puvaiarasu 1 350

ஒரு பழைய பஞ்சாயத்து என்சிபிஎச் நிறுவனத்தை ஏராளமாக வாழ்த்த வேண்டும். தஸ்தயேவ்ஸ்கியின் மூன்றாவது மிகப்பெரிய நூலான “கரமசோவ் சகோதரர்கள்”நூலை அது தமிழில் கொண்டுவந்தமைக்காக அதற்கு நன்றி சொல்ல வேண்டும்.

தமிழில் வானம்பாடி இயக்கத்தின் கவிஞர்களில் ஒருவராக மிளிர்ந்த கவிஞர் புவியரசு அவர்கள் இந்நூலை மொழிபெயர்த்தமைக்காக நமது மிகப்பெரிய நன்றிகளுக்கு உரியவராகிறார்.

வானம்பாடி இயக்கத் தாருக்கும் அன்றைய நவீனத்துவ எழுத்தாளர்கள் சிலருக்கும் பழைய பஞ்சாயத்து ஒன்று உண்டு. நவீனத்துவ எழுத்தாளர் அணி ஒன்று அன்று தஸ்த யேவ்ஸ்கியின் மொத்த குத்தகையாளர்களாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டது.

வானம்பாடி அணியினருக்கு தஸ்தயேவ்ஸ்கி தொட்ட பிரச்சினைகளைப் பற்றி எதுவும் தெரியாது என்பது போல அவர்கள் பேசி னார்கள், எழுதினார்கள். ஆனால் தஸ்தயேவ்ஸ்கியின் மொத்த குத்தகைதாரர்களாகத் தம்மை அறிவித்துக் கொண்ட அந்த தமிழ் நவீனத்துவவாதிகள் தஸ்தயேவ்ஸ்கியை மொழிபெயர்க்கவுமில்லை, வெளியிடவுமில்லை.

மாறாக வானம்பாடிக் கவிஞரான புவியரசு அவர்களே தஸ்தயேவ்ஸ்கியை மொழிபெயர்த்துள்ளார், அந்நூலை என்சிபிஎச் நிறுவனமே வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் பழைய பஞ்சாயத்து ஒன்று இன்று தீர்ப்புக்கு வந்திருக்கிறது. தீர்ப்பு வானம்பாடிகளுக்கும் என்சிபிஎச்சுக்கும் சாதகமாக அமைந்துள்ளது. வரலாறு இவர்களை நியாயப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவும் நவீன யுகமும்

ஐரோப்பிய நவீனயுகம் ரஷ்யாவுக்குள் நுழைந்த போது அது குறித்த அறவியல் பிரச்சினைகளைப் பேசிப் பார்த்தவர் தஸ்தயேவ்ஸ்கி (1821-1880). விஞ்ஞானம், பகுத்தறிவு, நாத்திகம், தனிமனித சுதந்திரம், தொழில் வளர்ச்சி, சோசலிசம் என்ற பல விஷயங்கள் அன்று ரஷ்யாவுக்குள் நுழைந்தன.

அவர் எதையும் அடியோடு மறுத்துவிடவில்லை. வேண்டாம் என்று சொல்லிவிட வில்லை. பழைய ரஷ்யாவின் நிலப்பிரபுத்துவத்தால் அதன் பழமையால் விளைந்த அழிவுகள் அவருக்குத் தெரியும். எனவே பழைய ரஷ்யா மறையவேண்டும் என்பதை அவர் அறிவார். ஆனால் புதிய வரவுகளின் அறவியல் ரீதியான தகுதிகள் மெய்ப்பிக்கப்பட வேண்டும்.

அவரைப் பொறுத்தமட்டில் பழைய ரஷ்யா அழிவதும், புதிய யுகம் தோன்றுவதும் வெறும் பொருளாதாரப் பிரச்சினையல்ல, அரசியல் பிரச்சினையல்ல, அது ஒரு பிரும்மாண்டமான அறவியல் பிரச்சினை. அது ஓர் உளவியல் பிரச்சினை. அது ஒரு பண்பாட்டுப் பிரச்சினை.

அறவியல் என்ற வாளால் ரஷ்ய சமூகத்தின் அந்தரங்கத்தை, நெஞ்சை, உள்ளத்தை பல கூறுகளாகக் கீறிப்போட்டவர் தஸ்தயேவ்ஸ்கி. தஸ்தவேய்ஸ்கி தொட்ட அறப்பிரச்சினைகள் யாவை? அவருடைய மூன்று மிகப்பெரிய நாவல்களுமே கொலைகளைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ளன என் பதை கவனித்திருக்கிறீர்களா? கொலைகள் உயிரழிப்பு எனும் ஆகப்பெரிய அறவியல் பிரச்சினையை இந் நாவல்களில் குறித்து நிற்கின்றன.

குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கோல்னிக்கவ் வட்டிக்குப் பணம் கொடுத்து வாழும் ஒரு ஒட்டுண்ணிக் கிழவியைக் கொலை செய்கிறான். கொலையிலிருந்து தான் அந்த நாவல் ஆரம்பிக்கிறது. அசடன் (முட்டாள்) நாவலில் நஸ்தாசியா ஃபிலிப்போவ்னாவின் கொலையை நோக்கி அந்த முழு நாவலும் ஓட்டமாக ஓடுகிறது. கரமசோவ் சகோதரர்கள் நாவலில் “தந்தைக் கொலை” மையமான இடம் வகிக்கிறது.

கொலை செய்யலாமா? ஒட்டுண்ணியாக வாழுகிறார்கள் என்பதற்காக அவர் களைக் கொலை செய்துவிடலாமா? வன்முறையாக நவீன யுகத்தை உருவாக்கலாமா? துப்பாக்கி முனைகளால் கிச்சுக் கிச்சு மூட்டலாமா? இது தஸ்தயேவ்ஸ்கியின் பிரச்சினை.

நவீன காலம் மிகவும் வன்முறையானது. அந்த வன்முறையைப் பகிரங்கமாகப் பேசிப்பார்க்க வேண்டும். தஸ்தயெவ்ஸ்கி அதனைப் பேசிப் பார்க்கிறார்.

நஸ்தாசியா ஃபிலிப்போவ்னாவின் கொலை ரஷ்ய ஆன்மாவின் கொலை. அழகான அற்புதமான ரஷ்ய ஆன்மா நிலப்பிரபுத்துவத்தாலும் பண உறவுகளாலும் அழித்து நாசமாக்கப்பட்டதைச் சொல்லும் கதை ‘அசடன்’ என்ற நாவல்.

கரமசோவ் சகோதரர்களில் கொடூரமான ரஷ்யா கொலை செய்யப்படுகிறது. தந்தை என்ற படிமம் ஜார் மன்னனின் படிமம். அவரது பிள்ளைகளாலேயே அவர் கொலை செய்யப்படுகிறார். யார் கொலை செய்தது? நஸ்தாசியா ஃபிலிப்போவ்னாவிற்கு நேர் எதிரான படிமம் பியோதர் கரமசோவ் என்னும் தந்தையின் பாத்திரம்.

பியோதர் கரமசோவை அறிமுகப்படுத்தும் போது அவர் ரஷ்ய “தேசிய பொது அடையாளத்தின் வகைமாதிரி” என்று ஓரிடத்தில் தஸ்தயேவ்ஸ்கி குறிப்பிடுவார். ரஷ்ய தேசியப் பொது அடையாள வகைமாதிரியாக ஓர் அழுகிப்போன நில உடமைக் கதாபாத்திரத்தை அவர் சுட்டுவது கவனிக்கப்படவேண்டும்.

இருப்பினும் அவரைக் கொலை செய்வது நியாயமா? என்ற கேள்வியை எழுப்ப தஸ்தயேவ்ஸ்கி தயங்கவில்லை. நஸ்தாசியா கொலை செய்யப்பட்டதைப் படித்து நாமெல்லாம் அதிர்ந்து போயிருக்கும் போது தந்தையின் கொலை நியாயம்தானா? என்ற கேள்வியோடு அடுத்த நாவலை எழுதினார் தஸ்தயேவ்ஸ்கி. ஏனெனில் இந்தத் தந்தை கொடூரமானவர்.

விவசாயிகளைக் கசக்கிப் பிழிபவர். தெருவில் கேட்பாரற்று அலையும் ஒரு பைத்தியக்கார பிச்சைக்காரியைக் கெடுத்து அழிப்பவர். சொந்த மகனின் காதலியையே பெண்டாள விரும்புபவர். நஸ்தாசியா பிலிப்போவ்னாவை அவர் ரஷ்ய தேசியப் பொது அடையாளம் என்று சொல்லவில்லை. அருட் தந்தை ஜொசிமாவை அவர் அப்படிச் சொல்லவில்லை. அல்யோஷாவைச் சொல்லவில்லை.

பிரின்ஸ் மீஷ்கினைச் சொல்லவில்லை. இது நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பழைய ரஷ்யாவின் அழிவை தஸ்தயேவ்ஸ்கி மிக அதிகமாக அனுபவித்திருக்கிறார். இன்னொரு வகையில் சொல்லுவதானால், மீஷ்கின், அல்யோஷா, அருட்தந்தை ஜொசிமா ஆகியோர் ஒருபுறமும், நஸ்தாசியா பிலிப்போவ்னா, கத்தரீனா, லிசவெத்தா, குருஷென்கா, திமித்ரி கரமசோவ் ஆகியோர் இன்னொரு புறமும், ரகோஷின், ரஸ்கோல்னிக்கவ், இவான் ஆகியோர் பிறிதொரு புறமுமாக தஸ்தயேவ்ஸ்கியின் முக்கியக் கதாபாத்திரங்களெல்லாமே அன்றைய ரஷ்யாவின் தேசிய பொது அடையாளங்கள்தாம். அவை அன்றைய ரஷ்யாவின் ஆழமான முரண்பாடுகளை மிக அழுத்தமாகச் சுமந்து நிற்கின்றன.

“இது ஒரு ரஷ்ய விவாதம்” என்ற ஒரு குறிப்பு நாவலில் இடம் பெறுகிறது. இந்த மூன்று வகை மாதிரிகளை, அவற்றுக்கு இடை யிலான மோதல்களை தஸ்தயேவ்ஸ்கி மிக உண்மையாகச் சித்திரித்துள்ளார். இந்த முறையியலைப் பயன்படுத்தியதால் தான் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் வெற்றி பெறுகின்றன.

  

தஸ்தயேவ்ஸ்கியின் முதன்மையான பிரச்சினை வன்முறை குறித்தது. இரண்டுவிதமான வன்முறைகளைப் பற்றி தஸ்தயேவ்ஸ்கி பேசுகிறார். ரஷ்ய ஆன்மாவைக் கொலை செய்கிறார்கள்.

மேற்கிலிருந்து இங்கு படை யெடுத்து வரும் நவீனயுகத்தின் வன்முறை ரஷ்ய சமூகத்தின் கிராமத்தை கொலை செய்கிறது. பண உறவுகள் ரஷ்ய சமூகத்தின் அழகை அழிக்கின்றன. இன்னொரு புறம் நவீன யுகத்தின் புரட்சிகரக் கருத்துக்களால் ஆகர்ஷிக்கப்பட்ட இளைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஓர் எதிர் வன்முறையால் பழைய அமைப்பை அழிக்க விரும்புகிறார்கள்.

இரண்டு வன்முறைகளையும் பற்றி தஸ்தயேவ்ஸ்கி வருத்தப் படுகிறார். வன்முறைகள், எதிர்வன்முறைகள் என்ற மோதல்தான் தஸ்தயேவ்ஸ்கியின் எல்லா நாவல்களுக்கு மான முதற்பொருள்.

கொலைகளுக்கு முன்னும் பின்னும் தஸ்தயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் அந்தக் கொலை களுக்கான நியாய அநியாயங்கள் பற்றிப் பேசுகின்றன. ஏராளமாகப் பேசுகின்றன. விவாதிக்கின்றன.

உணர்ச்சிகளின் இயங்கியல் கரமசோவ் சகோதரர்கள் என்ற தலைப்பு ஒரு குடும்பத்திலுள்ள அப்பா, மூன்று மகன்கள், இன்னொரு மகன் என்ற ஐந்து கரமசோவ்களைப் பற்றிப் பேசுகிறது. “கர” என்ற ரஷ்ய சொல் கருப்பு என்று பொருள்படக் கூடிய “சேர்ன” என்ற சொல்லின் திருகிய உச்சரிப்பு. “சேர (நாடு)” என்ற சொல் “கேரள (நாடு)” என ஒலிப் பதைப் போல. “கரமசோவ்” என்ற பெயரை நாவலில் ஒரு கதாபாத்திரம் வாய்தவறி “செர்னமாசவ்” என்று உச்சரிக்கும். கரமசோவ் என்றால் கருப்பு உணர்ச்சிக் காரர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் அது.

கரமசோவ் குடும்பத்தில் எல்லோருமே கருப்பானவர்கள். நிறத்தில் கருப்பானவர்கள் அல்ல. உணர்ச்சிகளில் கருப்பானவர்கள். தீவிர உணர்ச்சி கொண்டவர்கள்.

உணர்ச்சி வசப்பட்ட மக்கள், நல்லதிலும் உணர்ச்சி வசப்படுவார்கள், கெட்டதிலும் உணர்ச்சிவசப்படு வார்கள். அது தான் ரஷ்யா. அது எப்போதுமே எல்லா வற்றையும் மிகத் தீவிரமான உணர்ச்சிகளோடு கையாளும். Passionate தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் உணர்ச்சிகளின் மோதலைச் சித்திரிக்கும் மிகப்பெரிய நாடகங்கள். வெறும் உணர்ச்சிகளோடு மட்டும் உலவும் சில கதாபாத்திரங்கள் அவரது நாவல்களில் உண்டு. திமித்ரி கரமசோவ், ரகோஷின்.

உடைபட்ட, ஆழமாகக் காயம்பட்ட உணர்ச்சிகளோடு உலவும் சில கதாபாத்திரங்கள் அவர் நாவல்களில் உண்டு. ரஸ்கோல்னிக்கவ், நஸ்தாசியா பிலிப்போவ்னா. அறிவாளிகள் கூட அவர் நாவல்களில் உணர்ச்சிப்பிழம்பாகத்தான் தோற்றமளிப் பார்கள். ஆன்மீகம் கூட அவரது நாவல்களில் உணர்ச்சி வசப்பட்டு எப்போதும் பரபரப்புடன் அலையும். இளவரசன் மீஷ்கின், அல்யோஷா கரமசோவ் உணர்ச்சி களைக் கதாபாத்திரங்களாக்கி தஸ்தயேவ்ஸ்கி மோத விட்டுவிடுவார். அவர் அந்த மோதலில் தலையிடுவது கிடையாது.

அவர் அந்த மோதலை சிறிதேனும் ஒழுங்கு படுத்துவது கிடையாது. தஸ்தயேவ்ஸ்கி எடுத்து விளையாடுவது உணர்ச்சிகளின் இயங்கியல். Dialectics of Passions, Dialectics of Emotions.

நமக்கு அறிவின் இயங்கியல் தெரியும். மார்க்சியர்களுக்கு சமூக இயங்கியல் தெரியும். உணர்ச்சிகளின் இயங்கியல் எப்படிச் செயல்படும்? அதன் பண்புகள் யாவை? தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் அதுவே பதிவாகியுள்ளது.

எல்லோரும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். என்ன உணர்ச்சி? அது காதலாக இருக்கலாம், காமமாக இருக்கலாம், பக்தியாக இருக்கலாம், துறவாகக் கூட இருக்கலாம். அங்கு அறிவு செயல்படுவது கிடையாது. நல்லது கெட்டது என்ற அறமும் கூட மறந்து போகும்.

சமூக மதிப்புகளும் பலவீனப்பட்டுவிடும். உணர்ச்சிகள் மட்டுமே தலைவிரித்தாடும். உணர்ச்சிகள்தாம் மனித இருத்தலின் அடிப்படை என்பதை தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் வலியுறுத்துகின்றன. தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் எதிர்பாராத நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்து விடும். பேசக்கூடாததைக் கதாபாத்திரங்கள் பேசி விடுவார்கள். சொல்லக் கூடாததைக் கதாபாத்திரங்கள் சொல்லிவிடுவார்கள்.

நடக்கக் கூடாத சம்பவங்கள் எதிர்பாராத விதத்தில் சடசடவென நடந்து முடிந்து விடும். அறிவு, சமூக மரியாதை போன்றவற்றை மனதில் கொண்டு பார்த்தால் இப்படியெல்லாம் நடக்கக் கூடாது. ஆனால் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் இது போன்ற “எதிர்பாராத” சம்பவங்கள் தாம் குவிந்து கிடக்கும். அறிவு, அறம், சமூக உணர்வு ஆகியவற்றின் கட்டுப்பாட்டை இழந்து நனவிலி மனத்தின் சுதந்திரப் பாய்ச்சல்கள் நிகழும். அவைதாம் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களை நகர்த்திச் செல்லும்.

கதாபாத்திரங்கள் ஏராளமாகப் பேசும், பேசிக்கொண்டே இருக்கும். மொழி என்பது அறிவார்ந்ததா? மொழி, பேச்சு, உடல்மொழி ஆகியவை நனவிலியைச் சுமந்து நிற்கும். அவை வழக்கமான நனவு மனத்தை விட ஒரு அங்குலமாவது அதிக உயரத்தில் ஏறிநின்று பேசிக்கொள்ளும். அமுக்கப் படாத, “பண்படுத்தப்படாத” நனவிலியின் வீச்சை தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் சந்திக்கமுடியும். நனவிலியின் சுதந்திரவீச்சில் தன்னிலை உடைந்து போகும். ஒருமித்த, ஒற்றைப்படையான தன்னிலையின் செயல்பாட்டை அவரது நாவல்களில் காணமுடியாது.

சிதைவு, பிறழ்வு, பிளவு, கட்டுப்பாடற்ற உடைவுகள் மத்தியதரவர்க்கத்தின் குணாம்சங்களாக மட்டும் அல்லாமல் ஏழ்மையால் நசுக்குண்ட மக்களின், அவ மதிக்கப்பட்ட மக்களின், அந்நியப்பட்ட மக்களின் நிலைப்பாடாக தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் பதிவாகியிருக்கும்.

தஸ்தயேவ்ஸ்கியின் முதல் நாவல் ரஷ்ய மொழியில் “தாழ்த்தப்பட்டவர்களும் அவமதிக்கப் பட்டவர்களும்” என்பது. ஆங்கிலத்தில் இது தவறாக Insulted and Humiliated என்று மொழிபெயர்ப்பாகி விட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல் காணாமல் போய்விட்டது.

ஆயின் பின்னால் வந்த தஸ்தயேவ்ஸ்கியின் எல்லா நாவல்களிலும் தாழ்த்தப் பட்டவர்களும் அவமதிக்கப்பட்டவர்களும் என்ற தலைப்பு உள்ளீடாகத் தொடர்ந்து வரும். தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் அவமதிக்கப்பட்டவர்களின் உணர்ச்சிகளுக்கு தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் ஒரு பிரத்தியேக இடம் உண்டு.

அந்நியமாதலை மத்திய தரவர்க்கத்தின் பிரச்சினையாக மட்டுமே சித்திரித்த எழுத்தாளர்கள் உண்டு. தமிழில் நவீனத்துவ எழுத் தாளர்கள் பலர் அப்படித்தான் அந்நியமாதலை அறிமுகப் படுத்தினார்கள். இதனாலேயே அவர்கள் பலத்த விமர்சனங்களுக்கும் உள்ளானார்கள். மார்க்ஸ் அந்நிய மாதல் குறித்து எழுதியபோது அவர் உழைக்கும் மக்களின் அந்நியமாதலைப் பற்றி எழுதினார். தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்துக்களில் மத்தியதர வர்க்கத்தின் அந்நியமாதல் இல்லாமலில்லை.

இருப்பினும் சாதாரண மனிதர்களின் அந்நியமாதலை அவரால் அதிகம் சித்திரிக்க முடிந்திருக்கிறது. அவர்கள் மிக விரைவில் உணர்ச்சிப் பிளவு களில் சிக்கிக் கொள்கின்றனர். இப்படி உணர்ச்சி மயமாக அலையும் அத்தனைபேரும் அன்பானவர்கள். அவர்கள் அன்பை இழந்தவர்கள். அன்புக்கு ஏங்குபவர்கள். அன்பு ஒரு சமூகத் தகவாக இங்குக் காட்சி யளிக்கிறது. அக்கறையற்ற சமூகத்திடமிருந்து அவர்கள் அன்பைப் பெறமுடியாமல் போனவர்கள்.

எல்லோருக்கும் இன்னும் கொஞ்சம் அன்பு வேண்டும். அது மட்டும் கிடைத்து விட்டால் அவர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள். எல்லோரும் தேவதைகளைப்போல ஆகி விடுவார்கள் என்று தஸ்தயேவ்ஸ்கி கருதினார். அதனால் தான் அவர் அடிக்கடி கிறித்தவத்தின் மொழியில் பேசினார்.

 தஸ்தயேவ்ஸ்கியின் சமயம் வழக்கமாக அறியப்பட்ட நிறுவனச் சமயம் அல்ல. எந்தச் சமயத்தின் திருச்சபையையும் அவர் அங்கீகரித்ததாகத் தெரிய வில்லை. மாறாக அவர் தாழ்த்தப்பட்ட மக்களின், அவமதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் துயரங்களி லிருந்து உருவான, அந்த மக்களின் ஏக்கங்களிலிருந்து உருவான சமயம் ஒன்றைக் குறித்து நிற்கிறார்.

தஸ்தயேவ்ஸ்கியின் கிறிஸ்தவம் கத்தோலிக்கக் கிறிஸ்தவம் அல்ல. புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவமும் அல்ல. அது அரசியல் அதிகாரக் கலப்படமற்ற பழைய கிறிஸ்தவம். Orthodox Christianity கீழைக் கிறிஸ்தவம். புராதனக் கிறிஸ்தவம் கிழக்கு ஐரோப்பாவின் கிறிஸ்தவம், அசடன் நாவலில் தஸ்தயேவ்ஸ்கி கீழைக் கிறிஸ்தவம் பற்றி விரிவாகப் பேசுவார்.

அன்பால் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை அரசியலால் தீர்க்க முடியுமா? என்பது தஸ்தயேவ்ஸ்கியின் கேள்வி. கிறிஸ்துவுக்குப் பிறகு மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் கீழைக் கிறிஸ்தவம் கத்தோலிக்கக் கிறிஸ்தவமாகக் கிளை பிரிந்து சென்றது. என்ன வேறுபாடு? கத்தோலிக்கக் கிறிஸ்தவம் ஆண்ட வனையும் அரசியல் அதிகாரத்தையும் ஒருங்கே அங்கீகரித்துவிட்டது என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. ரோமப் பேரரசின் ஆதிக்கத்தோடு கிறித்தவம் சமரசம் செய்துகொண்டது என்று குற்றம் சாட்டுகிறார். அன்றே நியாயத்தின் பெயரால் வன்முறை தொடங்கிவிட்டது என்கிறார்.

அப்பமா, சுதந்திரமா? என்பது அன்று கிறித்தவத்தின் முன் நின்ற ஒரு கேள்வி என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. மனிதர்கள் சுதந்திரத்தை அதிகாரத்திற்குப் பணயமாக வைத்து அப்பத்தைச் சம்பாதித்துக் கொண் டார்கள் என்று தஸ்தயேவ்ஸ்கி குற்றம் சாட்டுகிறார்.

மாபெரும் விசாரணை அதிகாரி என்ற இவானின் கவிதை கிறித்தவ திருச்சபையின் வரலாற்றை மிகத்தீவிரமாக விமர்சிக்கிறது. மக்களுக்கு ஏசு தேவைப்படவில்லை, அன்றே அவர்கள் அவரைச் சிலுவையில் ஏற்றினார் களல்லவா? அவர்களுக்கு அற்புதங்களும், அதிகாரங் களும், அப்பமும் தான் தேவைப்பட்டிருக்கின்றன. மாபெரும் விசாரணை அதிகாரி ஏசுவை மீண்டும் சிலுவையில் ஏற்றுகிறார். 

தஸ்தயேவ்ஸ்கி புராதனக் கிறித்தவத்தைத் தனது உரைகல்லாகக் கொள்கிறார். அது அன்பையும் கூட்டு வாழ்க்கையையும் போதித்தது. நீதியைப் போதித்தது.

இயேசு அந்த லட்சியங்களின் பிரத்தியட்ச வடிவம். அந்த லட்சியம் இன்னும் வாழத்தான் செய்கிறது. வாழ்வின் மோசடிகளில் நசுக்குண்டு கதறும் சாதாரண மனிதர்களில், குழந்தைகளில், இளவரசன் மீஷ்கினில், அருட்தந்தை ஜொசிமாவில், அல்யோஷாவில், சவுக்கடி பட்டுச் சித்திரவதையை அனுபவிக்கும் நிக்ரசோவின் குதிரையில் அந்தப் புராதனக் கிறித்தவம் இன்னும் வாழ்கிறது. அது அறமயமானது.

அல்யோஷாவை ஓரிடத்தில் தஸ்தயேவ்ஸ்கி மனிதநேயன் என்றே அறிமுகப்படுத்துவார். ஆனால் மனிதர்கள் எப்படிப் பட்டவர்கள்? காமப் பூச்சிகள் என்பார். ஆசாபாசங்களில் வாழ்பவர்கள், அதிகாரவேட்கை கொண்டவர்கள். அன்பு, அறமயமான லட்சியங்களை அவர்கள் அழித் தொழித்துவிடுவார்கள். ஏசுவை அவர்கள் கொன்றார்கள் அல்லவா?

இருத்தலியம் ஐரோப்பாவில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இருநூறு ஆண்டுகட்கு எல்லா அழிவுகளையும் ஏற்படுத்திய பிறகுதான் அவற்றைத் தத்துவப் பிரச்சினைகளாக்கியது.

தஸ்தயேவ்ஸ்கி அது ரஷ்யாவுக்குள் நுழையத் தொடங்கியபோதே அவற்றைத் தத்துவப் பிரச்சினைக்குள்ளாக்கினார். முதலாளியம் ஒரு முந்நூறு ஆண்டுகள் ஆட்டம்போட்ட பிறகே நவீனத்துவ வாதிகள் அதனைப் பிரச்சினைக்குள்ளாக்கினார்கள்.

தஸ்தயேவ்ஸ்கி அது ரஷ்யாவுக்குள் நுழையத் தொடங்கிய போதே அது குறித்துத் தீர்க்கமாகக் கேள்விகளை எழுப்பினார். தஸ்தயேவ்ஸ்கி ஒருவேளை ஒரு Premodernist ஆக இருக்கலாம்.

ஆனால் இருத்தலியம், நவீனத்துவம் என்ற இலக்கியப் போக்கு, பின்னை நவீனத்துவம், பின்னைக் காலனியம் போன்றவற்றை அவர் முன்னுணர்ந்திருக்கிறார். நான் அவரைப் பின்னைக் காலனியம் வரை இழுத்து வருகிறேன். நவீன ஐரோப்பிய சமூக மதிப்புகள் ரஷ்யாவை ஆட்படுத்த முனைந்த நாட்களில் தஸ்தயேவ்ஸ்கி அந்த நிகழ்வின் நியாய அநியாயங்களைப் பேசிப்பார்த்தார்.

தஸ்தயேவ்ஸ்கியும் மார்க்சும்

தமிழர்களுக்கு இந்த நாவல் ஏன் தேவை? கவிஞர் புவியரசு அவர்கள் இந்நூலை மொழிபெயர்க்க ஏன் தேர்ந்தெடுத்தார்? என்ற கேள்வியையும் இங்கு இணைத்துப் பார்க்க முடியும். இந்த இரண்டு கேள்வி களும் நமக்கு மிக முக்கியமானவை.

மேலே சொல்லப் பட்ட அதே மாதிரியான விவாதங்களை இந்தியச் சூழல்களில் நடத்துவதற்காகத்தான். இந்தியா என்ற ஒரு பழைய நாட்டிலும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், நாத்திகம், பகுத்தறிவு, தனிமனித சுதந்திரம், சோசலிசம், புரட்சி போன்ற பல புதிய கருத்துக்கள் பரவுகின்றன. அவற்றின் அறவியல்ரீதியான தகுதிகளைப் பேசிப் பார்க்காமல் அவை இங்கு வெற்றிபெற முடியாது. நாம் அவற்றைப் பேசிப்பார்த்திருக்கிறோமா? அதுதான் நம்முன் உள்ள கேள்வி. அறவியல்ரீதியான அழுத்தமான கேள்விகளை நாம் கேட்டிருக்கிறோமா? இந்திய கலாச் சாரத்தை மேற்கின் வன்முறை, முதலாளியத்தின் வன்முறை முரட்டுத்தனமாகத் தாக்குகிறது.

இன்னொரு புறம் இந்தச் சமூகத்திலேயே சொந்தமாக ஏராளமாக வன்முறை உள்ளது. இந்தியச் சாதிச் சமூகத்தில் ஏராள மாக வன்முறை உள்ளது என்றார் அம்பேத்கர்.

சாதி அமைப்பில் அறம் இல்லை என்று வாதிட்டார். சாதி அமைப்புக்கு ஆதாரமாக உள்ள இந்து மதத்திற்கு அறவியல் தகுதி இல்லை என்றார். அம்பேத்கரின் இந்தக் கேள்வியை இந்திய சமூகம் எதிர்கொண்டதா? இல்லை, மௌனம் சாதிக்கிறது. தவிர்த்துச் செல்லுகிறது. அம்பேத்கர், பெரியார் போன்றோர் சுயராஜ்யம் என்ற கோஷத்திற்கு அறவியல் தகுதி இல்லை என்றார்கள்.

உள்நாட்டிலேயே ஈராயிரம் ஆண்டுகளாக ஒரு கொடூர மான உள்நாட்டுக் காலனிய அமைப்பை, சாதி அமைப்பை வைத்துக் கொண்டு, வெள்ளைக்காரன் ஆட்சிபுரிவது தான் காலனியாதிக்கம் என்று கூறுவது பம்மாத்து என்று அவர்கள் கூறினார்கள்.

ஈராயிரம் வருட உள்நாட்டுக் காலனியாதிக்கத்தை ஆதரித்து நின்ற சைவம், வைணவம் போன்ற மதங்களில் வேதாந்தம், சித்தாந்தம் போன்ற தத்துவங்களில் அறம் இல்லை என்பது ஓர் அடிப் படையான விமர்சனம். இதற்கு தமிழ்ச் சமூகம், இந்திய சமூகம் பதில் கூறியுள்ளதா?

நமது எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தஸ்தயேவ்ஸ்கி செய்துள்ளது போல ஓர் அப்பட்டமான, வெளிப்படையான விவாதங்களை நடத்தியுள்ளார்களா? இந்திய சமூகத்தின் இன்றைய பிரச்சினைகளை அவர்கள் சரியாக அடையாளப்படுத்தி அவற்றை விவாதத்திற்குள்ளாக்கியுள்ளார்களா? கவிஞர் புவியரசு அவர்கள் இந்த நூலை மொழிபெயர்த்திருப் பதன் மூலம் அப்படி ஓர் விவாதத்தின் அவசரத்தை உணர்த்தியிருக்கிறார்.

ஆன்மா, அகங்காரம், ஆணவம், அதிகாரம் போன்ற இந்தியத் தத்துவங்களின் கருத்தாக்கங் களை கவிஞர் அவர்கள் இந்நூலில் மிக நுட்பமாகப் பதியவிட்டிருக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பில் அது எப்படி சாத்தியமாகும்? சாத்தியமாகாதுதான். ஆனால் கவிஞருக்கு அது சாத்தியமாகியுள்ளது.

அவரது முன்னுரை இது குறித்த ஓர் ஒப்புதல் வாக்குமூலம். இந்த நூலை, இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் போது என்னால் இந்தியத் தத்துவங்களின் சில விவாதங்களைத் தவிர்க்க முடியவில்லை.

கவிஞர் மிக விழிப்புடனான ஒரு தன்னுணர்வுடன் இம்மொழிபெயர்ப்பின் போது இந்தியத் தத்துவங்களின் ஊடாகப் பயணம் செய்திருக் கிறார் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். “ஆத்மா என்ற ஒன்று சாசுவதமாக இல்லாவிட்டால், எல்லாம் அனுமதிக்கப்பட்டு விடும்” என்ற ஒரு பிரச்சினை இந்த நாவலில் பேசப்பட்டுள்ளது.

“எல்லாம் அனுமதிக்கப்பட்டுவிடும்” என்றால் என்ன பொருள்? நான் நல்லவனாக இருப்பதற்கு என்ன தேவை இருக்கிறது? நான் ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்? என்று இன்னொரு விதமாகவும் அக்கேள்வி பேசப் படுகிறது. தஸ்தயேவ்ஸ்கியும் கவிஞர் புவியரசு அவர் களும் ஒன்றுபடும் இடம் இது. ஒரு ரஷ்ய விவாதம் இந்திய விவாதமாக மாறும் தருணம் இது.

puviarasu 350இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டதன் ரகசியம் இந்தக் கேள்விகளில்தான் உள்ளது. எல்லாம் அனுமதிக்கப்பட்டுவிடும் எனில் கொலை செய்யலாம், கொள்ளை அடிக்கலாம், ஒரு பெண்ணை நாலைந்து பேர் சேர்ந்து பாலியல் வன் முறைக்கு உட்படுத்தலாம், தருமபுரியில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இரண்டு இளம் உயிர்களைக் கொலை செய்யலாம், எல்லாம் அனுமதிக்கப்பட்டு விடுகிறது.

எனவே அறம் சார்ந்த அடிப்படையில் ஆத்மா என்ற ஒன்று சாசுவதமாக வேண்டும், கடவுள் என்ற ஒருவர் இல்லையென்றால், அவரைக் கண்டு பிடிக்க வேண்டும். (ஆன்மா, அனான்மா, ஆணவம் என்ற விவாதம்)

ரஷ்யாவை விட இந்திய சமூகம் மிக ஏராளமாக வன்முறைக்கு இடமளிக்கும் சமூகம் என்றே எனக்குத் தோன்றுகிறது. சாதியின் வன்முறை, பகவத் கீதை பேசும் வன்முறை, பௌத்தத்தைத் தோற்கடித்த வன்முறை இந்திய சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது.

சாதியில் இத்தனை நுட்பமான வன்முறை இருக்கிறதென்றால், இத்தனை தத்துவார்த்தமான வன்முறை இருக்கிற தென்றால் சாதி ஒழிப்பும் வன்முறையானதாகத்தான் இருக்கும். பகவத் கீதையில் வன்முறைக்கு ஆதாரமாக ஒரு தருக்கவியல், ஓர் இறையியல் நிற்கிறதென்றால், அந்த இறையியலே வன்முறையாகத்தான் எதிர் கொள்ளப்படும். ஆக ரஷ்யாவிற்கு ஒரு புறம் இடி.

இந்திய சமூகத்திற்கு இரண்டு பக்கமும் இடி. இங்கே ஐரோப்பாவின் வன்முறை ஒருபுறம் இடிக்கிறது; சாதி அமைப்பின் வன்முறை இன்னொருபுறம் இடிக்கிறது. இந்த இடிகளை, இந்த வன்முறை வடிவங்களை இந்தியன், தமிழன் பேசிப்பார்க்க வேண்டாமா? பேசிப்பார்க்காமல் நாம் முன்னே செல்லமுடியாது என்று தஸ்தயேவ்ஸ்கி சொல்லுவார்.

நமக்கு மார்க்சியமும் வேண்டும். தஸ்தயேவ்ஸ்கியும் வேண்டும். வர்க்கங்களின் இயங்கியலும் வேண்டும். உணர்ச்சிகளின் இயங்கியலும் வேண்டும். சமூகப் புரட்சியும் வேண்டும், சமூகப் புரட்சியின் அறவியலும் வேண்டும்.

சமூகப் புரட்சியின் அறவியலைப் பேசாமல் இந்தச் சமூகம் நம்மை முன்னேறிச் செல்ல விடாது. மார்க்சியம் இல்லாமல் தஸ்தயேவ்ஸ்கியை மட்டும் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் அவ்வளவாக வெற்றி பெறுவார்கள் என்று என்னால் சொல்லமுடியவில்லை.

கரமசோவ் சகோதரர்கள் தமிழில்

கவிஞர் புவியரசு வெளியீடு

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிலிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்அம்பத்தூர்,

சென்னை - 600 098

விலைரூ. 1500/(இரு தொகுதிகளுக்கும் சேர்த்து)

Pin It