இந்திய சுயராஜ்யத்திற்காகக் களமாடிய தமிழக ஆளுமைகளுள் தலையாய ஆளுமையான வ.உ.சிதம்பரனார் அவர்களை எடுத்துக் கொண்டு அவரது பங்களிப்புகளுள் ஒரு பகுதியான கப்பலோட்டிய வரலாற்றை கதையாக அல்லாது வரலாறாகவே சொல்லியிருக்கிறார் ஆசிரியர் குருசாமி மயில்வாகனன். நீந்தும் மீன்கள் வெளியிட்டுள்ள இந்நூலில் வ.உ.சி. தவிர திலகர், பாரதி, சிவா, விபின் சந்திரபால் போன்றோரது கதைகளையும் உப கதைகளாக உள்வாங்கும் வகையில் ‘பறவைப் பார்வை’யில் வடிவமைத்திருப்பது சிறப்பு.
“தங்களது தலைவன்மீது தாங்கள் கொண்டிருந்த அன்பால் நெல்லை மக்கள் காட்டிய எதிர்ப்பின் அளவும் (சிதம்பரனார் கைது செய்யப்பட்டபோது) பண்பும்தான் வ.உ.சி-யைப் ‘பெரியவர்’ எனும் இடத்திற்கு நம்மைக் கொண்டு செல்ல வைத்தது.” என எழுதும் ஆசிரியர் வ.உ.சியைக் கடைசிவரை ‘பெரியவர்’ என்றே விளிக்கிறார். அதேநேரம் ஆங்கில அதிகாரிகளையும் நீதிபதிகளையும் குறிப்பிடும்போது ‘அவன்... இவன்’ என ஏகவசனத்தில் எழுதியிருப்பதைக் குறைத்து கொஞ்சம் பெருந்தன்மை காட்டியிருக்கலாம். பெரியவர்மீது கொண்ட பற்றாலும் பாசத்தாலும் பெரியவரை யார் பழித்தாலும் அவர்கள் மீது பாய ஆசிரியர் தவறுவதில்லை. பெரியவர் கைது செய்யப்பட்டபோது ஏற்பட்ட எழுச்சியை (நெல்லை எழுச்சி) கேலி செய்து எழுதும் அயோத்திதாசர் போன்றவர்களை, ‘அரசாங்கதாசர்’ என்றும் ‘ஆங்கிலேய அடிவருடி’ என்றும் கிண்டலடிக்கிறார். காந்தியாரின் கைகளில் இருந்த காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சிக்குத் தஞ்சமாகிக் கிடந்தது என்பதும் காங்கிரஸ் சுதேசியத்தை ஒப்புக்குப் பேசியது அல்லது பேசாமல் கைவிட்டது போன்ற விவாதத்திற்குரிய விசயங்களும் ஆங்காங்கே நூலில் காணப்படுகின்றன.
இதுபோன்ற ஓரிரு இடங்கள் தவிர, கதை முழுக்க நடுநிலையோடு ஆசிரியர் பயணிப்பதோடு நம்மையும் பயணப்பட வைக்கிறார். உதாரணத்திற்கு. இந்திய தேசியக் காங்கிரஸின் இரு பிரிவினரிடமும் (மிதவாதம் மற்றும் தீவிரவாதம்) இருந்த முற்போக்கு, பிற்போக்கு மற்றும் படுபிற்போக்கான நிலைப்பாடுகளை நடுநிலையுடன் எடுத்து வைக்கிறார்.
கதைக்குள் நுழையும்போது, ‘கப்பலோட்டிய முதல் தமிழன்’ என்று பெருமை பேசாமல் 1905 முதல் 1930 வரை இந்தியாவின் பல இடங்களில் இருபதுக்கும் குறையாமல் இந்தியர்களும் தமிழர்களும் கப்பலோட்டிய கதைகளைப் பட்டியல் படுத்துகிறார். சுதேசியக் கப்பல் கம்பெனி தொடங்கப்படுவதற்கு முன்பு ‘தூத்துக்குடித் தொழில் வளர் சங்கம்’ மற்றும் ‘தரும சங்கம்’ போன்ற சங்கங்களை உருவாக்கி மக்களுக்காக உழைத்து, ஒரு வக்கீலாக ஏழைகளுக்கு ஆதரவாகவும் ஆங்கில அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் போராடிய நிகழ்வுகளைக் கதைக்குள் கொண்டுவருவதன் மூலம் கப்பல் கம்பெனி தொடங்கப்படுவதற்கான பெரியவரின் உள்நோக்கத்தை ஆசிரியர் தெளிய வைத்து விடுகிறார். பெரியவர் கப்பல் கம்பெனியைத் தொடங்குவதற்கு முன்பு, பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிகள் ஏற்கனவே இந்தியர்களால் (தமிழர்கள் உள்பட) நடத்தப்பட்டு வந்த கப்பல் கம்பெனிகளை எப்படியெல்லாம் அழித்தார்கள் ஒழித்தார்கள் என்ற வரலாற்றுப் பதிவுகளையும் வரிசைப்படுத்துகிறார்.
சுதேசிக் கப்பல் கம்பெனி ஒரு முயற்சியில் ஒரு நாளில் பெரியவரால் ஏற்படுத்தப்பட்டதல்ல. முதலில் நல்லபெருமாள் பிள்ளை உள்பட சில நண்பர்களுடன் கப்பலைக் குத்தகைக்கு எடுத்தும், பின்னர் ஹாஜி பக்கீர் முகம்மது சேட் உட்பட்ட சில நண்பர்களுடன் இணைந்து கப்பலை வாடகைக்கு எடுத்தும் ஓட்டுகிறார். பிரிட்டிஷ் கம்பெனியின் வணிகத் தந்திரங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இருபெரும் முயற்சிகளும் தோல்விகளைத் தழுவுகின்றன. பிரிட்டிஷ் கம்பெனிக்காரர்களின் சுரண்டல்களும் அவர்களால் இந்திய வணிகர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும் அசௌரியகங்களும் அவமரியாதைகளும் தொடர்ந்தவண்ணமிருக்க, பெரியவரால் தொடர்ந்து ஒரு பார்வையாளனாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. வீழ்ந்த அனுபவங்களை மனதில் கொண்டு மீண்டும் வீறுகொண்டு எழுந்து சொந்தமாகக் கப்பல் வாங்கி சுயமான சுதேசிக் கம்பெனி தொடங்கும் பெரியவரின் தொடர் முயற்சிகளை ஆசிரியர் காலவரிசையில் சுட்டுகிறார்.
காசு போட்டோம், கப்பல் வாங்கினோம், கடலில் விட்டோம் என்பதோடு சுருங்கிப் போவதல்ல இக்கதை. சுதேசி உணர்வு கொண்ட எளிய மனிதர்களையும் பங்குதாரர்களாக உள்ளடக்கி, ஒரு பங்கு 25 ரூபாய் என்ற விகிதத்தில் 40,000 பங்குகளைக் கொண்ட ஒரு கம்பெனியை உருவாக்கி, பத்து லட்சம் ரூபாய் மூதலீட்டுத் தொகையை ஈட்ட இந்தியா முழுதும் சுற்றி, ஒத்துக்கொண்ட முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்து, முதலில் சம்மதித்துப் பின் தயக்கம் காட்டியவர்களை மீண்டும் சம்மதிக்கவைத்து, பின்வாங்கும் பங்குதாரர்களைச் சமாதானம் செய்து, நிதி திரட்டி, எழும் சட்டப்பிரச்சினைகளைச் சமாளித்து, ஒரு பக்கம் ஆங்கில வணிகர்களையும் அதிகாரிகளையும் எதிர்கொள்வதும் இன்னொரு பக்கம் சுதேசிக் கம்பெனியின் சொந்தக்காரர்களைக் கட்டி அரவணைத்து இழுத்துப்போவதுமான பாடுகளைப் பெரியவர் அனுதினமும் சந்திப்பதை ஆசிரியர் பகுத்துப்பகுத்துச் சொல்லும்போது பெரியவரின் தலைமைக்குணம் தெரிகிறது. ஒரு கம்பெனியின் வரவு-செலவு, முதலீடு-லாபம் முதலியவைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு, ஆண்டுக்குப் பத்து லட்சம் லாபம் எனக் கணித்துச் சொல்லப்பட்ட பட்ஜெட்டைப் பெரியவர் முன்வைக்கிறார். அதில் கப்பலில் பணியாற்றும் ஒரு சலூன்காரனின் சம்பளம் உட்பட்ட சகல விசயங்களையும் பெரியவர் சொல்லியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவரது வணிக ஆளுமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ஆசிரியர்.
கப்பல் வாங்குவதற்காகப் பெரியவர் பம்பாய் சென்றிருந்தபோது அவரது மூத்த மகனுக்குக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. உடனே வரச்சொல்லிப் பெரியவரின் தந்தை தந்தியடித்தபோது “கப்பலோடுதான் வருவேனேயொழிய, அதற்கு முன் யாருக்கு எவ்வாறு நேர்ந்தபோதிலும் நான் வரமாட்டேன் என அவர் தந்த பதில் தந்தியைப் படிக்கும்போது பெரியவரின் உறுதி தெரிகிறது.
கப்பல் கம்பெனி காட்டிய வெற்றிக்கதையை விளக்கும் ஆசிரியர், அதேபொறுப்போடு கம்பெனி கவிழ்ந்த கதையையும் கூறுகிறார். சக வணிகனை அழித்தொழிக்கும் தந்திரம், ஏமாற்று வேலைகள், அச்சுறுத்தல்கள் என ஆங்கிலேய வணிகர்கள் கையாண்ட அத்தனை வழிமுறைகளையும் அச்சிலேற்றும் ஆசிரியர், பெரியவருக்கு பிரிட்டிஷ் வணிகர்கள் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க முன்வந்து, சுதேசிக் கம்பெனியின் நடவடிக்கையிலிருந்து அவரை ஒதுங்கச் செய்யும் நயவஞ்சகக் காட்சிகளையும் அரங்கேற்றுகிறார். ஆங்கில வணிகர்கள், அதிகாரிகள் மட்டுமல்லாது சுதேசிக் கம்பெனிப் பங்குதாரர்களின் சுயநலம், பெரியவரை வெளியேற்ற அவர்கள் நடத்தும் நாடகங்கள், கம்பெனி அதிகாரிகளின் ஊழல்போக்கு - இப்படி சுதேசிக் கம்பெனியைக் கவிழ்த்த ஒவ்வொரு உள்ளடி வேலைகளையும் எக்ஸ்ரே எடுத்துக் காட்டுகிறார் ஆசிரியர். தான் சிறைப்பட்ட துயரத்தைவிட, தனது முயற்சியால் வாங்கப்பட்ட கப்பல் பிரிட்டிஷ் கம்பெனிக்கே திரும்ப விற்கப்பட்டதும் நஷ்டமடைந்த பங்குதாரர்கள் தன்னைக் காரணம் காட்டி கடன் நோட்டீஸ் வழங்கியதும் அவரைப் பெரிய அளவில் பாதித்தது. சுமார் 5 ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்குப் பிறகு சென்னை சென்ற பெரியவர் அரிசிக்கடை, நெய்க்கடை வைத்து நடத்தியதும், அதிலும் தோல்வி ஏற்பட பிறர் அரிசிக்கடையில் வேலைக்குச் சேர்ந்ததும் ஒரு வழக்கறிஞருக்கு, தேசாபிமானிக்கு, தேசம் கொடுத்த பரிசுகள். அனைத்தையும்விட மக்களுக்காகப் போராடிச் சிறை சென்ற பெரியவர் விடுதலை ஆகும்போது அவரை வரவேற்க நான்கு பேர் மட்டுமே காத்திருந்த தகவல்களைப் படிக்கும்போது, “என்ன சொல்லி மாள?” என எண்ணத் தோன்றுகிறது.
பெரியவரின் கடிதங்கள், சுதேசமித்திரன், இந்தியா பத்திரிகைகளில் அவர் அளித்த அறிவிப்புகள், எழுதிய கட்டுரைகள், பங்குப் பத்திரச் சான்றிதழ்கள், பட்ஜெட், பங்குதாரர்களின் பெயர்கள், கம்பெனி நிர்வாகிகளின் பட்டியல் உட்பட்ட அனைத்துத் தரவுகளையும் ஆதாரங்களாக இணைத்துள்ளார் ஆசிரியர்.
இந்திய சுயராஜ்யத்திற்காகப் போராடிய பிற தேசத் தலைவர்கள், ஆங்கில அரசை மட்டுமே எதிர்த்துப் போராடினார்கள். ஆனால் பெரியவரோ அரசுடன் ஆங்கில வணிகர்களையும் எதிர்த்துப் போராடிய தனித்துவமான தலைவர் எனக் குறிப்பிட்டு எழுதும்போது அது நியாயமானதாகப் படுகிறது.
இந்தக் கதை விரிந்த வட்டத்தில் வாசிக்கப்படும்போது அல்லது கேட்கப்படும்போது ‘பெரியார்’ மாதிரிப் “பெரியவரும்” பெரிய அளவில் பேசப்படுவது திண்ணம். அந்தவொரு நாளில் ‘பெரியார் பல்கலைக்கழகம்’ இருப்பதுபோல் பெரியவர் பெயரில் “சிதம்பரனார் கடல்சார் பல்கலைக்கழகம்” எனப் பெயர் மாறும் அல்லது மாற்றப்படும்.
கப்பலோட்டிய கதை | குருசாமி மயில்வாகனன்
நீந்தும் மீன்கள் வெளியீட்டகம்
விலை: ரூ.250/-
- முனைவர் சு.வெங்கடாச்சலம்