1912ம் ஆண்டு டிசம்பர் 23ம் நாள் இந்தியாவின் புதிய தலைநகரமாக மாற்றப்பட்ட டெல்லி மாநகரில் யானை மேல் அமர்ந்து வைசிராய் லார்டு ஹார்டிஞ்ச் மேள தாளத்தோடு சென்று கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ ஒரு வெடிகுண்டு அவரை நோக்கிப் பறந்து வந்தது. வைசிராயின் உதவியாளர் பரலோகம் போனார். வைசிராயோ படுகாயமடைந்தார். வெடிகுண்டை வீசியவர் வேறு யாருமல்ல ராஷ்பிகாரி போஸ் எனும் இளைஞர்தான்.

வங்காளத்தின் போர் வாளாகத் திகழ்ந்த ராஷ் பிகாரி போஸ் பர்தவான் மாவட்டத்தில் உள்ள கபால்டா எனும் கிராமத்தில் 1886 மே 25ல் பிறந்தவர் ஆவார். மந்திர தந்திரக்கலை, துப்பாக்கி சுடிம் பயிற்சி அகியவற்றில் தேர்ந்த ராஷ்பிகாரி தமது 15வது வயதில் சாரு சந்திரராய் என்பவர் தலைமையில் நடைபெற்ற சுஹ்ரித் சம்மேளம் என்ற புரட்சிகர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கிளர்ச்சிக்காரராக இருந்தபோதிலும் எப்பொழுதும் எச்சரிக்கை உணர்வும் மதிநுட்பமும் மாறுவேடமிட்டு காரியம் சாதிக்கும் திறனும் கொண்டவராக விளங்கினார் ராஷ்பிகாரி போஸ். ராஷ்பிகாரி போஸ் பல மாநிலங்களுக்கும் சென்று டெல்லியில் ஒரு மத்திய சங்கத்தை அமைத்தார். தினம் ஒரு வெள்ளையன் தலை வீதியில் உருள வேண்டும் என்று திட்டமிட்டார் போஸ்.

பல புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு லாகூரிலும் மற்றும் சில முக்கிய நகரங்களிலும் வெடிகுண்டுகளைத் தயாரித்து சேமித்து வைத்தார். ஆங்கில ஏகாதிபத்திய இராணுவ நிலைகளை தாக்குவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று ஏற்பாடுகளைச் செய்து வந்தார் அவர். டெல்லியில் டிசம்பர் 23ல் வைசிராய் மீது ராஷ் பிகாரி போஸ் வெடிகுண்டு வீசி அவரை இரத்த வெள்ளத்தில் சாய்த்தபோது அந்தக் கொடுஞ் செயலைச் செய்தது யார் என்று தலையைப் பிய்த்துக் கொண்டது ஆங்கில அரசு. தகவல் கொடுப்போருக்கு நூறு ஏக்கர் நிலத்தை மானியமாக்க் கொடுப்பதாகவும் கூட விளம்பரப்படுத்தியது.

இந்திய தேசம் முழுமையும் பயத்தால் ஊமையாகிக் கிடந்தபோது ‘புரட்சிக் குரலை முழங்கிய வீரன்’ என்று மறுபுறம் ராஷ்பிகாரி போஸின் புகழ் விண்ணுயரப் பறந்தது. அப்போது ராஷ்பிகாரி போஸ் காட்டுலாக்கா அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு மிகவும் விசுவாசமிக்கவர் போல நடித்துக் கொண்டே கடும் புரட்சிகரப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வைசிராய் மீது வெடிகுண்டு வீசியவரை உடனே பிடித்தாக வேண்டும் என்று இங்கிலாந்திலிருந்து உத்தரவுகள் இடைவிடாது வந்து கொண்டிருந்ததால் அந்தக் கலக்காரனைத் தேடும் பணி இந்தியாவில் இடைவிடாது தொடர்ந்து கொண்டே இருந்தது. கடைசியாக எப்படியோ துப்பு துலக்கி காட்டு இலாக்கா அதிகாரி ராஜ் பிகாரி போஸ் தான் அந்தக் கலகக்காரன் என்பதை மோப்பம் பிடித்து விட்டனர்.

லாகூரில் அவரது முகவரிக்கு அவர்கள் வருவதற்குள் ராஜ் பிகாரி போஸ் மாறுவேடத்தில் தப்பி விட்டார். தன்னைப் பிடிக்கத் தேடி வந்த இன்ஸ்பெக்டரின் கைரேகைகையைப் பார்த்து ‘நாளை நீங்கள் தேடும் திருடன் பிடிபடுவான்’ என்று கிழவன் வேடத்தில் கூறி ஏமாற்றித் தப்பிச் சென்று விட்டார். இது போன்று பல வேடம் பூண்டு தலைமறைவு வாழ்க்கையில் புரட்சிகரப் பணிகளைச் செய்து வந்தார்.

அவருடன் இருந்த பலரும் பிடிபட்டு தூக்கிலிடப்பட்டனர். அமிர்தசரஸ், கொல்கத்தா, லக்னோ, டாக்கா, காசி, ஆக்ரா, மீரட் போன்ற இடங்களில் இருந்த இந்திய புரட்சி வீரர்கள் ஒரே நேரத்தில் புரட்சி செய்து அந்த நகரின் கோட்டைகளைக் கைப்பற்றும் திட்டத்தை தீட்டினார் ராஜ் பிகாரி . எல்லா ஊர்களிலும் புரட்சி இயக்கத் தளபதிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார். முக்கிய நகரங்களில் உள்ள தகவல் நிலையங்கள் அரசு அலுவலகங்களைக் கைது செய்து அல்லது கொன்று குவித்து சுதந்திரப் பிரகடணம் செய்ய வேண்டும் என்று கலவரத் திட்டம் உருவாக்கினார்.

அதன்பிறகு ஜெர்மனியரின் உதவியுடன் பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்ப்பது என்று விடுதலைக் கனவு வரைந்து கொண்டிருந்த ராஜ் பிகாரி போஸின் ஏற்பாடுகளை சில துரோகிகள் காட்டிக் கொடுத்து சிதைத்து விட்டனர். துரோகிகள் கொடுத்த தகவல் மூலம் போராட்டத்தை சுலபமாக நசுக்கி விட்டனர் ஆங்கிலேயர். ஏறத்தாழ இருபத்தெட்டுப் போராளிகளை தூக்கிலிட்டுக் கொன்றார்கள். அது மட்டுமின்றி சிங்கப்பூரில் இருந்து புரட்சியில் ஈடுபட்ட ராஜ் பிகாரியின் புரட்சி வீரர்களையும் தூக்கிலிட்டுக் கொன்று விட்டனர்.

அதற்கு மேலும் தாம் இந்தியாவில் இருப்பது பயன்தராது என்பதை உணர்ந்த ராஜ் பிகாரி போஸ் 1915 மே12ம் தேதியன்று எஸ்.எஸ்.சனூகி மாரு என்ற என்ற ஜப்பானிய கப்பலில் மகாகவி தாகூரின் செயலாளர் என்று கூறி பிரிட்டிஸ் போலிசாரை ஏமாற்றி தப்பித்து ஜப்பான் சென்றார். தற்கொலைப் படையில் சேர்ந்து தாய் நாட்டுக்காக உழைக்கும் தேசபக்தி மிகுந்தோர் ஜப்பானில் உள்ளனர் எனபதனாலேயே ராஜ் பிகாரி போஸ் அங்கே சென்றார்.

ஒரு ஜெர்மன் நீர் மூழ்கிக் கப்பலில் 1943 ஏப்ரல் இறுதியில் ஏறி கடலுக்குள்ளேயே அறுபது நாட்கள் பயணம் செய்து 1943 ஜுன் 13ம் தேதியில் நேதாஜி டொக்கியோ வந்தார். ராஜ் பிகாரி போஸ் நேதாஜியை கட்டித் தழுவிக வரவேற்றார். அதன்பிறகு இருவரும் விமானத்தில் சிங்கப்பூர் சென்றனர். அங்கு ராஜ் பிகாரி போஸ் இந்திய சுதந்திர லீக் தலைமைப் பொறுப்பையும் இந்திய தேசிய ராணுவத் தலைமைப் பொறுப்பையும் சுபாஷ் சந்திர போஸ் வசம் ஓப்படைத்தார்.

-ஜெகாதா

Pin It