ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் அல்லது சொற்றொடரைப் பெயர்ப்பது என்ற இந்தப் பொதுபார்வை, கலை இலக்கிய மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை கூடுதல் பொறுப்புடையவை. காரணம், அது ஒரு சமூகத்தினுடைய அனைத்து நிலைகளையும், தளங்களையும் (பண்பாடு, வரலாறு, அந்நிலமக்களின் உணர்வு) பெயர்ப்பது. எடுத்துக்கொண்ட, குறிப்பிட்ட அந்த இலக்கியத்தை மொழி வழியே மற்றொரு சமூக மக்களுக்குக் கடத்துவது. அத்தகைய நிகழ்வை அண்மையில் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த மொழிபெயர்ப்புப் புதினமான 'கருமிளகுக் கொடி'யைக் காணலாம். இதனை மொழிபெயர்த்தவர் 'க.மாரியப்பன்'. இதற்குமுன் தெலுங்கு சிறுகதையாசிரியர் 'பி.அஜய் ப்ரசாத்'தின் சிறுகதைகளைத் தொகுத்து 'அத்தங்கி மலை' என்றும், தெலுங்கு சிறுகதையாசிரியர் 'தும்மல இராமகிருஷ்ணா'வின் சிறுகதைகளைத் தொகுத்து 'மஹாவித்துவான்' என்றும் இரு சிறுகதைத் தொகுப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். 'டாக்டர் வி.சந்திரசேகர ராவின் நல்லமிரியம்செட்டு' என்ற புதினத்தின் மொழிபெயர்ப்பானது இந்நூல். ஆந்திராவில் நிகழ்ந்த தண்டோரா இயக்கத்தை மையமாகக் கொண்ட தலித் அரசியலே இதன் கதைக் களம். ஆதெம்மாவின் இரு மகன்கள். மூத்தவர் ராஜய்யா (ராஜசுந்தரம்), இளையவர் கருணா குமார். இருவர் பயணிக்கும் இருவேறு தலித் அரசியல் தளங்களை ராஜய்யாவின் மகளான கிரேஸ் கமலாவின் கதைசொல்லலில் அமைந்துள்ளது இப்புதினம்.
தலித் மக்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தருவது மட்டும் தண்டோரா இயக்கத்தின் பணியாக இல்லாமல், பொறுப்புள்ள மனிதனாகத் தேவுவை மாற்றியது; காதலுக்கு இன்னொரு நிறம் இருக்கிறது என்பதையும், இன்றைக்குக் கசப்பாக இருக்கும் வாழ்க்கை நாளை இனிமையாய் மாறும் என்பதையும் டில்லிக்கு உணரவைத்தது. இதுபோன்ற தனிமனித வாழ்விலும் இவ்வியக்கம் நிகழ்த்திய மாற்றங்களைக் காணமுடிகின்றது. இத்தகைய இயக்கத்தில் ராஜய்யாவின் தம்பி கருணாவும் மகள் கமலாவும் மகன் ரூமியும் இயங்கிக் கொண்டிருக்க, அதற்கு எதிரான ஆதிக்கம் மற்றும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய இயக்கத்தில் இயங்கும் ராஜய்யாவும் என இந்தக் கதைப்போக்கு அமைந்துள்ளது. ஏட்டறிவற்ற (உயர்கல்வி) கருணா தம் சமூக முன்னேற்றத்திற்காகத் தன்னலமற்றுப் போராடுவதும். தன் சமூகத்தில் முழுகல்வியறிவைப் பெற்ற ராஜய்யா சுயநலவிரும்பியாகத் தன்முன்னேற்றத்தையே கருத்தில் கொண்டு விளிம்பில் இருந்து அதிகாரத்தின் மையத்தை அடையும் முயற்சியில் நகர்கிறார். அதற்குத் தண்டோரா இயக்கத்தின் செயல்பாடுகள் ராஜய்யாவின் இயக்கத்திற்கு எதிராக அமைந்துள்ளது. ஆகையால், முதலில் அந்த இயக்கத்தில் செயல்படும் தன் உடன்பிறந்த தம்பியான கருணாவிற்குக் காவல்துறையின் மூலம் பல இன்னல்களை உருவாக்கியதுடன், இறுதியாகச் சூழ்ச்சியால் தம் தம்பியின் உயிரை ஆகுதியாக்கினார் (கொலை). அத்துடன் நில்லாது, இப்புதினத்தில் தண்டோரா இயக்கத்தைப் பற்றிய அறிமுகத்தைக் கதைசொல்லியான கமலாவிற்குக் கொடுத்ததோடல்லாமல், இயக்கத்தில் ஈடுபட வைத்தது. தன் தந்தையின் செயல்பாடுகளை, சூழ்ச்சிகளை ஆங்காங்கே பகடி செய்தும், இறுதியில் தன் தந்தையால் இனி பலி நிகழக்கூடாது எனத் தன்னைத் தானே ஆகுதியாக்கிய ரூமி, எனப் பல உணர்வுப்பூர்வமான மாந்தர்களையும், தருணங்களையும் சித்தரிப்பதாக அமைந்துள்ளது.
மேலும் தாய் ஆதெம்மா, மனைவி விஜயா, தம்பியின் இணையாள் காந்தம், மகள் கமலா ஆகிய பெண் மாந்தர்களிடம் வெளிப்படுகிறது ராஜய்யாவின் அதிகாரமுகம். தண்டோரா இயக்கத்திற்குச் சார்பாக ரூமியும் கமலாவும் இயங்கும்போது விஜயா மீதும் கமலா மீதும் நிகழ்த்தப்படும் வன்முறை இப்புதினத்தின் தொடக்கத்தில் இருந்து வெளிப்படுகிறது. புராணக்கதைகள் கூட்டு நனவிலியில் படிமங்களாக மாறி நவீன வடிவம் கொண்டு படைப்புகளில் வெளிப்படும். அதன் அடிப்படையில் படைப்பாளர் ஓர் இடத்தில் ரூமியின் வழி “பக்த பிரகலாதா சினிமா பார்ப்பது போலிருக்கிறது / இதோ அசுரன் / இப்படிப்பட்ட அப்பா கூட இருக்கிறாரா?” என்று குறிப்பிட்டிருப்பது, படைப்பில் கதை மாந்தர்களின் வடிவமைப்பைப் புரிந்துகொள்ளும் முடிச்சவிழ்ப்பாகவே காணமுடிகின்றது. ஆயினும் இங்கு இறுதியில் வெல்வது இரணியனாகிய ராஜய்யா என்பது குறிப்பிடத்தக்கது. விளிம்புநிலையினரைப் பொருத்தமட்டில் கல்வி மையத்தைத் தகர்க்கும் கருவி. இங்கு அந்தக் கருவியை எடுத்தவர்கள் அதனைக் கொண்டு மையத்தைத் தகர்க்கிறார்களா? அல்லது மீண்டும் மையத்தை விரிவடையச் செய்கிறார்களா? இவ்வாறு சிந்திப்பதற்குப் பல திறப்புகளை இப்புதினம் விதைக்கின்றது.
கருமிளகுக் கொடி | தெலுங்கில்: டாக்டர் வி.சந்திரசேகர ராவ்
தமிழில்: க.மாரியப்பன் | வெளியீடு: காலச்சுவடு | விலை: ரூ.250
- ரா.வி.ஜீவநாத், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை, திராவிடப் பல்கலைக் கழகம், குப்பம் 517426, ஆந்திர மாநிலம்.