பழந்தமிழ்ச் செவ்வியல் இலக்கியப் படைப்புகளில் பண்டைத் தமிழர் வாழ்க்கைக்கும் இயற்கைக்குமான உறவைப் பற்றிய புரிதல்களும் கண்டுபிடிப்புகளும் பதிவாகியுள்ளன. இனக்குழுச் சமூக வாழ்க்கை நிலவிய சங்க காலத்தில் தாய் வழிச் சமூகத்தின் எச்சங்கள் வழக்கினில் இருந்தன. திணைக்குடிகளாக வாழ்ந்த தமிழர் வாழ்க்கையில் இனக்குழுத் தலைவர், சீறூர்த் தலைவர், குறுநில மன்னர் போன்றவர்களின் ஆளுகையில் மருத நிலவெளியில் புதிதாக அரசும் அரசதிகாரமும் தோன்றின. இயற்கை வழிபாடு, நடுகல் வழிபாடு போன்றவற்றை முன்னிறுத்திய தமிழர் வாழ்க்கை வேலன் வெறியாடல், அணங்கு, சூரர் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளித்தது.

பூமி, ஐந்து பூதங்களால் உருவானது என்று சங்கப் பனுவல்களில் அழுத்தமாகப் பதிவாகியுள்ள கருத்து, தமிழர் மெய்யியலின் தோற்றுவாயாகும். அன்றையத் தமிழ்ப் பண்பாட்டில் இருந்து உருவான அறம், தமிழர் நடைமுறை வாழ்க்கையின் அடிப்படையான செல்நெறியாகி இன்றுவரை பேசுபொருளாகியுள்ளது. கடவுளர்களையும் சடங்குகளையும் வேள்விகளையும் நான்கு வருணப் பாகுபாடுகளையும் வலியுறுத்துகின்ற வேதங்களில் இருந்து பண்டைத் தமிழர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது. அதியற்புத ஆற்றல்கள், வேதப் பனுவல்கள், கடவுளர்களின் கட்டுக்கதைகள், பார்ப்பனர்கள், வேள்விகள், மறுமையுலகு போன்ற வைதிகம் சார்ந்த விவரணைகள், சங்கப் பாடல் வரிகளில் கதைத் துணுக்குகளாகச் சில இடங்களில் இடம் பெற்றுள்ளன. சங்க காலத்தின் இறுதியில் வெளியான திருமுருகாற்றுப் படை, பரிபாடல், கலித்தொகை போன்ற பாடல்களில் வேத மரபு, அவைதிக மரபு சார்ந்த கருத்தியல்கள் கூடுதலாகக் காணப்படுகின்றன.kannagi paintingsகி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே வேதங்களை முன்னிறுத்திய வைதிகமும் அவைதிக மதங்களான சமணமும் பௌத்தமும் தமிழர் வாழ்க்கையில் ஊடுருவினாலும் பெரிய அளவில் தாக்கமேற்படுத்திடாத சமூகச் சூழல் நிலவியது. சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பெற்ற அற நூல்கள், மதங்களின் போதனைகளை மக்களிடம் பரப்பியதன் பின்புலத்தில் அரசியல் பொதிந்துள்ளது. சங்க காலச் சமுதாயத்தின் வீழ்ச்சியானது தமிழரின் அரசியல், பொருளியல், பண்பாட்டு வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. களப்பிரர் ஆட்சிக் காலத்திலும் பல்லவர் ஆட்சிக் காலத்திலும் வைதிகம், ஜைனம், பௌத்தம் ஆகிய மூன்று மதங்களின் கொள்கைகள், தமிழ் நிலப்பரப்பில் ஆழமாகக் காலூன்றின. இதனால் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் சமயங்களின் மோதல்களும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் அவற்றின் விளைவான செயல்பாடுகளும் பரவலாயின.

சமயங்களின் மோதல்களையும் சமயத் துறவிகளையும் அன்றையத் தமிழ்ச் சமூகம் எப்படி எதிர்கொண்டது என்பதை அறிந்திட இலக்கியப் படைப்புகளும் கல்வெட்டுகளும் சான்றுகளாக விளங்குகின்றன. அவை எழுதப்பட்டதன் நோக்கங்களையும் அரசியல் சார்புகளையும் கருத்தில்கொண்டு காப்பியக் காலகட்டத்தில் சமயங்களின் செயல்பாடுகளை அறிந்திட வேண்டியுள்ளது.

சங்க காலச் சமூக வீழ்ச்சிக்குப் பின்னர் வைணவமும் சைவமும் போட்டியிட்டுக்கொண்டு முன்னேறி, பௌத்தத்தையும், சமணத்தையும் புறந்தள்ளிவிட்டு வைதிக சமயத்துடன் இணைந்தன. அன்றைய காலகட்டத்தில் வணிகர்களின் பொருளியல் எழுச்சி, நிலவுடைமையினருக்கும் மன்னர்களான ஆளும் வர்க்கத்தினருக்கும் சவாலாக விளங்கியது. வணிக வர்க்கத்தினருடன் நெருக்கமாக இருந்த சமண சமயத்தினரை வீழ்த்திட முயன்ற பார்ப்பனர்கள், வைதிக சமயத்தை முன்னிறுத்தி, சமூக அடுக்கில் உயர்ந்த நிலையை அடைந்திட நாட்டை ஆளும் மன்னர்களுடன் சமரசம் செய்துகொண்டனர். வருணாசிரமம் என்பது வைதிக சமயத்துடன் இணைந்தது என்ற நெறியை உருவாக்கியது, ரிக் வேதம். அதனைப் பின்னர் மநு தருமமும் பகவத் கீதையும் செறிவாக்கி, வைதிக சமயத்துடன் பிரிக்க முடியாத அம்சமாக்கின.

இனக்குழு வாழ்க்கை சிதைவடைந்திருந்த தமிழ் நிலவெளியில் வைதிக சமயம், தன்னிருப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேள்விகள், வேதம் ஓதுதல் வழியாகத் தொடர்ந்து முயன்றது. அதிகாரத்தில் இருந்து அரசாண்ட மன்னர்கள், விரிந்துகொண்டிருக்கும் நிலப்பரப்பினைத் தக்கவைத்துக்கொள்ளவும் பரந்துபட்ட மக்களை அதிகாரத்திற்குக் கட்டுப்படுகின்ற உடல்களாக மாற்றிடவும் நிறுவனமயமான சமயங்கள் தேவைப்பட்டன. விண்ணுலகு பற்றிய புனைவும் பிறப்பு, பால் அடிப்படையில் உடல்களுக்கு இடையில் கற்பிக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகளும் என்று திட்டமிட்ட வகையில் உருவாக்கப்பட்ட சமயக் கொள்கைகளைப் பண்பாட்டுரீதியில் பரவலாக்கிட எழுதப்பெற்ற காப்பியங்கள், காலப்போக்கில் சமய மோதல்களுக்கு வித்திட்டன என்பதுதான் உண்மை.

துறவை வலியுறுத்திய பௌத்தமும் சமணமும் ஆட்சியதிகார வர்க்கத்தினருடன் சமரசம் செய்துகொண்டு, காப்பியங்களின் மூலம் சமயக் கொள்கைகளைப் பரப்பிட முயன்றன. அதே காலகட்டத்தில் வைதிக சமயம், வேள்வி உள்ளிட்ட சநாதனச் செயல்பாடுகள்மூலம் தமிழ்நாட்டு மன்னர்களிடம் செல்வாக்குடன் விளங்கியது. சங்க காலத்தில் சமயங்களுக்கு இடையிலான மோதல்கள், கருத்தியல்ரீதியில் சிறிய அளவில் நடைபெற்றன. காப்பியங்கள் செல்வாக்குடன் விளங்கிய காப்பிய காலத்தில் மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்ததன் விளைவு, ஐம்பெருங் காப்பியங்களிலும் ஐஞ்சிறு காப்பியங்களிலும் வெளிப்பட்டது. மதங்களின் மேலாதிக்க அரசியலின் விளைவாக நிலவிய மோதல் சூழல்களைக் காப்பியங்களின் கதையாடல்கள் பதிவாக்கியுள்ளன.

தமிழ்க் காப்பியங்கள் பெரிதும் சமயம் சார்ந்து படைக்கப்பட்டுள்ளன. சமண சமயக் காப்பியங்கள்: சீவக சிந்தாமணி, சூளாமணி, நீலகேசி, உதயணகுமார காவியம், யசோதர காவியம், வளையாபதி, பெருங்கதை. பௌத்த சமயக் காப்பியங்கள்: மணிமேகலை, குண்டலகேசி. தமிழில் எழுதப்பட்ட முதல் காப்பியமான சிலப்பதிகாரம் சமயச் சார்பற்ற பிரதி என்ற கருத்து, ஏற்புடையதன்று. வைதிக சமயத்துடன் இணக்கமாகவும் அதேவேளையில் சமணம், பௌத்தம், நாட்டார் சமயம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தந்து இளங்கோவடிகள் படைத்திட்ட சிலப்பதிகாரப் பிரதிக்குள் பல்வேறு சமயங்களின் குரல்கள் முரண்பட்டு ஒலிக்கின்றன.

தமிழ்க் காப்பியங்களில் முதன்மையான சிலப்பதிகாரம் சமயம், அரசியல், சமுதாயம் ஆகிய தளங்களில் அன்றைய காலகட்டத்தில் நிலவிய வாழ்க்கைமுறையைச் சித்திரிக்கிறது. வணிக வர்க்கத்தினரின் எழுச்சிக் காப்பியமான சிலம்பு, சமண சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தாலும் வைதிக சமயத்தின் கருத்தியலுக்குத் தனித்த இடம் தந்துள்ளது. கோசிகமாணி, மாங்காட்டு மறையவன், மாடலன் மறையவன், பராசரன், தக்கிணன், தேவந்தி, மாலதி போன்ற பார்ப்பனர் கதைமாந்தர்கள் வைதிக சமயத்தின் பிரதிநிதிகளாகக் காப்பியக் கதையாடல் முழுக்க இடம் பெற்றுள்ளனர். காடுகாண் காதையில் திருமுக்குடையின் கீழ் இருக்கிற அருகனை வணங்கிய சமணத் துறவியான கவுந்தியடிகள் சாரணர் கூறிய நன்மொழிகளைப் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே வருகின்ற மாங்காட்டு மறையவன், கதையாடலுக்குத் தொடர்பில்லாமல், அவர்கள் செல்ல வேண்டிய வழிகளைத் தொண்ணூறு வரிகளில் விரிவாகச் சொல்கின்றான். மேலும் அவன் புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்று புராணிக மரபுக் கதைகளைச் சொல்வதுடன் சம்ஸ்கிருத மொழி வேதம் கூறுகின்ற மந்திரத்தையும் கூறுக என்று அறிவுறுத்துகிறான்.

வைதிக வைணவத்தின் பெருமையைப் பேசிய மறையவனின் பேச்சுக்கு மறுப்பாகக் கவுந்தியடிகள், சமண சமயக் கருத்தைப் பின்வருமாறு முன்வைகிறார். அவை: இந்திரனின் வியாகரணம், அருகனின் பரமாகங்களில் ஏற்கெனவே உள்ளது, முற்பிறப்பில் செய்தவற்றுக்கு இப்பிறப்பே சாட்சியம், சமணம் பின்பற்றும் வாய்மையையும் கொல்லாமையும் வைதிகம் பின்பற்றுவது இல்லை, உங்கள் தெய்வம் காமுறு தெய்வம். வைதிகமும் சமணமும் எதிரெதிரானவை என்ற கருத்தைக் கவுந்தியடிகளின் பேச்சுமூலம் முன்வைத்து இளங்கோவடிகள் விவரித்துள்ள சொல்லாடல்கள், அன்றைய சமய அரசியல் மோதல் அல்லது பூசலின் வெளிப்பாடுகள். கவுந்தியடிகள் தன்னுடைய மறுப்புரையில் அருகனின் சிறப்பு, வழிபடுவதால் கிடைக்கிற பயன், சமணத் துறவின் மேன்மை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றார். இறுதியில் அவர்,

காமமுறு தெய்வங் கண்டடி பணிய

 நீபோ யாங்களும் நீள்நெறிப் படர்குவதும்

என்று காம வெகுளி மயக்கங்களுடைய உன்னுடைய தெய்வம் என்று வைதிகக் கடவுளரைக் கடுமையாக விமர்சிக்கிறார்.

கோவலன் கொல்லப்படுதல், கண்ணகியின் அவல நிலைக்குப் பின்னர் அவ்விருவருடனும் நெருக்கமானவர்களின் வாழ்க்கை நிலை குலைந்துபோகிறது. சமணத் துறவியான கவுந்தியடிகள், “ என்னோடு இவர் வினை உருத்தோ” என்று உண்ணாநோன்பிருந்து உயிரைத் துறக்கிறார். கோவலனின் தந்தை மாசாத்துவான், வணிகத்தில் ஈட்டிய செல்வத்தைப் பிறருக்குப் பகிர்ந்தளித்துவிட்டு, துறவியாகி, புத்தருடைய இந்திர விகாரத்தில் சேர்கின்றார். கண்ணகியின் தந்தை மாநாய்கன் ஆசிவக மதத்தில் சேர்கின்றார். மாதவி தன்னுடடைய மகளான மணிமேகலையின் குழலைக் களைந்து அவளைப் புத்த மதத்தில் பிக்குணியாக்குகிறாள். காப்பியக் கதையாடலில் ஏன் இந்த மத மாற்றங்கள்? என்ற கேள்வி தோன்றுகின்றது. அதிலும் புத்த மதத்திற்கு முன்னுரிமை தந்து காப்பிய மாந்தர்கள் மாறிய மத மாற்றங்கள் வாயிலாக இளங்கோவடிகள் சொல்ல முன்வருவது, ஆய்விற்குரியது.

காப்பியங்களில் இடம் பெற்றுள்ள சமய முரண்பாடுகளில் சமணம்X பௌத்தம், சமணம்X வைதிகம், பௌத்தம் X வைதிகம் ஆகிய மூன்று நிலைப்பாடுகள் முக்கியமானவை. சமயம் என்பது தனிமனிதனைச் செம்மைப்படுத்தும் கருத்தியல் என்ற சிந்தனைக்கு மாற்றாக அரசியலும் அதிகாரமும் கைகோத்த நிலையில் சமூக ஒடுக்குமுறைக் கருவியாக மாறியதன் வெளிப்பாடுதான் காப்பியங்களில் இடம் பெற்றுள்ள அரசியல் சொல்லாடல்கள். சமூகத்திற்கும் சமயத்திற்குமான உறவு, சமயத்திற்கும் தனிமனிதர்களுக்குமான உறவு, சமய நிறுவனங்களின் அதிகாரம், சமயங்களின் பரப்பு நிலை ஆகியவற்றை நுணுகி ஆராய்ந்திடும்போது நிறுவனமயமாக்கப்பட்ட சமயங்களின் மேலாதிக்கத்தை அறிந்திட முடியும்.

பௌத்த சமயக் கொள்கைகளை எடுத்துரைக்கின்ற மணிமேகலைக் காப்பியம் துறவு மேற்கொண்ட மணிமேகலை என்ற பெண்ணைக் கதைமாந்தராக்கி விரிந்துள்ளது. பௌத்தத் துறவியான அறவணடிகளின் ஆலோசனையினால் வஞ்சிக்குச் சென்ற மணிமேகலை, பல்வேறு சமயத்தினருடன் சமயக் கொள்கைகளை விவாதித்து, அவை சரியான வழிகள் அல்ல என்று அறிந்து, பௌத்த நெறியில் துறவு மேற்கொள்வதாக மணிமேகலை காப்பியம் நிறைவடைகின்றது.

மணிமேகலை காப்பியத்தின் தொடக்கத்திலே முதல் காதையில் இந்திர விழா நடத்த வேண்டியதன் தேவையையும், நடத்தாமல் இருந்தால் ஏற்படும் பின்விளைவுகளையும் பற்றி விவாதிக்க பல்வேறு சமயத்தினரும் கூடினர். பின்னர் இந்திர விழா நடக்கவிருக்கிற தகவலை முரசறைவோன் அறிவிக்கிறபோது,

பற்றா மாக்கள் தம்முட னாயினும்

செற்றமுங் கலாமும் செய்யா தகலுமின்

என்று சொல்கின்றான். பூம்புகாரில் நடைபெறும் இந்திர விழாவின்போது, சமயவாதிகளுக்கு இடையே ஏற்படும் பூசல்களைத் தீர்க்கவும், அமைதியைப் பாதுகாக்கவும் மன்னர் பிறப்பித்த கட்டளையாக மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் குறிப்பிட்டிருக்கும் தகவல், அன்றாட வாழ்க்கையில் மதங்கள் பெற்றிருந்த செல்வாக்கினைக் குறிக்கின்றது. தத்தம் சமயம்தான் உயர்ந்தது என்று வாதிடுகின்ற சமயவாதிகள் கோபம், வன்முறையைத் தவிர்த்து, சகிப்புத்தன்மையுடன் விலகிச் செல்ல வேண்டும் என்ற கருத்து, அன்றைய காலகட்டத்தில் நிலவிய மதங்களின் ஆதிக்கத்தையும் மோதல்களையும் காட்டுகின்றது.

மணிமேகலையின் முந்தைய பிறப்பினை அறிவித்த மணிமேகலா தெய்வம், “இனிப் பின்னாளில் சமயவாதிகளின் கொள்கைகளை எல்லாம் அறியவிருக்கிறாய். அப்பொழுது மாற்று உருவமேற்றுச் செல்ல வேண்டும். இல்லையேல், உன்னை இளையவள் என்று எண்ணி விடுவர். எனவே, மாற்று உருவெடுப்பதற்கும் ஆகாயவழியில் செல்வதற்கும் இரு மந்திரங்கள் சொல்கின்றேன்” என்று உரைத்தது. எதிர்காலத்தில் மணிமேகலை பிற சமயவாதிகளுடன் சொல்லாடல் நிகழ்த்தவிருக்கிறாள் என்பது காப்பியத்தின் தொடக்கத்திலே வெளிப்படுகிறது.

சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் வஞ்சி நகருக்குச் சென்ற மணிமேகலை அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசிவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி போன்ற பத்து சமயவாதிகளுடன் வாதிடுகின்றாள். மணிமேகலை ஒவ்வொரு சமயத்தினருடன் வாதிடும்போது வன்மை - மென்மையை எடுத்து உரைக்கிறாள். அவள், பல்வேறு சமயவாதிகளிடம் அவரவர் சார்ந்த சமயங்களைப் பற்றிக் கேட்டாலும் இறுதியில் பௌத்தம்தான் நல்லறம் என்று குறிப்பிடுகின்றாள்.

பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் இடையில் சமயரீதியில் இருந்த மோதல், மணிமேகலை காப்பியத்தில் வெளிப்பட்டுள்ளது. மலர் கொய்து வருவதற்காகச் சுதமதியும் மணிமேகலையும் உவவனம் செல்லும் வழியில் தெருவில் நடைபெறுகின்ற சம்பவங்கள், கதையாடலில் முக்கியமானவை. அருகன் கோட்டத்தில் வாழும் சமணத் துறவி தெருவில் நடந்து செல்லும்போது குடிகாரன் அவரை வம்பிழுப்பதாகக் காட்சிப்படுத்தியுள்ள சாத்தனார், சித்திரிக்கிற சமணத் துறவியின் தோற்றம் பின்வருமாறு: ‘நாணத்தையும் ஆடையையும் நீத்தவன், கண்ணால் காணவியலாத சிற்றுயிர்க்கும் இரக்கம் காட்டி வருந்துபவன், உண்ணா நோன்பிருப்பவன், யானையைப் போல் புழுதி படிந்தவன்.’ சமணத் துறவியைப் பற்றிய பகடியும் கண்டனமும் சாத்தனாரின் விவரிப்பில் பொதிந்துள்ளன. குடிகாரன், அழுக்கு நிறைந்த உன் உடலில் புகுந்த உயிர் காற்றுப் புகாத அறையில் துன்புறுவோர்போல் வருந்துகிறது. அவ்வருத்தம் போக்க இம்மைக்கும் மறுமைக்குமான இறுதி இன்பத்தை அளிக்கும் தன்மையை உனக்கு அளிக்கிறேன். தென்னையில் விளைந்த பூங்கள்ளில் கொலை இல்லையே” என்று போதையில் கேலியாகப் பேசுகிறான். சாத்தனார், காவிரிப்பூம்பட்டினத்தில் பௌத்தத்திற்கு எதிராகச் சமணம் இருந்தது என்கிற நடப்பியலைச் சுட்டுவதுடன் சமணக் கொள்கையைக் கேலிக்குள்ளாக்கி, எதிர்நிலைக் கருத்தை வாசிப்பில் உருவாக்குகிறார்.

பசுவின் கொம்பினால் குத்தி, குடல் கிழிக்கப்பட்ட சுதமதியின் தந்தையான கௌசிகன் என்ற பார்ப்பனரைச் சமண சமய மடத்திற்குள் நுழையவிடாமல் சமணர்கள் தடுத்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த சங்க தருமன் என்ற புத்த பிட்சு, தன் கையில் வைத்திருந்த பிச்சைப் பாத்திரத்தைப் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கினார் என்ற கதையைச் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார். பார்ப்பனர்களான வைதிகர்களுக்கும் சமணர்களுக்கும் இடையில் நிலவிய பகைமையையும், சமணர்களைவிட பௌத்தவாதிகளே கருணை மிக்கவர்கள் என்பதையும் சாத்தனார் இக்கிளைக்கதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

குண்டலகேசி காப்பியத்தில் இன்று 19 பாடல்கள்தான் கிடைக்கின்றன. குண்டலகேசி காப்பியத்தின் கதைத் தலைமை மாந்தரான குண்டலகேசி, பௌத்த சமயத்தை மேன்மைப்படுத்திடும் வகையில் பிற சமயத்தினருடன் செய்த சமய வாதங்களும் பிற மதத்தினரைப் பழித்துரைப்பதும் கதையாடலில் இடம் பெற்றுள்ளன. பொய்மையாகத் தவமிருக்கின்ற சைவ, வைணவ, வேத, சமணவாதிகளை இடித்துரைக்கின்ற பாடல், குறிப்பிடத்தக்கது.

போர்த்தலுடை நீக்குதல் பொடித்துகண் மெய்பூசல்

கூர்த்தபனி யாற்றுதல் குளித்தழலு ணிற்றல்

சார்த்தரிடு பிச்சையர் சடைத்தலைய ராதல்

வார்த்தையிவை செய்தவ மடிந்தொழுக லென்றான்.

காவியாடை, துவராடை முதலியவற்றால் உடம்பு முழுதும் போர்த்தல் சமயங்களின் பெயரால் நிகழ்கின்றது. காவியாடை போர்த்துபவர் வேதவாதியர். துவராடை போர்த்துபவர் பௌத்தர். பொடியும் துகளும் என உம்மை விரித்துப் பொடி பூகவோர் சைவசமயத்தினர்; துகள் பூசுவோர் வைணவ சமயத்தினர். பனிக்காலத்தில் நீராடுதல், தீயில் நிற்றல், சடைமுடி தரித்து அலைதல், காவியாடை உடுத்துதல், ஆடையில்லாமல் இருத்தல், சாம்பல் போன்ற பொடிகளை உடலில் பூசுதல் போன்றவை தவ ஒழுக்கம் கிடையாது என்ற நாதகுத்தனாரின் குரல், வைதிக, சமண, சைவ, வைணவ சமயத்தினரை இடித்துரைக்கிறது.

குண்டலகேசி காப்பியம், நீலகேசி காப்பியம்போலப் பிற சமயத்தினருடன் வாதிடுமாறு அமைந்த தருக்க நூல் என்பதை நீலகேசியின் பேச்சு மூலம் அறியமுடிகிறது. ‘” நான் இரண்டு பௌத்த சமயத்தினரை வாதில் வென்றேன். ஒருத்தி குண்டலகேசி, மற்றொருவன் அருக்கச்சந்திரன்’ என்று நீலகேசி சொல்வதைக் கேட்ட மொக்கலன்,” நீ பொய் சொல்லாதே! குண்டலகேசி பேராசிரியை. அவளை வெல்வது அரிது. உங்கள் சமயத் தலைவரான நாதகுப்தரையே வென்றவள்” என்று பதில் உரைத்தான். குண்டலகேசி, வைதிக சமயத்தாருடனும் சமண சமயத்தாருடனும் சமயச் சொற்போர் நிகழ்த்தியதை அறிய முடிகிறது. பௌத்தக் கொள்கையின் சிறப்பினைப் பிரசாரம் செய்யும் நோக்கில் எழுதப்பட்டுள்ள குண்டலகேசி காப்பியத் தலைவியும் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

சமணக் காப்பியங்களான சீவக சிந்தாமணி, சூளாமணி, பெருங்கதை, யசோதர காவியம் போன்றவை துறவைச் சிறப்பித்தும் போற்றியும் எழுதப்பட்டுள்ளன. பௌத்தக் காப்பியமான குண்டலகேசிபோல நீலகேசி காப்பியம் சமய போதல்களுக்கு முக்கியத்துவம் தந்து படைக்கப்பட்டுள்ளது. நீலகேசி கதையின் தொடக்கம், சமயங்களுக்கு இடையிலான மோதலுடன் தொடங்கியுள்ளது. பாலாலையம் என்ற சுடுகாட்டில் பிடாரி என்ற பெண் தெய்வத்தின் கோவில் உள்ளது. கோவிலுக்கு அருகில் முனிச்சந்திரபட்டகாரன் என்ற துறவி, தனியாகத் துறவு மேற்கொண்டிருந்தார். பிடாரி கடவுளுக்குக் குழந்தைப் பேறு வேண்டி நேர்ந்திருந்த ஊர்க்காரர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதனால் பலியிடுவதற்கு ஆடுகளுடன் வந்திருந்தனர். அப்பொழுது “நீங்கள் கடவுளுக்காக உயிரைப் பலியிடுவது தீமை. எனவே உருவம் செய்து ஆட்டுக்குப் பதிலாகப் பலியிடுங்கள்” என்று சொல்லிய துறவி, நல்வினை பெறுவதற்குரிய வழிகளையும் கூறினார். அவருடைய பேச்சைக் கேட்டவர்கள் ஆட்டைப் பலியிடாமல் உருவத்தைச் செய்து பலியிட்டு வழிபட்டனர். இதனால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது. வைதிக சமயத்தினரான பார்ப்பனர்கள் வேள்வியின்போது பசு உள்ளிட்ட உயிரினங்களைப் பலியிடுவது வழக்கம். அத்தகைய வேள்வி நெறிக்கு எதிரானவை சமண, பௌத்த சமயங்கள். நீலகேசி காப்பியத்தின் தொடக்க நிகழ்வு வைதிகநெறியிலான உயிர்ப்பலியை மறுப்பதாக உள்ளது. துறவியின் பேச்சினால் வெறுப்படைந்த பேய்கள் ஒன்று சேர்ந்து அங்கிருந்து அவரைத் துரத்திட முயன்றது இயலாத காரணத்தினால் பழையனூர் நீலி என்ற பேயை உதவிக்கு அழைத்தன. நீலி, பல்வேறு வழிகளில் துறவியை அச்சமடையச் செய்திட முயன்று தோற்றது. துறவியான முனிச்சந்திரன், நீலிப்பேய்க்கு நல்லறம் புகட்டி, அருகனின் சிறப்பினை விளக்கி, சமண சமயத்தில் சேர்ந்திட வழி காட்டினார். நீலியாகிய பேய், சமண சமயக் கொள்கைகளை ஏற்றுப் பிற மதவாதிகளைச் சமணராக்கியதுதான் நீலகேசிக் காப்பியக் கதையின் சுருக்கம்.

காப்பியத்தின் முதன்மைக் கதைமாந்தராக நீலி என்ற பெண் பேய் படைக்கப்பட்டிருப்பது, நீலகேசியைப் பிற காப்பியங்களில் இருந்து வேறுபடுத்துகிறது. பொதுவாக, கடவுளர்களின் கட்டுக் கதைகளை முன்வைத்துக் கதைசொல்லல் முறைக்கு மாறாகப் பெண் பேயை முன்னிறுத்திக் கதைத்திருப்பது, காப்பியத்திற்குச் சமயரீதியில் புதிய பரிமாணம் அளிக்கிறது. காப்பிய ஆசிரியர், சமய மோதல்களைச் சித்திரிப்பதுடன் சமண சமயம்தான் எல்லாவற்றிலும் முதன்மையானது என்ற பேச்சை உருவாக்கிட அமானுட ஆற்றலான பேயைப் பெண்ணாக்கியுள்ளார் என்று தோன்றுகின்றது.

அருகனை முழுமுதற் கடவுளாகவும் சமண சமயக் கொள்கையை வாழ்க்கை நெறியாகவும் ஏற்றுக்கொண்ட நீலகேசி, உலகிலுள்ள பொய்யான சமயங்களில் வஞ்சம் பேசி, மக்களைக் கெடுக்கின்ற பௌத்த சமயம்தான் முதலில் வென்றழிக்க வேண்டிய சமயம் என்று கருதி, சொற்போர் நடத்திட துணிந்தாள். புத்தர் தோற்றுவித்த பௌத்த சமயத்தை வென்று, அதனைப் பொய்யென்று நிரூபிப்பது அறமாகும் என்று நீலகேசி சூளுரைத்தாள்.

நீலகேசி, முதலில் பௌத்த சமயவாதியான குண்டலகேசியுடன் வாதிட்டு வென்று, பின்னர் அருக்கச்சந்திரன், மொக்கலன், புத்தர் ஆகிய மூன்று பௌத்தர்களுடனும் சொற்போர் நிகழ்த்தினாள். வாதத்தின் முடிவில் தோல்வியடைந்த மொக்கலனும், அருக்கச்சந்திரனும் சமண சமயக் கொள்கையை ஏற்றுக்கொண்டு சமணர்களாக மாறினர்.

உஞ்சை நகரில் பௌத்தத் துறவியான அருக்கச்சந்திரன், தன்னுடைய மாணவர்களுக்கு விநய பிடகத்திலுள்ள பௌத்த சமய நெறிகளைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கும்போது குறுக்கிடுகின்ற நீலகேசியின் பேச்சு, பௌத்த சமயக் கொள்கையைக் கடுமையாக விமர்சிக்கிறது. “ உமது விநய பிடகம், பௌத்தத் துறவி காம வயப்பட்டபோது தன்னுடைய துவராடையைத் துறந்து உலக மாந்தர் அணிகின்ற ஆடையை உடுத்தி, பிறர் அறியாதவாறு கணிகையரோடு புணரலாம் என்று குறிப்பிடுவது அறமாகுமா? என்ற நீலகேசியின் கூற்று, பௌத்த சமயவாதிகளின் இருப்பினைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

பௌத்த சமயக் கொள்கையை மறுத்துப் பேசுகின்ற நீலகேசி முன்வைக்கின்ற வாதம் பின்வருமாறு: ”துறவியாகிய நுமக்கோ எட்டுச் சீவர ஆடைகள் வேண்டும்; அன்றியும் கிளிக்கத்தி, கத்திரிகை, சுண்ணாம்புச் செப்பு, வெற்றிலைப் பெட்டி, பாக்குப்பை, பல்லுத் துடைக்கும் பாளை, தலைமழிக்கக் கத்தி, தீட்டுக்கல், குடை, செருப்பு, மண்டை (பிச்சைப் பாத்திரம்), கெண்டி, சுழற்றி, தோல், தண்ணீர் கொப்பு இன்னோரன்ன பலவும் வேண்டும். பின்னர் எவற்றை நீவீர் துறந்தீர். கூறுமின், பேதையீர் நீர்.”பௌத்தர்களின் துறவற நெறியின் போதாமையை விமர்சிக்கின்ற நீலகேசியின் மொழி, சமண சமயக் கொள்கையைப் பரப்பிடும் நோக்கமுடையது.

சாங்கியவாதியுடனும் வைசேடிகவாதியுடனும் சமயக் கொள்கைகளை விமர்சிக்கின்றரீதியில் வாதிடுகின்ற நீலகேசி, வேதவாதத்தில், பூதிகனோடு கடும் விவாதம் மேற்கொண்டு வேதத்தையும், வேதம் ஓதுகின்ற பார்ப்பனர்களையும் கடுமையாகப் பழித்துரைக்கின்றாள். சமணர்களின் நேரடியான பகைவர்களாக விளங்குகின்றவர்கள் வேதவாதிகள்தான். வேத வேள்வி முறைகளுக்கும் கொலை நெறிக்கும் எதிராகத் தோன்றிய வேத மறுப்புச் சமயத்தவரான சமணர்கள், வேத சமயத்தை எதிர்ப்பதுடன் கேள்விக்குள்ளாக்கினர். வேதவாதியான பூதிகன் வேதத்தையும் வேள்வி முறைகளையும் சிறப்பித்துக் கூறுகின்றான். அதற்கு மறுப்புரையாக அமைவது நீலகேசியின் பழிப்புரை: ”உங்களுடைய வேதம் தீய ஒழுக்கங்களை ஊக்குவிக்கின்றது. கொலை முதலியவற்றைச் செய்யத் தூண்டுகின்றது. உங்களுடைய வேதம் உயர்ந்தவர்களால் படைக்கப்பட்டது என்றும் ஆதியந்தம் இல்லாதது என்றும் கூறுகின்றீர். ஊர் நடுவே கிடக்கும் மலத்தை யாருடையது என்று அறியமுடியாவிட்டாாலும் அது பிணியற்றவனுடையதா பிணியுடையவனதா என்று அறிவு முறைப்படி கண்டறிய முடியும். ஆனால் அது உயர்ந்தவனது என்றோ கீழ்ப்பிறப்பாளனது என்றோ கூற முடியாது. அதுபோலவே உங்கள் வேதமும்.” நீலகேசி வாதத்தின்போது முன்வைத்த பின்வரும் பாடல் வரிகள், தமிழரின் சமய வரலாற்றில் முக்கிய இடம் பெறுகின்றன.

யாரது செய்தவ ரறியிலிங்

 குரையெனி லங்கொருவ

னூரது நடுவணொ ருறையுளில்

 மலம்பெய்திட் டொளித்தொழியிற்

 பேரினு முருவினும் பெறலில

 னாதலின் றாக்குறித்துத்

தேரினு மினியது செய்தவ

 ரில்லெனச் செப்புவவே.

வேதம் செயற்கையே என்றால் அதனை இயற்றியர்தாம் யாவர்? நீ அறிந்தால் இங்குக் கூறுக எனில், ஒருவன் ஓர் ஊரின் நடுவிலுள்ள ஒரு வீட்டின் முன்றிலிலே இரவில், மலங்கழித்துவிட்டு யாருமறியாதபடி மறைந்து போனபோது, ஆராய்ந்து பார்க்கையில் அது செய்தவன் பெயராலும் உருவத்தாலும் இன்னான் என்று அறியப்படுதல் இல்லை. ஆதலால் அந்த மலங்கழித்தவர் யாருமில்லை, அது சுயம்பு என்று சொல்லுவார் உள்ளனரா? உன் வேதமும் அதனைப் போன்றதுதான் என்ற நீலகேசியின் கூற்று, வைதிக சமயத்தின் மூலமான வேதம் பற்றிய புனைவைக் கட்டுடைக்கிறது. உலகிலேயே உயர்ந்தவை நான்கு வேதங்கள் என்று வைதிகவாதிகள், இன்றளவும் கொண்டாடுகின்ற வேதத்தை மலத்துடன் ஒப்பிட்டுச் சொல்லிய வரிகளை இன்றைய வைதிக சநாதன மத அடிப்படைவாதிகள் முன்வைக்கின்ற வாதத்துக்கு மறுப்பாகச் சொல்ல முடியும்.

வைதிக சநாதனத்திற்கு எதிராக நீலகேசி முன்வைத்துப் பேசிய பின்வரும் பேச்சுகள் கவனத்திற்குரியன.

“வேதவாதிகள், கொலையைத் தீய செயல் என்பர்; ஆனால், வேள்வியில் உயிர்ப் பலியிடுவர். காமத்தை ஒழித்திட வேண்டும் என்பர்; ஆனால், காம இன்பத்திலேயே வீடுபேறு சாத்தியம் என்பர். பிற சமய நெறி தீமையுடையது என்பர்; பின்னர் அவையெல்லாம் வேதத்தில் இருந்து உதித்தவை என்பர். இது எப்படி இயலும்?”

"பிரமனின் ஒரே உடலில்தான் நால்வருணத் தாரும் தோன்றினர் என்று கூறுகின்றது வேதம். இதில் முகத்தில் பிறந்த பார்ப்பனர் மேலோர் என்றும் அவனது உறுப்பிலேயே தோன்றிய சூத்திரர் கீழோர் என்றும் கூறுவது முன்னுக்குப் பின் முரணாக அமைகின்றது.'' என்று ரிக் வேதம் கட்டமைத்துள்ள சநாதனத்தைச் சாடுகின்றாள், நீலகேசி. மேலும், நீங்கள் "தேவர்க்கு என்று உயிர்ப்பலி இடுகின்றீர். பிறர்க்காக நீங்கள் தீவினையாற்றுகின்றீர். உங்களுக்காகத் தேவர்கள் ஆற்றுவரோ? நண்பனுக்காக ஒருவன் அமுதம் உண்டான். பகைவனுக்காக ஒருவன் தானே நஞ்சுண்டான். எனினும், நஞ்சு உண்டவனே அதன் பயனை அடைவான். அதுபோல் நீங்கள் தேவர்களுக்கு என்று கொன்று தின்றால் அக்கொலைப் பாவம் உங்களையே சேரும். எனவே நீங்கள் வேதத்தைக் கூறிக் கொலை புரியாதீர்கள்.”

நீலகேசியின் வாதம், வைதிக சமயம் நிறுவனமயமாகி, அதிகாரத்துடன் இணைந்து செயல்படுகின்ற செயல்பாடுகளைப் பழித்துரைக்கிறது. நீலகேசி காப்பியம், இலக்கியப் பிரதி என்பதற்கு அப்பால், சமண சமயம் பற்றிய பேச்சுகளை உருவாக்கிப் பரப்பிட முயலும் சமய அரசியல் பிரதியாகியுள்ளது.

ஆசிவகத் துறவியான பூரணன், சாங்கிய ஆசிரியனான பராசரன், வைசேடிகச் சமய ஆசிரியனான உலோகசித்து, வேதவாதியான பூதிகன், பூதவாதியான பிசாசிகன் ஆகியோருடன் வாதிட்டு, வென்ற நீலகேசி, சமண சமயத்தின் மாண்பை எடுத்துரைப்பதுடன் எல்லோரையும் சமணர்களாக்குகிறாள். காப்பிய காலத்தில் நடைபெற்ற சமய மோதல்களைப் பற்றி விரிவாக அறிந்திட நீலகேசி காப்பியம் வகைமாதிரியாக விளங்குகிறது.

ஒவ்வொரு சமயத்தினரும் நிறுவனமய மாகியுள்ள தங்களுடைய சமயத்தினைப் பரப்பிட முயலும்போது, பிற சமயங்களைப் பழித்தும் வழக்கினிலுள்ள புராணக் கதைகளை மாற்றியும் திரித்தும் மறு கட்டமைப்புச் செய்கின்றனர். அந்தச் செயல்பாடு, சீவகசிந்தாமணி காப்பியக் கதையாடலிலும் பின்பற்றப்பட்டுள்ளது. காப்பியத் தலைவன் சீவகனின் தந்தை சச்சந்தன், தன் அரசி விசயை மீது கொண்ட காதலால் அரசின் நிர்வாகத்தைக் கட்டியங்காரனிடம் ஒப்படைக்க எண்ணினான். இதை அறிந்த அமைச்சன் நிமித்தகன், காம மிகுதியால் ஏற்படும் தீங்கினை எடுத்துரைக்கப் பல்வேறு வைதிக சமயக் கடவுளரையும் இழித்துரைக்கின்ற செய்திகள், காப்பியத்தின் முதல் இலம்பகத்திலேயே ஐந்து பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அவை: பிரம்மன், திலோத்தமையின் மீது கொண்ட காமத்தினால் முன்னிருந்த முகம் போய் நான்கு முகங்களைப் பெற்று இழிவுக்குள்ளானது. சைவக் கடவுளான சிவன், பெண்மீது கொண்ட காமத்தினால் கங்கையைத் தலைமீது கொண்டான், கோகுலத்தில் கண்ணன் நீராடிய பெண்களின் துயிலைக் கவர்ந்த செயல், பாஞ்சாலியை ஐவர் மணந்த இழிவான செயல். வைதிகம் சார்ந்த புராணங்கள் உயர்வாகச் சித்திரிக்கிற கடவுளர்களின் கதைகள் வைதிகவாதிகளால் போற்றப்படுகின்றன. ஆனால், துறவையும் புலனடக்கத்தையும் வலியுறுத்துகிற சமண சமயத்தினரின் கொள்கைகளும் நடைமுறையும் வேறுவகைப்படன. திருத்தக்கத் தேவர், வைதிக சமயத்தினரின் கடவுளர்களின் ஒழுக்கமற்ற காமச் செயல்பாடுகளைக் கண்டிப்பதன்மூலம் முன்வைத்துள்ள சொல்லாடல்களின் பின்புலத்தில் சமண சமயக் கொள்கை பொதிந்துள்ளது.

தனிமனிதரீயில் நம்பிக்கை சார்ந்து உருவான நாட்டார் தெய்வ வழிபாட்டில் இருந்து வேறுபட்டு, நிறுவனமயமான சமயங்கள் ஆகமங்கள், விதிகள், முழுமுதல் கடவுள், கொள்கைகள் என்று உருவாக்கப்பட்ட பின்னர், அரசின் ஆதரவுடன் சமயப் பிரச்சாரம் வலுப்பெற்றதைக் காப்பியங்கள்மூலம் அறிய முடிகிறது. சமயங்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல்களின் புன்புலத்தில் சமயப் பரப்புரை பொதிந்திருப்பதைக் காப்பியக் கதையாடல்கள் பதிவாக்கியுள்ளன.

ஒரு சமயவாதி இன்னொரு சமயவாதியுடன் சமயம் தொடர்பாகச் சொற்போர் நிகழ்த்தும்போது, வென்றவர் முன்னிலைப்படுத்திய சமயத்திற்குத் தோல்வியுற்றவர் மாறிட வேண்டும் என்பது விதியாக விளங்கியதை நீலகேசி, பெருங்கதை காப்பியங்களின் மூலம் அறிந்திட முடிகிறது. நீலகேசி காப்பியத்தில் அருக்கச்சந்திரன், மொக்கலன், உலகசித்து, பூரணன், பராசரன், பூதிகன், பிசாசகன் ஆகியோருடன் சமயச் சொற்போர் நிகழ்த்தி, நீலகேசி வென்ற பின்னர் அவர்கள் சமண சமயத்தைத் தழுவினர்.

பெருங்கதை காப்பியத்தில் உஞ்சை நகரில் பல்வேறு சமயவாதிகள் பங்கேற்கின்ற சமயவாதம் நிகழுமென்று முரசறைந்து அறிவிக்கப்பட்டது. அந்த வாதில் வைதிக சமயத்தினருடன் சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம் ஆகிய அறுவகைச் சமயத்தினரும் பங்கேற்றுச் சொற்போர் நிகழ்த்தினர். சாங்கிய சமயத்தைச் சார்ந்த பாலகன் என்ற காளசமணன் கலந்துகொண்டு வாதத்தில் மோதிய எல்லாச் சமயத்தினரையும் வெற்றிகொண்டான். சமய வாதத்தில் தோல்வியுற்ற சமயத்தினரும் மன்னரும் அரசவையினரும் சாங்கிய மதத்தில் சேர்ந்தனர். சமய வாதத்தின் முடிவில் மன்னரும் அவருடைய அரசவையினரும் சமயம் மாறினர் என்ற கதையாடல், சமய நிறுவனம் எப்பொழுதும் அரச அதிகாரத்தின் நிழலில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் என்ற சமய அரசியலின் வெளிப்பாடுதான்.

சீவக சிந்தாமணி காப்பியத்தில் சீவகன், சுதஞ்சணன் குறிப்பிட்ட வழியாகச் சென்று சித்திரக்கூடம் எனும் தவப்பள்ளியை அடைந்தான். அங்கே நான்கு திசைகளிலும் வேள்வித்தீயினை வளர்த்து வேள்வி செய்து, வீடுபேறு அடைதற்குத் தகுதி படைத்த, நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பார்ப்பனர்கள், காமச் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு மகிழ்ந்திருந்தனர். சீவகனை வரவேற்று உபசரிப்புகளைச் செய்த பார்ப்பனர்களின் வேண்டுதல்களுக்கு இணங்கச் சீவகன் பின்வருமாறு கூறினான்:

ஐயர் கூற்றும் அண்ணல் கூறுவான்

சையம் பூண்டு சமுத்திரமை நீந்துவா

னுய்யு மேற்றொடர்ப் பாட்டினிங் கியாவையு

மெய்தி னார்களு முய்யவென் றோதினான்        

உடலில் பாறாங்கல்லைக் கட்டிக்கொண்டு கடலை நீந்திக் கடப்பது எப்படிச் சாத்தியமில்லையோ, அதுபோல இல்லற இன்பங்களில் மூழ்கியிருப்பவர் பிறவிக்கடலைக் கடக்க முடியாது. உலகப் பற்றுடன் முக்தி அடைவது சாத்தியமில்லை என்ற சமணத் தத்துவம் இங்கு விளக்கப்பட்டுள்ளது.

வீடு வேண்டி விழுக்கடை நீட்டன்மெய்ம்

மூடு கூறையின் மூடுதல் வெண்டலை

யோடு கோட லுடுத்தலென் நின்னவை

பீடி லாப்பிற விக்குவித் தென்பவே

மனமாற்றம் இன்றி உடலை வருத்துகிற போலித் தவங்கள், பிறவித் துன்பத்திற்கு விதையாக அமைந்து மீண்டும் மீண்டும் பிறப்பதற்கே வழி வகுக்கும். உண்மையான அகத்துறவு இல்லாமல் வெறும் புறக்கோலங்களை (சடாமுடி, காவியுடை, கபாலம் ஏந்துதல்) மட்டும் மாற்றுவதால் முக்தி கிடைக்காது என்ற சமணக் கொள்கை, இப்பாடலில் இடம் பெற்றுள்ளது.

சீவகன், வைதிக சமயத்தின் தவறுகளை வைதிகவாதிகளிடம் எடுத்துரைத்ததுடன் பின்னர் வீடுபேற்றிற்கான ஒழுக்கநியதிகளை முன்வைத்தான். அப்பொழுது வைதிக சமயத்தினர், தங்களை நல்வழிப்படுத்துகின்ற சமயம் எதுவென்று அவனிடம் வேண்டினர்.

வேய்முதிர் வனத்தின் வென்றா

னுருவொடு விளங்க நோற்றுப்

போய்முதிர் துறக்கத் தின்பம்

பருகுவ புரிமி னென்றான்.

உலக இன்பங்கள் நிலையற்றவை என்பதை உணர்த்தி, சமண நெறிப்படி தவம் செய்து பேரின்பத்தை அடையுமாறு சமண சமயம், வலியுறுத்துகிறது. உடலின் நிலையாமையை உணர்ந்து, காலம் கடந்து போவதற்குள் ஐம்புலன்களையும் வென்ற அருகக் கடவுளின் திருவடியைப் பற்றி, முக்தி எனப்படும் பேரின்ப உலகை அடைய நல்வினைகளை மேற்கொள்ளுமாறு சீவகன் அறிவுறுத்துவதாகப் பொருள்கொள்ள இடமுள்ளது.

சீவகனின் வழிகாட்டுதலினால் வைதிகவாதிகள், காமக் கொண்டாட்டங்களை விடுத்து, சமண சமயத்தைத் தழுவியதுடன் சமணத்தின் மூன்று வழிகளை அறிந்து தெளிந்து ஐம்பொறிகளை அடக்கி அருகதேவனின் அடிகளை அடைந்து நல்வழிப்பட்டனர். மன்னரான சீவகன் வாழ்க்கையை முன்னிறுத்தி, திருத்தக்கத் தேவர் விவரித்துள்ள கதையாடலில் வேதங்களை அறிந்து வேள்விகளைச் செய்கின்ற பார்ப்பனர்களை அறிவுறுத்தல்மூலம் சமண சமயத்தைத் தழுவிடச் செய்த சம்பவம், ஒருவகையில் வைதிக சமயத்தைப் பழிப்பதுடன் சமணத்தை உயர்த்தியுள்ளது.

கி.பி.3 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழ் நிலவெளியில் அவைதிக சமயங்களான சமணமும் பௌத்தமும் ஒப்பீட்டளவில் வைதிக சமயத்தைவிட செல்வாக்குடன் விளங்கியதைக் காப்பியங்கள்மூலம் அறியமுடிகின்றது. தொல்லியல் ஆய்விலும் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ள வரலாற்றுப் பொருள்களும் தகவல்களும் காப்பியக் கதையாடல்களுடன் ஒத்திசைந்துள்ளன. சமணமும் பௌத்தமும் வைதிகமும் ஒன்றுடன் ஒன்று உரசலுடன் முரண்பட்டுச் சமயப் பூசல்களுடன் மோதிக்கொண்டதற்கான சொல்லாடல்களைப் புலவர்கள் காப்பியங்களில் பதிவாக்கியுள்ளனர். மணிமேகலை, குண்டலகேசி போன்ற பௌத்தக் காப்பியங்களில் பௌத்த சமயத்தை உயர்த்துவதுடன் பிற சமயத்தினரைச் சமய மாற்றம் செய்திட முனைந்த சமய மோதல்கள், இடம் பெற்றுள்ளன. நீலகேசி, சீவக சிந்தாமணி உள்ளிட்ட சமணக் காப்பியங்கள், சமணர்கள் பிற சமயத்தினருடன் சமயரீதியில் மோதிய மோதல்களின் உச்சக்கட்டத்தைச் சுட்டுகின்றன. பௌத்த சமயத்தினருடன் மோதல்கள் ஒருபுறம் எனில், சமண சமயத்திற்கு மாற்றிடத் தூண்டுவது இன்னொருபுறமும் என்ற நிலை, சமணர்களின் ஆதிக்கக் காலகட்டத்தில் நிலவியுள்ளது. வைதிகம், சைவம், வைணம் போன்ற சமயங்களை மெய்யியல் அடிப்படையில் விமர்சிப்பதுடன் கடவுளர் கதைகளையும் பகடிக்குள்ளாக்கி மோதல்களை உருவாக்கிட சமண சமயம் முயன்றதைக் காப்பியக் கதையாடல்கள் புலப்படுத்துகின்றன.

சங்கம் மருவிய காலத்தில் இனக்குழு வாழ்க்கைமுறை சிதலமாகியபோது, பண்டைத் தமிழர் வாழ்க்கையில் நாட்டார் தெய்வங்களும் இயற்கை வழிபாடும் புறக்கணிக்கப்பட்டுச் செல்வாக்கு இழந்த நிலை ஏற்பட்டது. அன்றையக் காலகட்டத்தில் அரச உருவாக்கமும் வேந்தன் என்ற அதிகார மையமும் பரந்துபட்ட மக்களை ஒருங்கிணைத்துப் புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் அதிகாரத்திற்கு அடங்கியொடுங்கிய மனநிலையுடையவர்களாக மாற்றிட சமய நிறுவனங்கள் பயன்பட்டுள்ளன. புதிய வகைப்பட்ட சமய மெய்யியலுடனும் விண்ணுலகு பற்றிய புனைவையும் கடவுளர்களையும் கட்டமைத்த வைதிக, அவைதிக சமயங்கள் நிறுவனமாகியபோது, அவை அதிகாரத்திற்கு அடிபணிந்திடும் உடல்களை உருவாக்கிடப் பெரிதும் முயன்றன. அதற்கான கருத்தியல் தளத்தை ஏற்படுத்திட விழைந்த புலவர்கள் தாங்கள் சார்ந்துள்ள சமயத்தை முன்வைத்து எழுதியுள்ள காப்பியங்கள் சித்திரிக்கின்ற சமயங்களின் மோதல்கள், ஒருவகையில் சமய அரசியல் பிரதிகள். ஒரு கட்டத்தில் வைதிக சமயவாதிகளால் அரசின் ஆதரவுடன் திட்டமிட்டு வீழ்த்தப்பட்ட சமணமும் பௌத்தமும் தமிழ் நிலவெளியில் எச்சங்களாகியுள்ளன. வேள்வி, வருணாசிரமக் கோட்பாடு உள்ளிட்ட சநாதனக் கருத்தியலை முன்னிறுத்திய வைதிக சமயம், மன்னர்களின் ஆதரவுடன் செழித்தோங்கிய நிலை, இன்றுவரை தொடர்கின்றது.

சான்றாதாரங்கள்: 

நீலகேசி, சென்னை: கௌரா பதிப்பகம்,2016.

சீவக சிந்தாமணி. சென்னை: கௌரா பதிப்பகம்,2018.

சிலப்பதிகாரம். சரவணன்,ப(உ-ஆ). சென்னை: சந்தியா பதிப்பகம், 2008.

மணிமேகலை. செல்லப்பன்.சு.(உ-ஆ). சென்னை: பாரதி பதிப்பகம்,1998.

பெருங்கதை. ஆனந்தி(உ-ஆ). கௌரா பதிப்பகம்,2020. 

வேங்கடசாமி, மயிலை சீனி. பௌத்தமும் தமிழும். சென்னை: மீனா கோபால் பதிப்பகம், 2002.

வேங்கடசாமி, மயிலை சீனி. சமணமும் தமிழும். சென்னை: அலைகள் வெளியீட்டகம், 2019.

 நடராசன், தி.சு., தமிழகத்தில் வைதீக சமயம். சென்னை: என்.சி.பி.ஹெச். பதிப்பகம், 2008.

நடராசன், தி. சு., சிலப்பதிகாரம் மறுவாசிப்பு. சென்னை: என்.சி.பி.ஹெச். பதிப்பகம், 2015.

சுப்ரமண்யன்,ந., தமிழகத்தில் பார்ப்பனர்கள். மு.வி. சோமசுந்தரம்(மொ-பெ). வல்லம்: பெரியார் சிந்தனை உயராய்வு மையம், 2018.

- ந.முருகேச பாண்டியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.