன்று குறட்பாக்களை முன்வைத்துப் பரி மேலழகர் முந்தைய மணக்குடவர் முதலானோர் உரைகளை மறுத்துரைக்கும் உரைமறுப்புத் திறனையும் அதில் காணக்கிடக்கும் அளவையியல் நுட்பம் செறிந்த பாங்கினையும் சுப்பிரமணியன் எடுத்துரைக்கின்றார்.

“அங்கணத்தில் உக்க அமிழ்தற்றால் தம் கணத்தர் அல்லார் முன் கோட்டிக் கொளல்”

“அங்கணத்தின் கண் உக்க அமுதம்போல இகழப்படுவர்; தம்முடைய இனத்தார் அல்லாதார் முன்னர் ஒன்றைச் சொல்லு வராயின்”- மணக்குடவர்9

“நல்லார் தம்மினத்தரல்லாதாரவைக்கண் ஒன்றனையுஞ் சொல்லற்க; சொல்லின், அது தூய்தல்லாத முற்றத்தின் கணுக்க அமிழ் தினையொக்கும்.

கொள்ளென்னும் முதனிலைத் தொழிற் பெயர் முன்னின்று பின்னெதிர்மறையில் விகுதியோடு கூடி ‘மகனெனல்’ (குறள். 196) என்பது போனின்றது. சொல்லின், அது என்பன அவாய் நிலையான் வந்தன. பிற ரெல்லாங் கொளலென்பதனைத் தொழிற் பெயராக்கியுரைத்தார். அவர் அத்தொழில் அமிழ்தென்னும் பொருளுவமையோடு இயை யாமை நோக்கிற்றிலர். சாகா மருந்தாத லறிந்து நுகர்வார்கையினும் படாது அவ் வங்கணத்துக்குமியைபின்றிக் கெட்டவாறு தோன்ற உக்கவமிழ்தென்றார். அச்சொல் பயனில் சொல்லாமென்பதாயிற்று” - பரிமேலழகர்10

எழுதிய எழுத்தைப் போல, எழுத்தை எழுதியதுபோல என்பன இரண்டு தொடர்கள். இவை ஒன்று போலது தோன்றினாலும் ஒன்றாகா. முன்னதில் எழுதப்பட்ட எழுத்து உவமை. பின்னதில் எழுதிய வினை உவமை முன்னது பொருள் உவமை, பின்னது வினை உவமை. “உக்கஅமிழ்து என்பதே குறள், அமிழ்தை உக்கினாற் போல என்பதாக மணக் குடவர் கருதிக் கொண்டார்”

“(அழகர்) மணக் குடவரின் உரையில் உவமப் பொருத்தம் அமையாமையைச் சுட்டுகிறார்.... வினை, பயன், மெய், உரு என அவ்வவற்றிற்குரிய உவமத்திலும் பொருத்தம் வேண்டும் எனும் தொல்காப்பிய மரபடிப்படையில் அளவை யியல் நுட்பம் உணர்த்தப்படுவதுடன், தகுதி யற்ற அவைவில் அரிய கருத்துக்களைச் சொல் லாதே என்னும் திருவள்ளுவரின் கட்டளைப் பொருளும் புலப்படுவதைக் காணலாம்” - ச. சுப்பிரமணியன்11

உக்க அமிழ்தெற்றால் எனப் பொருளுவமை யாகக் கொண்டார் மணக்குடவர். அமிழ்து உக்கதற்றால் என வினையுவமாகப் பொருள் கொண்டார் பரிமேலழகர். தொல்காப்பிய மரபடிப் படையில் மணக்குடவர் உரைப்பில் உவமப் பொருத்தம் அமையாமையை அளவியல் நுட்பத் துடன் பரிமேலழகர் மறுத்துரைப்பதாகப் பொரு ளுவமை வினை உவமைக்கான விளக்கங்களுடன் எடுத்துரைக்கின்றார் ச. சுப்பிரமணியன். இருவர் பொருள்கோள் முறைப்படியும் உரைகாணும் பாவாணர் மணக்குடவர் பொருள்கோள் முறையே இயற்கையானதென ஏற்கின்றார்.

“அறிஞராவார் அறிவால் தம் இனத்தவரல் லாதாரவைக்கண் நிகழ்த்தும் அரும்பொருட் சொற்பொழிவு சாய்கடைக்குள் ஊற்றிய பாலைப் போலும். இனி, அறிஞராவார் தம் இனத்தவரல்லாதாரவைக்கண் அருட் பொருட் சொற்பொழிவு நிகழ்த்தற்க; நிகழ்த்துவது சாய்கடைக்கும் ஊற்றிய பாலைப் போலும் என்றுமாம்.”

“இவ்விருவகைப் பொருள்கோளுள்ளும் முன்னதே இயற்கையானதாம்... உவமத்தையும் பொருளையும் இணைக்குங்கால், பெய ரொடு பெயரும் வினையொடு வினையும் இணைய வேண்டுமென்பது சரியே. ஆயின் சொன்முறை செய்யுளின் யாப்பிற்கும் தொடைக்கும் ஏற்றவாறு ஆற்றொழுக் கினின்றும் சிறுபான்மை வேறுபட்டிருக்கு மாதலால், உரையாசிரியர் அதை உரைநடை முறைப்படி மாற்றிக் கொள்ளவேண்டும். ஆதலால் ‘உக்க அமிழ்தற்று’ என்பதை அமிழ்து உக்கதற்று என்று மாற்றிக் கொள் வதே தக்கதாம். அங்ஙனமின்றி ‘கோட்டி கொளல்’ என்பதற்குக் கோட்டி கொள்ளும் சொல் அல்லது சொற்பொழிவு என்று பொருள் கொள்ளினும் பொருந்துவதாகும்- ஞா. தேவநேயப் பாவாணர்12

‘குடம்பை தனித்தொழிய ‘குன்றேறி யானைப் போர்’ என வரும் குறட்பாக்களில் வருமாறு போலவே இக்குறளிலும் உவமம் முன்னும் பொருள் பின்னுமாக விளங்கித் தோன்றுதல் காண்க என்னும் பாவாணர், பரிமேலழகர் கருத்தே வள்ளுவர்க்கும் இருந்திருக்குமாயின் எவ்வாறவர் தெளிவாக யாத்திருப்பார் எனவும் இயற்றிக் காட்டு வார்”

“அங்கணத்து ளுக்க வமிழ்தனாற் நங்கணத்தர்
அல்லார்முற் கோட்டி கொளல்
தங்கணத்த ஒல்லார்முன் சொல்லல் சொலினஃதாம்
அங்கணத்து ளுக்க வமிழ்து”

‘அங்கணத்துள் உக்க அமிழ்’ தென்பதற்குப் பரிமேலழகர் ‘முற்றத்தின்கண் உக்க அமிழ்’ தெனப் பொருள் கண்டதை மறுத்து ‘சாய் கடை (சாக்கடை)க்குள் ஊற்றிய பால்’ எனப் பொருள் உரைக்கும் பாவாணர் அங்கணம் என்னும் சொற்கு முற்றம் என்னும் வடவர் வழிப்பொருள்கண்ட பரிமேலழகர் அதன் முதற்பொருள் சாய்கடை (சாலகம்) என்பதனை அறிந்திலர் என்பார்.

இக்குறட்பாவிற்கான உரைகள் வாயிலாகப் பரிமேலழகர், பாவாணர் இருவரின் உரைநலனும் உரைமறுப்புத் திறமும் ஒருசேர சிறப்புற அமைந்தியலக் காண லாம். இதற்கூடாக குறிப்பிட்ட சொல்லுக்கு உரிய சரியான பொருளை இனம் காணும் அகராதி யியலாளரின் சொல்லாய்வும் நுட்பமும், சொன்மை யாகிய சொல்லின் இலக்கண அமைதியினை எடுத் துரைக்கும் இலக்கணப் புலமையும் உரையாசிரி யர்க்கு இன்றியமையாது வேண்டற்பாலன என்பதும் புலனாயிற்று.

ஒரு அதிகாரத்திற்கோ அல்லது ஒரு குறட்பாவிற்கோ அது என்நுதலிற்றோ என எடுத்துரைக்கும் நுவல் பொருளும், எத்தகு சூழலில் யாருடைய கூற்றாக அது தோன்றியது என்னும் குறிப்பும் அவ்வதிகாரத்தையோ, அக்குறளையோ உரை கூறப்புகுதற்கான முன்னிபந்தனையாக அமைந்தியல்வதைக் காண்போம்.

“சேயிடைப் பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகவினான் ஒருவரை யொருவர் காண்பற்கு விரைதல். தலைமகன் பிரிவும் தலைமகள் ஆற்றாமையும் அதிகாரப் பட்டு வருகின்றமையின் இருவரையும் சுட்டிப் பொதுவாகிய பன்மைப்பாலால் கூறினார். பிறரெல்லாம் இதனைத் தலை மகனென நினைந்து தலைமகள் விதுப்புறல் என்றார். சுட்டுப் பெயர் சொல்லுவான் குறிப் பொடு கூடிய பொருளுணர்த்துவதல்லது தான் ஒன்றற்குப் பெயராகாமையானும் கவிக்கூற்றாய அதிகாரத்துத் தலைமகன் உயர்த்தற் பான்மையான் கூறப்படாமை யானும் அஃது உரையன்மை அறிக” - பரிமேலழகர்13

“தொலைவிடைப் பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகுதியினால் ஒருவரையொருவர் காண்பற்குவிரைதல்... பரிமேலழகர் இவ்வதிகார முகவுரையிற் கூறியது சரியே. ‘பிறர்’ என்றது மணக்குடவ பரிப்பெருமாளுரை. ‘அவர் வயின் விரும்பல்’ என்பது காலிங்கர் கொண்ட பாடம்”- ஞா. தேவநேயப் பாவாணார்.14

“சுட்டுப் பெயர் தனக்கென ஒரு பொருளை உணர்த்தும் ஆற்றலற்றது, அது என்பது உயர் திணையையும் உணர்த்தும் அஃறிணையையும் உணர்த்தும். தன் கணவனை, அது இனிமேல் தான் வரும் என அழைக்கும் மனைவிகள் உளர். அவருக்கென்ன? பொழுது சாய வருவார் எனத்தான் வளர்க்கின்ற பசுவைப் பாசத்துடன் அழைக்கின்ற உழவனும் உளன். எனவே சுட்டுப்பெயர் சொல்வான் குறிப் பொடு கூடிய பொருளையே உணர்த்தும்” - ச. சுப்பிரமணியன்15

அவர்வயின் விதும்பல் அதிகாரத்தின் இறுதியில் வரும் மூன்று குறளுக்கும் தலைமகன் கூற்றெனச் சுட்டியும், ஒரு குறளுரையிலும் முந்தைய உரைகளை மறுத்துரைக்கின்றார், பரிமேலழகர். பாவாணரும் பரிமேலழகரைத் தழுவியே உரைக் கின்றார்.

“வேந்தற் குற்றுழிப் பிரிந்த தலைமகன் வினைமுடிவு நீட்டித்துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது”

“இதுவுந் தலைமகள் கூற்றாகாமை யறிக” பரிமேழலகர்16

“இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலா வதல்லது விதுப்பாகாமையறிக’ என்னும் பரிமேலழகர் மறுப்புப் பொருத்தமானதே” - ஞா. தேவநேயப்பாவாணர்17

இவை முறையே ‘வினைகலந்து’ ‘ஒருநாள் எழுநாள் போல்’, ‘பெறின் என்னாம்’ எனவரும் முக்குறப்பாவிற்குக் கூற்று விவரம் குறித்தவாறு.

‘வினைகலந்து வென்றீக வேந்தன்; மனை கலந்து மாலை அயர்கம் விருந்து’

“நம் வேந்தன் போரின் கண்ணே பொருந்தி வெல்வானாக. யாமும் மனையிலே பொருந்தி இம்மாலைப் பொழுதிலே நம் காதலர்க்கு விருந்து செய்வோமாக. வருதற்கு இடையீடு வன்வினைமுடியாமை என்று நினைத்து அவன்வெல்க என்றாள். மனை-அட்டில்”- மணக்குடவர்18

“வேந்தன் வினைசெய்தலைப் புரிந்து வெல் வானாக; யாமும் மனைவியைச் சென்றுகூடி ஆண்டை மாலைப் பொழுதிற்கு விருந்தயரர் வோமாக.

மனையென்பது ஈண்டாகுபெயர் ‘மங்கல மென்ப மனைமாட்சி’ (குறள் 60) என்புழிப் போல வினை செய்தற்கண்வந்த மாலைப் பொழுதிற்கு எதிர்கோடல் அலங்கரித்தன் முதலிய வின்மையின், மனை கலந்து மாலைக்கு விருந்தியர்கமென்றான். நான்கனுருபு விகாரத் தாற் தொக்கது. இது வினை முடியாமுன் கூறலான் விதுப்பாயிற்று. பிறரெல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கியுரைத்தார்: தலை மகனைக் கூறாது வேந்தன் வெல்க வென்றும், மனைகலந்தென்றும் மாலைப் பொழுதின் விருந்தயர்கமென்றும் வந்த அவ்வுரை தானே அது கூடாமைக்குக் கரியாயிற்று - பரி மேலழகர் 19

“நம் வேந்தன் முனைந்து போர் புரிந்து வெல் வானாக. யாமும் ஊர் சென்று மனைவி யோடு கூடி அற்றை மாலைப்பொழுதின் கண் விருந்துண்டு மகிழ்வோம்.

வேந்தற்குற்றுழிப்பிரிவாவது குறுநில அரச ராகிய வேளிரும் மன்னரும் தம் தலை வராகிய வேந்தரென்னும் பெருநிலவரசர்க்குப் போர்வினை வந்தவிடத்து அவருக்குத் துணையாகச் செல்லுதல். “பரிமேலழகர் கூறியிருப்பது சரியே ‘பிறரெல்லாம்’ என்றது மணக்குடவ பரிதி காலிங்க பரிப்பெரு மாளரை - ஞா. தேவநேயப்பாவாணர்20

தலைவன் கூற்றாய் இனங்காணாது தலைவி கூற்றாய்க் கொண்ட முதற்கோணல் அதற்கேற்பப் பொருள்காண நேர்ந்ததனால் முற்றுங்கோண லாயிற்று. பிறர் மறுக்கவேண்டும் என்பதற்கும் தேவையற்று அவ்வுரைதானே அது கூடாமைக்குக் கரியாயிற்று’ என்றவர் மறுக்கும் நயமும் அவ் வாறவர் கூறுவது சரியே எனப் பாவாணரும் ஏற்பதும் நோக்கத்தக்கது. இன்னார் கூற்றென இனம் கண்டதே பரிமேலழகர் உரிய பொரு ளுரைக்க ஏதுவாயிற் றென்பதும்; பிறழக்கொண்ட வழி அவர் கூற்றே உரைக்குக் கூற்றானதென்பதும் இதனாற் பெற்றாம். இவ்வாறு கூற்று என்னும் நோக்கு நிலையே வேறுபட்ட பார்வைக் கோண மாக மூலத்தை இனம் காண்பதில் புதுவெளிச்சம் பாய்ச்சிடவல்ல புதுமையாய்ப் பரிமேலழகர் கைவண்ணத்தில் காணக்கிடக்கிறது.

“என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர்”

“பகைவீர் இன்றிங்கென் தலைவன் எதிர் போரேற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின் கண்ணே நின்ற வீரர்பலர்; நீவிர் அதன் கணின்றி நம்முடற்கணிற்றல் வேண்டின், என்றலைவன் எதிர் போரேற்று நிற்றலை யொழிமின் என்னையெனத் தன் னொடு தொடர்புபடுத்திக் கூறினமையின், அவன் வேல்வாய் வீழ்தல் பெற்றாம். கல்- நடுகல் ‘நம்பன் சிலைவாய் நடக்குங்கணை மிச்சிலல்லா- லம்பொன் முடிப்பூ ணரசு மில்லை’ (சிந்தாமணி, காந்தருவதத்தை- 809) எனப்பதுமுகன் கூறினாற்போல ஒருவீரன் தன்மறம் அரசன் மேல் வைத்துக் கூறிய வாறு. இப்பாட்டு நெறி நெடுமொழி வஞ்சி (வெண்பாமாலை, வஞ்சி 12) - பரிமேலழகர்21

“திருக்குறளைப் புதிய பார்வையுடன் கண்டவர் பரிமேலழகர். அதனால் பல குறட்பாக்கள் புதிய விளக்கம் பெற்றுள்ளன. அப்பாடல்களைப் பிறர் கூறுவதாக அமைத்துக் காட்டி அழகு செய்கின்றார். - மு.வை. அரவிந்தன்22

அரவிந்தன் கூறுமாறு ஒரு வீரன் தன்மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறெனப் பரிமேலழகர் குறிப்பிடுவதும்; அவ்வாறு கூறவருமிடத்தும் சிந்தாமணியிலிருந்து புறச்சான்றுரைப்பதும்; இப்பாட்டு நெடுமொழி வஞ்சி எனப்புறப்பொருள் இலக்கணம் கூறுவதும் இக்குறளுரையில் காணக் கிடக்கும் பரிமேலழகரின் உரையியல் கூறுகளின் சிறப்புகளாம். மட்டுமில்லாமல் பரிமேலழகரின் உரையின் மொழிநடையும் செறிவும் மூலப் பனுவலின் மொழிநடையும் செறிவும் போலவே அமைந்தியல்கின்றதென்பதற்கு இக்குறளுரையே பருக்கைப் பதமான ‘சாலுங்கரி’ எனலும் தகும்.

“திருவள்ளுவர் ஏடும் அதற்குரிய, பரிமேலழகர் உரையும் இரண்டுமே தத்தம் கட்டுக்கோப் புடையவாய் அமைந்துள்ளன. இதுநாள் வரை திருவள்ளுவரின் கட்டுக்கோப்புக்கு ஒப்பான கட்டுக்கோப்புடன் கட்டி எழுதப் பட்ட ஒரே உரை பரிமேலழகர் உரைதான் என்றுதான் கூறவேண்டும்”- கா. அப்பாத் துரைப் பிள்ளை.23

இதுவோ அதுவோ என்னும் அய்யமும், ஒன்றை மற்றொன்றாகப் பிறழ உணரும் திரிபும் அற உரிய பொருளைத் துணிதலிலும், பிறர் உரையை மறுப் பதிலும் பரிமேலழகர் உரை இலக்கண உரையாகத் திகழ வல்லதாம். மொழித்திறத்தால் முட்டறுக்க அவர் மொழிப் புலமையே பரிமேலழகருக்கு அடிப் படையாய் அமைந்தியல் நின்றது. நிலையாமை அதிகாரத்தில் வரும் அதிகமான வாத விவாதத் தரப்புகளுக்கு ஆட்பட்ட குடம்பை தனித்தொழிய’ என்னும் குறப்பாவிற்குரிய வெவ்வேறு உரைகளை ஒப்பாய்வாய்க் காண்போம்.

“குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே

உடம்போ டுயிரிடை நட்பு”

“கூடு தனியே கிடக்கப் புள்ளுப்பறந்து போனாற் போலும், உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு” - மணக்குடவர்

“பட்சி முட்டையிட்டு வாழ்கிற கூடும் முட்டையும் போலும் உடலும் உயிரும்; ஆகையினாலே யாக்கை உள்ள பொழுதே தன்மம் செய்வான்”- பரிதியார்.

“இவ்வுலகத்துக் குருவி முதலிய பறவை யானது தான் வாழும் கூடு தன்னையின்றித் தனித்து ஆங்கு ஒழிய, பறந்துபோகிய அத் தன்மைத்தே; மற்றுயாதோ என்ன உடம் போடு உயிரின் கண் உளதாகிய உறவுபாடு” - காலிங்கர்.

“முன்தனியாத முட்டை தனித்துக் கிடப்ப, அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போனதன்மைத்து; உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு.

‘தனித்து ஒழிய’ என்றதனான், முன் தனி யாமை பெற்றாம்; அஃதாவது கருவும் தானும் ஒன்றாய்ப் பிறந்து வேறாந் துணையும் அதற்கு ஆதாரமாய் நிற்றல்; அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று. அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமற் போகலின், புள் உயிர்க்குவமையாயிற்று. முட்டையுட் பிறப்பன பிறவும் உளவேனும் புள்ளையே கூறினார், பறந்துபோதல் தொழி லான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவே யாகலின், ‘நட்பு’ என்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப் போதல் உணர்த் திற்று. சேதனமாய் அருவாய நித்தமாய உயிரும் அசேதனமாய் உருவாய் அநித்த மாய உடம்பும் தம்முள் மாறாகலின், வினை வயத்தால் கூடியல்லது நட்பில என்பது அறிக. இனிக்குடம்பை என்பதற்குக் கூடு என்று உரைப்பாரும் உளர், அது புள்ளுடன் தோன்றாமையாயினும், அதன் கண் அது மீண்டு புகுதலுடைமையானும் உடம்பிற்கு உவமையாகாமை அறிக”- பரிமேலழகர்24

“உடம்புடன் உயிருக்குள்ள நட்பானது, முட்டை தனித்துக் கிடக்க அதனுள்ளிருந்த பறவைக்குஞ்சு தக்க பருவம் வந்ததும் பறந்து போவதைப் போன்றது.

மக்களுடம்பு போலத் தாய்வயிற்றிலிருந்தே வந்தது முட்டையேயாதலால் முட்டை உடம்புக்கு உவமையாயிற்று. முட்டைக் குள்ளிருந்து போனபின் திரும்பி வந்து புகாமையால் புள் உயிர்க்கு உவமையாயிற்று. உயிர்செல்லும் காலத்துச் செல்லாது சென்று விடும்- புலவர் குழந்தை25

பிறரெல்லாம் குடம்பை என்பதற்குக் கூடெனவே பொருள்கொள்ளப் பரிமேலழகரும் புலவர் குழந்தையும் முட்டை எனப் பொருள் கொண்டனர். குடம்பையைப் புள் இயற்றுங் கூடென்ற காலிங்கரை, ‘அது புள்ளுடன் தோன்றா மையானும், அதன்கண் அது மீண்டும் புகுதல் உடைமையானும் உடம்பிற்கு உவமையாகாமை அறிக’ என மறுத்துரைத்தார் பரிமேலழகர். அதன் வழித்தாய் மக்களுடம்பு போலத்தாய் வயிற்றி லிருந்தே வந்தது முட்டையாதலால் முட்டை உடம்புக்கு உவமையாயிற்றென எடுத்துரைத்தார் குழந்தையார்.

‘இவ்வுரையுள் வரும் ‘முன் தனியாத’, ‘அதனுள் இருந்த’, ‘பருவம் வந்துழி’ என்ற தொடர்கள் பரிமேலழகரால் வருவித்துக் கொள்ளப்பட்டனவாகும். குறட்பாவில் இவற்றிற்கேற்ற மூலச் சொற்கள் இல்லை; இக்குறட்பாவில் வந்துள்ள ‘தனித்து’ என் பதனால், ‘முன் தனியாத’ என்பதும்; ‘முட்டை என்பதனால் ‘அதனுள்ளிருந்து என்பதும்; ‘பறந்தற்றே’ என்பதனால் ‘பருவம் வந்துழி என்பதும் ஊகித்துப்பொருத்தமுறப் பெறப் பட்டனவாகும். இது பரிமேலழகரது கூர்த்த மதிக்கு எடுத்துக்காட்டாகும்”- நா. பாலு சாமி26

உடம்பும் உயிரும் தோன்றுகின்ற பொழுதே இணைந்து விடுகிறது அல்லது இணைந்தே தோன்றுகிறது. எது முன்னது என்பது மருத்துவ ஆராய்ச்சியின் பாற்பட்டது கிடக்கிறான் என மெய்யைச்சுட்டியும், போய்விட்டான் என உயிரைச் சுட்டியும் உரைப்பது வழக்கு. இவ்வாறு ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரித்தாலும் உயிர்தான் உடம்பை விட்டுப் பிரிகிறது என்பது உலகியல் அநு மானம். உடம்போடு இடையறா நட்பு கொள்ளும் இவ்வுயிர், அதுவரை தன்னை விட்டுப் பிரியாத உடம்பைத் தனியே விட்டு விட்டுப் பிரிந்து விடுகிறது”.

“பல நூற்றாண்டுகளுக்கு முன்னே ஆசிரியர் ஒருவருடைய கருத்தை மறுக்கவேண்டு மானால் எத்தகைய உழைப்பும் புலமையும் சிந்தனையும் பொருத்தமான சான்றும் கூர்ந்த அறிவும் தேவை என்பதை அழகர் உரை நமக்குப் புலப்படுத்துகிறது. -ச.சுப்பிர மணியன்27

இவ்வாசிப்புகள் இரண்டும் பரிமேலழகர் பொருள்கோளை உள்ளவாறே ஏற்றுப் போற்று வனவாயின. அதன் பொருத்தப்பாட்டையும் தம் புரிதல் அளவில் எடுத்துரைத்தன. மாறாக மாற்றுத் தரப்பான வாசிப்புகள் பரிமேலழகர் உரையை மறுத்துரைக்கக் காண்போம்.

“முட்டையை விட்டு வெளிப்படும் உயிரை அப்பருவத்தில் பார்ப்பு என்று சொல்லுதல் வழக்கேயன்றிப் புள் என்று சொல்லுதல் வழக்கன்று. மேலும், முட்டையை விட்டு வெளிப்பட்டவுடன் பறக்கும் பார்ப்பை நாம் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை”- வ.உ.சி.28

“முட்டை உருச்சிதையாமல் பார்ப்பு அதனின் நீங்குமாறில்லை. யாக்கை உருச்சிதையாமல் உயிர் நீங்குமாறுண்டு. அது நீங்கியபின்னர் யாக்கை சிதைவதே ஒருதலை”- ச. தண்ட பாணி தேசிகர்29

“கருவும் ஓடும் ஒன்றாய்த் தோன்றாது. கரு முதிர்ந்த பின்னரே மேலே உள்ள பசை இறுகி ஓடாகின்றது. ஆதலானும் அவ்வுரை பொருந்தாது - இரத்தினவேல் முதலியார்30

“குடம்பை என்ற சொல் சங்க நூல்களில் கூடு என்ற பொருளில் வருகிறதேயன்றி முட்டை என்ற பொருளில் வரவில்லை. பரிமேலழ கருக்குப் பின் தோன்றிய பிங்கலந்தை என்ற நிகண்டு மட்டுமே குடம்பை என்பதற்கு முட்டை என்று பொருள் கூறு கிறது”- மு.வை. அரவிந்தன்31

உடம்பைக் கூடென்னும் மரபிற்குச் செய்யுள் வழக்கும் பேச்சு வழக்கும் எடுத்துக்காட்டுவதுடன் பழந்தமிழ் நூல்களில் உடம்பைக் கூடாகவும், உயிரைப் பறவையாகவும் உவமித்திருப்பதற்கு அகப் பாடலையும் (113) அதன் உரையில் எடுத்துக் காட்டப்படும் நாலடியார் பாடலையும் (30) எடுத்துக்காட்டாக்கி இக்குறளுக்குப் பரிமேலழகர் உரை பொருந்தாதென்பார் அவர்.

“அலங்கல் அஞ்சினைக் குடம்பைப் புல்லென புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந் தாங்கு மெய்யிவ ணொழியப் போகி அவர் செய்வினை மருங்கில் செலீஇயரென் உயிரே” - கல்லாடனார்

“உயிர் உடம்பை விட்டுப் போதற்குப் புள் குடம்பையை விட்டுச் செல்லுதல் உவம மாதலை, ‘சேக்கை மரனொழியச் சேணீங்கு புட்போல, யாக்கை தமர்க் கொழிய நீத்து’ என்பதனாலறிக” - ந.மு.வேங்கடசாமி நாட்டார். ரா. வேங்கடாசலம்பிள்ளை32

பரிமேலழகரின் பொருள்கோளை மறுத்துக் கூடெனப் பொருள் கொண்ட முனைவர் உரையை ஏற்புடைத்தென முட்டை எனக் கொள்வது பொருந்தாதெனக் கேள்விகள் எழுப்பியும், உடம்பைக் கூடென்னும் மரபுக்கும், உடம்பை விட்டு உயிர் போவதற்குக் கூட்டை விட்டுப் பறவை பறந்து போதலை உவமையாக்கி வரும் இலக்கியப் புறச் சான்றுகளை எடுத்துக் காட்டியும் மாற்றுத் தரப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை யாவற்றையும் உள்வாங்கி இவற்றை மறுத் துரைக்கும் பாவாணர் பரிமேலழகர் உரைத் தரப்பையே தாமும் ஏற்று மேலதிக விளக்கங் களுடன் விரித்துரைக்கின்றார்.

“உடம்போடு உயிருக்குள்ள உறவு; முன் தனியாது உடனிருந்த முட்டைக்கூடு பின்பு பிரிந்து தனித்துக்கிடக்க, அதனுள்ளிருந்த பறவைக் குஞ்சு (வெளிவந்து இறக்கை முளைத்தபின்) பறந்துபோன தன்மைத்தே, குடம்பை என்னும் சொற்குச் சேக்கை (பறவைக் கூடு), முட்டைக்கூடு, புழுக்கூடு எனமுப் பொருள்கள் உள.

‘வரியுடல் சூழக் குடம்பை நூல் தெற்றி’ எனக் கல்லாடம் (கணபதிதுதி, 26- ஆம் வரி) புழுக்கூட்டைக் குறித்தது. ‘குடம்பை முட்டையுங் கூடுமாகும்’ என்பது பிங்கலம் (10- 352)

குடம்பை, கூடு என்பன பொதுப் பெயராயிருப் பதும், நாலடியார் பாடல் மேற்கண்டாங்கு உவமங் கூறியிருப்பதுமே பொருள்கோள் வேற்றுமைக்குக் கரணியம் எனவும்; திருக்குறள் மாந்தனுயிரையே சிறப்பாகக் கருதினாலும், தாய்ப்பாலுண்ணிகட் கெல்லாம் (Mammalia) பொதுவான உயிரையும் அதன் உடம்பையுமே பற்றிக் கூறியிருக்க, நாலடி யார் மாந்தனுயிரையும் அவனுடம்பையுமே பற்றிக் கூறியதுடன், அவன் பிறந்த குடும்பத்தையும் சேர்த்துக் கூறியுள்ளதுவே உவம வேறுபாட்டிற்குக் கரணிய மாம் எனவும் எடுத்துரைக்கின்றார்.

“திருவள்ளுவர் பாலுண்ணிகளின் அல்லது மாந்தரின் உயிரும் உடம்பும் உடன்தோன்றிப் பின்பு உயிர் பிரிவதையே கூறுவதால், உடம் பிற்கு முட்டைக் கூட்டை உவமங் கொள்வதே பொருத்தமாம். ஆயினும், குஞ்சு முட்டைக் கூட்டினின்று வெளிவந்தவுடன் பறவாமை யால், ‘வெளிவந்து இறக்கை முளைத்தபின்’ என்று ஒரு தொடரை

இடைச்செருக வேண்டிய தாயிற்று. எங்கேனும், பொரித்தவுடன் பறந்து போகும் பறவையினமிருப்பின், அது முழு நிறைவாகப் பொருந்தும் உவமமாம். தனித் தொழிய என்றதனால், முன்பு தனியாமை பெறப்பட்டது. அதாவது முட்டைக்கூடு முதலில் நொய்ய உறையாகவும் பின்பு சவ்வாகவும் இறுதியில் தோடாகவும் கரு வோடு கூடியிருந்து, குஞ்சு பொரிக்கும் வரை அதற்கு நிலைக்களமாய் நின்றமை.

அதனால் அது மாந்தனுயிர் நீங்கும்வரை அதற்கு நிலைக் களமாக உடன் நிற்கும் உடம்பிற்கு உவம மாயிற்று. முட்டைத் தோட்டிற்கும் உடம் பிற்கும் கூடு என்பது பொதுப் பெயரா யிருப்பதும், உவமைக்குத் துணையாயிற்று. பறவைக் குஞ்சு முட்டையினின்று வெளி வந்தபின் அதற்குள் மீளப்புகாமையால், உடம்பினின்று நீங்கின பின் அதற்குள் மீளப்புகாத உயிருக்கு உவமமாயிற்று. முட்டைப் பிறவிகளுள் மீன், ஊரி (Reptile) முதலிய பிறவினங்களுமிருப்பினும், வான் வெளியிற் செல்லும் உயிருக்கு வான்வெளியிற் பறக்கும் பறவையே சிறந்தவுவமமாகக் கொள்ளப்பட்டது”

“வினைவயத்தால் ஒன்று கூடியதல்லது வேறு தொடர்பொன்றுமில்லாதனவாதலாலும், உயிருக்கும் உடம்பிற்கும் இடைப்பட்ட வுறவை நட்பென்றது எதிர் மறைக் குறிப்பாம் ((Irony). ஒழிதல் வினை ஒரேயடியாய் நீங்கு தலையும், பறத்தல் வினை விரைந்து செல்லு தலையும் குறித்தன. ஏகாரம் தேற்றம்” - ஞா. தேவநேயப் பாவாணர்33

‘புட்பறந்தற்றே’ என்பது வினைஉவமம். இவ்வாறிருக்கப் பரிதியார் மட்டும் ‘(பட்சி முட்டை யிட்டு வாழ்கிற) கூடும் முட்டையும் போலும் உடலும் உயிரும்’ எனப் பொருளுவமமாகக் கொண்டார். ‘உக்க அமிழ்தற்றால்’ என்புழி உக்க அமிழ்தெனக் கொண்டால் பொருளுவமம். அமிழ்து உக்கது எனக்கொண்டால் வினையுவமம். அவ்வாறு கொள்ள வேண்டுமாயின் ‘பறந்தபுள்ளற்றால்’ என வருங்காலே அது பொருந்தும். ‘புட்பறந்தால்’ என வருங்கால் பொருந்துமாறில்லை. எனவே அது உரையன்மை அறிக. குடம்பை என்பதற்குப் பிறர் எல்லாம் கூடெனவும் பரிமேலழகர் மட்டும் முட்டை எனவும் பொருள்கொண்டனர்.

பாவாணரும் பரிமேலழகர் போல முட்டை எனவே கொண்டார். பறவைக்கூடு, முட்டைக்கூடு, புழுக்கூடு என்பன இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பாவாணர் பரிமேலழகர் பொருள்கோளையே கொண்டதோடு அவ்வுரை விளங்கித் தோன்ற விரிந்துரைக்கும் பாங்கு வியக்கத்தக்கதாம். உரைவேற்றுமைக்கும் உவம வேறுபாட்டிற்கும் காரணமும் உணர்த்து கின்றார்.

உயிரும் உடம்பும் உடன்தோன்றிப் பின்பு உயிர் பிரிவதையே கூறுவதால் உடம்பிற்கு முட்டைக் கூட்டை உவமங் கொள்வதே பொருத்தமாம் என் கிறார். வ.உ.சி., தேசிகர், இரத்தினவேல் முதலியார் ஆகியோர் எழுப்பிய தடைகளை எல்லாமும் உள் வாங்கி அவற்றிற்குத் தம் உரையிடையே உரிய விடையளிக்கின்றார். பரிமேலழகரின் காண்டிகை உரைக்கு விருத்தியுரை என்னுமாப் போலவே பாவாணரின் இக்குறளுரை அமைந்தியல்கின்றது எனலாம்.

ஒழிதல்வினை ஒரேயடியாக நீங்குதல் என்ப தனான் பறவைக்கூடு என்பதற்குப் பொருந்தாமல் முட்டைக் கூட்டிற்கே பொருந்தும் எனல் ஏற் புடைத்தே. என்றாலும் பறத்தல் வினை விரைந்து செல்லுதல் என்னும்போது முட்டைக் கூடென் பதற்குப் பொருந்தாமல் பறவைக் கூட்டிற்கே பொருந்துவது கவனங்கூரத் தக்கதாம். ஏனெனில் பறத்தல்வினை விரைந்து செல்லுதல் எனும் பாவாணரின் குறிப்பே, முட்டையிலிருந்து பறவைக் குஞ்சு (வெளிவந்து இறக்கை முளைத்தபின்) பறந்து போன தன்மைத்தே என்னும் அவர் உரையுடன் முரண்படவில்லையா?

குடம்பை என்பதற்குக் கூடெனப் பொருள் கோடல் குறித்து ‘அது (கூடு) புள்ளுடன் தோன்றா மையானும், அதன்கண் அது மீண்டு புகுதலுடை மையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக என்றார் பரிமேலழகர். மாறாக வேறொரு கோணத்தில் மறுபிறவிக் கோட்பாட்டில் நின்று மற்றொரு கூட்டிற் புகுவது எனுமாறு அணுகும் தரப்பையும் இத்துடன் காண்போம்.

“உயிர்கள் தாம் அடுத்த உடம்பில் இருந்து தத்தம் கால எல்லைவரை துய்ப்பனதுய்த்து, எஞ்சியுள்ள பழவினைக்கு ஏற்ப வேற்று டம்பை எய்தும் என்பதனைச் சென்றவுயிரின் நின்ற யாக்கை இருநிலம் தீண்டா அருநில வகையோடு இருபாற் பட்ட ஒருசிறப் பின்றே (தொல். 1016) என்ற நூற்பாவாற் குறித்தனர்.

இதனால் உயிர் ஓருடம்பை விட்டதும் மற்றோருடம்பைப் பற்றும் இயல்பானது என்பதும் உணர்த்தப் பெற்றது. ‘குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே உடம் பொடு உயிரிடை நட்பு’ என்ற வள்ளுவர் கருத்தும் கூட்டைவிட்டுப் பறந்த பறவை தேவை ஏற்பட்ட போது மற்றொரு கூட்டிற் புகுவது போல் இப் போது இவ்வுடலைவிட்டவுயிர் பின்பு மற்றோரு டலையெய்தும் என்ற மறுபிறப்பு உண்மையைத் தொல்காப்பியர் வழி நின்று உணர்த்துகின்றார்- ச. தண்டபாணி தேசிகர்34

தேசிகர் கூறுமாப் போலே மற்றொரு கூட்டிற் புகுவது போல இவ்வுடலைவிட்டவுயிர் பின்பு மற்றொருடலையெய்தும் என்ற மறுபிறப்புக் கருத்தாக்கத்திற்கு இக்குறட்பாவிலும் இடமில்லை. அவர் சுட்டிய தொல்காப்பிய நூற்பாவிலும் இட மில்லை.

கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்
சென்ற உயிரின் நின்ற யாக்கை
இருநிலந் தீண்டா அருநிலை வகையொடு
இருபாற் பட்ட ஒருசிறப் பின்றே

(தொல். பொருள். புறத்திணை: 16)

“எய்த அம்பும் ஓச்சிய வேலும் பாங்குறச் சென்று அவர்மேற் செறிதலின் உயிர் சென்ற மையான், துளங்காது நின்ற யாக்கை வகையும், வீசியவாள் முதலியவற்றான் வெட்டுண்டு வீழ்ந்த குறையுடம்பும் உறுப்பும் பரந்த நிலத் தினைத் தீண்டாமல், எழுந்தெழுந்து துள்ளும் வகையும் ஆகிய இருதிறப்பட்ட ஒப்பற்ற சிறப்பினையுடையது என்று கூறுவர் நூலோர்”

“கணை முதலிய கருவிகள் மொய்த்தவழி அம்மறவன் நின்ற நிலையும், சாய்ந்த நிலையும், கிடந்த நிலையும் அதன் வகையாம். இருநிலந் தீண்டாமல் தலையற்ற உடம்பு (கவந்தம்) ஆடலும், உறுப்புக்கள் துடித்தாடலும் அதன் வகையாம். இவை இரு சாராருக்கும் ஒக்கும்” - ச. பாலசுந்தரம்35

‘புட்பறந்தற்றே’ எனும் குறளுவமத்திற்கும் ‘இருநிலந் தீண்டாமல் கவந்தம் ஆடிய நிலை’ எனும் தொல்காப்பியக் காட்சிக்கும் ‘ஓருடம்பை விட்டவுயிர் மற்றோருடம்பைப் பற்றுமென வள்ளுவர் தொல்காப்பிய வழிநின்று மறுபிறப்புண்மையை உணர்த்துவதாகத் தேசிகர் குறிப்பிடுவது பொருந்தாக் கூற்றே. இங்கல்லாமல் ‘புக்கில் அமைந்தின்று கொல்லோ’ எனவரும் குறட்பாவிலும் இவ்விரு குறட்பாக்களும் அடங்கிய நிலையாமை அதிகார நுவல் பொருள் அடைவிலும் அவ்வாறு இனம் காண இடமுண்டென்பதும் இங்கே கருதற்பால தாகும்.

“புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு”

“வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்பு களில் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு, எஞ் ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்தது இல்லை போலும் அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்றுபோயும், ஓருடம்பினும் நிலை பெறாது வருதலால், ‘துச்சிலிருந்த’ என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின், பிறர் இல்களில் ஒதுக் கிராது என்பதாம்; ஆகவே உயிரோடு கூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப் பட்டது.

இவை ஏழுபாட்டானும் முறையே யாக்கை கட்கு வரைந்தநாள் கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும், அவை ஒரோ வழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும் என்பது தெளியப் படாமையும், உயிர் நீங்கிய வழிக் கிடக்கு மாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறி மாறி வருமாறும் அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க”- பரிமேலழகர்36

“பல்வேறு நோய்கட்கும் பல்வகைப் புழுக் கட்கும் வாழிடமாகிய உடம்புகளுள் நெடு கலும் ஒண்டுக்குடியிருந்தே வந்த உயிர்க்கு; நிலையாக வதியத்தக்க ஓர் உறையுள் இது காறும் அமையவில்லை போலும்!

துஞ்சு+ இல் = துச்சில்- ஒதுக்கிடம்- புகு+ இல் = புக்கில் = புகுந்துபின் நீங்காத நிலையான இருப்பிடம். புக்கில் அமைந்ததாயின் வெளி யேறியிராதென்பதாம். ஆகவே, உயிர் நிற்கக் கூடிய உடம்பு ஒன்றுமில்லையென்பது பெறப் பட்டது. இங்ஙனம் இவ்வதிகாரத்தில், அரி தாய்க் கிடைத்தும் நிலையாத செல்வத்தின் நிலையாமையும் குழவிப்பருவம் முதல் கிழப் பருவம் வரை எந்நொடியிலும் திடுமென இறக்கும் யாக்கையின் நிலையாமையும், இறந்த பின்பும் எல்லையில்லாது துன்ப மாலை தொடரும், பிறப்பிறப்பின் நிலை யாமையுங் கூறித்துறவதிகாரத்திற்கு தோற்று வாய் செய்து வைத்தார்” - ஞா. தேவநேயப் பாவாணர்37

வள்ளுவர் ‘புக்கி’லென்பார். ஆனாலது மோட்ச மில்லை. அறமிதென்பார் ஆனாலது நீதியில்லை. ‘தத்தம் கருமமே’ என்பார் ஆனாலது கர்மவினை யன்று. ‘தெய்வம்’, ‘வகுத்தான்’ என்பார். ஆனாலவை படைப்புக் கடவுளைக் குறித்தல்ல. தமிழரே அறம் பொருள் இன்பம் வீடென்னும் நாற்பொருளை வகுத்தவர் என்பார் பாவாணர்.

ஆனாலவை தர்மார்த்த கர்மமோட்சம் ஆகமாட்டா, என்பதனா லேயே வீடு பேறுண்டாம் என்னும் ஆரியக் கொள் கையை நம்பும் சிற்றறிவாளர், இன்பத்துப் பாலைப் பழிக்கவும் திருவள்ளுவரைக் கண்டிக்கவும் துணிவர் என்பார்.38 உலகாயதம் பற்றியும் அப்பாலை இயல் என்னும் மீபொருண்மையியல் குறித்தும் நிறைய ஆராய்ந்துள்ள ஆய்வறிஞர் முப்பால்மணி திரு வள்ளுவர் கால மெய்யியலை ஆராயுமுகமாகக் குறிப்பிடுவது ஆழ்ந்துமனங்கொள்ளத்தக்கதாகும்.

“பொருட்களின் நிலையாமை, உயிரின் பிறவாநிலை என்ற கருத்தியல்களையே திருவள்ளுவரும் மற்றும் அவர்காலக் கீழ்க் கணக்கு நூலாசிரியர்களும் உரைத்தனர் தனது பங்குக்குத் திருவள்ளுவர் பற்றற்றானை மற்றும் பிறவாநிலையைப் பெரிதாகப் போற்றினார். என்றாலும் உயிர் என்ற பறவைக்கு நிலையான இடம் இல்லை போலும் என நெட்டுயிர்த்தார் (340). ஆனாலும் திருவள்ளுவர் உலகியற்றியான் ஆன அப்பாலைக் கடவுள் கருத்தியலைப் போற்றவில்லை (1016).

படைத்தோன் என்ப வனைப் பக்குடுக்கை நன்கணியார் பண்பி லாளன் எனக்கடித்துரைத்தார் (புறம்: 194). நப்பாலத்தனார் படைப்புக் கடவுள் துன்புற வேண்டும் எனக்கூறித் தமது வெறுப்பைப் புலப்படுத்தினார் (நற்: 240)- மூவரும் படைப்புக் கடவுளை ஏற்கவில்லை”- கி. முப்பால்மணி30

மூவரும் படைப்புக்கடவுளை ஏற்கவில்லை யென முப்பால் மணி குறிப்பிடும் அம்மூவர் கூற்றுக் களும் வருமாறு:

‘பரந்து கெடுக உலகியற்றியான்’ (குறள்: 1062)

‘படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்’ (புறம்: 194)

‘அய்தே கம்ம உலகு படைத்தோன்’ (நற்: 240)

சொல்லினால் ஆவனயாவை? அவை எவ்வாறு செயல்படவல்லன? அவற்றின் வகைகள் யாவை? இவ்வினாக்களுக்கு தொல்காப்பிய வாயிலாக விடை காண்போம்:

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’

‘பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்

சொல்லின் ஆகும் என்மனார் புலவர்’

‘தெரிபு வேறு நிலையிலும் குறிப்பில் தோன்றலும்

இருபாற்று என்ப பொருண்மை நிலையே’

-தொல். சொல். பெயரியல்: 1-2-3

பொருள் குறித்தன என வருமிடத்தில் அந்தப் பொருள் என்பது அர்த்தத்தைக் குறித்தது எனப் பலர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளதைப் பற்றி அ.ச.ஞா.வுடனான ஒரு செவ்வியில் கேள்வி எழுப்பப்பட்டபோது அவரளிக்கும் விடை இங்கு நோக்கத்தக்கது.

“தொல்காப்பியன் சொன்னான், ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ ‘At implies that’ என்று சொல் கிறோமே அதுபோல. அந்தச் சொல்லுக்குப் பொருள் கிடையாது பொருளாகப் பெரிய வங்க வைச்சாங்க. அதனால பொருள் குறித்தன என்றசொல் இதைத்தான் குறிக்கும் என்று பெரியோர்களெல்லாம் முடிவுன்னு ஒத்துக் கிட்டாங்க... பொருள் என்று சொல்ல முடி யாது. ஆனால் Signifies என்று கொள்ள லாம்”- அ.ச. ஞானசம்பந்தம்40

சொற்கள் பொருள்குறித்தன அல்ல ‘implies’ ‘Signifies’ எனலாம் என்கின்றார். implies என்றால் குறிப்பாகச் சுட்டு, பொருள் தொக்கியிருக்கச் செய், மறைமுகமாகக் குறிப்பிடு எனப் பொருள் படும்41 ‘Signifies’ என்றால் சுட்டி நிற்பது எனப் பொருள்படும்.

“சொற்கள் என்பது பொருள்களைக் குறிப்பது என்பது தவறு; உண்மையில் அவை சுட்டி களே (Signs) - கார்த்திகேசு சிவத்தம்பி42

மொழி என்பது பெயர்தரும் ஓர் அமைப் பென்பர். சொல்லின் தன்மைக்குப் பெயரிடலே சொன்மை. பொருளின் தன்மைக்குப் பெயரிடலே பொருண்மை. இவையிரண்டுமே சொல்லான் ஆகும் என்பார் தொல்காப்பியர்.

“இளம்பூரணர் பொருள் தான் பொருண்மை என்கிறார் சொன்மை என்பது சொல் தன்னைச் சுட்டுதல் (Self referential) என்கிறார்”.

“தெய்வச் சிலையாளர் சொன்மை என்பது சொல்லின் தன்மை ஆராய்வார்க்கு என்று அர்த்தம் தருகிறது என்கிறார். சொல்லின் தன்மை என்பது பெயர்தருதல் (Naming) என்று தெய்வச்சிலையார் உதாரணத்தி லிருந்து தெரிகிறது”- தமிழவன்43

“மனிதர்களுக்கு வெளியே இருக்கும் பொருளை அறிதல் என்பது அதற்குப் பெயரிடுவதன்’ மூலமாகத்தான் நிகழ்ந் துள்ளது”- க. பஞ்சாங்கம்44

“பெயர் என்றது... பொருளைச் சுட்டி நின்றது. வழக்கின் கண்ணும் நாலுபேர் ஐந்து பேர் எனப் பொருளைச் சுட்டி வருதல் காண்க”- ச. பாலசுந்தரம்45

“பெயரிடுதல் என்ற சொல் அறிவியல் பூர்வ மான எந்தவொரு ஒழுங்கமைப்பிற்கும் முதற் படியாகும்... அளக்க, நிறுத்துப்பார்க்க, பகுக்க, வேறுபடுத்த, ஒப்புமைப்படுத்த பெயரிடுதல் அத்தியாவசியமாகிறது” - எம்.டி. முத்துக் குமாரசுவாமி46

தமிழவன் தொல்காப்பியச் சொல்லதிகாரப் பெயரியலை முன்வைத்தும்; க. பஞ்சாங்கமும், ச. பாலசுந்தரமும் பொருளதிகார அகத்திணை யியலை முன்வைத்தும்; எம்.டி. முத்துக்குமார சுவாமி மெய்ப்பாட்டியலை முன்வைத்தும் பெயரிடுதல் என்னும் கருத்தாக்கம் பற்றி எடுத் துரைப்பன உரையாசிரியர் பற்றிய மேலதிகப் புரிதல்களுக்கு வாயில் சமைக்க வல்லனவாம்.

“லெக்கானும், சேனாவரையரும் மொழியின் உறுப்புக்கள் (சொன்மை, பொருண்மை) மொழியாலான எவ்வளவு பெரிய இலக்கிய வகைமையிலும் (கவிதையிலும்) அதன் அர்த்தத்தைத் தீர்மானிக்கும் வகையில் செயல் படும் என்கிறார்கள். பிற உரையாசிரியர்கள் வெறும் மொழி பற்றிய இலக்கணமாக அர்த்தம் தெரிநிலையாய் வெளிப்பட்டுத் தோன்றுவதையும், குறிப்பால் தோன்று வதையும் கருதுகின்றனர்”- தமிழவன்47

இத்தகைய புரிதல்களுடன் அணுகமுற்படும் போதுதான் அர்த்தத்தைத் தீர்மானிக்கும் வகையில் பொருண்மையை இனங்காணச் சொன்னமையையும் பரிமேலழகர் திறம்படக் கையாளும் அருமை பிடிபடுகின்றது. இந்தப் புரிதலின் வெளிச்சத்தில்தான் இலக்கண உரை என்பதன் உள்ளார்ந்த பொருட் செறிவும் புலனாகின்றது.

தொல்காப்பியரின் காண்டிகை மற்றும் உரை, உரைமரபு குறித்த மூன்று நூற்பாக்களின் உரைக் கூறுகள் யாவும் பரிமேலழகர் உரையூடே அமைந் தியலக் காணலாம். குறிப்பாக உரைமரபு- துணிவு குறித்த உரைக்கு ‘இன்றியமையாது இயைபவை எல்லாம் ஒன்ற உரைப்பது’ பற்றிய உரை விளக்கத்தை மட்டும் இங்கு மீளவும் கண்போம்’. (ஏலவே க.நெடுஞ்செழியன், மற்றும் என் விளக்கங்களைக் காண்டோம்)

“மறுதலைப்பொருள் காட்டி வினாதலும், அய்யவாய்பாட்டான் வினாதலும், அவற்றிற்கு விடையிறுத்தலும் உடைத்தாய், எடுத்துக் கொண்ட அந்நூற் கருத்துக்களானும் முந்து நூற் கருத்துக்களானும் கற்போரிடத்து நிகழும் அய்ய உணர்வினையும் திரிபுணர்வினையும் களைந்து, கற்போர் தெளிவுறுமாறு ஒரு பொருளை ஒற்றுமைப்படக் கொளுத்திக் கவர்த்தலின்றி முடித்து நிற்றல் மேற்கூறிய உரையினது மரபாகும் எனக் கூறுவர் புலவர்”- ச. பாலசுந்தரம்48

இங்கே கவர்த்தலென்பது கவைமொழித் தன்மை (ambiguous). ‘இதனை உரைகாண்போர்க்குத் தொன்னூற் பயிற்சியும் பல்கலையறிவும் வேண்டு மென்பதும் உணர்த்தப்பட்ட வாறறிக’ எனக் காண்டிகை உரையாசிரியர் குறிப்பிடுவதும் பரி மேலழகர் உரைக்குப் பொருந்துவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

“இவரது உரைகளில் அறத்துப்பாலில் அற நூல்களையும் சமய நூல்களையும் அறிந்த புலமை வெளிப்படும்; பொருட்பாலில் அரசியல் கலையறிவு புலப்படும்; காமத்துப்பாலில் இன்பத்துறை நூலறிவு தோன்றும்... பொருட் பாலில் ‘பண்என்னாம் பாடற்கு’ (571) என்ற குறளின் விளக்கவுரையில் இசைப் புலமை தோன்ற உரை எழுதுகின்றார் ...மருந்து என்ற அதிகாரத்திற்கு, பரிமேலழகர் தம் மருத்துவ நூலறிவு தோன்ற உரை எழுதுகின்றார்” - மு.வை. அரவிந்தன்49

“திருவள்ளுவர் காலத்தில் வழக்கில் இருந்த நூல்களை மேற்கோள் காட்டியும், திருக் குறளின் கருப்பொருளை உய்த்துணர்ந்தும், அன்றைய அரசியல், பொருளியல் குமுகாய இலக்கிய நிலைகளை ஆய்ந்தறிந்தும் உரை வரைவது சிறந்தமுறை. திருவள்ளுவருக்கு முன்பிருந்த உரையாசிரியர் காலம் வரை தோன்றிய பல்வேறு வடமொழி, தென் மொழி நூல்களின் கருப்பொருளைத் துருவித் தேடி யெடுத்துத் திருக்குறட் கருத்துக்களாக்கி உரை வகுத்தது அழகரது தனிமுறை’ - கு.ச. ஆனந்தன்50

இவ்வியல் முழுமையும் பரிமேலழகர் உரை யியற் கூறுகள், உரைமறுப்புத்திறம் ஆகியவற்றின் குணம் நாடித் தொகுத்துரைத்தது.

அடிக்குறிப்புகள்:

1. திருக்குறள் - மணக்குடவர் உரை - அக். 2008 - 12-ஆம் பதிப்பு சாரதா பதிப்பகம் - ப. 119.

2. திருக்குறள் - பரிமேலழகருரையுடன் - காசி மடப்பதிப்பு 1968. ப. 239

3. ‘ஆய்வுகள் அகழ்வுகள்’ - முதற்பதிப்பு: நவ. 2003 - நா. பாலுசாமி அகல், சென்னை - ப. 72-73

4. தமிழர் இயங்கியல் தொல்காப்பியமும் சாரகசம்கிதையும்- முதற்பதிப்பு: 2000 - பாலம், சென்னை - ப. 100- க. நெடுஞ் செழியன்

5. தொல்காப்பியம் பொருளதிகாரம்: ப-ர். கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு- வி. குமாரசாமி நாயுடு & சன்ஸ் சென்னை - 1924 - மரபியல்: சூ. 100- 101- ப. 112, 113.

6. தொல்காப்பியம் பொருளதிகாரம் - ஆராய்ச்சிக் காண்டி கையுரை செய்யுளியல் & மரபியல் - ச. பாலசுந்தரம் - ப. 243 தாமரை வெளியீட்டகம், தஞ்சை - முதற்பதிப்பு சூன்- 1991

7. முற்சுட்டிய நூல் - க. நெடுஞ்செழியன் - ப. 100- 101

8. ‘மௌனம் கவிந்த வகுப்பறைகள்’ - பேரா. பி. விருதா சலனார் நினைவுமலர் 17-11-2001 - தமிழியக்கம், தஞ்சை - பரிமேலழகரின் உரை மறுப்புத் திறனில் அளவையியல் - ச. சுப்பிரமணியன் - ப. 107

9. மணக்குடவர் உரை - ப. 149

10. பரிமேலழகர் உரை - ப. 300- 301

11. முற்சுட்டிய மலர் - ச. சுப்பிரமணியன் - ப. 107- 108

12. திருக்குறள் தமிழ்மரபுரை - செம்பதிப்பு 20-12-2007 - ப. 384 வடி 6 ஞா. தேவநேயப்பாவாணர் - இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை

13. பரிமேலழகர் உரை - ப. 522

14. முற்சுட்டிய நூல் - பாவாணர் - ப. 231- 232

15. முற்சுட்டிய மலர் - ச. சுப்பிரமணியன் - ப. 108

16. பரிமேலழகர் உரை - ப. 525- 526

17. முற்சுட்டியநூல் - பாவாணர் - ப. 636

18. மணக்குடவர் உரை - ப. 258

19. பரிமேலழகர் உரை - ப. 313 -31220. முற்சுட்டிய நூல் - பாவாணர் - ப. 635

21. பரிமேலழகர் உரை - ப, 321 - 322

22. உரையாசிரியர்கள் - மணிவாசகர், சிதம்பரம் - மு.வை. அரவிந்தன் - ப. 43

23. முப்பால்ஒளி 1 - கா. அப்பாத்துரையார் - ப. 44.

24. திருக்குறள் உரைக் கொத்து - மூன்றாம் பதிப்பு: பிப். 1960 - காசிமடம் திருப்பனந்தாள் - அறத்துப்பால் - ப. 312- 313

25. திருக்குறள் புலவர் குழந்தையுரை - 4ஆம் பதிப்பு: ஏப். 10 - ப. 87-88 - சாரதா பதிப்பகம், சென்னை.

26. முற்சுட்டிய நூல் - ஞ. பாலுசாமி - ப. 75

27. முற்சுட்டிய மலர் - ச. சுப்பிரமணியன் - ப. 108- 109

28. முற்சுட்டிய நூல் - மு.வை. அரவிந்தன் - மேற்கோள்கள் - ப. 459

29. முற்சுட்டிய நூல் - மு.வை. அரவிந்தன் - மேற் கோள்கள் - ப. 459

30. முற்சுட்டிய நூல் - மு.வை. அரவிந்தன் - மேற்கோள்கள் - ப. 459

31. முற்சுட்டிய நூல் - மு.வை. அரவிந்தன்- மேற்கோள்கள்- ப. 260

32. அகநானூறு - களிற்றியானை நிரை - ஆறாம் பதிப்பு: 1968- ந.மு.வேங்கடசாமி நாட்டார் - ரா. வேங்கடா சலம்பிள்ளை உரை- பாகனேரி த.வை. இளைஞர் தமிழ்ச்சங்கம் - ப. 262.

33. முற்சுட்டிய நூல் - பாவாணர் - 199 - 200

34. திருக்குறளில் மெய்ப் பொருட் சுவடுகள் - ப. 32. ச.தண்ட பாணிதேசிகர் -அண்ணாமலைப் பல்கலை - மு. பதிப்பு: 1980

35. தொ. பொருள் - ஆராய்ச்சிக் காண்டிகையுரை - அகத் திணையியல் & புறத்திணையியல்- முதற் பதிப்பு: 1989 - ப. 181- 182

36. பரிமேலழகர் உரை - ப. 138- 139

37. முற்சுட்டியநூல் - பாவாணர் - ப. 201.

38. ‘தமிழர் வரலாறு’ - ஞா. தேவநேயன் - ப. 124

39. ‘சமூக விஞ்ஞானம்’ - ஏப்-சூன். 10 - திருவள்ளுவர் கால மெய்யியல் - முப்பால்மணி- ப. 105

40. தமிழரசு இலக்கியமலர் - 12. 4. 97 - அ.ச. ஞான சம்பந்தம், செல்வி - எஸ். சண்முகம் - ப. 254

41. ஆங்கிலம் - தமிழ்க்களஞ்சியம் - 2010 - சென்னைப் பல்கலைக் கழகம்- ப. 518.

42. நவீனத்துவம் - தமிழ் - பின் நவீனத்துவம் - கார்த்திகேசு சிவத்தம்பி - ப. 185 - மக்கள் வெளியீடு, சென்னை - நவ. 2001

43. பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள் - 2009 - தமிழவன் - ப- 70- 76

44. தமிழ்மலர் - 2010 - தொல்காப்பியம் எடுத்துரைப்பியல் நோக்கு - க. பஞ்சாங்கம் - ப. 211

45. தொல். பொருள் - ஆராய்ச்சிக் காண்டிகை யுரை- அகத் திணையியல் & புறத்திணையியல் - ச. பாலசுந்தரம்- ப. 52

46. தொல்காப்பியம் - பன்முகவாசிப்பு - ப-ர்: பா. இளமாறன்- டிச. 2008 - மெய்ப்பாட்டியலின் செய்தி குறிப்பினை உயிர்ப்பித்தல் - எம்.டி. முத்துகுமாரசாமி - மாற்று, சென்னை - ப. 125

47. முற்சுட்டிய நூல் - தமிழவன் - ப. 81

48. தொல்பொருள் - ஆராய்ச்சிக் காண்டிகையுரை- செய்யுளில் & மரபியல் - ச. பாலசுந்தரம் - ப. 243

49. முற்சுட்டியநூல் - மு.வை. அரவிந்தன் - ப. 423- 424.

50. வடிவிழந்த வள்ளுவம் - முதற்பதிப்பு: சனவரி, 1982 ப. 160 கு.ச. ஆனந்தன் - சிவலிங்க நூற்பதிப்புக் கழகம், ஈரோடு.

செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவன நிதிநல்கையுடன் கோவை அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறையில் நிகழ்த்தப்பெற்ற ‘திருக்குறள்: உரைவளம்’ குறித்த பயிலரங்கில் 5. 2. 2014 அன்று வாசிக்கப்பட்ட ‘பரிமேலழகர் உரையியல்’ பற்றிய ஆய்வுக்கட்டுரையின் ஓரியல் மட்டும்...

Pin It