ஒரு சிறிய நகரத்தின் மையத்தில் குடியிருந்த நாங்கள் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அந்த நகரத்திற்கு வெளியே கிராமச் சூழல் கொண்ட ஓர் இடத்துக்குக் குடி பெயர்ந்தோம். தென்னந்தோப்பும் வயல்களும் சூழ்ந்த இடம். சுத்தமான காற்று, சுத்தமான நீர், வாகன இரைச்சல்கள் இல்லாத அமைதி என அகம் மகிழ்ந்தோம். எங்கள் இல்லத்துக்கு வருகை தந்த உறவினர்களிலும் நண்பர்களிலும் இவை பற்றிப் பாராட்டாதவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம்.

நகரத்தின் பல தொல்லைகளிலிருந்தும் விடுபட்ட நாங்கள் ஒரேயொரு தொல்லையில் இருந்து மட்டும் விடுபட முடியவில்லை. அதுதான் கொசுத் தொல்லை. கொசுத்தொல்லைதானே என்று சாதரணமாக நினைத்து விடாதீர்கள். அதுதான் இன்று எங்களுக்கு மாபெரும் தொல்லைகளில் ஒன்றாக இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல, இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கும் அதுதான் பெரும் தொல்லையாக உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் அய்யமில்லை. இந்நாட்டின் மூலை முடுக்கெல்லாம், பட்டி தொட்டிகளில் எல்லாம், சிற்றூர் முதல் பெரும் நகரங்கள் வரை நீக்கமற நிறைந்துள்ள ஊழலைப் போல, இலஞ்ச லாவண்யத்தைப் போல கொசுக்களும் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளன.

ஊழலை ஒழிப்பது எவ்வளவு கடினமான ஒன்றாகத் தெரிகிறதோ அது போலவே கொசுக்களை ஒழிப்பதும் கடினமான ஒன்றாகத் தெரிகிறது. ஏனென்றால் கொசுக்கள் மிக வேகமாகச் சூழலுக்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்துக்கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளன. எங்களுடைய வீட்டில் முதலில் தென்பட்ட கொசுக்கள் அளவில் பெரியதாகவும், வேகமாகப் பறக்க முடியாததாகவும் இருந்தன. அவற்றைக் கைகளாலும், சிறு துண்டைக் கொண்டும் எளிதில் அடித்துக் கொல்ல முடிந்தது. ஆனால் வெகு விரைவில் அளவில் சிறியதாகவும், வேகமாகப் பறக்கக் கூடியதாகவும் உள்ள கொசுக்களை நாங்கள் கண்டோம். அவற்றைக் கைகளால் கொல்வது அவ்வளவு எளியதாக இல்லை.

வீட்டுக்குள் கொசுக்கள் வராமல் தடுப்பதற்காக சன்னல்களுக்கு வலைகள் அடித்தோம். அறைக்குள் வந்து மாட்டிக்கொண்ட கொசுக்கள் தொடக்கத்தில் வலையை ஒட்டிப் பறந்து கொண்டிருக்கும். அவற்றை நாங்கள் எளிதாக அடித்துக் கொன்றோம்.(அஹிம்சாவதிகள் எங்களை மன்னிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.) புத்திசாலிக் கொசுக்கள் அந்தப் பழக்கத்தையும் விரைவில் மாற்றிக்கொண்டன. சன்னல் பக்கம் தலைவைத்தே படுப்பதில்லை. அலமாரிகள், புத்தகங்கள், ஆடைகள் எனத் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டன.

மின் மட்டையின் உதவியால் அவற்றைக் கொல்ல நினைத்தாலும் அதுவும் சாத்தியமில்லாமல் போய்விடுகிறது. ஏனென்றால் மரச்சட்டங்கள், தரை, படுக்கை விரிப்புகள் போன்றவற்றில் ஒட்டிக்கொண்டு, அப்பொருட்களுடைய வண்ணங்களின் பின்னணியில் எங்கள் கண்களுக்குத் தெரியாமல் தங்களை மறைத்துக் கொள்ளும் கலையிலும் அவை தேர்ச்சி பெற்று எங்களுடைய தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்கின்றன.

வெறும் கொசுக்காக இவ்வளவு அலட்டிக்கொள்ள வேண்டுமா என யாரும் நினைத்து விடாதீர்கள். உலகில் பெரும்பான்மையான மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கும் மலேரியா, டிங்கு காய்ச்சல், சிக்கன்குனியா, மூளைக் காய்ச்சல் ஆகிய கொடூர நோய்களைப் பரப்பிக்கொண்டு இருப்பதே இந்தக் கொசுக்கள்தான். இந்த நோய்க்கான கிருமிகளை எல்லா இடங்களிலும் எடுத்துச் சென்று பரப்பும் முகவர்களாக (vectors) இவை செயல்படுகின்றன. இதற்குப் பெரும்பாலும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள ஏழை மக்களே இரையாகிறார்கள். மலேரியாவால் மட்டும் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் பத்து லட்சம் மக்கள் இறக்கின்றனர் என்றால் அதன் கொடுரத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

மேலும் பல பத்து லட்சம் மக்கள் இந்த நோய்களால் தாக்கப்பட்டு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை மருந்துகளுக்காகவும், மருத்துவர்களுக்காகவும் செலவு செய்து வருகின்றனர். நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையில் கிடப்பதால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் வருமான இழப்பு ஏற்படுகிறது. இவற்றின் காரணமாக ஆண்டுதோறும் பல கோடி மக்கள் உலகெங்கும் ஓட்டாண்டிகளாக்கப்பட்டு வருகின்றனர்.

அறிவியல் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ள காலம் இது. சந்திர மண்டலத்துக்குக் குடியேற முடியுமா? செவ்வாய் கிரகத்துக்கு ஆள் அனுப்ப முடியுமா? என ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் காலமிது. இந்நிலையில் கொசுக்களைப் பூண்டோடு ஒழிப்பதற்கு அறிவியலால் முடியாதா?

அறிவியலால் முடியும். ஆனால் அது முதலாளியத்திற்கு இலாபம் அளிப்பதாக இருக்க வேண்டும், முதலாளியத்திற்கு சேவை செய்வதாக இருக்க வேண்டும். இங்கு அறிவியலும் முதலாளியத்தின் இலாப நோக்கத்திற்காக அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

புதிய புதிய ஆயுதங்களைக் கண்டு பிடிப்பதற்கும், தயாரிப்பதற்கும் ஆண்டுதோறும் பல லட்சம் கோடி ரூபாய்களைச் செலவிட்டு வரும் பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களுக்கு நிதி ஒரு பொருட்டு அல்ல. பிறகு ஏன் அவை கொசுக்களை ஒழிக்க ஆராய்ச்சி செய்வதில்லை? கொசுக்களை ஒழிப்பதன் மூலம் உலகெங்கும் மக்கள் நல்வாழ்வு பெற வழிவகுக்கலாமே!

ஆயுதத் தயாரிப்பு மூலம் தங்கள் ஆயுதபலத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும்.. தங்களுடைய பொருட்களின் விற்பனைக்காகவும், தங்களுடைய தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களுக்காகவும் ஆயுதபலத்தைக் கொண்டு புதிய நாடுகளைக் கைப்பற்ற முடியும். நாடுகளிடையே சண்டைகளை மூட்டி, அதன் மூலம் தமது ஆயுதங்களை விற்றுக் கொள்ளை இலாபம் அடிக்க முடியும்.

இவ்வாறு சாவு வியாபாரிகளாக இருந்து கொண்டு உலகெங்கும் கொள்ளை இலாபம் அடித்து வரும் பன்னாட்டு நிறுவனங்கள் மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொள்ளுமா?

கொசுக்களை ஒழிப்பதால் பன்னாட்டு முதலாளிகளுக்கு என்ன இலாபம்? மாபெரும் இழப்பு அல்லவா ஏற்படும்! கொசுக்களினால் பரப்பப்படும் நோய்களுக்கான மருந்துகளின் விற்பனை மூலம் இலட்சக் கணக்கான கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இலாபமாகப் பெற்று வருகின்றன. அவற்றை இழக்க முதலாளிகள் முன் வருவார்களா? அது மட்டுமில்லாமல் கொசு விரட்டி வர்த்திகள், வேதியல் திரவங்கள், அதற்கான சாதனங்கள் ஆகியவற்றின் விற்பனை மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் இலாபமாகப் பெற்று வருகின்றன. இவற்றை எல்லாம் இழக்க முதலாளிகள் உறுதியாக முன் வரமாட்டார்கள்.

ஆண்டுதோறும் பல இலட்சம் கோடி ரூபாய்களை இலாபமாகப் பெறுவதற்கு வழிவகுத்துள்ள கொசுக்களை ஒழிப்பதற்கு முதலாளிகள் முன்வருவார்களா? பொன் முட்டையிடும் வாத்தைக் கொல்வதற்கு அவர்கள் என்ன முட்டாள்களா?

நமது இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களின் வாழ்வும் முதலாளியத்தின் இலாபமும் இவ்வாறு பின்னிப்பிணைந்து உள்ளன. முதலாளியத்தின் கூட்டாளிகளாகக் கொசுக்கள் உள்ளன. அதன் காரணமாக முதலாளியத்திலிருந்து விடுபடாமல் நம்மால் கொசுக்களிடமிருந்தும் விடுபடமுடியாது.அதுவரை அறிவியலும் விடுபடமுடியாது.

கொசுப் பிரச்சினை என்பது கொசுப் போல அளவில் சிறிய பிரச்சினை அல்ல என்பதை இப்பொழுதாவது நீங்கள் நம்புவீர்கள். இல்லையா?

Pin It