"அம்பையின் கதை மொழியும் கதையைக் கட்டமைக்கும் விதமும் தமிழ்ச் சிறுகதைகளுக்கு மிகவும் புதியது. அதன் காரணமாகவே அவர் ஆழ்ந்து வாசிக்கப்பட்டார். இன்றும் கொண்டாடப்படுகிறார்"
- எஸ். ராமகிருஷ்ணன்
அம்பை தமிழ் இலக்கியப் படைப்புலகில் பெண்ணிய எழுத்தாளராக பலராலும் அறியப்பட்டவர். அம்பை தனது படைப்புகளில் மட்டும் பெண்ணியம் பேசாமல் அவரது செயல்பாடுகளின் வழியாகவும் பெண்களுக்காகப் போராடி வருபவர். அவர் ஸ்பேரோ ( SPARROW - SOUND & PICTURE ARCHIVES FOR RESEARCH ON WOMEN) என்ற ஆவணக் காப்பகத்தின் மூலம் பெண்களின் வாழ்க்கையும், சரித்திரத்தையும் ஆவணப் படுத்தி வருகிறார். ஸ்பேரோ இந்தியாவில் பெண்களுக்கான ஒரே ஆவணக் காப்பகமாக செயல்பட்டு வருகிறது. சிறுகதைகளின் வழியே குடும்ப அமைப்பில் பெண்களின் நிலையை அம்பை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். அவரது பல சிறுகதைகள் குடும்ப உறவுகளின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துபவைகளாக அமைந்துள்ளன. அம்பையின் 'காட்டில் ஒரு மான்' என்ற சிறுகதைத் தொகுப்பில் அமைந்துள்ள 'பிரசுரிக்கப்படாத கைப்பிரதி' என்ற சிறுகதையில் அமைந்துள்ள குடும்ப உறவுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
குடும்ப உறவுகள் :
குடும்பம் என்பது மனித சமுதாயத்தின் முக்கியமானதொரு அங்கமாகும். குடும்பமானது கணவன், மனைவி, குழந்தைகள், தாத்தா, பாட்டி மற்றும் பிற உறவுகளை உள்ளடக்கிய அமைப்பாகத் திகழ்கிறது. "அன்பு வளர்வதற்கும், தன்னலம் குறைந்து பொதுநலம் பெருகுவதற்கும், இன்றளவும் சமுதாய வாழ்வில் ஒழுங்கு, கட்டுப்பாடு போன்றவற்றைக் காப்பதற்கு மிகப் பெரிய காரணமாக இருக்கும் அமைப்பு குடும்பம்" (ந. பிச்சமுத்து - 1988 - ப.210). இத்தகைய குடும்பத்தில் உள்ள உறவுகள் தான் மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குகின்றன.
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒற்றுமையுடன் வாழும் போது குடும்ப உறவுகள் சிறக்கின்றன.
கணவன் - மனைவி உறவு :
திருமணம் என்னும் பந்தத்தால் ஒன்றுசேரும் கணவன்- மனைவி உறவானது குடும்ப உறவுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அம்பையின் 'பிரசுரிக்கப்படாத கைப்பிரதி' என்ற சிறுகதையில் திருமகள் முத்துக்குமரனை விரும்பி திருமணம் செய்து கொண்டாலும் அவளது உணர்வுகளை மதிக்கத் தெரியாத கணவனாக அவன் இருப்பதால் அவர்கள் உறவில் பிரச்சனைகள் எழத் தொடங்குகிறது. திருமணத்திற்குப் பின்பு சமைப்பதும், விருந்தோம்புவதும் மட்டுமே பெண்களுக்கான வேலை. படிப்பதும், எழுதுவதும் ஆண்களுக்கான வேலை என்ற எண்ணம் கொண்டவனாக முத்துக்குமரன் இருப்பதை திருமகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. "எப்பப் பாத்தாலும் என்ன டைப் ரைட்டர் முன்னால வேல? நான் கவிதை எழுதுறவன் நான் அப்பிடி உக்காந்தா சரி, நீ என்னனுட்டு எழுதி கிழிக்கறே" என்று முத்துக்குமரன் திருமகளிடம் கேட்பதிலிருந்து ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட கணவனாக அவன் இருப்பதை அறியமுடிகிறது. திருமண உறவில் பெண்ணானவள் எத்தகைய நிலைக்கு தள்ளப்படுகிறாள் என்பதை திருமகள் "உங்க தமிழ்ப் பண்பாட்டுல ஒரு பொண்ணுக்கு படுத்துத் தூங்க வேளை, பொழுது உண்டில்லையா?" என்று முத்துக்குமரனின் நண்பர்களிடம் ஆதங்கப்படுவதிலிருந்து உணர முடிகிறது.
முத்துக்குமரனின் அளவு கடந்த ஆதிக்கத்தாலும், தாக்குதல்களாலும் பாதிக்கப்படும் திருமகள் ஒரு கட்டத்தில் அவனுக்கு மனைவி என்ற உறவிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு தன் மகளுக்கு தாயாக மட்டும் வாழ்க்கையை தொடர தீர்மானிப்பதால் அவர்களுக்கு இடையேயான கணவன் - மனைவி உறவானது முடிவுக்கு வருகிறது. ஆனால் திருமகளின் தந்தையான ராமசாமி அவர் மனைவிக்கு நல்ல கணவர். விதவையை திருமணம் செய்வது என்பது மறுவாழ்வு கொடுப்பது கிடையாது என்ற தூய்மையான எண்ணத்துடன் அவர் மனைவியை திருமணம் செய்துகொண்டவர். திருமணத்திற்கு முன்பு அவரது மனைவி படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்காக திருமணம் முடிந்ததும் ஆசிரியர் பயிற்சியில் மனைவியை சேர்த்துவிட்ட பின்பு மலேயாவுக்கு புறப்பட்டுச் சென்றவர். மனைவியின் பிறந்த தினத்தை உணவு மற்றும் இனிப்புடனும், இறந்த தினத்தை 'வாராய் நீ வாராய்' என்ற பாட்டுடனும் நினைவு கூர்ந்து மனைவியின் நினைவுகளில் வாழும் கணவராக ராமசாமி இருப்பதையும் அம்பையின் பிரசுரிக்கப்படாத கைப்பிரதி என்ற சிறுகதை பதிவு செய்துள்ளது. (அம்பை - 2000 - பக்.83-104 )
தாய் - மகள் உறவு :
முத்துக்குமரனை பிரிந்து காசிக்குச் சென்றபிறகு பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணிபுரியும் திருமகள் அதிகப்படியான வேலைகளுக்கு மத்தியிலும் மகள் செந்தாமரையின் மீது அதிக அன்பும், பாசமும் காட்டும் தாயாகவே இருக்கிறாள். தாயைப் புரிந்துகொண்ட மகளாகவே செந்தாமரையும் பள்ளியிலிருந்து வந்ததும் திருமகளுக்காக டீ போட்டுக் கொடுப்பது, அகராதியில் சொற்களை பார்ப்பது, தட்டச்சுப் பொறியின் நாடாவை மாற்றுவது, புத்தகங்களில் மேற்கோள்களைத் தேடுவது என அம்மாவுக்கு உதவி புரிகிறாள். திருமகளுடன் வாழ விரும்புவதாகக் கூறும் மோஹன் குப்தாவுக்கு "நானும் என் மகளும் கூடிய இந்த உலகை உருவாக்க நான் நிரம்பச் சிரமப்பட்டேன் மோஹன். அதை உன்னால் கற்பனை கூட செய்ய முடியாது. அது உன் நாடகங்களை விட அதிக நாடகத் தன்மையுடையது. முத்துக்குமரன் இல்லாத இந்த வீட்டை அமைக்க நான்... நான்... பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்..." என்று அவள் பதில் அளித்ததிலிருந்து மகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த தாயாகவே திருமகளை அம்பையின் படைப்பில் காண முடிகிறது. திருமகளுக்கு மூன்று வயதாக இருக்கும் போதே அவளது தாய் இறந்து விட்டதால் அவர்களின் உறவு கதையில் பெரிதாக பேசப்படவில்லை.(அம்பை - 2000 - பக்.83-104 )
தந்தை - மகள் உறவு :
மனைவி இறந்த பிறகு மூன்று வயதான மகளை மலேயாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்த ராமசாமி தனி ஆளாகவே திருமகளை வளர்த்து ஆளாக்குகிறார். ராமசாமி "நீ படிம்மா. இப்பதான் படிக்க முடியும்" என்று திருமகளிடம் சொல்வதுடன் மகள் படிக்க வேண்டும் என்பதற்காக எல்லா வேலைகளையும் அவரே ஏற்றுச் செய்யும் பாசமிகு தந்தையாகவும் இருக்கிறார். திருமகள் முத்துக்குமரனை விரும்புவதாகச் சொன்னபோது மறுப்பு சொல்லாத தந்தையாக ராமசாமி இருப்பதையும், தந்தை இறந்த பிறகும் அவரின் கொள்கைகளை பின்பற்றும் மகளாக திருமகள் இருப்பதையும் கதையின் வழி அறியமுடிகிறது. செந்தாமரை குழந்தையாக இருந்தபோதே அவளுக்கும் முத்துக்குமரனுக்கும் இடைவெளி ஏற்பட்டு விட்டாலும் குழந்தையாக அவள் தந்தையின் கையில் இருந்த புகைப்படத்தின் வழியே அவர்களின் தந்தை - மகள் உறவினை கதையில் காண முடிகிறது. (அம்பை - 2000 - பக்.83-104)
பிற உறவுகள்
செந்தாமரை பிறந்த ஆறாம் மாதம் அவள் ராமசாமியின் படுக்கையையும், சட்டையின் ஒரு பகுதியையும் நனைத்துவிட்டு அவர் சட்டைக் காலரை இழுத்தவாறு கிடக்க ராமசாமி இறந்து போவதாக அவர்களின் தாத்தா - பேத்தி உறவு நிறைவு பெறுகிறது. ராமசாமி இறந்து அவரைக் கொண்டு போன போது முத்துக்குமரன் அதிகமாக அழுததிலிருந்து இருவருக்கும் இடையேயான மாமனார் - மருமகன் உறவை புரிந்துகொள்ள முடிகிறது. ராமசாமி வீட்டுக்கு வரும் தூரத்து உறவினர்களும் பெயரளவு குடும்ப உறவுகளாக கதையில் இடம்பெற்றுள்ளனர்.(அம்பை -2000 - பக்.83 - 104)
தொகுப்புரை
* தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் குடும்ப உறவுகளின் பல்வேறு விதமான பரிமாணங்களை அடையாளப் படுத்துவதில் அம்பை முக்கியப் பங்கு வகித்திருப்பதை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.
* அம்பையின் படைப்பில் கணவன் - மனைவி உறவானது இரு வேறு கருத்தாக்கங்களைக் கொண்டு அமைந்துள்ளது. ஆணாதிக்கச் சிந்தனைகள் கொண்ட கணவனாக மனைவியிடம் நடந்து கொள்ளும்போது அவர்களுக்கு இடையேயான உறவு சிதைந்து விடுவதையும், மனைவியின் உணர்வுகளை மதிக்கத் தெரிந்த கணவனால் கணவன் - மனைவி உறவானது வலுப்படுவதையும் அறியமுடிகிறது.
* மகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த தாய், தாயைப் புரிந்துகொண்ட மகள் என தாய் - மகள் உறவானது படைக்கப்பட்டுள்ளது.
* தந்தை - மகள் உறவானது தந்தைக்கு மகள் மீதான அன்பின் அடிப்படையிலும், மகளுக்கு தந்தை மீதான புரிதல் அடிப்படையிலும் அமைந்துள்ளது.
* பேத்தி மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் தாத்தாவின் இறுதி தருணங்களும் பேத்தியுடனே அமைந்து விடுவதையும், மாமனாரின் இழப்பைத் தாங்க முடியாத மருமகனின் துயரம் போன்றவற்றையும் பிற உறவுகளின் வழியே அறிந்துகொள்ள முடிகிறது.
பார்வை நூல்கள் :
1. அம்பை - காட்டில் ஒரு மான், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 668, கே.பி சாலை, நாகர்கோவில் - 629001
2. பிச்சமுத்து, ந. - மு. வ. நாவல்களில் சமுதாய மறுமலர்ச்சியின் தாக்கம், சக்தி புத்தக நிலையம், சென்னை
- வெ.சந்தியா, முனைவர் பட்ட ஆய்வாளர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சேர்க்காடு,வேலூர் - 632115.
& முனைவர் நா. சிவகுரு, இணைப்பேராசிரியர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சேர்க்காடு, வேலூர் - 632115