குலசாமி என இன்று பாமர மக்களால் சாதாரணமாய் வழங்கும் சொல் தமிழ் லெக்சிகனில் இல்லை, தமிழக அரசு வெளி­யிட்ட மு சண்முகம்பிள்ளை தொகுத்த அகராதியில் இல்லை. கிரியா அகராதியில் கூட சேர்க்கப்படவில்லை, ஆனால் இந்த அகராதிகளில் குலதெய்வம், குலதேவதை என்னும் சொற்கள் உள்ளன . இந்தச் சொல்லுக்கு வழிவழியாக வழிபடப்படும் தெய்வம் என்றும் ஒரு குலத்துக்கே உரிய தெய்வம் என்றும் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

பழைய அகராதிகளில் மட்டுமல்ல வலைத்தளங்களில் கூட குலதெய்வம் என்ற சொல்லே கையாளப்படுகிறது. பெரும்பாலும் குலதெய்வம் என்பது வைதீகச் சார்புடன் குறிக்கப்படுகிறது என்பது முக்கியமான செய்தி. திருமங்கையாழ்வார் பெரிய திருமடலில் அவர் எங்கள் குலதெய்வம் என்று கூறுகிறார். சிவப்பிரகாசரின் ஒரு பிரபந்த நூலில், நினையாம் குலதேவதையாய் வழிபட்டு என வருகிறது.

இப்படியாக வருகின்ற பழைய நூல்களில் குலதெய்வம் என்பது வைதீகச் சார்புடன் மட்டுமல்ல நாட்டார் மரபு தொடர்பு இல்லாமலே கூறப்படுகின்றது. இப்போது குலசாமி என்ற சொல் பரவலாக அறியப்பட்ட ஒன்று எந்த அகராதியிலும் இல்லாத இந்தச் சொல் பாமர மக்களிடம் மட்டுமல்ல படித்தவர்களும் பயன்படுத்தப்படும் சொல்லாகிவிட்டது.

raja raja chozhan godகுலசாமி என்ற சொல் கிராமத்து மக்களால் உருவாக்கப்பட்டது என்றாலும் இதை வெகுஜன மக்களிடம் கொண்டு சென்றவர்கள் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் என்பதையும் இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது. குலசாமி என்ற சொல் இன்றைய நிலையில் நாட்டார் வழக்காறு சார்ந்தே பேசப்படுகிறது.

குலசாமி வழிபாட்டைப் பரவலாக்கிய வர்களில் ஜோதிடருக்குப் பெரும் பங்கு உண்டு என்றாலும் பழைய மதப்பிரச்சாரகர்களுக்கும், குறி சொல்லும் நடமாடும் சில சாதியினருக்கும் பங்குண்டு.

வில்லிசை நிகழ்ச்சியில் பாடப்படும் கதைப்பாடல்களில் குலசாமி பற்றிய குறிப்பு வருகிறது. ஒரு கதைப்பாடலின் கதாநாயகி குழந்தை­யில்லாமல் வருத்தப்படுவாள். அவளைக் கோவில் தோறும் சென்று வழிபடுமாறு பெரியோர்கள் அறிவுறுத்துவர். கணவனும் சொல்லுவான். அவளும் போவாள். பலன் கிடைக்காது.

தற்செயலாகக் குறி கூறும் குறத்தி ஒருத்தியைச் சந்திப்பாள். அவள் குலசாமியை வழிபடுமாறும் குலசாமியின் கோவில் பாழடைந்து கிடப்பதாகவும் பாடுவாள். குறத்தி சொன்னதை அப்படியே கேட்டு குலசாமி கோவிலுக்கு போவாள் கதாநாயகி. இதற்கு பலன் கிடைக்கும். இது போன்ற நிகழ்வுகள் சிதம்பர நாடார் கதை, பலவேசம் சேர்வைக்காரர் கதை, உடையார் கதை, தோட்டுக்காரி அம்மன் கதை, மாலையம்மன் கதை எனப் பத்துக்கு மேற்பட்ட கதைப்பாடல்களில் காணப்படுகின்றன.

நாட்டார் தெய்வங்களில் எல்லா தெய்வங்களும் குலசாமிகளாக இருப்பதில்லை உதாரணம் முத்தாரம்மன், சந்தன மாரியம்மன், சாஸ்தா எனச் சில தெய்வங்கள் பல குடும்பங்களுக்கும் ஜாதிகளுக்கும் குலசாமியாக இருக்கின்றன, ஆணோ பெண்ணோ கொலைப்பட்டு வழிபாடு பெறுவது என்பது ஒரு கருத்தாக்கம். அப்போது அத்தகைய தெய்வங்கள் ஏற்கனவே வழிபாடு பெறுகின்ற பிரபலமான தெய்வங்களுடன் இணைந்து வழிபாடு பெறுவதும் உண்டு. இத்தகைய தெய்வங்களை அடையாளம் காண்பதில் சில சிக்கல்களும் உண்டு.

இறந்து போனவர்கள் அல்லது கொலைபட்டவர்கள் எல்லோரும் தெய்வமாக மாறுவது என்பது பொது விதியல்ல; சாவு என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான விளைவை உண்டாக்காது; தமிழகத்தில் பழைய வரலாற்றில் நவகண்டம் கொடுத்தவர்களும் உடன்கட்டை ஏறியவர்களும் தெய்வமாக மாறுவது என்பது சாதாரணமாக இருந்தது. பின்னர் இவர்கள் குலசாமியாக மாறினார்கள்.

ஜப்பானில் தற்கொலையால் வரும் இறப்பு கொடூரமானதல்ல. ஆனால் நம்முடைய பண்பாட்டில் இது நேர்மாறானது. வரலாற்றுக் காலத்தில் இருந்தே கொலைப்பட்டு தெய்வம் ஆதல் என்பது சாதாரணமாக தொடர்கிறது. இது பற்றிய விரிவான ஆய்வை பேரா.ராமச்சந்திரன் போன்றவர்கள் செய்திருக்கின்றார்கள்.

நாட்டார் தெய்வங்களில் புராணம் அல்லது மரபு வழியே வழிபடப்படும் தெய்வங்களுக்கும் கொலைப்பட்டு தெய்வமாகும் சாமிகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் சிலவற்றைக் கூறலாம். அவை பற்றிய கதைப்பாடல்கள், விழாச் சடங்குகள் நடக்கும் முறை, விழாவின் கூறாக நடக்கும் கலைகளின் நிகழ்த்துமுறை, சாமியாடும் முறை உயிர்ப் பலி கொடுக்கும் முறை எனப் பல சொல்லிக்கொண்டு போகலாம். இவற்றில் குலசாமி வழிபாட்டு முறையும் அடங்கும்.

ஒருமுறை என் நண்பனின் குலசாமி கோவிலில் நடந்த படுக்கை, சிறப்பிற்கு (சிறிய விழா) அழைத்திருந்தான். கடற்கரையை ஒட்டிய இலந்தவிளை என்ற அந்த கிராமத்தில் நடந்த சிறப்பு விழாவில் நண்பனின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

அந்தக் குலசாமியை இசக்கி என்று அழைத்தார்கள். கோவில் அமைப்போ முக்கிய தெய்வத்தின் அலங்காரமோ பொதுவான இசக்கிக்குக் உரியதாகவே இருந்தது. இசக்கி வேறு வேறு சாதிகளுக்குரிய குலசாமியாகவும் இருந்தாள். அப்படியானால் இது பொதுவான இசக்கி என்று நினைத்தேன்

அன்று மாலையில் அந்த இசக்கிக்கு வழிபாடு ஆரம்பித்தபோது ஒரு வேறுபாடு இருப்பதை கவனித்தேன். படைப்புப் பொருள்களில் வித்தியாசமான உணவுப்பண்டங்கள் இருந்தன, பலி கொடுக்கப்படவேண்டிய ஆடு தலைகீழாகவும் கால் மேலாகவும் தொங்கவிடப்பட்டிருந்தது. பலி கொடுப்பவர் ஆட்டின் கழுத்தில் கூர்மையான கத்தியால் குத்தினார். ரத்தம் பலிபீடத்தில் விழும்படி செய்தார். இந்த ஒரு நிகழ்ச்சி எனக்கு அந்த இசக்கி என் நண்பரின் குடும்பத்தின் முன்னோடி என்பதை உணர வைத்தது. பின்னர் என் சந்தேகத்தை அவரது உறவினரிடம் பேசித் தீர்த்து கொண்டேன்.

புராணச் சார்பு அல்லது வேள்வியில் பிறந்து தெய்வமாக மாறிய நாட்டார் தெய்வத்திற்குப் பலி கொடுககும் போது ஆட்டின் தலையை மேலே இருக்கும்படியும் பலி பீடத்தை தொட்டு இருக்கும்படியும் கட்டியிருப்பார்கள். அப்போது ஆட்டின் கழுத்தைக் கீறி கால் வழியாக ரத்தம் விழும்படி செய்வார்கள். இந்தப் பொது முறை­யிலிருந்து குலசாமிக்குக் கொடுக்கப்படும் பலியின் முறை வேறுபட்டிருக்கும்

பொதுவாக குலசாமி சடங்குகளும் விழாக்களும் கோலாகலமாக கொண்டாடப்படுவதில்லை. வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்துவதும் இல்லை. பெரும்பாலும் சாமியாடி என்ற ஒருவர் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். மற்ற தெய்வங்களுக்கு சாமியாடும் முறையிலிருந்து இது வேறுபட்டும் இருக்கும்.

சங்க காலம் முதலே நாட்டார் தெய்வ மரபில் சைவத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. இது இன்று வரை தொடர்கிறது, தென் தமிழ் மாவட்டங்களில் இது குறித்த செய்திகளை இன்றும் தேட முடியும். தென் தமிழ் நாட்டு தெய்வங்களின் பிறப்பு பற்றிய செய்திகள் வில்லிசைப் பாடல்களிலும் கணியான் ஆட்டப் பாடல்களிலும் உள்ளன. இவை முழுக்க சைவச்சார்பு உடையவை.

தேவர்களின் வேண்டுதலால் சிவனின் அருளாசியால் மஞ்சள் கிடாத்தில் கால சாமி பிறப்பதாக அச்சில் வராத காலசாமி கதை எடு கூறும். இங்கு காலசாமி சைவ அடையாளத்துடன் காட்டப்படுகிறார்.

பலவேசக்காரன் கதை என்னும் அச்சில் வராத ஏடு பலவேசக்காரன் என்ற தெய்வம் சிவனின் நெற்றியிலிருந்து பிறப்பதாகக் கூறும். பார்வதியின் அம்சமாக முத்தாரம்மன் பிறப்பதாக முத்தாரம்மன் வில்லுப்பாட்டு கூறும். அச்சில் வராத பிரம்மசக்தி அம்மன் கதை ஏட்டில் பார்வதி தனது அம்சமாகப் பிரம்மசக்தியை பிறப்பித்துள்ளதாக வருகிறது

முத்தாரம்மன் (பார்வதி) தாருகனை வதைத்த போது. பெருகும் ரத்தத்தைத் திரட்டினாள். அப்போது வண்டிமலையன், வண்டிமலைச்சி ஆகியோர் பிறந்தனர் என்று முத்தாரம்மன் கதை கூறும், முத்தாரம்மனை நீராட்ட முகர்ந்த நீரில் சந்தனம மாறன், முத்துத்தம்பி, முத்துக்குமரன் ஆகிய மூவரும் பிறந்தனர் என முத்தாரம்மன் கதை கூறும்.

அச்சில் வராத மன்னன் கருங்காலி கதை அல்லது வாதைகள் கதை பாதாள அறையில் இருபத்தி ஒரு வாதைகள் பிறந்ததாகக் கூறும். இவை சிவனின் அம்சமாக சுடலை மாடனின் காவலர்களாக உள்ளன. சிவனுக்கு கணங்கள் இருப்பது போன்று சுடலை மாடனுக்கு வாதைகள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட தெய்வங்கள் எல்லாமே இப்போதும் வழிபாடு பெற்றுக் கொண்டிருக்கின்றன. சிவன் அல்லது பார்வதியின் அம்சம் அல்லது இவர்களின் அருளால் பிறந்தவை என்பது பொதுப்பண்பு. இந்தப் பொதுவான விஷயங்கள் குலசாமியிலிருந்து இவற்றை வேறுபடுத்துகின்றன.

சிவ கணங்கள் பற்றிய சிவ புராண கதைகள் நாட்டார் தெய்வங்களின் சிலவற்றின் தோற்றத்திற்குக் காரணமாய் இருந்தன.

வைதிகத் தெய்வமாகவும் நாட்டார் தெய்வமாகவும் சில தெய்வங்கள் வழிபாடு பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை மிக அபூர்வமானவை. இப்படியான தெய்வங்கள் சேத்திரபாலனும் ஒன்று.

சேத்திரபாலன் என்ற தெய்வம் பிற்காலச் சோழப் பேரரசின் மிகச்சிறந்த மன்னனான முதல் ராஜராஜ சோழனின் குலதெய்வம் என்பதை ஒரு கல்வெட்டு கூறுவதாக குடவாயில் பாலசுப்பிரமணியம் கூறுகிறார்.

கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழியில் ஏரண்ட முனிவர் வழிபட்ட தேவாரப்பாடல் பெற்ற தலம் ஒன்று இருக்கிறது. கபாலீஸ்வரர் கோவில் என்னும் பெயரில் உள்ள இங்கே விநாயகருக்கும் சேத்திரபாலருக்கும் தனித்தனி கோவில் உள்ளது. விநாயகர் பாற்கடலில் கிடைத்த நுரையால் உருவாக்கப்பட்டவர் என்பது ஐதீகம்.

இங்கு இருக்கும் சேத்திரபாலனுக்கு முதல் ராஜராஜனின் மனைவிகளுள் ஒருத்தி நிபந்தம் கொடுத்திருக்கிறாள். ஸ்ரீ ராஜராஜ தேவர் மகாதேவியார் தொடங்கியன. லோகமாதேவி உய்யக்கொண்டார் வளநாட்டு என்ற கல்வெட்டு இந்த நிபந்தத்தைக் கூறுவதாக குடவாயில் பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்

இந்த சேத்திரபாலனுக்கு முதல் ராஜராஜ சோழனும் அவனது சகோதரி குந்தவி தேவியும் நிபந்தம் கொடுத்திருக்கின்றனர். 1902 ல் எடுக்கப்பட்ட இந்த நிபந்த கல்வெட்டில் வேறு செய்திகள் இல்லை.. இந்த சேத்திரபாலன் யார்? இவர் வைதிக தெய்வமா? நாட்டார் தெய்வமா? தமிழகத்துக்கு பூர்விகமாக உள்ள தெய்வமா? வட நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டதா? இப்போது யார் இந்த தெய்வத்தை வழிபடுகின்றார்கள் அல்லது இந்த தெய்வம் பைரவர் வடிவம் பெற்றுள்ளதா ? இதுபோன்ற கேள்விகளுக்கு நாட்டார் வழக்காற்று மரபில் பதிலைத் தேட முடியும்.

சேத்திரபாலன் வைதீக கோவில்களிலும் நாட்டார் கோவில்களிலும் வழிபாடு பெறுகின்றவன். இந்தியா முழுக்க அறியப்பட்டவன். “இவனைக் குறித்த ஒரு பயமும் கூட உண்டு." தமிழகத்தில் நாட்டார் தெய்வ கோவில்களில் நாட்டார் அம்சத்துடன் வழிபாடு பெற்று வருகின்றான். வைதீகக் கோயில்களில் வேறு அடையாளங்களுடன் வழிபடப்படுகின்றான்

தட்சன், தாட்சாயணி சிவன் தொடர்பான சிவபுராணக் கதை பல வழிபடு தெய்வங்களாகும். நாட்டார் கலைகளுக்கும் சிற்பங்களுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் அமைதியான காரணமாய் இருந்ததை இன்றும் தேடமுடியும்.

தட்சனை அழிக்க வந்த வீரபத்திரன் வைதீக மரபிலும் நாட்டார் மரபிலும் வழிபடு தெய்வமாக இருக்கின்றான். தட்சனுக்கும் வீரபத்ரனுக்கும் நடந்த போரில் வீரபத்திரன் வெற்றிபெற்றான். இதில் சேத்திரபாலனுக்கும் பங்கு உண்டு. இதனால் இவன் வழிபடு தெய்வமாக இருக்கின்றான் என்ற ஒரு கதையும் உண்டு.

தட்சன், வீரபத்திரன், போரின் உச்ச கட்டத்தில் தட்சனை கொல்லமுடியாமல் வீரபத்திரன் தவித்தபோது விஷ்ணு தன் கையில் இருந்த சக்கராயுதத்தைத் தட்சன் மேல் எறிந்தான். அது தட்சனின் கழுத்தை பதம் பார்த்து பின் திரும்பி வந்தது. ஆனால் விஷ்ணுவின் கையில் வராமல் சுற்றிக் கொண்டே நின்றது. அப்படி இருந்தால் உலகம் அழிந்துவிடும் என்று சிவன் சேத்திரபாலனிடம் சக்கராயுதத்தை பிடித்து உலகை காப்பாற்றுமாறு பணித்தான். இப்படி ஒரு கதை சிவபுராணத்தில் பிற்சேர்க்கையாக உள்ளது.

ஜைன சமயத்தில் ஷேத்திர பாலன் தெய்வமாகவே போற்றப்படுகிறான். இங்கு இவனுக்கு மூன்று கண்கள் நிர்வாணியாக இருக்கிறான். வாகனம் நாய். பைரவர் கோலம் ராஜஸ்தான் மாவட்டத்தில் ஜைனர்களிடம் சேத்திரபால வழிபாடு உண்டு.

ஜைன சுவேதாம்பிரர் பிரிவினர் வழிபாட்டில் சேத்திரபாலன் பரிவார தெய்வமாகவும் இருக்கிறான் ஒன்று முதல் அறுபத்தி நான்கு யோகிகள் வழிநடத்த நாயுடன் வலம் வருகிறான்.

பிற தெய்வங்களிலிருந்து சேத்திரபாலனை வேறுபடுத்துவது இது தொடர்பான தொன்மங்கள் தாம். அர்த்தசாஸ்திரம் சேத்திரபாலனே பயிரிடப்பட்ட நிலங்களின் கண்காணிப்பாளர் என்று கூறும்..இவன் விளைச்சல் நிலங்களின் பாதுகாவலன் என்னும் பொருளிலேயே தென்னிந்திய கிராமங்களில் வழிபடப்படுகிறான்.

பலராமன் நீர் மேலாண்மையுடன் தொடர்பு படுத்திப் பேசப்படுகிறான். இவனது கையிலுள்ள ஏர் ஆயுதம் நீரைக் கட்டுப்படுத்துவது. நீரை உற்பத்தி செய்வது என்ற தொன்மம் உண்டு. பலராமன் நீர் தொடர்பான கடவுள் என்பது போன்று சேத்திரபாலன் விளைச்சல் நிலத்தின் கடவுளாக கருதப்படுகிறான்.

நாட்டார் மரபில் பைரவ வழிபாடு எப்போது வந்தது என்பதைத் துல்லியமாக கூற முடியாது. ஆனால் தேவர் என்ற ஜாதி தொடர்பான தகவல்களையும் காளி கோவிலில் உள்ள பைரவர் முறையினையும் ஓரளவு தொகுத்து பார்க்கின்றபோது பைரவர் வழிபாடு நாட்டார் வழிபாட்டில் கலந்து விட்டது என்பதை ஊகிக்க முடியும்.

ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணியில் காப்புப் பாடலில் பழைய பைரவரைப் பற்றி கூறுகிறார். பைரவர் உடையில்லாமல் இருப்பார். பாம்பைக் கங்கணமாக அணிந்திருப்பார். கையில் தமருகம், காலிலே கழல், கறுப்புச்சட்டை அணிந்து இருப்பார். என்ற வர்ணனையை சோழர் காலத்து நிகழ்வாகக் கொள்ளலாம்.

ஒட்டக்கூத்தர் குறிப்பிடும் சட்டைநாதர் என்ற வழக்கு இப்போது உள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே கொக்கராயக்குறிச்சி என்ற ஊரில் அஷ்ட பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு இவர் சட்டைநாதர் எனப்படுகிறார். திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியில் சட்டைநாதர் என்பது சிவனைக் குறிப்பிடும் சொல்லாக ஆள் பெயராக வழங்குகிறது.

நாட்டார் வழக்காற்றில் சட்டநாதன் சேத்திரபால னாகவும் கொள்ளப்படுகிறார். சேத்திரபால பைரவர் சட்டநாதன் என்னும் பெயர்களை வைதீகத்தில் இருந்து நாட்டார் மரபு பெற்றதாகவே கொள்ளலாம்.

தமிழகத்தில் வீர சைவர் அல்லது சைவ சமயம் சார்ந்த சிலர் பைரவ வழிபாட்டுடன் தொடர்புடையவர்களாய் இருந்தனர். இவர்களைப் பற்றிய விரிவான ஆய்வு நடந்ததாகத் தெரியவில்லை. தமிழகத்தின் முருகன் கோவிலுடன் தொடர்புடையவரால் அறியப்பட்ட பண்டாரம் என்னும் சாதியின் உட்பிரிவுகள் 19 க்கு மேல் உள்ளன. இவற்றில் பைரவி, வைராவி, யோகீஸ்வரர், ஆண்டிப்பண்டாரம் போன்ற ஜாதியினரைப் பற்றி நாட்டார் மரபில் நிறையக்கதைகள் உள்ளன. இவர்களில் கன்னடம், தெலுங்கு பேசுகின்றவர்களும் உண்டு.

தமிழக கோவில்களின் வாயில் காவலராக வைராவி சாதியினர் இருந்தனர். “இருந்து சாப்பிடுவான் பூசாரி, குத்துப்பட்டு சாப்பிடுவான் வைராவி” என்னும் பழமொழி தென் தமிழகத்தில் உண்டு.

பிற்காலச் சோழர் காலத்தின் ஆரம்பத்தில் வைதீக கோயில்களில் ஆகம முறை நெறிப்படுத்தப்பட்ட பின்பு வழிபாட்டில் மாற்றம் ஏற்பட்டது. நாயக்கர் ஆட்சியின்போது தமிழகத்தில் வீர சைவ மரபு செல்வாக்கடைய ஆரம்பித்தது. உதாரணமாக சங்கரன்கோவில் சங்கர நயினார் கோவிலில் வீரசைவர்கள் பெருமளவு செல்வாக்கு உடையவராய் இருந்தனர் என்பது ஒரு செய்தி.

தமிழக நாயக்கர் காலத்தில் தாய்த்தெய்வ வழிபாடு செல்வாக்குப் பெற்றது. இக்காலத்தில் தென் தமிழகத்தில் கிராமங்கள் தோறும் அம்மன் கோவில்கள் உருப்பெற்றன. இது தொடர்பான வழக்காற்றுக் கதைகள் புராணக் கலப்புடன் கூறப்பட்டன. இக்காலகட்டத்தில் சேத்திரபாலன் சில மாற்றங்களுடன் வைரவராக காளி அம்மன் கோவில்களில் வழிபாடு பெற்றார்.

சேத்திரபாலன் தொடர்பான நாட்டார் வழக்காற்றில் பெருமளவில் பேசப்படாத, அச்சில் வராத இரண்டு கதைப்பாடல்கள் உள்ளன. இந்தக் கதைப்பாடல்களில் உள்ள விஷயங்களின் அடிப்படையில் வைதீகம் நாட்டார் மரபின் பரிமாற்றத்தை ஊகிக்க முடிகிறது.

பின் இணைப்பு

பெருமாள்சாமி கதையும் சோமாண்டி கதையும்

திருவரங்கம் கோவில் பூசகர்களுக்குள் ஏற்பட்ட மாறுபாட்டின் காரணமாக பூசகன் ஒருவன் ஊரைவிட்டு குடிபெயர்ந்து திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டான்.அவனுடன் ஸ்ரீரங்கநாதனும் சேர்த்துகொண்டார். உதவிக்கு சேத்திரபால பூதம், ஈஸ்வர கால பூதம் சங்கிலி பூதம் ஆகியனவும் இணைந்தன. எல்லோரும் தமிழகத்தில் பல இடங்களில் சுற்றி வந்து விட்டு திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு வந்தனர். ரங்கன், பூதங்களிடம் நீங்கள் இங்கே இருக்கலாம். நான் அனந்தபுரம் போகிறேன் என்றார்.

பூதங்களின் பிறவி பற்றிய வரலாறு, சோமாண்டி கதை என்னும் தலைப்பில் வந்திருக்கிறது. இதன் முழு வடிவம் அச்சில் வரவில்லை. மூன்று பூதங்களும் சிவனின் ஆணையால் வேள்வியில் பிறக்கின்றன. பிறந்ததும் சிவன் தங்களுக்குத் துணையாக அனந்தபுரம். செல்லப் பணிக்கிறான். பூதங்கள் செல்லுகின்றன. திருக்குறுங்குடியில் ரங்கனின் ஆணைப்படி தங்கி வழிபாடு பெறுகின்றன.

பூதங்களுக்கு பூசை செய்தவனை ஒரு சமயம் காட்டு விலங்கு கொன்றுவிடுகின்றது பூசை நின்றது. நாட்கள் சென்றன. சேத்ரபால பூதம் திருக்குறுங்குடி மணியக்காரன் கனவில் சென்றது. காஞ்சிபுரத்திலிருந்து சந்தன வாழ்நம்பி என்பவன் தன் மனைவியுடன் வருகிறான். அவன் எங்களுக்குப் பூசை செய்யட்டும் என்று சொன்னது.

மணியக்காரன் சந்தனவாழ் நம்பியைக் கண்டுபிடித்து பூசைக்கு ஏற்பாடு செய்கிறான். அவனுக்கு வேறு வசதிகளையும் செய்து கொடுக்கிறான். அந்த நம்பிக்கு குழந்தைப்பேறு இல்லை. அதனால் குறுங்குடி நம்பியை வேண்டித் தொழுகிறாள் சந்தனவாழ் நம்பியின் மனைவி சோமாண்டி.

நம்பியின் கனவில் திருமால் வந்தார். நம்பியிடம் "உனக்கு புத்திரப்பேறு உண்டு ஆனால் அந்த ஆண்மகன் ஏழு வயதில் இறந்துவிடுவான்” என்று சொன்னார். நம்பியின் மனைவி சோமாண்டி எப்படியாவது சரி மலடி என்ற பெயர் போகுமே என்று நினைத்தாள்.

அவளுக்கு குழந்தை பிறந்து வயது ஏழு ஆனது. ஒருநாள் சந்தன வாழ் நம்பி போகும்போது அந்த மகனும் உடன் சென்று விட்டான். பாதிவழியில்தான் நம்பி அதை கண்டுபிடித்தான். வேறு வழியில்லை மகனை அழைத்துச் சென்றான். கோவில் பிரகாரத்தில் மகனை எழுப்பி விட்டு மூன்று பூதங்களுக்கும் பூசை செய்தான். மகன் இருப்பதை மறந்து விட்டு கோவில் கதவை மூடிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டான்.

மகன் இல்லாமல் கணவன் திரும்புவதை கண்ட மனைவி குழந்தை எங்கே என்று கேட்டாள். அப்போதுதான் நம்பிக்கு மகனின் நினைவு வந்தது. மகனை அழைத்து வருகிறேன் என்று திரும்பிப் போனான். அதற்குள் பூதங்கள் கோவில் கதவை பூட்டி விட்டன. நம்பி பூதங்களை அழைத்தான். "மறையவனே இந்த கோவிலின் வழிமுறை உனக்குத் தெரியாதா ஒரு நாளில் ஒருமுறைதான் கதவு திறக்கப்படும். நாளை வா அழைத்துச் செல். அதுவரை அவன் பத்திரமாக இருப்பான்" என்று சொன்னது.

மறையவன் வீட்டுக்கு வந்தான். நடந்ததைச் சொன்னான். மனைவி மகன் இல்லாமல் நான் உயிர் தரியேன் எப்படியாவது போ அழைத்து வா என்று சொன்னாள். நம்பி மீண்டும் கோவிலுக்கு போனான். பூதங்களே கதவைத் திறந்து விடுங்கள். இல்லை என்றால் பரவாயில்லை, நிற்கின்றேன் மகனை தூக்கி போடுங்கள் பிடித்துக் கொள்கிறேன் என்றான்.

பூதங்களுக்கு கோபம் வந்தது. மேலை வாசலுக்கு வா மகனைப் பிடித்துக்கொள். துண்டை விரித்து காட்டு என்றது நம்பி. அப்படியே நின்றான். பூதங்கள் அவன் மகனின் கை, கால், தலை என ஒவ்வொன்றாகப் பிய்த்து வெளியே தூக்கிப் போட்டன

குழந்தையை பூதங்கள் கொன்றுவிட்டன என்றதும் நம்பிக்கு கோபம் வந்தது. அழுது அரற்றினான். அவன் மனைவி இந்த பூதங்களை பழிவாங்க வேண்டும் என்றாள். காளிப்புலையன் உதவியை நாடுவோம் என்றான் நம்பி. காளிப்புலையன் பூதங்களில் சங்கிலிபூதம், ஈஸ்வரகால பூதம் இரண்டையும் பிடித்து பெட்டியில் அடைத்தான். சேத்திரபால பூதம் தப்பிவிட்டது. காளி இரண்டு பூதங்களையும் கரையாளர் ஒருவரின் நிலத்தில் புதைத்தான். சேத்திரபால பூதம் கரையாளரின் உதவியால் பெட்டியை எடுத்து இரண்டு பூதங்களையும் விடுவித்தது.

பின்னர் மூன்று பூதங்களும் காளிப்புலையன், நம்பி, சோமாண்டி ஆகியோரைக் கொன்றன. அவர்களின் உடல்களை மண்ணில் புதைத்தன. அந்தப் பாவம் தீர பாபநாசம் அருவியிலே குளித்தன. அங்கே வானுலக மங்கையர் வந்தார்கள். மூன்று பூதங்களும் அவர்களை திருமணம் செய்து கொண்டன அதன் பிறகு பல்வேறு இடங்களுக்கு சென்று கோவில் கொண்டு வாழ்ந்தன. சேத்திரபால பூதம் மட்டும் காளி கோவிலில் குடிபுகுந்தது..

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர், நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It