மார்க்சியத் தத்துவப் பேராசிரியர் டாக்டர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாய எழுதிய Religion and Society என்ற ஆங்கில நூலை தோழர் சிசுபாலன் "மதமும் சமூகமும்" என்று தமிழாக்கம் செய்திருக்கிறார். இதைப் படித்தேன். 2009ஆம் ஆண்டில் நான் படித்த நூல்களில் இந்தியத் தத்துவத்தின் மூலத்தைப் புரிந்து கொள்ளப் பெரிதும் பயனுள்ளதாகக் கருதுகிறேன்.

பேராசிரியர் தேவிபிரசாத் சட்டோபாத்தியாய லோகாயதா, இந்திய நாத்திகம், இந்தியத் தத்துவத்தில் மறைந்தனவும் நிலைத்திருப்பனவும், இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம் ஆகிய குறிப்பிடத்தக்க சிறந்த நூல்களை எழுதியிருக்கிறார். உலக அளவில் தத்துவத் துறையில் சிறந்த அறிஞர் பெருமக்களால் பாராட்டப்படும் சிறந்த நூல்களாகும். 'மதமும் சமூகமும்' நூலில், இந்திய நாட்டில் மதமும், சாதியும் அரசியல் அடித்தளத்தில் ஆதிக்கம் செலுத்துவதின் மூலத்தை ஆய்வு செய்திருக்கிறார்; சிந்து சமவெளியில் புதையுண்டுள்ள ஹரப்பா, மொகஞ்சதாரோ இடங்களை 19-வது நூற்றாண்டில் தொல்பொருள் ஆய்வினர் கண்டுபிடித்தார்கள்.

ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் நகரமைப்புகளாக வளர்ந்திருந்ததாகவும், கி.மு. ஆறாவது நூற்றாண்டிலேயே சாக்கடை செல்லும் பாதைகளிலுள்ள நகரமைப்புகளிலிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆரியப் படையெடுப்பினால் சிந்து சமவெளி நாகரிகம் அழிக்கப்பட்டதாகவும், இந்தியா முழுதும் திராவிட இனத்தின் மூலவர்களான நாகர்கள் வசித்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இவர்களை நாடோடிகளான ஆரியர்கள் தாக்கி அழித்தார்கள்; காட்டுமிராண்டிகள் என்று கூடச் சொல்லமுடியாத சாதாரண மக்களாக, செங்கல் என்ற வார்த்தைகூட அறியாத, பெரும்பாலும் கால்நடைகள் மேய்க்கும் நாடோடிகளால், ஹரப்பா போன்ற நகரமைப்புகளை அழிக்கத்தான் முடிந்தது; மறுகட்டமைப்புச் செய்ய இயலாது என்று நூலாசிரியர் விவரித்திருக்கிறார்.

காலப்போக்கில் ஆரியர், நாகர் இரு இனக்கலப்பு பரவலாக ஏற்பட்டு விட்டதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். சிந்து சமவெளியின் நகரமைப்பு அழிக்கப்பட்ட பின்னர், இந்தியாவில் மேலும் ஆயிரம் ஆண்டுகாலம் கழிந்தே, நகரங்கள் உருவெடுத்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில், இயற்கை வழிபாட்டின் சின்னமாக லிங்க வழிபாடு இருந்ததாகவும், மாட்டின் அடையாளமான நந்தியும் காணப்பட்டதாம்; இது ஆரியர் பழக்கமல்ல; ஆனால் ஹரப்பா ஆரிய நாகரிகமே என்றும், இந்தியாவில் இருந்தவர்களைத் தவிர வெளியிலிருந்து வரவில்லை என்று நிலைநிறுத்த வரலாற்று மோசடிகள் செய்யப்படுவதாகவும், குதிரைச் சின்னங்கள் இருந்ததாகவும் தவறாகப் பரப்பப்படுகிறது. சிந்து சமவெளியில் குதிரை வாழ்ந்ததே இல்லை என்பதைத் தேவிபிரசாத் சட்டோபாத்தியாய ஆதாரங்களோடு தெளிவுபடுத்துகிறார். மதவாத அரசியல்வாதிகளின் வரலாற்றுத் திரிபுகளை வலுவான தரவுகளை எடுத்துக்காட்டி மறுத்திருக்கிறார்.

மத உருவாக்கம் புராதன காலத்தில் மனிதன் உணவைத் தேடி அலைந்தான். வேட்டையாடினான்; மாமிசத்தைத் தின்றான்; கனிகளைப் பறித்துத் தின்றான்; வேட்டை கிடைக்காத காலத்தில் பசியால் வாடினான்; காலப்போக்கில் உணவைச் சேகரித்துச் சாப்பிட்ட மனிதன், உணவை உற்பத்தி செய்யக் கற்றுக்கொண்டான். உழவுக் கருவிகள் வளர்ச்சி ஏற்படாத காலத்தில் இடி, மின்னல், மழை ஏற்பட்டாலும், மழை இல்லாத காலத்தில் மழை வேண்டியும், இடியைப் போல் ஓலமிட்டும், சூரிய நடனம், மழை வேண்டியும் மாய வித்தைகள் செய்ததாக மார்க்சியப் பேராசிரியர் ஜார்ஜ் தாம்சன் எழுதிய குறிப்புடன் நூலாசிரியர் விளக்குகிறார்.

சமுதாயத்தில் எல்லோரும் கூட்டாக உழைத்து உற்பத்தி செய்யும் புராதன காலத்தில் வாழ்ந்த மனிதர்களில் - இப்போதும் தொல் பழங்குடி மக்கள் மதம் என்பதை அறியமாட்டார்கள்; மதத்துக்கு மாறாக மாயவித்தையைத் தாங்களே கற்பித்துக் கொண்டார்கள்;

உணவு உற்பத்தியைப் பெருக்கும்போது, உற்பத்தி முறையில் வளர்ச்சியும், வேலைப் பிரிவினையும் ஏற்பட்டது; வேளாண்மை வளர்ச்சிக்குத் துணையாக மழைவரும் நேரத்தில் அனுமானத்தில் அறிவிக்கும் வானவியல் அறிவியலாளர்களும், உற்பத்தியை நிர்வாகம் செய்பவர்களும் உற்பத்தியில் ஆதிக்கம் செய்பவர்களாக மாறிவிட்டார்கள்; இச்சூழலில்தான் மதகுருமார்கள் என்ற சமூகப் பிரிவு தோன்றியது; வாழ்வின் ரகசியங்களை அறிந்தவர்களாகக் கருதப்பட்டார்கள்; இவ்வாறுதான் மதம் உருவாக்கப்பட்டது - செயல்பாட்டுக்கு வந்தது என்று குறிப்பிடுகிறார்.

வேதம் என்பதே பேச்சுப் பரிமாற்றம்; ரிக் வேதம் என்பது எத்தகைய மதத்தையும் குறிப்பிடவில்லை. உணவு, ஆண்-பெண் மற்றும் மனித உறவுகளைத் தெரிவிப்பதே ஒரு சிறப்புமில்லாத சொல்லாடலே, உயர்ந்த ஆன்மிக அறிவைக் காட்டுவதாக மதகுருமார்கள் பறைசாற்றினார்கள்; இப்பாடல்களைப் படிப்பதும் கேட்பதும் தாழ்ந்த சாதிக்காரர்களுக்கும், எல்லாப் பெண்களுக்கும் மறுக்கப்பட்டு - புனிதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது; இந்தியப் பிராமணர்கள் மட்டுமே படிக்கும் உரிமையுடையவர்களாகவும், வேதத்தின் புனிதத்தன்மையை நிறுவி வந்ததாக கார்ல் மார்க்ஸ் கேலியாகக் குறிப்பிட்டிருக்கிறார். (பக்கம் 87)

மதம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை ஏற்பட்டுள்ள உற்பத்திமுறை மாற்றத்தையும் உற்பத்திச் சக்திகளிடையே ஏற்பட்டுள்ள வர்க்க மாற்றங்களையும் விரிவாக நூலில் விளக்கியிருக்கிறார். அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டுள்ள, இன்றைய காலத்திலும், அமெரிக்கா போன்ற ஆதிக்க நாடுகளில் அறிவியல் இராணுவ உற்பத்தியிலேயே பயன்படுத்தப்படுவதைப் பற்றியும் நூலாசிரியர் தேவிபிரசாத் சட்டோபாத்தியாய குறிப்பிட்டு எச்சரித்திருக்கிறார்.

அமெரிக்காவின் டாலர் நாணயத்தில் We Trust in God ஆண்டவனின் மீது நம்பிக்கை அறிவிப்போடு என்ற முத்திரையோடுதான் அனைத்துக் கொடுமைகளையும் நடத்தி வருகிறது. அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி வளர்ந்து வரும் இக்காலத்திலும் மூடநம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு மதம் வேரூன்றியிருப்பதின் தன்மையை ஆழமாக கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரும் ஆய்வு செய்திருப்பதை நூலாசிரியர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

ஜெர்மனியில் வாழ்ந்த ஹெகலின் தத்துவத்தை விமர்சிக்கும் ஆய்வுக் கட்டுரையில் கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டிருப்பது, வரலாற்றைத் துல்லியமாகக் காட்டும் வரையறையாக ஆழமான ஆய்வுக் கருத்தாக மதிப்பிக்கப்படுகிறது. "மத ரீதியான துன்பங்கள் உண்மையான துன்பங்களின் வெளிப்பாடாகவும், உண்மையான துன்பத்தின் எதிர்பார்ப்பாகவும் உள்ளன. மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாகவும் இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆன்மாகவும் உள்ளது. மதம் மக்களுக்கு அபினி" -கார்ல் மார்க்ஸ்.

மார்க்ஸின் வரலாற்றுப் புகழ்மிக்க குறிப்பை எடுத்துக் காட்டியிருப்பதோடு மட்டும் நிறுத்திவிடவில்லை; அதைப் பற்றிய அணுகுமுறையைக் கீழ்க்கண்டவாறு நூலாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கிறார். "மதம் குறித்த மார்க்சின் அணுகுமுறை தெரிந்தோ, தெரியாமலோ அடிக்கடி திரிபுக்கு உள்ளாக்கப்படுகிறது. நமது நோக்கம், இதனை நம்மால் இயன்றவரை முழுமையாகவும் தெளிவாகவும் ஆய்வுக்கு உட்படுத்த முயல்வதே. அடிப்படையிலேயே மனிதனின் மனதில் கடவுள் குறித்த உணர்வுக்கு உறுதியான ஒரு தோற்றம் இருக்கும்போது, அதற்கு ஒரு முடிவும் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முயல்கிறோம்" என்று எழுதுகிறார்.

மதத்தைப் பற்றிய அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டுமென்பதைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார். சமூகப் பொருளாதார நிலைமைகள் மாறாமல் இருக்கும்போது வெறும் சட்டத்தினால் மட்டும் மதத்தை ஒழிக்க இயலாது; அதனை இல்லாமல் ஆக்குவது மிகக் கடினம்; அதனால் தான் "மதத்தை இதயமற்ற உலகின் இதயம்" அல்லது அத்தகைய மக்களுக்குத் தேவையான அத்தியாவசியமான போதை என்று கார்ல் மார்க்ஸ் அறிவித்தார்;

மதத்துக்கு அடிப்படையான பொருளாதார நிலைமைகளை மாற்றுவதன் மூலமே மதத்தை அழிக்க முடியும்; பண்டைய எகிப்தியர்களுக்கு எட்டாத வெகுதூரத்தில் இருந்த அத்தகைய பொருளாதார நிலைமைகள் இன்று நமக்கு வெகு அருகிலேயே இருக்கிறது என்று நூலாசிரியர் தேவிபிரசாத் சட்டோபாத்தியாய அறிவியல் ஆதாரத்தோடு உறுதிப்படுத்துகிறார்.

"மதமும் சமூகமும்" சரளமான தமிழில் சிசுபாலன் மொழியாக்கம் செய்திருக்கிறார்; என்.சி.பி.எச் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

2008-ஆவது ஆண்டில் டாக்டர் தேவிபிரசாத் சட்டோபாத்தயாய எழுதிய "இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்" என்ற நூலை பட்டாளி பதிப்பகம் தயாரித்து பாரதி புத்தகாலயம் விற்பனை உரிமையில் வெளியிட்டது. இரு நிறுவனங்களும் மார்க்சிய அறிவியல் நூல்களை வெளியிட்டு வரும் அரிய பணிக்குத் தமிழக வாசகப் பெருமக்கள் ஆதரவளிக்க வேண்டுகிறேன்.

- ஆர்.நல்லகண்ணு

Pin It